காதல்களம் 26 final

காதல்களம் 26 final (1)

பாண்டி வீடு திரும்பிட விடியற்காலை மூன்று மணியாகி இருந்தது. மிகவும் சோர்ந்து அறைக்குள் நுழைந்தவனை, வெறிச்சோடிய அறையே வரவேற்க, ஏமாற்றமாக உணர்ந்தவன் திரும்பி தன் அறைக்கு சென்று பார்க்க, அங்கும் யாரும் இருக்கவில்லை.

அறையில் தூங்காமல் வேணியும் கதிரும் எங்கே போயிருப்பார்கள்? என்ற கேள்வியோடு கீழே வந்தவன், கௌரி அறையைப் பார்க்க, கதிர் பாட்டியுடன் உறங்கி இருப்பது தெரிந்தது.

‘புள்ளய இங்க வுட்டு இந்த ராங்கி எங்க போய் தொலஞ்சிகினா?’ பற்களை நறநறத்தவனது பார்வை பூஜையறையில் நிலைக்க, யோசனையுடன் அங்கே நடந்தான்.

பூஜை அறையில் அப்போதும் தீபம் ஒளிர்ந்திருக்க, அதன் முன்பு எதையோ முணுமுணுத்தபடி உட்கார்ந்திருந்த வேணியை கவனித்தவனுக்கு, என்னவோ போலானது.

சிறு தயக்கத்துடன் அவள் எதிரில் வந்தமர்ந்தவனுக்கு, “காக்க காக்க கனகவேல் காக்க…” அவளின் முணுமுணுப்பு திக்கல் மொழியாய் விட்டு விட்டு கேட்டது.

“ஏ வாணி” பாண்டி அழைத்தும் கூட அவள் விழிகள் திறக்காமல் இருக்க, “ஏ ராங்கி, என்ன பார்ரீ” அவள் தோள் பற்றி உலுக்கினான்.

அவன் உலுக்கலில் விதிர்த்து கண் திறந்தவள், பாண்டியை பரிதவித்து பார்த்தாள். “எப்ப வந்தீங்க? உங்களுக்கு ஒன்னுமில்லயே?” அவன் முகம், கைகளைத் தொட்டு பார்த்தவள், “ஏன் என் ஃபோன்கால் எடுக்கவே இல்ல…” என்றவள் குரல் உடைந்திருந்தது.

பாண்டி அவளைத்தான் பார்த்திருந்தான். அவளிடம் தனக்கான பரிதவிப்பையும் கலக்கத்தையும் பார்த்து, அவன் வாயடைத்து போயிருந்தான்.

வேணிக்கு தன்மீது அத்தனை பிடித்தமில்லை என்று அவனுக்கு முன்பே தெரியும் தான். அவளுக்கு தன்மீதிருக்கும் கோபத்தையும் வெறுப்பையும் கூட நன்றாக அறிந்திருந்தவன், அவள் கதிர் மேல் வைத்திருந்த அத்தனை பாசத்திற்காக மட்டுமே வம்படியாக மணந்திருந்தான்.

அவளது கோபத்தைப் பற்றியோ வெறுப்பை பற்றியோ அவன் பெரிதாக கவலைப்படவில்லை. அவனுக்கு அவள் மனைவியாக இருந்தால் போதும், அவள் தன்னை கணவனாக ஏற்றுக்கொண்டால் போதும், அவ்வளவுதான் பாண்டி அவளிடம் எதிர்பார்த்தது. 

முதலில் முரண்டு பிடித்தாலும், இப்போதெல்லாம் கிட்டத்தட்ட அவன் எதிர்பார்ப்பை வேணி நிறைவேற்றி இருந்தாள். அதிலேயே அவன் மனதில் நிறைந்திருந்தாள்.

