காதல்களம் 13

images (10)-e222062f

 

காதல்களம் 13

 

கிங் பாண்டி அன்றைய இரவில் கூட வீட்டில் தங்காது, லோக்கல் சினிமா தியேட்டர் ஒன்றில் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். கையில் கட்டு போட்டிருந்தாலும் கூட, கோபத்தின் கொதிப்பில், பார்ப்பவரை எரித்துவிடும் தோரணையோடு இருந்தான்.

 

அவனைச் சுற்றிலும் அங்கங்கே உட்கார்ந்திருந்த ரௌடிகளும் அடியாட்களும் அவனது இறுகி கறுத்து நெருப்பாக தகித்திருந்த முகத்தை பொறுமையிழந்து பார்த்திருந்தனர்.

 

வந்ததிலிருந்து அவன் ஏதும் பேசாமல் இப்படி அமைதியாக இருப்பது வேறு அவர்கள் வயிற்றில் கிலியைப் பரப்பியது.

 

கிங் ஒன்றும் அத்தனை பெரியாள் இல்லை என்று சுலபமாக தட்டிவிட, அங்கிருந்த யாருக்கும் தைரியம் வரவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு வரை அவன் வெறும் அடியாள் தான். ஆனால் எப்போது காளியை லாவகமாக போலிஸில் மாட்டிவிட்டு இவன் தப்பி வெளியே வந்தானோ, அப்போதே அவன் ரேன்ஜ் மாறி இருந்தது. 

 

பெரிய இடம், சின்ன இடம், தெரிந்தவர், தெரியாதவர் என்று எல்லா வகையிலும் அவன் கை ஓங்கியிருந்தது. ஆனாலும் எதிலும் அவனது நேரடியான தலையீடு இருப்பதில்லை. அதில் மட்டும் அத்தனை கவனமாக இருந்தான். சரக்கை கைமாற்றி விடுவதையோ, கடத்துவதையோ அவன் நேரடியாக செய்வதில்லை என்றாலும் அவன் உதவி இல்லாமல், பொருள் கைமாறுவது கடினம் என்பது மட்டும் அவர்களுக்கு தெரிந்திருந்த ரகசியம்.

 

சில ஆண்டுகளில் எப்படி அவன் இண்டு இடுக்குகளில் புகுந்து தன்னை நிலைநிறுத்தினான் என்ற கேள்வியில் விளைந்த யோசனையே, வழிவழியாக வரும் அந்த ரௌடிகளின் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும். அந்தளவு, எல்லா கிரிமினல் வேலைகள் நடக்கும் இடங்களிலும் அவனுடைய கையாட்கள் விரவி இருந்தனர் அல்லது அத்தகைய தொழில் செய்யும் ஆட்களை அவன் தனவசமாக்கிக் கொண்டிருந்தான். அது அத்தனை சாத்தியமானது அல்ல…

 

ஒரு கூட்டத்தில் இருப்பவர்களை தன் நம்பிக்கைக்குரியவர்களாக மாற்றுவது அத்தனை சுலபமான காரியம் இல்லை. என்னதான் பணத்துக்காக கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து, அடிதடி என்று தவறான தோழிலை செய்பவர்கள் என்றாலும், அவர்களுக்குள்ளும் நன்றியுணர்வும் பிணைப்பும் இருக்கவே செய்யும். அந்த பிணைப்பை அறுத்து தனதாட்களாக மாற்றிக் கொள்ளவது அத்தனை எளிதானது இல்லை. ஆனால் அவன்… கிங் அதை சாதித்து இருந்தான்.

 

பிரபல ரௌடி தலைகளுக்கு அவனிடம் இருக்கும் பொதுவான பயம் இதுதான், தன் ஆட்களிலும் அவன் விசுவாசிகள் இருப்பார்களோ என்ற அச்சம்! அந்த பயம் பைத்தியக்காரத்தனம் என்று விலக்கவும் அவர்களால் முடியவில்லை. இதுவரை கிங்கை எதிர்த்தவர்கள், அவர்களது சொந்த கையாட்கள் மூலமே தான் வீழ்த்தப்பட்டிருக்கின்றனர் என்பதும், அங்கே அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

 

“இப்டி கம்முனு கிடந்தா எப்டி கிங்கு? ஏதாச்சும் கேளு நாங்க பதில் சொல்லிக்கிறோம்… நீ கூப்புட்டன்னு ஒரே சொல்லுக்காண்டி தான், நாங்கல்லாம் மொத்தமா வந்துகினோம். இன்னா இர்ந்துகினாலும் நாமல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு கிங்கு… உம்மேல போய் நாங்க கை வச்சிப்போம்னு எங்கள டவுட் பண்ணிக்காத சொல்லிட்டேன்.” 

