காதல்களம் 21

IMG-20220517-WA0018-82ec8ec6

காதல்களம் 21

மறுநாள் காலையில் கிங்பாண்டி சொன்ன பேருந்தில் ஏறி அமர்ந்தனர் மங்காவும் ராணியும்.

அடுத்த இருபது நிமிடங்களில், நடுவழியில் ஓடும் பேருந்தில் தாவி ஏறினர் அந்த நான்கு பேரும். 

அடுத்த பத்து நிமிடங்களில், பேருந்தில் இருக்கும் மொத்த பெண்களும் ஒன்றாக சேர்ந்து, அந்த நால்வரையும் அடித்து துவைத்து நாராக தொங்க விட்டிருந்தனர்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் போலீஸ் வந்து அவர்களை அள்ளி போட்டுக்கொண்டு நகர்ந்தனர்.

‘ஓடும் மகளிர் பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்ய ஆண் நரிகளை வெளுத்து வாங்கிய பெண்கள் சிங்கங்கள்!’ என்ற தலைப்பில், பேருந்தில் அந்த நால்வரும் தாவி ஏறியதிலிருந்து முழு வீடியோ காட்சியாக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டு பரவியது. பேருந்துக்குள் நடந்தவை எல்லாம்.

பேருந்தில் ஏறிய நால்வரும் பெண்களை சீண்டுவதும் உரசுவதும், மங்கா எழுந்து‌‌ அதட்டல் விடுவதும், அவர்கள் அவரிடமும் வம்பு பேச்சு வைக்க, மங்கா விட்ட அறையில் ஒருவன் கன்னம் கழன்று இருந்தது.

மற்றவர்கள் மங்காவை அடிக்க பாய, மங்காவோடு சேர்ந்து ராணியும் தன் கைப்பையால் அவனை அடித்தாள். அவர்கள் இருவரையும் பார்த்த மற்ற பெண்கள் தாங்கள் கையில் வைத்திருந்ததைக் கொண்டு அவர்களை அடிக்க தொடங்கினர்.

நான்கு‌ இளந்தாரி ஆண்களும், முப்பது சிங்க பெண்கள் விலாசி விட்டதில், பாதி உயிராக கிடந்தனர்.

அந்த வீடியோவை பார்த்த வேணி, மங்கா, ராணியைக் கவனித்ததும் புரிந்து கொண்டாள், இது கிங்பாண்டியின் வேலையென்று.

மங்கா, ராணியோடு சேர்த்து கிங்பாண்டிக்கும் ஒரு சபாஷ் போட்டுக்கொண்டாள், மனதோடுதான்.

அந்த முழு நிள வீடியோ முடியும் மட்டும் அவள் உதட்டில் உறைந்திருந்த புன்னகை கூடியதே தவிர குறையவே இல்லை.

***

அதேநேரம்,

கிங்பாண்டி அந்த ஆளரவமற்ற சாலையில் தன் பைக்கை நிறுத்திவிட்டு, மறுபுறம் சாலையைக் கடந்து நடந்தவன், அங்கிருந்த கார் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான்.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த, நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், அவனைப் பார்த்து கண்டனமாக முறைத்துவிட்டு காரை எடுத்தார்.

அவரின் விறைப்பான தோற்றமும், முறுக்கிய மீசையும், நேர் பார்வையும், அவரை ஒரு காவலதிகாரியாக அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.

“இன்னா சார், என்ன பாத்துக்கனும்னு சொல்லிக்கின? என்கவுண்டர்ல போட்டு தள்ள போறியா இன்னா?” பாண்டி வழக்கமான கிண்டல் பேச்சோடே அவரை கேட்க,

டிஎஸ்பி பாரிவேந்தனின் கண்டனப் பார்வையில் அவன் வாய் கப்பென மூடிக்கொண்டது.

“இடியட், உன்ன அப்படித்தான் போட்டு தள்ளனும்டா, உன்னால பப்ளிக்கும் பிராப்ளம், டிபார்மெண்ட்டுக்கும் பிராப்ளம்.” அவர் காட்டமாகச் சொல்ல,

“இன்னா சொல்லிகீற சார்? என்ன பத்தி உனுக்கு தெர்யாதா? தப்பு வேலைல எதிலும் இந்த கிங்கு தலய கொட்த்துக்க மாட்டான் சார்.”

“பெருசா நல்லவன் மாதிரி உதார் விடாத மேன். பொண்ண மிரட்டி உருட்டி மேரேஜ் பண்ணி இருக்க, இது தப்பு வேல இல்லயா? உன்கிட்ட இருந்து நிச்சயமா இதை நான் எதிர்பார்க்கல கிங்கு.” முதலில் வேகமாக ஆரம்பித்து இறுதியில் குரல் இறங்க சொன்ன பாரிவேந்தனின் குரலில் வேதனை தெரிந்தது.