ஆனால், இதை என்னவென்று சொல்வது? அவனுக்காக முழு இரவும் தூக்கம் கெட்டு,‌ தனக்காக பிரார்த்தனை செய்து அவள் அமர்ந்திருக்கும் நிலை, அவள் தனக்காக எவ்வளவு பயந்திருக்கிறாள் என்பதை அவனுக்கு தெளிவாகவே உணர்த்தியது.

“ரொம்ப பயந்துகினியாடீ? அதுகாண்டி விடிய விடியவா இப்பிடி உன் சாமியாண்ட குந்திக்கினு கிடப்ப! எனுக்கு ஒன்னியும் ஆகல. பாரு உன் முன்னால முயுசா வந்துகீறேன்.” பாண்டி சொல்ல, அத்தனை நேரம் பரிதவிப்பிலிருந்த அவள் முகத்தில் நிம்மதி பரவுவதை அவனால் உணர முடிந்தது.

எழுந்து கொண்டவன், அவளுக்கும் எழ கை கொடுக்க, அவன் கைப்பற்றி எழ முயன்றவளின் கால்கள் மரத்துப்போய் வலியெடுத்தது. முகம் சுருங்கி அப்படியே அமர்ந்து விட்டாள்.

“கால் வலிக்குது மரத்து போச்சு போலங்க” என்றாள் பாவமாய்.

பாண்டி குனிந்து அவளை இரு கைகளாலும் அள்ளி தூக்கிக்கொள்ள, “அய்யோ! சாமி முன்னாடி போய் என்ன இது? முதல்ல என்னை கீழ விடுங்க, நானே வரேன்” வேணி பதறினாள்.

“உன் சாமி கோச்சிக்கிற மாறி இப்ப நான் இன்னா செஞ்சிகினேன்னு பதறிக்கிற நீ?” என்றவன் முறைப்பாக கேட்க, 

“முருகா! உங்ககூட… என்னால முடியல. இப்ப என்னை இறக்கி விட போறீங்களா இல்லயா?” வேணியின் அதட்டல் அவனிடம் வேலை செய்தது. முகத்தை சொத்தென்று வைத்துக்கொண்டு அவளை கீழே நிற்க வைத்தான்.

பூஜை மேடையைப் பிடித்துக்கொண்டு நின்றவள், கண்கள் மூடி கைக்கூப்பி வணங்கிவிட்டு, திருநீறு எடுத்து பயபக்தியுடன் பாண்டியின் நெற்றியில் பூசிவிட, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“ஏ ஓவரா பண்றடீ” பாண்டி நொந்தபடி கடுகடுக்க,

“உங்களுக்கென்ன நீங்க சுலபமா பேசிடுவீங்க, இவ்வளோ நேரம் நான் பயந்து தவிச்சது எனக்கு தான‌ தெரியும்.” என்று அவனை கடிந்தவள் பூஜையறையை விட்டு மெல்ல நடந்து வெளியே வந்ததும், அவன் முன்பு கைகளை நீட்டினாள், தன்னை தூக்கிக் கொள்ளும்படி.

அவள் தன்னை நோக்கி அப்படி கைவிரித்து நின்றதில் சிரித்து விட்டவன், மறுபேச்சு பேசாமல் அவளை ஏந்திக்கொண்டு தங்கள் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்த்தினான்.

“நைட் சாப்பிட்டீங்களா இல்லையா?” அவன் சோர்ந்த முகத்தையும், சிவந்திருந்த கண்களையும் பார்த்து வேணி வினவ, இல்லையென்று மறுப்பாக தலையசைத்தான்.

“அப்ப இருங்க, நான் ஏதாவது சூடா செஞ்சு கொண்டு வரேன்.” என்று வேகமாக எழுந்தவளின் தோள்பற்றி அமர்த்தியவன், “வரும்போது டீ குடிச்சிட்டு தான் வந்துகினேன்டீ, இப்ப எனுக்கு பசியல்லாம் இல்ல. செம டயர்ட், தூங்கினா போதும்னு கீது.” என்றபடி அவளை அணைத்து அவள் மார்பில் முகம் சாய்த்தவன், சில நொடிகளில் உடல் தளர்ந்து உறங்கியும் போயிருந்தான்.