 

எவ்வளவு நேரம்தான் அமைதியாக இருப்பது என்று கத்தி கண்ணாயிரம் நேரடியாக கிங்கிடம் பேசினான். அவனைத் தொடர்ந்து, பல குரல்கள் வந்து விழுந்தன.

 

“நான் இல்ல கிங்கு”

 

“நான் போய் உன்னாண்ட வச்சுக்குவேனா?”

 

“என்னபோய் டவுட் பட்டுக்குவியா கிங்கு?”

 

பாண்டி நிமிர்ந்தான். தன் முன்னால் திரண்டிருந்த இருக்கைகளில் அங்கங்கே அமர்ந்திருந்த முரடர்களின் முகங்களை அவதானித்தவன், “என்மேல கைய வச்சிக்கினது யாருன்னு எனுக்கு தெர்யும். இப்பத்தி மேட்டர் அதில்ல… என்ன முடிக்க காளியண்ணனுக்கு சப்போர்ட் பண்ணது உங்கள்ல யாருன்னு தான் எனுக்கு தெர்யணும்.” தன் வலது கை விரல்களை ஒன்றோடொன்று உரசியபடி கேட்டான்.

 

காளியின் பெயரைக் கேட்டதும் அங்கிருந்தவர்களின் முகங்கள் அதிர்ச்சியைக் காட்டின. ஒருகாலத்தில் கிங் பாண்டியின் இடத்தில் இருந்தவன் தான் காளி. அவனை தூக்கி போட்டுத்தான் கிங் இப்போது இங்கே இருக்கிறான் என்பது அங்கிருந்த அனைவருக்குமே வெளிச்சம்.

 

“காளிண்ணே எப்ப ரிலீஸ் ஆயிகிச்சு?”

 

“காளி திரும்பி வந்துகிச்சா?”

 

என்பன போன்ற குரல்கள் எழ, பாண்டி தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான். “காளி அண்ணனால தனியா என்ன ஒன்னியும் செஞ்சுக்க முடியாது. உங்கள்ல ஏதோ நாதாரி தான் அதுக்கு சப்போர்ட் பண்ணிகீற… ஒயிங்கு மரியாதயா நீயே என்னாண்ட சரண்டர் ஆயிக்க, நானா கண்டுகினேன்னு வச்சிக்க… காளிக்கு முன்னால உன்னத்தான் போடுவேன்.” 

 

ஆள்காட்டி விரல் நீட்டி அவன் மிரட்டல் விட்டதில், அங்கிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி திரும்பி பார்த்து குழம்பினர். அவர்களுக்குள்ளேயே பேசி, சலசலத்தனர்.

 

பாண்டியின் பார்வை அங்கிருந்தவர்களை அலசி சலித்துக் கொண்டிருந்தது. சந்தேகப் புள்ளி விழுந்தவர்களை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டான்.

 

அங்கிருந்த சலசலப்பையும் மீறி, “கட்டிங் போடாம கை நடுங்குது கிங்கு…” என்று பக்கிரி சத்தமாக புலம்பவும், அதே நிலையில் இருந்த மற்றவர்களும் சிரித்துவிட, பாண்டி கூட இறுக்கம் தளர்ந்து சிரித்து விட்டான். அவனது கண்ணசைவில் அவர்களுக்கு தேவையான மது விருந்து, கடை விரிக்கப்பட்டது.

 

“புது மாப்பிள கிங்குக்கு கங்குராஜூலேசன் கூவுங்கப்பா…” என்ற கூச்சலுடன் அந்த இடம் அமளி துமளியானது. 