“அட போ சார். எவனோ வேலையத்து என் பேர்ல வதந்திய கிளப்பி வுட்டுக்குனா, நீயும் கார்ல டீசல் ரொப்பிக்கினு வந்து நின்னுக்குவியா? டீசல் இன்னா விலை விக்கிது தெர்யுமா?”

“டேய்… எவனோ சொல்லலடா உன் பொண்டாட்டி தான் வந்து சொன்னாங்க. அதுவும் நேரா வந்து என்கிட்டயே.” என்ற பாரிவேந்தன் காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, பாண்டியை நேராக திரும்பி பார்த்தார்.

ஒரு நொடி அதிர்ந்த பாண்டிக்கு எல்லாம் புரிவது போல இருந்தது. இருந்தும், “வேணி என்ன பத்தி கம்ப்ளைண்ட் கொடுத்துக்கிச்சா சார்?” கேட்டவன் குரல் வெகுவாக இறங்கி ஒலித்தது.

அவள் தன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள் என்ற உணர்வே அவனை வலிக்க செய்வதாய். அவள்மீது எழும் கோபத்தை விட, அவள்மேல் முழுதாக நம்பிக்கை வைத்திருந்த அவன் மனதின் வலிதான் அதிகமாக தெரிந்தது.

“அந்த பொண்ணு கம்ளைண்ட் கொடுத்து இருந்தா இப்படி உன்னோட உக்கார்ந்து பேசிட்டு இருப்பேனா? அந்த பொண்ணு சொன்ன விசயமே வேற.” என்றவர்,

“நீ என்ன பண்ணி வச்சிருக்கன்னு தெரிஞ்சு தான் இப்படி செஞ்சியா கிங்கு? உன் பையனை நீயே கடத்திட்டு போய், அந்த குடும்பத்தையும் அந்த பொண்ணையும் மிரட்டி, கல்யாணம் வரைக்கும் முடிச்சிருக்க. நீ இவ்வளோ சீப்பா போவன்னு தெரிஞ்சி இருந்தா… அப்பவே நீ எப்படியோ ஒழிஞ்சு போன்னு விட்டு தொலைச்சி இருப்பேன்.” 

பாரிவேந்தனின் ஆத்திரமான பேச்சு பாண்டியை சரியாக தாக்கியது. அவன் இப்போது உயிரோடு நடமாட காரணம் அவர்தான். அவர்மேல் எப்போதுமே அவனுக்கு மரியாதையும் பக்தியும் அதிகம் இருக்கிறது.

“சார், அவ உங்களாண்ட வந்து என்னபத்தி இன்னா சொல்லிக்கினான்னு எனுக்கு தெர்யாது. ஆனா, அவள மிரட்டி உருட்டி வற்புறுத்தி அல்லாம் நான் அவள கட்டிக்கில. அவ தான் என் புள்ளக்கி அம்மாவாயிக்கனும்னு ஆசப்பட்டா, அப்பிடினா அவ எனுக்கு பொண்டாட்டியா தான இர்ந்துக்கனும், அதான் கட்டிக்கினேன்.

அவளோட சம்மதம் இல்லாம அல்லாம் எங்க கண்ணாலம் நட்ந்துக்கல. எங்கையால முன்னால தாலி வாங்கினு,‌ பின்னால இப்பிடி பிளான் பண்ணிக்குவான்னு எனுக்கு தெரியாது சார்.” என்றவனிடம் இப்போது கோபம் கொப்பளித்தது.

“நீ என்ன காரணம் சொன்னாலும் விருப்பமில்லாத பொண்ண நிர்பந்தத்துல நிக்க வச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியில்ல கிங்கு.”

“அது தப்புனு இப்ப தான் எனுக்கும் புரியுது சார்…” தாடை இறுக சொன்னவன், “என்னபத்தி இன்னா சொல்லிக்கினா சார் என் பொண்டாட்டி?” என்று கேட்டான் வழக்கமான நக்கல் தொனியில்.

அவரும் சொன்னார்.

‘ரௌடிக்கு பொண்டாட்டியா, கேவலப்பட்டு வாழ்ந்து என் அக்கா மாதிரி நானும் தூக்குல தொங்க தயாரா இல்ல சார். நானும் என் பையனும் எங்க குடும்பமும் நிம்மதியா வாழனும். அடிதடி, ரௌடிசம், கொலை, கொள்ளை இதுமாதிரி பேச்சு, ஏன் காத்து கூட என் கதிர் மேல படக்கூடாது.

