காதல்களம் 17(1)

காதல்களம் 17(1)

 

கதிர் உறங்கிய பிறகும் வேணிக்கு உறக்கம் வராமல் விழித்திருந்தாள். 

 

நாளைக்கு கல்லூரியில் நடத்த வேண்டிய பாடங்களை ஒருமுறை படித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும், இன்னும் எழுத்து வேலைகள் வரிசை கட்டி நின்றன அவளுக்கு. அது எதையும் செய்ய தோன்றாமல், கதிரின் தலையை வருடிக் கொடுத்தபடி கண்களை மூடி கட்டில் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். 

 

இன்று கல்லூரியில் அவள் மேல் படிந்த பார்வைகளும், சுற்றி வளைத்து அவளை மோதிய பேச்சுக்களும், மீண்டும் மீண்டும் வந்து அவளை தாக்கிக் கொண்டிருந்தது. அங்கே எதையும் கண்டுகொள்ளாதது போல அவற்றை திடமாய் கடக்க முடிந்த அவளால், அதன் தாக்கத்தை அத்தனை சுலபமாக கடக்க இயலவில்லை.

 

அவள் மனது வெகுவாக ரணப்பட்டு போயிருந்தது. தன் வாழ்க்கை இப்படி திசை மாறிப் போகுமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லையே. மனிதர்களே இல்லாத ஓரிடத்தில் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. எங்கே போவது?

 

இன்று அவள் கதவைத் தாழிட்டு வைக்காமல் விட்டிருக்க, அவர்கள் அறைக்குள் நுழைந்த பாண்டியின் பார்வை அவள்மீது ஆழமாய் படிந்தது. 

 

அவனை உணர்ந்து வேணி சோர்வாய் விழி திறக்கவும், அவள் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவள்மேல் விழுந்து அவளிதழில் அழுத்த முத்தமிட தொடங்கினான். 

 

அவனது இந்த அதிரடி முரட்டுத்தனத்தில் மிரண்டவளுக்கு, அவன் வாயிலிருந்து வந்த மதுவாடை வேறு குமட்டிக் கொண்டு வந்தது. 

 

அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ள முயன்றாள். முடியவில்லை. அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயல, அவனது பிடியும் அழுத்தமும் அதிகரிக்க, வலியும் அதிகரித்தது. 

 

அத்தனை கொடுமையான இதழ் அணைப்பில் அவள் துடிதுடித்து போக, அவன் பிடி சற்று தளரவும், விலகி வேகமாக குளியலறைக்குள் ஓடியவள், வயிற்றைப்பிரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தாள்.

 

வாந்தி எடுத்து ஓய்ந்ததும், அவளின் வாய் போல அவளது வாழ்க்கையும் கசப்பேறியது போல் தோன்றியது அவளுக்கு. தன்னை மீறியும் அங்கேயே அழுது விட்டாள். 

 

அவனுடனான வாழ்க்கை அவளை இத்தனை பலவீனப்படுத்தும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அவனுடன் போராட வேண்டியதாக இருக்கும், கதிருக்காக போராடலாம். அவன் அருகாமையை சகித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும், அதையும் சகித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அவள் துணிந்து அவனை மணந்திருந்தாள். 

 

ஆனால், இப்போது அவளுக்கு அத்தனை வெறுப்பாக இருந்தது. தான் தவறான முடிவு எடுத்ததிற்காக இப்போது வருந்தி கதறியவள் நிமிரவும், அந்த குளியலறையின் திறந்திருந்த கதவில் சாய்ந்தபடி அவள்மேல் அழுத்தமான பார்வை பதித்திருந்தான் பாண்டி.

 

வேணியின் அழுகை சட்டென நின்றது. அவனை மிரட்சியாகப் பார்த்தாள். 

 

“இப்ப இன்னாத்துக்கு நீ அயிதுகின?” அவன் கேட்டதற்கு அவள் பார்வை கண்ணீரோடு தாழ்ந்தது.

 

“நான் கிஸ் அட்ச்சத்துக்காண்டி அயிதுகினியா? இல்ல, நீ வாமிட் பண்ணிக்கினதுக்காண்டி அயிதுகினியா?” அங்கிருந்து நகராமலேயே அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். அவள் தான் அவனுக்கு பதில் தரும் நிலையில் இல்லை.

