காதல்போர் 08

eiOOLW357649-1142fab4

“டேய் விக்கி, நில்லு! நான்தான் உனக்கு முதல்ல கலர் பூசுவேன். இப்போ நீ நிக்க போறியா, இல்லையா?” கையில் சிகப்புநிறத் தூளை வைத்துக்கொண்டு விக்ரமை வேதா துரத்திச் செல்ல, அவனோ நின்றால் தானே!

சோஃபாவின் மேலாக தாவி குதித்து அவன் ஓட, பத்மாவதியையும் அம்ரிதாவையும் தவிர மற்றவர்களோ இருவரையும் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், எதுவும் சொல்லவில்லை. காரணம் அன்று ஹோலிப் பண்டிகை.

“டேய், என்னை விட்டா இங்க உனக்கு நெருக்கமானவங்கன்னு யாருமே கிடையாது. மரியாதையா நீயா வந்து என் கையால கலர் பூசிக்க” வேதா சொல்ல, அவளை தெனாவெட்டாக ஒரு பார்வைப் பார்த்த விக்ரம், “எத? அப்படின்னு நீதான் சொல்லிக்கணும்” என்று இல்லாத கோலரை தூக்கி விட்டுக்கொள்ள, வாயைப் பொத்திச் சிரித்தாள் அவள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சுஜீப்போ ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல், “எவ்வளவு நேரம் இங்கேயே இருக்குறதா உத்தேசம்? எல்லாரும் மைதானத்துக்கு போயிட்டாங்க. சீக்கிரம் வாங்க” என்றுவிட்டு முன்னே செல்ல போக, அவர் பின்னாலே செல்ல போன சீதா வேதா அடுத்து பேசிய பேச்சில் அதிர்ந்து நின்றுவிட்டார்.

எல்லோரும் வீட்டிலிருந்து வெளியேற தயாராக, அப்போதுதான் அம்ரிதாவும் பத்மாவதியும் இல்லாததை கவனித்த வேதா, “வெயிட்! பாட்டியையும் அம்ரியையும் காணோம். அவங்களும் வரட்டும்” என்று சொல்ல, “உனக்கென்ன பைத்தியமா வேதஷ்வினி? அவங்க எப்படி இந்தமாதிரியான கொண்டாட்டத்துக்கு வர முடியும்? இதை கூடவா வைஷாலி உனக்கு கத்துத் தரல?” கோபமாக கேட்டார் சீதா.

அவளுக்கோ எதுவும் புரியவில்லை. சீதாவின் சத்தம் கேட்டு அறையிலிருந்த பத்மாவதியும் அம்ரிதாவும் வெளியில் வர, “புரியல. எதுக்கு அவங்க வரக் கூடாது?” அழுத்தமாக கேட்டாள் வேதா.

“விதவைப் பெண்களுக்கு வாழ்க்கையில வர்ணங்களே இருக்காது. அதோ இந்த வெள்ளை மட்டும்தான் எங்க வாழ்க்கையில இருக்கணும். கொண்டாட்டம், சந்தோஷம் எல்லாம் எங்க புருஷன் இறந்தப்போவே  எங்க வாழ்க்கையில இல்லாம போயிரும்” சீதாவை குறிக்கிட்டு பத்மாவதி சொல்லி முடிக்க, “வாட் ரப்பிஷ்?” என்று கோபமாக வந்தன வேதாவின் வார்த்தைகள்.

