காதல்போர் 10

eiFT8LE62712-ed7405f5

“சீதாம்மா, ஜூஹி ரொம்ப அடம்பிடிக்குறா. அந்த பக்கத்து வீட்டுப்பொண்ணுதான் எதையோ அவக்கிட்ட சொல்லி வச்சிட்டான்னு நினைக்கிறேன். அவள சமாளிச்சி எப்படி பண்றது? வேணும்னா இன்னொருநாளைக்கு…” மஹிமா தயக்கமாக இழுக்க,

“என்ன பேசுற நீ? குறிச்ச நேரத்துக்கு அதெல்லாம் பண்ணியாகணும். உன் மகளுக்கு என்ன பிடிக்குமோ, அதை சொல்லி அழைச்சிட்டு வா! மத்ததை அப்றம் பார்த்துக்கலாம்” கண்டிப்பாக சொன்னார் சீதா.

“ஆனா அம்மா, அன்னைக்கு வேதா தீ  வீட்டுக்கு வந்தப்போ ஜூஹி ஏதோ சொல்லியிருக்கா. அவங்களுக்கு கண்டிப்பா சந்தேகம் வந்திருக்கும். நீங்களும் ஏன் அவங்களுக்கு தெரியக் கூடாதுன்னு சொன்னீங்க? இது சம்பிரதாயம்னு அவங்க புரிஞ்சிக்க மாட்டாங்களா என்ன?” மஹிமா கேட்க,

அவளை முறைத்த சீதா, “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவுங்கிறதே இல்லை. வந்த கொஞ்ச நாள்லயே அவ ஆடுற ஆட்டத்தை பார்த்துக்கிட்டுத்தானே இருக்க! இது தெரிஞ்சா சும்மா விடுவாளா என்ன? இது காலம் காலமா நடக்குறது. இந்த சம்பிரதாயம் எல்லாம் அவளுக்கு புரியாது. தெரிஞ்சா கண்டிப்பா நம்மள பண்ண விட மாட்டா. அதான், அவளுக்கு தெரியக் கூடாதுன்னு சொன்னேன். புரியுதா?” என்று சொல்லி முடிக்க, மஹிமாவோ தயக்கமாகவே தலையசைத்தாள்.

“சரி சரி, அவங்க காத்திருக்காங்க. வா, சீக்கிரம் போகலாம்” என்றுவிட்டு சீதா முன்னே நடக்க, அவர் பின்னாலே மஹிமாவும் சென்றுவிட, இது அத்தனையும் சமையலறையிலிருந்த வேதாவின் செவிகளில் விழுந்துத் தொலைத்தது.

‘என்ன பேசுசுறாங்க இவங்க? அப்போ நான் சந்தேகப்பட்டது சரிதான். எதையோ என்கிட்டயிருந்து மறைக்கிறாங்க’ தனக்குள்ளேயே பேசிக்கொண்ட வேதாவுக்கு மனம் ஒரு நிலையிலில்லை. அவர்கள் மறைக்கும் விடயத்தை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம்!

அடுத்தநொடி வீட்டிலிருந்து வெளியேறி யாருக்கும் தெரியாமல் அவர்களை பின்தொடர்ந்து இவள் செல்ல, சீதாவும் மஹிமாவும் முதலில் சென்றது என்னவோ மஹிமாவின் வீட்டுக்குத்தான்.

வேதாவும் அங்கிருந்த ஒரு வண்டிக்கு பின் ஒளிந்துக்கொள்ள, அடுத்த ஐந்து நிமிடங்களிலே சாக்லெட்டை சப்பியவாறு தன் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு வீட்டிலிருந்து ஜூஹி வர, சீதாவும் அவர்களுடன் வேவேகமாக நடந்து முன்னே சென்றார்.

அங்குமிங்கும் விழிகளால் நோட்டமிட்டவாறு அவர்களுக்கு பின்னால் சென்ற வேதா, அந்த ஊரில் திருமணங்கள் நடைபெறும் ஒரு மண்டபத்திற்குள் மூவரும் நுழைவதைப் புரியாது பார்த்தாள். ‘இங்க எதுக்கு இந்த நேரத்துல ஜூஹிய கூட்டிட்டு வந்திருக்காங்க? ஒருவேள, ஏதோ சடங்கு, சம்பிரதாயம்னு பேசினாங்களே, அதுக்காக இருக்குமோ? ஆனா, அதை ஏன் என்கிட்ட மறைக்கணும்?’ மானசீகமாக பேசிக்கொண்டவளுக்கு நடப்பது எதுவும் சுத்தமாக புரியவில்லை.

