காதல்களம் 16(2)

IMG-20220517-WA0019-38bca0da

காதல்களம் 16(2)

 

வேணி தானும் தயாராகி, கதிரையும் தயார் செய்து அவசர அவசரமாக வெளியே வந்தாள். அதுவரையும் கிங் அவள் பார்வையில் படவில்லை. 

 

‘அவன் எங்கே போய் தொலைந்தானோ! கண்முன்னே வராத வரை நல்லது’ என்றெண்ணிக் கொண்டவள், அவளுக்காக லெஃப்ட் காருடன் காத்திருக்க, எதுவும் பேசாமல் ஏறிக் கொண்டாள். அவர்கள் காரை இரண்டு பைக்குகள் பின்தொடர்ந்தன, பாதுகாப்புக்காக.

 

வேணி, பள்ளியில் ஆயிரம் சமாதானங்களைச் சொல்லிவிட்டு கதிரை விட்டு வர, அவனோ அவளை விடாமல் அடம்பிடித்து கத்தி அழ ஆரம்பித்து விட்டான். தொடர்ந்த கலவையான நிகழ்வுகள், வாழ்நிலை மாற்றங்கள், நீண்ட விடுமுறைகள் என்று எல்லாம் குழந்தையை பரிதவிக்க வைத்திருந்தது.

 

கல்லூரிக்கு செல்ல அவளுக்கு நேரம் வேறு நெருங்கி இருக்க, கதிரை பொறுமையாக சமாதானம் செய்ய முடியாமல் திணறினாள். வேறுவழியின்றி அழும் கதிரை அப்படியே வகுப்பாசிரியையிடம் விட்டுவிட்டு, கதிர் எப்படியும் அழுகையை நிறுத்தி விடுவான் என்ற நம்பிக்கையில் வேகமாக வெளியேறி விட்டாள்.

 

கல்லூரிக்குள் நுழையும்போதே பல பார்வைகள் அவள்மீது குறுகுறுவென மோதின. என்னவென்று புரியாமல் அவளுக்கு அசௌகரியம் தோன்ற, அவசரமாக தன் கழுத்தை தொட்டு பார்த்து கொண்டாள்.

 

கழுத்தில் அவள் வழக்கமாக அணிந்திருக்கும் சங்கிலியைத் தவிர்த்து வேறெதுவும் இருக்கவில்லை. காலையில் கிளம்பும்போதே முதல் வேலையாக தாலியை கழற்றி வைத்துவிட்டிருந்தாள்.

 

தனக்கு திருமணமானதை பற்றி வெளிப்படுத்தவோ, அங்கே தான் ஒரு ரௌடியின் மனைவி என்ற அடையாளத்தை பெறுவதிலோ அவளுக்கு சற்றும் உடன்பாடு இருக்கவில்லை. எனவே எப்போதும் போல தன்னை சாதாரணமாகவே காட்டிக்கொள்ள முயன்றாள். ஆனால், மற்றவர்களின் பார்வைகளும் கிசுகிசு பேச்சுக்களும் அவளை என்னவோ செய்தது.

 

தன் வருகையை பதிவிட்டு, ஸ்டாஃப் ரூம் வந்தவள், துர்காவிடம் ஒரு புன்னகை தந்து அவள் அருகில் அமர்ந்தாள். ஆனால் துர்காவின் முகம் சற்றும் மலரவில்லை.

 

“என்னாச்சு துர்கா?” வேணி வினவ, 

 

“நீ என்ன என்னை கேக்குற? உனக்கு என்னாச்சு முதல்ல அதை சொல்லு?” துர்கா சிறு குரலில் படபடத்தாள்.

 

“எனக்கா? நான் நல்லா தான் இருக்கேன். நீ கவலப்படாதே விடு.” என்றவளை வினோதமாக பார்த்தவள், இப்போது தான் அவள் கழுத்தை கவனித்தாள்.

 

“ஏய் உன் தாலி எங்கடீ?”

