காதல்போர் 05

eiOOLW357649-02faae05

தன்னெதிரே நின்றிருந்தவளை கையில் கத்தியோடு கோபமாக பார்த்தவாறு ராவண் நிற்க, அவனை விட கடுங்கோபத்தில் உக்கிரமாக அவனைப் பார்த்திருந்தாள் வேதா.

“அய்யோ தீ! வேணாம், தயவு செஞ்சி வந்துடுங்க” சந்தீப் காலில் விழாத குறையாக கெஞ்ச, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை அவள். சுற்றியிருந்தவர்களுக்கோ ஆச்சரியத்துடன் கூடிய திகைப்பு!

கத்தியை தன் அடியாளிடம் தூக்கிப்போட்டவாறு அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் வந்தவன், இடுப்பில் கைக்குற்றி, “உனக்கு தேவையில்லாத விஷயத்துல தலையிடாதன்னு அன்னைக்கே சொன்னேன். இதுவரைக்கும் யார் முன்னாடியும் இவ்வளவு பொறுமையா நான் பேசினது கிடையாது. விருந்தாளியா இங்க வந்திருக்க. உயிரோட உன் ஊருக்கு போய் சேரணுங்கிற நினைப்பில்லையா?” பற்களைக் கடித்துக்கொண்டுக் கேட்க, சுற்றியிருந்தவர்களே பயம் மனதை கவ்வியது.

ஆனால், இதற்கெல்லாம் அசைந்தால் அது வேதா அல்லவே!

“என்ன மிரட்டுறியா? உன்னை எதிர்த்து நின்னா கொன்னுடுவியா? முடிஞ்சா என் மேல கை வை! கண்ணு முன்னாடி நடக்குற தப்பை பார்த்துக்கிட்டு இருக்குறது கண்ணு குருடா இருக்குறதுக்கு சமம்” வேதாவின் வார்த்தைகள் அழுத்தமாக வர, பின்னந்தலை முடியை எரிச்சலாக தடவி விட்டுக்கொண்ட ராவண், அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்காது அத்தனைபேர் மத்தியில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

அவன் அடித்த அடியில் அவளுக்கு மூளையே கலங்கிவிட்டது எனலாம். கன்னத்தை கையால் பொத்தியவாறு அவள் அவனை அதிர்ந்து நோக்க, “இப்போ நீ போகலன்னா, அவனோட நிலைமைதான் உனக்கும். அந்த கத்தி உன்மேல இறங்க ஒருநிமிஷம் ஆகாது” ராவணுடைய வார்த்தைகள் மிரட்டலாக காதில் ஒலிக்க, ஓடிவந்த சந்தீப், “பையா, மன்னிச்சிருங்க. அவங்ககிட்ட நான் சொல்லி புரிய வைக்கிறேன். அவங்கள விட்டுருங்க” என்று அழாத குறையாக கெஞ்சினான்.

ஆனால், சந்தீப் பேசிக்கொண்டிருக்கும் போதே ராவணுடைய கன்னத்தில் ஐவிரல்கள் ஆவேசமாக பதிந்திருக்க, சுற்றியிருந்த மொத்த பேருமே அதிர்ந்து விழித்தார்கள் என்றால், சந்தீப்பிற்கோ மயக்கம் வராத குறைதான்.

தான் வாங்கிய அடியில் உண்டான கோபத்தில் ராவணின் கன்னத்தில் ‘பளார்’ என ஒன்று விட்டிருந்த வேதா, கையை உதறியவண்ணம் நிற்க, இதில் ராவணிண் மனநிலையை சொல்லவா வேண்டும்? இதுவரை ஆண்மகன்கள் கூட  கைவைக்க அச்சப்படும் நிலையில் ஒரு பெண்ணவள் அறைந்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .

அவனுடைய அடியாட்களோ, “பையா…” என்று கத்தியவாறு அவனை நோக்கி வர, கைநீட்டி ‘வேண்டாம்’ என தடுத்தவனுக்கு அவமானத்தில் முகமே கறுத்துப்போயிருந்தது.

கண்கள் சிவக்க, அவன் பற்களை நரநரவென கடிக்கும் சத்தம் சுற்றியிருப்பவர்களுக்கே கேட்டிருக்கும். அவனுடைய பார்வையில் சற்று உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் வெளியில் காட்டாது வேதா விறைப்பாகவே நிற்க, ஒற்றை புருவத்தை உயர்த்தி இதழை வளைத்து தன் அக்மார்க் புன்னகை புரிந்தான் ராவண்.