 

அவர்களது பலதரப்பட்ட வாழ்த்தில், அவனுக்கு அம்சவேணியின் வெறுப்பை சுமந்த கோபமுகம் நினைவில் வந்து நிற்க, தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

 

***

 

சாதாரணமாக நிகழ்ந்த திருமணமாக இருந்திருந்தால், அலங்காரம், கேலி பேச்சுக்கள் என அந்த இரவு கொண்டாட்டமாக இருந்திருக்கும். ஆனால், இவர்கள் திருமணத்தில் அப்படி எதையும் எதிர்பார்க்கும் வாய்ப்பு கூட யாருக்கும் அமைந்திருக்கவில்லை.

 

சொந்த வீடாக இருந்திருந்தால், கௌரி புலம்பி புலம்பியே மாய்ந்து போயிருப்பார். இது பாண்டியின் வீடாதலால், மகளின் வாழ்வை எண்ணி அவர் மனதுக்குள்ளேயே புழுங்கி கலங்கி தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் முடங்கி கொண்டார். 

 

கோதண்டம் தாத்தா, வயது முதிர்வின் காரணமாக எதையும்‌ எண்ணி அலட்டிக் கொள்ள தெம்பில்லாமல், எல்லாம் நல்லதாவே நடக்கும் என்று மனதை ஒருநிலையில் நிறுத்தி கொண்டார். நைனா அவரிடம் பேச்சு கொடுக்க, தாத்தாவும் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்தது என்று நைனாவுடனேயே ஒரு அறையில் முடங்கி கொண்டு விட்டார்.

 

கதிர்வேல் விழித்ததும் அவனுக்கு உணவு கொடுத்து, பயந்திருந்த அவனுக்கு விளையாட்டு காட்டி ஓரளவு குழந்தையை சமாதானப்படுத்தி உறங்க வைத்த பிறகும் வேணிக்கு உறக்கம் அண்டவில்லை.

 

திசைமாறிப் போன தன் வாழ்வை நேர்படுத்த முடியுமா? முடியவே முடியாதா? என்ற தீவிர யோசனையில் படுத்திருந்தாள் வேணி. அவள் கண்கள் இரண்டும் கலங்கி சிவந்து கிடந்தன. 

 

வெளியில் தன்னை அத்தனை தைரியமானவளாகக் காட்டி கொண்டாலும், தனிமையில் அவள் மனம் கலங்கி துவண்டு போயிருந்தது.

பாண்டியிடம் அத்தனை மோசமாக அல்லவா அவள் தோற்றுப்போய் சிறைப்பட்டு இருக்கிறாள்‌.

 

இது அவளுக்கு ஆயுள் தண்டனையா? இல்லை மரண தண்டனையா? என்பது கூட சரியாக தெரியவில்லை. இந்த ஒருநாளிலேயே அவள் மனம் வெகுவாக காயப்பட்டு போயிருந்தது.

 

ஜீவாவை பற்றிய நினைவுகள் வருவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. அவனை மன்னிக்கவும் அவள் தயாராகயில்லை. அவனுக்காக அவள் பார்த்து பார்த்து கட்டியிருந்த நம்பிக்கை கோட்டையை மண்ணோடு மண்ணாக சரித்து விட்டிருந்தான் அவன். அதன் வலியும் வேதனையும் ஒருபுறம் அவளை துவளச் செய்திருந்தது.

 

மனதின் உளைச்சலில் ஓயாமல் உழன்றவள், பின் இரவில் கண் அயர்ந்திருந்தாள்.

 

அவள் உறங்கிய சற்று நேரத்தில், அவர்கள் தங்கிருந்த அறைக்குள் நடை தள்ளாட நுழைந்தான் பாண்டி.

 

புது தாலியோடு உறக்கத்தில் இருந்த வேணியை… அம்சவேணியையும், உறக்கத்தில் அவளது கழுத்தை கட்டிக்கொண்டு, அவள் மேல் கால் போட்டு அவளை ஒட்டி படுத்திருந்த கதிர்பாண்டியையும் பார்த்து, தனக்குத்தானே சிரிப்பை உதிர்த்துக் கொண்டான்.

 

ஏறியிருந்த போதையில் அவன் கண்கள் ஒருபக்கம் சொறுகியது. “இது என் பொண்டாட்டி… இது என் புள்ள… இது என் வூடு…” கர்வமாக முணுமுணுத்தவன், அவர்களை நெருங்கி முத்தமிட குனியவும், அவன் உடல் தள்ளாடவும், பேலன்ஸ் மிஸ்ஸாகி மல்லாந்து தரையில் விழுந்தான்.

