காதல்களம் 15

IMG-20220517-WA0019-b2074414

காதல்களம் 15

 

“பாவி படுபாவி… எதுக்கு என்னை உத்து உத்து பார்க்கிறான்னு நினச்சா, என்கிட்ட கிருஷ்ணா சாயலை தேடி இருக்கான் ராஸ்கல். அவன என்ன பண்ணா தகும்? அவன துண்டு துண்டா வெட்டி வெட்டி போடனும்! அவன் கண்ணுமுழி ரெண்டையும் நோண்டி காக்கா, குருவிக்கு போடனும்!”

 

தன் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருந்த வேணியை, சற்று மிரட்சியாக பார்த்தபடி, தரையில் பொம்மை கார்களை ஓட்டி விட்டு விளையாடிக் கொண்டிருந்தான் கதிர்.

 

“கதிரு, விளையாடினது போதும். நேரமாச்சு வந்து தூங்கு வா.” என்று அதட்டல் விட,

 

“தூக்கம் வதல… நான் காது விதுவேன்… துய்ய்ய் துய்ய்ய்” என்று கையால் காரோட்டி வாயால் சத்தமிட, அவனுக்கு, ‘ர்’ உச்சரிப்பு வேறுவிதமாக வருவதைக் கவனித்த வேணிக்கு, அவன் உச்சரிப்பு எப்போது சரியாகும் என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

 

அவனது தத்தக்கா புத்தக்கா பேச்சு போக போக மாறி சரியாகிவிடும் என்று நம்பிக்கை வைத்தது தவறோ? இவனை முன்னமே மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்க வேண்டுமோ? 

 

இதைப்பற்றி கதிரின் ஆசிரியையிடம் பேச வேண்டும் என்றெண்ணி கொண்டாள். அதற்கு, மேலும் தாமதிக்காமல் அவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டாள்.

 

“நாளைக்கு கதிர் ஸ்கூலுக்கு போகனுமாம்… அதனால சீக்கிரம் வந்து துங்குவீங்களாம்… வாங்க…” என்றவள், கதிரை தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்து, விளக்கை அணைத்து விட்டு, தானும் படுத்துக் கொண்டாள்.

“வேணி… லைத்(லைட்)” கதிர் சிணுங்க, 

அவன் உச்சியில் முத்தமிட்டவள், “கதிர் குட்பாய் தானே, இப்ப நான் யானை கதை சொல்லுவேனாம், கதிர் தூங்கிடுவானாம்.” வேணியும் குழந்தையோடு குழந்தையாக பேச,

“யானை கதை வாணா… கொயங்கு கதை… தும் தும் கொயங்கு கதை சொல்லு வேணி” கதிர் கேட்கவும், வேணி குரங்கு கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“டும் டும் டும் வாலு போயி கத்தி வந்துச்சு டும் டும் டும்…” அவள் பாதி கதை சொல்லும் போதே கதிர் உறங்கி போயிருக்க, அவனது தலையைக் கொதிவிட்டு, பிள்ளை உறங்கும் அழகைப் பார்த்து வாஞ்ஞையாக புன்னகைத்தாள்.

கதிரின் முக சாயல் அப்படியே கிங்கை நினைவுப்படுத்த, அவள் புன்னகை அப்படியே தொலைந்து போனது. முன்பெல்லாம் இப்படி தோன்றியதில்லை அவளுக்கு. இப்போதெல்லாம் பாண்டியின் முகத்தை அதிகம் பார்ப்பதால், தந்தை மகனின் சாயல் ஒப்புமை அவளுக்கு புலப்பட, அதிலொன்றும் அவளுக்கு சந்தோஷம் வரவில்லை.

‘நீ ஏன்டா, கிருஷ்ணா ஜாடையில பொறக்காம, உன் அப்பன் ஜாடையில வந்திருக்க?’ மனதுள் நொடிந்து கொண்டாள்.

