காதல்போர் 04

eiOOLW357649-db56e7ed

அடுத்தநாள் காலை,

“மோர்னிங்” என்றவாறு உணவுமேசையில் வேதா விக்ரமுடன் அமர, மேசையில் உணவுப்பாத்திரங்களை வைத்துக்கொண்டிருந்த சீதா சட்டென நிமிர்ந்து அவளை அதிர்ந்துப் பார்த்தார் என்றால், சுற்றியிருந்த பெண்களோ ஒருவரையொருவர் பயந்தபடி பார்த்துக்கொண்டனர்.

அவர்களின் பார்வையெல்லாம் வேதா கண்டுகொள்ளவேயில்லை. அவளை மெல்ல நெருங்கி, “வேதா, வீட்டு ஆம்பிளைங்க யாரும் வரல. அதுக்குள்ள நீ சாப்பிடுறியே” சீதா மெதுவாக சொல்ல, “நான் சாப்பிட எனக்கு பசி வந்தா போதுமே. எதுக்கு ஆம்பிளைங்க வரணும்?” புரியாது கேட்டவாறு இரண்டு சப்பாத்திகளை எடுத்து தன் தட்டில் வைத்துக்கொண்டாள் அவள்.

சீதாவோ பத்மாவதியை ஒரு பார்வை பார்க்க, வேதாவை பார்த்த அந்த பெரியவருக்கும் வேதா பேசும் வார்த்தைகள் நியாயமாக தோன்றினாலும் இதுவரை இந்த ஊர் பெண்கள் செய்யாத, பழகாத பழக்கவழக்கங்களை பார்க்கையில் சற்று சங்கடமாகத்தான் இருந்தது.

சரியாக, சீதாவிடம் வேதாவை கண்களால் காட்டி, ‘என்ன இது?’ என்று கேட்டு வேதாவை முறைத்தவாறு சுஜீப் அவளெதிரே அமர, ‘என்ன இவ இப்படி இருக்கா?” என்று யோசித்தவாறு தன் தந்தை அருகில் அமர்ந்தான் வம்சி.

வேதாவும் விக்ரமும் நிமிர்ந்து எவரையும் பார்க்கவில்லை. ‘சோறு தான் முக்கியம்’ என்ற ரீதியில் இருவரும் தட்டிலே முகத்தை புதைத்திருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… தீப்தி எப்படி இருக்கா?” செறுமலுடன் ஆரம்பித்து கேட்டார் சுஜீப்.

“ம்ம்… நல்லா இருக்கா. அம்மா அப்பா கூட” தன் தங்கை பற்றி சொன்னவள் அவர் கேட்காத கேள்விக்கும் பதிலை சொல்லி சாப்பிடுவதிலே குறியாக இருக்க, “வைஷாலிக்கு எங்க ஜாதியில ஒரு பையன பார்த்திருந்தோம். ஆனா அவ, ஓடிப்போய் குடும்ப மானத்தை வாங்கி இப்போ கண்ணுக்கு தெரியாத தூரத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கா. அந்த ஆனந்த்தான் இவ ஓடிப்போனதுல ரொம்ப அவமானப்பட்டான்” என்று சலித்துக்கொண்டார் சுஜீப்.

“கல்யாணமாகி கல்யாண வயசுல ஒரு பொண்ணு பொறந்தும் வளர்ந்தாச்சு. இப்போ போய் அவங்களுக்கு பார்த்த மாப்பிள்ளைய பத்தி சொல்லிக்கிட்டு இருக்கு இந்த பெருசு. அய்யோ அய்யோ…” தமிழில் மெதுவாக முணுமுணுத்தவாறு வேதா சிரித்துக்கொள்ள, அது பக்கத்திலிருந்த பத்மாவதி காதில் விழவும் பக்கென்று சிரித்துவிட்டார் அவர்.