 

அவன் விழுந்த பொத்தென்ற சத்தம் கேட்டு, சற்றே கண்களை திறந்து மேலே சுற்றி பார்த்தவளுக்கு, கீழே விழுந்து புதையலெடுத்துக் கொண்டிருந்த புருஷன் பார்வைக்கு புலப்படாமல் போக, திரும்பி படுத்து மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தாள் வேணி.

 

அவனது போதையில் கிருஷ்ணவேணியின் உருவம் அவன் கண்முன்னால் நிழலாடியது. “மயிமா… ஏ மயிமா… ஏன்டீ என்னவுட்டு போன… இந்த கிங்கயே ஏமாத்திக்கினு போயிக்கினே இல்ல… உன்ன வுடமாட்டேன்டீ… உன்ன கொல்லுவேன்டீ… நீ எனுக்கு வாணா போடீ…” வாய்க்குள் முணுமுணுத்தான்.

 

“நீ போயிக்கினா இந்த கிங்கு ஒன்னில்லாம போயிக்குவான்னு நென்சிக்கினியா… இங்க இங்க பார்டீ… புது பொண்டாட்டி, புது வூடு, புது லைஃப்னு நான் ஜமாய்ச்சுபேன்டீ… நீ போடீ… நீ வாணா போடீ…” காற்றில் அடிப்படாத கையை வீசி வீசி, அவன் நினைவில் இருந்தவளை அடித்து துறத்தி ஓய்ந்தவன், அப்படியே உறங்கியும் போயிருந்தான்.

 

***

 

“சரவணபவனே சண்முக வடிவே

சரணடைந்தோமே வேல் முருகா!”

 

“வேல் முதுகா…”

 

“கரங்கள் குவித்து உன்னடி பணிய

காத்திடுவாயே வேல் முருகா!”

 

“வேல் முதுகா…”

 

“நிரந்தரமான உனதருள் வேண்டி

நினைப்போம் உன்னை வேல் முருகா!”

 

“வேல் முதுகா…”

 

“பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா!”

 

“வேல் முதுகா…”

 

“நறுமலர் எடுத்து சரமாய் தொடுத்து

நான் உனக்களிப்பேன் வேல் முருகா!”

 

“வேல் முதுகா…”

 

“தருணம் இதுவென தந்திடுவாய் அருள்

தாமதம் ஏனோ வேல் முருகா!”

 

“வேல் முதுகா…”

 

காலையில், பக்தி பாடலின் பரவச குரல் கேட்டு, தரையில் புரண்டு கொண்டிருந்தான் பாண்டி. 

 

முதலில் கேட்ட வேணியின் குரலை கூட அவனால் அலட்சியம் செய்ய முடிந்தது. அவளோடு பின்பாட்டு பாடிய கதிரின் மழலை குரல் அவன் தூக்கத்தை மொத்தமாக அள்ளிக் கொண்டது.

 

அரைகுறை தூக்கத்தில் சோர்ந்து கிடந்த கண்களைத் தேய்த்து விட்டுக்கொண்டு மணியைப் பார்த்தவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 

“அடியே… உன் சாமிய கும்பிட எட்டு மணிக்கெல்லாம் என் தூக்கத்துக்கு வேட்டு வச்சிக்கினியேடீ அம்சாவேணி… இவள…” என்று வாய்விட்டே கடுகடுத்தவன், இடுப்பில் நழுவிய கைலியை ஒற்றை கையால் இழுத்து பிடித்து, வாயில் கவ்வியபடி இடுப்பில் கட்டிக் கொண்டவன், அறையிலிருந்து வெளி பொந்தான்.

 

அங்கே, அவன் வீடா இது? என்று கேள்வி எழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. வீடு முழுவதும் சாம்பிராணி மணமும், ஊதுபத்தி வாசமும் நிறைந்து ஏதோ கோயில் போன்ற தோற்றத்தை அளித்தது.

 

வேணி, கதிர், கௌரி, கோதண்டம் நால்வரும் குளித்து, சுத்தபத்தமாய் பூஜை அறை முன்பு கைக்கூப்பி வணங்கி நின்றிருக்க, பூஜை மாடத்தில் புதிதாக வைக்கப்பட்டிருந்த முருகன் படத்திற்கு வேணி கற்பூர ஆரத்தி காட்டவும்,‌ கதிர் பூஜை மணியை ஆட்டிக் கொண்டிருந்தான்.

