காதல்களம் 16(1)

IMG-20220517-WA0018-edeaf176

காதல்களம் 16(1)

 

மறுநாள் விடியற்காலையில் வேணி கண்விழிக்கும் போது, பாண்டி நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனை ஒருபார்வை பார்த்தவள், ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு நகர்ந்தாள். அவள் குளித்து முடித்து கதவைத் திறந்து வெளியே வர, அந்த வீடே ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

 

வாசற்கதவை திறந்ததும், கதவருகே இரண்டு முரடர்கள் உறங்கியபடி உட்கார்ந்து இருந்தனர். வெளிப்பக்கம் இருவர் பேச்சு சத்தமும் கேட்டது. 

 

‘அந்த ரௌடி பயலுக்கு இந்த ரௌடி பயலுங்க செக்கியூரிட்டியாக்கும் கிழிஞ்சிடும்.’ என்ற எண்ணம் ஓட, பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து உறங்கி இருந்தவர்கள் மீது தெளித்து விட்டாள்.

 

அதில் அரண்டு விழித்த அவர்கள் கையை ஓங்கிக் கொண்டு எழுந்த வேகத்தில், வேணி பயந்து பின்னோக்கி இரண்டடி வைத்திருந்தாள்.

 

“அண்ணி நீங்களா? சாரி அண்ணி, நீங்க கோலம் போடுங்க, நாங்க அப்டிக்கா நிக்கிறோம்.” என்று அவர்கள் நகரவும்தான் அவளுக்கு மூச்சே வந்தது. 

 

‘இவ்வளோ பயம் இருக்கறவ எதுக்கு அவனுங்க மேல தண்ணீய தெளிக்கனும்?’ மனசாட்சி எழுப்பிய கேள்வியை ஒதுக்கியவள், வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து, கோலமிட்டாள்.

 

அவள் பாதி கோலம் போடும்போதே, கதிர், தன் பாட்டி கௌரியின் கையைப் பிடித்து கொண்டு வாசலுக்கு வந்துவிட்டான்.

 

“அட, நீ முழிச்சிக்கிட்டதும் இல்லாம, பாட்டியும் எழுப்பிட்டியாடா? இரு உனக்கு பால் காய்ச்சி தரேன்” என்றவள் கோலத்தை முடித்துவிட்டு, அம்மா, மகனுடன் சமையலறை வந்தாள்.

 

வேணி, கதிரின் முகம் கழுவி வாய் கொப்பளிக்க வைத்து, சமையல் மேடையில் அமர வைக்கவும், அதற்குள் கௌரி பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்திருந்தார்.

 

அம்மாவின் அமைதியைக் கவனித்தவள், “என்னமா, ஏன் எதுவும் பேச மாட்டேன்கிற?” வேணி அவரிடம் வினவ,

 

“பேச என்ன இருக்கு வேணி? மனசே விட்டு போச்சு போடி” அவர் பதில் விட்டேற்றியாக வந்தது.

 

“அப்படி எதுவும் முடிஞ்சி போகாதுமா, இப்ப நமக்கு கஷ்ட காலம் தான். கொஞ்சம் பொறுமையா இரு. இது எல்லாமே மாறும்.” வேணி நம்பிக்கையாக சொல்லியபடி, மறு அடுப்பில் தேநீர் கலவையை வைத்தாள்.

 

“இனி என்ன மாறி என்னவாகப்போகுது, உன் வாழ்க்க தான் பாழா போச்சே…” அவர் பரிதவித்தார்.

 

“நீ பயப்படுற மாதிரி நான் உடஞ்சி போகலம்மா, இன்னும் திடமா தான் இருக்கேன். இப்போதைக்கு என் வாழ்க்கைய விட கதிரோட எதிர்காலம் தான் நமக்கு முக்கியம்.” என்று பாலை சூடு பொறுக்க ஆற்றி, கதிரின் கைகளில் கொடுக்க, அவனும் சமத்தாய் பருகினான்.

 

“மறுபடியும் நீ ஏதாவது ஏடாகூடமா செஞ்சு, உன் புருஷன கோபப்படுத்தாத வேணி. நல்லவனோ கெட்டவனோ அவனோட சேர்ந்து வாழற வழிய பாரு.” சராசரி தாயாக கௌரி மகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 

ஆனாலும் வேணியின் மூளையில் வேறொரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. அது சரி வருமா, வராதா என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் முயன்று பார்க்கலாம் என்றே தோன்றியது அவளுக்கு.