சுஜீப்பிற்குதான் எதுவுமே புரியவில்லை. பத்மாவதி சிரிக்கவும் அவரைப் புரியாது பார்த்தவர், வாயைப்பொத்தி சிரித்தவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்த வேதாவை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டார்.

சரியாக வீட்டுக்குள் ஓடி வந்த சிறுமியொன்று வேதாவின் அருகில் சென்று நின்று அவளின் கையை பிடித்துக்கொள்ள, “ஜூஹி…” என்றழைத்தவாறு வந்த அச்சிறுமியின் தாயோ அனைவரும் இருப்பதை உணர்ந்து பதட்டமாக தலையில் முக்காடு போட்டுக்கொண்டார்.

வேதாவோ தக்காளி பழம் போன்று சிவந்து குண்டாக இருந்த அச்சிறுமியின் கன்னத்தை, “ஹவ் க்யூட்…” என்றவாறு தொட போக, அடுத்து சுஜீப் கத்திய கத்தலில் அவளுக்கே தூக்கி வாரிப்போட்டது.

“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி அனுமதி கேக்காம வீட்டுக்குள்ள வந்திருப்ப? என்ன உன் தகுதி என்னன்னு மறந்து போயிருச்சா? வெளில போ!” சுஜீப் காட்டுக்கத்து கத்த, தலையை மறைத்திருந்த முந்தானையை பிடித்திருந்த அந்த பெண்ணின் கையின் நடுக்கம் வேதாவிற்கே அப்பட்டமாக தெரிந்தது.

“என்னை மன்னிச்சிருங்கய்யா. மன்னிச்சிருங்க. பொண்ணு ஓடி வரவும் பயந்துப்போய்தான்…” அந்தப்பெண் நடுங்கும் குரலில் பேச, சுஜீப் மீண்டும் கத்துவதற்கு முன் அவரை இடைவெட்டி, “இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி கத்துறீங்க? அக்கா, உங்க பொண்ணா இது?” என்று கேட்டாள் வேதா.

சுஜீப்போ ‘ச்சே!’ என்று சலித்தவாறு சாப்பிடுவதில் கவனமாக, வேதா கேட்டதில் ‘ஆம்’ என தலையசைத்த அந்தப்பெண் எச்சரிக்கும் பார்வையுடன் தன் மகளை அழைக்க, ஜூஹியும் சுஜீப்பின் கத்தலில் பயந்துப்போய் அங்கிருந்து நகரப்போனாள்.

அவளின் குட்டி ஜடையை பிடித்து நிறுத்திய வேதா, “பார்க்க சின்ட்ரெல்லா மாதிரி க்யூட் ஆ இருக்க. என்ன படிக்கிற?” என்று அவள் கன்னத்தை கிள்ளிக் கேட்க, சுஜீப்பும் வம்சியும் ஏளனமாக சிரித்தார்கள் என்றால், “தீ, நான் படிச்சி முடிச்சிட்டேன்” பெருமையாக சொன்னாள் அந்தக் குட்டிச்சிறுமி. அவள் வார்த்தைகளில் அத்தனை வெகுளித்தனம்.

வேதாவிற்கோ ஒருநிமிடம் புரியவில்லை. “படிச்சி முடிச்சிட்டியா?” புரியாது அவள் வார்த்தைகள் வெளிவர, “இங்க பொம்பளைங்களுக்கு ஆரம்பக்கல்வி மட்டும்தான். எழுத படிக்க தெரிஞ்சதும் படிப்பை நிறுத்திருவோம்” வம்சி சொல்ல, “வாட்?” என வேதா அதிர்ந்து கத்தியேவிட்டாள்.