“புருஷன் இறந்துட்டா வாழ்க்கையோட அர்த்தமே இல்லாம போயிருமா என்ன? எந்த நூற்றாண்டுல வாழ்ந்துக்கிட்டு என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க. நெருக்கமானங்க நம்மள விட்டு போனா அது பெரிய இழப்புதான். ஆனா, அதை நினைச்சி மீதியிருக்குற வாழ்க்கைய தொலைக்கிறது முட்டாள்தனம். நம்ம அம்ரிக்கு இன்னும் இருபது வயசு கூட தாண்டல. அதுக்குள்ள வெள்ளை சாரியை போத்தி அவளோட வாழ்க்கைய கேள்விக்குறி ஆக்குறீங்க நீங்க எல்லாரும்” அடக்கப்பட்ட கோபத்தோடு வேதா பேசிக்கொண்டே செல்ல, “நிறுத்து வேதா!” என்று ஆத்திரத்தோடு கத்தினார் சுஜீப்.

அவள் கேள்வியாக நோக்க, “உனக்கு பலதடவை சொல்லிட்டேன், இந்த ஊர் கட்டுப்பாடுகள்ல தலையிடாதன்னு. விருந்தாளியா வந்த, விருந்தாளியா இருக்குற வரைக்கும் நல்லது” சுஜீப் காட்டமாக பேசி முடிக்க, அம்ரிதாவோ அமைதியாக இருக்கும்படி கண்களாலே வேதாவிடம் இறைஞ்சினாள்.

“வேதா, விடு! நாம போகலாம்” விக்ரம் வேதாவை இழுக்க, அதையெல்லாம் கேட்டு சாதாரணமாக சென்றால் அது வேதா அல்லவே!

“அம்ரி, இது உன்னோட வாழ்க்கை. நீதான் உன் வாழ்க்கைய வாழணும். இவங்களோட சோ கோல்ட் சம்பிரதாயங்களுக்காக உன் வாழ்க்கைய தொலைச்சிராத! என்கூட வா” வேதா கையை நீட்டி அழைக்க, “அரே…” என்றவாறு சீதா வேதாவை நோக்கிச் செல்ல போக, அவர் கையை பிடித்து நிறுத்தினார் சுஜீப்.

அவரோ தன் மகளை ஆழ்ந்து நோக்க, தன் தந்தையின் பார்வையை உணர்ந்து, “வேணாம் வேதா, இதை விட்டுரு. இங்கயிருந்து போ” என்று கலங்கிய விழிகளுடன் மறுத்த அம்ரிதாவை பார்த்த வேதாவிற்கு ‘இவளை என்ன செய்தால் தகும்?’ என்றுதான் இருந்தது.

வெற்றிப்புன்னகை சிந்தியவர், “எங்க சட்டம், சம்பிரதாயங்கள மீறி யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க. அதுவும், பொம்பளைங்களுக்கு சுயபுத்தியே இல்லை. நீ சொன்னதும் வந்துருவாளா என்ன?” என்று ஏளனமாக உரைத்துவிட்டுச் செல்ல, “சுயபுத்தி இல்லாம இல்லை. சுயமா சிந்திக்க நீங்க விடல” என்ற வேதாவின் கோபமான வார்த்தைகள் அவரை பின்தொடர்ந்தன.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது அவர்கள் சென்றுவிட, தரையை வெறித்தவாறு நின்றிருந்த வேதாவை கலக்கமான முகத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தனர் பத்மாவதி, அம்ரிதா மற்றும் விக்ரம்.

சுஜீப்பின் குடும்பத்தினர் கொண்டாட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வந்து சேர, அங்கு ஆண்களோடு சேர்த்து இளம் யுவதிகள் கூட வெள்ளைநிற ஆடையில் தங்களுக்குள்ளே நிறங்களை பூசி விளையாடிக்கொண்டிருந்தனர்.

பெண்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகளை விதித்திருந்த அந்த ஊர் மக்கள் அன்றைநாள் மட்டும் பெண்களை சுதந்திரமாக விட்டிருந்தனர். அது சுதந்திரமா, இல்லை கொண்டாட்டத்தின் போது ஆண்கள் அருந்தும் மதுவை ஊற்றிக்கொடுக்க பெண்களை வேலைக்கு வைத்திருந்தனரா? என்று அவர்களுக்குதான் தெரியும்.

