காதல்களம் 25 pre final

காதல்களம் 25 (pre-final)

தங்களிடம் சிக்கிக்கொண்ட காளியின் ஆள் ஒருவனை குடோனில் கட்டி வைத்து, வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தனர் கிங்கின் ஆட்கள்.

“அய்யோ… அம்மா… எனுக்கு சத்திமா தெரியாது… வுட்ரு கிங்கு…” என்ற அவன் கதறலும், மற்றவர்களின் அதட்டலும் பேச்சுக்களும் எதுவுமே கிங்கின் மரமண்டையில் ஏறவேயில்லை.

அவன் எண்ணமெல்லாம் அவனின் ராட்சசியை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது. முன் இரவுகளில் தினமும் அவனை மறுத்து, திட்டி விரட்டி அத்தனை அலும்பல் செய்பவள், பின் இரவுகளில் அவனது முத்த சிதறல்களில் கரைந்து, விரல் தீண்டல்களில் தவித்து,  அவனை காட்டாறாய் சுருட்டி விழுங்கி கொள்கிறாள். 

ஒவ்வொரு முறையும் அவள் சிணுங்கல்களில் மடிந்து, அவள் முறைப்புகளில் உயிர் மீண்டு எழுகிறான் அவன். இன்னமும் அவள் இதழ் காயங்கள் ஆறுவதற்கு சிறிதும் வாய்ப்பு வழங்கவே செய்யாதவன், அதற்கு தண்டனையாய் அவள் அவனிதழ்களில் வஞ்சனை இல்லாமல் தந்த காயங்களையும் தாங்கி கொண்டிருக்கிறான்.

“அண்ணே… கிங்கண்ணே… இன்னா உனுக்கு நீயே சிர்ச்சுனு கீறே?” கிங் பாண்டியை தட்டி ஒருவன் கேட்க, அவனுக்கு பதில் சொல்லக்கூட தோன்றாமல், தலையைக் கோதிவிட்டு வெளியே நடந்தான் பாண்டி.

“கிங்கு… நீ பாட்டுக்கு போயிக்கிற? இவன இன்னா செஞ்சுக்கனும்?” லெஃப்ட் குரல் கொடுக்க,

“நீயே ஏதாது செஞ்சு வுடுடா” திரும்பியும் பாராமல் சொல்லிவிட்டு, காரில் ஏறி பறந்து விட்டான்.

 

கல்லூரி பாடத்தின் இடைவேளையில் வேணியைப் பார்க்க ஆள் வந்திருப்பதாக பியூன் வந்து சொல்ல, வேணி இதழ் மடித்து சிரித்துக்கொண்டாள். அவளுக்குத் தெரியுமே வந்தது யாரென்று.

வேணி அதிகமாக விடுமுறை எடுப்பதற்காக வார்ன் செய்த பிறகே, இம்முறை பர்மிஷன் தரப்பட்டது அவளுக்கு. அதற்கும் இளித்துக் கொண்டே செல்பவளை அலுவலக அறையில் இருந்தவர், தலையைச் சொறிந்தபடி பார்த்து வைத்தார்.

கல்லூரி வளாகத்தில் நின்றிருந்த பாண்டியின் காரை பார்த்ததுமே வேணியின் புன்னகை முகம், இன்னும் மலர்ந்து பிரகாசித்தது. 

அவள் தன்னை நோக்கி‌ நடந்து வரும் மட்டும், கிங்கின் பார்வை சற்றும் அசையாமல் அவள் மீதே பதிந்து வந்தது. கார் கதவைத் திறந்து தன்னருகில் அமர்ந்து மலர்ந்து சிரிப்பவளையும், அப்படியே தான் பார்த்திருந்தான்.

“என்னாச்சு?” அவன் பார்வைக்கு அர்த்தம் புரிந்தும் அவள் விளக்கம் கேட்க, பாண்டி பதில் பேசாமல் காரை எடுத்தான்.

அவன் முகத்தில் தெரிந்த தவிப்பை கவனித்தவளுக்கு, உள்ளுக்குள் குளிர் பரவும் உணர்வு. அவன் பார்வை சாலையிலேயே இருக்க, அவள் அருகே நகர்ந்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

ஒருமுறை அவள் தலைமீது தன் தலையை சாய்த்துவிட்டு நிமிர்ந்தவன், “இன்னாவோ பண்ணிக்கீறடீ என்ன நீ… சுத்தமா நான் என் கண்ட்ரோல்ல இல்ல. எத்த பத்தியும் யோசிச்சிக்க முடில. உம்மேல தான் நெனப்பல்லாம் யூடர்ன் அட்ச்சி நிக்குது. உன்ன ஒட்டிக்கினே உரசிக்கினே இர்ந்துக்கனும்னு தோணிக்கீது… ரெண்டு வாரமா இப்பிடி தான் அலையிறேன். எப்ப என் பித்து தீர்ந்துக்கும்னு தெரில. என்ன கொஞ்சம் தெளிய விடேன்டீ.”

அவன் உணர்ச்சி ததும்ப பேசி பேசியே அவளையும் பித்தேற்றி கொண்டிருந்தான். அவன் தந்த பித்தில் தத்தளிப்பவள், அவனை எங்ஙனம் தெளிவிக்க?

