காதல்களம் 19

காதல்களம் 19

 

பாண்டி தன் தலையை அழுத்திக் கோதிக்கொண்டு, இரு கைகளாலும் முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு கொண்டான். வேணியின் அருகில் தன்வசம் இழப்பது அவனுக்கே அவஸ்தையாக இருந்தது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் பெண் வாடையே இல்லாமல் இருந்தவனுக்கு, இப்போது மட்டும் ஆசை கட்டுக்கடங்காமல் அலைவதின் காரணம் அவனுக்கு விளங்கவில்லை.

ஒருவேளை தனக்கு கை அடிபடாமல் இருந்து திருமண நாளிரவிலேயே எல்லாம் முடிந்திருந்தால், தனக்கு இத்தனை தேடி இருக்காதோ என்றும் தோன்றியது.

அந்த ராங்கி அவனை தள்ளி வைப்பதால் தான் இத்தனை தவிப்போ? அவளை அடைந்து விட்டால் இந்த தவிப்பு அடங்கிவிடுமோ என்றெண்ணி தான், அன்று கணவனாக அவளை நெருங்க முயன்றான். ஆனால் அவள் தன் முதல் முத்தத்தால் வாந்தி எடுத்தது, அப்போதே அவன் ஆண்மையை வெகுவாக காயப்படுத்தி இருந்தது.

அதற்குமேல் அவளை வற்புறுத்தாமல் ஒதுங்கி இருந்தான். ஆனால் அவள் மீதான அவன் பித்து இன்னும் அதிகமாகிப் போவது போல் ஓருணர்வு அவனுக்குள்.

அவள் அவனுக்கு பிடிக்காததை செய்தாலும் முன்பு போல அத்தனை கோபம் வந்து தொலைப்பதில்லை. அவள் எது சொன்னாலும் சற்றும் ஆராய தோன்றாமல் அவன் மனம் தலையாட்டி ஏற்றுக்கொண்டு விடுகிறது.

அவளது விழியசைவை, இதழசைவை, தொண்டைக்குழி ஏற்ற இறக்கங்களை, நெஞ்சுக்குழி உயர்ந்து தாழ்வதை என அவளின் நுணுக்கமான அசைவுகள் கூட, அவனை பெரிதாக அசைத்துப் பார்க்கிறது.

தன்நிலை என்னவென்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை.

கிருஷ்ணவேணியை… அவனால் முழுதாக மறந்துவிட்டு இன்னொரு பெண்ணோடு தன்னால் இணைந்து வாழமுடியும் என்ற எண்ணம் வந்த பிறகுதான், அடுத்த திருமணத்தைப் பற்றியே யோசிக்கலானான் பாண்டி.

கிருஷ்ணவேணியுடன் நடந்த திருமணத்தின்போது, பால்பாண்டிக்கு வயது இருபத்திமூன்று. கிருஷ்ணவேணியின் வயது இருபத்தியொன்று. வளர்ந்த குழந்தைகளாக இருந்த இருவருமே அப்போதுதான் வாழ்க்கையை கற்க ஆரம்பித்திருந்தனர்.

அவர்கள் வாழ்வில் இன்பங்களும் ஆசைகளும் மட்டுமே கொட்டிக் கிடந்தன. அவர்களின் இல்லற வாழ்க்கை நீடித்தது என்னவோ இரண்டு மாதத்திற்கும் குறைவான நாட்கள் தான். அடுத்த மாதமே கிருஷ்ணா கருவுற்றிருந்தாள்.

நைனாவின் மனைவி பொன்னிம்மா தான் இளசுகள் இருவருக்கும் புத்திமதி சொல்லி, குழந்தை உண்டான பிறகு அவர்களை தனித்து உறங்க வைத்திருந்தார். பிள்ளை வந்த சந்தோசத்தில் அந்த பிரிவு கூட அவர்களை பெரிதாக பாதிக்கவில்லை.