அதன் அர்த்தம் புரியாது வேதா விழிக்க, அவள் கொஞ்சமும் எதிர்ப்பாக்காது ஒருகையால் அவளின் கையை முறுக்கி முதுகுப்புறம் கொண்டு வந்து மறுகையால் அவளின் தாடையை ராவண் இறுகப்பிடிக்க, அவனின் உடும்புப்பிடியில் உண்டான வலியில், “ஆஆ…” என கத்திவிட்டாள் வேதா.

“இங்க பொம்பளைங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு. ஆம்பளைங்களே என்னை எதிர்த்து நிக்க பயப்படுவாங்க. ஆனா பொட்டச்சி நீ…” என்று கேட்டவாறு அவள் கையை மேலும் வளைக்க, அந்த வலியை அவளால் தாங்கவே முடியவில்லை.

“என்னை விடுடா! என்னை விடு” தாய்மொழியிலே அவள் கத்த ஆரம்பிக்க, ஏளனமாக சிரித்தவன், “வலிக்குதா? இன்னும் வலிக்கட்டும். நெஞ்சை நிமிர்த்திட்டு என் முன்னாடி நீ எதிர்த்து நிக்குறப்போ உன்னை கொல்லத்தான் தோனுது. போயும் போயும் ஒரு பொம்பளைக்கிட்ட என் பலத்தை காட்ட விரும்பல. லுக், இங்க இருக்குற வரைக்கும் குருடாவே இரு! இல்லை, கொன்னுடுவேன் உன்னை” அத்தனை கோபத்தோடு பேசியவன் தன் கோபம் மொத்தத்தையும் அவள் கைகளில் காட்ட, தாங்க முடியாத வலியினால் அவளுக்கு கண்களில் கண்ணீரே கசிந்துவிட்டது.

உதடு துடிக்க, கன்னத்தில் ஐவிரல்கள் பதிந்து சிவந்துப்போய் பக்கவாட்டாக திரும்பி, விழிநீரோடு அப்போதும் தன்னை முறைத்துக்கொண்டிருப்பவளைப் பார்த்தவன், பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை. அவளை சட்டென உதறித்தள்ளிவிட்டு சந்தீப்பிடம் ‘அழைத்துச் செல்லுமாறு’ கண்களைக் கட்டினான்.

“நன்றி பையா” என்றவாறு சந்தீப்பும் அதற்குமேல் கொஞ்சமும் தாமதிக்காது வேதாவை இழுத்துக்கொண்டு காருக்கு செல்ல,

அடுத்தநொடி ராவண் தலையசைத்ததும் அந்த இளைஞனின் வயிற்றில்  கத்தியால் குத்தினான் அவனுடைய அடியாள்.

சிவந்த கண்களுடன் ராவணை உக்கிரமாகப் பார்த்தவாறே சென்ற வேதா, அந்த இளைஞனை வெட்டியதும் அதைப் பார்க்க முடியாது கண்களை இறுக மூடிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

வீட்டிற்கு வந்து அறையில் அடைந்தவளுக்கு கோபத்தை அடக்கவே முடியவில்லை. சரியாக அலைப்பேசி ஒலிக்க, திரையை பார்த்தவள் அழைப்பை ஏற்று காதில் வைத்து, “சொல்லுங்க மினிஸ்டர்” என்றாள் அழுத்தமாக.

எதிர்முனையில் நரேந்திரன்தான்.

“இப்போவே ஊருக்கு கிளம்பி வந்துரு லக்கி” அவருடைய வார்த்தைகள் வேகமாக வர, வேதாவிற்கோ அந்த வார்த்தைகள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்தான் இருந்தது.

“விக்கி சொன்னானா? அவன…” அவள் பற்களை கடிக்க, “இதுல என்ன தப்பு? இங்க பண்ண பிரச்சினையிலிருந்து உன்னை பாதுகாக்க அங்க அனுப்பிவிட்டா அங்கேயும் எல்லா விஷயத்துலேயும் தலையிடுற. சில கட்டுப்பாடுகள கத்துக்கதான் உன்னை அங்க அனுப்பிவிட்டேன். ஆனா, அதுவே தப்பாகிட்டு” கோபமாக வந்தன அவருடைய வார்த்தைகள்.

