காதல்களம் 4

IMG-20220517-WA0018-920397b6

காதல்களம் 4

 

அடுத்த அரைமணி நேரத்தில், வேணியின் வீட்டின் வெளியே, புயல் வேகத்தில் வந்து நின்றது, கிங் பாண்டியின் ராயல் என்ஃபீல்டு வண்டி. வண்டியை நிறுத்திவிட்டு அதே வேகத்துடன் இறங்கியவன் வீட்டின் உள்ளே வர, வாசல் கதவு திறந்து கிடந்தது. 

 

வாசலைப் பார்த்தபடியே சோர்ந்து அமர்ந்திருந்த வேணியின் தாத்தா, அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றார். பாண்டியின் பார்வை அவரைத் தாண்டி, பாட்டியின் மடியில் தேம்பலோடு படுத்திருந்த கதிரின் மேல் பதிந்தது. 

 

மாலையில் இருந்து வேணியைக் கேட்டு அடம்பிடித்தவன், நேரம் ஆக ஆக பாட்டி, தாத்தாவின் பதற்றத்தைக் கவனித்து, வேணியைக் காணாமல் கத்தி அழ ஆரம்பித்திருந்தான். இப்போது அழுகை குறைந்திருந்தாலும், தேம்பலோடு அவனின் குட்டி கண்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தன.

 

தன் மகனை அப்படி பார்த்ததில், பாண்டியின் முகத்தில் அத்தனை வலி. “கதிரு…!” பிள்ளையை அன்பொழுக அழைத்தான்.

 

அவன் அழைப்பைக் கேட்டு நிமிர்ந்த கௌரி, அதிர்ச்சியாக எழுந்து கொண்டார். அவனைப் பார்த்ததும் கதிர் பயத்து, தன் பாட்டியின் காலை கட்டிக்கொண்டான்.

 

“டேய் கதிரு… நைனாடா… இங்க வாடா…” பாண்டி அவனை பாசமாக அழைக்க, கதிர் தன் முகத்தை மறைத்து, பாட்டியோடு மேலும் ஒன்றி கொண்டான்.

 

பேரனை தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டவர், “நீ… எதுக்கு இங்க வந்த? என் மக மட்டும் இப்ப இங்க இருந்திருந்தா, உன்ன எங்க வீட்டு வாசப்படி மிதிக்க விட்டிருக்க மாட்டா… ஒழுங்கு மரியாதையா பிரச்சனை பண்ணாம இங்கிருந்து போயிடு.” கௌரி அவனை விரட்டினார்.

 

பாண்டிக்கு சுறுசுறுவென கோபமேற, “உம் மக இன்னா பெரிய பருப்பா? இன்னா பண்ணிக்க முடியும் அவளால என்னாண்ட?” அவன் கை உயர்த்திக் கேட்டதில், கதிர் மேலும் பயந்து நடுங்கினான்.

 

“தம்பி, கோபப்படாத பா.” பெரியவர் அவசரமாக பாண்டியை கையமர்த்தி, “எம்மா கௌரி, நான் தான் பாண்டிய இங்க வர சொன்னேன். நம்ம வேணிய கண்டுபுடிச்சி தர சொல்லி…” என்று மருமகளிடம் சொன்னார்.

 

“உங்களுக்கு அறிவிருக்கா, இல்லயா மாமா? போயும் போயும் இவனா வேணிய‌ காப்பாத்தி தர போறான்? நம்ம வேணி காணாம‌ போனதுக்கு இவன் தான் காரணமா இருக்க முடியும்.” கௌரி ஆத்திரமாக பேச,

 

“ஆமா, உன் மக என்னாண்ட தான் இருக்கா, இப்ப அதுக்கு என்னாங்கிற?” பாண்டியும் குரலுயர்த்திக் கேட்க, 

 

“என்னபா சொல்ற?” பெரியவர் உண்மையாகவே அதிர்ந்து விட்டார்.