வேணி, அவன் தோளோடு இன்னும் அழுத்த தன் முகத்தைப் புதைத்துக் கொள்ள, பாண்டியின் கைகளில் கார் தடுமாறியது. இனி முடியாது என்று காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவள் முகம் நிமிர்த்தினான். 

“நாம எங்கியாவது வெளியூரு போயிக்கலாமா ராங்கி… ம்ம் வாணாம் வெளிநாடு போயிக்கலாம். விசா பாஸ்போர்ட் அல்லாம் ரெடி பண்ண சொல்லிறேன் ஓகேவா?”

அவன் அப்படி கேட்ட விதத்தில் வேணி சிரித்து விட்டாள். “இப்ப எதுக்கு திடீர்னு அவுட்டிங் பிளான் பண்ணிகீற நீ?” தன்னைப்போலவே கேட்டு தன் உச்சி முடியை விரல்களில் அலசுபவளின் மென்மையில், அவள் தோள்மீது கிறங்கி சரிந்தவன்,

“ராங்கி… என்னால டிரைவ் பண்ணிக்க முட்ஞ்சிக்கும்னு தோணிக்கல. நீ டிரைவ் பண்றீயா? நாம சீக்ரமா வூட்டுக்கு போயிக்கலாம்…” என்றவன் குறும்பு இதழ்கள் அவள் கழுத்தடியில் மேய, அவன் நீள்விரல்கள் அவள் இடை தாண்டி மேய்ந்தது.

“ம்ம்…” என்பதை தாண்டி அவளிடம் வேறு பதில் எழவில்லை.

“நடு ரோட்ல… காருக்குள்ள… தப்பு செஞ்சுக்கினா… ரொம்ப தப்பாயிக்கும்டீ… நாம போயில்லாம்…” என்றவன் அவளிடம் தொலைத்த தன்னை மீட்க, அவளிடமே தன்னை மீண்டும் மீண்டும் தொலைத்துக் கொண்டிருந்தான்.

ஒரு நிலைக்கு மேல் தாங்காது, வேணி அவனை விலக்கி தள்ளிவிட்டு, அவனை காட்டமாக முறைத்து வைத்தாள்.

பாண்டி, தன் தலையை அழுத்த கோதிவிட்டு இருக்கையில் தலைசாய்த்து கண்மூடிக் கொண்டவன், அவள் பக்கம் இடக்கரத்தை நீட்டி, தன்னை காட்டமாக முறைத்திருப்பவளை தன் மார்போடு சேர்த்துக் கொண்டான்.

“வெளியே எங்கியும் போயிக்க வாணாம்டீ… நீயும் நானும் வூட்டுலயே இர்ந்துக்கலாம். நான் தொழிலுக்கு போயிக்காம, நீயும் வேலைக்கி போயிக்காம… ரூம் டோர இஸ்த்து அட்ச்சி வச்சிகினு…”

பாண்டி கிறுக்கேறி சொல்ல, வேணி நிமிர்ந்து அவன் தலையில் வலிக்க கொட்டி வைத்தாள். அவனுக்கு நிஜமாய் வலித்தது. தலையைத் தேய்த்துவிட்டு அவளை முறைத்தான்.

“நீ கிறுக்காகறது மட்டுமில்லாம எனக்கும் கிறுக்கேத்தறடா… ஒழுங்கு மரியாதையா காரெடுத்து வீட்டுக்கு விடு. நடுரோட்டுல வச்சு வம்பு பண்ணி என் மானத்த வாங்காத.” அவள் மிரட்டலில் வாயால் மூச்சை வெளியிட்டு, காரை எடுத்து வேகம் பிடித்தான்.

‘என்னமா தவிக்கிறான்… அவனோட சேர்த்து என்னையும் தவிக்க விடுறான்… ச்சீ இவனால என் வெட்கம், அடக்கம் எல்லாம் போன இடம் தெரியல.’ அவனிடம் பார்வை பதித்து அவள் உள்ளுக்குள் சுகம் சுகமாய் நொந்து கொள்ள,

பாண்டி சாலையில் பார்வை வைத்தபடி, தன்னையே வெறித்திருந்த அவள் முகத்தைப் பிடித்து வேறுபக்கம் திருப்பி விட்டான்.

“சொம்மா என்ன பாத்து பாத்து பசியேத்தாதடீ… அப்பால ரோடு காருன்னு அல்லாம் பாத்துக்க மாட்டேன் பாஞ்சிடுவேன்.”

அவன் எச்சரிக்கையில் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவள், அவன் பக்கம் பார்வையைத் திருப்பவே இல்லை.

பாண்டி வாய்க்குள் அதக்கிய சிரிப்போடு காரை இயக்க, குறிப்பிட்ட இடத்தில் கார் மறுபடி தடுமாற, சுதாரித்து காரை நிறுத்தி, என்னவென்று வெளியே பார்த்த பாண்டியின் முகம் சட்டென மாறியது.

“ச்சே” தன் முட்டாள்தனத்தை எண்ணி நெற்றியில் அடித்துக் கொண்டவன், புரியாமல் பார்த்திருந்த வேணியிடம், “சீக்ரம் கார்லர்ந்து இறங்கி ஓடுடீ” என்று கத்தியவன், அவளுக்கு முன்னே வேகமாக இறங்கி, அவளையும் பிடித்து இழுத்துக்கொண்டு சாலையில் இறங்கி ஓடினான்.