மூவரும் மண்டபத்திற்குள் நுழைந்ததுமே மண்டபத்தின் கதவுகள் சாத்தப்பட, வேதாவின் நல்ல நேரத்திற்கோ, என்னவோ? அங்கு பாதி கிழிந்தும் கிழியாமலுமான கம்பிகளாலான ஜன்னல் மண்டபத்திலிருக்க, அடுத்தநொடி வேகமாக சென்று அதனூடே உள்ளே நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள் அவள். உள்ளே பார்த்தவளுக்கு அதிர்ச்சி!

அவளே எதிர்ப்பார்க்காது மஹிமா, சீதாவோடு சேர்த்து இன்னும் ஊரிலுள்ள பல பெண்கள் அந்த மண்டபத்திலிருக்க, திகைப்புடன் அங்கிருந்தவர்களை பார்த்தவளுக்கு ‘என்னதான் நடக்குது இங்கு?’ என்றுதான் இருந்தது.

‘ஜூஹிக்கு ஜாதகத்துல ஏதோ தோஷம், அதுக்கு ஏதோ பரிகாரம் பண்ணணும்னுதானே மஹிமா சொன்னா. இப்போ என்னடான்னா இந்த நேரத்துல ஜூஹிக்கிட்ட பொய் சொல்லி அழைச்சிட்டு வந்து பண்ற அளவுக்கு அப்படி என்ன பரிகாரம் இது? சம்திங் இஸ் ரோங்’ வேதா தனக்குள்ளேயே யோசித்தவாறு நடப்பதை கூர்ந்து கவனிக்கத் தொடங்க, அடுத்து பார்த்த காட்சியில் ஆடிப்போய்விட்டாள் அவள்.

ஜூஹியின் அழுகை ஒலி அவள் செவிகளில் ஒலிக்க, விழி விரித்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவள் விழிகளை அவளாலே நம்ப முடியவில்லை.

‘கடவுளே! என்ன மாதிரியான சடங்கு இது? ஆனா… இந்த சடங்க இதுக்கு முன்னாடி நான்…’ வேதாவின் மூளை
எதையோ ஆழ்ந்து தீவிரமாக யோசிக்க, அவள் ஆழ்ந்து யோசித்ததன் விளைவாக அவளின் பின்னந்தலையில் சுள்ளென்ற ஒரு வலியெடுக்கவும், “ஸ்ஸ் ஆ…” என்றவாறு தலையை பிடித்துக்கொண்டவளுக்கு மனக்கண் முன் ஏதேதோ விம்பம் தோன்றின.

கனவில் தோன்றிய முகங்களோடு சேர்த்து பல நினைவுகள் தெளிவாகவே அவளுக்கு தெரிந்தன. சில உண்மைகளும் புரிந்தன.

உடல் முழுவதும் வியர்வையால் குளித்திருக்க, அவள் இதயத்தின் ஓசை அவள் செவிகளுக்கே கேட்டது. மூடிய விழிகளிலிருந்து விடாது கண்ணீர் சொரிய, பட்டென்று விழி திறந்தவளின் விழிகள் சிவந்து கலங்கிப் போயிருந்தன.

அதேநேரம் வேதா திடீரென உண்டான தலைவலியில் கத்தியது ஜன்னலருகே நின்றிருந்த ஒரு பெண்ணிற்கு கேட்டுவிட, “வெளியில யாரோ இருக்காங்க” என்று பதறியபடி சொன்னாள் அவள்.

இதைக் கேட்டதும் திடுக்கிட்ட சீதா, “நம்ம ஊராளுங்களா இருந்தா பிரச்சினை கிடையாது. ஆனா, ஒருவேள வெளியாளுங்களா இருந்தா…” என்று யோசனையோடு இழுத்து விறுவிறுவென வெளியேறி விழிகளை சுழற்றி அங்குமிங்கும் ‘யாராவது இருக்கின்றார்களா?’ என நோட்டமிட, அங்கோ யாரும் இல்லை.

“இங்க யாரும் இல்லை” சீதா சொல்ல, “இல்லை தீ, எனக்கு சத்தம் கேட்டிச்சு. கண்டிப்பா வெளில யாரோ இருந்தாங்க” என்று தானும் அங்குமிங்கும் தேடியபடி சொன்னாள் அந்தப்பெண்.