நொடிகளில் அவன் உறக்கத்தில் ஆழ்ந்ததிலிருந்தே வேணிக்கு புரிந்தது, அவன் எவ்வளவு களைத்து போயிருக்கிறான் என்று. அவளுக்கு அவனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தான்? ஏன் அவள் அழைப்பைக் கூட ஏற்கவில்லை? காளியின் அடியாட்களை என்ன செய்தான்? காளியை என்ன செய்தான்? என்று அத்தனை கேள்விகளும் அவளை குடைய, உறங்குபவனை தொந்தரவு செய்ய மனமின்றி, அவளும் மெல்ல மெல்ல உறக்கத்தை தழுவியிருந்தாள்.

வேணியின் அத்தனை கேள்விகளுக்கும் மறுநாள் காலையே பதில் கிடைத்து விட்டது.

 

பாண்டி கண்விழிக்கும்போது, அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த வேணி‌ மடிகணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. “காலங்காத்தால லேப்டாப்ல என்னடி நோண்டினு கீற? உன் சாமிய தான வேண்டினு இர்ப்ப” கலையாத தூக்கத்தோடே, பாண்டி அவளிடம் பேச்சு கொடுக்கவும்,

அவனிடம் திரும்பியவள், “ம்ம் பத்து மணிக்கு மேல ஆச்சு, உங்களுக்கு இதான் காலங்காத்தாலயா? எழுந்து குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவீங்க” என்றவள், மடிகணினியை மூடிவிட்டு எழுந்தாள்.

“எப்ப பாரு குளிச்சிக்கனு சொல்லிக்கீனே கீற போடீ” காலையிலேயே பாண்டி வம்பை விதைக்க, அவன் முன்னால் வேணி முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளின் அந்த முறைப்புக்கு ஒரு இளிப்பை உதிர்த்தவன், “ஆமா, டைமாயிகிச்சே நீ இன்னியும் காலேஜ் போகல?” அவன் கேட்டபடி எழ, “இல்ல” ஒற்றை வார்த்தையாக அவள் பதில் விழுந்தது.

“ஐ ஐசலக்கா! இன்னிக்கு நீ லீவா, அப்ப நைட் வுட்டத அல்லாம் இப்ப பகல்ல கரேக்ட் பண்ணிக்கலாம்.” கண்கள் மின்ன கூறியவனை வேணி இன்னுமே முறைத்து வைத்தாள்.

“இன்னிக்கு என்னால காலேஜ் வரமுடியாதுன்னு நான் லீவ் மட்டும் தான் கேட்டேன். ஆனா அந்த வொய்ஸ் பிரிண்சி, நான் ஓவரா லீவ் எடுத்துட்டேன்னு ஓவரா கத்தி விட்டுடுச்சு. எனக்கு ரோஷம் வந்து, ஜாப் ரிசைன் பண்றேன்னு சொல்லிட்டேன்.” வேணி அதே ரோஷமாக சொல்ல, பாண்டியின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசமானது.

“இப்ப லேப்டாப்ல ரிசைனிங் லெட்டர் தான் அனுப்பிகினியா?” அவன் கொண்டாட்டமாக கேட்க, ஆமாம் என்று தலையசைத்தவளைத் துள்ளி எழுந்து தூக்கி காற்றில் சுற்றினான்.

அவன் வேகத்தில் வேணிக்கு தலையோடு சேர்த்து பூமியும் சுழன்றடித்தது. “பாண்டி, தலை சுத்துது நிறுத்து போதும்…” அவள் கத்தவும் நிறுத்தி அவளை பிடித்து கொண்டவன், “வேலைய வுட சொல்லி நான் சொன்னா நீ சண்டைக்கு வந்துக்குவியோன்னு பயந்துக்குனு இர்ந்தேன்டீ. இப்ப நீயா வேலய வுட்டுட்ட. மீ சோ ஹேப்பீடீ…” அவன் கத்தலில் வேணி காதை பொத்திக் கொண்டாள்.