 

“அட ச்சீ, கத்தி மானத்த வாங்காத, ஹேண்ட் பேக்ல தான் வச்சிருக்கேன்.”

 

“அதை ஏன்டி அங்க வச்சிருக்க?” துர்கா குழம்பி கேட்டாள்.

 

“நடந்தது எதுவும் இங்க யாருக்கும் தெரிய வேணாம்னு தான். நான் ரௌடிய கல்யாணம்‌ பண்ணிகிட்டத பெருமையாவா சொல்ல முடியும்?” வேணி விவரமாக சொன்ன விதத்தில், துர்கா தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

 

“நீங்க ரொம்ப ஸ்லோ டீச்சர், ஆல்ரெடி ஆல் இன்ஃபர்மேஷன்‌ இந்த காலேஜ் பூரா ஸ்பிரட் ஆகி நாளாச்சு.” 

 

துர்கா சொன்னதில் திகைத்தவள், “அடிபாவி, நீதான் எல்லார் கிட்டையும் சொல்லி தொலச்சியா?” வேணி அவளை முறைக்க,

 

“சத்தியமா நான் இல்லடியம்மா, உன் ஆளு… ச்சே ச்சே சாரி. அந்த ஜீவா இல்ல அவர் தான். நீ அவருக்கு ஷேர் பண்ண சொன்ன போட்டோவ, நம்ம காலேஜ் ஃபுல்லா ஷேர் பண்ணி விட்டு இருக்காப்ல.” துர்கா சொல்லிவிட்டு தலையை அசைத்துக் கொண்டாள்.

 

அதற்கு மேல் பேசாமல் வேணியும் அமைதியாகி விட்டாள். இனி‌யென்ன? இங்கேயும் அனைத்தையும் சமாளித்து தான் ஆகவேண்டும்.

 

கல்லூரி முதல்வர் அவளை அழைத்து விசாரித்தபோதும், எதையும் மறைக்காமல் மேலோட்டமாக சொன்னாள். அவருக்கு அவளை நினைத்து பரிதாபம் தோன்றியிருக்கும் போல, எந்த உதவி என்றாலும் செய்வதாக கூறி, அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.

 

சக ஆசிரியர்களின் உருட்டு பேச்சுக்கள், கல்லூரி மாணவர்களின் ஜாடை பேச்சுக்களை கண்டும் காணாமல், கோபம் கிளர்ந்தும், பொறுமையை இழுத்துப் பிடித்து பாடங்களை நடத்தி, பாதியில் நின்ற தன் வேலைகளை முடித்து, மாலையில் சோர்ந்து துவண்டு போய் வெளிவந்தவளுக்காக காத்து நின்றிருந்தான் ஜீவா.

 

அவனை பார்க்கவுமே வேணியின் மனது கலங்கியது. ‘ஐயோ! இவன் பங்குக்கு இவன் வேற வந்து நின்னு டார்ச்சர் பண்றானே! எத்தனை பேரைத்தான் நான் ஒத்த ஆளா சமாளிப்பேன்? என்னை பார்த்தா பாவமா இல்லயா முருகா!’ அவள் மனது நொந்து போய் ஓலமிட்டது. 

 

அவன் மேல் கோபம், ஆத்திரம்‌ இருந்தாலுமே, தன் எதிர்காலம் முழுவதும் அவனோடு என்று‌ முன்பு ஆயிரமாயிரம் கோட்டைகளை எழுப்பி இருந்தவள்‌ அவள். அந்த கற்பனை கோட்டைகள் எல்லாமே கற்பனையாகவே மடிந்துவிட, அவள் ஊமை நெஞ்சிலும் வலி தெறிக்கத் தான் செய்தது.

 

அவளுக்குள் இருந்த அந்த வலியை, ஜீவாவின் முகம் அப்பட்டமாக வெளியே பிரதிபலித்து கொண்டிருக்க, வேணி தன்னை திடமாக காட்டிக் கொண்டு அவன் முன்னால் வந்து நின்றாள்.