 

‘டேய்… என்னடா நடக்குது இங்க?’ என்று தான் தோன்றியது பாண்டிக்கு. அவனைப் போலத்தான்,‌ நைனாவும் மங்காவும் தூக்கம் கலையாமல் தலையை சொரிந்தபடி ஹாலுக்கு வந்து நின்று அவர்களை ‘பே’ என்று பார்த்து வைத்தனர்.

 

வேணி கற்பூர ஆரத்தி தட்டை அவர்களிடம் காட்ட வந்தவள், தாமதித்து மூவரையும் ஒருமுறை பார்த்து, “நீங்க இன்னுமா குளிக்காம இருக்கீங்க?” மூவரையும் பொதுவாக கேட்டாள்.

 

“அடிங் கொக்கா மக்கா… காலங்காத்தால பஜனை பாட்ட கூவிக்குனு என் தூக்கத்த கெடுத்துக்கனுதும் இல்லாமே, குளிக்க வேற சொல்லிக்குவியா நீ?” சுண்டெலி சீண்டிவிட்ட சிங்கமாய் கிங்கு அவளிடம் சீறிக்கொண்டு வந்தான்.

 

வேணி அவனை ஏதோ போல பார்த்து வைத்தாள். “இப்ப இல்லனா எப்ப எழுந்துப்பீங்க நீங்கெல்லாம்?” அவள் நிச்சயமாய் புரியாமல் தான் அந்த கேள்வியை வைத்தாள்.

 

“அதல்லாம் சொல்லிக்கவே முடிஞ்சிக்காது புள்ள, காத்தால ஏதாது வேல இர்ந்துக்குனா தான் கிங்கு நேரத்தோட எயுந்து போயிக்கும். இல்லனா அதுக்கே வவுறு பசிச்சிக்கினு எய்ந்துக்குனா தான் உண்டு.” மங்கா கிங்கின் பெருமையை சொல்ல, வேணிக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 

 

காலையில் நேரத்திற்கு விழிப்பது, குளிப்பது, கடவுளை வணங்குவது, நேரத்திற்கு சாப்பிடுவது போன்ற அன்றாட அடிப்படை ஒழுக்க நெறிகளைக் கூட அவர்கள்  பழக்கப்படுத்தி கொள்ளவில்லை என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

 

‘இவனை நம்பி கதிர விட்டிருந்தா… இவனும் அவங்க அப்பா போலத்தான் வளர்ந்து நின்னிருப்பான்.’ என்பதும் அவளுக்கு புரிய, ‘கதிருக்காக ரிஸ்க் எடுத்து இந்த ரௌடியை திருமணம் செய்துகொள்ள முன்வந்தது சரிதான்’ என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

 

“ஏ இங்க பாத்துக்க, என்ன தூக்கத்துல யாரானா டிஸ்டர்ப் பண்ணிக்கினா நான் செம காண்டாயிக்குவேன். இனிமே இந்த பாட்டு பாடி கூவிக்கிறதெல்லாம் சத்தமில்லாம பண்ணிக்கனும். புர்ஞ்சிதா?” என்று தன் புது மனைவிக்கு அறிவுரை பகர்ந்தவன்,‌ “குட் நைட்…” என்று விட்ட தூக்கத்தை மறுபடி தொடர,‌ மாடி ஏறி அவனறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

அவன் போவதைப் பாரத்து வேணி திருதிருவென விழித்து நிற்க,

 

“பாப்பா, இன்னா டிபன் மா சமைக்கட்டும்?” என்று தன் அக்குளை சொறிந்தபடியே வினவிய நைனாவை பார்த்து,‌‌ அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும்போல ஆனது.

 

“நீ… நீங்க எதுவும் செய்ய வேணாம். நானும் அம்மாவும் பார்த்துக்கிறோம். நீங்க… முதல்ல போய் நல்லா குளிச்சிட்டு வாங்க போங்க.” என்று பார்வையால் தள்ளி நிறுத்தி, அவரை விரட்டினாள்.