 

அதைப்பற்றி வெளிக்காட்டி கொள்ளாமல் அனைவருக்கும் தேநீர் கலந்தவள், தனக்கும் பாண்டிக்குமாக இரண்டு தேநீர் கோப்பைகளோடு, கதிரும் உடன் வர, மாடி ஏறினாள். 

 

அறையின் நடுவே கட்டிலில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாண்டி. வேணி, கதிரின் காதில் ஏதோ சொல்ல, அவனும் சரியென்று தலையசைத்து, கட்டிலின் மேலே ஏறி, பாண்டியின் மேல் ஒரு குதிகுதித்தான்.

 

“அவுச்” வலியில் கண்விழித்தவன், தன் மேல் சிரித்தபடி குதித்த மகனை பார்த்ததும் முகம் பளிச்சிட, அவனை அப்படியே ஒற்றை கையில் தூக்கிக் கொண்டவன், “படவா, அதுகாட்டியும் முழிச்சிகினியா நீ?” கேட்டபடி எழுந்தமர்ந்தான்.

 

“விஞ்சிச்சு அப்பா, எந்தியி(ரி)…” கதிரின் அப்பா என்ற விளிப்பில், இன்னும் முகம் மலர்ந்தவன், இது யார் வேலையாக இருக்கும் என்று தெரிந்து, பக்கத்தில் இருந்த வேணியை பார்த்தான்.

 

காலையில் பனிப்பூவைப் போல பளீச்சென்று கண்முன் நின்றவளைப் பார்த்து, அப்பட்டமாக ஜொள்ளியது அவன் முகம். 

 

“கதிரு நீ கீழ போய் விளாடு போ.” மகனை நேக்காக கழட்டி விட்டவன், மனைவியின் மீது உரிமையான பார்வை பதித்தான்.

 

அவன் பார்வையைக் கண்டும் காணாதவள் போல, “நீங்க டீ குடிப்பீங்கல்ல?” என்று கேட்டு அவனிடம் தேநீர் கோப்பையை நீட்டினாள் வேணி.

 

அவளது ‘ங்க’ என்ற மரியாதை விளிப்பில் ஜெர்க்கானவன், அவளையும் தேநீர் கோப்பையும் மாறி மாறி பார்த்துவிட்டு, “மூஞ்சி கயிவிட்டு வந்து குடிக்கிறேன் வையி.” என்று எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான். 

 

‘கிங்கு உஷாரு… ஏதோ பிளான் பண்ணிக்கிறா’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், சில நிமிடங்களில் அவள்முன் வந்தமர்ந்து தனக்கான தேநீரை எடுத்து பருகினான். வேணியும் அமைதியாக தன் தேநீரை ருசித்து கொண்டிருந்தாள்.

 

“பெட்டு வரைக்கும் டீ வந்துகீது, பேச்சுல வேற ரெஸ்பெக்ட் வந்துகீது… இன்னா மேட்டர் ஆவணும் என்னாண்ட உனுக்கு?” அவளை சரியாக கணித்தவன் போல பாண்டி கேட்க, வேணி அவனிடம் திரும்பி முறைத்து வைத்தாள்.

 

“நான் ஒன்னும் காரியம் ஆகணும்னு காலை புடிக்கிறவ இல்ல. உங்ககிட்ட பேசணும், அதான் வந்தேன்.” என்றாள் படபடவென.

 

“இன்னா பேசணும்? பேசு.”

 

“இன்னைக்கு நான் வேலைக்கு போகணும்.” என்றாள் தகவலாய்.

 

பாண்டி அவளுக்கு சட்டென்று பதில் தராமல் சற்று யோசித்துவிட்டு, “இப்பத்திக்கு நீ வெளியே போறது சேஃப் இல்ல, ஒரு வாரத்துக்கு அப்பால போய்க்கலாம் வுடு.” என்றான் சாதாரணமாய்.

 

அவன் மறுப்பில் வேணிக்கு சுர்ரென்று ஏறியது. “அது என்ன என் மாமனார் வீட்டு காலேஜா, நான் நினச்ச நேரம் போறத்துக்கும் வரத்துக்கும். ஏற்கனவே உன்னால மூணு வாரமா ஒழுங்காவே காலேஜ்க்கு போக முடியல. அப்பப்ப லீவ் வேற போட்டு இருக்கேன். இப்பவும் போகாம இருந்தா என்னை சீட்டு கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.” 

