காதல்களம் 10

images (9)-0b75f7f7

காதல்களம் 10

 

விடியற்காலையில், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து, கண்ணாடி முன் நின்று தன்னை சரிபார்த்துக் கொண்டிருந்த பாண்டியிடம், தயங்கி தயங்கி வந்து நின்றாள் மங்கா.

 

“எக்காவ், நான் எப்பிடி கீறேன்?” பாண்டி அலட்டலாக கேட்க,

 

“சோக்கா தான் கீற கிங்கு…” அவள் சொத்தென்று பதில் தந்தாள்.

 

“இன்னாக்கா, இஸ்துகிற… இன்னா மேட்டரு?”

 

“இப்ப எதுகாண்டி இந்த ஜரூர் கண்ணாலம் கிங்கு? அதுவும் அந்த அல்ட்டல் புட்ச்ச சிறுக்கி கூட.” என்று கேட்க, பாண்டி வாய்விட்டு சிரித்து விட்டான்.

 

“ஐய, சிரிச்சிக்காத கிங்கு. உனுக்கும் அவளுக்கும் ஒன்னுத்துக்கும் ஆவாது. கண்ணாலத்துக்கு அப்பாலேயும் நீ அவலாண்ட முட்டிக்கினு தான் நிக்கிணும் சொல்லிக்கினே.” என்றவள், 

 

சற்று தயங்கி, “நம்ம ராணி பொண்ணு கீதில்ல… உம்மேல உசுரா இர்ந்துக்குது கிங்கு. பாவம் உன்ன நென்சிக்குனு அயிது கரையுது. உன்மேல ஆசை வச்சிகீறவள கட்டிக்கோ கிங்கு. அப்ப தான் உன் லைஃபு நல்லா இர்ந்துக்கும்.” என்று மங்கா பெரிதாக அவனுக்கு எடுத்துச் சொன்னாள்.

 

அதைக்கேட்டு பாண்டியின் முகத்தில் விசித்திரமான சிரிப்பு வந்து போனது. “எக்கா… இந்த ஆச, லவ்வு, இலவு எல்லாம் நமக்கு செட்டாயிக்காது. எனுக்கு பொண்டாட்டி தான் வோணும்னா நான் எவள வோணா கட்டிக்குனு இர்ந்துருப்பேன். என் புள்ளைக்கு அம்மாவும் வோணும் க்கா… 

 

கதிரு அவளுக்காக எம்மா ஏங்கி அலட்டிக்கிறான்னு நீயே பார்த்துக்குன இல்ல, மெய்யாலுமே அவனுக்காக தான் அவள லாக் பண்ணி வச்சிகீறேன்.” பாண்டி அழுத்தமாகச் சொல்லவும், அதற்கு மேல் அவனை எதிர்த்து பேச மங்காவுக்கு மனம் வரவில்லை. அமைதியாகி விட்டாள்.

 

அடுத்த ஒருமணி நேரத்தில்,

 

பாண்டி சொல்லி வைத்தது போலவே, கோயிலில் வைத்து, வேணியின் கழுத்தில் தாலிக்கொடி பூட்டினான்.

 

அன்றைய தினம் முகூர்த்த நாள் இல்லை என்பதால், புரோகிதர் மனம் பொறாமல் பரிகார பூஜை என்றுவேறு தனியாக செய்தார். 

 

“யோவ் ஐயரே, காசு வோணும்னா கேட்டு வாங்கிக்கயா, எதுக்கு இப்பிடி பூஜை மேல பூஜை போட்டு கடுப்ப கிளப்பிக்கிற?” லெஃப்ட் மிரட்டலாக கேட்டதில் பயந்தவர்,

 

“அப்படி இல்ல பா, கல்யாணம் ஆயிரங்காலத்து பயிர்னு சொல்லுவாங்கோ. அதான் அவங்க ரெண்டு பேரும் குத்தம் குறை இல்லாம நல்லா வாழணும்னு…” என்று விளக்கம் தர முயன்றவரைத் கை நீட்டி தடுத்த பாண்டி, 

 

“அதல்லாம் ஒன்னியும் நீ கீச்சீக்க வாணா, இந்த கண்ணாலத்துக்கு இதுவே போதும். நீ சீக்ரம் முட்ச்சு வுடு.” என்று விட்டேற்றியாக சொன்னவனை, அருகில் அமர்ந்திருந்த வேணி தீப்பார்வை பார்த்து வைத்தாள். 