கதிர் சாதாரண மனுசன் மாதிரி படிச்சு நல்ல வேலைக்கு போய் அவன் வாழ்க்கைய மட்டும் பார்த்துக்கிறவனா வளர்க்கனும்னு நினைக்கிறேன். அவனும் அவங்க அப்பா மாதிரி ஒரு ரௌடியா வளர்ந்திடக் கூடாது’ கண்கள் கலங்க பேசியவளை அமைதியாக பார்த்திருந்தார் டிஎஸ்பி பாரிவேந்தன்.

‘உங்க கஷ்டம் எனக்கு புரியுதுமா. உங்களுக்கு என்னமாதிரி உதவி வேணும்னு சொல்லுங்க. கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவியை நான் செய்யறேன்’ என்றார்.

‘அது… கிங்பாண்டி மேல பைல் ஆகி இருக்கற கேஸ எடுத்து அவருக்கான தண்டனைய வாங்கி கொடுங்க சார். எனக்கு அது போதும்’ என்றவளை நெற்றி சுருங்க பார்த்தவர்,

‘கிங்க ஜெயில்ல தூக்கி போட சொல்ற, அதானேமா’ அவர் சிறு புன்னகை வளைப்புடன் கேட்டவர், ‘ஆனா பாருமா, கிங் மேல நீங்க சொல்ற மாதிரி எந்த கேஸுமே ஃபைல் ஆகல.’ என்று கைவிரித்தார்.

‘அதெப்படி சார் ஃபைலாகாம போகும்?’ என்று அதிர்ந்தவள், ‘எல்லாத்துக்கும் காரணம் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் தான் சார். பாண்டி மேல எந்த புகார் கொடுத்தாலும் அவர் எடுத்துக்கறதே இல்ல.’ வேணி ஆற்றாமையோடு சொன்னாள்.

‘ஓ இப்படி வேற இருக்கா? ஓகே நான் பார்த்து கவனிக்கிறேன்மா. இனி கிங்பாண்டி பத்தி என்ன புகாரா இருந்தாலும் நேரடியா நீங்க என்கிட்டயே கொடுக்கலாம். நான் கண்டிப்பா நடவடிக்கை எடுக்கிறேன்.’ என்றவரிடம் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டிருந்தாள் வேணி.

பாரிவேந்தன் சொல்ல சொல்ல பாண்டியின் நெஞ்சம், வெடிக்க இருக்கும் எரிமலையாக புகைய தொடங்கியது.

“இங்க பாரு கிங்கு, என் வேலையெல்லாம் விட்டுட்டு இதையெல்லாம் உன்கிட்ட வந்து சொல்லனும்னு எனக்கென்ன தலையெழுத்து சொல்லு… நான் பார்த்து வளர்ந்த பையன்டா நீ. மறுபடியும் நீ ஏதாவது தப்பான வழியில போறதா எனக்கு தகவல் வந்துச்சு… அப்பவே உன்ன போட்டு தள்ளிட்டு என்கௌண்டர்னு சொல்லி மெடல வாங்கிட்டு போயிட்டே இருப்பேன்.”

பாரிவேந்தனின் அதட்டலான மிரட்டலில், சிரிப்புடன் அவரை பார்த்தவன், “இப்பல்லாம் நான் எந்த பஞ்சாயத்துக்கும் போறதில்ல சார். எல்லா மேட்டர்ல இர்ந்தும் ஒதுங்கி தான் நிக்கிறேன்.” என்றான் கிங்பாண்டி.

“அப்படியா கிங்கு? அப்ப ஒருத்தன பப்ளிக்ல நாய வச்சு முடிச்சியே அது?”

“அதல்லாம் பொது சேவை சார்.” அவன் அலட்டலாக சொன்னதில்,

தலையை அசைத்துக் கொண்டவர், “பஸ் ஸ்டெண்ட்ல நீ ஆசிட் அடிச்ச பையன் பேக் ரௌண்ட் தெரியுமா உனக்கு?”

“எல்லாந் தெரியும் சார். அவன் அப்பன் பெரிய ஆளா இருந்துகினா, படிக்க வந்துகின பொண்ணு மேல இவன் ஆசிட் அடிக்க காச தூக்கி வீசிக்குவானா? ஆசிட் அடிச்சா எப்டி இருக்கும்னு இப்ப அவனுக்கு தெர்ஞ்சி இர்ந்துக்கும் இல்ல. பயம் வந்திருக்குமில்ல.”