 

முகத்தை முழம் நீட்டி அவள் படபடக்க, பாண்டி தன் காதை ஒற்றை விரலால் குடைந்துவிட்டு கொண்டான்.

 

“கதிரோட கிளாஸும் மூணு வாரம் வீணா போச்சு. அவன் ஸ்கூல்ல பேசி அவனையும் சேர்த்து விடனும்.” அவள் சொல்லிக்கொண்டே போக,

 

“அடிங்…” என்று வேகமாக எழுந்து வந்தவன், “நீ வெளிய போறதே சேஃப் இல்லனு சொல்லினுகீறேன். நீ புள்ளயும் வெளிய விட சொல்லிக்கிவியா?” மிரட்டலாய் அவளிடம் நெருங்கினான்.

 

அவள் கிஞ்சித்தும் மிரண்டாள் இல்லை. தன்னை நெருங்கியவனின் நெஞ்சின் மீது தன் உள்ளங்கையைப் பதித்து, தடுத்து நிறுத்தி இருந்தாள் வேணி.

 

பாண்டியின் இடுங்கிய பார்வை தாழ்ந்து தன் நெஞ்சின் மீது பதிந்திருந்த அவள் கையைப் பார்த்தது. உயர்ந்து அவள் முகத்தையும் பார்த்தது.

 

“உன்னாண்ட நானும் நல்லவனா இர்ந்துக்கனும்னு தான்டீ டிரை பண்ணிக்கீறேன், ஆனா நீதான் என்னாண்ட உரசிக்கினே முரடாக்குற” என்றவன், தன்மேல் பதிந்திருந்த அவள் கையின் மணிக்கட்டைப் பற்றி, அவளையும் சுழற்றி இழுத்து, தன் மார்போடு அவள் முதுகை ஒட்டி நிறுத்தி, அவளுடலை தன் ஒற்றை கைக்குள் வளைத்து கிடுக்குப்பிடி இட்டான்.

 

அரை நொடிக்குள் அவன் கைவளைவில் சிறைப்பட்டு போனவள் அதிர்ந்து மலங்க மலங்க விழித்து நிற்க, “சொம்மா என்னாண்ட மொறச்சிக்கினே இர்ப்பியா? உன் நல்லதுக்காண்டி தான சொல்லிக்கீறேன். உன் மண்டயில ஏத்திக்க மாட்டீயா?” பாண்டி அதட்டலாக கேட்க,

 

“நீ சொல்ற மாதிரி எல்லாம் என்னால ஆட முடியாது. இன்னிக்கு நான் கதிரை ஸ்கூல்ல விட்டு, காலேஜ் போகத்தான் போறேன்.” என்றாள் அவளும் பிடிவாதமாய். 

 

“ஏ… நான் உன்ன ஏதாவது செஞ்சிட போறேன்டீ…” பாண்டி வந்த கோபத்தை வெகுவாக அடக்கிக்கொள்ள முயன்றான். தன்னை நம்பி வந்தவளை காயப்படுத்தவும் அவனுக்கு மனம் வரவில்லை. 

 

வேணி அப்போதும் அசரவில்லை. “நீதான என்னை கட்டிட்டு வந்த, அப்ப உன் எதிரிகிட்ட இருந்து உன் பொண்டாட்டி, புள்ளய நீதான் காப்பாத்திக்கனும். அதைவிட்டு என்னை இப்படி பிடிச்சு வச்சு உன் வீரத்த காட்டக் கூடாது.”

 

வேணி சொன்ன விதத்தில், சட்டென பாண்டியின் முகத்தின் இறுக்கம் தளர, “இந்த பாண்டியோட பொண்டாட்டி, புள்ள மேல கைய வெக்க எவனுக்குடீ தில்லு கீது?” என்றான் கெத்தாக.

 

“அப்ப எங்கள எங்க வேலைய பார்க்க விடு போதும்.” என்று நகர முயன்றவளுக்கு முடியாமல் போக, “இன்னும் ஏன் என்னை புடிச்சு வச்சிருக்க? விட்டுத் தொலையேன்.” என்று கடுகடுத்தாள். 

 

அவனோ, கேளாமல் கிடைத்த இந்த நெருக்கத்தில், அவள் பின் கழுத்தோரம் குனிந்து அவளது வாசம் பிடித்தான்.

