காதலும் ஆண்மைக்கு அழகே!

eiGBIPH38770-8e7d0d3f

காதலும் ஆண்மைக்கு அழகே!

 

எப்போதும் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் சிற்பிகா இன்றோ பொறுமையாக பார்த்துப்பார்த்து தன்னை அழகுப் படுத்திக்கொண்டாள்‌. ஏனென்றால் இன்று தன்னுடைய காதலனுக்கு காதலைச் சொல்ல போகிறாள் அல்லவா! அதற்காகத்தான் இத்தனை மெனக்கெட்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள்.

 

அபிநய் கண்ணன், அவளோடு வேலை பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தின் சேர்ந்தவன் தான்! 

 

இவளிடம் காதலைச் சொல்லி ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால், சிற்பி தான் அவளுடைய காதலை இவனிடம் கூறாமல் சுத்தலில் விட்டுக்கொண்டிருந்தாள்.

 

அவனும் காதலை இன்று சொல்வாள்! நாளை சொல்வாள்! என்றெல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்தவன்… ‘நீ உன் காதலையே சொல்ல வேணாம் தாயி… என்கூட பேச மட்டும் செய்… அதுவே போதும்…’ என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டு விட்டான் அபிநய்.

 

அதன் பிறகு சிற்பிகாவும் அவனிடம் காதலைச் சொல்லாமலே இயல்பாக பழகி வந்தாள். அபியிடம் காதலைக் காட்டாமல் போனாலும் பாசத்தையும் அக்கறையையும் அளவில்லாமல் காட்டினாள்.

 

இன்று அபிநய் கண்ணனுக்கு பிறந்தநாள்! ஆகையால் இந்த அழகிய தினத்தில் அவளது காதலை உணர்த்தி விடலாம் என்று உற்சாகமாக எண்ணி வேலைக்கு கிளம்பினாள் சிற்பிகா.

 

அபிநயோ அவனுடைய இருக்கையில் அமர்ந்து கணனியின் விசைப்பலகையை தட்டிக் கொண்டிருந்தான்.

 

அவனைக் கண்டு மலர்ந்த முகத்துடனே சென்று பக்கத்தில் நின்ற சிற்பியோ, “கண்ணா…” என மென்மையாக அழைக்க, அவனிடம் இருந்து எந்த பதிலுமே வரவில்லை.

 

அதில் பெண்ணுக்கு ஏமாற்றமே என்றாலும், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குரலை செருமிக்கொண்டு, “அபி என்னை பாரு… உன்ன தானே கூப்பிடுறேன்… பாரு அபி…” என்றழைக்க… அப்போதும் பதிலில்லை.

 

ஐந்து நிமிடம் அவனது பக்கத்திலேயே நிற்க, அவனிடமிருந்து எந்த ஒரு அசைவும் இல்லை.

 

அதில் கோபம் கொண்ட சிற்பிகா, “அபிநய் கண்ணா, திஸ் இஸ் டூ மச்… என்ன நினைச்சிட்டு இருக்க நீ… எப்பவும் என் பெர்ஃப்யூம் ஸ்மெல் வச்சே நான் வரத கண்டு பிடிச்சு, என் கிட்ட வந்து பேசிட்டு தான் உன் வேலைய பாக்கவே போவ… அப்படி இருந்த நீ… இந்த ரெண்டு நாளா என்னை என்னனு கண்டுக்க கூட மாட்டேங்குற… என்னடா கொழுப்பா உனக்கு… என் முகத்தை பார்த்து பேசு அபி…” என்று யாருக்கும் கேட்காதவாறு சீற…

 

அபியோ, “ஏய்! என்ன திமிரா?” என்று கத்தி எழவும் பயந்து பின்னால் சென்று விட்டாள் சிற்பி.

 

இதில் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் இவர்கள் இருவரையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

 

“அபி… எல்லாரும் பாக்குறாங்கடா…” என்று மெல்லிய குரலில் சொல்லும் போதே அவளுடைய கண்கள் கண்ணீரில் நிறைந்து விட்டன.