“ச்சே! அது உன் பிரம்மையா இருக்கலாம். இந்த நேரத்துல யாரு இங்க வரப்போறது? சும்மா கண்டதை உளறிக்கிட்டு இருக்காம இடத்தை காலி பண்ற வழிய பாருங்க” என்ற சீதா மஹிமாவிடம், “சடங்கு நல்லபடியா முடிஞ்சிருச்சு. ஆனா, உன் பொண்ணுதான் ரொம்ப அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா ஸப்பாஹ்…” என்று சலித்தவாறு சொன்னார்.

அவரை தயக்கமாக ஏறிட்ட மஹிமா, “என்ன இருந்தாலும் வலிக்கத்தானே செய்யும். அதுவும் குழந்தை அவ. நீங்க ரொம்ப கட்டாயப்படுத்த போய்தான் நான் சம்மதிச்சேனே. இல்லைன்னா…” என்று இழுக்க, “வாய மூடு! இது எதுக்காக பண்றோம்னு உனக்கு நல்லாவே தெரியும். எல்லாம் உன் பொண்ணோட நல்லதுக்காகத்தான்” என்று காட்டமாக உரைத்தார் இன்னொரு பெரியவர்.

“ஆமா, கொஞ்சநாளைக்கு அவளுக்கு கஷ்டமாதான் இருக்கும். நீ வேலைக்கு வர தேவையில்லை. ஜூஹிய நல்லா பார்த்துக்க! புரியுதா?” என்றுவிட்டு சீதா அங்கிருந்து நகர, வலியில் மயக்கமான ஜூஹியை தூக்கி அணைத்தவாறு தன் வீட்டை நோக்கிச் சென்றாள் மஹிமா.

அடுத்த சிலநிமிடங்களில் மற்ற பெண்களும் அங்கிருந்து நகர்ந்துவிட, தன் இருகரங்களையும் ஒருகையால் சிறைப்பிடித்து மற்றகையால் தன் வாயை பொத்தியிருந்தவனை எதுவும் செய்ய முடியாது, அவனிடமிருந்து விடுபட திமிறிக்கொண்டிருந்தாள் வேதா. ஆனால், அவளை சிறைப்பிடித்திருந்த ராவணின் விழிகளோ அங்கிருந்து மொத்தப் பெண்களும் வெளியேறுவதைதான் நோட்டமிட்டுக்கொண்டிருந்தன.

சில நிமிடங்களுக்கு முன், சீதா சந்தேகத்தின்பெயரில் வெளியில் நோட்டமிட மண்டபத்திலிருந்து வெளியேறத் தயாராக, அதேசமயம் கண்ணீரை அழுந்தத் துடைத்து கோபமாக மண்டபத்திற்குள் நுழையப் போனாள் வேதா. ஆனால், சீதா வெளியேறுவதற்குள் அவளை சுவற்றுக்குப் பின்னால் இழுத்து மறைந்துக்கொண்டான் ராவண். கூடவே, அவளை பற்றி அறிந்து அவள் வாயையும் இறுகப் பொத்தியிருந்தான்.

எல்லோரும் சென்று சில நொடிகள் கடந்தபின்னரே ராவண் தன் பிடியை தளர்த்த, அவனிடமிருந்து துள்ளிக் குதித்து விலகிய வேதா அடுத்தநொடி அவனை அறைய கையை ஓங்கியிருக்க, அவள் கரமோ அந்தரத்தில் நின்றது. அவள் விரல்நுனி கூட தன்மேல் படாது அவள் கரத்தை இறுகப்பற்றியல்லவா இருந்தான் அவன்!

அவளுக்கோ மனம் உலைக்களமாக கொதித்துக்கொண்டிருந்தது. பார்த்த காட்சியின் தாக்கம் குறையாது நெற்றி நரம்புகள் புடைத்து, பற்களை நரநரவென கடித்தவண்ணம் வேதா நின்றிருந்தாள் என்றால், அவள் அடிக்க ஓங்கிய கரத்தையும் அவளையும் இறுகிய முகமாக மாறி மாறிப் பார்த்தவாறு நின்றிருந்தான் ராவண்.