 

எப்போதும் பளீச்சென்று பார்வைக்கு பிரகாசமாக இருப்பவன், இன்று கசங்கிய சட்டை, மூன்று நாட்கள் மழிக்காத தாடை, சிவந்து உயிர்ப்பை தொலைத்த கண்கள், சோர்ந்து துவண்டிருந்த முகம் என பார்க்கவே பரிதாபத்திற்குரியவனாக தெரிந்தான்.

 

‘என்ன இவன் மூணே நாள்ல இப்படி நொந்து நூடுல்ஸ் ஆகி கிடக்குறான்? என்மேல அவ்வளோ லவ்வ வச்சிருந்து இருப்பானோ? அவ்வளோ லவ் இருக்கறவனுக்கு எனக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மனசு வந்துருக்குமா என்ன?’ தனக்குள்ளே அவனைப் பற்றி அலசி கொண்டு நின்றாள்.

 

அவள் ஏதாவது பேசுவாள் என்று பார்த்திருந்த ஜீவா, அவள் அமைதியாகவே இருக்கவும், தானே பேச்சை தொடங்கினான். 

 

“உன்ன எவ்வளோ நம்பி இருந்தேன் வேணி… உனக்காக என்ன செய்யவும் தயாரா இருந்தேன், கடைசியில என்னை குப்ப மாதிரி தூக்கி போட்டுட்ட இல்ல?” ஜீவா நெஞ்சு பொறுக்காமல் கேட்டான். 

 

அவள் போயும் போயும் கிங்கை திருமணம் செய்து கொள்வாள் என்று அவன் நினைத்திருக்கவே இல்லை. அவர்கள் திருமணக்கோலம் பார்த்து உடைந்து போயிருந்தான். இப்போதும் அவன் கண்கள் கலங்கி கொண்டு வர, அவனை அப்படி பார்க்கவே அவளுக்கு பாவமானது.

 

“இல்ல ஜீவா… நடந்ததுல நம்ம ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. நான் கதிருக்காக வாழனும்னு முடிவெடுத்தது பாசத்தால. அதே பாசத்தை நீங்களும் கதிர் மேல காட்டனும்னு நான் எதிர்பார்த்தது பெரிய தப்பு. 

 

கிட்டத்தட்ட உங்கள நிர்பந்திக்கிற மாதிரி, என்னோட சேர்த்து கதிரோட பொறுப்பையும் தூக்கி உங்க தலையில கட்ட நினச்சது… என்னோட கோழைத்தனம் தான்… நீங்க என்கிட்ட காதலை தான் கேட்டீங்க, பட் நான் என் மொத்த குடும்ப பொறுப்பையும் உங்கமேல திணிக்க நினச்சிருக்கேன்னு எனக்கு தாமதமா தான் புரியுது. பட் நான் இதை அப்ப ரொம்ப சாதாரணமா நினச்சு உங்ககிட்ட சொல்லிட்டேன்.”

 

வேணி இவ்விதம் பேசுவாள் என்று எதிர்பார்க்காத ஜீவா, அவள் சொல்வதில் கவனத்தை வைத்தான்.

 

“நீங்க அப்பவே என்னை மறுத்திருக்கலாம் ஜீவா… எனக்கு தேவை உன் காதலும் நீயும் மட்டும் தான், உன் அக்கா பையனையும், உன் குடும்பத்தையும் தாங்க வேண்டிய தலையெழுத்து எனக்கில்லன்னு முதல்லயே சொல்லி இருந்தா… நம்ம ரெண்டு பேரும் வெத்து கற்பனைய மனசுல வளர்த்துட்டு இவ்வளோ தூரம் வந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.”

 

முதலிலேயே காதல் தோல்வியில் உடைந்திருந்தவன், அவள் இவ்விதம் பேசவும் மேலும் துவண்டு போனான்.

