காதல்போதை 47💙

காதல்போதை 47💙

மாயா கேட்ட கேள்வியில் அதிர்ந்த ரவீந்திரன், “அப்போ உனக்கு…” என்று தடுமாற்றமாக கேட்க வர, “உங்கள நான் நேருக்கு நேரா சந்திக்க முன்னாடியே தெரியும், நீங்க தான் என் அம்மாவ காதலிச்சு ஏமாத்தினவருன்னு” என்று மாயா அழுத்தமாக சொல்ல, அவரோ குற்றவுணர்வில் தலைகுனிந்துக் கொண்டார்.

தன் மாமாவின் இந்த நிலையை காண சகிக்காத ரோஹன், “மாயா, நான் சொல்றதை கேளு. சத்தியமா மாமா அத்தைக்கு துரோகம் பண்ணியிருக்க மாட்டாரு. பொறுமையா அவர்கிட்ட இதை பத்தி பேசலாம்” என்று தன்னவளுக்கு புரிய வைக்க முயல, “ஓஹோ! தான் காதலிச்சவள கர்ப்பமாக்கிட்டு விட்டுட்டு போயிட்டாரு. இத்தனை வருஷம் அப்பா பெயர் கூட தெரியாம நான் வளர்ந்த கஷ்டம் உனக்கு புரியாது ரூஹி. அந்த வலிய உன்னால உணர முடியாது. இவர் ஒரு துரோகி” என்று ஆவேசமாக கத்தினாள் மாயா.

“என்னை மன்னிச்சிரு மாயூமா, உன் அப்பாவ மன்னிச்சிருடா. எனக்கு ஒரு குழந்தை இருக்குன்னு கூட இத்தனை நாளா தெரியாம இருந்திருக்கேன். அப்பாவ மன்னிச்சிரு டா” என்று ரவீந்திரன் அழ, மாயாவோ அவரையே அழுத்தமாக பார்த்திருக்க, மற்றவர்களுக்கோ அவரின் அழுகையை காண வேதனையாக இருந்தது.

“மாயா, உனக்கு எப்படி ரவி தான் உன் அப்பான்னு தெரிய வந்திச்சு?” என்று லலிதா பதட்டமாக கேட்க, முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டவள், “மூனு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது. சின்ன வயசுல அப்பா யாருன்னு அம்மாகிட்ட கேட்டப்போ ரொம்ப அழுதாங்க. அவங்களோட கண்ணீரை பார்த்ததிலிருந்து நான் அப்பாவ பத்தி கேக்கவே மாட்டேன். அதுவும், அம்மா அடிக்கடி ஒரு ஃபோட்டோவ வச்சி அழுகுறதை பார்த்திருக்கேன். அவங்களுக்கு என்கிட்ட எப்போ சொல்ல தொணுதோ, அப்போ உண்மைய சொல்லுவாங்கன்னு நானும் எதுவும் கேக்கல.

மூனு வருஷத்துக்கு முன்னாடி தான் ஆக்ஸிடன்ட்ல மறந்த எல்லாமே எனக்கு நியாபகம் வந்திச்சு. அப்போ, எனக்கு இருந்த தனிமைய போக்கிக்க அம்மா ரூம்ல இருந்தப்போ தான் இவரோட ஃபோட்டோவ பார்த்தேன். யாருக்கும் தெரியாம டிடெக்டிவ் ஏஜென்ஸில இவரோட ஃபோட்டோவ கொடுத்து விசாரிக்க சொன்னப்போ தான், இவர பத்தின தகவல்கள் கிடைச்சது. ஆனா, ஏன் இவர் என் அம்மாவ விட்டுட்டு போனாருன்னு மட்டும் என்னால தெரிஞ்சிக்க முடியல. அதை நீங்களே சொன்னா பெட்டரா இருக்கும் மிஸ்டர்.ரவீந்திரன்” என்று சொல்லி முடித்து, தன் கேள்விக்கு பதிலை எதிர்ப்பார்த்து அவரை ஆழ்ந்து நோக்கினாள்.