 

தனக்கு திருமணம் என்ற பெயரில் நடைபெறும் எதையும் அவளால் ஏற்கவும் முடியவில்லை. அங்கிருந்து விலகி ஓடவும் முடியவில்லை. கலங்கி துவண்ட மனதை வெளிக்காட்டாமல், உணர்ச்சி துடைத்த முகத்தோடு, அவர்கள் சொன்ன அனைத்தையும் மறுப்பின்றி செய்து கொண்டிருந்தாள் வேணி.

 

அவளிடம் இத்தனை அமைதியை எதிர்பார்க்காத பாண்டி, அவளை சந்தேகமாக கவனித்துப் பார்த்தான். கூரை சேலை, வண்ண பூமாலை என முழு மணப்பெண் அலங்காரத்தில், தான் இட்ட தங்க தாலிக்கொடி மாலைக்கு நடுவே தனியாக காட்சியாக, வெறுப்பை விழுங்கி அமர்ந்திருந்தவளைப் பார்க்க பார்க்க அவன் நினைவு எங்கோ தரிக்கெட்டு ஓடியது, அவன் இழுத்து பிடிக்க முயன்றும் கேளாமல்.

 

வெகு சாதாரண சுடிதாரில், ஐயர், மந்திரம், மாலை என்று எதுவும் இல்லாமல், பொன்தாலி பொட்டு கூட வாங்க வக்கற்று வெறும் மஞ்சள் கிழங்கு கட்டிய புது மஞ்சள் கயிறை தான் கட்டியதும், கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய அவனை அணைத்துக் கொண்டு நிறைந்து போன தன் காதல் மனைவியின் அந்த நாள் நினைவுகள் வரிசையாக தோன்ற, அதன் தாக்கத்தில் முகம் இறுகிப்போனவன், வேணியிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டு எழுந்தான் பாண்டி.

 

வேணியும் பாண்டியும் மாலையும் கழுத்துமாக ஆசி பெறும்போதும், கௌரி அழுது நொந்த முகத்துடன் தான் மகளை ஆசீர்வதித்தார். கோதண்டம் தாத்தாவின் கண்களும் கலங்கி இருக்க, பேத்தியின் தலையில் கைவைத்து ஆசி வழங்கினார்.

 

அடுத்து மணமக்கள் நைனாவின் காலில் விழுந்து ஆசி பெற, அவரோ நெகிழ்ந்து அவர்களை வாழ்த்தினார். பாண்டி, வேணியுடன் நிற்கும் திருமண கோலம், முன்பு பாண்டியும் கிருஷ்ணவேணியும் மணந்து, அன்று ஆசி வாங்கிய நினைவை அவருக்குள்ளும் எழச் செய்து நெஞ்சை கனக்க வைத்தது. 

 

தன் பெறாத மகன் கிங்குக்கு இந்த திருமண வாழ்க்கையாவது நிலைக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டார் அவர்.

 

அவர்கள் திருமணத்தில் வீட்டு ஆட்கள் என்று பத்து பேர் கூட இருக்கவில்லை. ஆனால், இருபது அடியாட்களுக்கு மேல் எப்போதும் அவர்களை சூழ்ந்து இருப்பது வேணிக்கு மட்டுமல்ல, கௌரி அம்மா, கோதண்டம் தாத்தாவிற்கு கூட, எரிச்சலான உணர்வைத் தந்தது. 

 

அதுவும் அவர்கள் ஒவ்வொருவரின் முரட்டு தோற்றமும், முதுகில், பேண்ட் பாக்கெட்டில் என்று அவர்கள் மறைத்தும் மறைக்காமலும் வைத்திருந்த ஆயுதங்களையும் பார்க்க பார்க்க, வேணிக்கு வெறுப்பாக வந்தது.