“தப்பு என்கிட்ட இல்லை. இந்த ஊரு மனுஷங்ககிட்ட இருக்கு. இதெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும். என்னால எதையும் ஜீரணிக்க முடியல. ச்சே! பொண்ணுங்கள அடிமை மாதிரி ட்ரீட் பண்றாங்க. கொலை பண்ணா கூட பார்த்துக்கிட்டு இருக்காங்க. என்ன மாதிரியான ஊர் இது?” வேதாவின் வார்த்தைகளிலிருந்த வலியை நரேந்திரனாலும் உணர முடிந்தது.

“அவங்க கலாசாரம் அப்படி வேதா. மாத்த முடியாது. நீ மாத்தவும் முயற்சிக்காத! ஊருக்கு கிளம்பி வந்துரு. இனியாச்சும்…” அதற்குமேல் அவருடைய அழைப்பை தொடரும் நிலை அவளின் அலைப்பேசிக்கு இல்லை. காரணம், அவள்தான் அதை சுவற்றில் விட்டெறிந்திருந்தாளே!

அலைப்பேசி சுக்குநூறாக சிதறி தரையில் கிடக்க, இரு கைகளையும் ஊன்றி கோபத்தை அடக்க படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

அடுத்தநாள்,

“ஸ்ஸ்… வலிக்குதுடா சனியனே” கன்னத்தில் விக்ரம் தடவும் தைலத்தில் உண்டான எரிச்சலில் வேதா கத்த, “இதுக்குதான் வாயடக்கம் ரொம்ப அவசியம். இப்போ பாரு! கன்னம் பழுத்துப்போய் கிடக்குது” பதிலுக்கு அவளை விடாது திட்டியவாறு ராவண் அடித்த அடியில் உண்டான காயத்திற்கு மருந்திட்டுக்கொண்டிருந்தான் விக்ரம்.

அதற்குமேல் எதுவும் பேசவில்லை வேதா. உதட்டை சுழித்தவாறு அமர்ந்திருக்க, “தீ…” என்றவாறு ஓடி வந்த மாஹி சோஃபாவில் அமர்ந்திருந்த விக்ரமை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள்.

“அது… ஹா…ய் வேதா தீ” ஒருவித பதட்டமாக அவள் வார்த்தைகள் வர, வேதாவோ அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்க்கவும், அதற்குமேல் அங்கு நிற்காது விக்ரமை பார்த்துவிட்டு அறைக்குள் ஓடி ஒளிந்துவிட்டாள் அவள்.

விக்ரமோ இதழ்விரித்து சிரிக்க, ஓரக்கண்ணால் அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், “என்னங்கடா நடக்குது இங்க? உன் பார்வையே சரியில்லையே… அவ யாரோட தங்கச்சின்னு தெரியும்தானே!” என்று கொடுப்புக்குள் சிரித்தவாறு சொல்லி ராவண் அடித்த கன்னத்தை தடவி விட்டுக்கொள்ள, “அது… அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை வேதா. சும்மா லுல்லுல்லாய்க்கு” என்ற விக்ரம் முகத்தை திருப்பி வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டான்.

சரியாக, “வேதஷ்வினி…” என்ற குரலில் விக்ரம் திடுக்கிட்டு திரும்ப, ‘இருக்குற வேதனையில இவர் வேற’ சலிப்பாக நினைத்தவாறு நிதானமாகவே திரும்பிப்பார்த்தாள் வேதா.

அங்கு சுஜீப்போ உச்சக்கட்ட ஆத்திரத்துடன் விறுவிறுவென அவளெதிரே வந்து கோபமாக நிற்க, அவருடைய பார்வையோ அவள் கன்னத்திலிருந்த கைதடத்தில் ஏளனமாக படிந்து மீண்டது. ஆனால், வேதாவோ அவரை ஏறெடுத்தும் பார்க்காது வேறெங்கோ பார்ப்பது போல் பாவனை செய்துக்கொண்டிருந்தாள்.

“உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா? ஆம்பிளைங்களுக்கு சமமா நடந்துக்க போனா இப்படிதான் வாங்கிட்டு வந்து உட்கார்ந்திருக்கணும். இனியாச்சும் பொண்ணு மாதிரி நடந்துக்க! இல்லைன்னா, பொணமாதான் உன் ஊருக்குப் போய் சேரணும்” சுஜீப் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, “பேட்டா!” என்று அதிர்ந்து அழைத்தார் பத்மாவதி.