அங்கு சுவரில் மாட்டியிருந்த தன்னவளின் ஆளுயர புகைப்படத்தை கண்கள் கலங்க பார்த்த ரவீந்திரன், “உறவுகளுக்குள்ள புரிந்துணர்வு ரொம்ப அவசியம். அது எங்களுக்குள்ள இருக்கல்ல மாயூமா. உருவத்துல மட்டுமில்ல குணத்துலயும் நீ மஹா மாதிரின்னு அன்னைக்கு சொன்னேன். ஆனா, ஒரு விஷயத்தை தவிர. உன்கிட்ட இருக்குற நிதானமும், பொறுமையும் மஹாகிட்ட எப்போவும் இருந்ததில்ல.

மனசுக்கு தோணினதை உடனே பண்ணிருவா. சரியான அவசரக் குடுக்கைன்னு கூட சொல்லலாம். எங்களுக்குள்ள முதல்ல காதல சொன்னது கூட அவ தான்” என்று நிறுத்தி மெல்லிதாக சிரித்து, மீண்டும் தொடர்ந்தார்.

“மஹா தான் என்கிட்ட முதலாவது காதல சொன்னா. அவ யாரு?, அவளோட ஃபேமிலி என்ன? எதுவுமே எனக்கு தெரியல. அப்போ என் நிலைமை ரொம்பவே மோசம், இப்போ இருக்குற பணம், வசதி கூட அப்போ கிடையாது. அவ காதல சொன்னதும் நான் அதை ஏத்துக்கல. நானும் ஊருக்கு கிளம்பி வந்துட்டேன். அப்போ எல்லாம் பத்து வீட்டுக்கு ஒரு ஃபோன் தான். அவளுக்கு எப்படி அந்த நம்பர் தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியல, தினமும் கோல் பண்ணுவா.

வீட்டுக்கு அடிக்கடி லெட்டர் கூட வரும். நானே அவள அவொய்ட் பண்ணாலும் மணிக்கணக்கா பேசுவா இல்லை இல்லை… என்னையும் பேச வைப்பா. அந்தளவு பிடிவாதம் ஜாஸ்தி.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, ரோஹனுக்கோ மாயா தன்னை காதலித்த அந்த கல்லூரி நினைவுகள் தான் நினைவில் வந்தது. ‘அம்மாவுக்கு தப்பாத பிள்ளை’ என்று மனதில் நினைக்க தவறவில்லை அவன்.

“ஒருவேள, மஹா நான் அவள அவளுக்காக ஏத்துக்கனும்னு நினைச்சாலோ என்னவோ? அவளோட குடும்பத்த பத்தி மட்டும் எதுவும் சொல்லல்ல. ஆரம்பத்துல வேண்டா வெறுப்பா பேசின எனக்கு அப்றம் பழக பழக ரொம்பவே பிடிச்சி போச்சு. அதுக்கப்றம் அவள பார்க்குறதுக்காக வீட்ல பொய் சொல்லிட்டு அடிக்கடி பெங்ளூர் போக ஆரம்பிச்சேன். பெங்ளூர்ல அவக் கூட அவ தங்கியிருந்த ஃப்ளேட்ல தான் இருந்தேன். காதல் எல்லை மீறி போச்சு.

அவ்வளவு சந்தோஷமான நினைவுகள். அவளும் என்னை ரொம்பவே காதலிச்சா. ஆனா, என்னை புரிஞ்சிக்கவே மாட்டா. என்ட், ரொம்பவே ஈகோ அதிகம். அடுத்த கொஞ்சநாள்ல ரோஹனோட அப்பா ஆரம்பிச்ச பிஸ்னஸ்ல ஏகப்பட்ட பிரச்சினை, நிறைய நஷ்டம். நான் தான் அவரோட இருந்தேன். என்னால மஹா கூட பேச முடியல, அவள பார்க்க முடியல. ஒருநாள் சட்டுன்னு என்னை ஆஃபீஸ்க்கே தேடி வந்துட்டா. அவ அப்பாவோட கம்பனில பிரச்சினை, சொந்த ஊருக்கு போயே ஆகனும்னு சொன்னா.