ராவணோ தன் நண்பர்களுடன் மைதானத்தின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த பல கூடாரங்களில் ஒரு கூடாரத்தின் கீழ்  ஒரு கையால் மதுவை அருந்திக்கொண்டு மறுகையால் சூது விளையாடிக்கொண்டிருக்க, அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த வம்சியின் பார்வையோ அடிக்கடி அவனில் பதிந்து மீண்டது.

அதை உணர்ந்துக்கொண்ட ராவணோ அவன்புறம் பார்வையை திருப்பாது கையிலிருந்த சீட்டுக்களை பார்த்தவாறு, “என்ன வேணும் இப்போ உனக்கு? சைட் அடிக்கிறியா?” என்று சற்று கடுப்பாகவே கேட்க, “அய்யோ பையா! அப்படி இல்லை. அது… அது வந்து…” என்று தயக்கமாக இழுத்த வம்சி, “ஒவ்வொரு வருஷமும் ஹோலி கொண்டாட்டத்துல நீங்க மட்டும் கலர் பூசிக்க மாட்டீங்க. உங்களுக்கு நெருக்கமானவங்களும் உங்களுக்கு கலர் பூசி நான் பார்த்தது கிடையாது” என்று ஒருவாறு மனதிலிருந்ததை சொல்லி முடித்தான்.

முழு மதுவையும் வாயில் சரித்தவன், “ஹாஹாஹா… இந்த ராவண் மெஹ்ரா மேல கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கு? முடிஞ்சா ட்ரை பண்ணு வம்சி” என்று சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தவாறு கேலியாக சொல்ல, அதில் பதறியவன், “இல்லை பையா, நான் சும்மாதான் கேட்டேன்” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியேவிட்டான்.

மீண்டும் ராவண் விட்ட விளையாட்டை தொடர, “பையா…” என்ற குரலில் சட்டென திரும்பிப் பார்த்தவன், கையில் குங்குமப்பூநிறத் தூள் நிறைந்த தட்டுடன் நின்றிருந்த மாஹியை முறைத்துப் பார்த்தான்.

வேகமாக எழுந்து அவளெதிரே சென்றவன், “எத்தனை தடவை சொல்லியிருக்கேன், நான் ஆளுங்ககூட இருக்கும் போது கூப்பிடாதன்னு. இன்னைக்கும் உன்னை வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கணும்” என்று கோபமாக கத்த, அவனின் கோபக்குரலில் அவளுக்கு உடல் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது.

கையில் வைத்திருந்த தட்டும் அவளின் கையில் உண்டான நடுக்கத்தில் அதிர, “அது… அது பையா இன்னைக்கு நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க நமக்கு முதல்ல கலர் பூசுவாங்க. எப்போவும் அம்மாதான் உங்களுக்கு முதல்ல கலர் போடுவாங்கன்னு பாப்பா ஒருதடவை பேசினப்போ கேட்டிருக்கேன். அம்மா இறந்ததுலயிருந்து நீங்களும் கலர் பூசிக்க மாட்டீங்க. நான் வேணா உங்களுக்கு…” என்று தட்டுத்தடுமாறி கேட்டுவிட்டு தலைகுனிந்து ஒருவித பயத்தோடு நின்றிருந்தாள் மாஹி.

ராவணோ தன் தங்கையையே இடுப்பில் கைக்குற்றி புருவத்தை சுருக்கி கூர்மையாக பார்த்திருந்தான்.

“அந்த மிர்ச்சி கூட அதிகமா பழகுறன்னு நினைக்கிறேன். அதான், இப்படியெல்லாம் இப்போ பேச தோனுது உனக்கு” ராவண் கடுகடுக்க, தரையிலே புதைந்துவிடும் அளவிற்கு தலைகுனிந்து ‘விட்டால் அழுதுவிடுவேன்’ என்ற ரீதியில் நின்றிருந்தவளை பார்க்க லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்கத்தான் செய்தது அவனுடைய இறுக்கமான இதழ்களில்.