ஆனால், தன் மகன் பார்த்த பார்வையில் அவர் அமைதியாக தலைகுனிந்து நின்றுவிட, வேதாவோ எதுவும் பேசாது இறுகிய முகமாக தரையை வெறித்திருந்தாள்.

அதேநேரம், “மருமகளே, வம்சிக்கு ஒரு வரன் பார்த்திருக்கோம்.  ரொம்ப அழகான பொண்ணு, சின்ன பொண்ணு. நம்ம ஊருலயே நல்ல வசதியான குடும்பம்தான். எல்லா விஷயத்துலேயும் உன்னை விட ரொம்ப உசத்தி. இப்போ பொண்ணு பார்க்கத்தான் போறோம். நீயும் கூட வர்றியா என்ன?” வேதாவை அவமானப்படுத்தவென வேண்டுமென்று சீதா கேட்க, “ஏன்? அம்ரி இல்லைன்னா பாட்டிய கூட்டிட்டு போகலாமே?” சலிப்பாக வந்தன வேதாவின் வார்த்தைகள்.

“என்ன பேசுற நீ? ஒரு நல்ல காரியத்துக்கு போறோம். விதவைகள எப்படி கூட்டிட்டு போக முடியும்? இது கூட தெரியல. அப்படி என்னத்தான் பெரிய படிப்பு படிச்சியோ?” சீதா நொடிந்துக்கொள்ள, வேதாவிற்கோ வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.

“ச்சீ… என்ன பேசுறீங்க நீங்க? உங்க மகனோட நல்ல காரியத்துக்கு உங்க பொண்ண விதவைன்னு ஒதுக்கி வைக்கிறீங்க. என்ன மாதிரியான மனுஷங்க நீங்க?” வேதா ஆவேசமாக கத்த, “தீ, அமைதியா இருங்க” என்று வேதாவை சமாளிக்க முயன்றாள் அம்ரிதா.

வேதா மீண்டும் பேச வரும் முன் அவளை இடைவெட்டி, “நாங்க அவள வெளில கூட்டிட்டு போய் அவ மத்தவங்களோட பார்வையில அவமானப்படுறதுக்கு அவ வீட்டுலயே இருக்கலாம். இதெல்லாம் உனக்கு சொன்னா புரியவா போகுது?” என்றுவிட்டு சீதா வெளியேற போக, சுஜீப்பும் சலிப்பாக தலையாட்டியவாறு வீட்டிலிருந்து வெளியேற போனார்.

சட்டென்று தோன்றிய யோசனையில் புருவத்தை சுருக்கிய வேதா, “நானும் வர்றேன்” என்று அவர்கள் பின்னால் செல்லப்போக, அவளின் கையை இறுகப்பற்றிய விக்ரம், “வேதா, நோ… நீ போனா ஏழரையதான் இழுத்துட்டு வருவ” என்று தடுக்க, விஷமமாக வளைந்தன வேதாவின் இதழ்கள்.

“நோ விக்ரம், அந்த பெண் பார்க்கும் படலத்தை நான் பார்த்தே ஆகணும்” என்று விக்ரம் பிடித்திருந்த கையை உதறிவிட்டு வேகமாக ஓடியவள் காரின் பின்சீட்டில் அமர, அவள் அணிந்திருந்த டொப்பையும், பேன்ட்டையும் மேலிருந்து கீழ் பார்த்தவாறு, “இப்படியேதான் வர போறியா?” என்று கேட்டார் சீதா.

“இதுக்கென்ன குறைச்சல்?” என்றுவிட்டு அவள் வெளியே வேடிக்கைப் பார்க்க, ‘இவள கூட்டிட்டு போயே ஆகணுமா?’ சைகையால் கேட்டவாறு வம்சி தன் தாயை முறைத்தான் என்றால், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட சுஜீப்பிற்கும் சீதாவிற்கும்

எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் போல்த்தான் இருந்தது.

அடுத்த சிலநிமிடங்களில் அந்த பெரிய வீட்டின் சோஃபாவில் ஆண்கள் அமர்ந்திருக்க, அவர்கள் வீட்டுப்பெண்களோ ஆண்களுக்கு பின்னால் நின்றிருந்தனர். ஆனால், இதில் வேதா மட்டும் விதிவிலக்கு.