 

“ஒத்த கிஸ்ஸுக்கே உன்ன வாமிட் எடுக்க வச்சேன் பார்த்துகினியா, மச்சானோட பர்பாமன்ஸ் எப்பிடி?” கேட்டுவிட்டு அவன் சத்தமாக சிரிக்க, இவளுக்கு அவனை கொல்ல வேண்டும் போல் ஆத்திரம் வந்தது. அங்கிருந்து வேகமாக வெளியேற முயன்றாள்.

 

அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன், “ஜுஜூபி கிஸ்ஸுக்கலாம் ஓவர் ஸீனு காட்டிக்கிற, ஏன் அந்த சோடாபுட்டி உனுக்கு கிஸ்‌ அடிக்க அல்லாம் கத்து தர்லியா?” 

 

அவன் கேட்ட விதத்தில், அவள் ஆங்காரமாக கொடுத்த அறையில், இம்முறை அவன் முரட்டு தாடை பழுத்து போனது.

 

“ச்சீ வெக்கங்கெட்டவனே, எத்தனை முறை சொல்றது உனக்கு. புடிச்சிருக்கோ புடிக்கலையோ நான் இப்ப உன் பொண்டாட்டி, என்னை போய் வேற ஒருத்தனோட சேர்த்து வச்சி பேசற? இப்படித்தான் கிருஷ்ணாவையும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி கொன்னியா?” ஆத்திரமும் கலக்கமுமாக அவள் கேட்ட விதத்தில், அவன் போதையில் ஒரு சிரிப்பை உதிர்த்தான்.

 

அவளை அருகே இழுத்து அவளின் இரு தோள்களிலும் தன்னிரு கைகளைப் போட்டு தாங்கி நின்றவன், “உன் அக்காகாரி எனுக்கு எந்த குறையும் வச்சதில்லடீ, ப்ச் எனுக்கு சொர்க்கம்னா எப்பிடி இருக்கும்னு காட்டிக்கினவ அவ… ஆனா, கட்சியா என்னை நரகத்தில தள்ளிவுட்டு போயிக்கினா… 

 

நீயே சொல்லு, அவ மட்டும் இப்ப உசுரோட இர்ந்துகினா உன்ன திரும்பியும் பார்த்துக்குவேனா நானு? உன்னிய மட்டுமில்ல, இந்த உலகத்துல வேற எவளயும் பார்த்திருக்க மாட்டேன். ஏன்டி அவ என்னை வுட்டுட்டு போயிக்கினா…” என்றவன் வருத்தத்தோடு அவள்மீது மொத்தமாக சாய, அவனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவளும் அவனோடு கீழே சரிந்தாள்.

 

தன்னை மொத்தமாக அழுத்திக் கொண்டவனின் பாரத்தில் அவள் உடல் வலியெடுக்க, “பார்க்க தான் சோத்துக்கு செத்தவன் மாதிரி இருக்க, பொணம் கனம் கனக்குற, என்மேல இருந்து எழுடா.” வேணி மூச்சுமுட்ட முனங்கினாள்.

 

அதில் லேசாய் கண்களைக் கசக்கி அவளைப் பார்த்தவன், “ஏ பஜாரி, இப்ப தான சொம்மா கிஸ்ஸடிச்சதுக்கே என்ன பங்கம் பண்ணிகின, இப்ப ஏன்டீ என்மேல பட்த்துகினு தாஜா பண்ணிக்கிற?” என்றவனை பார்த்து தலையில் அடித்து கொண்டவள்,

 

“டேய் பொறுக்கி, நீதான்டா என்மேல விழுந்து கிடக்க, முதல்ல எழுந்து தொலை.” என்றவளை நம்பாமல் பார்த்தவன், 

 

“இந்த கிங்கு பியூர் கோல்ட்டுமா, கட்டின பொண்டாட்டியா இர்ந்துகினாலும் இஷ்டபடாம தொட்டுக்க மாட்டான். நீதான் என்னமோ பேஜார் பண்ற.” அவள் மீதிருந்தபடியே வசனம் பேசியவனை கொலைவெறியோடு முறைத்தாள்.

 

“இவ்வளோ நேரம் ஒழுங்கா தான பேசிட்டு இருந்த, இப்ப என்மேல விழும்போது மட்டும் போதை ஏறி போச்சா? இப்ப நீ எழல உன்ன…” 

 

அவள் மிரட்டலில் அசட்டு சிரிப்பு சிரித்தபடியே எழுந்து அமர்ந்து கொண்டான். அவளும் எழுந்தமர்ந்து ஆசுவாச மூச்சு எடுத்தாள்.