பாண்டி இன்று தன்னிடம் அப்படி நடந்து கொண்டதை அவளால் இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் தன்னை கிருஷ்ணவேணியோடு ஒப்புமை படுத்தியதையும் அவளால் தாங்க முடியவில்லை.

கிருஷ்ணவேணி, அம்சவேணி உருவத்தில் அத்தனை ஒத்து போகிறவர்களும் இல்லை. சாதாரண அக்கா, தங்கைக்கு இருக்கும் பொதுவான சாயல் ஒற்றுமை தான் இவர்களுக்கும் இருந்தது. 

கிருஷ்ணா, நல்ல பால் வண்ண நிறம், பூசினாற் போன்ற தேகம், சற்றே குள்ளமாக, வட்ட முகம் கொண்டு படபட பேச்சும், துறுதுறு நடத்தையும் கொண்டவள்.

வேணி, மாநிறத்துக்கு சற்று தூக்கலான நிறம், மெல்லிய உடைந்துவிடும் போல தேகம், நீள்வட்ட முகமும், சற்று உயரத்துடனும் நிதானமான பேச்சும், அழுத்தமான செயலும் கொண்டவள்!

இப்படி அவளுக்கும் இவளுக்கும் இடையே வேற்றுமைகளே அதிகமிருக்க, பாண்டி அவர்களின் கண்கள், கன்னம், வாய், கழுத்து ஒற்றுமைகளை நுண்மையாக கவனித்திருப்பது அவளுக்கே ஆச்சரியமே.

‘ஒருவேளை கிருஷ்ணாவை அத்தனை ஆழமாய் விரும்பி இருப்பானோ…!’ என்ற கேள்வி எழ,

‘அவ்வளோ நேசம் வச்சிருந்தா, எப்படி என்னை கட்டிக்க மனசு வந்திருக்கும் அவனுக்கு… எல்லாம் வேஷம்! பொறுக்கி…’ தனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளிலும் அவனை திட்டித் தீர்த்து ஓய்ந்து போனாள்.

பாண்டி அவனறையில் அவளை தங்கிக்கொள்ள சொன்னதை காதில் வாங்காமல், மாடியில் அவனறைக்கு பக்கத்து அறையில் தன் பொருட்களை வைத்துக் கொண்டவள், கதவை தாழிட்டு கதிரோடு அங்கேயே உறங்கியும் போயிருந்தாள்.

நடு இரவில், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விழிப்பு வர, முகத்தை துடைத்துக் கொண்டு கதவருகே வந்து நின்றவள்,

“யாரு?” யாரென்று தெரிந்தும் கதவைத் திறக்காமல் கேள்வி விடுத்தாள்.

“உன் புருசன்டீ… ஃபர்ஸ்ட்டு டோர் ஓப்பன் பண்ணு” மறுபக்கம் அழுத்தமாக ஒலித்த பாண்டியின் குரலில் தயக்கத்துடன் கதவைத் திறந்தாள். திறவாமல் எங்கும் ஒளிந்து கொள்ளவும் முடியாதே.

அவன் கண்கள் ரத்தமாய் சிவந்திருக்க, முகம் களைத்திருக்க, அறைக்குள் நுழைந்து, அவளை கண்ணுற்றபடியே கதவைத் தாழிட்டான்.

எத்தனை முயன்றும்‌ உள்ளுக்குள் பயபந்து உருள்வதை வேணியால் தடுக்க முடியவில்லை. அவனது அடிப்பட்ட கையில் பார்வையை வைத்தவளுக்கு கொஞ்சம் தைரியம்‌ மீண்ட உணர்வு.

எதிரில் நின்ற‌ புது மனைவியின் ஒவ்வொரு முக அசைவையும் அவதானிக்க முயன்றபடி அவளையே பார்த்து நின்றிருந்த பாண்டி, “என் கை டேமேஜ் ஆனதுல ரொம்ப ஹேப்பியாலாம் ஃபீல் பண்ணிக்காத, இந்த காயமெலாம் எனக்கு பிஸ்கோத்து.” குளறலாக பேசியவனை, வேணி ஆராய்ச்சியாக பார்த்தாள்.

