காதல்போர் 01

eiOOLW357649-263be385

சென்னையிலிருந்து வட இந்தியாவிலுள்ள மாநிலத்தில் ஒன்றான பீகாரின் முக்கிய நகரம் பட்னாவிற்கு சென்றுகொண்டிருந்த அந்த ரயிலில் விழிகள் கோபத்தை கக்க, பற்களைக் கடித்தவண்ணம் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் வேதா. வேதஷ்வினி.

அவளுக்குள் அத்தனை ஆத்திரம்!

‘உண்மைய வெளிச்சம் போட்டு காட்டினா வீட்டை விட்டு துரத்திடுவாங்களா? நான் மாறிடுவேன்னு நினைச்சிட்டாங்களோ? வாய்ப்பேயில்லை. அவ்வளவு சீக்கிரம் இந்த வேதா எதையும் விட்டுர மட்டா’ அவள் மனம் தனக்குள்ளேயே பொரிந்துகொள்ள, அவள் செவிகளில் அந்த வார்த்தைகளும் ஒலித்துக் கொண்டிருந்தன.

‘மிஸ்.வேதா, உங்க அப்பா மினிஸ்டர் ஆ இருந்தும் நீங்க அரசியல் அ நடக்குற தப்பை சுட்டிக்காட்டி பத்திரிகையில செய்தி வெளியிட்டது நல்ல விஷயம் தான். உங்க தைரியத்தாலதான் நாங்களும் அந்தமாதிரி ஒரு செய்திய வெளியிட சம்மதிச்சோம். ஆனா… இப்போ மேலிடத்துல ரொம்ப ப்ரஷர் பண்றாங்க. உங்கள நாங்க வேலைய விட்டு போக சொல்லல்ல. இந்த நிலைமை சரியாகுற வரைக்கும் நீங்க வராம இருக்குறது எங்களுக்குன்னு இல்லை உங்களுக்கும் நல்லதுன்னு தோனுது’

‘தந்தையின் அரசியல் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய தமிழ்நாட்டு உணவுத்துறை அமைச்சர்  நரேந்திரனின் மகள். கட்சிக்குள் கலவரம்!’

அவள் வேலை பார்க்கும் பத்திரிகை நிறுவனத்தின் தலைமை அதிகாரி சொன்ன வார்த்தைகளும், தொலைக்காட்சி செய்தியில் வந்த தலைப்புச் செய்தியும்தான் இவை.

இறுகிய முகமாக அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருந்தவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக சரியாக அவள் காதில் ஒலித்தது அவனின் கீச்சிடும் குரல்.

“ஜூம்மா ச்சும்மா தே… தே…
ஜும்மா ச்சும்மா தே தே ஜூம்மா…

ஜூம்மா ச்சும்மா தே… தே…
ஜும்மா ச்சும்மா தே தே ஜூம்மா…” என்ற ஹிந்தி பாடலை இடம் பொருள் பாராது பாடுகிறேன் பேர்வழியென்று வேதாவின் பக்கத்திலிருந்து அவன் கத்திக்கொண்டிருக்க, “ஷட் அப் விக்கி. இட்ஸ் இர்ரிடேட்டிங்” என்ற வேதாவின் கத்தலில் சட்டென நிறுத்தி  ‘க்கும்!’ என்று நொடிந்துகொண்டான் விக்கி என்கிற விக்ரம்.

‘ச்சே!’ என்று நெற்றியை எரிச்சலாக நீவிவிட்டுக் கொண்டவள், “நான் வேணா ஒரு கதை சொல்லட்டா வேதா?” என்ற விக்ரமின் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி அவனை முறைத்துப் பார்க்க, “வேதாதான் கதை சொல்லணுமா என்ன? விக்ரம் சொல்லக் கூடாதா?” அவளை மேலும் வெறுப்பேற்றவென கேலியாகக் கேட்டவனின் கவனம் ஒலித்த அலைப்பேசியின் சத்தத்தில் அதன் புறம் திரும்பியது.