 

“பின்ன, என் ரூட்ல கிராஸ் பண்ணா, நான் சொம்மா இர்ந்துக்குவேனா, வகுந்துடுவேன் வகுந்து.” அவன் சொன்ன விதத்தில், பெரியவர்கள் இருவருக்கும் மனம் பதறியது.

 

“ஐயோ பாவி, என் மகளை என்னடா பண்ண?” கௌரி ஓவேன்று கதற, பாட்டியின்‌ கதறலில் பேரனும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.

 

“அட ச்சீ வாய மூடுங்க!” பாண்டியின் அதட்டலில் இருவரின் கத்தலும், கப்பென அடங்கி விட்டது.

 

“இங்க பாரு, உன் பொண்ணுக்கு ஒன்னியும் ஆகல, நல்லா தான் கீறா. என் புள்ளய என்னாண்ட இருந்து பிரிச்சு வச்சதுக்கே, உங்க எல்லார் மேலயும் செம காண்டா கீறேன். அதுக்கு மேலயும் அவ சொம்மா என்னாண்ட உரசிக்கினு இர்ந்தா அதான் தூக்கிட்டேன்…” முடிக்காமல் நிறுத்தினான்.

 

“தம்பி, அவ தெரியாம செஞ்சிட்டா, நாங்க புத்தி சொல்றோம்பா, கெஞ்சி கேக்கறேன் அவளை விட்டுடுபா.” பெரியவர் பாண்டியிடம் கெஞ்சினார். 

 

அவரையும் இன்னும் தேம்பிக் கொண்டிருந்த கதிரையும் பார்த்தவன், “ச்சே!” கோபமாக தரையில் உதைத்துக் கொண்டான். அவனுக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. 

 

அவன் ஆசை ஆசையாக பெற்ற மகன், அவனை யாரோ போல பார்ப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணமான வேணியை, வெட்டி வீசும் அளவு ஆவேசம் பொங்கியது அவனுக்குள். உடனே அவன், மங்காவுக்கு போன் செய்ய, அடுத்த நாற்பது நிமிடங்களில், மங்காவும் லெஃப்டும், வேணியை காரில் அழைத்துக்கொண்டு அங்கே வந்து விட்டனர்.

 

சோர்ந்து துவண்டு வீட்டுக்குள் வந்த‌ வேணியைப் பார்த்ததும், கதிர் ஓடிச்சென்று அவள் காலை கட்டிக்கொண்டு, “எங்க போன வேணி? நான் ஃபோன் போட்டேன், நீ பேசவே இல்ல.” அழுதபடியே அவளிடம் கேட்டான்.

 

அவன் தலையைக் கோதியவள், “சாரி கதிரு, என் ஃபோன் தொலைஞ்சி போச்சி, அதான் என்னால பேச முடியல. நான் தான் வந்துட்டேன் இல்ல. அழாத, கதிர் ஸ்ட்ராங் பாய் தான.” என்று சின்னவனை ஆறுதல்படுத்தினாள்.

 

“உனக்கு ஒன்னுமில்லயே வேணி?” கௌரி பரிதவிப்பாக மகளை ஆராய்ந்தபடி கேட்டார். 

 

“எனக்கு ஒன்னுமில்ல ம்மா.” என்றவளின் பார்வை, தங்கள் வீட்டுக்குள் தோரணையாக உட்கார்ந்து இருந்த பாண்டியைத் துளைத்தது. அவனும் அவர்களைத் தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“இவன எதுக்குமா நடுவீட்ல உட்கார வச்சு இருக்கீங்க?” வேணி ஆத்திரமாக கேட்க, அவன் விருட்டென எழுந்த வேகத்தில், அவன் உட்கார்ந்திருந்த நாற்காலி இரண்டடி பின்னால் நகர்ந்து விழுந்தது.

 

“ஏய்… இன்னா அதப்பு இர்ந்துக்கினா என்னாண்ட முறைச்சிக்கவ? உனக்கு நேரம் சரியில்லடியேய்.” அவனது அதட்டலில், இவள் சிறிதும் பயம்கொள்ளவில்லை. இது அவளது வீடு, அவள் இடம், இங்கு அவனால் என்ன செய்துவிட முடியும் என்ற திடம் அவளுக்கு.