ஆனா, அப்போ மஹாவுக்கு அவங்க அப்பாவோட கம்பனிய பொறுப்பேத்துக்க விருப்பம் இருக்கல்ல. என்னை உடனே கல்யாணம் பண்ணிக்க சொன்னா. நான் இருந்த நிலைமையில என்னால அதை பத்தி யோசிச்சு பார்க்க கூட முடியல. அதுவும், அவ அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காரு, என்னை அவக் கூட வர சொல்லி ரொம்ப பிடிவாதம் பிடிச்சா.

அவ யாருன்னு எனக்கு முழுசா தெரியலன்னாலும், என்னால அவளோட குடும்ப பிண்ணனியை புரிஞ்சிக்க முடிஞ்சது. எந்த தகுதியில நான் போய் அவளோட அப்பாகிட்ட பேச முடியும்? நானும் அவளுக்கு புரிய வைக்க ட்ரை பண்ணேன். வாக்குவாதம் அதிகமாகி சண்டை பெருசாச்சு. அதுக்கப்றம் ஒரு வாரமா நானே பேசினாலும் அவ என்கூட பேசல்ல, திடீர்னு அவக்கிட்டயிருந்து ஒரு லெட்டர் மட்டும் வந்திச்சு.

அவ ஊருக்கு போக போறதாகவும், அதுக்குள்ள அவள பெங்ளூர்ல பார்க்க வரனும்னு சொல்லியிருந்தா. ஆனா, விதி அவக்கூட என்னை வாழ விடல. அப்போ தான் என் அப்பா இறந்தாங்க, என்னால போக முடியல. அவளும் கிளம்பி போயிட்டா. அதுக்கப்றம் நான் அவள பார்க்கவேயில்ல. அவள எப்படி கான்டேக்ட் பண்றதுன்னு கூட எனக்கு தெரியல. எனக்கு அவ என் குழந்தைய சுமந்துகிட்டு இருக்கான்னு கூட தெரியல.

நான் தப்பு பண்ணிட்டேன் மாயூமா, அவக்கிட்ட என்ன பிரச்சினைன்னு கேட்டிருக்கனும். என் பிரச்சினைய மட்டும் தான் அவளுக்கு புரிய வைக்க ட்ரை பண்ணனே தவிர, அவளோட பிரச்சினை என்னன்னு நான் கேக்கல. அதுக்கப்றம், ஒரு மாசம் கழிச்சி அவ தான் ஐரா கம்பனீஸ்ஸோட சிஇஓன்னு தெரிஞ்சது, கூடவே அவ கர்ப்பமா இருக்குறதும்… சர்வேந்திரன் தான் அதுக்கு காரணம்னு எல்லா மீடியாவுலயும் சொன்னாங்க.

நான் கூட அவ என்னை மறந்து அவ வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சிட்டான்னு, அவ நினைவுகளோடவே வாழ ஆரம்பிச்சேன். ஆனா, என் மஹா எத்தனையோ கஷ்டத்தை மனசுல புதைச்சு, என் குழந்தைய சுமந்துகிட்டு வாழ்ந்திருக்கா. எத்தனை பிரச்சினை வந்திருந்தாலும் அந்த உறவ தக்க வைக்க நாங்க போராடியிருக்கனும். ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருந்திருக்கனும். என்னால தான் அவள கான்டேக்ட் பண்ண முடியாது, அவளால நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிருக்கலாம்ல? ஏன் அவ என்னை தேடி வரல?” என்று கண்களில் கண்ணீர் அருவியாக ஓட, இத்தனை நாள் மனதிலிருந்த பாரத்தை கொட்டினார் ரவீந்திரன்.

“சர்வா தான் கம்பனியில பிரச்சினைய உண்டாக்கி அம்மாவ வர வச்சிருக்கான். அம்மா இட்டாலி வந்த மூனு நாள்லயே கர்ப்பமா இருக்குற விஷயம் தெரிஞ்சிருக்கு. அதை உங்ககிட்ட சொல்லலாம்னு அம்மா நினைச்சப்போ தான், அம்மாவோட நிலைமைய நினைச்சு தாத்தாவுக்கு உடம்பு முடியாம போச்சு. அம்மா மொத்த கம்பனியையும் பொறுப்பெடுத்துக்க வேண்டிய கட்டாயம்.