 

“நான் தான் உன்னை கண்டுக்காம இருக்கேன்னு தெரியுதுல… மூடிட்டு போ வேண்டியது தானே… அதான் நான் லவ் சொல்லும் போது அப்பவே என்னை பிடிக்கலனு சொல்லிட்ட தானே… அப்பறம் என்னடி உனக்கு… அப்படியே போயே… சும்மா சும்மா தினமும் ஏதாவது பேசி தொல்லை பண்ணிட்டு இருக்க… இங்க பாரு… நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்… அவ கூட தான் கல்யாணம் ஆகப்போகுது… இன்னும் நான் லவ் சொன்னதையே மனசுல வச்சிட்டு என்கிட்ட இப்படி வழிஞ்சிட்டு நிக்காத… உன்ன அப்படி பாக்கும் போதே கடுப்பாகுது… ச்சீ… தள்ளி போ…” என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்லி… அங்கிருந்து சென்று விட்டான் அபிநய் கண்ணா.

 

அவனுடைய பேச்சின் அதிர்வில் அப்படியே நின்று விட்டாள் சிற்பிகா. 

 

அவளை டி போட்டு கூட பேசாதவன்! இன்று அனைவரின் முன்பும் மரியாதை இல்லாமல் பேசி தன்னை அசிங்கப்படுத்தி விட்டான் என்பதை துளியும் ஜீரணிக்க முடியவில்லை.

 

மற்றவர்கள் தன்னை காட்சிப்பொருளாக பார்ப்பதை விரும்பாத சிற்பிகா அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி விட்டு, யார் முகத்தையும் பார்க்காமல் வெளியேறி விட்டாள்.

 

வீட்டுக்கு வந்த சிற்பிக்கோ துக்கம் தொண்டையை அடைக்க, அவளுடைய கட்டுப்பாட்டை மீறி கண்களில் வழிந்த கண்ணீர் கன்னத்தை தாண்டியது.

 

அவன் காதலைச் சொல்லும் போது வந்த வார்த்தைகள் வேறு அவளது காதல் மனதை குத்திக் கிழித்தது.

 

“சிற்பிகா, என்னோட குழந்தைக்கு நீ அம்மாவாவும், நான் அப்பாவாவும் இருக்கலாமா? உன்ன போலவே ஒரு பையனையும் பொண்ணையும் பெத்து எனக்கு தருவீயா… எனக்கு கிடைக்காத அம்மா பாசத்தை நீ என் குழந்தைகளுக்கு காட்டுறத பார்க்க ரொம்ப ஆசை படறேன் மா… என் ஆசைய நிறைவேற்றுவீயா சிற்பி!

 

என் காதல் மொத்தத்தையும் உனக்கே தந்திடவா சிற்பி மா? அந்த காதல் எனக்குள் இருந்து அதிகமாகி அதிகமாகி அதுவே மூச்சு விட முடியாம… மூச்சு அடைக்குது மா… அதான் அந்த காதல் எல்லாத்தையும் எனக்கு பிடிச்ச உன்கிட்ட கொடுக்கவான்னு கேட்கிறேன்… என் காதலை வேணாம்னு சொல்லாம வாங்கிப்பீயா சிற்பி மா? எஸ் ஆர் நோ? ரெண்டுல எதாவது ஒன்னு சொல்லு சிற்பி மா” என்று கேட்டு அவளை மூச்சடைக்க செய்தவன் தான் இந்த அபிநய் கண்ணா.

 

ஆனால், இன்றோ அவளின் இருதயத்தை கத்தி இல்லாமல் கூறுப்போட்டுக் கொண்டிருந்தான் சிற்பியின் கண்ணா.

 

அதன் பிறகு மனம் கேட்காமல், அவனுக்கு அழைப்பு விடுத்தாள் சிற்பிகா. எனினும் அதற்கு பயன் இல்லாமல் போனது!

 

அபியின் கைபேசி முழுமையாக அணைத்துக் வைக்கப்பட்டிருக்கிறது என்றே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தது ஒர் பெண்ணின் குரல்.