 

‘ரௌடிக்கு வாழ்க்கப்பட்டு இனி இந்த ரௌடி கூட்டத்தோடு தான் திரியணும் போல!’ மனதிற்குள் கடுத்துக் கொண்டாள்.

 

அங்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, கதிர் மட்டும் தான். பாண்டிக்கு இணையாக வேட்டி சட்டை அணிந்து சுற்றி திரிந்தவன், “வேணிக்கு கண்ணாலம்… நைனாக்கு கண்ணாலம்…” என்று குதித்துக் கொண்டிருந்தான். 

 

பாண்டி மகனைத் தூக்கி அவன் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு வேணியிடம் தர, அவள் மகனை தன்னோடு அள்ளி சேர்த்துக் கொண்டாள். 

 

“இதெல்லாம் உனக்காக மட்டும் தான் கதிரு!” என்று அவனை அணைத்துக் கொண்டவளின் கண்கள் கரித்தன. 

 

கதிர் அவளின் கண்ணீரைப் புரியாது பார்த்து, “அலாத வேணி, குச்சிமித்தா சாப்புதலாம்”(அழாத, குச்சிமிட்டாய் சாப்பிடலாம்) தன் மழலை கலையாத குரலில் சொன்னவன் அவள் கண்ணீரை பிஞ்சு கையால் துடைத்து விட, வேணியின் நெஞ்சு விம்மி தணிந்தது.

 

“ஏ வாணி, இப்ப இன்னாத்துக்கு அயிது சீன் போட்டுக்கிற.” பாண்டியின் கடுப்பான அதட்டலில்,

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள், 

“என் பேரு வாணி இல்ல, வேணி…” கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பினாள்.

 

“அது இன்னா வாணா இர்ந்துகினு போவட்டும், போட்டோக்காவது ஸ்மைல் பண்ணிகினு நில்லு.” என்றவன், மகனோடு சேர்த்து புது மனைவியையும் தன்புறம் இழுத்து நிறுத்தி, அவள் தோளைச் சுற்றி கை இட்டு கெத்தாக நிற்க, அவன் தன் தோளை அழுத்திய பிடிக்குள் எரிச்சலுடன் நின்றிருந்தாள் வேணி. அவர்களை அப்படியே கேமரா தன்னுள் சேகரித்துக் கொண்டது.

 

உடனே நகர முயன்ற பாண்டியிடம், “ஒரு நிமிசம்” என்று நிறுத்தியவள், துர்காவை அழைத்து, “எங்களை ஒரு ஃபோட்டோ எடு.” என்றாள்.

 

கண்முன் நடக்கும் எதையும் நம்ப முடியாமல் திருதிருவென விழித்த துர்கா, கைகள் நடுங்க தன் செல்பேசியில் அவர்களைப் படமெடுத்துக் கொண்டாள்.

 

“இந்த ஃபோட்டோவ ஜீவாவுக்கு ஷேர் பண்ணிடு துர்கா.” வேணி சொல்லவும், துர்கா கவலையாக தலையசைத்து, அவள் சொன்னபடி செய்தாள்.

 

“எக்ஸ் பாய்பிரண்டு மேல ரொம்பத்தான் அக்கற.” பாண்டி நக்கலாக சொல்லிவிட்டு நகர்ந்து கொள்ள, அவனது கேலியில் விளைந்த கசப்பை வலியோடு விழுங்கிக் கொண்டாள்.

 

திருமணம் முடிந்த கையோடு பதிவாளர் அலுவலகத்தில் அன்றே, அவர்கள் திருமணத்தைப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தான் பாண்டி. ஓர் இரவுக்குள் அவன் திட்டமிட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்த்து அவளுக்கு கொதிப்பாக இருந்தது. சிடுசிடுத்த முகத்துடன் அவர்கள் முறைக்காக காத்திருந்தாள்.

 

பாந்தமான வெள்ளை பட்டு வேட்டி சட்டையில், கச்சிதமாக வெட்டிவிடப்பட்ட கேசம், வழவழ கன்னத்தோடு, கையில் கதிரை பிடித்தபடி, அவளை நோக்கி நடந்து வருபவனை, வேணி சற்று திகைப்பாக பார்த்தாள்.