 

வேணிக்கு திக்கென்றானது. அவனிடமிருந்து விலக முயன்றாள். வழக்கம் போல அவன் பிடி மேலும் அவளையும் இறுக்கியது.

 

அவளை இன்னும் தன்னோடு நெருக்கி அவள் வாசத்தை நாசிக்குள் நிறைத்து கொள்ள முயன்றவன், “இன்னாடீ இம்மாம் மணக்குற! இன்னா சோப்பு போட்டுடீ குளிச்சிக்கிற?” 

 

“ச்சீ, முதல்ல என்னை விடு.” அவன் இரும்பு கரத்தை விலக்க முயன்றவள், அது அசைவேனா என்று இறுகி பிடித்திருக்க, அவனளவுக்கு ஏன் தன் கைகளுக்கு பலமில்லை என்று நொந்து போனாள்.

 

“இப்ப நீ சொல்லிக்கீறியா? இல்லாகாட்டி, நான் உன்ன கிஸ் அட்ச்சிக்கவா?” 

 

அவனது இந்த மிரட்டலில் பயந்து போனவள், “ஐயோ! அப்படி எதையும் செஞ்சி தொலைக்காத… நான் சொல்லிறேன். அது… எனக்கு ஸ்கின் அலர்ஜி இருக்கு. சோப் யூஸ் பண்ண மாட்டேன். குளியல் பவுடர் தான் யூஸ் பண்ணுவேன். அம்மா தான் அரைச்சு தருவாங்க. சொல்லிட்டேன் இல்ல விடு என்னை.” அவனிடமிருந்து உடனே விலகியோட தான் துடித்தாள் அவள். ஆனால் அவன் கரம் விடுவித்தால் தானே.

 

“அந்த பவுடர போட்டு குள்ச்சிக்கினா நானும் உன்ன மாறியே மணப்பேனாடீ?” பாண்டி கிறக்கமாக கேட்க,

 

“முதல்ல குளி, அப்புறம் இதெல்லாம் கேளு.” என்று கடுப்பானாள்.

 

“கை நோவுல குளிச்சிக்க முடியலடீ, நீ குளிக்க வைக்கறதா இருந்தா… நானும் குளிச்சிக்க ரெடி.”

 

“அதுக்கு நீ குளிக்காம இப்படியே கிட.” என்று எரிந்து விழுந்தாள்.

 

“ப்ச் பாக்க ஃபிரஷ்ஷா கீறியேன்னு இப்ப தானடீ உன்ன சைட் அட்சிக்கினே, அதுக்குள்ள இப்டி கொதிச்சிக்கிறீயே.”

 

“வாட்? என்னை சைட் அடிச்சியா? ஹௌ டேர் யூ?” ஆத்திரத்தில் அவன் பிடிக்குள்ளேயே சுழன்று திரும்பி அவன் முகத்தைக் கோபமாக முறைத்தாள்.

 

அவள் சுழன்று திரும்பிய வேகத்தில், அவளின் மென் அங்கங்களில் உரசலில், அவன் முரட்டு தேகத்தில் தாபத்தின் தீப்பொறி வீச்சு படர்ந்தது.

 

முன்பும் ஒருத்தியின் இது போன்ற மென் உரசல்களின் தாப தீயில் மாய்ந்து மடிந்து சாம்பலாகி போயிருக்கிறான் அவன். அந்த நினைவின் மிச்சங்கள் அவனை மேலும் உசுப்பி விட, விருட்டென அவளை உதறிவிட்டு, அங்கிருந்து புயல் போல வெளியேறி இருந்தான்.

 

பாண்டி உதறிய வேகத்தில் தடுமாறி நின்றவள், போகும் அவன் முதுகை முகம் கறுக்க பார்த்து முறைத்தாள். அவன் அழுத்தி பிடித்த இடங்களில் வலி தெறித்தது. அவனது அனல் மூச்சுக்காற்று உரசிப்போன கழுத்தோர பகுதிகளில் கம்பளிபூச்சி ஊர்வது போன்ற அருவருப்பான உணர்வு மூண்டது. 

 

வலித்த கை பகுதியை அழுத்திக் கொடுத்தவள், மறுபடி மறுபடி கழுத்து பகுதியை துடைத்து விட்டுக் கொள்ள, அவள் விழியோரம் ஈரம் பெருக்கெடுத்தது.

 

***