அவள் கரத்தை உதறிவிட்டவன், தடுமாறி விழப்போனவளின் முழங்கையை பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்து, “நானும் பலதடவை சொல்லிட்டேன், இந்த ஊர் விஷயத்துல தலையிடாதன்னு. ஆனா, நீ அடங்குற மாதிரி எனக்கு தெரியல” அடக்கப்பட்ட கோபத்தோடு சொல்ல, அவனை எரிக்கும் பார்வை பார்த்த வேதா அத்தனை ஆதங்கத்தையும் அவன் மார்பில் கைவைத்துத் தள்ளி வெளிப்படுத்தினாள்.

அவள் தள்ளிவிட்டதில் ராவணே சற்று தடுமாற, “நீங்கெல்லாம் மனுஷங்கதானா? ச்சீ… எப்படி உங்களால இப்படி பண்ண முடியுது? என்ட், உனக்கும் எல்லாம் தெரியும் ரைட்? ஆனா, அமைதியா இருக்க” வேதா ஆவேசமாக கத்த, “இது இந்த ஊரோட சம்பிரதாயம்” அலட்சியமாக வந்தன ராவணின் வார்த்தைகள்.

“ச்சீ… இந்த சடங்கு சம்பிரதாயம் நீங்களா உருவாக்கினதுதானே! அதுவும், இதை பல இடத்துல தடை செஞ்சும் வெளியுலகத்துக்கு தெரியாம இன்னும் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, நான் விட மாட்டேன். இதை எப்படியாச்சும்…” பேசிக்கொண்டே சென்ற வேதாவின் வார்த்தைகள், ராவண் தோள்களை இறுகப்பற்றி சுவற்றில் சாய்த்து, “ஏய்…” என்று கர்ஜித்ததும் அப்படியே நின்றன.

கிட்டதட்ட நூலிடைவெளியில் அவளை நெருங்கி நின்றவனின் சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட, “இதுக்குமேல ஊர் விஷயத்துல தேவையில்லாம தலையிட்டு பிரச்சினை பண்ண, நானே உன்னை கொன்னுடுவேன். நீ இதை பார்த்தேன்னு தெரிஞ்சாலே உன்னை இந்த மண்ணை தாண்ட விட மாட்டாங்க. உயிரோட ஊர் போய் சேரணும்னா பார்த்ததை மறந்துரு!” அழுத்தமாக சொன்னான் ராவண்.

அவனுக்கு சற்றும் குறைந்தவள் இல்லைப்போல் வேதாவும் அவன் விழிகளை நேருக்கு நேராக பார்த்து, “முடியாது” என்று அழுத்தமாகச் சொல்ல, “ஆஹான்!” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேலியாக வளைந்து புன்னகைத்தன ராவணின் இதழ்கள்.

அவளை மீண்டும் மூச்சுகாற்று படும் தூரத்திற்கு நெருங்கி நின்றவன் பெருவிரலால் அவள் கன்னத்தில் கோலமிட்டவாறு, “ஊருக்கு புதுசு, அதுவும் ஒரு பொண்ணுன்னுதான் இத்தனைநாள் ஜஸ்ட் வார்னிங்ஓட விட்டேன். உனக்கு வாய்ப்பு கொடுத்தது போதும் மிர்ச்சி. இனி, ஏதாச்சும் ஊருக்குள்ள உன்னால பிரச்சினை ஆச்சின்னா நானே உன்னை கொன்னுடுவேன்” என்று அவள் கன்னத்தில் தட்டிவிட்டு நகர, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க போகும் அவனை மூக்குவிடைக்க முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் வேதா.

அடுத்தநாள்,

“ராவண் பேட்டா” என்ற தன் தந்தையின் அழைப்பில் அலைப்பேசியை பேசியவாறு வீட்டிலிருந்து வெளியேறச் சென்றவன், வேகமாக அழைப்பைத் துண்டித்து, “ஆங் பாப்பா” என்றவாறு தந்தையின் புறம் திரும்பி நின்றான்.

“சூரஜ் குடும்பத்து பையனுக்கு நம்ம மாஹிய கேக்குறாங்க. உனக்கே  தெரியும், வியாபார விஷயத்துல இரண்டு குடும்பத்துக்கிடையிலும் ஒரு மோதல் இருக்கு. ஆனா, இந்த கல்யாணம் மூலமா அதை சரிப்படுத்தலாம். கூடவே…” சுனில் மேலும் ஏதோ பேச வர,

அதை இடைவெட்டி “கூடவே, நமக்கு இலாபமும்தான். ஊரோட மீதி கன்ட்ரோலும் நம்ம கைக்கு கிடைக்கும் பாப்பா” வெற்றிப்புன்னகையோடு ராவண் சொல்ல, தன் மகனை மெச்சுதலாக பார்த்தார் அவர்.