அப்போ தான் ஐரா கம்பனீஸ் கோப்ரேட் உலகத்துல ஒரு பெரிய இடத்தை அடைஞ்சது. வளர்ச்சியோட சேர்த்து ஏகப்பட்ட கொலை மிரட்டல், கம்பனியில பிரச்சினைன்னு அம்மாவால அப்போ எதை பத்தியும் யோசிக்க முடியல. நான் பிறந்த கொஞ்சநாள்ல அம்மா திரும்ப உங்ககிட்ட வரனும்னு முடிவு பண்ணப்போ தான், உங்களுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிக்கிறதா அம்மாவுக்கு தகவல் வந்திருக்கு. உங்க வாழ்க்கைய கெடுக்க விரும்பாம நான் மட்டும் போதும்னு அப்படியே இருந்துட்டாங்க” என்ற மாயாவின் பேச்சை இடைவெட்டினார் லலிதா.

“அம்மா எங்க தூரத்து சொந்தத்துல ஒரு பொண்ண ரவிக்கு பேசினது உண்மை தான். அதட்டி, மிரட்டி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தாங்க. ஆனா, ரவி கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு பிடிவாதமா இருந்தான். சொல்லப்போனா, ரவி கல்யாணம் வேணாம்னு சொன்ன கவலைல தான் அம்மா இறந்துட்டாங்க” என்று லலிதா சொல்ல, தன் தந்தையை வலி நிறைந்த பார்வையுடன் ஏறிட்டாள் மாயா.

“ஐ அம் சோரி” என்றுவிட்டு மாயா தன் அறைக்குள் ஓட, ரவீந்திரனும் எதுவும் பேசாது புகைப்படத்திலிருந்த தன்னவளின் புன்னகையை கண்களில் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அடுத்தநாள் காலை,

மாயாவின் குட்டி அரண்மனையே கல்யாணத்துக்கான அலங்காரத்தில் ஜொலிக்க, மொத்த குடும்பமும் முகூர்த்த நேரம் நெருங்குவதால் பரபரப்பாக ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தனர். ரோஹனுக்கு நேற்று நடந்ததை நினைத்து மனது ஒருவித பாரமாக இருந்தாலும், தன்னவளை சொந்தமாக்கும் நேரத்திற்காக ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்தவாறு கம்பீரமாக மணவறையில் வீற்றிருந்தான்.

நேற்று மன்னிப்பு கேட்டுவிட்டு அவள் அறைக்குள் சென்றது தான், அதன்பிறகு ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. ரவீந்திரனுக்கோ, ‘அவள் தன்னை அப்பாவாக ஏற்றுக் கொள்வாளா?’ என்ற பதட்டம் இருக்க, தன் மகளுக்காக காத்திருந்தார். இட்டாலியில் தமிழ் கலாச்சார கல்யாணம் என்று ஏற்பாடுகளை ஆர்வமாக பார்த்திருந்த விருந்தினர்கள், பெண்கள் படை சூழ கல்யாண அலங்காரத்தில் வந்த மாயாவை பார்த்து அசந்து விட்டனர்.

இத்தனை நாள் சிறந்த தொழிலதிபராக பார்த்த மாயாவை இந்த கல்யாண கோலத்தில் பார்த்து அனைவரும் வியக்க, நம் நாயகனை சொல்லவா வேண்டும்?! ‘அஞ்சு வருஷத்தை வேஸ்ட் பண்ணாம அப்போவே இவள கல்யாணம் பண்ணியிருந்தா, இப்போ இரண்டு குழந்தைக்கு அப்பாவாகியிருப்போம்’ எனறு நினைத்து, ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு தன்னவளை பார்த்தான் ரோஹன்.