 

அவளை பார்த்து நெற்றி சுருக்கியவன், “நான் எந்துகாம இர்ந்துகினா இன்னா பண்ணி இருப்ப? இப்ப சொல்லு.” அவன் கேட்டதற்கு, அவளும் கடுப்பாக பதில் சொன்னாள். அவள் சொன்னதில் முதலில் திகைத்தவன், மறுநொடி பகபகவென சிரிக்க ஆரம்பித்தான்.

 

“ஷூ ஷூ… சத்தம் போடாத, கதிர் முழிச்சிக்க போறான்.” அவள் சொல்லியும் அடங்காமல் சிரித்தவனை, அமர்ந்தவாக்கிலேயே அருகில் வந்து வாய் பொத்தினாள்.

 

“குடிகாரா, குழந்தை முழிச்சுக்குவான் சத்தம்போட்டு தொலையாத.” அவனிடம் காட்டமாக தாழ்ந்த குரலில் கண்டிக்கவும்,

 

“இப்பிடி கிட்டக்க வந்து நீ குசுகுசுன்னு பேசிக்கினா கிங்கு மடங்கிடுவான்னு நென்ச்சிகினியா?” அவன் கேட்டதில், வேணி நெற்றியைப் பிடித்துக்கொண்டு தள்ளி உட்கார்ந்து விட்டாள்.

 

அவளை குறுகுறுவென்று பார்த்தவன், “அப்ப நான் கிஸ்ஸட்ச்சதுக்காக நீ வாமிட் பண்ணிக்கில, சரக்கு ஸ்மெல்லு ஆகாம தான் வாமிட் பண்ணிக்கின கரீக்டா?” அவன் ஆழமாக கேட்டதற்கு அவளிடம் பதில் இல்லை. 

 

பாண்டி நகர்ந்து வந்து அவளை நெருங்கி அமர்ந்தான். வேணி விலகவில்லை. அவன் அவளை அணைக்க முயல, விலகி கொண்டவள், “நீ குடிக்காம வா, இப்ப போய் தூங்கு போ.” என்று எழ முயன்றவளை இழுத்து தரையில் கிடத்தி, அவளது இருபக்க கைகளையும் தரையோடு அழுத்தி ஆக்கிரமித்து கொள்ள, “பிளீஸ் விடு…” அவள் குரல் சோர்வோடு கெஞ்சியது.

 

“வார்த்தைக்கு வார்த்தை கிங்கு பொண்டாட்டினு டைலாக் வுட்டுக்குனா பத்தாதுடீ, இந்த கிங்குக்கு முழுசா பொண்டாட்டியா இர்ந்துக்கனும்?” 

 

“அதுக்காக இப்படியா? எனக்கு பிடிக்கல.”

 

“இதான் நான். புடிக்க வச்சிக்க.” அவள் மார்பு கூட்டுக்குள் முகம் புதைத்தவனைப் பொறுத்துக்கொள்ள முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை.

 

“பிடிக்கலனு சொல்றேன் இல்ல விடு என்னை ச்சீ!” அவள் வெறுப்பாக அவனை விலக்கித் தள்ள, அவனும் தளர்ந்து விலகிக் கொண்டான். தன் செயல் உணர்ந்து அப்பாவி போல தலையை வேறு குனிந்து கொண்டான்.

 

“பொண்டாட்டியா இருந்தாலும் சம்மதமில்லாம தொட மாட்டேன்னு இப்ப தான டயலாக் விட்ட? இப்ப பண்றது என்ன?”

 

“என்ன இன்னா பண்ணிக்க சொல்ற? புது பொண்டாட்டி பக்கத்துல இர்ந்துக்கும் போது கண்ட்ரோல் பண்ணிக்க முடியல. இப்ப இன்னா பெர்சா பண்ணிக்கினே உன்ன, ஒரு கிஸ்ஸூ, ஹக்கு மட்டும் தான வுட்டுத்தள்ளு.”

 

“ஒரு பொண்ணை நோகடிக்கிற மாதிரி சின்ன தப்பான பார்வை பார்த்தா கூட தப்புதான் தெரியுமா?”

 

“நீ டீச்சரு தான் ஒத்துக்கீறேன், அதுக்காண்டி எனுக்கு டியூஷன் எட்த்துக்காத.”  