 

எப்போதும் சாயம்போன சட்டை, சாதாரண பேண்ட்டில், அடர்ந்த தாடி, கலைந்த கேசத்தோடு, முசுமுசுவென்ற முகத்தோடு இருப்பவனின், இந்த நேர்த்தியான தோற்றம், அவள் வியந்த பார்வையை அவனிடம் நொடிகளுக்கு மேலாக நிலைக்கவிட்டது.

 

அதை கவனித்தபடி அவளருகில் வந்தவன், “இன்னா, மச்சான சைட் அட்ச்சிகீறியா?” என்று குஜாலாக கேட்டு கண்ணடித்து அவளை சிண்டினான்.

 

அவனை ஏளன பார்வை பார்த்தவள், “போயும் போயும் கிருஷ்ணா எப்படி உன்ன லவ் பண்ணி தொலைச்சான்னு நினச்சேன். இப்போ தான தெரியுது இப்படி டிப்டாப்பா வேஷம் போட்டு அவளை நீ ஏமாத்தி இருக்கனு.” 

 

வேணியின் பேச்சில், தன்னுள் பொங்கி எழுந்த கோபத்தை பற்களை அழுத்த கடித்து அடக்கியவன், அவளை முறைத்துவிட்டு நகர்ந்து போனான்.

 

வேண்டா வெறுப்பாய் திருமண பதிவேட்டில் அவள் கையொப்பம் இடும்போது, பாண்டியின் முழு பெயரை கவனித்தவளுக்கு ஏளனம் தொற்றிக் கொண்டது. அந்த ஏளனத்தோடே அருகிருந்தவனைப் பார்த்து வைத்தாள்.

 

அவள் பார்வையைக் கவனித்தவன், “இன்னாடீ லுக்கு?” அடி குரலில் கேட்டபடி வெளியே நடந்தான். அவளும் அவனுடன் நடந்தாள்.

 

“கிங்கு, குரங்குன்னு பட்ட பேரை வச்சு நானும் ரௌடி தான்னு ஊரை ஏமாத்திட்டு இருக்க, உன் முழு பேரு பால் பாண்டியாம்… சிரிப்பா இல்ல.” அவள் அவனை கீழிறக்கி பேசி கேலியாக உதட்டை வளைக்கவும்,

 

“ஆமா, என் பேரு பால்பாண்டி தான், என்னாங்கிற அதுக்கு? வேல்பாண்டி மவன் பால்பாண்டிடீ நான்” சற்று கர்வமாக தன் முழு பெயரை உச்சரித்தவன், “அங்க மட்டும் இன்னா வாயுதாம், வாணி இல்ல வேணினு பேர்ல சீன போட்டுக்குனு கீறியே, உன் ஒரிஜினல் நேம் நாஞ் சொல்லவா?” 

 

அவன் அதே ஏளன தொனியோடு கேட்க, அவள் முகம் அப்பட்டமான அதிர்ச்சியைக் காட்டியது.

 

‘ஐயோ! இவனுக்கு எப்படி தெரியும்?’ என யோசித்தவளுக்கு, அது தன் அக்காவின் மூலம் என்று புரிபட, ‘கிருஷ்ணா…’ செத்து போன அக்காவை காட்டமாக நொந்து கொண்டாள்.

 

“இன்னா உன் மொகர‌ இஞ்சி துன்ன மங்கி மாறி மாறிக்கிச்சு, அம்சவேணி…” அவளது முழு பேரை இழுத்து சொல்லி காட்டியவன், “உன் அம்சா, சம்சா பேருக்கு என் பால்பாண்டி பேரு எவ்வளோ மேலு தான், போடீ.” அவளை வாறிவிட்டு முன்னால் நடந்தான்.

 

வேணியின் முகம் மொத்தமாக வீழ்ந்து போனது. தன் முழு பெயரில் அவளுக்கு எப்போதுமே பிடித்தம் இருந்ததில்லை. அந்த பெயரை அவன் தெரிந்து வைத்திருப்பதில் அவளை அத்தனை அவமானமான உணர்வு தின்றது.