“நீ செஞ்சதை எல்லாம் எப்படி நியாயப் படுத்தினாலும் சட்டப்படி அதெல்லாம் குற்றம் கிங்கு. கேஸ் உன் பக்கம் திரும்புனா நானே உனக்கு அரஸ்ட் வாரண்ட் இஷ்ஷு பண்ணுவேன்.”

“அர்ஸ்ட் தான தாராளமா செஞ்சுக்கோ சார்” என்று பாண்டி அவர் முன் இரண்டு கைகளையும் சேர்த்து நீட்ட,

சிரித்தபடி அவன் கையை தட்டி விட்டவர், “உன்னல்லாம் என்ன பண்றதுனே தெரியலடா எனக்கு. நான் இல்லன்னாலும் உன் வொய்ப் உன் கைல விலங்க மாட்டியே ஆகணும்னு படு தீவிரமா இருக்காங்க போல, என்ன செய்ய போற?”

“அவள நான் பார்த்துகீறேன் சார், யூ டோன்ட்டு வர்ரீ.” அலட்டலாக சொன்னவன் சற்று நிதானித்து, “எனுக்கு ஒரேயொரு ஹெல்ப்பு மட்டும் மறுக்காம செஞ்சிடு சார். தப்பித்தவறி எனுக்கு ஏதாவது ஆயிபோச்சுன்னா, என் பொண்டாட்டி, புள்ளய காபந்து பண்ணி சேஃபான இடத்துல சேர்த்து வுட்டுடு சார்.” என்றவனை,

“டேய்!” என்று அதட்டினார் அவர்.

“அவ ரொம்ப ஸ்ட்ராங்கு சார், நான் இல்லனாலும் அசராம வாழ்ந்து காட்டிக்குவா. என் அம்மா, லவ்வர் மாறி தூக்குல தொங்க கயிற எட்த்துக்க மாட்டா. அப்பத்தி சிச்சுவேஷன்ல அவளுக்கு நீ சப்போர்ட் செஞ்சா மட்டும் போதும் சார்.” என்று சிரித்தபடியே சொல்பவனை, அவர் அரைநொடி வியந்து பார்த்தார்.

“நீ பேசறது உனக்கே ஓவரா தெரியலையா கிங்கு? உனக்கு அப்படியென்ன ஆகிடும்னு கவலைப்படுற நீ?” அவர் சற்று அதட்டலான குரலில் கேட்கவும்,

“எனுக்கும் வாழணும்னு கொள்ள ஆசை இர்ந்துகீது சார். என் அப்பனோட தான் எனுக்கு வாழ கொட்த்து வெக்கல, என் புள்ளயோடவாவது நான் வாழணும் சார்…” சொல்லும்போதே அடைத்த தொண்டையை கனைத்துக் கொண்டவன்,

“ஆனா அந்த காளியண்ண சொம்மா என்னாண்ட‌ ஒரசிக்கினே கீது. இதல்லாம் வாணான்னு சொன்னாலும் கேட்டுக்கற‌ மாறி தெர்ல. ஒன்னு நான் அத்த போடணும், இல்லாகாட்டி அது என்ன போடணும்னு டைலாக்‌ வேற‌ வுட்டுகீது.

எனுக்கு யாரையும் போட வாணாம் சார். சாதாரண மனுசன் மாறி நானும் பொண்டாட்டி,‌ புள்ளக்குட்டியோட வாழ்ந்து வயசாயி செத்து போவணும் அவ்ளோதான். இந்த கிங் பேரு,‌ ரௌடி பட்டம் இத்தல்லாம் வுட்டு வெறும் பால்பாண்டியா என் மாட்டு பண்ணையை பார்த்துக்குனு நிம்மதியா இர்ந்துக்கணும்னு ஆசை. ஆனாலும் எத்தயும் என்னால விட முடியாம தான் இங்க இப்பிடி நிக்கிறேன்.” பாண்டி உணர்ச்சிவசப்பட்டு பேச, அவன் வேதனை பாரிவேந்தனுக்கு நன்றாகவே புரிந்தது. அவன் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தார்.

“காளி இப்ப ஜாமீன்ல தான் வந்துருக்கான். அவன் லைட்டா ஏதாவது பண்ணான்னு தெரிஞ்சாலும் போதும் உள்ள தூக்கி போட்டுடலாம். இப்ப அவன் வெளிய இருந்தாலும் முன்ன மாதிரி பெரிய சப்போட் எதுவும் அவனுக்கில்ல. உன்னால தான் அவனோட சேர்த்து அவன் நெட்வொர்ட் மொத்தத்தையும் புடிச்சு முடிச்சாச்சே கிங்கு. இப்ப அவன் வெத்து தான். எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு. நானும் பார்த்துக்கிறேன்.”