 

“என்ன பண்ணுவ நீ? என்னை கொன்னு பொதச்சிடுவியோ? வந்து கொல்லு நானும் பார்க்கிறேன்.” வேணியும் அவனுக்கிணையாக குரலுயர்த்தி பேசினாள்.

 

அவளை நோக்கி வேகமாக வந்தவன், “என் புள்ளய உன்னாண்ட உட்டு வச்சிருக்கறதால தானடீ, இம்மா சீன் காட்டற நீ?” என்று கதிரை தன் பக்கம் இழுத்துக்கொண்டான். தடுக்க வந்த வேணியை பிடித்து கீழே தள்ளிவிட, கௌரி பதறி கீழே விழுந்த மகளைத் தூக்கினார்.

 

“என் புள்ளய நான் கூட்டிகினு போறேன். உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ.” என்றவனின் கைகளில் தங்காமல் கதிர், கைகால்களை உதறிக்கொண்டு இறங்க அடம்பிடித்தான்.

 

“மரியாதையா கதிரை விட்டுடு. அவனுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்ல.‌.” வேணி கத்தி சொல்ல, 

 

“எனக்கு பொறந்தவன்டீ இவன், நீ என்னடி சம்பந்தம் இல்லனு சொல்றது? உனக்கு தான் என் புள்ளமேல எந்த உரிமையும் இல்ல. நீயா எங்கூட படுத்து, எனக்கு புள்ளய பெத்து கொடுத்த? பெருசா பேச வந்துட்டா?” பாண்டி பேசிய பேச்சில் வேணியோடு சேர்த்து, கௌரி, தாத்தாவின் மனமும் அடிபட்டு போனது.

 

“ச்சீ, நீயெல்லாம் மனுசனா? என் அக்காவ ஏமாத்தி கல்யாணம் பண்ணி, கொலை பண்ண கொலைகாரன் தானடா நீ! உன்ன நம்பி என் கதிர கொடுக்க முடியாது. கொழந்தையை என்கிட்ட கொடுத்திடு.” அவன் கையிலிருந்து பிள்ளையை வாங்க போராடினாள்.

 

வேணியை அவனிடமிருந்து இழுத்து பிடித்த கௌரி, “விட்டுடு வேணி, அவன் புள்ளய அவனே தூக்கிட்டு போகட்டும். அந்த ரௌடி பையன் சங்காத்தமே நமக்கு வேணாம்.” மகளைத் தடுக்க முயன்றார். தன் அடுத்த மகளையும் அந்த ரௌடியிடம் பலிகொடுக்க அவர் தயாராக இல்லை.

 

“கதிரை அப்படி விட முடியாது ம்மா.” வேணி தீர்க்கமாக சொன்னாள். அவளால் எப்படி கதிரை அவனிடம் ஒப்படைக்க முடியும்? முடியவே முடியாது. தன் அக்காவை இழந்தது போல, கதிரையும் அவளால் இழக்க முடியாது.

 

“இத்தனை வருசம் இல்லாம என்ன புதுசா புள்ள பாசம் பொத்துக்கிட்டு வந்திடுச்சு உனக்கு? அவன் அழுவுறான் பாரு, அவனை என்கிட்ட கொடுத்துடு.” வேணி விடாமல் பிள்ளையை மீட்க போராடி அவனிடம் கத்தி சண்டையிட்டாள்.

 

இரவு பதினொரு மணியை நெருங்கி இருந்த நேரம் அது. உறக்கத்திற்கு சென்றிருந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லாம், இவர்களின் வீட்டில் சலசலப்பு சத்தத்தைக் கேட்டு, வீட்டு வாசலில் வந்து கூடினர். 

 

“என் புள்ளய என் கைக்கு எட்டாம மறச்சு வச்சிகினு, இதுவும் பேசுவ, இன்னுமும் பேசுவடி நீ. சின்ன குயந்தைய பார்த்துக்க எனக்கு தோதுபடலனு நானும் ஆசால்டா இருந்துகினா, என் புள்ளய என்னாண்ட இருந்து மொத்தமா பிரிக்க பாத்துக்கிறியா?” பாண்டி கொதித்து போய் பேசினான். 