“மினிஸ்டர் அங்கிள் கோலிங்” என்று திரையில் தெரிந்த பெயரில் அழைப்பை வேகமாக ஏற்று அலைப்பேசியை விக்ரம் தன் தோழியின் புறம் நீட்ட, “இதை என்னை  விட்டு தள்ளியே வை! இல்லைன்னா, தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க. அதான், துரத்தி விட்டுட்டாங்கல்ல, இப்போ என்ன? இப்படியெல்லாம் பண்ணா நான் சும்மா இருந்துருவேனா என்ன? ஒரு எழுத்தாளனோட எழுத்தை யாராலேயும் கட்டிப்போட முடியாது. என்னோட அடுத்த புத்தகமே இவரோட அரசியல பத்தி தான்” படபடவென வேதா பேசிக்கொண்டே போக, எதிர்முனையிலிருந்தவருக்கோ இதழில் மெல்லிய புன்னகை!

விக்ரமோ அழைப்பைக் காதில் வைத்து, “அங்கிள் அது…” என்று ஏதோ பேச வர, மறுமுனையிலிருந்த நரேந்திரன் என்ன சொன்னாரோ? ஸ்பீக்கர் பட்டனை அழுத்தி வேதாவின் அருகில் அலைப்பேசியை பிடித்திருந்தான் அவன்.

“லக்கி…” என்ற நரேந்திரனின் அழைப்பு அவருக்கு பதில் சொல்லச் சொல்லி அவளின் மனதை உந்தினாலும் தன் தந்தையின் மேலிருந்த கோபத்தில் வாயை இறுக மூடிக்கொண்டு வேதா அமர்ந்திருக்க, அவளின் கோபம் புரிந்தவர் தான் பேச வேண்டியதை பேசத் தொடங்கினார்.

“லக்கி, உன்னை நினைச்சி நான் ரொம்பவே பெருமைபட்டிருக்கேன். இப்போ சில உண்மைகள நீ வெளிச்சத்துக்கு கொண்டு வந்தப்போ கூட. ஆனா, ஒரு அப்பாவா அதை நான் ஆதரிச்சாலும் ஒரு அரசியல்வாதியா என்னோட தொழிலும் எனக்கு முக்கியம். இதுவே இந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா நியூஸ் வெளியிட்ட அடுத்தநாளே ஏரி பக்கத்துல செத்து கிடந்திருப்பாங்க. ஆனா, நீ என் மகளா போயிட்ட. இப்போ உன்னை அனுப்பி வைக்கிறது கூட கட்சியில ரொம்ப பிரச்சினை பண்றாங்க. இங்க இருக்குறது உனக்குதான் ஆபத்து”

என்று பேசிக்கொண்டே சென்ற நரேந்திரன், “ஓஹோ! தப்பு தப்பா அரசியல் பண்றீங்க. மக்கள ஏமாத்துறீங்க. இதை பத்தி செய்தி வெளியிட்டதும் என்னை ஒன்னும் பண்ண முடியாம வீட்டை விட்டு துரத்திடீங்க. அப்படி தானே!” என்ற வேதாவின் கோபமான கேள்வியில் அவளை சமாதானப்படுத்த முடியாது இருபக்கமும் சலிப்பாகத் தலையாட்டினார்.

“உனக்கே தெரியும் லக்கி, நீ என் வாழ்க்கையில வந்ததுக்கு அப்றம்தான் இந்த அரசியல் சொத்து எல்லாமே. யூ ஆர் மை லக்கி ச்சார்ம். ஆனா, உன் அம்மா. ஸப்பாஹ்! உன்னை ஏன்தான் இப்படி கரிச்சி கொட்டுறான்னே தெரியல. இதுல கட்சியில இருக்குறவங்க நீ பண்ண காரியத்தால உண்டான கோபத்துல எனக்கே தெரியாம உன்னை ஏதாச்சும் பண்ண வாய்ப்பிருக்கு. அதை நீ புரிஞ்சிக்காமதான் கார்ல போகாம கோபத்துல ட்ரெயின்ல போயிக்கிட்டு இருக்க” நரேந்திரன் சொல்ல, அதை இடைவெட்டிய வேதா, “அதுக்காக உங்களுக்கு வேற ஊரே தெரியலயா? போயும் போயும் ஸ்டேட் விட்டு ஸ்டேட் அந்த கிராமத்துக்குதான் அனுப்புவீங்களா?” என்று கத்திக் கேட்டாள்.