 

“என் கதிருக்காக நீங்க என்னவேணா செய்வீங்கன்னு நான் உங்கமேல வச்ச நம்பிக்கையும் பொய்யாகி, உங்க காதலுக்காக நான் கதிரையும் விட்டு வருவேன்னு நீங்க என்மேல வச்சிருந்த நம்பிக்கையும் பொய்யாகி, இப்படி நிக்க வேண்டி இருந்திருக்காது நமக்கு.” வேணி வெறுமையாக பேசி முடிக்க, 

 

“அப்ப நமக்குள்ள எதுவுமே இல்லன்னு சொல்ல வரீயா வேணி… ரெண்டு வருசத்துக்கு மேல உனக்கு நான்தான் எனக்கு நீதான்னு வாழ்ந்துட்டு, இப்ப… இப்ப எவ்வளோ சுலபமா சொல்லிட்ட? என்னால தாங்க முடியல வேணி, இங்க… இங்க என் நெஞ்சே வெடிச்சிடும் போல வலிக்குது தெரியுமா? உனக்கு அந்த வலி இல்லல்ல?” அவன் உணர்ச்சி மிகுதியில் பேசினான்.

 

வேணி இப்போது அமைதியாக இருந்தாள். நிஜமாய் அவனளவுக்கு அவளுக்கு வலி இருக்கவில்லை. ஏமாற்றம் தான், வேதனை தான், பொத்தி வைத்த காதலை போகவிட்ட வலியும் இருக்கிறது தான். ஆனாலும் அவன் அளவுக்கு அவளுக்கு வலிக்கவில்லை. 

 

அவளுக்கும் வலித்தது… இப்போது ஜீவா படும் வலி வேதனையை விட ஆயிரம் மடங்கு வலியில் அவளும் துடித்து போயிருந்தாள், அன்று கதிரை பாண்டி அவளிடம் இருந்து பரித்து சென்றபோது,‌ கிட்டத்தட்ட பாதி உயிராய் செத்தே போய்விட்டிருந்தாள்.

 

‘அவன் என்ன உன் பையனா? உன் அக்கா பையன் தான?’ 

 

‘அவனென்ன நீ பெத்த பிள்ளையா? வளர்ப்பு பிள்ளை தானே?’

 

‘பெத்த அப்பனுக்கு இல்லாத உரிமை உனக்கு என்ன இருக்கு?’

 

இப்படி எல்லாரும் சாதாரணமாக சொல்லிவிட்டார்கள், ஆனால் அவளால் அதை சாதாரணமாக எடுக்க முடியவில்லை. அன்று அவள் அக்காவின் இறந்த உடலைப் பார்த்து துடித்துப் போனதைவிட, அனாதையாக பசியில் வீறிட்டு அழுத பிள்ளையைப் பார்த்து தான் அதிகம் துடித்துப் போயிருந்தாள்.

 

உடனே சென்று பிள்ளையை அள்ளி தூக்கிக் கொண்டவளுக்கு, அவள் அக்காவின் மீது கோபம் தான் எழுந்தது. கடையில் வாங்கிய பாலை தாவி தவித்து பருகிய பிள்ளையின் பசியைப் பார்த்தப்போது அவளும் தவித்துப் போனாள். 

 

பெற்ற பிள்ளையை இப்படி தவிக்க விட்டு இறந்து கிடப்பவளை எழுப்பி, இரண்டு அறை விடவேண்டும் போல அப்போது ஆத்திரம் வந்தது வேணிக்கு. 

 

அன்று தன் நெஞ்சோடு பொத்திக் கொண்ட பிள்ளையை அவளால் எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? முடியவே‌ முடியாது. அதனால் தான் கதிருக்கு பதிலாக தன் வாழ்க்கையை துணிந்து விட்டுக்கொடுத்து இருக்கிறாள்.

