காதல்போர் 09

eiFT8LE62712-6ffd7ba1

“டேய் டேய் வலிக்குது. மெதுவா கட்டிவிடுடா பக்கி!” வேதா கத்த, நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்த விக்ரம், “இதுக்குத்தான் சொல்றது, வாய கொடுத்து டேஷ்ஷ புண்ணாக்க கூடாதுன்னு. கேட்டா தானே! ஏதோ ஜான்சி ராணிக்கு ஒன்னுவிட்ட அத்தைப்பொண்ணுன்னு நினைப்பு! வோன்டட் ஆ போய் வெட்ட வாங்கிட்டு வந்து நிக்கிற” என்று விடாது கத்திக்கொண்டே அவள் காயத்திற்கு மருந்திட்டான்.

அவளோ அவனை உக்கிரமாக பார்க்க, “அவனை ஏன்ம்மா முறைக்கிற? நாங்களும் பலதடவை சொல்லிட்டோம், அந்த மெஹ்ரா குடும்பத்து பையனோட பிரச்சினை பண்ணாதன்னு. ஏதோ இன்னைக்கு கையில வெட்டினதோட விட்டான். இல்லைன்னா…” பத்மாவதி பதட்டப்பட, சுட்டுவிரலை காதிலிட்டு குடைந்தவள், “அவன் கூட ஹோலி கொண்டாடினது தப்பாய்யா?” என்று சலிப்பாகக் கேட்டாள்.

பத்மாவதி, விக்ரம் இருவருமே அவளை முறைத்துப் பார்க்க, அதேநேரம் “அம்ரி, ஜூஹிக்கு எப்போ அந்த சடங்கை பண்றாங்க. அவளோட அம்மா உன்கிட்ட சொன்னாங்களா என்ன?” என்று கேட்டவாறு உள்ளே வந்த மாஹி அப்போதுதான் அங்கு வேதா இருப்பதை உணர்ந்து கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

அறையில் வேதா திட்டு வாங்குவதை ஆடைகளை மடித்தவாறு கேட்டுக்கொண்டிருந்த அம்ரிதாவிற்கு திடீரென மாஹி அந்த சடங்கு பற்றி கேட்டுக்கொண்டு அறைக்குள் நுழைந்ததும் தூக்கி வாரிப்போட்டது. அவளுடைய பார்வை அடுத்தகணம் வேதாவின் மேல் படிய, பத்மாவதியின் பார்வையும் அவள் மேல்தான் பதறியபடி படிந்தது.

அவர்கள் யூகித்தது போன்று தான் கேட்ட செய்தியை புருவத்தை சுருக்கி யோசித்தவாறு மாஹியைத்தான் கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தாள் வேதா.

அம்ரிதாவோ வேதாவை கண்களால் காட்டி எச்சரிக்கை செய்ய, அதை கவனித்த மாஹி, “சடங்கா? என்ன சடங்கு? அதுவும் ஜூஹிக்கு?” என்ற வேதாவின் கேள்வியில் என்ன பதில் சொல்வதென தெரியாது திணற ஆரம்பித்துவிட்டாள்.

“அது… அது வந்து…” மாஹி தட்டுத்தடுமாற, நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, “வேதா, அதுஒன்னும் இல்லைம்மா. ஜூஹிக்கு ஜோஷியம் பார்த்ததுல ஒரு தோஷம் இருக்கு. அதுக்குத்தான் அந்த சடங்கு பண்றாங்க” என்று அம்ரிதா வேகமாக சொல்ல, ‘அப்படியா?’ என்ற ரீதியில் மாஹியை ஒரு பார்வைப் பார்த்தாள் வேதா.

அவளோ அப்போதும் அம்ரிதாவைத்தான் பார்க்க, ‘எதுவும் சொல்லிராத!’ என்ற அம்ரிதாவின் எச்சரிக்கைப் பார்வையை வேதா கவனித்ததை அவர்கள் அறியவில்லை.

“உனக்கு இந்த ஜாதகம், தோஷம்ல எல்லாம் நம்பிக்கை இல்லையாம்மா? ஆனா, எங்களுக்கு அதுல நம்பிக்கை ஜாஸ்தி. அதான்… தோஷத்துக்கு பரிகாரம் பண்ணா சீக்கிரம் சரியாகிடும். குழந்தைப்பொண்ணு அவ!” என்ற பத்மாவதிக்கு வேதாவின் கழுகுப்பார்வையில் தானாகவே வார்த்தைகள் தந்தியடித்தன.