 

“அப்படி எல்லாம் காதல் வசனம் பேசிட்டு இப்போ எதுக்காக டா இப்படி பண்ற… நான் ஒரு மானங்கெட்டவ உனக்கு போய் ஃபோன் பண்றேன் பாரு… என்னை செருப்பால அடிச்சிக்கணும்… இந்த ஃபோன பார்த்தாலே ஆத்திரம் தான் வருது…” என்று கத்தி ஃபோனை போட்டு உடைத்தாள்‌ சிற்பி.

 

நல்ல வேளையாக அவளது அம்மாவும் அப்பாவும் ஒரு உறவினர் திருமணத்திற்காக வெளியூருக்கு சென்றிருந்தது நல்லதாக போயிற்று. இல்லையென்றால் அவள் மனம்விட்டு அழுதிருக்கவும் முடியாது!

 

ஒரு மணி நேரத்திற்கு எல்லாம் அவளுடைய வீட்டின் அழைப்பு மணி அடிக்க… கடிகாரத்தில் நேரத்தை பார்க்க ஒன்பது என்று காட்டியது.

 

சிற்பிகா வெளியே சென்று கதவை திறக்க… பக்கத்து வீட்டு சரிதா வெளியே நின்றிருந்தார்.

 

“சொல்லுங்க ஆன்டி‌…” என்று இவள் கேட்க…

 

“சிற்பிகா… உன் ஃபோனுக்கு என்னாச்சு… உன் அம்மா எப்போல இருந்து ஃபோன் பண்ணிட்டு இருக்காங்க… உனக்கு ஃபோன் போகவே இல்லையாம்… அதான் எனக்கு பண்ணாங்க… அதான் உன்கிட்ட சொல்ல வந்தேன்…” என்று அவர் சொல்லவும், 

 

“ஆன்டி ஃபோன் உடைஞ்சிடுச்சு… உங்க ஃபோன் தரீங்களா நான் அம்மாட்ட பேசிட்டு தரேன்…”என்று அவள் கேட்க… அவரும் கைபேசியை கொடுத்தார்.

 

பின்னர், சிற்பிகா ஃபோன் செய்து அவள் அன்னைக்கு புரியும்படி சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

 

மறுநாள் அலுவலகத்திற்கு செல்லவும், அபியின் இடத்தில் அவன் இல்லாததை பார்த்துக்கொண்டே போனாள் சிற்பிகா.

 

அதற்குள் அவளோடு பணிபுரியும் ஹேமா வந்து, “சிற்பிகா உனக்கு விஷயம் தெரியுமா! அபி வந்து வேலையை ரிசைன் பண்ணி… வேற வேலை கிடைச்சு… வேறொரு ஊருக்கு போயாச்சு… இப்ப தான் நம்ம ஹெச்.ஆர் பேசிட்டு இருந்தார்…” என்று விஷயத்தை சொல்ல… 

 

சிற்பியோ மனம் கேட்காமல், “ஹேமா… உன் ஃபோன் கொஞ்சம் தர்றியா… நான்… நான் அபிக்கு கால் பண்ணிட்டு தரேன்…” என்றாள்.

 

“அபிக்கா ஃபோன் பண்ண போற… நம்மகிட்ட இருக்கும் நம்பர் காலே போக மாட்டேங்குது சிற்பிகா… அவன் கிட்ட கடைசியா பேசி குட் பாய் சொல்லலாம்னு நானும் கால் பண்ணி பாத்தேன்… பட் நோ யூஸ்…” என்று ஹேமா சொல்லவும் சரியென தலை அசைத்து அமைதியாகி விட்டாள்.

 

அன்று மாலையே அபி தங்கியிருந்த ரூமுக்கு சென்று பார்க்க… அங்கும் அவன் இல்லாமல், அவனை பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.