“அய்யோ பாண்டி, என்னாச்சு?” வேணி எதுவும் புரியாமல் அவன் இழுப்பிற்கு‌ ஓடி வந்தபடி கேட்க,

“பின்னால பார்றீ, என் பங்காளிங்க வரானுங்க” என்றவன் பார்வையை நாலாபுறமும் சுழற்றி, ஒரு பாதையை குறித்துக் கொண்டு அந்த வழியில் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான்.

அவனது இழுப்பில் ஓடியவள் பின்னால் திரும்பி பார்க்க, அவளை பயம் பிடித்து கொண்டது.

தடிதடியான அடியாட்கள் கட்டையும் கத்தியுமாக அவர்களைக் கொலைவெறியோடு துரத்திக் கொண்டு வந்திருந்தனர்.

“ஐயோ முருகா! இவனுங்க எங்கயிருந்து வந்தாங்க? அதுவும் இத்தனை பேரு?”

“நம்மள ஃபாலோ பண்ணி ஸ்கெட்ச் வச்சி இர்க்கானுங்க. நான் தான் உன் கிறுக்குல இவனுங்கள கவன்ச்சிக்கல.” என்றபடி ஒரு வளைவில் அவளை இழுத்துக் கொண்டு ஓடினான் பாண்டி.

அந்த சாலையில் நிறைய மனிதர்களின் நடமாட்டம் இருந்தது. அங்கே இருப்பவர்கள் எல்லாரும் அவர்களை கவனித்தார்களே அன்றி யாருமே அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

‘முருகா! இவங்கெல்லாம் என்ன மனுசங்க? இத்தனை பேரு ஒன்னு சேர்ந்து நின்னா கூட எங்கள காப்பாத்தலாமே… உதவி செய்ய வரலன்னாலும் போலீஸுக்கு போன் பண்ணலாமே’ வேணிக்கு மனம் பதறியது.

“யாராவது போலீஸ்க்கு போன் போடுங்களேன், பிளீஸ்…” வேணி கத்தியும் யாரும் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. மனம் சோர்ந்து போனாள்.

பாண்டி எதிலும் கவனத்தைச் சிதற விடாமல், மூளைக்குள் ஏதேதோ கணக்கிட்டு, குறித்த பாதையில் நுழைந்து, அவர்கள் தங்களை நெருங்காதபடி வேகம் பிடித்து ஓடினான்.

பாண்டியின் வேகத்துக்கு அவளால் ஓட முடியவில்லை. அவர்களும் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். இன்று நிச்சயமாக வீடு போய் சேரமாட்டோம் என்று முடிவே செய்து கொண்டாள் வேணி.

“பாண்டி… என்னால ஓட முடியல…”

“நின்னா உயிர் போயிக்கும்னு நினச்சு பாரு, தன்னால காலு ஓடும்” என்றவன் நிற்கவே இல்லை. வேறு வேறு வளைவுகளிலும் சந்துகளிலும் வளைந்து நுழைந்து ஓடினான். அந்த தடிமாட்டு கூட்டமும் சற்றும் அசராமல் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடி வந்தது.

அப்போதுதான் வேணிக்கும் நினைவு வர, “அட முட்டாளே, கார்லயே போயிருக்கலாமில்ல. தப்பிச்சு இருக்கலாமே?”

“அடி லூசே, அது எனுக்கு தெர்யாதா? கார் டயரை பஞ்சர் பண்ணிக்கினு தான்டி, தொரத்திக்கினு வரானுங்க. இன்னும் ரெண்டு நிமிஷம் கார்ல உக்கார்ந்துகினு இர்ந்தா, காருக்குள்ளயே நம்ம கதைய முடிச்சு இருப்பானுங்க.”

பாண்டி சொல்ல சொல்ல, வேணிக்கு கிலி பிடித்துக் கொண்டது. “போச்சு போச்சு எல்லாமே போச்சு… உன்ன நம்பி வாக்கப்பட்டதுக்கு இப்படிதான் எனக்கு சாவு வரணுமா? பாவீ, நான் செத்து போனா கூட பேயா வந்து உன்ன கடிச்சி குதறிடுவேன்…”

வேணியின் புலம்பலில் சட்டென நின்ற பாண்டி, அங்கே தண்ணீருக்காக சாலையில் வரிசையாக வைத்திருந்த காலி குடங்களை சரசரவென கலைத்து சாலையில் உருள விட்டு‌ திரும்பி ஓடினான்.

“டேய்! நீ என்ன சின்னப்புள்ள தனமா பிளாஸ்டிக் குடத்தை உருட்டி விளையாடிட்டு இருக்க? பெருசா ரௌடி மண்ணாங்கட்டின்னு சீன் போட்டியே, ஒரு கன் கூட இல்லயா உன்கிட்ட” வேணி அப்போதும் அவனைத்தான் குற்றம் சாடினாள்.