பத்மாவதி பேசி முடித்ததும், ‘அப்படியா?’ என்ற ரீதியில் மீண்டும் வேதா மாஹியையே ஒரு பார்வைப் பார்க்க, அவளின் திணறலுக்கான சரியான காரணம் தெரியாத விக்ரம், “ஏய் வேதா, எதுக்கு மாஹிய சந்தேகமா பார்த்துக்கிட்டு இருக்க? சும்மா விடு! எப்போ பாரு எல்லாரையும் சந்தேகமா பார்த்துக்கிட்டு” என்றுவிட்டு ஓரக்கண்ணால் மாஹியைப் பார்த்து சிரிக்க, அவளும் வெட்கப்பட்டுச் சிரித்து முகத்தை திருப்பிக்கொண்டாள்.

ஆனால், வேதாவிற்கு ஏதோ தப்பாகவே தோன்றியது. ‘என்கிட்ட ஏதோ மறைக்கிறாங்க. என்னவா இருக்கும்?’ என்று உள்ளுக்குள் யோசித்தவாறு அமர்ந்திருந்தவளின் புருவ முடிச்சுகளை எச்சிலை விழுங்கியவாறு ஒருவித பயத்தோடு பார்த்தனர் பத்மாவதியும் அம்ரிதாவும்.

அடுத்தநாள் மதியஉணவை முடித்துவிட்டு வேதா நேராக சென்று நின்றது என்னவோ ஜுஹியின் வீட்டின் முன்தான்.

“உள்ள வரலாமா?” என்று கேட்டவாறு அந்த சிறிய வீட்டுக்குள் வேதா நுழைய, தன் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்த ஜூஹிக்கு அவளைப் பார்த்ததுமே அத்தனை சந்தோஷம்!

“தீ…” என்றழைத்தவாறு அவள் வேதாவின் அருகில் ஓடி வர, தன் பாக்கெட்டிலிருந்த சாக்லெட்டை அவளிடம் நீட்டிய வேதா, அவள் எடுக்க வரவும் அதைக்கொடுக்காது கையை பின்னால் இழுத்துக்கொண்டாள்.

ஜூஹியோ வேதாவை பாவமாகப் பார்க்க, அவள் உயரத்திற்கு முட்டிப் போட்டு அமர்ந்து, “ஏன் என்னை பார்க்க நீ வரவே இல்லை. நேத்து ஹோலி கொண்டாட்டத்துல கூட உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று சற்று கோபமாகச் சொன்னாள் வேதா.

உதட்டை பிதுக்கிய அந்த சிறுப்பெண், “அது வந்து தீ… அம்மாதான் என்னை வெளியில விட மாட்டேங்குறாங்க. எனக்கும் வீட்டுல இருக்கவே பிடிக்கல. அதுவும், ஏதோ சடங்கு பண்ண போறாங்கன்னு சொல்றாங்க” என்றுவிட்டு வேதாவின் காதருகில் நெருங்கி, “ஆனா தீ, அந்த பக்கத்து வீட்டுல இருக்குற மான்யா என்கிட்ட சொன்னா, அந்த சடங்கு பண்ணும் போது வலிக்கும்னு. நிஜமாவே வலிக்குமா?” என்று மெதுவாக ரகசியக்குரலில் கேட்க, வேதாவுக்கு எதுவுமே புரியவில்லை.

‘என்ன சொல்றா இவ?’ தனக்குள்ளே கேள்வியை கேட்டவாறு வேதா ஜூஹியை புரியாது பார்த்துக்கொண்டிருக்க, சரியாக “ஜூஹி, அம்மா வந்துட்டேன்” என்று சொன்னவாறு வீட்டிற்குள் நுழைந்தாள் ஜூஹியின் தாய் மஹிமா.

வீட்டின் நடுவில் தன் மகளுடன் வேதாவைப் பார்த்ததும் அவளுக்கு அத்தனை அதிர்ச்சி! ‘தன்னை இங்கு அவள் எதிர்ப்பார்க்கவில்லை’ என்பது அவளுடைய அதிர்ந்த முகத்திலே வேதாவிற்கு புரிந்தது.