‘இன்னாடீ உன் அப்பன் உனுக்கு கிருஷ்ணா ராமானு பேரை வச்சிகீறான்? ஆசையா கூப்புர்ற பேரா இது, பஜனையில கூவிக்கிற பேருடீ’ என்று நொந்து கொண்டவன், அவள் பெயரின் முன்பாதி கிருஷ்ணாவை துண்டித்து விட்டு, ‘வேணி’ என்று மட்டும் தான் அழைத்து வந்திருந்தான்.

‘அய்யோ! கிங்கு, நீ வேணின்னு என்னை சொல்றது, என் தங்கச்சிய சொல்ற மாதிரியே இருக்கு. எனக்கு பிடிக்கல. நீ என்னை வேற கூப்புடு.’ கிருஷ்ணா சிணுங்கி கேட்கவும் தான் அவளை ஆசையாக, ‘மயிமா’ என்றழைக்கத் தொடங்கி இருந்தான்.

‘உன் அப்பனுக்கு அறிவே இல்லியா, அக்கா, தங்கச்சிக்கு ஒத்த பேரையா வச்சு தொலைப்பான்? ஊர் உலகத்துல வேற பேரே இர்ந்துக்கல பாரு.’ அப்போதும் கிங் கடுப்பாகி கேட்டிருக்க,

‘எனக்கு கிருஷ்ணவேணி, அவளுக்கு அம்சவேணின்னு, அப்பா எங்களுக்கு ஒத்துமையா தான் பேர் வச்சாங்க. அவள ஸ்கூல்ல பசங்க அம்சா சம்சான்னு கேலி பண்ணவும், வீட்ல வந்து அழுது அடம்பண்ணி அம்சாவை கட் பண்ணிட்டு வேணிய மட்டும் பேரா வச்சிகிட்டா.’ கிருஷ்ணா அன்று சொன்னதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருந்தான் பாண்டி.

மசக்கையில் அவதிப்பட்ட கிருஷ்ணவேணியை தாயாய் தாங்கிக் கொண்டவன் பாண்டி தான். ஒவ்வொன்றுக்கும் பொன்னிம்மாவிடம் சென்று நிற்பான். இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்த அவரும் அவனுக்கு செய்யவேண்டியதை சொல்லுவார். இவனும் அதேபோல மனைவிக்கு சேவைகள் செய்வான்.

பிள்ளை உருவாகும் வரை அவளுக்கு கணவனாக இருந்தவன், அதன்பிறகு தாயாய் மட்டுமே அவளை பார்த்துக் கொண்டான். பிள்ளை பிறந்த பிறகும் பத்தியம் பார்த்து, மனைவி, மகன் இருவருக்கும் அவனே தாயுமானவனாக மாறிப்போயிருந்தான்.

ஒரு கணவனாக, தந்தையாக அவனுக்கு பொறுப்பு வந்தது அந்த நாட்களில் தான். அதற்காகத் தான் தனக்கென்று ஏதாவது சிறிய தொழிலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்து, பாண்டி காளியிடம் சொல்ல, காளியோ வேறு திட்டம் போட்டிருந்தான்.

அவன் வாழ்வில் விழுந்த மூன்றாவது அடி அது!

ஆம். அவனது முதல் அடி அவன் அப்பாவின் மரணம்! இரண்டாம் அடி அவன் அம்மாவின் மரணம்! மூன்றாம் அடி அவன் தொழில் குருவாக நினைத்திருந்த காளியின் துரோகம்…

“இன்னா கிங்கு, இந்த பக்கம் வந்துக்கிறதே இல்ல. புள்ள பொறந்துகினதும் தொழில மறந்துகினியா?” காளி அவனை காட்டமாகத்தான் கேட்டான்.

இப்போதெல்லாம் அடிதடி, சரக்கு கைமாற்றுவது என்று எந்த வேலைக்கும் வராமல் அவன் தவிர்ப்பது காளிக்கு பாண்டியின் மேல் கோபத்தை உண்டாக்கி இருந்தது.

இருவரும் காருக்குள் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். கார் எங்கே போகிறது என்று பாண்டி அப்போது கவனித்திருக்கவில்லை.