“ஏ உன்ன டாவடிக்க வந்த வேகத்துல பொருள எட்த்துன்னு வர மறந்துக்குனேன்டீ. அவனுங்க கையிலயும் கன் இல்ல அதுவரீக்கும் நமக்கு லாபம்… இன்னியும் கொஞ்ச தூரம் தான் ஓடி வாடீ” பாண்டியின் விளக்கத்தில் வேணியின் வாயடைத்து கொள்ள, மூச்சைப் பிடித்துக்கொண்டு அவனோடு சேர்ந்து ஓடினாள். வேறு வழியும் இல்லையே.

கிட்டத்தட்ட அரை மணி நேர ஓட்டம், சட்டென பாண்டி ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்துவிட, வேணி மூச்சு வாங்க அங்கே சுற்றிப் பார்த்தாள். அது ஏதோ விளையாட்டு மைதானம் போல இருந்தது. அங்கே சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தவள், அதற்குள் காளியின் ஆட்களும் மைதானத்திற்குள் நுழைவதைப் பார்த்து மிரண்டு ஓட முயன்றவளை விடாது பாண்டியின் கரம் கெட்டியாகப் பிடித்திருந்தது.

அந்த தடிமாடுகளும் அஸ்ஸு புஸ்ஸென்று மூச்சு வாங்கியபடி, தங்கள் ஓட்டத்தைக் குறைத்து பாண்டியை நோக்கி வந்தனர்.

இப்போதும் அங்கிருந்து நகராமல் கிங் பாண்டி அவர்களை நோக்கி திரும்பி நிற்க, வேணிக்கு பயத்தில் கண்களில் நீர் தேங்க, அவன் முதுகோடு ஒன்றிக் கொண்டாள்.

“இன்னா கிங்கு, எங்களாண்ட கெத்து காட்டிக்க பாத்துக்கிறீயா? எங்களாண்ட சொம்மா தொக்கா மாட்க்கின இல்ல, இனிமே தப்பிச்சிக்க முடியாது கிங்கு” என்றபடி வந்தவன், “டேய் நிக்காதீங்கடா, சீக்ரம் இவன போடுங்கடா” கத்திக்கொண்டு முன்னால் ஓடிவந்தவனின், பக்கவாட்டு மண்டையை எங்கிருந்தோ பறந்து வந்த கிரிக்கெட் மட்டை சரியாக தாக்கி, அவனை மண்ணில் விழச்செய்தது.

மற்றவர்கள் அந்த பக்கம் திரும்பி யாரென்று பார்க்க, அங்கு கிரிக்கெட் மட்டை, ஸ்டெம்ப், இரும்பு தடி போன்ற ஆயுதங்களை கைகளில் பிடித்தவாறு பத்திற்கும் மேற்பட்டவர்கள் நின்றிருக்க, காளியின் பதின்ம எண்ணிக்கையிலான ஆட்கள் எதிர்த்து நின்றனர்.

அந்த கிரிக்கெட் டீமுக்கு கேப்டன் போல முன்னே வந்தவன் பார்வை கிங்பாண்டி மீது நிலைக்க, கிங்கின் நேர் பார்வையும் அவனை நேர் நோக்கியது.

“பீட்டரு… உனுக்கும் எங்களுக்கும் பேச்சில்ல, கிங்க போட்டுக்குனு நாங்க போயிக்கிறோம் நீ ஒத்திக்க.” காளி ஆள் ஒருவன் அவனிடம் பேச,

“டேய், இந்த பீட்டர் ஏரியாக்குள்ள வந்துகினதும் இல்லாம, என் முன்னால கிங்க போட்டுக்குவியா நீ? எங்க போடு பாத்துக்கலாம்.” பீட்டர் பேச்சோடு கிங்கின் முன்னே வந்து அவர்களை எதிர்த்து நிற்க, பீட்டர் ஆட்களும் அவர்களை எதிர்த்து நின்றனர்.

வேணிக்கு பயத்தில் அங்கு நடப்பது எதுவுமே சரியாக புரியவில்லை. என்னவோ நிமிடத்திற்கு நிமிடம் பயம் அதிகரித்துக்கொண்டே போனது அவளுக்கு. பாண்டியை நிமிர்ந்து பார்க்க, அவன் முகத்திலிருந்து எதுவுமே உணர்ந்துகொள்ள முடியவில்லை.

உடனே காளியின் ஆள் அவனுக்கு போன் போட, “கிங்க முட்ச்சிகினீங்களாடா?” எதிர்முனையில் காளியின் கட்டை குரல் குதூகலமாக கேட்டது.

“இல்லண்ணே, பீட்டரு குறுக்க வந்து கிங்க காபந்து பண்ணிக்க டிரை பண்றான்ணே” என்றதும்,

“அந்த நாறப்பயன் எதுக்குடா நடுவால பூர்றான்? அவன தட்டி தூக்கிட்டு கிங்க முட்ச்சிக்கினு வராம, இன்னாடா நக்கினு கீறிங்க?” காளியின் பேச்சில் சாக்கடையின் வீசம் வீசியது.

அதேநேரம், இரண்டு கார்களும் நாலைந்து பைக்கும் அந்த மைதான வாயிலில் வந்து நிற்க, அவை எழுப்பிய சத்தத்தில் அனைவரின் பார்வையும் அங்கு திரும்பியது.