“ரொம்பத்தான் உன் முட்ட முழிய‌ உருட்டிக்காதடீ… ஆமா நான் சரக்கடிச்சிக்குனு தான் வந்துகீறேன்… நம்ம கண்ணாலத்துக்கு பசங்க பார்ட்டி வச்சு அலம்பல் பண்ணிக்கினானுங்க, அத்தால…”

அவன் விளக்கத்தை முழுவதுமாக கேட்டுக்கொள்ளாமல் திரும்பி நடந்தவளை, தன் வலது கையால் பிடித்திழுத்து தன்னோடு நிறுத்தி இருந்தான் பாண்டி.

அவள் முகம் அவன் மேல் அப்பட்டமாக நெருப்பை அள்ளி வீசியது. 

“இன்னாடி மொற்ச்சிக்கினே கீற, நான் பாட்டுக்கு பேசினுகீறேன், நீ பாட்டுக்கு போயினு கீற? நம்ம ரூம்ல இல்லாம இங்க தூங்கினு கீற?”

“நீ ஒழுங்கா இருந்தாலே உன்கிட்ட பேச முடியாது. இப்ப நீ குடிச்சிட்டு வேற வந்திருக்க, உன்கிட்ட பேசறது சுத்த வேஸ்ட்” என்றாள் அவளும்.

“அப்டியல்லாம் நீயே முடிவு பண்ணிக்க கூடாது, எம்மா சரக்கு போட்டாலும் இந்த கிங்கு எப்பவும் ஸ்டெடி புர்ஞ்சிதா?”

அவள் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “முதல்ல என் கைய விடு. நான் தூங்கணும்” என்று விலக முயன்றாள்.

போதையின் கிறக்கமாய் கண்களை மூடி திறந்து சிரிப்பை உதிர்த்தவன், “அப்பால தூங்கிலாம், கொஞ்சம் பொறுடி.” என்றவன் பார்வை அவள் முகத்தில் மேய்ந்தது.

“சொம்மாவே என்ன உசுப்பேத்தறடீ, காரமா பாத்துக்குனே ருசியேத்திக்கிறீயே… கொல பட்டினியா கெடக்குறேன்… கரைட் டைமுல கைய வேற ஒடச்சு வச்சுனுகீறேன்…” அவனது உளறலில் வேணிக்கு நெஞ்சமெல்லாம் தீயாக தகித்தது.

“உனக்கு கொஞ்சங்கூட உறுத்தலே இல்லயா? மனுச பிறவி தானா நீ?” அவன் பார்வை, பேச்சு ஒம்பாது சீறினாள்.

“ஏ… இப்ப நான் இன்னா பண்ணிக்கினே உன்னாண்ட? ஒஓ… நான் ஒன்னியும் பண்ணிக்காம சொம்மா கீறேன்னு தான் காண்டாயிகினியா?”

அவள் காதைப் பொத்திக் கொண்டாள். அவன் பேச்சு, செயல், பார்வை என மொத்தமும் அவனே, அருவருப்பாக தோன்றினான் அவளுக்கு.

இருகைகளாலும் காதுகளை இருப்பக்கமும் அடைத்துக்கொண்டு, முகம் அருவருப்பில் சுருங்க நின்றிருந்தவளை, அவன் ஆழமாக பார்த்தான்.

அவள் இடப்பக்க காதிலிருந்த கையை விலக்கி பிரித்தவன், அவள் காதருகே குனிந்து, “என்னாண்ட இவ்ளோ வெறுப்ப வச்சிக்கினு, இன்னா தகிரத்துலடீ என்ன கட்டிக்கின?” என்று கேட்க,

அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது அவன் கேள்வியில். “என்னவோ என்கிட்ட சம்மதம் வாங்கி தாலி கட்டின மாதிரி கேள்வி வேற கேக்குற? கதிர காட்டி மிரட்டி, எங்க வீட்டுக்கு காவல் வச்சியில்ல, கட்டாய கல்யாணம் பண்ணியிருக்க நீ.” அவனை சாடினாள்.