“நான் வேலைக்கி போறதுல உங்களுக்கு என்ன கஷ்டம் மிஸ்டர்?” வேணி இடையில் கையூன்றி அவனை முறைத்து கேட்க,

அவள் கை சந்தில் தன் கரம் நுழைத்து அவளிடை வளைத்து தன்னிடம் இழுத்துக் கொண்டவன், “நம்ம தொழிலுக்கே கணக்கல்லாம் ஆள் வச்சு தான் பாத்துக்கீறேன். அத்தயல்லாம் செக் பண்ணிக்கிறது எனுக்கு பேஜாரு. அதான் உன்ன பாத்துக்க சொல்லிக்கலாம்னு நென்ச்சிக்கினே…” பாண்டி அவள் நெற்றி முட்டி சொல்ல, “ஓ… என்ன தொழில்?” வேணி புரியாமல் கேட்டாள்.

வெளியே பெரிதாக சத்தம் கேட்க, பேச்சை விடுத்து இருவரும் வெளிவந்தனர். கதிர்வேல் தான் ஹோம் தியேட்டரை அலறவிட்டுக் கொண்டிருந்தான். 

“கதிர கூட ஸ்கூலு அனுப்பிக்கலயா?” பாண்டி வேணியை கண்டனமாக கேட்க,

“அது… எனக்கு பயமா இருந்தது. அதான் கதிருக்கும் லீவ் போட்டுட்டேன்” அவள் கவலையாகச் சொன்னாள்.

“இனிமே அந்த காளியால நமக்கு எந்த பிராப்ளமும் வந்துக்காது, நீ பயந்துக்காத…” பாண்டி அவளை சமாதானம் செய்யும்போதே,

‘இரட்டை கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்திருந்த கஞ்சா காளி என்கிற பிரபல ரௌடி காளி, நேற்றிரவு போலிஸிடமிருந்து தப்பிக்க அதி வேகமாக காரோட்டி சென்று கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் படுகாயமடைந்த காளியை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி காளி தற்போது உயிரிழந்தார் என…’

கதிர் ரிமோட்டில் சேனல் மாற்றும்போது, முக்கிய செய்தி வந்திருக்க, அதைப் கேட்ட வேணி, பாண்டியை மிரட்சியாகப் பார்த்தாள்.

“இந்த நியூஸ்… நீங்க தான் அந்த காளிய…” வேணி பயத்துடனே திக்கலாக கேட்க,

“காளிய போலீஸாண்ட மாட்டி வுட்டது மட்டும் தான் நானு. அவன் சாவுக்கு நான் காரணமில்ல.” வேணியின் பயம் புரிந்து பாண்டி அவளிடம் அழுத்தமாக பதில் தர, அவளுக்கு சற்று நிம்மதியானாலும் மனதின்‌ படபடப்பு அடங்கிவில்லை.

“கதிரு… டிவிய ஆஃப் பண்ணிட்டு போய் விளாடு” தொலைக்காட்சி சத்தம் தாங்காமல் பாண்டி மகனை அதட்ட,

அவன் மகனோ, “போப்பா” என்றுவிட்டு இன்னும் குதியாட்டம் போட்டான்.

“டேய், இப்ப நீ டீவிய ஆஃப் பண்ணிக்கல, உன்ன ஸ்கூல்ல போய் தள்ளிட்டு வந்துக்குவேன்.” பாண்டியின் இந்த மிரட்டல் கதிரிடம் வேலை செய்ய, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, உர்ரென்று‌ பாண்டியை முறைத்துவிட்டு, சைக்கிள் ஓட்ட சென்றுவிட்டான்.