“உனக்கு பாதுகாப்பான இடம் வேற எதுவும் எனக்கு தோனல. உன் அம்மாதான் அவ பொறந்து வளர்ந்த ஊருக்கே அனுப்பலாம்னு சொன்னா. நிஜமாவே அந்த இடம் உனக்கு ரொம்பவே பாதுகாப்பா இருக்கும். கூடவே, நிறைய கத்துக்கலாம்” கடைசி வசனத்தை தயக்கமாக சொன்னவர், “லக்கிம்மா, அங்க யாரையும் எதிர்த்து பேசாத! அந்த ஊருக்கு நான் ஒருதடவைதான் போயிட்டு வந்திருக்கேன். ஆனா, நான் கேள்விப்பட்ட வரைக்கும் அங்க எதுவுமே மாறல. அங்க போனதும் நீயே எல்லாமே புரிஞ்சிப்ப. ஆனாலும், ரொம்ப கவனமா இரு!” என்று முடிக்க, வேதாவிற்கோ நரேந்திரனின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் சுத்தமாகப் புரியவில்லை.

ஒருவேளை, அந்த ஊர் மக்களை சந்தித்ததும் அவர் வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துக்கொள்வாளோ, என்னவோ?

“ஓஹோ! அம்மாதான் சொன்னாங்களா? சொல்லியிருப்பாங்க. சொல்லியிருப்பாங்க. சொந்த ஊராச்சே! துரத்தி விட்டும் கொஞ்சமாச்சும் திருந்தியிருக்காங்களா பாருங்க!” என்ற வேதாவின் வார்த்தைகளுக்கேற்ப நரேந்திரனின் மனைவி வைஷாலி வடஇந்தியாவை சேர்ந்த ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண்தான்.

வியாபார விடயமாக அந்த கிராமத்திற்குச் சென்ற நரேந்திரனுக்கு வைஷாலியை பார்த்ததுமே பிடித்துப்போக, வைஷாலிக்கும் அவர் மேல் அதே பிடித்தம்தான். வீட்டில் சொல்லி காதலுக்கு சம்மதம் வாங்குவது என்பது அந்த ஊரில் பெரிய தடை என்பதை புரிந்துக்கொண்ட நரேந்திரன், அங்கிருந்து வரும் போது தன்னுடன் வைஷாலியையும் அழைத்து வந்துவிட, நடந்த சம்பவத்தால் பெரிய கலவரமே வெடித்துவிட்டது.

ஒன்பது வருடங்கள் கழித்து அப்பா இறந்த செய்தியை கேள்விப்பட்டு மீண்டும் வைஷாலி தன் பிறந்த வீட்டிற்கு நரேந்திரனுடன் செல்ல, சும்மா விடுவார்களா என்ன? கிட்டதட்ட நரேந்திரனை கத்தியால் குத்தவே சென்றுவிட்டார் வைஷாலியின் அண்ணன் சுஜீப். களவரம் வெடித்து இறுதியில் சமாதானமானாலும் ஏனோ இரு வீட்டாருக்குமிடையில் எந்தவித போக்குவரத்தும் இல்லை.

வேதாவின் தங்கை தீப்தி பிறந்ததுமே கடிதத்தில் பேச ஆரம்பித்தவர்கள், காலத்திற்கேற்ப அவ்வப்போது அலைப்பேசியில் நலம் விசாரித்துக்கொள்ள, இவ்வளவுதான் இரு வீட்டாற்களுக்குமான இன்றைய தொடர்பாகிப்போனது.