“ஒஓ… அப்டி வந்துகினியா நீ? ஒன்னுந் தெரியாத பாப்பா பாரு, நான் மிரட்டி உருட்டனதும் நீ பயந்துகுனு என் கையால தாலி வாங்கிகின… இத்த நான் நம்பிக்கணும்?

ஏ ஜிகிடி, நீ நென்ச்சிர்ந்தினா இந்த கண்ணாலம் நடக்காம உன்னால நிற்த்தி இர்க்க முட்ஞ்சிருக்கும்… ஆனா நீ நென்ச்சிக்கல… அதான் இப்ப என் பொண்டாட்டியா கீற.”

அவன் சொல்வதிலும் உண்மை இருப்பது அவளுக்கு புரிந்து தான் இருந்தது. இந்த கல்யாணத்தை தடுக்க அவள் சிறு முயற்சி கூட எடுக்கவில்லையே!

“ஆமா, நான் தடுக்க டிரை பண்ணல… எனக்கு கதிரோட அம்மான்ற உரிமை தேவைப்பட்டுச்சு. அதனால உன்ன சகிச்சிக்கிட்டேன் போதுமா?” என்றாள் வீராப்பாய்.

அவன் நெற்றி சுருங்கிட, “நான் உன்ன மடக்கினும்னு நென்ச்சா, நீ என்ன மடக்கின… இது உன் பிளான் மட்டுந்தானா? இல்லாகாட்டி… அந்த சோடாபுட்டியோட சேர்ந்து பிளான் பண்ணிக்கினியா?”

அவன் சந்தேகமாக கேட்ட விதத்தில் அவள் முகம் மாறியது. “அவர பத்தி பேசாத நீ…” ஆத்திரமாக சீறிய அவள் உதடுகள் அழுகைக்கு தயாராகி துடித்தன.

“எக்ஸ் லவ்வரு நெனப்புல வந்துக்குனானா?” நக்கலாக அவளிடம் கேட்டவன், அவளை விட்டு விலகி கொண்டான்.

இரண்டு நாட்களாக அடக்கி, புதைத்து வைத்த அழுகை, வேணிக்கு இப்போது அவளையும் மீறி பொத்துக்கொண்டு வந்தது. பாண்டியின் முன்னால் தான் உடைந்து போகக் கூடாது என்று இழுத்து பிடித்தும் அவளால் முடியவே இல்லை. அப்படியே தரையில் சரிந்தமர்ந்து மடக்கிய கால்களுக்கிடையே முகம் பொத்தி, அழுகையில் உடல் குலுங்கினாள்.

அவள் அழுகையை உணர்வு துடைத்த முகத்துடன் பார்த்தவன், தன் பார்வையை மகனிடம் திருப்பிக் கொண்டான். கட்டிலில் நல்ல உறக்கத்திலிருந்த கதிரின் பக்கத்தில் வந்தமர்ந்தான்.

கதிரை பார்த்ததும் அவனின் முகத்தில் மென்மை தன்னால் ஒட்டிக் கொண்டது. குழந்தையின் கேசத்தை வாஞ்ஞையாக வருடி தந்ததவன், மெதுவாக அவளிடம் பேசினான்.

“லவ்வுனா இப்டி தான் நோவும்… இதை விட மோசமா கூட நோவு வந்து சாக தோனிக்கும்… உனுக்கு அவன் தான் முக்கியம்னா, அன்னிக்கே பேப்பர்ல சைன போட்டு அவன் கூடவே போயிருக்கணும் நீ… கதிர் தான் முக்கியம்னு என்கூட வந்திருக்க கூடாது.”