“சீக்கிரம், எல்லா ஏற்பாட்டையும் பண்ணு பேட்டா” என்றுவிட்டு சுனில் தனதறைக்குச் சென்றிருக்க, வீட்டிலிருந்து வெளியேறப் போன ராவணை மீண்டும் தடுத்து நிறுத்தியது ஒரு மெல்லியக்குரல்.

ராவணும் குரல் வந்த திசையை நோக்க, “தம்பி, எதுக்கும் பொண்ணுக்கிட்ட ஒரு வார்த்தை…” என்று தயக்கமாக இழுத்த மாஹியை கவனிக்கவென வேலைக்கு அமர்த்தப்பட்ட ராதா, அடுத்து அவன் முறைத்த முறைப்பில் கப்சிப் என்றாகிவிட்டார்.

என்னதான் உள்ளுக்குள் பயமிருந்தாலும், பெற்ற பெண்ணை விபத்தில் இழந்த பின் மாஹியை கவனித்துக்கொள்ளவென வேலைக்கு வந்தவருக்கு ஏனோ அவளைப் பார்த்த பின் தன் பிள்ளையே கிடைத்த உணர்வு! அதனாலேயே பயத்தை விடுத்து மனதிலிருந்ததை சொல்லிவிட்டார்.

“இல்லைப்பா, அம்மா இல்லாத பொண்ணு…” ராதாவின் வார்த்தைகள் திக்கித்திணறி வெளிவர, “எங்க முன்னாடி பேசுற அளவுக்கு தைரியம் வந்திருச்சா ம்ம்?” ராவண் அழுத்தமாக ஒற்றைப்புருவத்தை உயர்த்திக் கேட்கவும், அவருக்கோ கைகால்களே நடுங்கிவிட்டது.

“என்னை மன்னிச்சிருங்க” தலையை மூடியிருந்த முந்தானையை இறுகப்பற்றி மன்னிப்புக் கேட்டுவிட்டு ராதா அங்கிருந்து விறுவிறுவென நகர, அலைப்பேசிக்கு வந்த செய்தியைப் பார்த்து பற்களை நரநரவென கடித்த ராவண, பதில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து வேகமாக வெளியேறினான்.

ஆனால், அத்தனை உரையாடல்களையும் தனதறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த மாஹிக்கு விழிகளிலிருந்து விழிநீர் விடாது வழிந்துக்கொண்டிருந்தது. அவள் மனதிலுள்ள ரகசியம் அவளுக்கு மட்டும்தானே தெரியும்!

அன்றுமாலை,

கார்ஜன்னல் வழியே வெளியே மழையை வேடிக்கைப் பார்த்தவாறு சென்றுக்கொண்டிருந்த வேதாவுக்கு நேற்று தான் பார்த்த காட்சியின் நியாபகங்கள்தான். கூடவே, அவள் மனக்கண் முன் தோன்றிய விம்பங்களின் நினைவுகளும்.

அவள் மனதினுள் கொழுந்து விட்டெரியும் கோபத்தீயை பெய்ந்துக்கொண்டிருக்கும் மழையினால் கூட  அணைக்க முடியவில்லை.

‘என்ன பண்றதுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது. யாருக்கிட்ட கேக்கலாம்? அம்ரி, பாட்டிக்கிட்ட கூட இதைப்பத்தி கேக்க முடியாது. எப்போவும் கூட இருக்காங்கன்னு அவங்ககிட்ட கேட்டு நாமளே பிரச்சினைய விலைக்கு வாங்கிற கூடாது. என்னதான் இருந்தாலும் இந்த ஊரோட சம்பிரதாயத்தை மதிக்கிறவங்க அவங்க. இந்தமாதிரியான சடங்கைப் பத்தி வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தணும். இந்த விஷயத்துல நிதானமா யோசி வேதா! ஆதாரத்தோட வெளியிடணும்’

தீவிரமாக யோசித்தவாறு சென்றுக்கொண்டிருந்த வேதா, கார் சட்டென ‘க்ரீச்’ என்ற சத்தத்தோடு நின்றதும், திடுக்கிட்டு சந்தீப்பை நோக்கினாள்.