 

எனக்கும் என் மகனுக்கும் சம்பந்தம் இல்லையென்று எப்படி அவள் சொல்லலாம்? அவனுக்குள் ஆத்திரம் பெருகியது. அன்று அவன் சிக்கியிருந்த சூழ்நிலையில், குழந்தையைப் பார்த்துக்கொள்ள இயலாமல் இவர்களிடம் விட்டு வைத்திருந்தது எத்தனை பெரிய தவறு என்று, இப்போது தன்னைத்தானே நொந்து கொண்டான் அவன்.

 

“கொஞ்சம் பொறுமையா இருங்க தம்பி, அவசரப்பட்டு வார்த்தைய விடாதீங்க. கதிரும் பாவம் பா, நாம உக்கார்ந்து பேசலாம்.” பெரியவர் அவனை சமாதானப்படுத்த முயற்சித்தார். தள்ளாத வயதில்‌ அவரால் எதையும் ஒருதலைப்பட்சமாக யோசிக்க முடியவில்லை.

 

“இன்னாத்துக்கு குந்திகினு பேசிக்கனும்? பேச ஒன்னியும் இல்ல. இன்னொரு தபா, என்கிட்டயும் என் புள்ளகிட்டயும் உன் பேத்திய கிராஸ் ஆக வேணாம்னு சொல்லி வைங்க.” என்றதோடு அழுத கதிரை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு, மங்காவுடன் காரில் ஏறி பறந்து விட்டான் பாண்டி.

 

அவனை தடுக்க போராடிய வேணி தெருவிலேயே கத்தி அழுது கதறினாள். அவளால் தாங்கவே முடியவில்லை. எது நடக்கக்கூடாது என்று கதிரை பொத்தி பொத்தி வைத்திருந்தாளோ, யார் வந்து கதிரை உரிமை கேட்கக்கூடாது என்று போராடினாளோ, எல்லாமே வீணாக போனதை அவளால் நம்ப முடியவில்லை. மனம் பதற, உடல் நடுங்க, பெறாத மகனுக்காக தன்னிலை மறந்து கதறிக் கொண்டிருந்தாள் வேணி. 

 

***

 

காரில், பாண்டியையும் மங்காவையும் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தான் கதிர்வேலன். “என்னை வுது… வுது… வேணி கித்த போணும்… வுது என்னை…” என்று தன் பிஞ்சு கைகளால் அவன் அப்பாவை சரமாரியாக அடித்து, கிடைக்கும் இடமெல்லாம் அவனை கடித்தும் வைத்தான்.

 

“டேய் டேய்…” என்று அலறி அவனைப் பிடித்து நேராக அமர வைத்தவன், “என்னடா வளர்த்து வச்சி கீறாங்க உன்ன? இப்படி அடிச்சு கடிச்சு வெக்கிற?” 

 

“வேணி சொல்லுச்சு,‌ யாருனா என்னை தூக்கித்து போனா, இப்தி அச்சி கச்சிணும்னு” கதிர் சொன்ன விதத்தில் பாண்டியின் முகத்தில் மென்மை பரவியது. தன் மகனின் மழலை மொழியை இப்போதுதான் கேட்கிறான். கதிர் கொடுத்த அடியும் கடியும் கூட, ஏதோ பெருவரம் பெற்றது போலான உணர்வில் ஏற்றுக்கொண்டான்.

 

“கிங்கு, உன் புள்ளக்கு டானா வர்ல போல?” மங்கா கேட்க,

 

“ஆனா கூட எப்பிடி முத்துமுத்தா பேசுறான் பாரேன்கா” பாண்டியின் பார்வை, தன்னை உரித்து வைத்திருந்த மகன் மீதே பதிந்திருந்தது.