“அப்பிடி இல்லண்ணே, பொண்டாட்டி, புள்ள ஆயிகிச்சில்ல, அதான்… தப்பான தொழில் செஞ்சிக்க வாணாம்னு நென்ச்சிக்கினே காளிண்ணே” பாண்டி சொல்லவும், காளியின் முகம் இருண்டு போனது.

“ஓ அவ்ளோ பெரியாளா ஆயிக்கினியா கிங்கு நீ? தொழில வுட்டு சோத்துக்கு இன்னா பண்ணிக்குவே? நால் ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாடகைக்கு குட்டியானைய ஓட்டிக்கினா உன் குடும்பத்துக்கு கட்டுபடி ஆயிக்குமா?”

“இல்லண்ணே, கொஞ்சம் காசு சேர்த்து வச்சுக்கினு, சொந்தமா ஒரு குட்டியானை வாங்கினா போதும்ண்ணே.” பாண்டி சொல்லவும், கார் நிற்கவும் சரியாக இருந்தது.

அது பராமரிக்காமல் கைவிடப்பட்ட பொது கழிப்பிட கட்டிடம். அந்த இடத்தை பார்த்த பாண்டிக்கு உள்ளுக்குள் துணுக்குற்றது.

அவன் உள்ளுணர்வு சரி என்பதைப் போல, ஆவேசமாக முன்னேறி நடந்த காளி, அங்கே கைகள் கட்டப்பட்ட நிலையில் முட்டிப் போடப்பட்டிருந்த இருவரையும் ஆத்திரம் போங்க பார்த்தவன், “இந்த காளியவே காட்டி கொட்த்துக்க துணிஞ்சிட்டிங்க இல்லடா” என்று கத்தியபடி, அவர்களை நொடியில் வெட்டி வீழ்த்தி இருந்தான்.

இரண்டு உயிர்கள் தன் முன்னால் துடிதுடித்து இறப்பதை, உறைந்து நின்று பார்த்திருந்தான் பாண்டி. அவனுக்குள் இருந்த மனித உணர்வுகள், அந்த பாவச்செயலை அடுக்காது ஓலமிட்டது.

அந்த இரத்தம் தோய்ந்த பட்டாக்கத்தியை பாண்டியின் கழுத்தருகே கொண்டு வந்து நிறுத்திய காளி, “இந்த காளிய பகைச்சின எவனையும் வாழ விடமாட்டான் கிங்கு?”

காளியின் மிரட்டல் தனக்கும் தான் என்பது பாண்டிக்கு புரிய, அப்போது அவன் உள்ளுக்குள ஆடிபோய்விட்டான்.

மறுநாள் காலை செய்தியில் தான், கொலை செய்யப்பட்ட இருவரும், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்பது பாண்டிக்கு தெரிய வந்தது. இந்த கொலைவழக்கில் இருந்து காளி தப்பிப்பது அத்தனை சாதாரணம் இல்லை என்பதும் அவனுக்கு புரிந்திருந்தது.

ஆனாலும் ஏனோ அவன் மனது தவிப்பிலேயே இருந்தது. ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக அவன் உள்ளுணர்வு அவனை எச்சரித்துக் கொண்டேயிருக்க, கிருஷ்ணவேணிக்கு அத்தனை புத்திமதிகள் சொன்னவன், தான் இல்லாத நேரங்களில் மகன், மனைவியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நைனா, பொன்னிம்மாவிடம் விட்டிருந்தான்.

அடுத்தநாள் நடு இரவில், அவன் குடிசையை சூழ்ந்த காவலர்கள், அந்த இரண்டு கொலைகளுக்கான பழியை கிங்பாண்டி மீது சுமத்தி, அவன் மறுக்கவும் வாய்ப்பளிக்காமல் அடித்திழுத்து சென்றனர்.

“நீ பயந்துக்காத வேணி… நான் எந்த தப்பும் செய்யல. நான் சீக்ரம் வெளிய வந்துக்குவேன்… நைனா, பொன்னிமா உனுக்கு துணையா இர்ந்துப்பாங்க. வேணுன்னா, நீ உன் அம்மா வூட்டுக்கு போ…” கடைசியாக அவளிடம் பாண்டி கத்தி சொன்னது இதுதான்.