 

‘எதுக்கு டா உருகி…உருகி காதலச் சொல்லி… இப்படி அம்போன்னு விட்டு போன… உன் காதல எனக்கு குடுன்னு நான் கேட்டனா கண்ணா… நீயா வந்து, காதல் சொல்லி… திகட்டாம லவ் பண்ணிட்டு இருந்த… அதே காதலை நான் உனக்கு திருப்பி கொடுக்கும் சமயத்தில் ஏன்டா விட்டுட்டு போன… எதுக்கு கண்ணா என்னை விட்டுப்போன..‌. நீ எங்கயிருக்க கண்ணா… என்னையும் உன்னோட கூட்டிட்டுப்போய் இருக்கலாமே… எதுக்குடா இப்படி பண்ற… உன் காதல் உண்மை தான்டா… அத நான் முழுசா உணர்ந்தேன்… இப்ப வரைக்கும் நீ என்னை ஏமாத்த மாட்டேன்னு நம்பிக்கை இருக்கு… ப்ளீஸ்டா கண்ணா… என்கிட்ட திரும்பி வந்திரு கண்ணா…” என்று தனக்குள் மருகி கண்ணீரில் கரைந்து போனாள் சிற்பிகா.

 

சிற்பிகாவிற்கு இந்த ஒன்றரை வருடங்களும் நரகமாய் கழிந்துப்போயின. அவள் தன்னுடைய வேலைகளில் அமைதியாக மேற்கொண்டாலும் அவள் மனம் அவளுடைய கண்ணாவை எண்ணி முற்றிலும் கலங்கி போயிருந்தது. முகத்தில் செயற்கை புன்னகையைக் காட்டினாலும் அகத்தில் கூரிய வாலால் கீறியதை போன்ற வலிக் கொடுத்து நித்தமும் வேதனையை வழங்கியது.

 

சிற்பியோ அவள் அன்னை வாணியிடம், “அம்மா… என்னால எந்த கல்யாணத்துக்கும் வரமுடியாது ம்மா… நீ போறதா இருந்தா நீ போயிட்டு வா… எனக்கு வர விருப்பம் இல்ல… எனக்கு லீவும் குடுக்க மாட்டாங்க…” என்று எரிச்சலாக கத்தினாள்.

 

“ஏய் சிற்பி! இது உன் அக்கா கல்யாணம் டி… நீ வராம எப்படி…”

 

“ம்மா… என்கூட பொறந்தவ ஒன்னும் இல்லல… பெரியப்பா பொண்ணு தானே…”

 

“எப்படி இருந்தாலும் நீ வந்து தான் ஆகணும்… அப்ப தான் நாலு பேர் உனக்கு கல்யாணம் பண்ணும் போது வருவாங்க…” என்று லட்சுமி திட்ட…

 

“சரியான இம்சம்மா நீ… எனக்கு ஆபிசில் லீவ் தர மாட்டாங்க…”

 

“அப்படியா! நான் ஹேமா கிட்ட பேசின… மாசத்துக்கு மூனு லீவ் போடலாம்னு அவ சொன்னா… நீ தான் லீவ் கூட போடாம ஓவர் டைம் வேற பாக்குறனு எல்லாம் சொல்லிட்டு இருந்தா… இந்த மூனு நாளைக்கு ஒழுங்கா லீவ் போடு… இல்லாட்டி நீ வேலைக்கே போக தேவையில்லா…” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார் லட்சுமி.

 

அன்னையை முறைத்து விட்டு, “சரி வந்து தொலைக்கிறேன்…” என்று சொல்லி அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள் சிற்பிகா.

 

அடுத்த நாளில் சிற்பிகாவும் அவளது அம்மா, அப்பா மூவரும் திருமணத்திற்காக காரைக்காலுக்கு சென்றனர்.

 

அன்று போனதும் மணப்பெண்ணுக்கு நலங்கு செய்யும் சடங்கு எல்லாம் நடக்க எதிலும் கலந்துக் கொள்ளாமல் அனைத்திலிருந்தும் ஒதுங்கியிருந்தாள் சிற்பி.

 

மறுநாள் இரவு மணமக்கள் வரவேற்பு.

