காதல்களம் 17(2)

காதல்களம் 17(2)

 

“ண்ணா… காளிண்ணா…” பின்னங்கால் பிடரியில் பட வீட்டுக்குள் ஓடி வந்தவன், தலை வாழை இலை விரித்து, அசைவ உணவு வகைகளை வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்த காளியைப் பார்த்ததும் கப்பென‌‌ வாய்மூடி நின்றான்.

 

“கூவிக்கினு வந்து கம்முனு நின்னுக்குன இன்னாடா? மேட்டர‌ சொல்லிக்க.” 

 

கட்டம் போட்ட சட்டை, செம்மண் நிற வேட்டி, முறுக்கி விட்ட கடா மீசை, அடர்ந்த கருத்த புருவங்கள், சுருட்டை கேசம், நெற்றியில் குங்குமம் சந்தனம் குழைத்த தடித்த கீற்று, சராசரி உயரம், வலுவேறிய தடித்த உடல்வாகு, நடுத்தர வயதைக் கடந்த தோற்றத்துடன், முதல் பார்வைக்கே, பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் இருந்தான் காளி.

 

அவனுக்கு அடியாளாக இருக்கும் அடி பொடிகளுக்கு கூட காளியைப் பார்த்தாலே கிலி தான். வந்தவனும் அதே கிலியில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான். அதுவும், கோழிக்கறி கால் சதையை கடித்துக்கொண்டு, மட்டன் பிரியாணியை வாயில் திணித்துக் கொண்டிருப்பவனிடம் அவனால் என்னவென்று சொல்ல முடியும்?

 

“நா துன்னுக்கிறத பாத்துக்கீறியா? நாலு வர்ச்சம் ஜெயில்ல உளுத்து போன சோத்த துன்னு காஞ்சு வந்துகீறேன்டா, செத்த நாக்குக்கு இப்ப தான் தீனி போட்டுக்குனு கீறேன், அந்த கிங்கு பயல போட்டு தள்ளிக்க, வலுவு வோணும் இல்ல.” சோற்று பருக்கைகள் ஒட்டியிருந்த, கரை படிந்த பற்களை ஆவேசமாக கடித்து கொண்டு பேசினான் காளி.

 

அவனுக்கு எதிரில் நின்றவனுக்கு, தான் சொல்ல வந்த விசயம் நினைவுக்கு வந்துவிட, “நம்மாளு விக்கிய கிங்கு தூக்கிட்டான் காளிண்ணே…” அவசரமாக சொன்னான்.

 

வாய் வரை அள்ளி வந்த கறிசோறை அப்படியே இலையில் உதறியவனின்‌ கண்கள் இரத்த சிவப்பேறியது. எடுத்தவுடன் அவன் வாயில் வந்ததெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகள் தான். 

 

பாவம் எதிரில் நின்றவனுக்கு காதில் இரத்தம் கசியாத குறை. அவன் பேச்சை சகித்துக்கொள்ள‌ முடியாமலும், அங்கிருந்து ஓட முடியாமலும் விழிபிதுங்கி நின்றிருந்தான்.

 

“இப்பத்திக்கி அந்த பொறம்போக்கு விக்கிய புட்சு வச்சிக்கினு அந்த கிங்கு பய நாக்கு வயிச்சிக்கிட்டும்… வேற எதுக்கும் அவன் யூஸாயிக்க மாட்டான். இனிமே நம்ம பயலுக எவனும் கிங்கு கைல சிக்கிக்க கூடாது, ஜாக்கிரதயா இர்ந்துக்க சொல்லு, போ…” காளி போ என்றதுமே பிய்த்துக்கொண்டு வெளியே ஓடி மறைந்தான் அவன்.

 

உணவை அப்படியே விட்டு எழுந்து வந்து அரைகுறையாக கையை கழுவி கொண்ட காளிக்குள் எரிமலையின் கொதிப்பு.

 

நான்கு வருடங்களுக்கு முன்பு, கஞ்சா காளி என்ற பெயரைக் கேட்டாலே, சாதாரண மக்களிலிருந்து காக்கிச்சட்டை போலீஸ் வரை நடுங்கி போகும் வகையில் சிம்ம சொப்பனமாக இருந்தவன் அவன். இந்த நான்கு வருட சிறை வாசத்தில் அவன் பெயர் மீதிருந்த அந்த பயம் மொத்தமாக போயிருந்தது.

 

பேட்டையில் கெத்தாக சுற்றி வந்திருந்த காளியை இப்படி வெத்தாக்கி ஓரம் போட்டவன், அவன் தான். கிங் பாண்டி.