அடுத்த மூன்று நாட்களில், அவன் மனைவி இறந்த சேதிதான் அவனுக்கு வந்திருந்தது.

அது அவனுக்கு விழுந்த நான்காவது அடி!

கிருஷ்ணவேணியின் தற்கொலை, அவனுக்கு பேரிடியாக விழுந்திருந்தது. செய்யாத குற்றத்திற்கு ஜெயிலுக்கு வந்தபோது கூட அவன் அத்தனை மனதை விட்டுவிடவில்லை. ஆனால், அவன் காதல் மனைவி செய்த செயலை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதற்கான காரணத்தை இப்போது வரை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

எப்படி தான் அத்தனை பத்திரம் சொல்லிவிட்டு வந்தும், இரண்டே நாட்களில் அத்தனை‌ பெரிய‌ முடிவை அத்தனை சுலபமாக எடுத்து விட்டாள் என்று அவனுக்கு இன்னுமே புரிபடவில்லை.

அன்றே உடைந்து போனவன், மீண்டு வர நினைத்தது தன் மகன் கதிர்வேலனுக்காக மட்டும்தான்!

போலீஸ் விசாரணையில், அப்புருவராக மாறி, காளிக்கு எதிராக பாண்டி சாட்சியம் அளித்து விட்டான். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் தெரிந்தும், துணிந்து இதை செய்திருந்தான். தன் மகனுக்காக… தன்னைப் போல் தன் மகனும் அப்பா இல்லாமல் நிராதரவாக நிற்கக்கூடாது என்பதற்காக.

கொலையை நேரடியாக பார்த்த முதல் சாட்சியாக பாண்டியை எடுத்துக்கொண்டு, காளியை கொலை குற்றவாளியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பாண்டி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.

அதன்பிறகு தான் அவன் வாழ்வின் உண்மையான போராட்டமே‌ ஆரம்பமானது. காளியின் ஆட்கள் அவனை கொலைவெறியோடு துறத்தினர். அவனால் எத்தனை தூரம் ஓட முடியும்? எதிர்த்து நின்றான். தன் கைகளில் ஆயுதத்தை எடுத்துக் கொண்டான். இதோ இப்போது ரௌடியாக நிற்கிறான்.

முதல் இரண்டு வருடங்கள் போராடி அவன் ஒரு நிலைக்கு‌ வரவே சரியாக இருந்தது. அவன் ஓரளவு‌ நிலைத்து நின்ற பிறகு தான், அவன் மகனை அழைத்து வரச்சென்றான். வேணியின் அப்பா ஒரே மூச்சாக பேரனைத் தர மறுத்து விட்டார். மேலும் அவர் மூத்த மகளின் இறப்புக்கான பழியை அவன்மீது போட்டார். பாண்டி எதுவும் எதிர்த்து பேசவில்லை. பெற்றவரின் உள்ள கொதிப்பை உணர்ந்தவனாக திரும்பி விட்டான்.

ஆனாலும் அவ்வப்போது கதிரை அங்கங்கு பார்த்துக் கொண்டு தான் இருந்தான். வேணியின் குடும்பம் அவனை பொறுப்பாய் வளர்ப்பதைப் பார்த்து அவனுக்கு நிம்மதியும் கூட.

இதற்கிடையில், வேணியின் தந்தையின் இறப்பில் கூட அவனை அவள் குடும்பம் நெருங்கவிடவில்லை. அவனும் பொறுமையாக விலகி தான் நின்றான்.

வேணி, ஜீவா காதல் விசயம் தெரிந்தபோது கூட, ஜீவாவைப் பற்றி முழுமையாக விசாரித்து, அவன் நல்லவன் என்று தெரிந்து பிறகு தான் அமைதியானான்.

அந்த நிலையில் ஓடி ஓடி களைத்து இருந்தவனுக்கு, சாய்ந்து கொள்ள ஒரு மடி தேவைப்பட்டது. அவன் வாழ்க்கைக்கும் துணை தேவைப்பட்டது.