தட்டிலிருந்த நிறத்தை இருவிரலால் எடுத்த ராவண், தன் தங்கையின் கன்னத்தில் அதை தடவிவிட்டு, “போ!” என்று சொல்ல, அவன் நிறம் தடவிவிட்டதில் அதிர்ந்து விழித்தவள், ‘போ’ என்ற அவனின் கர்ஜிக்கும் குரலில் நடப்புக்கு வந்து அங்கிருந்து ஓடியே இருந்தாள். ஆனால், அதிசயமாக தன் அண்ணன் நடந்துக்கொண்ட முறையில் அவளுக்கு அத்தனை சந்தோஷம்!

இங்கு ராவணின் விழிகளோ அந்த ஒருத்தியை தேடி அங்குமிங்கும் சுழல ஆரம்பித்தன. சரியாக அவனின் தேடலுக்கு விடையாக மைதானத்திற்குள் நுழையும் வாயிலில் ஒரே சலசலப்பு!

புருவத்தை நெறித்தவாறு கூர்ந்து அத்திசையை நோக்கியவனுக்கு, அங்கு கண்ட காட்சியில் ‘இவ அடங்கவே மாட்டாளா?’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அங்கு வேதாவோ அம்ரிதாவின் கையை இறுகப்பற்றி அத்தனை பேருக்கு நடுவில் இழுத்து வர, பின்னால் ஒருவித சங்கடத்தோடு வந்தார் பத்மாவதி. இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களோ தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்துக்கொள்ள, வேதாவை நோக்கி செல்ல போன சீதா அடுத்து நாயகி செய்த காரியத்தில், “துர்காதேவி!” என்று நெஞ்சிலே கை வைத்துவிட்டார்.

அம்ரிதாவை இழுத்துக்கொண்டு வந்தவள், அங்கிருந்த சிகப்புநிற தூள் நிறைந்த தட்டை எடுத்து அவளின் வெள்ளை ஆடையின் மேல் விசிறியடிக்க, கண்கள்கலங்க அம்ரிதா நின்றிருந்தாள் என்றால், சுற்றியிருந்தவர்களுக்கோ அத்தனை அதிர்ச்சி!

அடுத்தகணம் வேதாவின் அருகில் விறுவிறுவென வந்த சீதா அவளின் கன்னத்திலே ஓங்கி அறைந்திருந்தார். ஆனால், அவளோ சற்றும் அதிரவில்லை. அவளுக்குதான் தான் செய்யும் காரியத்தின் விளைவு தெரியுமல்லவா!

“ஆரம்பத்துலயிருந்து நீ பண்ணது எதுவும் எங்களுக்கு பிடிக்கலதான். ஆனா, அதெல்லாம் உன்னோட சம்மந்தப்பட்டதா இருந்ததால வார்த்தையால சொல்றதோட நிறுத்திட்டேன். இப்போ நீ பண்ண காரியத்தை என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. விதவைப் பெண்களோட வாழ்க்கையில நிறங்கள்னு ஒன்னு இல்லை. கொஞ்சநாள்ல இங்கயிருந்து நீ போயிருவ. ஆனா, அத்தனை அசிங்கத்தையும் தாங்க போறது அவதான்” என்று ஆவேசமாக கத்தியவர், “ஏற்கனவே புருஷன கொன்னுட்டான்னு ஒரு பட்டம். இப்போ…” என்று தழுதழுத்த குரலில் முடித்தார்.