“வேதா தீ, நீங்க இங்க…” சற்று தடுமாறிய மஹிமா, “ஏதாச்சும் சாப்பிடுறீங்களா? ஜூஹி, அவங்க குடிக்கிறதுக்கு தண்ணீ கூட கொடுக்காமலா பேசிக்கிட்டு இருக்க?” என்று கேட்டவாறு சமையலறைக்குள் நுழையப் போக, “ஜூஹிக்கு தோஷம், சடங்குன்னு எதையோ பண்ண போறீங்கன்னு பாட்டி சொன்னாங்க. ஆனா, அவ ஏதோ சொல்றா. எனக்கு புரியல” என்ற வேதாவின் கேள்வியில் அவளை அதிர்ந்துப் பார்த்தாள்.

சுதாகரித்து தன் முகபாவனையை மாற்றியவள், “அதெல்லாம் ஒன்னுஇல்லைம்மா. சின்னப்பொண்ணு அவ! நாங்க பேசிக்கிறதை தப்பா புரிஞ்சிக்கிட்டு பயப்படுறா. நீங்க பெருசா எதுவும் யோசிக்க வேணாம்” என்றுவிட்டு சமையலறைக்குள் நுழைந்துக்கொள்ள, வேதாவிற்குதான் மனம் எதையோ எச்சரிக்கை செய்வது போல் தோன்றியது.

அதேசமயம்,

“பையா, நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” ஜீப்பை செலுத்தியவாறு தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ராவணிடம் கேட்டான் ராவணின் ஜீப் ஓட்டுனரான சலீம்.

ராவணும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறு, “என்னடா?” என்று கேட்க, “இல்லை பையா, இதுக்கு முன்னாடி எந்த பொண்ணும் உங்க முன்னாடி நிமிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை. எதிர்த்து பேசின ஆம்பிளைங்க இப்போ உயிரோட இல்லை. ஆனா, அந்த வேதா பொண்ணை மட்டும் விட்டு வச்சிருக்கீங்களே! ஒருவேள உங்களுக்கு அந்த பொண்ணு மேல…”  தயக்கமாக இழுத்தான் அவன்.

ஆனால், அடுத்தகணம் விழிகளை மட்டும் உயர்த்தி ராவண் முறைத்த முறைப்பில், “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு வாயை மூடிக்கொண்டான் சலீம். ஆனால், அதுவும் சற்றுநேரம்தான்.

“ஆனா பையா, அந்த பொண்ணுக்கு ரொம்பதான் தைரியம். அம்மாவுக்கு அப்றம் அந்த பொண்ணுதான் உங்கமேல கலர் பூசியிருக்கான்னா பாருங்க! நீங்க கைய வெட்டின அப்றம் கூட பயப்படல்லையே… ப்பாஹ்! விட்டா உங்களை கொன்னுடுவாங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தா. ஆனா ஊன்னா, பிரச்சினை பண்ணிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கா. எனகென்னவோ அந்தப் பொண்ணுக்கு ஆயுள்காலம் ரொம்ப கம்மின்னு தோனுது. சுனிலய்யா ரொம்ப கோபத்துல இருக்காரு. இருந்தாலும் இப்படி ஒரு பொண்ண என் வாழ்க்கையில நான் பார்த்ததே இல்லை. உங்களை அப்படியே பொண்ணு வெர்ஷன்ல பார்த்த மாதிரி…”

பேசிக்கொண்டே சென்ற சலீம், “ஹ்ர்ம்… ஹ்ர்ம்…” என்ற ராவணின் செறுமலில் அவன் புறம் திரும்பினான். ராவணும் அவன் பார்வை தன்மீது படிந்ததுமே தன் கத்தியை எடுத்து அதன் நுனியை தடவி விட்டுக்கொள்ள, இதைப் பார்த்த சலீம் அடுத்த வார்த்தை பேசுவானா என்ன?

கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டு அவன் வண்டியை செலுத்த, சலீமை முறைத்துவிட்டு திரும்பிய ராவணின் விழிகளுக்கு சரியாக சிக்கினாள் வேதா.

ஜூஹியின் வீட்டிலிருந்து எதையோ யோசித்தவாறு வீதியோரமாக அவள் நடந்து வந்துக்கொண்டிருக்க, அவளைக் கண்டதும விஷமமாக வளைந்தன ராவணின் இதழ்கள்.