“கிங்கோட ஆளுங்களும் வந்துகினாங்க காளிண்ணே…” வசமாக சிக்கிக்கொண்ட பயத்தில் காளியின் ஆள் பயந்து கூவினான். அங்கிருந்த காளி ஆட்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் கிலி பிடித்துக் கொண்டது.

“த்தூ… உதவாக்கரைங்களா… அவனுங்க கையால சாவுங்கடா, ஒத்தயா சிக்கின ஒருத்தனை போட முடியல நீங்கல்லாம் ச்சீ” காளி பேச்சை துண்டித்திருக்க, முன்னும் பின்னும் முப்பது ஆட்களுக்கு மேல் வளைத்து நிற்க, மிரண்டு போன காளியின் ஆட்கள் தப்பி ஓடவே முயன்றனர்.

அதற்குள் கிங்பாண்டியின் ஆட்களும், பீட்டரின் ஆட்களும் முன்னும் பின்னும் அவர்களை சூழ்ந்து தாக்க ஆரம்பித்தனர். காளியின் ஆட்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாக்க, அந்த மைதானமே தூசு தும்மும் பறந்து ரணகளமானது.

கிங்பாண்டி ஒரு அசட்டை பெருமூச்சை வெளியேற்றி,‌ பக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி நடந்து ஒற்றை கால் மடக்கி ஆசுவாசமாக உட்கார்ந்துகொள்ள, வேணி அவனை வித்தியாசமாக பார்த்தாள்.

“இன்னாடீ லுக்கு? மாமனும் ஃபைட் பண்ணிக்கறதை பாத்துக்கனும்னு ஆசப்பட்றீயா?” பாண்டி கண்சிமிட்டி கேட்டதும், வேணி வேகமாக மறுத்து தலையசைத்து அவனோடு ஒடுங்கி அமர்ந்து கொண்டாள்.

அவள் கண்ணெதிரே வெறிபிடித்த மிருகத்தை விட மோசமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு, அந்த சண்டையில் பாண்டி நுழைந்தால், அவனும் இப்படித்தான் மிருகமாக அவர்களை அடிப்பான் என்ற கற்பனையே அவளை பயமுறுத்தியது.

இரத்தம் சிதற சற்றும் இரக்கமின்றி அவர்கள் அடித்துக் கொண்டிருக்க, இதையெல்லாம் நேரில் பார்த்தவளுக்கு உடலெல்லாம் நடுக்கம் கண்டது.

“ஏ பயந்துக்காதடீ‌, ஒன்னில்ல இப்ப கிளம்பிக்கலாம்” அவள் தோளணைத்து தைரியம் சொன்னவன், எங்கோ கண்காட்ட, ஒரு சிறுவன் வேகமாக ஓடிவந்து அவனிடம் தண்ணீர் பாட்டிலை தந்துவிட்டு நகர்ந்து கொண்டான்.

“ஏ இந்தா தண்ணீ குடி” பாண்டி பாட்டில் மூடியை திறந்து நீட்ட, அவளுக்கு தாகம் கூட பெரிதாக வருத்தவில்லை. அங்கிருந்த அசாதாரண சூழ்நிலை தான் பெரிதாக வருத்தியது. அவள் வேண்டாமென தலையசைக்க, பாண்டி தானே அவளுக்கு தண்ணீரை புகட்டிவிட்டு, தானும் மொத்தமாக தண்ணீரை வாயில் சரித்துக் கொண்டான். அவனது வேகமும் விவேகமும் தானே இப்போது அவர்கள் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது…

சட்டென கார் டயர் பன்ச்சராகி நின்றதுமே அவனுக்கு பொறி தட்ட, பின்னால் பார்வையை ஓட்டியவனுக்கு காளி ஆட்கள் தென்பட, முதலில் அவன் மூளை உணர்த்திய சேதி, அந்த காரிலிருந்து இறங்க வேண்டும் என்பது தான்.

கிட்டத்தட்ட பத்து பேர் கொண்ட கொலைஞர்கள் வெகு சுலபமாக அந்த காரை சூழ்ந்து அவர்களை தாக்கி கொன்றுவிட முடியும் என்பது, அவனுக்கு யோசிக்க தேவையின்றி நன்றாகவே தெரிந்திருந்தது.

வேணியின் கைப்பிடித்து ஓடும்போதே அந்த பாதையை அலசியவனுக்கு, அருகிலிருந்த பீட்டர் ஏரியாவும், இந்த நேரத்தில் எப்போதும் அவன் மைதானத்தில் இருப்பதும் சட்டென‌ நினைவு வர, அந்த மைதானத்தை குறிவைத்து தான் அவன் ஓடிவந்திருந்தான்.

ஓட்டத்தின் நடுவே செல்பேசியை அழுத்தி, லெஃப்ட்டுக்கு தகவல் சொல்லிய பின்பு‌ இன்னும் நம்பிக்கையாக ஓடினான்.

ஆம். அவனுக்கு இப்போது அவர்களிடம் சிக்காமல் தப்பித்து ஓடியாக வேண்டும். இதே அவன் மட்டும் தனியாளாக மாட்டியிருந்தால், எதுவானாலும் பார்த்து விடலாம் என்று துணிந்து அங்கேயே நின்று அவர்களிடம் மோதி இருப்பான். ஆனால் இப்போது உடன் வேணியை வைத்துக்கொண்டு அவனால் ரிஸ்க் எடுக்க முடியாது என்று ஓட்டத்தையே பிடித்தான்.