மயில் கழுத்து வண்ண பட்டுடுத்தி, மணப்பெண் அலங்காரத்தில் வந்தவளோ, முதலில் மணவறையில் அமராது நேரே சென்றது என்னவோ, தன் அப்பாவின் முன்னே தான். ரவீந்திரனோ அவளை புரியாது பார்க்க, “அப்பா…” என்றழைத்தவாறு அவரிடம் அவள் ஆசிர்வாதம் வாங்க காலில் விழ போக, அவள் அழைப்பில் அவருக்கோ உடல் சிலிர்த்துப் போனது.

தன் மகளை தூக்கியவர், “மாயூமா, அப்பாவ ஏத்துக்கிட்டியாடா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டவாறு அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட, ரோஹனுக்கோ சந்தோஷம் தாளவில்லை. எல்லாருக்கும் உற்சாசமாகிப் போக, ரவீந்திரனே தன் மகளை அழைத்து வந்து ரோஹனின் பக்கத்தில் அமர வைத்தார். மாயாவுக்கோ உதடு முழுக்க புன்னகை.

ரோஹனுடனான வாழ்க்கைக்கு ஐந்து வருடங்கள் அவள் தவமிருந்தாள் என்றால், அப்பா பாசத்திற்காக பிறந்ததிலிருந்தே ஏங்கிய பெண் அவள். இன்று இரண்டும் கை கூடி விட்டதில், அவளுக்கோ சந்தோஷத்தில் கண்ணீர் விடாமல் சுரந்தது.

“அம்மு, என்னையே உன்கிட்ட சிக்க வச்சிட்டல்லடி?” என்று ரோஹன் செல்ல முறைப்புடன் கேட்க, “நீதான் டா சொக்கு பொடி போட்டு என்னை மயக்கிட்ட” என்று தலை சரித்து அவள் சொன்ன விதத்தில், ரோஹனோ வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டான்.

அலைஸ்ஸோ, மாயா அவளுடைய துப்பாக்கியை அவள் புறமே நீட்டி மிரட்டிய மிரட்டலில் புடவையை கட்டிக்கொண்டு நடக்க முடியாமல் திணற, “அழகே பொறாமை கொள்ளும் பேரழகு” என்ற சஞ்சய்யின் குரலில் நிமிர்ந்தவள், வேஷ்டி சட்டையிலிருந்த தன்னவனை பார்த்து, “வாவ்! யூ லுக் ஸ்மார்ட் சஞ்சு” என்று புன்னகையுடன் சொன்னாள்.

வெட்கப்பட்டு சிரித்தவாறு அவளருகில் நெருங்கிய சஞ்சய், வேஷ்டி தடுக்கி கீழே விழப்போக, அவனை தாங்கி பிடித்த அலைஸ் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தாள். ‘அடிப்பாவி!’ என்று வாயை பிளந்த வண்ணம் சஞ்சய் இருக்க, அலைஸ் அவனை தாங்கி பிடித்திருக்க, அங்கிருந்த புகைப்படக் கலைஞரோ அந்தக் காட்சியை அழகாக தன் புகைப்படக் கருவியில் அழகாக படம்பிடித்துக் கொண்டார்.

இங்கு பாபியோ, எப்போதும் போல் கீர்த்தியின் ஜடையை பிடித்து இழுத்து, அவள் கையிலிருந்த தட்டிலிருந்த பூக்களை அவள் மேலே தூவியவாறு, “மாமா எப்படி இருக்கேன் ஸ்வீட்டி?” என்று குறும்பாக கேட்க, அவனை பார்க்க வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்ற கீர்த்தி, “சூப்பரா இருக்கீங்க மாமா” என்று சொல்லிவிட்டீ ஓட போனாள்.

அவளை பிடித்து நிறுத்தியவன், “என்ன சொன்ன ஸ்வீட்டி? இன்னொரு தடவை சொல்லேன்” என்று கெஞ்ச, நிமிர்ந்து அவன் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவள், “ஐ லவ் யூ மாமா” என்றுவிட்டு மீண்டும் அவன் பிடியிலிருந்த கையை உருவி ஓட போக, “என் செல்ல ஸ்வீட்டி” என்றவாறு அவள் ஜடையை பிடித்து பாபி இழுக்க, சரியாக அந்த காட்சியும் புகைப்படக்காரரின் கண்களில் சிக்கி அவரின் கருவியில் சேமிக்கப்பட்டது.