“சலீம்…” என்றழைத்தவன், அவன் பார்த்ததுமே வேதாவை நோக்கி விழிகளால் காட்டி ஏதோ சொல்ல, அவனும் தலையசைத்துவிட்டு உயர்வேகத்தில் ஜீப்பை செலுத்தி வேதாவை முட்டுவது போல் கொண்டுச் செல்ல, வண்டி சத்தத்தில் யோசனையிலிருந்து விடுபட்டு நிமிர்ந்தவளின் கண்கள் சாரசர் போல் விரிந்துக்கொண்டன.

அடுத்து என்ன செய்வதென தெரியாது, அதிர்ச்சியில் அதே இடத்தில் வேதா அப்படியே நிற்க, ராவணின் கட்டளைக்கேற்ப சலீம் வண்டியை நிறுத்தியதும், அதுவோ வேதாவிற்கு நூலிடைவெளியில் வந்து நின்றுக்கொண்டது.

எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு பயத்தில் இதயத்துடிப்பு தாறுமாறாகத் துடிக்க, ஜீப் நின்று அடுத்த சிலநொடிள் கழித்துதான் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ஆனால், அடுத்தநிமிடம் ஜீப்பிலிருந்து பாய்ந்து இறங்கியவனைப் பார்த்ததுமே அவளுக்கு கோபம் புசு புசுவென்று எகிறியது.

“தமிழ் மிர்ச்சி…” என்று ஆரவாரமாக அழைத்தவாறு அவளை நெருங்கி நின்றவன், அவளை மேலிருந்து கீழ் விழிகளால் அளவிட, சிவந்த முகம் மேலும் சிவந்து உதடு துடிக்க, மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு ஆண்மகனாக அவளை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

அவள் நெற்றியில் பூத்திருந்த வியர்வைத்துளிகள் மேல் உதடுகளை குவித்து ராவண் ஊத, கண்களை மூடி முகத்தை கோபமாக திருப்பிக்கொண்டாள் வேதா.

“மிர்ச்சி, ரொம்ப பயந்துட்டியா என்ன? சும்மா விளையாடிப் பார்த்தேன். ஆனா, இதுவும் நல்லதான் இருக்கு” அவளின் அங்க வளைவுநெளிவுகளை வெளிப்படையாகவே அவன் ரசிக்க,  சட்டென அவன் விழிகளை நோக்கியவளுக்கு அவன் பார்வை போன திசையைப் பார்த்து கட்டுங்கடங்காமல் ஆத்திரம் வந்தது.

“சேவேஜ்” பற்களை கடித்துக்கொண்டு சொன்னவள் அவனை முறைத்தவாறு அவனைத் தாண்டி நகரப்போக, அடுத்தகணம் அவள் கரத்தை பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தி, “காயம் ரொம்ப பலமோ?” என்று உள்ளங்கையில் போடப்பட்டிருந்த கட்டைப் பார்த்து கேலியாக கேட்டான் ராவண்.

“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? இங்க இருக்குற மனுஷங்களால தப்பிச்சிக்கிட்டு இருக்க. இதுவே என் இடமா இருந்தா நீ செத்தடா சேவேஜ்!” வேதா அடக்கப்பட்ட கோபத்தோடு சொல்ல, இதழை ஏளனமாக வளைத்து தன் அக்மார்க் புன்னகை புரிந்தவனுக்கு ஏதோ கீச்சிடும் குரலில் சிறுபிள்ளை மிரட்டுவது போல்தான் இருந்தது அவளின் மிரட்டல்கள் எல்லாம்.

முன் நெற்றியில் வியர்வை ஈரத்தால் ஒட்டியிருந்த சிறு முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட்டவன், அவள் முகம் நோக்கிக் குனிந்து, “உன்னைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. பட், கூடவே கோபமும் வருது. ஆனா, அந்த கோபத்தை உன் பெண்மை இல்லாம பண்ணுது” குறும்பாகச் சொல்லிச் சிரிக்க, கைமுஷ்டியை இறுக்கிக் கோபத்தை அடக்க முயற்சித்தவளுக்கு அது ராவணின் பேச்சில் முடியாத காரியமாகத்தான் இருந்தது.