பாண்டி போட்டதெல்லாம் வெறும் மனகணக்கு தான். ஒருவேளை அந்த மைதானத்தில் இந்த நேரத்தில் பீட்டரும் அவன் ஆட்களும் இல்லாமலிருந்தால், அவன் கணக்கு வெகுவாக சொதப்பி இருக்கும். சொன்ன நேரத்திற்கு லெஃப்ட் தன் ஆட்களோடு வராமல் போயிருந்தாலும், அவனே களத்தில் தனித்துப் போராட வேண்டிய நிலையில் நின்றிருப்பான்.

தனித்த போராட்டம் அவனுக்கு புதிதில்லை என்றாலும், தன்னவளுக்கென்று வாக்குக்கொடுத்த தன் உயிரை எங்கும் பணையம் வைக்க அவன் தயாராகயில்லை. போர்களத்தில் வேண்டுமானால் உயிரை விட, வெற்றி முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் இது வாழ்க்கைகளம்… வெற்றி பெறுவதையும் விட தற்காப்பு அவசியமாகிறது.

வாழ நினைப்பவன் யாரும் போர்களத்தை நாட மாட்டான்! காதல்களத்தில் களித்திருக்க விழைபவன் யாரும் கொலைக்களத்தில் கத்தி வீசி நிற்க மாட்டான். பாண்டியும் அங்கே ஆட்டி வைப்பவனாக மட்டுமே இருந்தான்! இருக்கின்றான்! இருப்பான்!

சில நிமிடங்களில், காளியின் ஆட்கள் குத்துயிராக தரையில் கிடந்தனர். பீட்டரும் லெஃப்டும் கிங்பாண்டியிடம் வந்து நின்றனர்.

“இவனுங்கள இன்னா பண்ணிக்கிறது கிங்கு?” லெஃப்ட் வினவ,

“ஒர்த்தனையும் வுடாத லெஃப்ட்டு, அல்லாரையும் அள்ளி போட்டுக்குனு சீக்கிரம் கிளம்பிக்க, போலீஸ் மோப்பம் புட்ச்சு வந்துக்க போவுது, சீக்ரம்” கிங்கின் உத்தரவில், அடுத்த பத்து நிமிடங்களில் நாய் பிடிக்கும் வண்டியில், காளியின் ஆட்களை தூக்கி போட்டு சென்றனர்.

“தேங்க்ஸ் பீட்டரு” கிங் பாண்டி அவன் தோள் தட்டி நன்றி சொல்ல,

“அந்த கர்மாந்தத்த நீயே வச்சிக்க கிங்கு, பேமிலி மேன் ஆயிக்கின, இனிமேலாவது உஷாரா இர்ந்துக்கோ” பீட்டர் பயந்திருந்த வேணியை பார்த்து சொல்ல, பாண்டி ஒரு தலையசைப்போடு அங்கிருந்து விடைபெற்றான்.

“சாரி கிங்கு” காரில் ஏறியவுடன் லெஃப்ட் மன்னிப்பு கேட்கவும், பாண்டியின் முகத்தில் அனல் பறந்தது.

“உன் சாரிய தூக்கி குப்பைல கொட்டுடா, நான் உனுக்கு போன் பண்ணிக்கின நேரத்துக்கு வர சொல்லிக்கினா, ஆடி அசஞ்சு அரை மணிநேரம் கயிச்சு வந்து நின்னு போஸ் குட்த்துக்கீறிங்க.” பாண்டி திட்டை காரில் இருந்தவர்கள் அமைதியாகவே வாங்கிக் கொண்டனர்.

“நீங்க எப்ப ஃபோன்‌ பண்ணீங்க?” வேணி இப்போதுதான் வாய் திறந்தாள்.

“கார வுட்டு இறங்கின‌ உட்ன இந்த பக்கிக்களுக்கு தான் சொல்லிக்கினே, அப்பால தான் பக்கத்துல பீட்டர்‌ ஏரியா இர்க்கறது நினப்பு வச்சு அவனாண்ட ஓடிக்கின” அவள் கேள்விக்கும் பாண்டி பதில் கடுப்பாகத் தான் வந்தது.

“பீட்டர்? அது யாரு உங்க ரௌடி பிரண்டா?” என்றவளை நெற்றி சுருக்கி பார்த்தவன்,

“அதுக்குள்ள பயமல்லாம் போயிக்கிச்சாடீ உனுக்கு, கொஸ்டீன் மேல கொஸ்டீனா கேட்டுக்குற? பீட்டரு அந்த ஏரியா ரௌடி அவ்ளோ தான் எனுக்கு ப்ரண்டு அல்லாம் கிடயாது. இன்னிக்கு அவன்‌ நம்மள காப்பாத்தி இருக்கானா, நாள பின்ன அவனுக்காக நான் ஏதாது செஞ்சு தந்துக்கனும் அதான் டீலு.” பாண்டி படபடவென சொன்னதில் வேணிக்கு புரிந்தும் புரியாத குழப்பநிலை.