தன் மனைவி சொன்னதை கேட்டு வேதாவை அந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்த நரேந்திரனுக்கு கூட உள்ளுக்குள் சற்று பயம் இருக்கத்தான் செய்கிறது. அது அந்த கிராம மக்களை நினைத்து மட்டுமல்ல,  அவர்களை சந்திக்க போகும் பெண்ணியவாதியான தன் மகளை நினைத்தும்தான்.

“வேதா, என்கிட்ட கேக்காம நீ எதுவுமே பண்ண கூடாது. அங்கிள் என்னைதான் உனக்கு பாடிகார்ட் ஆ அனுப்பியிருக்காரு” விக்ரம் விறைப்பாக சொல்ல, “ஆஹான்! அப்போ என் பாதுகாப்புக்குதான் வந்திருக்கீங்களா? அப்போ, நோர்த் இந்தியன் பொண்ணா பார்த்து நோர்த் இந்தியாவுலயே செட்ல் ஆகணுங்கிற உங்க கனவெல்லாம் பொய்யா கோபால்?” என்ற வேதாவின் பொய்யான ஆச்சரியப் பாவனையில் “ஹிஹிஹி… அதே அதே” என்று இழித்து வைத்தான் விக்ரம்.

நரேந்திரன் வீட்டு கார்ஓட்டுனரின் மகன்தான் வேதாவினால் விக்கி என்றழைக்கப்படும் விக்ரம். சிறுவயதிலிருந்து வேதா நெருங்கி பழகும் ஒரே ஆண் நண்பன். வேதா எங்கு சென்றாலும் வால் போல் அவளின் பின்னாலே செல்பவன், இன்றும் அடம்பிடித்து அவளுடனே வந்துவிட, தன் மகளின் நடவடிக்கைகளை தெரிந்துக்கொள்ள அவனையே தன் உளவுத்துறை அமைச்சாக நியமித்துவிட்டார் நரேந்திரன்.

அடுத்த சிலமணித்தியாலங்களிலே பட்னா நகரத்திற்கு இருவரும் வந்துசேர, ரயில்நிலையத்திலிருந்து வெளியில் வந்தவர்களை வரவேற்கவென சரியாக காத்திருந்தது ஒருகார்.

இவர்களை கண்டதுமே அலைப்பேசியிலிருந்த புகைப்படத்தையும் வேதாவையும் மாறி மாறி பார்த்து உறுதிசெய்துவிட்டு ஓடி வந்த இளைஞனொருவன், “பாய் நெ முஜே ஆப்கோ லானே கி லியே பேஜா ஹய் (உங்களை அழைத்து வர அண்ணன் என்னை அனுப்பி  வைத்தார்)” என்று ஹிந்தியில் சொன்னவாறு பக்கத்திலிருந்த விக்ரமை, “ஆப் கோன் ஹேன்?” என்று சந்தேகமாக கேட்டான்.

அந்த இளைஞனை மேலிருந்து கீழ் பார்த்த விக்ரம், “எனக்கு ஹிந்தி தெரியாது போடா!” என்றுவிட்டு சிலுப்பிக்கொண்டு முன்னே சொல்ல, அவனோ, “கியா (என்ன)?” என்று கேட்டவாறு புரியாது பார்த்தான் என்றால், சிரித்தவாறு காரின் பின்சீட்டில் அமர்ந்தாள் வேதா.

(வேதாவினதும் விக்ரமினதும் உரையாடல்களை தவிர ஏனைய அனைத்து உரையாடல்களும் ஹிந்தியில் தான். ஆனால், அதை தமிழில் பார்க்கலாம் நட்புகளா. ஏன்னா, எனக்கும் ஹிந்தி தெரியாது போடா!😅)

அந்த இளைஞனோ காரை செலுத்தியவாறு, “என்னோட பெயர் சந்தீப். உங்கள விட வயசுல கம்மிதான்” என்று சொல்ல, “பார்த்ததுமே தெரிஞ்சது. ஆமா… ஊருக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?” ஜன்னல் வழியே பட்னா நகரத்தின் சுற்றுப்புற சூழலை பார்த்தவாறு கேட்டாள் வேதா.