“வேதா, நான் உனக்கு புரிய வைக்கிறேன். இப்போ எதுவும் பேச வேணாம். நீ சாப்பிட்டு அறைக்கு போ” பிரச்சினை நேர்ந்துவிடுமோ? என்று பயந்து பத்மாவதி சமாளிக்க முயல, அதற்குள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், “ஆமா, பொட்ட புள்ளைங்களுக்கு எதுக்கு படிப்பு? இது இப்போ மட்டும் இல்லை. இங்கயிருக்குற எல்லா பொம்பளைங்களுக்கும் எழுத படிக்க மட்டும்தான் சொல்லிக் கொடுப்பாங்க. ஏன் உன் அம்மா உன்கிட்ட சொல்லல்லயா?” சர்வ சாதாரணமாக கேட்டார் சுஜீப்.

“என்ன பேசுறீங்க நீங்கெல்லாம்? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உங்களுக்கு? பொண்ணுங்களுக்கு எதுக்கு படிப்பு அவசியம்னு கேக்குறதே அவசியமே இல்லாத கேள்விதான். அவங்களுக்குன்னு ஒரு அடையாளம் வேணும். ஆனா நீங்க…” ஆவேசமாக பேசிக்கொண்டே சென்ற வேதாவின் வார்த்தைகள், “இன்னாரோட மனைவின்னு கிடைக்குற அடையாளமே அவளுக்கு போதும். இல்லைன்னா, உன்னை மாதிரிதான் கலாச்சாரத்தை மதிக்காம இஷ்டத்துக்கு இருப்பாங்க” என்றான் வம்சி ஏளனமாக.

வேதாவுக்கோ பிபி எகிறிக்கொண்டே சென்றது. “நீயெல்லாம்…” என்று அவள் பேச வரும் முன் அதை குறிக்கிட்டு, “சரியா சொன்ன பேட்டா. வைஷாலி ஓடிப்போனப்போ கூட வராத இத்தனை கோபம் அவ பொண்ணை சரியா வளர்க்காம விட்டதை பார்க்கும் போது வருது. இங்க பொம்பளைங்களுக்குன்னு ஒரு வட்டம் இருக்கு. அதுக்குள்ளதான் அவங்களோட வாழ்க்கை. அதிகமா படிச்சதால தானே இத்தனை கேள்வி கேக்க தோனுது? அதான் தேவையில்லாத கேள்விய உருவாக்குற படிப்பு தேவையில்லைன்னு பொம்பளைங்களுக்கு விதிச்சிட்டோம்” என்று வந்த சுஜீப்பின் வார்த்தைகளில் அவளுக்கு சுற்றியிருப்பதை அடித்து நொறுக்கும் ஆத்திரம்!

கோபத்தில் மேசையில் அடித்து எழுந்தவள் விறுவிறுவென பாதி சாப்பாட்டிலே எழுந்து அறைக்குச் சென்று கதவடைத்துக்கொள்ள, பேசியது எதுவும் புரியாவிடினும் பிரச்சினை என்று மட்டும் உணர்ந்த விக்ரமிற்கு ‘வேதாவை பின்தொடர்வதா? உணவை தொடர்வதா?’ என்ற அதிமுக்கிய குழப்பம்!

அறை ஜன்னல் வழியே வெளியே வெறித்தவாறு நின்றிருந்தவளுக்கு நடப்பவைகளை பார்த்து ஆதங்கம் மட்டுமே. ‘உரிமைகளை துறந்து என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் பெண்கள்?’ என்ற ஆத்திரம்.

சரியாக அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக, “வேதஷ்வினி” என்ற பத்மாவதியின் குரல் செவிகளில் விழ, அப்போதும் திரும்பிப் பார்க்காது வெளியே வெறித்தவாறு தன் ஆதங்கத்தை கொட்டத்துவங்கினாள் அவள்.