 

“அட அடா நம்ம கெத்து கிங்க, இப்பிடி சென்டிமெண்டா பார்க்கிறது செமயா கீதே.” காரை ஓட்டிக்கொண்டே லெப்ட் கேலி பேச, அதற்கும் பாண்டியின் முரட்டு முகம் புன்னகை சிந்தியது.

 

“வேணி கித்த வுது என்னை… வீத்துக்கு போணும்… பாத்தீ… தாத்தா…” கதிர் தேம்பிக் கொண்டே இருக்க, மகனின் அழுகையை அப்போதே நிறுத்திவிட வேண்டும் என்ற வேகம் பாண்டிக்கு.

 

தன் கைப்பேசியை எடுத்து அழைப்பு விடுக்க, மறுமுனையில், “சொல்லு கிங் ண்ணா, என்ன ராத்திரி போன் போட்டு இருக்க ண்ணா, நான் என்ன செய்யணும்?” பவ்வியமான குரல் ஒலித்தது.

 

“டேய் பாலு, நம்ம கடையை தொறந்து வைய்யி, நான் வரேன்.” பாண்டி சொல்ல,

 

“அண்ணே… மணி பன்னெண்டு ஆச்சி, ஒன்போது மணிக்கே நம்ம கடை சாத்தறது ஆச்சே ண்ணா.” பாலு தயங்கினான்.

 

“நான் பத்து நிமிட்ல கடையாண்ட இருப்பேன், கடை தொறந்து இர்க்கணும்.” பாண்டி உத்தரவிட்டு, கைப்பேசியை வைத்துவிட்டான்.

 

மங்கா, கதிரிடம் ஏதேதோ பேசி சமாதானம் செய்ய முயன்றாள். ம்ஹூம் கதிர் எதற்கும் மசிபவனாக இல்லை. அவன், “பாத்தீ… வேணி…” என்றுதான் தேம்பியபடி இருந்தான்.

 

சொன்னதுபோலவே அடுத்த பத்து நிமிடங்களில், கடையின் முன்னால் கார் நின்றது. பாலுவும் அடித்துப் பிடித்து ஓடி வந்து கடையைத் திறந்து வைத்திருந்தான். 

 

பாண்டி, கதிரைத் தூக்கிக்கொண்டு கடைக்குள் நுழைய, சிணுங்கிக்கொண்டே வந்த கதிர், விளக்குகள் ஒவ்வொன்றாக ஒளிர ஒளிர, அங்கிருந்த பொருட்களைப் பார்த்து, அவனது குட்டி கண்கள் பெரிதாக விரிந்தது.

 

அந்த இடம் முழுவதும், குழந்தைகளுக்கான விலையுயர்ந்த விளையாட்டு பொருட்கள், விதவிதமான பொம்மைகள் என அழகழகாய் வகைவகையாய் அடுக்கப்பட்டிருந்தது. 

 

தன் அழுகையைக் கூட மறந்து, குட்டி கண்கள் விரிய, செப்பு வாய் பிளக்க, அங்கே ஒவ்வொன்றையும் பார்த்த மகனை, ரசனையாக பார்த்தவன், “இங்க கீற எல்லாமே உனுக்கு தான் கதிரு, என்ன வேணுமோ எடுத்துக்கோ போடா.” என்றான்.

 

கதிர் நம்பாமல் பாண்டியைப் பார்த்து, “நிஜமாவா?” என்று கேட்க,

 

“நிஜந்தான்டா மவனே, உனக்கு புட்சதெல்லாம் சீக்ரம் எடுத்துகினு வா ஓடு” என்றதும், கதிர் உற்சாகமாக ஓடி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்தான்.

 

விதவிதமான ரிமோட் கார்கள், ரோபோட் பொம்மைகள், சின்சேன், டோரிமான் பொம்மைகள், டிரைன் செட், இன்னும் பெயர் தெரியாத விளையாட்டு பொருட்களை எல்லாம் அவன் ஓடி ஓடி எடுத்து குவிப்பதைப் பார்த்த, பாண்டியின் முகத்தில் அளப்பரிய சந்தோஷம்.