மாயாவுக்கோ எப்போதும் போல் அவளின் இயல்பு குணம் தலை தூக்க, “ஐயரே எம்புட்டு நேரம் மந்திரத்தையே சொல்லுவீங்க? சீக்கிரம் தாலிய என் ரூஹி கையில கொடுங்க, நேரம் ஆகுதுல்லோ…” என்று சிரித்தவாறு சொல்ல, பக்கத்திலிருந்தவர்கள் வாய்விட்டு சிரிக்க, “அய்யோ! டெவில், வேணாம்டி, முடியல” என்று ரோஹன் தான் கையெடுத்து கும்பிட்டு விட்டான்.

ஐயர் மாயாவின் பேச்சிலே, “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று சொல்லி தாலியை நீட்ட, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, தன்னவளின் கழுத்தில் மங்களை நாணை பூட்டினான் அவளின் ரூஹி.

குங்குமத்தை அவள் நெற்றி வகுட்டில் வைத்தவன், தன்னவளையே இமைக்காது பார்த்தவாறு, “யூ ஆர் த பெஸ்ட் லவர் அம்மு. ஐ ப்ரோமிஸ்,  நீ என்னை காதலிக்கிறதை விட அதிகமா உன்னை நான் காதலிப்பேன். ஐ லவ் யூ டெவில்” என்று காதலாக சொன்னவாறு அவளின் கண்களில் முத்தத்தை பதிக்க, “என்னை குடும்பம் நடத்தி ரிஸ்க் எடுக்க முடிவு பண்ணிட்ட. இனி உன் டெவில் ஓட டோர்ச்சர தாங்கிக்க ரெடியா இரு பேபி” என்று சொன்னவாறு யாரையும் கண்டுக்காது தன்னவனின் கன்னத்தை கடித்து வைத்தாள் மாயா.

“ஆஆ…” என்று ரோஹன் அலற, எல்லாரும் இவர்களின் அலுச்சாட்டியத்தில் வாய்விட்டு சிரிக்க, அந்த தருணமும் அழகாக படமாக்கப்பட்டது. பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும், தேவதேவர்களின் ஆசிர்வாதத்துடன் அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது.

அன்றிரவு,

தன் அறையிலிருந்த ரோஹன் அறையை சுற்றி முற்றி பார்த்தவாறு, ‘என்னடா இது? எத்தனை படத்துல பார்த்திருக்கோம், டெகரேட் பண்ணி ஃபர்ஸ்ட் நைட் ரூம்மே பார்க்க அவ்வளவு கிக்கா இருக்குமே… ஆனா,  நம்ம ரூம் அப்படியே இருக்கு. ஒருவேள, இட்டாலில அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்களோ?’ என்று யோசித்தவாறு தன்னவளுக்காக காத்திருந்தான்.

திடீரென கதவு திறக்கப்படும் சத்தத்தில் ஆர்வமாக நிமிர்ந்தவனின் முகமோ, கதவை திறந்து கொண்டு வந்தவர்களை பார்த்ததும் அஷ்டகோணலாக மாறியது, கூடவே அதிர்ச்சியும்.

“டேய்! எங்கடா என் பொண்டாட்டி?” என்று ரோஹன் அலறியபடி கேட்க, “அதுவா மச்சி, உங்களுக்கு இப்போ சாந்திமுகூர்த்தம் நடக்க கூடாதாம், நேரம் சரியில்லையாமே… அதான், பேபிய அவளோட ரூம்க்கு அனுப்பி விட்டுட்டாங்க. நாங்க ஃபர்ஸ்ட் நைட்க்கு வெயிட் பண்ற புது மாப்பிள்ளைய பார்க்க கிளம்பி வந்துட்டோம்” என்று சொன்னவாறு பாபி கட்டிலில் மல்லாக்காக படுக்க, ரோஹனுக்கோ கோபம் புசுபுசுவென்று ஏறியது.