“என்னத்தான் நடக்குது இங்க? என்னால எதையுமே ஜீரணிக்க முடியல. வெளியில பொண்ணுங்க ஏதேதோ சாதிக்கிறாங்க. ஆனா இங்க, பொண்ணுங்களுக்கு படிப்பை கொடுக்கவே யோசிக்கிறாங்க. வாழ்க்கைக்குள்ள சில ரூல்ஸ் இருக்கலாம். ரூல்ஸ்தான் உங்க வாழ்க்கையாவே இருக்கு. ஒருத்தர் கூடவா உங்க உரிமைக்காக போராடல?” வேதா கலங்கிய குரலில் பேச,

“இங்க இப்படிதான்ம்மா. இது எதையும் மாத்த முடியாது. உரிமைக்காக எப்படிம்மா போராட சொல்ற? கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பெண் சுதந்திரம் பேசப்போன பொண்ணை அவ ஃபேமிலியே கொன்னுட்டாங்க. நாங்களும் இதுக்கு பழகிட்டோம். இங்கயிருந்து போற வரைக்கும் நீயும் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஏத்த மாதிரி…” பத்மாவதி முடிக்கவில்லை, “வாய்ப்பேயில்லை” என்ற வேதாவின் கத்தல் அவர் பேச்சை நிறுத்தியது.

“போகும் போது மாமா சொன்னாரு. அப்போ புரியல. இப்போ புரியுது. ஆனா பத்து, எனக்கொரு சந்தேகம். சிலபொண்ணுங்க முகத்தை மூடிக்கிட்டு குனிஞ்ச தலை நிமிராம நடக்குறாங்களே, எதிர்ல இருக்குற சுவருல மோதிர மாட்டாங்களா?” அதிமுக்கிய கேள்வியாக விக்ரம் முறுக்கை கொறித்தவாறு கேட்க, ‘ச்சே!’ என்று சலித்துக்கொண்டாள் வேதா.

“பொண்ணுங்கள அடிமை மாதிரி நடத்துறாங்க. தப்பு கண்ணு முன்னாடி நடக்குது. மக்களோட சேர்த்து போலிஸும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. என்ன மாதிரியான ஊர் இது? இப்படி வாழ்றதுக்கு விஷத்தை குடிச்சி செத்துரலாம்” அத்தனை எரிச்சல் வேதாவின் வார்த்தைகளில்.

“சாகுறதுக்கு கூட தைரியம் இல்லை இந்த ஊர் பொம்பளைங்களுக்கு. ஒரு தப்பு நடந்திருக்குன்னு அதை பத்தி ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் போகுறதுக்குள்ள லஞ்சம் போயிரும். அதான் நீ பார்த்திருப்பியே! இதை மாத்த நினைக்கிறது முட்டாள்தனம்” பத்மாவதி சொல்ல, ஆடையை மடித்துக்கொண்டிருந்த அம்ரிதாவோ, “நீங்க எதுக்கும் ராவண் பையாகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க. கண்டிப்பா இப்போ உங்கள கண்காணிக்க ஆரம்பிச்சிருப்பாங்க” என்று யோசனையுடன் சொன்னாள்.

“ஆமா, அந்த மெஹ்ரா குடும்பம் ரொம்பவே ஆபத்தானவங்க. இந்த கிராமத்தோட மொத்த கட்டுப்பாடும் அவங்களோடதுதான். உனக்கே புரிஞ்சிருக்கும். போலிஸ் கூட அந்த சுனில்கிட்ட பயந்துதான் பேசுவாங்க. ஆனா, நீ அந்த வீட்டு பையன் மேலயே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்க. ராவண முதல்தடவை எதிர்த்து பேசின பொண்ணுன்னா அது நீதான். அவனால உன்னை மறக்கவே முடியாது” பத்மாவதி சொல்ல, அவளுக்கோ ராவணுடைய ‘தமிழ் மிர்ச்சி’ என்ற வார்த்தைதான் காதில் ஒலித்தது.

“ஏய் வேதா, உன் சுரணையில்லாத மூக்குல அந்த வாசனை வருதா? வாவ்! உங்க அத்தை ஏதோ சூப்பரா சமைக்கிறாங்க போல! மீ கம்மிங் கம்மிங்” என்றவாறு வந்த உணவு வாசனையை நோக்கி அறைக்கு வெளியே ஓடிய விக்ரம், “அம்ரி…” என்றழைத்தவாறு உள்ளே வேகமாக வந்த பெண்ணின் மீதே மோதிவிட்டான்.