 

அதற்கு எளிமையான ஒரு சுடிதாரை போட்டுக் கொள்ள… அவளது தாய் லட்சுமியோ, “என்னடி இது டிரஸு… பாக்குவறங்க ஏதாவது சொல்றதுக்கா… உனக்கு வேற நல்ல துணியே இல்லையா… ஒழுங்கு மரியாதையா நல்லத போடு… இல்லனா நான் தர புடவையை கட்டு…” எனக்கூறி மகளை கட்டாயப்படுத்தி ஒரு அழகிய சந்தன நிற லெஹங்காவை போட வைத்தார்.

 

அதை போட்டுக்கொண்டு பொம்மையாக ஒரு மூலையில் போய் அமர்ந்துக்கொண்டாள்.

 

அப்போதுதான் அவளது கண்கள் காண்பது கனவா? இல்லை நனவா? என்பதை புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள் சிற்பிகா.

 

அவள் விழிகள் நனைய, இதழ்களோ ‘கண்ணா… கண்ணா…’ என்றே ஜபித்தது.

 

அபிநயோ‌ கருப்பு நிற ஃபார்மல் ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்து முகத்தில் புதிதாக தாடி எல்லாம் வைத்து, புன்னகையை தொலைத்து இறுகிய முகமாகவே காணப்பட்டான்.

 

அவனோ மணமகனுக்கு புன்னகையுடன் கைகுலுக்கி, வாழ்த்து தெரிவித்து, பரிசை கொடுத்து விட்டு, மேடையில் இருந்து கீழே இறங்கினான்.

 

அவன் வெளியே செல்லவிருக்கும் பொழுதில் யாரோ அவனது கையை பிடித்திழுக்க, ஒரு அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

 

அவன் உள்ளே நுழைந்ததும், கதவை தாழ்ப்போட்டு அவனையே குற்றச்சாட்டும் விதமாக பார்த்தாள் சிற்பிகா.

 

“சிற்பி… சிற்பிகா… நீயா…” என்று வாயடைத்து போய் நின்றான் அபிநய்.

 

“ஏன் கண்ணா… பார்த்ததும் அதிர்ச்சியா இருக்கா?” 

 

“என்னை கண்ணானு சொல்லாத…”

 

“ஏன் சொல்லக்கூடாது! அத கேட்டதும் நீ மறைச்சிட்டு இருக்கும் காதல் வெளியே வர துடிக்குதா? அதுக்குதான் இப்படி யாரோ போல பேசுறியா? சொல்லு கண்ணா?”

 

“இப்படி பைத்தியம் போல பேசுறத நிறுத்து சிற்பிகா..‌. நீ வேணாம்னு தானே உன்னவிட்டு விலகி வந்தேன்… அப்பவும் எதுக்கு முன்னாடி வந்து என் உயிர வாங்குற…” என்று எங்கோ வெறித்தபடி சொன்னான் அபிநய்.

 

சிற்பியோ, “இப்ப சொன்னதையெல்லாம் எங்க என் கண்ண பாத்து சொல்லிடு… நான் மொத்தமா போறேன்… உன் வாழ்க்கையை விட்டும்! இந்த உலகத்தை விட்டும்!” 

 

“கிறுக்கு பிடிச்சிருக்கா உனக்கு!” என்று பேசத் தொடங்கும் முன்பே…

 

“எஸ்! அப்படி தான் வச்சிக்கோ கண்ணா… நல்லா இருந்த என் மனசை காதலைக்காட்டி மாத்தனியே அப்பவே பாதி கிறுக்காகிட்டேன்… ஹ்ம்ம்..‌. இந்த ஒன்றரை வருஷமா என்னை விட்டுட்டு எங்கேயோ போனியே அப்போ நான் முழுசாவே கிறுக்காகிட்டேன்… அதுக்கு என்ன பண்ண சொல்ற… என்னை மாத்தினது யாரு? நீதானே?” என்று கோபத்துடன் பேச.