 

“இப்படித்தான் தினம் தினம் குடிச்சிட்டு வந்து கிருஷ்ணாவ கொடுமைப்படுத்தி சாகடிச்சியா?” ஆத்திரமாக கேட்டவளை, திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

 

அவர்கள் வாழ்ந்த வாழ்வை எல்லாம் இவளிடம் சொல்ல முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. முடிந்து போன யோசனையில், எதிரில் இருந்தவளைப் பார்த்திருந்தவன் முகம் சட்டென மாறியது.

 

“ஏ… நான் உனுக்கு கட்டுன தாலி எங்கடீ?”

 

பாண்டி கேட்டதும் தான் அவளுக்கு நினைவு வர, நெற்றியைத் தட்டிக் கொண்டு எழுந்தவள், காலையில் தனது கைப்பையில் போட்டு வைத்திருந்த மாங்கல்யத்தை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொள்ள, அவளை பார்த்திருந்தவனுக்கு கோபம் ஏறியது.

 

“அதின்னா, செயினா மோந்தரமா கயிட்டி கயிட்டி மாட்டிக்கிறத்துக்கு? தாலிடீ… முழுசா அஞ்சு பவுன் தாலிய, அனாமத்தா ஹேண்ட்பேக்குல போட்டு வச்சிக்கீற? நான் கட்டின தாலிய கழுத்துல போட்டுக்க கூட நோவுதா உனுக்கு?” 

 

அவளை அடிப்பதைப் போல கோபமாக எழுந்து வந்தவனை கண்டு மிரண்டவள், “ஐயோ! நான் வேணும்னு செய்யல” வேகமாக சொன்னாள்.

 

அவன் இப்போதும் அவளை முறைத்து நிற்க, “நான் உன் பொண்டாட்டினு காலேஜ்ல யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான், மறைச்சு வச்சேன். ஆனா சுத்த வேஸ்ட், முன்னாடியே காலேஜ் பூரா நம்ம கல்யாண போட்டோ பரவிட்டு இருக்கு. மறுபடி அதை எடுத்து போட மறந்துட்டேன் அவ்வளவுதான். போதுமா?” என்றவளை என்ன செய்யலாம் என்றிருந்தது அவனுக்கு.

 

“இம்மா சிம்பிளா சொல்லிக்கின? தாலினா உனுக்கு அவ்ளோ ஈஸியா போயிகிச்சா? அது எம்மாம் பெரிய மேட்டர் தெரியுமா உனுக்கு? 

 

என்னாண்ட மட்டும் வாயிக்கு வாயி கிங்பாண்டி பொண்டாட்டின்னு கெத்தா சொல்ல தெரியிதில்ல, ஊராராண்ட என்ன புருஷன்னு சொல்லிக்க அவ்ளோ மட்டமா தெரிஞ்சிக்கீறேன் உனுக்கு.” அவன் கோபமாக பேச,

 

“பின்ன ரௌடி பொண்டாட்டின்னு பெருமையாவா சொல்லிக்க முடியும்?” அவளும் ஆதங்கமாக பதில் தர, அவன் கோபத்தில் அடிப்பட்டிருந்த இடது கையால் அவள் கழுத்தைப் பிடித்திருந்தான்.

 

அவளுக்கும் ஆத்திரம், அவன் கையில் கட்டுபோட்ட இடத்தில் லாவகமாக தாக்கி விட்டாள். அடிப்பட்ட இடத்திலேயே அவள் அடித்ததில் அவன் முகம் வலியில் சுருங்கிட, அவள் கழுத்திலிருந்து கையை விலக்கிக் கொண்டவன், “ராட்சசி…” அவளை காட்டமாக கடிந்தான்.

 

“சும்மா சும்மா என் கழுத்த புடிக்கிற வேல வச்சிக்காத, கொன்னுடுவேன்” விரல் நீட்டி மிரட்டியவளின் தோரணையில், அவனுக்கு இப்போதும் கோபம் வரவில்லை. 

 

இந்த துணிச்சலையும் தைரியத்தையும் தானே அவன் தன் அம்மாவிடமும் காதலியிடமும் எதிர்பார்த்தான். அவனது‌ துரதிர்ஷ்டம் அவர்கள் இருவருமே படுகோழையாக அல்லவா அவனை விட்டு போயினர். இவள் அப்படி இல்லை என்பதில் அவனுக்கு நிம்மதியே.