அவனுடைய முகமொ பேயறைந்தது போலிருக்க, பின்னாலிருந்த வேதாவை கண்ணாடி வழியாகப் பார்த்து, வெளியே தெரிந்தக் காட்சியை ஒருவித பயத்தோடு சந்தீப் பார்க்க, அவன் பார்வை சென்ற திசையை புருவ முடிச்சுகளுடன் புரியாது நோக்கினாள் வேதா.

பார்த்ததுமே அவள் விழிகள் சாரசர் போல் விரிந்துக்கொண்டன. அங்கு நடுவீதியில் மழையில் நனைந்தவாறு தன் ஜீப்பின் பொனெட்டில் ராவண் முட்டியில் கைகளை கோர்த்து அத்தனை ஆக்ரோஷத்தோடு அமர்ந்திருக்க, அவன் முன் கைகள் கட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் ஒரு பெண்ணும் ஆணும்.

பொதுமக்கள், அடியாற்கள் என அந்த இடத்தைச் சூழ்ந்து நின்றிருக்க, “என்ன நடக்குது இங்க?” வாய்விட்டே கேட்டவாறு காரிலிருந்து இறங்கினாள் வேதா. இவள் இறங்கியதுமே பதறிய சந்தீப், “அய்யோ தீ! வேணாம்” என்று கத்தியவாறு காரிலிருந்து இறங்கி அவள் பின்னால் ஓட, அவன் கத்தலை சற்றும் கண்டுக்கொள்ளவில்லை அவள்.

அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக சென்று நின்ற வேதா மழையில் முழுதாக நனைந்தவாறு நடப்பதை வேடிக்கைப் பார்க்க, பொனெட்டிலிருந்து பாய்ந்து இறங்கியவன், அந்த ஜோடியை நோக்கி நடந்து வந்தவாறு கைகளை நீட்ட, அவன் கரத்தில் வைக்கப்பட்டது அவனுடைய பெரிய கத்தி.

உலகிலுள்ள மொத்த கோபத்தையும் குத்தகைக்கு வாங்கியது போலிருந்தது ராவணின் முகம். பாறை போன்று அத்தனை இறுக்கம்!
அந்த இருவரின் கண்ணீரும், ‘விட்டுவிடச் சொல்லி’ அவர்கள் கதறும் கதறல்களும் அவன் காதில் விழவேயில்லை.

சிவந்த கண்களுடன் அவர்களை நோக்கியவன், “இந்த மாதிரியான காரியத்தை பண்ண இனி இங்க எவனுக்கும் தைரியம் வந்துறக் கூடாது” பற்களை கடித்தவண்ணம் அந்த கத்தியால் அந்த ஆணை வெட்டியிருக்க, அதைப் பார்க்க முடியாது கண்களை இறுக மூடிக்கொண்டார்கள் சிலபேர்.

ஆனால், விழி விரித்து அசையாது அதைப் பார்த்துக்கொண்டுதான் நின்றிருந்தாள் வேதா. ஏற்கனவே ஒரு அடி முன்னே எடுத்து வைத்து அவனை நோக்கிச் செல்ல இருந்தவளுக்கு பக்கத்திலிருந்த பெரியவர் சொன்ன செய்தியை கேட்டதும் ராவணை ஏனோ முதன்முறை தடுக்கத் தோன்றவில்லை.

தன் கணவன் இறந்தை பார்த்து பக்கத்திலிருந்த பெண் கதற, ராவணின் கண்ணசைவை உணர்ந்து அந்தப்பெண்ணையும் வெட்டியிருந்தனர் ராவணின் அடியாற்கள். இமைகளிலிருந்து மழைத்துளி சொட்டு சொட்டாக விழ, கத்தியிலிருந்து தரையில் சொட்டிய இரத்தம் மழைநீரோடு கலந்து ஓடியது.

‘தப்பே செய்தாலும் தண்டனை கொடுக்க மனிதர்களுக்கு உரிமை கிடையாது. சட்டம்தான் தண்டிக்க வேண்டும்’ என்று வசனம் பேசுபவள், முதன்முறை அமைதியா நிற்க, அவள் நிலையை அவளாலே ஏற்க முடியவில்லை.

கீழுதட்டைக் கடித்து மனதை கட்டுப்படுத்தியவாறு வேதா ராவணையே பார்த்துக்கொண்டிருக்க, சிவந்த கண்களுடன் அவளை நோக்கிய ராவணின் இறுகிய இதழ்கள் அவள் பொதுமக்களோடு நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து கேலியாக வளைந்து தன் அக்மார்க் புன்னகை புரிந்தன.