 

தான் எடுத்து வைத்த பொருட்கள் எல்லாம் கதிருக்கே அதிகப்படியாக தோன்றியதோ என்னவோ? திருதிருவென பாண்டியைப் பார்த்து வைத்தான்.

 

“போதுமா கதிரு, இன்னும் வேணும்னா எத்துக்கோ.” பாண்டி உற்சாகமாக சொல்ல, 

 

அதிலிருந்த எலிக்காப்டரை மட்டும் எடுத்துக்கொண்ட கதிருக்கு இத்தனை நேரம் மறந்திருந்த வேணி நினைவுக்கு வர, “வேணி கித்த போணும்…” என்று கெஞ்சலாக முகம் சுருக்கி கேட்டான்.

 

முன்பு போல் அவன் அழாமல் இருப்பதே பாண்டிக்கு நிம்மதியைத் தர, “வேணிகிட்ட தான, போலாம் போலாம், இப்ப உன் குட்டி வயித்துக்கு பசிக்குமில்ல, ஓட்டல்ல போய் சாப்பிட்டு போலாம்.” என்று மகனை தாஜா செய்து அழைத்து வந்தான். அவன் வாங்கி குவித்த பொருட்கள் எல்லாவற்றையும், கார் டிக்கியில் அடக்கிக்கொண்டு கிளம்பினர்.

 

நட்டநடு இரவில், திறந்திருந்த அந்த ஓட்டலில், கதிருக்கு பிடித்ததைக் கேட்டு ஆர்டர் செய்ய, முக்கி முணகி கதிர் சாப்பிட்டது என்னவோ ஒரேயொரு பூரி மட்டும் தான்.

 

மறுபடியும் காரில் ஏற, “வேணி கித்த கூத்தித்து போ.” கதிர் இப்போது பாண்டியிடம் ஆணை போல சொன்னான்.

 

“போலாம் போலாம்டா மவனே.” என்றவன், “லெஃப்டு, பைக் அவங்க வீட்டாண்ட நிக்கிது, நீ போய் வண்டியை எடுத்துகினு வந்துடு, நான் கார் எடுத்துனு கிளம்பறேன்.” என்றதும், “சரி கிங்கு.” என்று லெஃப்ட் கிளம்பினான்.

 

காரின் முன் இருக்கையில் கதிரை பக்கத்தில் அமர்த்திக் கொண்டு சாலையில் மிதமாக வேகத்தில் செலுத்தினான். கதிர் ஏதேதோ பேசிக்கொண்டு வர, அந்த பயணம் ஏதோ வான்வெளியில் மிதப்பது போன்ற அத்தனை பரவசமாக தோன்றியது பாண்டிக்கு. இத்தனை வருடங்கள் இந்த சந்தோஷத்தை இழந்து கிடந்தோமே என்று மனதோடு நொந்து கொண்டான்.

 

இடையிடையே கதிர், வேணியிடம் போகச் சொல்லி கேட்க, அந்த பேச்சை லாவகமாக மாற்றிக்கொண்டே வந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் கதிரும் கண்கள் சொக்க உறங்கிவிட, அவனை வாட்டமாக இருக்கையில் படுக்க வைத்தவனின் முகம், தாய்மையைத் தத்தெடுத்திருந்தது.

 

அதுவரை அமைதியாக அவர்களைக் கவனித்து வந்த மங்கா, “உனுக்கு புள்ள இர்கிறத ஏன் கிங்கு எங்க அல்லார்கிட்டயும் சொல்லிக்கில?” என்று தன் மனதை உலப்பி கொண்டிருந்ததைக் கேட்டாள். 

 

பாண்டியிடம் பதிலாக பெருமூச்சு மட்டுமே. 

 

“சொல்லிக்க வேணாம்னா வுடு கிங்கு.”

 

“சொல்லிக்க கூடாதுன்னு இல்லக்கா, இவன் பொறந்துக்கின அப்புறம் எனக்கு மூச்சு வுட கூட நேரம் கிடக்கல, நிறயா பிராபுளம் ஆயிடுச்சி, இவன் ஆத்தாவும் எனக்கென்னனு வுட்டுட்டு போயிட்டா… அப்ப நான் உசுரோட திரும்பி வருவேனானு கூட மன்சில்ல!