வம்சிக்கு அருகில் அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்த வேதாவை சிலர் ஆச்சரியமாக நோக்க, சில விழிகள் கோபமாக நோக்கின.

சரியாக தலையில் முக்காடு போட்டு பெண் வரவழைக்கப்பட, நிமிர்ந்துப் பார்த்த வேதா, ‘பொண்ணுன்னு சொல்லிட்டு குழந்தைய கூட்டிட்டு வர்றாங்க’ என்று யோசித்தவாறு, “குழந்தைக்கு என்ன வயசாகுது?” என்று கேட்டாள் தன் பின்னால் நின்றிருந்த சீதாவிடம்.

“குழந்தையா? பதினைஞ்சி வயசாகுது, குழந்தைன்னு சொல்ற” சீதா சொல்ல, ‘ஙே’ என்று அவரை ஒரு பார்வைப் பார்த்தவள், “எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்கான். இவனுக்கு சின்னப்பொண்ணு கேக்குதா? அந்தப்பொண்ணுக்கு சித்தப்பா மாதிரி இருக்கான்” என்று சத்தமாகவே சொல்லிவிட, பெரியவர்களிருவரும் ஒருவித சங்கடமாக உணர்ந்தார்கள் என்றால், “பாப்பா…” என்று பற்களை கடித்துக்கொண்டான் வம்சி.

“என்னை மன்னிச்சிருங்க. இது என் தங்கச்சி பொண்ணுதான். இப்போதான் ஊருக்கு வந்திருக்கா. ஊர் கட்டுப்பாடுகளை பத்தி அவளுக்கு தெரியல. கூடிய சீக்கிரம் கத்துக்குவா. இப்போ நாம விஷயத்துக்கு வரலாமா? பொண்ணுக்கு என்ன செய்றதா இருக்கீங்க?” சுஜீப் வேதா பேசியது எதையும் கண்டுக்காது தாங்கள் வந்த வேலையை ஆரம்பிக்க, பெண்ணின் தந்தையும் தன் மகளுக்காக செய்யப்போவதை வரிசையாகச் சொல்லத் துவங்கினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வேதாவோ, “நாம ஏதாச்சும் பொருள் வாங்க வந்திருக்கோமா மாமா?” என்று  கேட்டு அவர் முறைக்கவும், “இல்லை, பேரம் பேசுரீங்களே அதான் கேக்குறேன். என்ட், பார்க்க ரொம்ப சின்னப்பொண்ணா தெரியுறா.  அங்கிள் உங்க பொண்ணு உங்களுக்கு பாரமா இருக்காளா என்ன?” சுஜீப்பிடம் ஆரம்பித்து அந்த பெண்ணின் தந்தையிடம் கேள்வியை முடிக்க, தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டனர் வந்திருந்த சொந்தங்கள்.

“பெரியவங்க அமைதியா இருக்க யாரையும் மதிக்காம கேள்வி கேக்குறா இந்த பொண்ணு. சுஜீப் பையா, இதுதான் உங்க தங்கச்சி அவங்க பொண்ண வளர்த்திருக்குற இலட்சணமா?” அங்கிருந்த ஒருவர் கேட்க, சுஜீப்பிற்கோ அத்தனை அவமானம்!

“வேதா…” அவர் கண்டிப்பா அழைக்க, “பொண்ணுங்க ஒன்னும் சந்தையில விக்குற பொருள் கிடையாது. அதுவும் கவலைகள மறந்து வாய்விட்டு சிரிச்சி விளையாடக்கூடிய வயசுல கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. பதினெட்டு வயசுக்கு முன்னாடி பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது சட்டப்படி குற்றம். உங்க மொத்தப்பேர் மேலேயும் கோர்ட்ல கேஸ் போட்டு…” என்று வேதா பேசிக்கொண்டே செல்ல, ஆடிப் போய்விட்டனர் அனைவரும்.

அதற்குமேல் தங்கள் பெண்ணை சுஜீப் வீட்டிற்கு கொடுப்பார்களா அவர்கள்? கையெடுத்து கும்பிடாத குறையாக துரத்தி விட்டிருக்க, மூவரும் அவளை வீடு வந்து சேரும் வரை தீப்பார்வை பார்த்திருந்தார்கள் என்றால், எதுவும் அறியாத பாவனையில் விசிலடித்தவாறு வந்தாள் வேதா.