 

“அதெல்லாம் முடிஞ்சு போன ஒன்னு… இன்னுமா அதெல்லாம் பேசிட்டிருக்க… இந்த ஒன்றை வருஷத்துல மூனு பொண்ணை லவ் பண்ணி எல்லாமே பிரேக்கப் ஆகிடுச்சு… இதெல்லாம் ஜஸ்ட் ஒரு டைம் பாஸுக்கு தான்… மத்தபடி சீரியஸ் எல்லாம் இல்ல சிற்பிகா…” என்று அபிநய் சொன்னவுடன்… அவனது கன்னத்தில் அறைந்தாள் சிற்பி.

 

“இப்படி பச்சையா பொய் பேசின… பச்சை பச்சையா திட்டுவேன்டா ராஸ்கல்… உன்கூட பழகின ரெண்டு வருஷத்துல… நீ பேசுறது பொய்யா… உண்மையான்னு கூட கண்டுபிடிக்க முடியாத முட்டாளா நானு! அந்த அளவுக்கு நீ என்ன பேசினாலும் நம்புவேன்னு நினைச்சியாடா இடியட்… நீ கெட்ட எண்ணத்தோட பழக நினைச்சிருந்தா… உன்ன லவ் பண்ணினது இல்ல… என்கிட்ட கூட நெருங்க விட்டிருக்க மாட்டேன்… செருப்பாலயே அடிச்சி விரட்டி விட்டிருப்பேன்… அப்படிப்பட்ட பொண்ணு தான் நான்! என் காதலைச் சொல்லியும் ஃப்ரண்ட் இருந்து பழகினது எதுக்காக! உன் மேல இருந்த பிடித்தத்துக்காக! காலப்போக்குல அந்த பிடித்தமே காதலா மாறினதுக்காக! உன் பர்த்டே அன்னைக்கு வார்த்தையால காதல சொல்ல வந்த என்ன! வார்த்தையால கொன்னு புதைச்சி… என்னவிட்டு சொல்லாம கொல்லாம எங்கேயோ போய்ட்டல… என் மேல காதலிருந்தும்‌ ஏன் கண்ணா என்னை விட்டுட்டு போன… நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா! எவ்ளோ கஷ்டப்பட்டு வலியை அனுபவிச்சேன்னு தெரியுமா! அதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது… நீ தான் நான் செத்ததா நினைச்சு போயிட்டீயே…” என்று அழுகையுடன் கூற…

 

“ஷட்டப் சிற்பி… சும்மா விட்டுட்டு போய்ட்டேன்னு சொல்லாத…” என்று அபி கத்த…

 

“வேற எப்படி சொல்றது…” என்று இவளும் கத்த…

 

“உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைச்சு ஒதுங்கி போய்ட்டேன் போதுமா…”

 

சிற்பியோ, “நீ என்ன தியாகியா கண்ணா… என்ன ஹேருக்கு எங்கேயோ போய் ஒளிஞ்சிக்கிட்ட…” என்று சண்டையை பிடித்துக் கேட்க…

 

அபியோ, “எனக்கும் மனசாட்சி இருக்குமா… அதான் விலகி போய்ட்ட…” 

 

“கண்ணா… என்ன பிரச்சினை கண்ணா… சொல்லு… எதுவா இருந்தாலும் சரி பண்ணிடலாம் கண்ணா…” 

 

“சரி பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்கம்மா‌…” என்று விரக்தியாக சொன்னான் அபிநய்.

 

“புரியல கண்ணா…”

 

“உனக்கு புரியற மாதிரியே சொல்றேன்… அப்பறம் நீயே என்னவிட்டு போயிடுமா…”

 

“எங்க…”

 

“உன் வாழ்க்கையை பார்த்துட்டு போயிடனும்…”

 

“என் வாயில அசிங்கமா ஏதாவது வந்துரும் கண்ணா… ப்ளீஸ் என்னன்னு சொல்லு…” என்று கெஞ்சவே செய்தாள் சிற்பிகா.

 

கண்களை இறுக மூடித்திறந்து, “எனக்கு ஆண்மை இல்லனு சொல்லிட்டாங்க சிற்பிகா… என்னால ஒரு பொண்ணை… சந்தோஷப்படுத்தி… குழந்தை… தர…முடியாது…” என்று வலியுடன் வந்தன அபியின் வார்த்தைகள்.