“என்னடா அம்பி, ரொம்ப எதிர்ப்பார்த்தியோ?” என்று சஞ்சய் கேலியாக கேட்க, “போடா” என்று திட்டியவன் விறுவிறுவென மாயாவை தேடி அவளின் அறைக்கு செல்ல போனான். “இப்போ நீ மாயாவ போய் பார்த்தேன்னா, சாந்தி முகூர்த்தத்தை ஒரு மாசம் கழிச்சி தான் வக்க சொல்வேன்னு அம்மா சொல்லிபுட்டாங்க” என்று சொல்லி சஞ்சய்யுடன் ஹைஃபை கொடுத்து பாபி சிரிக்க, கதவை தாழிட்ட ரோஹன் இருக்கும் மொத்த கோபத்தையும் அவர்களை அடித்து, வெளுத்தே தீர்த்துக் கொண்டான்.

இங்கு, மாயாவின் அறையில் அலைஸ் அவளையே அழுத்தமாக பார்த்திருக்க, ‘அய்யோ! ரோக்கி அண்ணா பாவம். ஆனா, இவ என்னன்னா, ஃபர்ஸ்ட் நைட்  நடக்கலன்னு கொஞ்சம் கூட ஃபீலிங்கே இல்லாம கொலை, சாவுன்னு பேசிக்கிட்டு இருக்காளே… ஓ மை கடவுளே!’ என்று மானசீகமாக புலம்பினாள் கீர்த்தி.

“அப்போ, சர்வாவ எங்ககிட்டயிருந்து தப்பிக்க விட்டது நீதான். ஏன் மாயூ?” என்று சலிப்பாக அலைஸ் கேட்க, “சர்வவேந்திரனோட சாவுக்கு நான் ஒரு ப்ளான் போட்டா, நீங்க அதை கெடுத்து விட்டிருவீங்க போல? நீங்க கொன்னா மட்டும் மாட்டிக்காம இருந்துருவீங்களா? என்ட், அவன கொன்ன கறை உங்க மேல தான் படியும். அவன் சாகனும். ஆனா, நாம அதுல எந்த விதத்துலயும் சம்மந்தப்பட கூடாது. அதுவும், அவன் எதை விதைச்சானோ, அதை தான் அறுக்கனும்” என்று தீவிரமாக சொன்னாள் மாயா.

“ஜிலேபி, வேணாம்டி. அதான் அவன நீயே போலிஸ்கிட்ட பிடிச்சி கொடுத்திட்டியே, அவங்க அவனை பார்த்துப்பாங்க. இந்த பேச்சை விட்டுரலாம்” என்று கீர்த்தி பயந்து சொல்ல, “நோ போண்டா, சில விஷ ஜந்து இருக்குற வரைக்கும் ஆபத்து தான். இன்னும் நாலே நாள்ல அவன் உயிர் போகனும்” என்று விஷமமாக சிரித்தவாறு சொன்ன மாயாவை பார்த்த அலைஸ், அதிர்ந்து தான் போனாள்.

“யூ மீன்…?” என்று அலைஸ் இழுக்க, “பொய்ஸன் உன் கைக்கு வர நான் ஏற்பாடு பண்றேன். அவன் சாப்பிடுற சாப்பாட்டுல அதை கலக்க வேண்டியது உன் பொறுப்பு. உன் மைக்கேல் எப்படி இறந்தாரோ அப்படி தான் அவனும் அந்த வலிய அனுபவிச்சி சாகனும் அலைஸ்” என்று சரியாக அலைஸ்ஸின் பலவீனத்தை வைத்து மாயா தன் திட்டத்தை சொல்ல, அலைஸ்க்கு கூட உள்ளுக்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

அடுத்தநொடி மாயாவின் திட்டத்துக்கு அவள் தலையசைக்க, மாயாவின் இதழ்களில் வெற்றிப்புன்னகை பூத்தது.