“இன்னும் கொஞ்சதூரம்தான் தீ(அக்கா)” சந்தீப் சொல்ல, வேதாவின் தோளை சுரண்டிய விக்ரம், “வேதா, ஊருக்குள்ள வந்துட்டோமா என்ன?” என்று கேட்க, இருபக்கமும்  தலையாட்டியவள், “இப்போ நாம சிட்டியில இருக்கோம். நாம போக வேண்டியது கிராமத்துக்கு. அதுவும், அது ஒரு பழைய கிராமம். ச்சே!” என்று சலித்தவாறு சொல்லவும், சந்தீப்போ கண்ணாடி வழியாக இருவரையும் மாறி மாறி பார்த்தவாறு வண்டியை செலுத்தினான்.

“நீங்க இரண்டு பேரும் காதலிக்கிறீங்களா என்ன? இல்லைன்னா, உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிருச்சா?” சந்தீப் சட்டென கேட்ட கேள்வியில் வேதா திகைத்தாள் என்றால், கேள்வியின் அர்த்தம் புரியாது விழித்த விக்ரம் வேதா விளக்கியதும் “அய்ய ச்சீ…” என்று முகத்தை அஷ்டகோணலாக சுழித்துக்கொண்டான்.

“இல்லை… ஊருல இப்படியெல்லாம் கிடையாது. நீங்க வந்ததும் உங்களுக்கே எல்லாம் புரியும்” சந்தீப் பொடி வைத்து பேச, வேதாவோ புருவத்தை யோசனையாக சுருக்கினாள்.

அடுத்த சிலமணித்தியாலங்களில் ஊர் எல்லையை தாண்டி ஊருக்குள் வண்டி நுழைய, ஊரின் இயற்கை அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவள் அப்போது அறியவில்லை, இன்னும் சற்றுநேரத்தில் தன் இயல்புக்கு எதிரான ஒருவனை சந்திக்க போகிறோம் என்று.

“வாவ் வேதா! ஊர் சூப்பரா இருக்கு. நீ வேணா பாரு, ஊரை விட்டு போகும் போது என் ஹிந்தி கிளியையும் கூடவே கொத்திட்டு வர போறேன். எங்கே அவள்? எங்கே அவள்?” விக்ரம் காரிலிருந்து வெளியே பார்த்தவாறு பாட, தலையிலடித்துக்கொண்ட வேதாவிற்கு ஏனோ இந்த இடமும், இந்த மண்ணின் வாசனையும் புதிது போலவே தெரியவில்லை.

நிறைய நாட்கள் இங்கே வாழ்ந்த, இங்கிருந்தவர்களுடன் பழகிய உணர்வு!

“விக்கி, நான் இன்னைக்குதான் நோர்த் இந்தியா பக்கமே வந்திருக்கேன். ஆனா, எதுவுமே புதுசா தெரியல. எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட இடமா தெரியுது” வேதா நெற்றியை நீவிவிட்டவாறு சொல்ல, “ஒருவேள, வைஷாலி அம்மா அவங்க பொறந்து வளர்ந்த ஊரை பத்தி உன்கிட்ட அடிக்கடி சொல்லியிருப்பாங்க. அதான் உனக்கு இதெல்லாம் புதுசா தெரியல” ஏதோ ஞானி போல் சொன்னான் விக்ரம்.

ஆனால், வேதாவிற்குதான் மனம் எச்சரிக்கை செய்வது போல் இருந்தது. கண்களை அழுந்த மூடி அவள் அதே யோசனையில் அமர்ந்திருக்க, சரியாக இவர்களின் வண்டியின் முன்னால் பதட்டமாக ஓடிவந்து விழுந்தான் ஒருவன்.

சட்டென வண்டியை நிறுத்திய சந்தீப், வண்டியின் முன்னால் விழுந்தவனின் பின்னால் கையில் அருவாளுடன் வந்தவர்களை பார்த்து எச்சிலை விழுங்கியவாறு அமைதியாக அமர்ந்திருக்க, “பார்த்து போக மாட்டீங்களா? இப்படியா மோதுவீங்க?” என்று நடப்பது தெரியாது கார்கதவை திறந்துக்கொண்டு விழுந்த இளைஞனை நோக்கி ஓடினாள் வேதா.