“என் புள்ளைக்கும் உன்ன மாறியே முற்ச்சிக்க கத்துகொட்த்துகீறடீ” பாண்டி மனைவியிடம் அங்கலாய்த்து விட்டு குளிக்க நகர்ந்தான்.

பாண்டிக்கு உணவு பரிமாறும் போது கூட வேணியின் முகம்‌ தெளிந்திருக்கவில்லை. சொல்லத் தெரியாத பதட்டமும் கவலையும் அவளை கலவரப்படுத்திக் கொண்டிருந்தது. 

அவனுக்கும் அவள் நிலை புரிந்தது போல, உண்டு முடித்ததும் லெஃப்ட்டுக்கு அழைத்து, அங்கே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டவன், வேணியை தனியே மொட்டை மாடிக்கு அழைத்து வந்தான்.

“இப்ப என்னாயிக்கிச்சுனு மூஞ்ச மூஞ்சூறு மாறி வச்சிக்கினு கீற?” பாண்டி கேட்க,

“நேத்து என்னாச்சுன்னு முதல்ல சொல்லுங்க, அந்த காளியோட ஆளுங்கள குத்துயிரா தான் கொண்டு போனீங்க, அவங்களுக்கு என்னாகுமோனு நான் பயந்துட்டு இருந்தேன். இப்ப என்னன்னா காளி செத்துட்டான்னு நியூஸ் வருது… எங்கிட்ட எதையும் மறைக்காம சொல்லிடுங்க, நீங்க எதுவும் பண்ணல இல்ல…” மொட்டை மாடியின் மொட்டை வெயிலுக்கு போட்டியாக, அவளும் அவனை காய்த்தெடுத்தாள்.

“ஏ கட்டுன புருசன கொஞ்சமாவது நம்புடீ.” என்று நொந்தவன், “காளியண்ணே ஜாமீன்ல தான் வெளிய வந்துகிச்சு, அது தப்பு செய்யுதுன்னு சின்ன துப்பு கிட்ச்சிகினாலும் அதோட ஜாமீன் கேன்சலாயிக்கும். அதால தான் என்னாண்ட நேரா மோதிக்காம பூச்சி காட்டிக்கினு இருந்துச்சு.

நேத்து நம்மள தொரத்தினு வந்தவனுங்க காளியோட ஆளுங்கனு சாட்சி சொல்ல வச்சாச்சி, அந்த நாதாரிங்களுக்கு ஒன்னியும் ஆகல, இப்ப சொகுசா ஹாஸ்பிடல்ல படுத்துக்குனு கிடக்கானுங்க.

நம்மள கத்தியும் கட்டையும் வச்சிக்குனு தொறத்திக்குனு சீன் போட்டானுங்க இல்ல, அந்த வீடியோவயும் போலீஸாண்ட ஒப்படைச்சாச்சு. அத்தல்லாம் வச்சு தான் ராத்திரியோட ராத்திரியா காளிய புடிக்க போலீஸ் போச்சு, அது போலீஸ்ல மாட்டிக்க கூடாதுன்னு தப்பிச்சு போயி ஆக்ஸிடென்ட் ஆயிகிச்சு.” பாண்டி விளக்கமாக சொல்லியும் வேணி கைகள் கட்டி அவனை நம்பாமல் தான் பார்த்து நின்றாள்.

“அடியே, நம்பி தொலடீ. காளி செத்ததுக்கும் எனுக்கும் லிங்க் இல்ல.” பாண்டி சற்று கோபமாக அழுத்திச் சொல்ல,

“சரி, அந்த மருத என்ன பண்ணீங்க?” வேணி கேட்டாள்.

“அவன வச்சு ஊறுகாயா போட்டுக்க முடிஞ்சுக்கும், நாலு தட்டு தட்டி தொரத்தி வுட்டாச்சு” சாதாரணமாக சொன்னான்.