அப்போதும் யாரோ ஒருத்தியை மணந்து, மகனையும் அழைத்துக்கொண்டு வாழலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தானே ஒழிய, வேணியை மணக்கும் எண்ணம் துளி கூட அவனுக்கு இருந்திருக்கவில்லை.

அவள் கதிரை விட்டுத் தராமல் அத்தனை போராடவும் தான், தன்னை மணந்து கொள்ளும்படி கொக்கி போட்டான். அதுவும் அவள் நிச்சயமாக மறுத்து ஜீவாவுடன் போய் விடுவாள் என்ற நம்பிக்கையில் தான்.

ஆனால், அவள் கதிருக்காக காதலையும் விட்டுத்தர தடுமாறிய அந்த நொடியில், அவனுக்கு பட்டது ஒன்றுதான், இவளைவிட வேறொருத்தி தன் மகனுக்கு நல்ல அம்மாவாக இருக்கமாட்டாள் என்று.

அந்த நொடியில் தான் அவளை மணக்க எண்ணம் கொண்டான். எண்ணம் போலவே மணந்தும் கொண்டான்.

ஆனால், இப்போது வேணியை மணந்தது பெருந்தவறென்று தோன்றியது அவனுக்கு. ஆம். பெரும் தவறு தான்… அவன் வேறு யாரை மணந்திருந்தாலும் அவன்‌ மனது இத்தனை அல்லலுற்று இருக்காது. அவள் தங்கையை மணந்து கொண்டது தான் அவன் செய்த பெருந்தவறாகிப் போனது இப்போது.

முன்பை விட, திருமணத்திற்கு பிறகு, கிருஷ்ணவேணியுடனான நினைவுகள் அடிக்கடி வந்து அவனை‌ துன்புறுத்தவும், இதுதான் காரணம்.

“இவள நான் கட்டி இர்க்கவே கூடாது…” என்று மீண்டும் மீண்டும் தன் தலையில் அடித்துக் கொள்ள, “ம்மா…” என்று குரல் கொடுத்த சாதி பசுமாடு அவனை கலைத்தது.

நிமிர்ந்தவன், அந்த மாடு அவனை பார்த்து தலையாட்டி, “ம்மா…” என்று மறுபடி குரல் கொடுத்து அழைக்க, அந்த மாட்டிடம் வந்து அதன் கீழ் கழுத்தை வருடி தந்தான்.

அதன் நெற்றியோடு நெற்றி முட்டி சில நொடிகள் நிற்க, அவனுக்கு அந்த கற்பக பசு ஆறுதல் தருவதாய். பாண்டி தன் மனவேதனைகளை சொல்ல சொல்ல, அந்த காமாட்சி பசு அனைத்திற்கும் சாதகமாக தலையாட்டி அவனை ஆசீர்வதித்தது.

 

***

 

“அறிவு கீதா இல்லியா க்கா உனுக்கு. யார பத்தி யாராண்ட சொல்லி வச்சி கீற?”

மறுநாள் காலையில், மங்காவை வாயிக்கு வந்தபடி எல்லாம் திட்டி தீர்த்து கொண்டிருந்தான் பால்பாண்டி.

அவன் முன்பு மங்காவும் ராணியும் உம்மென்று நின்றிருந்தனர்.

“உனுக்கும் இந்த லோலாலங்கடிக்கும் ஒரு தபா சொல்லிக்கினா புர்யாதா? அவ என் பொண்டாட்டி, அவளுக்கும் எனுக்கும் ஆயிரம் இர்ந்துக்கும் அது எங்களோட.”

“அதுக்கில்ல கிங்கு, அவ உன்ன மதிச்சிக்கிலன்னு…” மங்கா முடிக்கும் முன்னே கைநீட்டி தடுத்தவன்,

“வாணா க்கா, இத்தான் லாஸ்ட் வார்னிங் உனுக்கு. என் பொண்டாட்டி பத்தி சொம்மா குறை சொல்லிக்கிற வேல வச்சிக்காத.” பாண்டி விரல் நீட்டி எச்சரிக்கவும், மங்கா பாவமாக தலையசைத்துக் கொண்டாள்.