“இயற்கையா நடக்குற ஒரு சம்பவத்துக்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம் அத்தை? நம்ம அம்ரிக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை அவ வாழணும். உங்க பொண்ணோட வாழ்க்கைய நீங்களே அழிக்கிறீங்க” வேதா நிதானமாக அதேசமயம் அழுத்தமாக சொல்ல,

“என்ன பேசுறம்மா நீ? புருஷன் இறந்துட்டா அதுக்கப்றம் எங்களுக்கென்ன கொண்டாட்டம் வேண்டி கிடக்கு? இப்போ நீ பண்ண காரியத்தால உண்டான பாவத்தை கரைக்கவே சீதா குடும்பம் என்னெல்லாம் கஷ்டப்படணுமோ?” என்று பொறுமினார் அங்கிருந்த பெண்களில் ஒருத்தி.

“நான் பண்றது பாவம்னா அப்போ நீங்க பண்றது? சின்னவயசுலயே கல்யாணத்தை பண்ணிக்கொடுத்து இப்போ கணவன இழந்துட்டான்னு இருபது வயசு கூட பூர்த்தியாகாத பொண்ண ராசியில்லாதவன்னு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிடீங்க” என்று கோபமாக கேட்டவள், “எல்லா கட்டுப்பாடும் பொண்ணுக்கு தானா? அப்போ ஆம்பிளைங்களுக்கு? பொண்டாட்டிய இழந்துட்டு இந்த கோலத்துல இருக்குற புருஷன் எவன் இருக்கான்? என்னை பொருத்தவரைக்கும் உங்க வாழ்க்கைய சில கட்டுப்பாடுகளால நீங்களே இழக்குறீங்க” என்று அழுத்தமாக முடித்தாள்.

அங்கிருந்த பெண்களுக்கிடையில் ஒரு அமைதி! சீதா கூட ஒருவித அமைதியில் எதையோ யோசித்தவாறு இருக்க, அங்கிருந்த சில ஆண்களுக்குதான் வேதாவின் மேல் ஏகத்துக்கும் கோபம் எகிறியது.

ராவணோ அழுத்தமாக அவளையே பார்த்தவாறு நின்றிருக்க, “அம்ரி, இது உன்னோட வாழ்க்கை. இதை யாரும் அதிகாரம் பண்ண முடியாது. மீதியிருக்குற உன் வாழ்க்கைய இவங்களோட சம்பிரதாயங்களால இழந்துராத!” வேதா அழுத்தமாக சொன்னதும், கலங்கிய விழிகளுடன் வேதாவை நெருங்கினாள் அம்ரிதா.

வேதா அவளை கேள்வியாக நோக்க, அங்கிருந்த சிகப்புநிறத்தை எடுத்தவள் வேதாவின் கன்னத்தில் தடவி, “ஹேப்பி ஹோலி தீ” என்று மென்புன்னகையுடன் சொல்ல, அம்ரிதாவை தாவி அணைத்துக்கொண்டாள் வேதா.

அங்கிருந்த பெண்களோ வேதாவின் வார்த்தைகளை கேட்ட பிறகு வேறெதுவும் பேசவில்லை. வாயடைத்து நின்றுவிட, ஆண்கள்தான் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தனர்.

நிலைமை சரியாகி மீண்டும் எல்லோரும் கொண்டாட்டத்தில் இறங்க, நிறங்களை பூசி விளையாடிக்கொண்டிருந்த வேதாவின் எதிரில் வந்து நின்ற விக்ரம், “வேதா, இங்க பாரேன்!” என்று தன் கன்னங்களை காட்ட, அதில் பூசப்பட்டிருந்த மஞ்சள்நிறத்தை பார்த்தவள், “என்னை விட்டா இங்க உனக்கு தெரிஞ்சவங்கன்னு யாருமில்ல. அப்போ இது யாருடா?” யாரென்று தெரிந்தே கேட்டாள்.