 

“கட்டின புருஷன அடிக்கிற, பொம்பளயாடீ நீ?” அவளிடம் சீறிய அவன் குரலில் அத்தனை சீற்றம் இருக்கவில்லை.

 

“ஏன்? ஆம்பள மட்டும்தான் கட்டினவளை அடிக்கலாம்னு சட்டம் இருக்கா என்ன? அந்த சட்டம் வச்சவனை கூட்டிட்டு வா மிதிச்சே கொன்னுறேன்.” என்ற அவளது ஆவேசத்தில் அவனுக்கு சிரிப்பு கூட வர பார்த்தது.

 

“அடி ராங்கி, உன்னால அட்ச்ச போதையலாம் இறங்கி போச்சுடீ, கைய வேற ஒடச்சிட்ட, ஒத்த கிஸ்ஸு கொட்றீ மச்சான் தூங்கனும்.” என்று மாற்றி பேசியவனை வேணி புரியாமல் பார்த்தாள்.

 

“இவ்ளோ தான் மரியாத உனக்கு, ஒழுங்கா போயிடு, பக்கத்துல வந்த மண்டைய ஒடச்சுடுவேன்.” அங்கே கிடந்த கதிரின் கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு ஓங்கி நின்றவளை, அவன் பார்வை அநியாயத்திற்கு ரசித்து வேறு பார்த்தது.

 

மாலையில் தான் கைவலி சற்று குறைந்தது போலிருக்க, கழுத்தையும் கையையும் இணைத்து கட்டியிருந்த கட்டை பிரித்துவிட்டிருந்தான். கையை அசைத்து பார்க்கும்போதும் அத்தனை வலி தெரியாமல் இருக்க, கதிரை பள்ளியில் இருந்து அழைந்துவந்து விட்டு, வேணியை அழைத்துவர அவனே காரையும் எடுத்திருந்தான். இந்த ரௌடி வாழ்க்கையில் இதைவிட பெரிய காயங்களையும் வலியையும் கடந்து வந்திருந்தவனை இந்த காயமும் வலியும் அத்தனை பாதிக்கவில்லை. 

 

ஆனாலும், கட்டியவளை அருகில் வைத்துக்கொண்டு விரதம் காப்பது அவனுக்கு அவஸ்தையாக இருக்க, இன்று துணிந்து அவளை நாடி இருந்தவனுக்கு, அடிப்பட்ட கையில் மேலும் அடி வாங்கியது தான் மிச்சம். புருஷன் என்றும் பாவம் பார்க்காமல் அவள் விட்ட அடியில், தணிந்திருந்த அவன் கைவலி இப்போது விறுவிறுக்கவும்,

 

“என் கை சரியாவட்டும்டீ, இதுக்கெல்லாம் சேர்த்து இர்க்குதுடீ உனுக்கு.” சாதாரணமாக சொல்லிவிட்டு பாண்டி சென்றுவிட, வேணி அவசரமாக சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

 

நெஞ்சம் இன்னும் இன்னும் பயத்தில் வேகவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அவன் எதிரில் பயத்தைக் காட்டவில்லை எனினும், அவனது செயலில் வெகுவாக பயந்து போயிருந்தாள். 

 

தன் பயத்தையே சாதகமாக எடுத்துக்கொண்டு அவனை எல்லை மீற விடக்கூடாது என்ற வைராக்கியத்தில் இத்தனை நேரம் அவனை எதிர்த்து நின்றவள், இப்போது உடல் தளர்ந்து அப்படியே படுக்கையில் சரிந்தாள், அவள் முதுகு மௌன அழுகையில் குலுங்கியது.

 

அடுத்தடுத்த நாட்களில் கிங் அவளை சீண்டாமல் ஒதுங்கி இருக்கவும், அவளுக்கும் சற்று ஆசுவாசமாக நாட்கள் நகர்ந்தன. 

 

ஆனாலும் எத்தனை நாட்கள் அவனிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும் என்று தோன்றியது. வீராப்பாக தாலியை வாங்கிக்கொண்டு வாழமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது அவளுக்கே பைத்தியக்காரத்தனமாக இருந்தது.

 

இனியும் தாமதிக்கக் கூடாது என்றெண்ணியவள், அவனை முந்திக்கொள்ள முயன்றாள். அவள் செயலின் விளைவு கிங் பாண்டிக்கு தெரிந்தால்?

 

***

 

காதல் களமாடும்…