அவனுக்கு இதெல்லாம் சாதாரணம் தான். ஆனால் இவளுக்கு தான் இதெல்லாமே அசாதாரணமாக தோன்றி, ஒருவித பதற்றத்தை தந்து கொண்டிருந்தது.

“இனிமே இதுமாதிரி பிரச்சனை வராது இல்ல? உங்கள கொல பண்ண யாரும் தொரத்த மாட்டாங்களே?” கலங்கி கேட்டவளை, தன்னிடம் இழுத்து அமர்த்திக் கொண்டவன்,

“அதல்லாம் இனிமே யாரும் வரமாட்டாங்கடீ, நீ பயந்துக்காத. காளியண்ணனுக்கு எதிரா நான் போலீஸ்ல போட்டு கொட்த்துக்கினேன்னு கோபம் தான் அதுக்கு. அத்தோட அன்னிக்கு உன் முன்னால ஒரு கேக்மாரி மேல ஆசிட் அடிச்சு வுட்டேன் இல்ல, அவனோட அப்பனுக்கு என்மேல இர்ந்துக்குன காண்டுல, காளியாண்ட கூட்டு சேந்துனு இத்தல்லாம் பண்ணிகீறானுங்க. நைட்டு அவனையும் செமத்தையா கவனிச்சாச்சு. இனிமே என் பக்கம் அவன் திரும்பிக்க மாட்டான்.

நாம எவன பத்தியும் எதை பத்தியும் இனிமே டென்ஷனாயிக்க தேவயில்ல. இப்பவே தேவயில்லாததல்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ணிக்கினடீ…” என்று கிறங்கியவன் அவள் மூக்கோடு மூக்குரசி தேனிதழை நாட, அவள் கரத்தால் அவன் வாய்மூடி தடுத்தாள்.

“ஏ இன்னாடீ?” பாண்டி காட்டமாக கேட்க, அவனிடம் மறுப்பாக தலையசைத்தவள், கலங்கிய கண்களோடு அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.

“எனுக்கு ஒன்னில்லன்னு சொல்லிக்கிறேன் இல்லடீ, நீ இன்னியும் கவலைப்பட்டுக்குனா இன்னா சொல்லிக்கிறது? உன்னாண்ட எனுக்கு புடிச்சதே உன் மொறப்பும் தகிரமும் தான்டி” என்று அவள் முதுகில் தட்டிச் சொன்னவன், “நேத்து கத்தியும் கட்டையுமா அத்தினி பேரு தொரத்திக்கினு வந்துக்கினும், இன்னா அசால்டா என்ன வாறிக்கினு வந்துக்கின நீ!” சிறு சிரிப்புடன் அவளை மெச்சிக் கொண்டான்.

அவன் கேலிக்கு அவன் நெஞ்சிலேயே ஓரடி வைத்தவள், “எதையுமே சீரியஸா எடுத்துக்காத, உடம்பு பூரா கொழுப்பேறி கிடக்கு உனக்கு” வேணி அவனிடமிருந்து விலகாமலே திட்ட,

“அப்பப்ப வாங்க போங்கனு மரியாத கொட்த்துக்கிற, திடீர்னு வாடா போடானு மானத்த வாங்கிக்ற, என்னடீ டிசைன் நீ.” அவன் விரல் அவளிடையில் குறுகுறுப்பு மூட்ட, துள்ளி விலகி கொண்டாள்.

“இப்ப உன்கூட ரொமான்ஸ் பண்ற மூட்ல நான் இல்ல, உன் கைய வச்சுட்டு சும்மா இரு.” வேணி அவன் கையை தட்டி விட்டு சொல்ல, “அத்தல்லாம் பத்தி நீயேன்டீ கவலப்பட்டுக்குற, உனுக்கு மூட் வரவச்சிக்க வேண்டியது என் பொறுப்பு” என்று குறும்பு பேசியவனை முறைக்க முயன்று, முகம் வாடிப்போனாள்.