 

அப்பாலிக்கா, திரும்பி வந்துக்கினே க்கா… என்னை தீர்த்து கட்டணும்னு நென்சவனுங்க அல்லாருக்கும் அல்லு வுட வச்சேன்… அதுகப்பால எனுக்கு எதுமேலயும் பயம் போயிகிச்சு. வாழ்வா சாவா வந்தா பாத்துக்கலாம்னு தகிரியம் வந்துகிச்சு!

 

ஆனா, என் புள்ளய பார்க்க வுடலக்கா அவ வூட்டுல. நானும் அந்தர் பண்ணி புள்ளய அப்பவே தூக்கினு வந்திருப்பேன்… சின்ன குயந்தக்கா, அவனை தூக்கினு வந்துகிட்டு எனுக்கும் வளத்துக்கவும் தெரியாது. அதான் கம்முனு இருந்துக்கினேன். 

 

அதவச்சு, இன்னிக்கு சொன்னா பாரு அவ, எனக்கும் என் புள்ளைக்கும் சம்பந்தமில்லனு… அவள அங்கயே கொன்னு போட்டுருப்பேன். என் புள்ளய மொத்தமா அவ எடுத்துக்க பிளான் வச்சிக்கிறா போல, இனிமே என் கதிரோட நிழலை கூட அவ பாத்துக்க முடியாது!” என்று ஆத்திரமாக சொல்லி முடித்தான்.

 

அதேநேரத்தில் வேணி, “கதிரு… கதிரு…” என்று புலம்பியபடி இன்னும் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

 

“சின்ன பொண்ணு மாதிரி அடம்பிடிக்காத வேணி, அந்த ரௌடி பய கிட்ட நம்மால எப்படி போராட முடியும்? விடு, கதிர் அவன் பெத்த புள்ள தான, நல்லா தான் பார்த்துக்குவான், நம்புவோம்.” கௌரியும் பேரனை பிரிந்த வேதனையோடு மகளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். பெரியவர் அசதியில் அப்போதே உறக்கத்திற்கு சென்றிருந்தார்.

 

“ம்மா… அவன் நம்ம கிருஷ்ணாவ கொன்ன மாதிரி, கதிரையும் ஏதாவது செஞ்சுடுவான் ம்மா… நம்ம கதிரை அவன்கிட்ட இருந்து அழைச்சிட்டு வந்துடலாமா…” என்று விடாமல் அடம்பிடித்தவளின் முதுகில் நான்கடி வைத்தார் கௌரி.

 

“அவன் புள்ளய அவன் என்னவேணா செஞ்சுக்கிட்டும் உனக்கு என்ன வந்துச்சு? உன் அக்கா எங்க முகத்துல கரிய பூசிட்டு அவன்கூட ஓடிபோய், கடைசியில ஒழிஞ்சே போனா… கதிரை வளர்க்கற தலையெழுத்து உனக்கென்னடி, நீதான் வளர்க்கிறேன்னு தூக்கிட்டு வந்த, நானும் மனசு கேக்காம வளர்த்துவிட்டேன். இப்ப அவன் அப்பனே வந்து கேக்கும்போது என்ன பண்ண சொல்ற?” என்று ஆதங்கமாக கத்தியவர்,

 

“இனிமேலாவது உன் வாழ்க்கைய போய் வாழ பாரு. உன்னயாவது ஒரு நல்லவனுக்கு கட்டி கொடுத்து, நீ நிறைவா வாழறதை கண்ணாற பார்க்கணும்டீ, அதுக்காக தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.” என்று கலங்கிய அம்மாவை, அழுதபடியே அணைத்துக் கொண்டாள் வேணி. அவள் மனது பெற்ற தாய்க்கும் பெறாத மகனுக்கும் இடையே வேதனையுடன் ஊசலாடிக் கொண்டிருந்தது.

 

***

காதல்களமாடவா…