 

அவனுடனான திருமணத்திற்கு கூட அத்தனை கவலைப்படாதவள், தன் முழு பெயரை அவன் அறிந்து வைத்திருந்ததில் வெகுவாக கவலைப்பட்டு போனாள்.

 

இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டே இருந்தாலும், சம்பிரதாயப்படியும் சட்டப்படியும், பால்பாண்டியும் அம்சவேணியும் கணவன், மனைவி என்ற பந்தத்திற்குள் முழு விருப்பமின்றியே பிணைக்கப்பட்டனர்.

 

காரின் பின் இருக்கையில், அம்மா, தாத்தா, நைனா அமர்ந்திருக்க, முன் இருக்கையில் கதிரை மடியில் வைத்தபடி பாண்டி அமர்ந்திருந்தான். ஓட்டுநர் இருக்கை மட்டுமே காலியாக இருக்க, அவனை கேள்வியாகப் பார்த்தாள் வேணி.

 

“ஐய சொம்மா சொம்மா லுக்கு வுட்டுகுனு, நீதான் டிரைவ் பண்ற‌ வந்து தொல.” பாண்டி சொன்னதில், 

 

“என்ன நானா?” அவள் கண்களை விரித்தாள்.

 

“நீயே தான், நேத்திக்கு என் புள்ளய கடத்திக்குனு போக மட்டும் என் காரை ஆட்டைய போட தெரிஞ்சதில்ல. இப்பையும் நீதான் எடுக்குற.”

 

“என் கதிரை கடத்திட்டு போனது நீ. என்னை கடத்துனதா சொல்றீயா? உன் காரை நான் என்னவோ திருடிட்டு போன மாதிரி பேசற.” வாய்க்குள் படபடத்தபடி, அதே கோபத்துடன் காரை எடுத்து, வேகம் பிடித்தாள்.

 

“லெப்ட் எடு.”

 

“ரைட் கட் பண்ணிக்க.”

 

“ஸ்டெயிட்டா வுடு.”

 

மகனுக்கு வேடிக்கை காட்டியபடி பாண்டி அவளுக்கு போக வேண்டிய வழியைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

‘இதுக்கு அவனே காரை ஓட்டி இருக்கலாம்’ என்று சலித்தவள், “எந்த ஏரியாக்கு போகணும்னு மட்டும் சொல்லு போதும், லெப்ட், ரைட் நானே எடுத்துக்கிறேன்.” என்றாள் அவனிடம் கடுகடுப்பாக.

 

அவளை திரும்பி பார்த்தவன், மகனின் காதருகே குனிந்து, “உன் அம்மா என்ன காண்டாக்கினே கீறாடா, நீ பாட்டியாண்ட போ, நான் இவள கவன்ச்சிக்கிறேன்.” என்று பாண்டி கிசுகிசுத்தது வேணிக்கும் நன்றாகவே கேட்டது. கூடவே, ‘யார் அம்மா?’ என்பதை போல, கதிர் திருதிருப்பதும் தெரிந்தது.

 

அந்த சூழலில் அவள் மனம் கசிந்து போனது. கதிரை தூக்கி அணைத்துக்கொள்ள கைகள் துறுதுறுத்தன. 

 

முதன் முதலில் அவன் வேணியை அம்மா என்று அழைத்தப்போதே அவள் வெகுவாக நெகிழ்ந்து போயிருந்தாள். ஆனால், கௌரிக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. பேரனிடம் திருப்பி திருப்பி சொல்லி, ‘சித்தி’ என்றே அழைக்க வைத்திருந்தார். இப்போது வளர வளர அவனிடம் சித்தி என்ற விளிப்பு கூட மறைந்து போய், ‘வேணி’ என்ற அழைப்பு ஒட்டிக்கொண்டது. கொள்ளு தாத்தாவும், பாட்டியும் அவளை பேர் சொல்லி அழைப்பதைக் கவனித்து அவனும் அதையே பழகிக் கொண்டு விட்டான்.