 

“உனக்கு வலிக்காது வேணி… ஏன்னா உன்ன போல பொண்ணுங்களுக்கு காதலை விட வசதியும் பணமும்‌ தான பெருசா போச்சு.” ஜீவா ஆற்றாமையில் பேசிவிட, வேணி புரியாமல் நெற்றி சுருக்கினாள்.

 

“கிங்கை பத்தி விசாரிக்கவும் தான எனக்கும் எல்லாம் புரிஞ்சது. சிட்டில மட்டும் சின்னதும் பெருசுமா நாலு ஷாப்பிங் மால் கிங்கோடது தானாம். சிட்டிக்கு வெளியே ஏக்கர் கணக்குல நிலமும், பெரிய‌ மாட்டு பண்ணையும் வச்சிருக்கானாம், அது தவிர அங்கங்க மிச்ச சொச்ச சொத்துக்களை வாங்கி போட்டு இருக்கானாம். இவ்வளோ சொத்து பத்தோட இருக்கறதால தான ரௌடியா இருந்தாலும் பரவால்ல, உன் அக்கா புருசனா இருந்தாலும் பரவால்லன்னு கட்டிகிட்ட?” 

 

ஜீவாவின் கோபம், ஆத்திரம், இயலாமை, காதல் தோல்வியின் வலி எல்லாம் சேர்ந்து, எல்லா பழியையும் அவள்மீதே போட வைத்திருந்தது.

 

அவன் கடைசியாக சொன்னதில் வேணிக்கு ஆத்திரம் மிக, “இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை ஜீவா… இனிமே என்னை பத்தியோ, என் கேரக்டர் பத்தியோ பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.” அவள் விரல் நீட்டி எச்சரிக்கவும், அவர்கள் அருகே பாண்டியின் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

 

காரின்‌ முன் கதவைத் திறந்து இறங்கிய பாண்டியையும், அவன் கழுத்தோடு இணைக்கப்பட்டிருந்த கட்டு பிரிக்கப்பட்டிருந்த அவன் கையையும், வேணி திகைத்துப் பார்த்தாள். 

 

‘அட கிராதகா! காயம் குணமாக மூணு வாரம் ஆகும்னு டாக்டர் சொல்லிட்டு போனா, மூணே நாள்ல கார ஓட்டிட்டு வரான்!’ அவள் நம்பமுடியாமல் விழிகளை விரிக்க, வேணியின் திகைப்பை சரியாக, தவறாக புரிந்து கொண்டான் கிங் பாண்டி.

 

“இன்னாத்துக்கு இப்ப உன் முட்ட கண்ண மொறம் அகலத்துக்கு விரிச்சிக்கிற? ஓ… நீ உன் டாவு கூட டாவடிச்சிக்கீறதை டிஸ்டர்ப் பண்ணிக்கினேன்னு மிரண்டுகினியா?”

 

கிங் பாண்டி கேட்ட விதத்தில், வேணியின் பார்வை அவன்மேல் நெருப்பை கக்கியது. 

 

அங்கே கிங்கை எதிர்பார்க்காத ஜீவா, தைரியமாக இருக்க முயன்றாலும் அவனை பதற்றம் தொற்றிக் கொள்ளவே செய்தது. தன் பயத்தை எண்ணி அவனே தனக்குள் வெட்கிப் போனான்.

 

“ஏ சோடாபுட்டி, உனுக்கு எம்மா தில்லு இர்ந்துகினா, கிங்கோட பொண்டாட்டின்னு தெர்ஞ்சுக்கனும் பேச்சு வச்சுக்குவ? அப்புராணி பையன்னு நென்ச்சு உன்ன சொம்மா வுட்டது தப்பு போலயே…” கிங் வலது கையை உதறிவிட்டு அவனை அடிக்க பாய, வேணி அவன் குறுக்கே வந்து தடுத்து நின்றாள்.