உச்சக்கட்ட கோபத்தில் அவன் மார்பில் கைவைத்துத் தள்ளிவிட்டவள், அவனை எதுவும் செய்ய முடியாத ஆத்திரத்தில் அவன் ஜீப்பிற்கு காலால் உதைத்துவிட்டு விறுவிறுவென முன்னே செல்ல, ஜீப்பிலிருந்த ராவணின் அடியாற்களோ அவளை அதிர்ந்துப் பார்த்தார்கள் என்றால், “மிர்ச்சி” என்று மெதுவாக முணுமுணுத்த ராவணின் இதழ்கள் இறுகிப்போயிருந்தன.

அடுத்தநாள் இரவு,

“மாயூ, ரூகோ! கஹான் ஜா ரஹேன் ஹோ(மாயூ, நில்லு! எங்க போற)?” ஒரு சிறுப்பெண் கத்திக்கொண்டே ஒன்பதுவயது தன் தோழியின் பின்னால் ஓட, நெற்றியில் வடிந்த வியர்வையை புறங்கையால் துடைத்துவிட்டவாறு, “அப்போ உனக்கு மிட்டாய் வேணாமா திஷி?” என்று கேட்டாள் மயூரி.

“வேணும்தான். ஆனா, பாப்பா பார்த்தா அவ்வளவுதான். உனக்கு பயமா இல்லையா?” திஷி தயக்கமாக இழுக்க, “பயந்தா மிட்டாய் கிடைக்காது. சீக்கிரம் வா! அந்த வண்டி ஊர் எல்லைய தாண்டுறதுக்குள்ள நாம போயிரலாம்”  என்று பேசிக்கொண்டு இருந்த மயூரி, கன்னத்தில் விழுந்த ‘பளார்’ என்ற அறையில் தரையில் விழுந்தாள்.

திஷிக்கோ எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்து உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

“எவ்வளவு தைரியம்? உன்னை…” ஆக்ரோஷமாக கத்தியவாறு திஷியின் முதுகில் கையிலிருந்த தடியால் இரண்டடி பலமாக அடித்தவர்கள், அவளை இழுத்துக்கொண்டுச் செல்ல, மயூரியும் தனக்கு விழுந்த அடியில் உண்டான மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

சரியாக, தென்றலின் வேலையால் ஜன்னல் கதவுகளின் அசைவில் உண்டான சத்தத்தில் கனவுக் கலைய, பட்டென கண்களை திறந்தாள் வேதா.

கண்களை திறந்தும் ஏதேதோ விம்பங்கள் அவளின் மனக்கண்முன்! அவசரமாக எழுந்தமர்ந்தவளின் உடல் முழுக்க வியர்வையால் நனைந்திருக்க, வேக மூச்சுக்களை இட்டவாறு தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சித்தாள் அவள்.

‘என்ன இது? யாரந்த சின்னப்பொண்ணுங்க? முகம் கூட சரியா தெரியல. ச்சே! ஆனா… அந்தக்குரல், அந்த பெயருங்க ஏதோ இதுக்குமுன்னாடி ரொம்ப பழக்கப்பட்ட விஷயங்களா இருக்கே. கடவுளே!’ தனக்குள்ளே பேசி யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு தாகமெடுக்க, டீபாயின் மேலிருந்த தண்ணீர்போத்தலை பார்த்தாள்.

ஆனால், அவள் நேரத்திற்கு அதுவோ காலியாக இருக்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு அறையிலிருந்து வெளியேறி சமையலறை நோக்கிச்சென்றாள். ஆனால், அப்போதும் அவள் சிந்தனைகளில் அந்த மங்கலான முகங்களும், அந்த பழக்கப்பட்ட குரல்களும்தான் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.

அதை யோசித்தவாறே தண்ணீரை அருந்திக்கொண்டிருந்தவளின் செவிகளில் சரியாக விழுந்தது அந்த இருவரின் உரையாடல்.

சமையறை ஜன்னலுக்கு வெளிப்புறத்திலிருந்த வளாகத்திலிருந்து அந்த உரையாடல் கேட்க, அந்த குரல்களுக்குச் சொந்தமானவர்களை அடையாளங் கண்டுக்கொண்டவளுக்கு ‘அத்தையும், ஜூஹியோட அம்மாவும் வெளிலயிருந்து என்ன பேசிக்கிட்டு இருக்காங்க, அதுவும் இந்த நேரத்துல?’ என்றுத்தான் இருந்தது.