 “சரி அத்த வுடு, இன்னிக்கி மேட்டர் இன்னான்னா, வேணி வேல பார்த்துகிற காலேஜ் ரூட்டுல போற லேடிஸ் பஸ்ல ஏறி பொறுக்கிங்க பொம்பள புள்ளங்களாண்ட வம்பு வச்சுக்கிறானுங்களாம்.

நீ நாளக்கி அந்த பஸ்ல ஏறி, அவனுங்கள இன்னானு பாத்துக்கிற, பிராப்ளம் பெர்சாயிக்கினா நான் பக்கத்துல தான் இர்ந்துக்குவேன் என்ன கூப்புடு.”

பாண்டி சொன்னதும் மங்காவின் முகம் பளிச்சென்றானது. “அட பிஸ்கோத்து மேட்டரு இதுக்கல்லாம் நீ ஏன்‌ வந்துகினு கிங்கு நானே முட்ச்சிறேன்.” முந்தானையை ஒருமுறை உதறிவிட்டு மங்கா சொல்ல, பாண்டி புன்னகைத்தான்.

“மங்காக்கா கூட நானும் போறேன்” இவ்வளவு நேரம் எதிரில் நின்றும் தன்னை கொஞ்சமும் கவனிக்காத கிங்கின் மீது ஆதங்கம் எழ,‌ ராணி பதில்‌ பேசினாள்.

“ஏ உனுக்கு எதுக்கு இந்த வாண்டாத வேல அல்லாம்? உனுக்கு மாப்பிள பாக்க சொல்லிக்கீறேன். போய் உன் மூஞ்சிக்கு மைதா மாவு பூசிக்க பே, அப்பவாச்சும் பொண்ணு மாறி தெரிஞ்சுக்குவ.” பாண்டியின் அதட்டலில் இன்னும் ஆதங்கம் கூடியது அவளுக்கு.

“நானும் உன்ன பாத்துக்குனு வளர்ந்துகுனவ தான் கிங்கு. உன் அளவுக்கு எனுக்கும் தகிரியம் இர்ந்துகீது. நான் மங்காக்கா கூட போவத்தான் போவேன்.” சிலிப்பி திருப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவள்,

நின்று திரும்பி, “மாப்பிளன்னு எவனாவது என் வூட்டு பக்கம் வந்துக்கிட்டும் காபி தண்ணில பேதி மாத்திர கலந்து கொடுக்கல என் பேரு ராணி மங்கம்மா இல்ல ம்க்கும்.” ராணி கத்தி சொல்லிவிட்டு போன வேகத்தில், கிங், மங்கா இருவருக்குமே சிரிப்பு தான் வந்தது.

“அந்த லூசு புள்ளக்கு நீயே நல்ல புத்தி சொல்லி வுடுக்கா. அப்பாலே நாளைக்கி உஷாரு.” மங்காவை தட்டி கொடுத்துவிட்டு பாண்டி நகர்ந்தான்.

 

***

காதல் களமாடும்…

 

(தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள் ப்ரண்ட்ஸ் 🙏🙏🙏

எல்லாரும் கிங்கோட fb கேக்குறீங்க… கதையில மொத்தமாக ஒரே இடத்தில் அவனோட பிளாஷ்பேக் வராது. அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் வந்து போகும்… முன்ன காளி யோசிக்கும்போது வந்தது போல, இப்ப பாண்டி யோசிக்கும்போது வந்தது போல.

இப்படி பிளாஷ்பேக் தனிதனியா பிரிச்சு கொடுக்கறது உங்களுக்கு பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? புரியுதா? இல்ல குழப்பமா இருக்கா? முழுசா ஒரே எபியா பிளாஷ்பேக் சொன்னாலே நல்லாயிருக்கும் என்று ஃபீல் பண்றீங்களா? என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்…

கதையின் நகர்வு பரவால்லயா… இழுவையா இருக்கா… இன்னும் காட்சிகளில் வேகம் தேவையென்று நினைக்கிறீங்களா?

உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் திருத்தி கொள்கிறேன்…

நன்றி😍😍😍)