யாருக்கோ சொல்வதைப் போல பாண்டி பேச, கண்ணீர் முகத்துடன் நிமிர்ந்தவள் அவனை வினோதமாக பார்த்தாள்.

“ஜீவாவும் உன்ன மாதிரி தான், என்கிட்ட இருந்து கதிரை பிரிக்கணும்னு நினச்சிருக்கான் பாவி!” என்று தேம்பியபடி சொன்னவளுக்கு இன்னும் மனம் ஆறவில்லை, அவன் செயலை எண்ணி.

“இந்த லவ்வுல பாவம் புண்ணியம் பாத்துக்குனாலாம் வேலைக்கி ஆவாது. உன் அக்கா உங்க எல்லாரயும் உதறிட்டு என்னாண்ட வந்துக்கல… அந்தமாறி தான். இந்த சோடாபுட்டியும் நீ மட்டும் அவனுக்கு வோணும்னு நென்ச்சி இருக்கான். அவன் போட்ட வட்டத்துல நீ செட்டாயிக்கல.” என்று தத்துவம் போல பேசியவனை திகைப்பாக பார்த்தாள் வேணி.

“நீ என்ன ரொம்ப நல்லவன் மாதிரி பேசற?” கண்களை துடைத்து விட்டு, தன்னை மீட்டுக் கொண்டு எழுந்து நின்றாள்.

“நான் எனுக்கு எப்பவும் நல்லவன் தான்… என் மன்சுக்கு தெரியும் என்னப்பத்தி…” என்றவனை அசையாமல் பார்த்து நின்றாள்.

‘இவனா… இப்படி பேசுகிறான்? குடித்தால் தான் ஒழுங்காக பேசுவானோ? உண்மையில் இவன் குடித்துவிட்டு தான் உளறுகிறானோ?’ அவளால் எதையும் கணிக்க முடியவில்லை.

“ஃபிளாஷ்பேக் எல்லாத்தையும் ஓரங்கட்டி போடு. நீ என் பொண்ஜாதி, நான் உன்னோட புருஷன்காரன்… அத்த நினப்புல வச்சிக்குனு ஒயிங்கு மரியாதையா நடந்துக்குனா, நானும் உனுக்கு நல்லவனா மட்டும் இருந்துக்குவேன்… நீ ஏதுங்காட்டியும் தபாய்க்க பாத்துகினே… மவளே, உனுக்கு வர டேமேஜ்க்கு நான் பொறுப்பில்ல சொல்லிக்கினே…” என்றவன் எச்சரித்துவிட்டு, கதிர் பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

வேணி அவனை பார்த்தாள். நெற்றியின் குறுக்கே ஒரு கையை வைத்து கண் மூடி படுத்திருந்தவன் முகத்தில், அத்தனை வேதனையின் ரேகைகள் தென்பட்டன.

‘இந்த ரௌடி பயலுக்கு என்ன வேதனை இருந்துட போகுது?’ சலிப்பாக எண்ணிக் கொண்டவள், குழந்தையின் மறுபக்கம் வந்து படுத்துக் கொண்டாள். 

பாண்டியின் இமைகள் மூடி இருந்தாலும் அவன் கண்களில் சற்றும் உறக்கம் இருக்கவில்லை. அவன் நினைக்கவே கூடாது என்று தவிர்த்தாலும் கூட, அவன் முதல் திருமண நாளும், முதல் இரவின் சுகமான நினைவுகளும் அவன் நெஞ்சை இப்போது அழுத்தியது.

அன்று அவனுக்கென்று இருந்தது ஒரு ஓலை குடிசை மட்டும்தான். வெறும் மண் தரையில் பழைய கோரை பாயில், அவனது கையணைப்பில் சொர்க்கத்தை காட்டி இருந்தாள் அவன் காதல் மனைவி. 

அன்று அந்த அவசர திருமணத்திற்காக எதையும் செய்யும் அவகாசம்‌ இருக்கவில்லை அவனுக்கு. திருமணத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு எடுத்து சொல்லவும் அவனுக்கென்று யாரும் இருக்கவில்லை.