“அது…” என்று இழுத்தவாறு விக்ரம் அங்கு தன் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த மாஹியை பார்க்க, அவளோ வெட்கப்பட்டுச் சிரித்து முகத்தை திருப்பிக்கொள்ள, இருவரையும் மாறி மாறி பார்த்த வேதாவிற்குதான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

“இங்கயிருந்து போகும் போது உன் முண்டத்தை மட்டும்தான் நான் கொண்டு போக வேண்டியிருக்குமோன்னு தோனுது. இருக்கு. தரமான சம்பவம் இருக்கு” வேதா கேலியாக சொல்லி விழிகளை சுழலவிட்டு ஒருவனைத் தேட, அவள் பார்வை வட்டத்தில் விழுந்தவனும் தூரத்திலிருந்து அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அத்தனைபேர் நிறங்களில் கலந்திருக்க, ராவண் மட்டும் நிறம் பூசிக்கொள்ளாமல் இருந்ததை கூர்ந்துப் பார்த்தவள், “மாஹி, உன் பையா கலர் பூசிக்கலயா என்ன? இல்லை, யாரும் பூசி விடல்லையா?” என்று மாஹியிடம் கேட்டாள்.

“தீ, அண்ணா கடைசியா கலர் பூசிக்கிட்டது அம்மா இருக்கும் போதுதான். என்னை கூட அவரை நெருங்க விடமாட்டாரு. யாரும் அவரை நெருங்கவும் மாட்டாங்க” மாஹி சொல்ல, வேதாவின் இயல்பான குறும்புக்குணமோ தலைத்தூக்கியது.

இங்கு ராவணோ தன் நண்பன் ஏதோ கேட்கவும் அதைப்பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருக்க, திடீரென தன்மேல் தூவப்பட்ட சிகப்புநிறத்தில் முகத்தை திருப்பி கண்களை அழுந்த மூடிக்கொண்டான்.

சுற்றியிருந்த மொத்த பேருமே, ‘ஆத்தாடி ஆத்தா!’ என்ற பாவனையில் அவன்மேல் நிறத்தை கொட்டிய வேதாவை எச்சிலை விழுங்கியவாறு பார்க்க, அவளுக்கோ சற்றும் பயமில்லை.

“யாரும் உன்னை நெருங்க மாட்டாங்களாமே சேவேஜ்? பட், ஹோலிப் பண்டிகையில கலர் பூசிக்காம இருந்தா எப்படி? இப்போதான் அம்சமா இருக்கு. ஹேப்பி ஹோலி…” வேதா கேலியாக சொல்லி வாழ்த்திச் சிரிக்க, விழிகளை திறந்து வேதாவை அவன் பார்த்த பார்வையில் அவளுக்கே முதுகுத்தண்டு சில்லிட்டது.

அவன் விழிகள் சிவந்து அடக்கப்பட்ட கோபத்தை அப்பட்டமாக காட்ட, ‘இதற்குமேல் இருப்பது ஆபத்து’ என அவளுக்கே புரிந்தது போலும்!

உள்ளுக்குள் பயத்தை மறைத்து கேலியாக சிரித்தவாறு அவள் நகரப்போக, மின்னல்வேகத்தில் அவளை நெருங்கி அவள் முழங்கையை பிடித்து இழுத்தவன், சற்றும் தாமதிக்காது தன் பாக்கெட்டிலிருந்த கத்தியை சுழற்றியெடுத்து அவளின் உள்ளங்கையில் இரு ஆழமான கீறல்களை போட்டுவிட, “ஆஆ…” என்று வலியில் கத்திவிட்டாள் அவள்.

அவனுக்குள் அத்தனை ஆத்திரம்!

பற்களை ராவண் கடிக்கும் சத்தம் வேதாவின் செவிகளுக்கே கேட்க,  உள்ளங்கையின் கீறல்களிலிருந்து கசிந்த இரத்ததை இருவிரலால் எடுத்தவன் அவள் கன்னத்தில் தடவி, “ஹேப்பி ஹோலி மேரா தமிழ் மிர்ச்சி” ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்திச்சொல்ல, அவனுடைய கோபத்தின் அளவை அப்போது உணர்ந்தாள் வேதா.