சந்தீப்பிற்கோ மூச்சே நின்றுவிட்டது. ஆனால், அவனின் முகபாவனையை கவனித்து நடப்பது எதுவும் புரியாது விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தது என்னவோ விக்ரம் தான்.

வேதாவோ காரின் முன்னால் விழுந்த இளைஞனை, “ஹெலோ, உங்களுக்கு எதுவும் ஆகல்லையே?” என்று ஹிந்தியில் கேட்டவாறு அவனை நெருங்க, காரில் மோதியதில் அடிப்பட்ட காலை பிடித்தவாறு வலியில் ‘ஆஆ…’ என்று கத்திய இளைஞன் வேதாவை பார்த்ததுமே, “ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க! என்னை அவங்ககிட்ட இருந்து காப்பாத்துங்க” என்று உயிர்போகும் பயத்தில் கத்தினான்.

அவனுடைய முகம் ஏதோ பேயறைந்தது போலிருந்தது. ஏற்கனவே அவனின் முகம், கைகால்களில் காயம் இருக்க, அதை கவனித்த வேதா, “உங்களுக்கு ரொம்ப அடிபட்டிருக்கு. ஆனா… கார் அவ்வளவு ஃபோர்ஸ் ஆ உங்க மேல மோதல்லையே! நீங்க மொதல்ல எழுந்துருங்க. ஹோஸ்பிடல் போகலாம்” என்று அந்த இளைஞனுக்கு உதவி செய்யப் போக, அடுத்தநொடி வேதாவின் முழங்கையை தன்னை நோக்கி இழுத்து நிறுத்தியது ஒரு வலியகரம்.

இதை சற்றும் எதிர்பார்க்காதவள், முதலில் அதிர்ந்து விழித்தாலும் பின் தன்னை சுதாகரித்து தன் கரத்தை பற்றியிருந்தவனை, “எவ்வளவு தைரியம் இருந்தா…” என்று கோபமாக கேட்டாவாறு  நோக்க, இரு உதடுகளுக்கிடையில் சிகரெட்டை வைத்து புகையை ஊதியவாறு புருவ முடிச்சுகளுடன் தன்னை கோபமாக நோக்கிய விழிகளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அவனுடைய விழிகளோ அவளையே உறுத்து விழிக்க, சரியாக “ராவண் பையா!” என்ற தன் அடியாளின் அழைப்பில் அவளை உதறிவிட்டவன் கொஞ்சமும் இரக்கமின்றி தன் கையிலிருந்த பெரிய கத்தியால் அந்த இளைஞனின் கையை ஒரே வெட்டாக வெட்ட, பக்கத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த வேதாவிற்குதான் இதயமே நின்றுவிட்டது.

அந்த இளைஞனோ வலி தாங்க முடியாது, “பாய், என்னை விட்டுருங்க. இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்று அடித்தொண்டையிலிருந்து கத்திக் கதற, ஒற்றை புருவத்தை உயர்த்தி இதழை ஏளனமாக வளைத்து தன் அக்மார் புன்னகை புரிந்தான் ராவண். ராவண் மெஹ்ரா.

அவனுடைய பத்து அடியாட்களும் அவனை சுற்றி நின்றிருக்க, இதை பார்த்தவாறு தெருவோரத்தில் நின்றிருந்தனர் ஒருசிலபேர். ஆனால், எவரும் அவனை காப்பாற்ற முன்வரவில்லை. அது ராவண் மேலுள்ள பயத்தினால் என்று அவர்கள் மட்டுமே அறிவர்.

கத்தியை ஏந்தியிருந்த கையை ஒருபக்க முட்டியில் ஊன்றியவாறு தரையில் அமர்ந்த ராவண் தன்னெதிரே வலியில் கதறிக்கொண்டிருந்தவனை சிவந்த கண்களுடன் நோக்க, நேரில் பார்த்த காட்சியில் உண்டான அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றிருந்தாள் வேதா.