 

பதினேழு வயதில், நான்கு பேரை அடித்துப் போட்டுவிட்டு, மண் படிந்த கிழிந்த சட்டையும் உடம்பில் இரத்த காயங்களுடன், தன் முன்னால் வந்து நின்ற பாண்டியின் தோற்றம் அவன் நினைவில் வந்து போக, ஈர கையை சுவற்றில் குத்திக்கொண்டான் காளி.

 

“காளிண்ணே, பாய் கடையில குஷ்காவ திருடிக்கினு, பாய் ஆளுங்கள அடிச்சு போட்டுக்குனாண்ணே இந்த பொடிசு.” என்ற குற்றச்சாட்டோடு தன் முன்னால் நிறுத்தப்பட்டவனை காளி பார்வை அளந்தது.

 

மெலிந்த தேகம், அரும்பு மீசை லேசாக அப்போதுதான் துளிர்விட்டிருக்க, வியர்த்து மூச்சு வாங்க நின்றிருந்தவன் இடது கை இன்னும் திருடிய உணவு பொட்டலத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தது.

 

“சாப்ட்டு மூணு நாளாச்சு… அந்த கடையில ஏதாவது வேலை தான் கேட்டுகினே… அதுக்கு போய் என் மூஞ்சில எச்சி தண்ணீ ஊத்திக்கினா… அதான் அவனுங்கள அடிச்சேன்.” காளி கேட்கும் முன்னே, மூச்சு வாங்கியபடி நடந்ததை சொல்லிவிட்டான் அந்த பொடியன்.

 

“திருடுறவன் மட்டன் பிரியாணிய திருடிக்க வேண்டியதானேடா, போயும் போயும் குஷ்காவ திருடிக்கினு வந்துகீற?” காளி அடுத்து கேட்கவும்,

 

“நான் திருடனது பசிக்கி, ருசிக்கி இல்ல.” பாண்டியின் பதில் பட்டென வந்தது.

 

“செரி செரி குந்திக்கினு துன்னு, அப்பால பேசிக்கலாம்.” காளி சொன்னதும் அங்கேயே உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்து, சோறை அள்ளி தொண்டை அடைக்க அடைக்க விழுங்கியவனின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகி வழிந்தது. 

 

புறங்கையால் கண்ணீரை துடைத்தபடி அவன் உண்ணவும், “டேய், அவனுக்கு தண்ணிய கொடுங்கடா, விக்கிக்க போவுது.” காளி சொன்னதும் ஒருவன் தண்ணீர் பாட்டலை அவன்‌ முன்னால் வைத்தான்.

 

மற்றொருவன், “அண்ணே, இவன் அட்ச்ச அடியில நாலு பேரும் எலும்பு ஒடஞ்சி கிடக்கறானுங்க, நீ இவனுக்கு பவுசு பண்ணி தந்துனுகீற?” என்று ஆதங்கப்பட்டான்.

 

அடிப்பவன் பெரியவனில்லை அவனை அடிக்க வைக்கும் சூழ்நிலை தான் பெரிது. மூன்று நாட்கள் பசியின் கொடுமை, எச்சில் நீரை முகத்தில் வீசிய அவமானத்தின் ஆத்திரம், அவ்விளம் பருவத்தானை அடிக்க செய்திருந்தது. 

 

காளிக்கு அவன் அடியின் ஆற்றல் பிடித்திருந்தது. அவன் தொழிலே அதுதானே, அனாதைகளாக திரியும் இளம் வயது பிள்ளைகளைத்‌ தன்னிடம் சேர்த்துக்கொண்டு‌ அவர்களை தன் அடியாட்கள் என்ற பெயரில் அடிமைகளாக்குவது. அவனிடம் தானாய் வந்து சிக்கிய பாண்டியை விட்டுவிடுவானா என்ன?

 

“யார்ரா நீ? உன் பேரென்ன?” காளி விசாரிக்க,

 

“என் பேரு பால்பாண்டிண்ணே” பதில் சொன்னவனிடத்தில் மரியாதை விளிப்பு தன்னால் வந்திருந்தது. 

 

அவன் பெயரைச் சொன்னதும், சுற்றி நின்றவர்கள் கேலியாக சிரிக்க, “பால்பாண்டியா? இனிமே உன் பேர் பால்பாண்டி இல்ல… கிங் பாண்டி. என்னாண்ட சேர்ந்துகிறீயா?” காளி கேட்டதுமே வேகமாக தலையாட்டினான் அவன். அந்த நேரத்தில் அவனுக்கு பேரை விட சோறு தான் பெருந்தேவையாக இருந்தது.