 

“உன் ரௌடீஸத்தை இங்க காட்டாத, நீ நினக்கற மாதிரி நாங்க தப்பா எதுவும் பேசல. போதுமா?” என்றவளை மேலும் கீழும் பார்த்தவன்,

 

“உன் எக்ஸாண்ட இன்னியும் உன் லவ்வு போகல? நான் கைய ஓங்கறத்துக்கு முன்னால குறுக்க பூந்து நிக்கிற? இவன பார்த்துக்க தான் காத்தால அத்தினி அலம்பல் பண்ணிகினு இங்க வந்துகினியா?” பாண்டி அவளை ஆத்திரமாக கேட்டதும், வேணி அடுத்து யோசிக்காது அவன் கன்னத்தில் அறை விட்டிருந்தாள்.

 

அவளது பொன்கரம் கிங்கின் இரும்பு கன்னத்தில் ஆவேசமாக மோதிய வேகத்தில், அவனது தாடையின் முரட்டு தசைகள் விறுவிறுத்தன.

 

“இப்ப நான் உன் பொண்டாட்டி, என்னை கண்டவன் கூட சம்பந்தப்படுத்தி நீ சந்தேகப்பட்டா அந்த அசிங்கம் உனக்கு தான். இனிமே ஒரு வார்த்தை… என் கேரக்டர் பத்தி உன் வாயிலிருந்து தப்பா வந்துச்சு…” என்றவள் ஆள்காட்டி விரலை அவன் முன் நீட்டி எச்சரித்து நிற்க,

 

பாண்டியின் பார்வை வெகு சுவாரஸ்மாக அவளை அளந்து கொண்டிருந்தது. அதிசயமாக அவள் தன்னை அறைந்ததில் அவனுக்கு கோபம் வரவில்லை. அவள் ஜீவாவை கண்டவன் என்று சொன்னதிலேயே அவனுக்கு மனது நிறைந்துவிட்டது. வாய்க்குள்ளே மூண்ட சிரிப்போடு விறுவிறுத்த கன்னத்தை தேய்த்துவிட்டு கொண்டான்.

 

வேணி கிங்கை அறைந்ததைப் பார்த்து ஜீவா தான் பேயறைந்ததைப் போல மிரண்டு நின்றுவிட்டிருந்தான். வேணிக்கு இத்தனை துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று அவனுக்கு தெரியவில்லை. கிங்கும் அவள் அறையை வாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பது வேறு, அவன் வயிற்றில் கிலியை கிளப்பியது.

 

வேணி அவர்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல், கோபத்தோடு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

மிரண்டு நின்றிருந்த ஜீவாவின் முதுகை தட்டிவிட்ட பாண்டி, “பாஸு, உன் நல்ல நேரம் நீ இந்த பிடாரியாண்ட மாட்டிக்காம எஸ்ஸாயிக்கின, சந்தோசப்பட்டுக்குனு கிளம்பிக்க. நெக்ஸ்ட் உன்ன இவளோட பார்த்துகினேன்னு வச்சுக்கோ…” முடிக்காமல் ஜீவாவின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு காரில் ஏற்றிக்கொண்டான்.

 

பாண்டி ஏறி அமர்ந்ததும் வேணி காரை வேகமெடுத்தாள். அந்த வேகத்திலேயே அவள் கோபம் அவனுக்கு தெரிந்தது. 

 

“காத்தால இன்னானா என் நெஞ்சு மேல கைய வெச்சுகின, சாங்காலம் இன்னானா என் கன்னத்துல கைய வெக்கீற, இன்னா தகிரியத்துல இப்டி எல்லாம் பண்ணிக்கிற நீ?” கிண்டல் தொனியில் அவன் வினவ,

 

“கிங்க கட்டிக்க துணிஞ்சவளுக்கு இவ்வளோ கூட தைரியம் இல்லாம போகுமா என்ன?” என்றவளின் கைகளில் அந்த கார் தார்ச்சாலையில் சீறிப் பாய்ந்தது.

 

***

 

காதல் களமாடும்…