 

இப்போதும் கதிர் தன்னை அம்மா என்று அழைக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் அவளுக்கு இல்லை. கதிருக்காக அவள் இருக்க வேண்டும் அவ்வளவுதான். அவனுக்காக அவள் இருப்பாள், அதில் அவள் அத்தனை உறுதியாக இருந்தாள். அந்த உறுதியை விட முடியாமல் தானே, இந்த ரௌடிக்கு மனைவியாகி நிற்கிறாள். இப்போதும், பாண்டியின் மனைவி என்ற பதமே அவளுக்குள் கசந்து வழிந்தது. 

 

மனதளவில் உழப்பி கொண்டிருந்தவள் கைகளில், கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்க,

 

“இப்பிடியே காரை உருட்டிட்டு போனனா ஒரு வாரத்துல வூடு போய் செர்ந்துரலாம்.” பாண்டியின் நக்கலில், ஆக்ஸலேட்டரை அழுத்தி காரின் வேகத்தைக் கூட்டி பறந்தாள்.

 

அவன் சொன்ன வழியில், முன் சாலையில் கவனம் வைத்து காரை இயக்கியவள் பார்வையில், நேரெதிரே சீறி வந்த லாரியின் வேகம் அவளை துணுக்குறச் செய்தது.

 

வேணி என்னவென்று யோசிப்பதற்குள், சுதாரித்துக் கொண்ட பாண்டி, சட்டென காரை இடப்பக்கம் வளைந்து திருப்பவும், கார் சாலையோர வேலி செடிகளில் சிராய்த்துக் கொண்டு மோதி நின்றது.

 

நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வு. காருக்குள் இருந்த அனைவரும் அந்த நொடியில் செத்து பிழைத்திருந்தனர்.

 

சுயநினைவு மீண்டதும் வேணி திரும்பி பார்க்க, இவர்களை இடிக்க வந்த லாரி பின்னால் வந்த சுமோவை மோதி நசுக்கி இருந்தது. 

 

‘அய்யையோ! யாருக்கு என்னாச்சோ!’ பதறி காரைவிட்டு இறங்க முயன்றவளைத் தடுத்து இழுத்து பிடித்த பாண்டி, “பர்ஸ்ட்டு நம்மள பாரு.” அதட்டினான். 

 

கோபமாக அவனிடம் திரும்பியவள், இப்போதுதான் அவன் நிலையைக் கவனித்தாள். அவன் பக்கமிருந்த ஜன்னல் கண்ணாடி உடைந்திருக்க அந்த கண்ணாடி சில்லுகள் பட்டு பாண்டியின் இடது கை முழுதாக இரத்தம் வழிந்தபடி இருந்தது.

 

“அய்யோ!” என்று தன்னை மீறி பதறியவள், அவன் முகத்தை பார்க்க, அவன் முகத்தில் வலிக்கான எந்த பிரதிபலிப்பும் இருக்கவில்லை.

 

‘இவனென்ன மனுசனா? மரக்கட்டையா?’ அந்த நிமிடம் அவளுக்கு அப்படித்தான் தோன்றியது. அவளுக்கு அத்தனை அடிப்பட்டு இருந்தால், இந்நேரம் வலியில் கத்தி கதறி மயங்கியும் போயிருப்பாள்.

 

“ஏய்… சீக்ரம் வண்டிய எடுத்து தொலடி…” பாண்டியின் கத்தலில், அதற்கு மேல் அவள் யோசிக்கவில்லை. காரை பின்னெடுத்து சாலையில் பறக்கவிட்டாள்.

 

அடிப்பட்ட கையை அசையாமல் வைத்தபடி, மறு கையால் செல்பேசியில் தன் சகாக்களுக்கு அவசர உத்தரவுகளை தந்தான் கிங்.

 

“லெஃப்டு, ஸ்கெட்சு எனக்கு தான் யார் வேலன்னு சீக்ரம் கண்டுபிடி.”

 

“பாதி பேர் என் பின்னால வாங்க, மத்தவங்கள அந்த ஆக்ஸிடன்ட்ல யாருக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க சொல்லு.”

 

“சரிண்ணா.”