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் பாண்டி… கிருஷ்ணா இறந்ததுக்கு நீதான் காரண்ம்ற கோபத்துல, உன்மேல இருக்க வெறுப்புல… உன்ன பார்க்கும்போது நினைக்கும் போதெல்லாம் உனுக்கு சாபத்துக்கு மேல சாபமா கொடுத்துட்டே‌ இருந்தேன்… நீ நல்லா இருக்க கூடாது… உனக்கு நல்ல சாவே வரக்கூடாதுன்னு… தப்புதப்பா…” என்றவளின் கண்கள் கலங்க தேம்பலோடு பேசினாள்.

“அதனால தான் உனக்கு இவ்வளோ ஆபத்து வருதோனு ரொம்ப பயந்துட்டேன்… வார்த்தைக்கு நினப்புக்கு எல்லாம் பெரிய சக்தி இருக்கு… தப்பித்தவறி நான் முன்ன நினச்சது ஏதாவது நடந்துடுச்சினா… என்னால நினச்சிக்கூட பார்க்க முடியல.”

அழுகையோடு பேசியவளை விழியசைக்காமல் பார்த்திருந்தவன், “ஓ அப்ப அதுக்காண்டி தான் ராத்திரி பூரா உன் சாமியாண்ட வேண்டிக்கினு கிடந்தியா?” என்று கேட்கவும், அவள் மேலும் கீழுமாக தலையசைத்தாள்.

“சாரி பாண்டி…” எதற்கு மன்னிப்பை வேண்டுகிறாள் என்றறியாமலேயே அவன் கரம் பற்றி முகத்தில் புதைத்து மன்னிப்பை வேண்டினாள்.

பாண்டிக்கு அவளின் பயமும் பரிதவிப்பும் புரிந்தது. இப்போது என்ன தேறுதல் சொன்னாலும் பயனில்லை. சில நாட்களில் அவளே தேறி வரட்டும் என்று எண்ணிக்கொண்டவன், “சரி வுடு, போனா போவுதுன்னு உன்ன மன்னிச்சு வுடறேன்.” என்று கெத்தாக சொல்லி எழுந்து நின்றான்.

அவன் கிண்டல் வேணிக்கு ரோஷத்தை உண்டாக்க, “இப்ப என்னத்துக்கு என்னை மன்னிச்சு விட்டதா சொல்ற?” அவள் சீறிக்கொண்டு நிற்க,

“நீ என்னாண்ட சாரி கேட்டியேடீ அதுக்காண்டி தான்” பாண்டி அதக்கிய சிரிப்புடன் விளக்கம் சொன்னான்.

“நான் எதுக்கு சாரி கேட்டேன்னு உனக்கு தெரியுமா?” வேணி மேலும் சீற, இடவலமாக வேகமாக தலையாட்டியவன், “ஏ உனுக்கே அது தெரியாம தான்டீ சாரி கேட்டுக்குன” அவளை வாறிவிட்டு சிரித்து விட்டான். 

வேணி தன்னையே நொந்து கொண்டு அங்கிருந்து வேகமாக கீழே சென்று விட, பாண்டி முகம் முழுக்க படர்ந்த புன்னக்கையுடன் அங்கேயே நின்றிருந்தான். 

அவன் மனநிலை பூரண நிம்மதியை எட்டியிருந்தது. ‘இதுவே போதும்… இதற்கு மேல் வேறேதும் தேவையில்லை’ என்றிருந்து அவனுக்கு. அவனுடைய கரடுமுரடான வாழ்க்கை பாதை இத்துடன் முடிந்து, இனி நேர் பாதையில் அவன் வாழ்க்கை இயல்பாய் பயணிக்கும் என்ற நம்பிக்கை வந்திருந்தது அவனுக்கு.

***