 

அதைக்கேட்டு அவனது சட்டையிலிருந்து கையை எடுத்து அப்படியே நின்று விட்டாள் சிற்பிகா.

 

அதைக் கண்டு உயிர்ப்பில்லா புன்னகையை அளித்தவன், “இதுக்கு தான் சிற்பிகா நான் உன்ன விட்டு தூரமா போனேன்… என்கிட்ட குறைய வச்சிட்டு உன் வாழ்க்கையை என்னால நாசம் பண்ண முடியாது… இப்படி ஒரு குறையிருக்கும் நான் உனக்கு எப்படி சரியா வருவேன்… 

 

நான் என் ஃப்ரண்ட்க்கு துணையா ஹாஸ்பிடல் போனேன்… அவனுக்கு டெஸ்ட் பண்றதுல ஒரே பயம், தயக்கம்… அதான் அவனுக்கு தைரியம் சொல்லி..‌. வேணும்னா நானும் உனக்கு கம்பெனி தரேன்னு சொன்ன பிறகுதான் பயம் தெளிஞ்சு சரின்னு சொன்னான்… அந்த ரிசல்ட்டில் தான் எனக்கிருந்த குறை தெரிஞ்சது… 

 

நான் உனக்கு வேணாம் சிற்பி மா… என்னால உனக்கு தான் பிரச்சனை வரும்… எல்லாரும் உன்ன தப்பா பேசுவாங்க… உன் வீட்டில இருக்கவங்க எதிர்க்க தான் செய்வாங்க… என்னை விட எல்லாத்துலையும் பெட்டரான ஒரு பையன் கிடைப்பான்‌… அவன் கூட சந்தோஷமா வாழுமா… ப்ளீஸ்… நானெல்லாம் உன் வாழ்க்கைல நான் ஒரு பாஸிங் கிளவுட் மட்டும் தான்…” என்று பேசிக் கொண்டிருந்த அபியை மேலும் பேச வேண்டாம் என்பதுபோல கை காண்பித்தாள் பெண்.

 

“நீ இவ்வளவு நேரம் பேசினது எல்லாம் எனக்கு தேவை இல்ல… உனக்கு என்மேல காதல் இருக்கா? இல்லையா? அத மட்டும் சொல்லு… வேற எதுவும் தேவையில்ல…” என்று முறைத்துக்கொண்டே கேட்டாள் சிற்பிகா.

 

“எனக்கு ஆண்மை இல்ல மா… ஆனா, காதல் ரொம்பவே இருக்கு… அத உனக்கு மட்டுமே குடுக்க ஆசையிருக்கு… ஆனா, குடுக்க முடியலடி… ஏதோ ஒன்னு தடுக்குது சிற்பி மா… என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு…” என்று கண்கள் கலங்க சொன்னான் கண்ணா.

 

“கண்ணா!” என்று சொல்ல முடியாமல் அவளுக்கும் அழுகை பொங்கியது.

 

“என் உடம்புல குறை இருக்குடி… மனசுல குறை இல்ல! எனக்கு ஆண்மை இல்ல தான்! ஆனா காதல் இருக்கு! அளக்க முடியாத அளவுக்கு நிறைய இருக்கு! என்னால உனக்கு சுகத்தை தர முடியாது… உன்னை அம்மாவாக்கி தாய்மைய கொடுக்க முடியாது… காதல்… அந்த காதல்… அது ஒன்ன மட்டும் தான் தர முடியும்? வேணுமா சிற்பி மா? அந்த காதலை மட்டும் உனக்கு தரட்டுமா சிற்பி மா? இப்படி கேட்க எனக்கும் ஆசையா தான் இருக்கு… ஆனா ரொம்ப உறுத்தலா இருக்குமா… இப்படி இருக்கும்போது நான் என்னடா பண்றது?” என்று சிறுபிள்ளையாய் அழுகையுடன் கேட்டான் அபிநய் கண்ணா.