 

“அட, நெத்து காத்தால தான்மா குளிச்சிக்கினே… இன்னொரு தபா இன்னிக்கும் குள்ச்சிக்கினுமா இன்னா?” நைனா தன் நரை தலையை சொறிந்து கொண்டு அசட்டு‌ சிரிப்புடன் கேட்க, வேணியின் பொறுமை கடந்துவிட்டது.

 

“இனிமே நீங்க எல்லாரும் டெய்லியும் குளிச்சி தான் ஆகனும்… யாராவது குளிக்காம கொள்ளாம என் முன்னாடி வந்து நின்னீங்க… நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” என்று கத்தி விட்டாள்.

 

அவள் கத்தலில் நைனா தலையை தலையை ஆட்டி விட்டு குளிக்க நகர, மங்கா அங்கேயே நின்றிருந்தாள்.

 

“அட, மங்கா கா, இன்னா வூட்டு வாசல்ல அம்மாம் பெருசா கோலம் வரைஞ்சி வச்சி கீது… நான் நம்ம கிங்கு வூடா வேற வூடான்னு மிரண்டுக்கனே உள்ள வந்துகினே.” என்று கேட்டபடிக்கு ரைட்டும் லெஃப்டும் ஒன்றாக உள்ளே வந்தனர்.

 

அவர்களை கை காட்டி நிறுத்திய வேணி, “நீங்களாவது குளிச்சிங்களா இல்லயா?” அதிகாரமாக கேட்க,

 

மலங்க மலங்க ஒருவரையொருவர் பார்த்து கொண்ட‌ இருவரும், “ஆ குளிச்சிக்கினுமே அண்ணி… கிங்கு கண்ணாலத்தன்னைக்கு குளிச்சிக்கலனா எப்டீ, குளிச்சு புது சொக்காலாம் போட்டுக்குனு தான் வந்துகினோம்.” என்றவர்களை பெருமூச்சு எடுத்து பார்த்தவள்,

 

“எங்க கல்யாணம் நேத்தே முடிச்சிடுச்சு. நான் கேட்டது, இன்னிக்கு குளிச்சிங்களானு?” அவள் கண்களை விரித்து, அடக்கிய கோபத்தோடு கேட்க,

 

தடிமாடுகள் போலிருந்த இருவரும் அவளிடம் பம்மியபடி தலையாட்டி விட்டு, வெளியே யூடர்ன் எடுத்தனர்.

 

“இன்னாடா, அண்ணி வந்துக்கின உட்ன நம்ம எல்லாத்தயும் குளிச்சிக்க சொல்லுது?”

 

“அதெப்படி நம்மால டெய்லியும் குளிச்சிக்க முட்ஞ்சுக்கும்? நம்ம ஏரியால வேற தண்ணி டிமாண்ட் ஆச்சே.”

 

“குளிச்சிக்கினு வரலனா சோறு கிடச்சிக்காது போலயேடா…”

 

“அப்ப, தலமேல கொஞ்சூண்டு தண்ணிய தெளிச்சிக்குனு வந்துக்கலாம்டா.”

 

“டபுள் ஓகே” அவர்கள் கிசுகிசுத்து ஒரு முடிவுக்கு வந்து, அங்கிருந்து கழன்று கொண்டனர்.

 

பூஜை அறையில் வணங்கிய வேணிக்கு, சத்தமாக கத்த வேண்டும் போலிருந்தது. “ச்சே இவங்கெல்லாம் மனுச ஜென்மமா இல்ல வேறேதாவதா?” அவள் வாய்விட்டே புலம்பவும், கௌரியின் முகம் இங்கே மகளின் வாழ்க்கையை எண்ணி துவண்டு போயிருந்தது.

 

திருமணம், சடங்கு என்று எதுவுமே அத்தனை முறையாக நடந்திருக்கவில்லை. மூத்தவளின் திருமணத்தை நடத்தி வைக்கும் பாக்கியத்தை இழந்திருந்தவருக்கு, சின்னவளின் திருமணமும் பொம்மை கல்யாணம் போல நடைபெற்று முடிந்ததில், தாளாத வருத்தம். 

 

தன் இரண்டு பெண்களின் தலைவிதியும் இந்த ஒருவன் கையில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனதே… என்று புழுங்கி புழுங்கி வேதனை பட மட்டுமே முடிந்தது அந்த சராசரி தாயால்.

 

***

காதல் களமாடும்…