அவன் இடித்ததில் அந்த யுவதி தடுமாறினாளோ, இல்லையோ? இந்த இளைஞன் தடுமாற, கீழே விழப்போனவனை தாங்கிப் பிடித்துக்கொண்டாள் அவள்.

சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரையே ‘ஆஆ’ என பார்த்துக்கொண்டிருக்க, இவர்களிருவரும் இந்த உலகிலே இல்லை. விழி அகலாது இருவரும் ஒருவரையொருவர் பார்த்திருக்க, முதலில் நடப்புக்கு வந்தது என்னவோ அந்த யுவதிதான்.

தான் ஒரு ஆண்மகனை தாங்கிப் பிடித்திருப்பதை உணர்ந்து, “அரே கிருண்ஷா!” என்று பதறியவாறு கைகளை அவள் இழுத்துக்கொள்ள, விக்ரமோ பிடிமானம் இல்லாமல் தரையிலேயே விழுந்துவிட்டான். ஆனாலும், அவள் மீதான அவன் பார்வை மட்டும் மாறவில்லை.

அந்தப்பெண்ணோ திருதிருவென விழித்தவாறு கைகளை பிசைந்துக்கொண்டு நிற்க, தலைகுனிந்து சிரித்த அம்ரிதா, “வா மாஹி” என்று சொல்ல, குரல் வந்த திசைக்கு திரும்பிய மாஹிக்கு அப்போதுதான் கண்களில் சிக்கினாள் வேதா.

ஆச்சரியமாக விழிவிரித்து, “நீங்க… நீங்கதானே இந்த ஊருக்கு புதுசா வந்த பொண்ணு. இப்போ இந்த ஊருல தலைப்புச்செய்தியே நீங்கதான். எங்க பையாவ ஆம்பிளைங்க கூட எதிர்த்து பேச மாட்டாங்க. ஆனா நீங்க…” மாஹி பேசிக்கொண்டே சொல்ல, “உன் பையாவா?” என்று புரியாது கேட்டாள் வேதா.

மாஹியோ அவள் கேட்டதில் சட்டென அமைதியாகி சங்கடமாக உணர, “வேதா, இது மாஹி. மாஹி மெஹ்ரா. சுனில் மெஹ்ராவோட பொண்ணு” மாஹியின் சங்கடம் புரிந்து அம்ரிதாவே சொல்ல, முதலில் சற்று அதிர்ந்தாலும் பின் ஏளனச் சிரிப்புடன், “ஓஹோ! உன் அண்ணண்தான் அந்த சேவேஜா? அவங்க தப்பெல்லாம் நீ தட்டிக் கேக்க மாட்ட?” இறுதியில் கண்டிப்பாக முடிந்தன வேதாவின் வார்த்தைகள்

“அது நான் எப்படி கேக்க முடியும்? ஆம்பிளைங்கள எதிர்த்து கேள்வி கேக்குறது தப்பில்லையா?” வெகுளியாக கேட்ட மாஹியின் கேள்வியில் நெற்றியை நீவிவிட்டுக்கொண்டவள், “யாரு தப்பு பண்ணாலும் எதிர்த்து கேள்வி கேக்கலாம். தப்பு கிடையாது. அப்பாவா இருந்தாலும் சரி, புருஷனா இருந்தாலும் சரி” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மாஹியோ அம்ரிதாவை விழிவிரித்து நோக்க, மாஹியின் ஒவ்வொரு முகபாவனைகளையும் தன் விழியெனும் புகைப்படக்கருவியில் ரசித்துச் சிறைப்பிடித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