 

இப்போது அந்நிகழ்வை நினைக்க நினைக்க காளிக்கு இரத்தம் கொதித்தது. “உனுக்கு பேர் வச்சு தொழில் கத்துக்கொட்த்துக்கின என்னயே பகைச்சிக்கினேல்ல கிங்கு… இந்த காளிக்கு நீதான் பலிடா, உன்ன என் கையால வெட்டி சாச்சிக்கினா தான், இந்த ஏரியால நான் நிமுந்துக்க முட்ஞ்சுக்கும் கிங்கு…” அந்த வீடே அதிரும்படி கத்தினான் காளி.

 

அவனது இந்த கத்தலை கேட்டு கேட்டு சலித்து போயிருந்த அவனது மனைவி, காதை ஒருமுறை தேய்த்துவிட்டு, தன் கைவேலையில் கவனமானாள்.

 

அங்கோ, பழைய குடோனுக்குள்‌ விக்கி என்பவனை கிங்கின் ஆட்கள் நார்நாராய் கிழித்து தொங்கவிட்டிருந்தனர். 

 

“இந்த பிஸ்கோத்துக்கு ஒன்னியும் தெரியாது போலயேடா, செத்துகித்து தொலைக்க போறான் வுடுங்கடா.” பாண்டியின் அதட்டலில் அவனைவிட்டு அவர்கள் நகர்ந்து கொண்டனர்.

 

“வேஸ்ட் பீஸுண்ணா இவன், நமக்கு யூஸ் இல்ல. இப்ப இவன இன்னா பண்ணிக்கிறது?” ரைட் கேட்கவும்,

 

சற்று யோசித்த பாண்டி, அந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர் வீரமணிக்கு செல்பேசி அழைப்பு விடுத்தான். 

 

“சொல்லு கிங்கு.” அந்த பக்கம் எடுத்தவுடன் கேள்வி ஒலிக்க,

 

“நம்ம பசங்க கையில விக்கின்னு ஒரு பக்கி சிக்கினு கீது சார், உன் போலீஸுக்கு அவனாண்ட வேலை கீதா பாத்து சொல்லு சார்.” என்றதும், 

 

சற்று யோசித்தவர்,‌ “விக்கினா பேர் சொன்ன கிங்கு? அவன தான் நாலு மாசமா தேடி தேடி நாக்கு தள்ளுது எங்களுக்கு? எங்க வரணும் சொல்லு.” என்றார் வீரமணி.

 

“போலீஸ் ஸ்டேஷன் வாசலாண்ட‌ நம்ம புள்ளிங்க அவனை உட்ருவானுங்க. நீ பொறுக்கி எட்த்துக்கோ சார்.” கிங் சொன்ன விதத்தில், வீரமணிக்கு சற்றே கோபம் எட்டி பார்த்தது.

 

“பொறுக்கிக்கவா? கிங்கு ஏடாகூடமா அவன எதுவும் பண்ணிடாத. ஸ்கூல் பொண்ணு மேல கைய வச்சிருக்கான். அவன்மேல கேஸு ஸ்ராங்கா இருக்குது. உயிரோட வேணும் அவன்.” வீரமணி படபடக்க,

 

“ஓ… அவ்ளோ பெரியாளா இவன்… கவலைய வுடு சார், இன்னிக்கு எங்க டிரீட்மெண்ட் கொடுத்து முடிச்சிக்குனு, நாளைக்கு உங்களாண்ட உசுரோட வந்துக்குவான்.” என்று வைத்த கிங்கின் பார்வையில் கடுமை ஏறியிருந்தது.

 

“இந்த நாதாரி இனிமே எந்த பொண்ணயும் நிமுந்து பாத்துக்க கூடாது, நம்ம டிரிட்டமெண்ட் முடிச்சி, போலிஸ் ஸ்டேஷன் முன்னால உருட்டி வுடு, மத்ததை இன்ஸ் பாத்துக்கும்.” என்ற‌ கிங்கின் உத்தரவில், மீண்டும் அவனுக்கு அடிகுத்து ஆரம்பமானது.

 

அந்த களேபரத்துக்கு நடுவே உள்ளே வந்த ஒருவன், கிங் பாண்டியின் காதோடு சொன்னான். 

 

“அண்ணே… இன்னிக்கு மந்தியானம் அண்ணி, டிஎஸ்பி ஆபீஸுக்கு போய் வந்துகிச்சு ண்ணே.” என்றதும் கிங்கின் நெற்றி தசைகள் சுருங்கி விரிந்தன.

 

உடனே அங்கிருந்து எழுந்து பண்ணை வீட்டை நோக்கி விரைந்தான் கிங் பாண்டி. “நீ அடங்கிவே மாட்டியாடீ ராங்கிகாரி…” அவனது கடித்த பற்களுக்கு நடுவே அவள் பெயர் கடிப்பட்டது.

 

***

காதல் களமாடும்…