பாரிவேந்தன் தைரியம் சொல்ல, பாண்டி மேலும் அவரிடம் ஏதும் பேசவில்லை,‌ தலை அசைத்துவிட்டு காரிலிருந்து இறங்கி சென்று விட்டான்.

அவன் போன பின் காரை இயக்கிய பாரிவேந்தனுக்கு, அவன் சற்று முன் சொன்னவை அவரையே சுற்றி வருவது‌ போல தொன்றியது.

பதினைந்து வருடங்கள் முன்பு, அவர் துணை ஆய்வாளராக பொறுப்பேற்றிருந்த காவல் நிலையத்துக்கு, உடம்பெல்லாம் இரத்த கரையுடன், அழுது கொண்டு தன்முன் வந்து நின்ற பதிமூன்று வயது சிறுவன், இப்போதும் அவர் நினைவில் அழியாமல் காட்சியானான்.

“சார்… என்… என் அப்பாவ… ஒர்த்தன்… என் கண்ணு முன்னால… குத்தி கொன்னுட்டான் சார்… நான்… நானும் கோவத்துல… அவன குத்தி கொன்னுட்டேன் சார்… நான் வோணும்னு பண்ணல சார். அப்பாவ அப்பிடி பார்த்ததும் ஆத்திரத்தில தான் கொல பண்ணிட்டேன் சார்…”

அன்று பாண்டி சிறுவனாக கதறியது‌ அவரை மௌனமாக்கி இருந்தது. ஆனாலும் ஒரு காவலதிகாரியாக தன் கடமையைச் செய்தார். அவனை சிறை செய்து‌‌ அவனுக்கான குறைந்தபட்ச தண்டனையை பெற்று தந்தார்.

சீர்திருத்த பள்ளியில் வாசம்‌‌ முடிந்து வெளிவந்து, அவனும் தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வான் என்று அப்போது நம்பினார். ஆனால் பத்து வருடங்கள் கழித்து ‌அவனை லோக்கல் ரௌடியின் அடியாளாக, அதுவும் மறுபடி கொலைக்காரன் என்ற பழியோடு பார்த்து அதிர்ந்து விட்டார்.

அப்போதுதான் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றிருந்தவர், அந்த கொலை வழக்கு கிங் மீது திணிக்கப்பட்டது என்பதை அறிந்து, உண்மையான குற்றவாளி காளியை பிடிக்க கிங்கையே பயன்படுத்திக் கொண்டார். அவனை அப்புருவராக சாட்சி அளிக்க சொன்னார்.

முதலில் தயங்கிய பாண்டிக்கு வேறுவழி இருக்கவில்லை. காதல் மனைவியின் இழப்பின் துயரம் ஒருபுறம், செய்யாத குற்றத்திற்கு அபாண்ட பழி சுமக்கும் வேதனை மறுபுறம் என, இருண்ட காட்டில் தனித்து தத்தளித்தவனுக்கு சிறு விளக்காய் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு மேலெழுந்து வந்திருந்தான் அவன்.

எதற்கும் துணிந்தவனாக, எதைப்பற்றியும் அச்சமற்றவனாக காலம் அவனை மாற்றியிருந்தது.

பாண்டி குற்றவாளி என்பதை தாண்டி, அவருக்கு அவன்மேல் வாஞ்சை உண்டு. அவரை பொறுத்தவரை நல்ல சூழ்நிலையில் வளர்ந்திருந்தால் நிச்சயம் பாண்டி நல்ல மனிதனாக வளர்ந்திருப்பான் என்று அவனைப்‌ பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வார். இப்போதும் அதையே தான் நினைத்துக் கொண்டார்.

***

காதல் களமாடும்…

(முதல்ல எல்லாருக்கும் சாரி ப்ரண்ட்ஸ், போன பதிவுல நிறைய இடங்களில் ஸ்பெல் மிஸ்டேக்ஸ் விட்டிருக்கேன். மறுபடி படிச்சு பார்க்கும்போது எனக்கே கஷ்டமா போச்சு… இனி அப்படி தவறு வராம பார்ததுக்கிறேன்…

அடுத்து, இன்னும் ஐந்து பதிவுகளில் கதை முடிந்துவிடும் மக்களே… தினமும் ஒரு பதிவென்று ஐந்து நாட்களில் தொடர்ந்து கொடுத்து சீக்கிரம் கதையை முடித்துவிடலாம் என்று யோசிக்கிறேன்… தொடர்ந்து படிக்க நீங்கல்லாம் ரெடியா சொல்லுங்க…

நன்றி😍😍😍)