இரண்டுநாட்கள் சாதாரணமாக கழிந்த நிலையில் அன்று மாலை,

“ரொம்ப அழகா இருக்கு இந்த ஊர். இந்த அழகுக்காவே உங்க ஊரை பாராட்டலாம்” கார் ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த காட்சிகளை காணொளியாக பதிவு செய்தவாறு வேதா ஊரைச் சுற்றிப்பார்க்க, சந்தீப்பும் ஊரைப்பற்றி சொன்னவாறு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

கார் ஒரு இடத்திற்குச் செல்ல, அலைப்பேசி திரையை பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களில் சரியாக சிக்கியது அந்தக்காட்சி. திரையிலிருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்து வேதா அந்த காட்சியை கூர்ந்து நோக்க, அங்கு வீதியில் ஒரு பெரிய மக்கள் கூட்டம்.

இவளுக்கோ ‘என்ன நடந்தது?’ என்ற குழப்பம். “சந்தீப், காரை நிறுத்து!” வேதா சொல்ல, அவனோ கூட்டத்தை பார்த்ததுமே வேதாவின் அடுத்த நடவடிக்கை புரிந்து காரை வேகமாக செலுத்தினான்.

அவனின் திட்டத்தை உணர்ந்தவள், “இப்போ நீ நிறுத்தலன்னா, நான் குதிச்சிருவேன்” என்று சற்று மிரட்டலாக சொல்ல, “தீ, போகலாம். தேவையில்லாத பிரச்சினையில தலையிட…” காரை நிறுத்திவிட்டு சந்தீப் பேசியதை முழுதாக கேட்டால்தானே அவள்!

இறங்கி வேகவேகமாக கூட்டத்தை நோக்கிச் சென்று, மக்களை விலக்கி நடப்பதை பார்த்தவளுக்கு, “ஹவ் டேர் இஸ் ஹீ?” என்ற கோபக்கேள்வியோடு சேர்த்து ஜீப் பொனட்டின் மேல் அமர்ந்திருந்தவனின் மீது ஆத்திரம்தான் பொங்கியது.

நடுவீதியில் முகம் வீங்கி காயங்களுடன் ஒருவன் கைகால்கள் கட்டப்பட்டு முட்டியிட்டு தரையில் அமர்த்தப்பட்டிருக்க, அவனின் கெஞ்சல் கதறல்களை ஜீப் பொனட்டில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தவாறு பார்த்துக்கொண்டிருந்தான் ராவண்.

வேதாவோ விடயம் புரியாது நடப்பதை பார்த்துக்கொண்டிருக்க, பொனட்டிலிருந்து பாய்ந்து இறங்கிய ராவண், “இந்த ஊர்ல இருக்குற ஒவ்வொருத்தனுக்கும் முதலும் கடைசியுமா சொல்றேன். ஊர் கட்டுப்பாட்டை எவனும் மீற என்ன மீறணும்னு யோசிக்க கூட கூடாது. எங்களை எதிர்த்து எவன் நின்னாலும் விளைவு இனி இதை விட மோசமா இருக்கும்” என்று கர்ஜித்தவாறு கையை நீட்ட, அவன் கையில் கத்தியை வைத்தான் அவனுடைய அடியாளொருவன்.

ஒருகையால் கத்தியை சுழற்றியவாறு மறுகையால் சிகரெட்டை உதடுகளுக்கிடையில் வைத்து அந்த இளைஞனின் அருகில் சென்றவன், அவனை வெட்டப் போக, “இதை யாரும் தட்டிக் கேக்க மாட்டீங்களா? நீங்கெல்லாம் என்ன மனுஷங்க?” என்ற ஒரு கீச்சிடும் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.

கை அந்தரத்தில் நிற்க, அந்த குரலுக்கு சொந்தக்காரியை அடையாளங் கண்டுக்கொண்ட ராவண், “தமிழ் மிர்ச்சி…” என்றழைத்தவாறு திரும்பிப்பார்க்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ராவணை உக்கிரமாக முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அவனின் மிர்ச்சி.