ஆனாலும் அதற்குமேல் அங்கு‌ யாரும் ஏதும் பேசவில்லை. கிங்பாண்டி தீவிர யோசனையில் இருப்பது அவன்‌‌ முகபாவனையில் தெரிந்தது.

“இன்னா பிளான் ண்ணா?” ரைட் வினவ,

நிமிர்ந்தவன், “நாங்க ஓடி வந்துக்கனப்ப, வழில நிறைய பக்கிங்க வீடியோ எட்த்துக்குனாங்கடா, அந்த வீடியோ எனுக்கு வோணும், பீட்டர் கிட்ட சொல்லி வாங்கி அனுப்ப சொல்லு ரைட்டு.” எனவும்,

“சரி ண்ணே” என்று அவன்‌ கேட்டதை பீட்டருக்கு தகவல் சொன்னான்.

“இன்னா கிங்கு?”

“எங்கியோ இடிக்கிதுடா… நான் இப்ப தனியா வெளிய போயிக்கினது எப்பிடி கரைக்டா காளிக்கு தெரிஞ்சிகிச்சு?”

முதலில் இருந்தே பாண்டிக்குள் இந்த கேள்வி தான் நெருடிக் கொண்டிருந்தது. தினமும் காலை, மாலையில் மட்டுமே கதிரை பள்ளியிலும், வேணியை கல்லூரியிலும் விட்டு வர அந்த பாதையில் செல்வது வழக்கம்.

இன்று, காதல் கண்கட்ட வேணியை இப்போதே பார்த்தாக வேண்டும் என்ற உந்துதலில், உடனே கிளம்பி இருந்தான் பாண்டி, கிட்டத்தட்ட மூன்று மணியளவில். எந்த முன்யோசனையும் இன்றி, அவனே அவளை நாடிச் சென்றது அது. அவன் போகும் இடம் பற்றி கூட யாருக்கும் வாய் வார்த்தையாக கூட சொல்லாமல் சென்றிருந்தான். அப்படியிருக்க, எப்படி அத்தனை சரியாக தன் காருக்கு டாட் வைக்க முடிந்தது?

அந்த நிகழ்வின் முன்னும் பின்னும் அலசி தீவிரமாக யோசித்துக் கொண்டிந்தவனின் கரம் கோர்த்து, அவன் தோள் சாய்ந்து ஒடுங்கி இருந்தவளை, பாண்டி சற்றும் கண்டு கொண்டது போலில்லை.

அந்த காரின் முன், பின் இருக்கைகளை நிறைத்து ஐந்தாறு அடியாட்கள் அமர்ந்திருக்க, நடு இருக்கையில் இவர்கள் மட்டும். அவர்களின் பார்வை மொத்தமும் கிங்பாண்டி மேல் தான் படிந்திருந்தது.

தங்களை சுற்றிலும் அத்தனை பேர் இருந்தும், வேணி சற்றும் தயக்கமின்றி பாண்டியை ஒட்டி தான் அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் உயிர் மீண்டு வந்திருக்க, அந்த நிமிடம் அவளுள் ஏற்பட்ட பயம் இன்னும் அவளுக்கு விலகுவதாக இல்லை. நடந்த அசம்பாவிதத்தின் தாக்கம் அவளை வெகுவாக தாக்கியிருந்தது.

பிறந்ததில் இருந்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தவளுக்கு, இந்த கொலைவெறி தாக்குதல்கள் எல்லாம்… அவள் நேற்று வரை சினிமாவில் பார்த்தது மட்டுமே. இப்போது… அவள் பார்வை உயர்ந்து பாண்டியின் முகத்தை தவிப்பாக பார்த்தது.

தன் பார்வையையோ தவிப்பையோ உணர்ந்து கொள்ளும் நிலையில் அவனில்லை என்பது அவளுக்கு புரிய, சற்றுமுன் தன்மேல் பித்தேறி அவன் பிதற்றியது நினைவு வந்து, அவன் தோளோடு முகத்தை அழுத்தி இன்னும் குறையாத பதற்றத்தைக் குறைத்துக்கொள்ள முயன்றாள்.

வேணியின் தவிப்பை, கலக்கத்தை கவனிக்கும் நிலையில் இல்லை பாண்டி, அல்லது கவனித்தும் அதை கண்டுகொள்ளாமல் தன் யோசனையிலிருந்து வெளிவந்தவன், “வேற சான்ஸ் இல்ல லெஃப்ட்டு, நம்மாள்ல ஒருத்தன் போட்டுக்கொட்த்துக்காம அவனுங்க இம்மா பிளான் பண்ணிர்ந்துக்க முடிஞ்சிக்காது.” பாண்டி இவ்வாறு சொன்னதும் அங்கிருந்த அனைத்து முகங்களிலும் அதிர்ச்சி வெளிப்பட்டது.