அடுத்தநாள்,

இன்னும் ஒரு வாரத்தில் மற்ற இரு ஜோடிகளின் கல்யாணம் என்றிருக்க, அன்றிரவே அனைவரும் பெங்ளூர் செல்வதற்கான வேலைகள் பரபரப்பாக நடக்க, ரோஹன் தான் தவித்து போய் விட்டான். “அம்மு… அம்மு…” என்று தன்னவளின் முந்தானையை பிடித்துக் கொண்டே அவன் சுற்ற, ஏற்கனவே அலுவலக வேலைகள், இன்று மீண்டும் பெங்ளூரிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் என மாயா தான் அவனை கண்டுக்கொள்ளவே இல்லை.

“அம்மு, ஏன் இப்படி பண்ற? அப்போ உன்னை நான் அவொய்ட் பண்ணதுக்கு, இப்போ நீ என்னை ரொம்பவே தவிக்க விடுற” என்று ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்றொன்பது முறையாக ரோஹன் பொறுமிக் கொள்ள, அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், “பேபி, அவங்க கல்யாணம் முடியட்டும். ஒரு வாரம் தானே…? ப்ளீஸ் பேபி” என்று கொஞ்சி அவனை சமாதானப்படுத்தினாள்.

“அவங்களுக்காகவா நம்ம ஃபர்ஸ்ட் நைட் அ தள்ளி போட்டிருக்க டெவில்?” என்று ரோஹன் கேட்க, “புரிஞ்சிக்கிட்டல்ல, அது போதும். இப்போ முதல்ல நீ கிளம்பு, யாராச்சும் பார்த்துர போறாங்க” என்று பதட்டப்பட்ட தன்னவளை பார்த்தவனுக்கு ‘அய்யோ’ என்று தான் இருந்தது. “அம்மு, நான் உன் புருஷன்டி” என்று ரோஹன் அழுது விடுவது போல் சொல்ல, மாயா சிரித்தேவிட்டாள்.

அவளின் தெத்துப்பல் தெரிய சிரிப்பில் மயங்கியவனுக்கு உணர்வுகள் மேலெழ, அவளை கிறக்கமாக பார்த்தவாறு நெருங்கியவன், “கண்ணா” என்ற தன் அம்மாவின் குரலில் அடித்து பிடித்து ஓடியே விட்டான். விமானத்தில் ஏறிய பிறகும், மாயா தன் அப்பாவின் பக்கத்தில் அமர்ந்து, சிறுவயது நினைவுகளை அவருக்கு சொல்லிக்கொண்டு வர, அவருக்கும் தான் இழந்த அந்த தருணங்களை நினைக்கும் போது மனது வலித்தாலும், அதை வெளிக்காட்டாது சிரிப்புடன் பேசிக் கொண்டே வந்தார்.

இதில் ரோஹன் தான் உதட்டை பிதுக்கியவாறு தன்னவளை எட்டி எட்டி பார்த்தவாறு வர, பாபிக்கும் சஞ்சய்க்கும் சிரிப்பு தாளவில்லை. பெங்ளூர் வந்ததும் இரு ஜோடிகளின் திருமண வேலைகள் பரபரப்பாக நடக்க, ஒரு வாரமாக மாயாவுக்கும் ரோஹனுக்கும் பேசிக் கொள்ளவே முடியவில்லை.

ஒருபக்கம் நண்பர்களின் கல்யாண வேலைகள், மறுபக்கம் இத்தனை நாள் அலுவலக வேலைகள் என்று தன் நண்பர்களின் வேலைகளும் சேர்ந்து அவனுக்கு குவிந்திருக்க, பாபியையும் சஞ்சய்யையும் அலுவலகத்திற்கு வர விடாது அவனே கவனித்துக் கொண்டான்.

மாயாவுக்கு உதவியாக ரவீந்திரன் அவளுடைய அலுவலக வேலைகளை கவனித்துக் கொள்ள, இவ்வாறு ஒரு வாரம் கடந்து இரு ஜோடிகளின் திருமண நாளும் வந்தது.

காதல்போதை💙
****************************

-ZAKI💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!