 

சட்டென மாறிய அசாதாரண சூழ்நிலையில்,‌ மிரண்டிருந்த கௌரி, அழத் தொடங்கி இருந்த கதிரை தன்னோடு பொத்திக் கொண்டார். 

 

“பயமாயிக்கு பாத்தி…” கதிர் சிணுங்கியபடி அவர் கழுத்தைக் கட்டிக் கொள்ள,

 

“பயப்புடாத கதிரு, நைனா இருக்கேன்ல, இதோ இப்ப நாம வூட்டுக்கு போய்ரலாம்.” பாண்டி மகனுக்கு ஆறுதல் சொல்லியபடி, வேணிக்கு போக வேண்டிய வழியையும் சொன்னான்.

 

சூழ்நிலை உணர்ந்து வேணியும், அவன் சொன்ன வழியில் வேகத்தைக் குறைக்காது கூடுதல் கவனத்தோடு காரை இயக்கி சென்றாள். பாண்டியின் பார்வை நாலாபுறமும் சுற்றி எச்சரிக்கையோடு அலசியபடி இருந்தது. 

 

அதே நேரம் அவன் காரை முன்னும் பின்னும் ஐந்து மோட்டர் பைக் சூழ்ந்து கொள்ள, அதை பார்த்த வேணிக்கு பயம் சூழ்ந்து கொண்டது.

 

தன்னைமீறி பயத்தில், “ஐயோ!” என்று அலறி விட்டாள்.

 

“ஏ பயந்துக்காத, இதெல்லாம் நம்மாளுங்க தான்.” என்று அவளிடம் தைரியம் சொன்னவன், அவர்களுக்கு கையசைத்து ஏதோ செய்கை செய்துவிட்டு, காரின் வேகத்தை குறைத்து செலுத்த சொன்னான்.

 

“இனிமே பயமில்ல, தைரியமா இருங்க.” கிங் சொன்னதில், வேணிக்கு சுறுசுறுவென ஆத்திரம் பெருகியது.

 

“அதெப்படி பயமில்லனு சொல்ற? நீதான் அவனுங்கள அடிக்க செட் பண்ணியா? இல்லல்ல, பின்ன உனக்கு எப்படி தெரியும்? இன்னும் எங்க எப்படி தாக்குவாங்களோ, இல்ல குண்டு போட்டு மொத்தமா முடிச்சிடுவாங்களோ.” வேணி கேட்கவும்,

 

“அய்யோ!”

 

“ஆண்டவா!” காரின் பின் இருக்கையில் இருந்தவர்கள், இன்னும் பதறினர்.

 

“ஐய, அவனுங்களுக்கு நீயே பாம் சப்ளே பண்ண மாறி பேசற. மத்தவங்கள பயபடுத்தாம வாய மூடிக்கினு ஓட்டுடீ.” பாண்டி விட்ட அதட்டலில் அவள் வாய் மூடிக் கொண்டாள். 

 

அடுத்த இருபது நிமிடங்களில், அவன் சொன்ன ஒரு வீட்டின் கேட்டுக்குள் காரை செலுத்தி நிறுத்தினாள்.

 

காரிலிருந்து முழுதாக இறங்கிய பின்னரே அவர்களுக்கெல்லாம் உயிர் மீண்டிருந்தது.

 

வலித்த கையை உதறியபடி இறங்கியவனின் பக்கம் வந்த ரைட், “அண்ணே, உள்ள வந்து குந்திக்க, நம்ம தாம்பு டாக்டர கூட்டாந்துக்குவான் இப்ப.” என்றான்.

 

“அத்த வுடு, யார் பண்ணிக்கின வேலைடா இது? எம்மேல கை வக்கிற தில்லு எவனுக்குடா வந்துகிச்சு?” பற்களை கடித்தபடி ஆக்ரோஷமாக கிங் கேட்டதும்,

 

“காளியண்ணே ஜாமின்ல வந்து கீதுண்ணா, அத்தோட வேலையா தான் இர்க்கும்.” ரைட் பதில் தரவும், கிங்கின் கண்களில் இரத்த சிவப்பேறியது.

 

***

 

காதல் களமாடும்…