 

ஆண்களுக்கு அழுகை வரக்கூடாதா? அவர்களுக்கு மெல்லிய மனம் இல்லாமல் இரும்பாகவா படைத்திருக்கிறார் அந்த இறைவன்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் வலிகளும் காயங்களும் நினைத்திருந்தால் உடைந்து போவது இயல்பு தானே!

 

“கல்யாணம் பண்ணிக்கோ கண்ணா!” என்று மட்டுமே சொன்னாள் சிற்பிகா.

 

“இல்ல…” என்று பேச வந்த அபியின் வாயைப்பொத்தி,

 

“ஷ்ஷ்ஷ்… நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு… தேவை இல்லாதத பத்தி பேசாத கண்ணா…” என்று கூறியும்… அவன் எதுவும் பதிலளிக்கவில்லை!

 

“நீ குறை குறைன்னு சொல்றியே கண்ணா… அது என்கிட்ட இருந்திருந்தா விட்டுட்டு போய்டுவீயா?”

 

“ஷட்டப்!”

 

“கோபம் வருதா! அதேபோல தான் எனக்கும்! இப்படி ஒரு விஷயம்னா அப்படியே போயிடுவேன்னு நினைச்சு தானே நீ போய்ட்ட! அவ்வளவு நம்பிக்கைல என்மேல! இப்ப சொல்றேன் கேட்டுக்கோ! என் புருஷன் நீதான்!

 

ப்ளீஸ்… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் கண்ணா… குழந்தை தானே… எத்தனை ஆசிரமம் இருக்கு… அதுல ஒரு குழந்தை கூடவா நம்மள அம்மா அப்பான்னு கூப்பிடாது… அதுவே நமக்கு போதும்… நம்மளால பல குழந்தைகளுக்கு பெத்தவங்க கிடைப்பாங்க அபி… புரிஞ்சுக்கோ!

 

இந்த உலகத்துல ஒருத்தனும் பெர்ஃபெக்ட் கிடையாது… ஏதாவது ஒரு குறையாவது கட்டாயம் இருக்கும்… பலருக்கு வெளியே தெரியாது! சிலருக்கு வெளியே தெரியும்! குறையோட இருப்பதுதான் மனுஷனோட வாழ்க்கை! அத ஆராய்ச்சி பண்ணாம அப்படியே ஏத்துக்கணும் கண்ணா! இது புரியாதங்க தான் அவங்ககிட்ட இருந்து ஒதுங்கி போவாங்க… 

 

நான் உன் கூட வாழ ஆசைப்படறேன்! உன் காதலை வாங்கி… என் காதலை அதைவிட அதிகமா கொடுக்க ஆசைப்படறேன் கண்ணா… இந்த காதல் என்னை மூச்சு முட்டி சாகடிக்குது கண்ணா… ப்ளீஸ்… நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்று அழுகையுடனே சொல்லி அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் சிற்பிகா. அபியால் அதற்கு மேல் அவள் அழுவதை பார்த்து, காற்று புகாதவாறு இறுக்கிக் கொண்டான்‌ அபிநய் கண்ணா.

 

“உன் வீட்டில ஒத்துப்பாங்களா சிற்பி?”

 

“பேசிப்பாக்கலாம்…”

 

“பிரச்சனை வந்தா?”

 

“பாத்துக்கலாம்!”

 

“காதல் வந்தா?”

 

“பகிர்ந்துக்கலாம்!”

 

“ஐ லவ் யூ சொன்னா?” என்று கண்ணா புன்னகையுடன் கேட்க,

 

“லவ் யூ டூன்னு சொல்லனும்!” என்று சொல்லி தன்னவனது இதழைச் செதுக்கினாள் சிற்பிகா.

 

******

 

சில வருடங்களுக்கு பிறகு,

 

சிற்பியும் கண்ணாவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு, இன்று நான்கு குழந்தைகளுக்கு பெற்றோராகவும் பலருக்கு பாதுகாவலராகவும் இருந்து மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்!