 

ஏதோ பொம்மை கல்யாணம் போல அவளுக்கும் அவனுக்கும் நடந்த திருமண உறவு… கிருஷ்ணாவுக்கு அவன் மேல் காதல் இருந்த அளவு வாழ்க்கையை வாழும் பக்குவம் இருந்திருக்கவில்லை. அப்போது பாண்டியும் அத்தனை பக்குவப்பட்டிருக்கவில்லை. ஆனால் இருவருக்கும் நெஞ்சு நிரம்பி வழியும் அளவுக்கு நேசமும் ஆசையும் இருந்தது. அந்த நேசம் தான் அத்தனை அத்தனை குறைகளுக்கு நடுவிலும் அவர்கள் வாழ்க்கை வண்டியைத் தட்டுத்தடுமாறி ஓடச் செய்திருந்தது.

 

எல்லாம் ஓரளவு சரியாகி போயிருக்கும்… பாண்டி பெரிதாக நம்பி இருந்த அவன் தொழில் குருவான காளி, அவன் முதுகில் குத்தி இராமல் இருந்திருந்தால்… 

 

நம்பிக்கை துரோகத்தின் வலியில் உடைந்து போயிருந்தவனை, கிருஷ்ணா நேராய் நெஞ்சத்தில் அடித்திருத்திருந்தாள்… அவனையும் அவனது ஐந்து மாதப் பிள்ளையையும் அனாதையாக விட்டுவிட்டு, அவள் தன்னை மாய்த்துக் கொண்டிருந்தாள்! 

 

அந்த நாட்களில் பாண்டி முற்றும் முழுதாக சிதறிப் போயிருந்தான். சிதறிய‌ அவனை சேர்த்து திடமாக்கி மீண்டு வர அவனுக்கு வெகு நாட்கள் தேவைப்பட்டன. அந்த நாட்களில் அவனை விட அவன் பயந்தது தன் குழந்தையின் வாழ்வை பற்றி மட்டும்தான்.

 

தன்னைப் போல அவனது எதிர்காலமும் தரிக்கெட்டு போகுமோ என்று பதறி போனவன், எந்த கத்தியை கீழே வீசி இருந்தானோ… அந்த இரத்தம் தோய்ந்த கத்தியை மறுபடி துணிந்து கையில் எடுத்துக் கொண்டான்.

விருப்பமே இல்லாது போனாலும் அந்த கத்தியை இன்னுமே இறுக்கி பிடித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவன் பிடி சற்றே தளர்ந்தாலும், அடுத்த நொடி அவன் கழுத்து அறுபட்டு தரையில் கிடக்கும் என்ற எச்சரிக்கையில். 

சட்டென கண் விழித்தவன், எழுந்தமரந்து கொண்டான். அந்த ஏசி அறையிலும் அவன் முகம் வியர்த்து போயிருந்தது. அவனை எப்போதுமே பலவீனப்படுத்தும் பழைய நினைவுகள் இப்போதும் அவனை வீழ்த்த முயன்றது.

மறுபக்கம் திரும்பினான். கதிர் வேணியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவள் மேல் கால் போட்டு, நேற்று போலவே அவளை ஒட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். வேணியின் கைகள் அவனை அணைவாக பற்றிய படி இருக்க, அவளும் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அவர்களை பார்க்கவும், பாண்டிக்கு மனது சற்று சமன்பட்டது. மனைவி, மகனின் இருப்பே, அவன் வாழ்க்கை முற்றும் முழுதாக முடிந்து விடவில்லை என்ற நம்பிக்கையைத் தந்தது. 

அவர்களை கண்களில் நிரப்பியபடி, கட்டிலின் பின்புறம் சாய்ந்தமர்ந்து, உறக்கமின்றியே அந்த இரவை கழிக்க முயன்றான் பால்பாண்டி.

***

காதல் களமாடும்…