“நம்ம பசங்க யாரும் தப்பு பண்ணிக்க மாட்டானுங்கண்ணே, உசுர வுட்டாலும் உன்ன போட்டுக்கொடுத்துக்க மாட்டானுங்கண்ணே” ரைட் உறுதியாக மறுக்கவும்,

“அட போடா, ஒரு கட்டு காசுக்கு மேல இன்னொரு கட்டு சேத்து கொட்த்துக்குனா நீயே என் கயித்துல கத்திய வச்சுக்குவ… சொம்மா டைலாக்க வுட்டுக்குனு” பாண்டி சட்டென பேசி விட்டதில், ரைட்டின் கண்களும் முகமும் கலங்கி விட, தலையைக் கவிழ்ந்து கொண்டான்.

“அட ச்சீ, காட்டு பன்னி மாறி இர்ந்துக்குனு கண்ணுல பைப் தண்ணிய தொறந்து வுட்டுக்குறான். இப்ப என்னடா உனுக்கு.” பாண்டியின் அதட்டலில்,

“போண்ணே, பிஸ்கோத்து காசுக்காக உன்ன கொலை பண்ணிக்குவேன்னு சொல்லிக்கின இல்லண்ணே, என்ன அம்மாம் மட்டமா நென்ச்சிகினியா? ஆனா நான் உன்ன கொலசாமியா நென்ச்சினு கீறேன் தெரியுமா?” ரைட் இப்படி அழுகையோடு பேசுவதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

அந்த முரட்டு ரௌடி பயலின் கண்ணீர் முகம், பார்த்ததும் சிரிப்பை கூட வரவழைக்க, “டேய், நீ இப்பிடி அயிது எனுக்கு சிரிப்பு மூட்டிக்காத, மெய்யாலுமே உனுக்கு கொலசாமியா மாறி உன்ன கொன்னுடுவேன்…” பாண்டியின் இறுகிய குரலில், ரைட் வாய் தன்னால் அடைத்துக் கொண்டது.

“இங்க இன்னா சீரியஸ் மேட்டர் போயிக்கினு கீது, நீ என்னடானா சீரியல் ஓட்டினு கீற. உனுக்கு தனியா கச்சேரி வச்சுகீறேன்வா.” பாண்டியிடம் அத்தனை விறைப்பையும் கோபத்தையும் கண்டு பயந்து வேணியும் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

“நம்மாள்ல எவனோ டுமாங்கோலி கீறான், யாருன்னு சீக்கிரம் கண்டுக்கல, கஷ்டம்டா” பற்களைக் கடித்துச் சொன்ன‌ கிங்பாண்டி, “மணி… நான் வந்துக்குனப்போ குடோன்ல எவன்லாம் இர்ந்தான் சொல்லு.” என்றதும், மணி நான்கைந்து பேரை வேகமாக சொல்லிவிட்டு, யோசித்து இன்னும் நான்கு பேரை ஒப்பித்தான்.

அவன் சொன்னதில் மருது பேரும் இருப்பதைக் கவனித்த வேணி, “அது ஏன் மருதா இருக்கக் கூடாது?” என்றதும், நெற்றி சுருக்கி அவளிடம் திரும்பியவன், “அதின்னா மருத மட்டும் சொல்லிகிற? அவன்மேல உனுக்கு இன்னா டவுட்டு?”

பாண்டி விசாரணை போல கேட்டதில், “என்னவோ அவன் பார்வையே எனக்கு சரியா பட்டதில்ல. ஆளும் நம்பற விதமா இல்ல.” வேணி நேரடியாகவே பதில் சொன்னாள்.

“மருது குயந்த பையன் அண்ணீ, சொம்மா எடுபுடி வேலை பாத்துக்குனு சுத்திகினு கீறான். அவன் எப்புடீ?” தயங்கி கேட்ட லெஃப்ட்டை பார்த்தவள்,

“நான் உங்கள்ல யாரையும் தப்பா சொல்லலையே, அவன் மட்டும் எனக்கு சரியாபடல அவ்வளோதான்.” வேணி அத்தோடு தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

‘கிங்கண்ணே… இன்னா உனுக்கு நீயே சிர்ச்சுனு கீறே?’ அவன் வெளியேறும்போது மருது கேலியாக கேட்டது நினைவு வர, “லெஃப்ட்டு, மருத லாக் பண்ணி வெக்க சொல்லு, நான் வெளில கிளம்பிக்கனப்போ அவன் தான் என்னாண்ட பேச்சு கொட்த்துக்குனான்.” பாண்டி உத்தரவிடவும், கார் வீட்டின் முன் நிற்கவும் சரியாக இருந்தது.

வேணியுடன் இறங்கி வேகமாக வீட்டுக்குள் வந்தவன், அங்கிருந்த கௌரியிடம், “அத்த, இவ பயந்துனுகீறா, துணைக்கு இருங்க” என்றவன், “தாத்தா நீயும் வெளில போயிக்காம வூட்லயே இருந்துக்க.” பாண்டியின் நேரடி பேச்சில் பெரியவர்கள் திகைத்து நின்றனர்.

“நீங்க எங்க போறீங்க?” வேணி பதறி கேட்க, “வேல இருக்குடீ வந்துக்குவேன், நீ மிண்டுக்காத, கதிர் பத்திரமா வூடு வந்துக்குவான் அவன‌ பாத்துக்கோ, டைமில்ல கிளம்பறேன்” அவசரமாக சென்றவனை, தடுக்க முடியாமல் விதிர்த்து பார்த்து நின்றாள் வேணி.

***

காதல் களமாடும்…