காதல்போர் 11

eiQH2AJ62789-f3e12c15

“நிஜமாவே நீ எதுவும் பண்ணல்லையா? என்னால நம்ப முடியல்லையே, இது வேதா தானே! இல்லை… நீ கோபப்படாம வந்திருக்கியே, அதான்” விக்ரம் வேதாவை மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாக பார்த்தவாறு சொல்ல, பத்மாவதி, அம்ரிதாவுக்கு கூட நடந்ததை சந்தீப் சொன்னதிலிருந்து ஆச்சரியம்தான்.

“ஒருவேள, திருந்திட்டியோ? அதுக்கு வாய்ப்பில்லையே…” தாடையை தடவியவாறு விக்ரம் கேலியாக சொல்ல, வேதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. முட்டியில் கைக்கோர்த்து ஊன்றி, தரையை வெறித்தவாறு இறுகிய முகமாக அமர்ந்திருந்தாள் அவள்.

“தீ, நிஜமாவே உங்களுக்கு கோபம் வரல்லையா?” அம்ரி சற்று நம்பாத குரலிலே கேட்க, வேதாவின் முகபாவனைகளை சற்றுநேரம் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பத்மாவதியோ அவளருகில் வந்தமர்ந்து அவள் கரத்தை இறுகப்பற்ற, வேதாவோ அவரை கலக்கமான முகத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

“என்னாச்சு வேதஷ்வினி?” பத்மாவதி புரியாது கேட்க, “என்னால அந்த இடத்துல அவனை தடுக்க தோனல. அங்க பக்கத்திலிருந்தவங்க சொன்னதை கேட்டதும் ஒருவேள, அவங்க இரண்டு பேருக்கும் அந்த சேவேஜ் கொடுக்குற தண்டனை சரியோன்னு தோனிச்சு” அமைதியை விடுத்து வேதா வாயைத் திறந்து பதில் பேச, சுற்றியிருந்தவர்களோ கேள்வியாக அவளை நோக்கினர்.

“பெத்த குழந்தைய எப்படி அவங்களால காசுக்கு வாடகைக்கு கொடுக்க முடிஞ்சது? அக்ரீமென்ட் போட்டு பொண்ணுங்கள வாடகைக்கு கொடுக்குறாங்க. பொண்ணுங்க என்ன சந்தையில விக்குற பொருளா ஆங்? அட ஆமால்ல, இங்க அப்படிதானே! அவங்களுக்கெல்லாம் அந்த சேவேஜ் கொடுத்த தண்டனைய விட ரொம்ப அதிகமா…” என்று விடாது பேசிக்கொண்டே சென்றவளின் வார்த்தைகள் அதற்குமேல் பேச முடியாது அப்படியே நின்றன.

“இந்த ஊர்ல பொண்ணுங்களுக்கு பல கட்டுப்பாடு இருக்கு. ஆனா, இப்படி வாடகைக்கு விடுற அளவுக்கு எந்த ஆம்பிளைங்களும் இல்லை. இதுக்கு முன்னாடி ஒருதடவை இப்படி நடந்தப்போ அந்த மெஹ்ரா குடும்பத்து பையன்தான் அந்த ஆளுங்கள ஊரை விட்டு அடிச்சி துரத்தினான். இவங்களும் ஏதோ பணக்கஷ்டத்தால பெத்த பொண்ணுக்கு இப்படி பண்ணியிருக்காங்க” பத்மாவதி சொல்ல, 

“ராவண் பையா கெட்டவருதான் ஆனா, சிலநேரம் அவர் பண்றதுல தப்பே இல்லைன்னு தோனும்” என்றாள் புன்சிரிப்புடன் அம்ரிதா.

“ஆமா, அவன் பண்ணதுல தப்பே இல்லை” என்றவளின் நினைவலைகளில் நடுவீதியில் கத்தியிலிருந்து இரத்தம் சொட்ட சொட்ட ஐயனார் போல் நின்றிருந்த ராவணின் தோற்றம்தான் நியாபகத்திற்கு வந்தது.

அடுத்தநாள்,

அந்த துர்காதேவியின் கோவிலில் கண்களை மூடி வேதா துர்காதேவி சிலை முன் நின்றிருக்க, அவள் மனதிலோ அத்தனை குழப்பம்!

‘எனக்கு என்ன பண்றதுன்னு சுத்தமா தெரியல. இங்க எல்லாமே தப்பா இருக்கு. முக்கியமா சின்ன பொண்ணுங்களுக்கு செய்யப்படுற சடங்கு! எல்லாத்தையும் மாத்தணும். ஆனா,  எப்படி என்னால முடியும்? தனியாளா இருந்துட்டு என்னால இதை எப்படி பண்ண முடியும்? காசுக்கு விலைப் போன காவல்துறை, ச்சே!’ மனதிலுள்ள மொத்தப் பாரத்தையும் இறக்கி வைக்கும் நோக்கில் மானசீகமாக கடவுளிடம் புலம்பியவாறு கண்களை திறந்தவளின் முன் தரிசனம் தந்தாள் மாஹி.

அவளும் கண்களை மூடி கடவுளைத்தான் வணங்கிக்கொண்டிருந்தாள், கன்னத்தினூடே தரையை தொடும் கண்ணீரோடு. அந்த பேதையின் மனதின் தவிப்பு அவளுக்குதானே தெரியும்!

மாஹியை பார்த்த வேதாவுக்கு ஒரு யோசனைதான் தோன்றியது. அவள் கண்களை திறக்கும் வரை காத்திருந்தவள், மாஹி கண்களை திறந்து வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் “தீ…” என்று அழைத்ததும்தான் தாமதம் அவளை யாருமில்லாத இடத்திற்கு தரதரவென இழுத்துக்கொண்டு சென்றாள் அவள்.

“தீ, என்ன பண்றீங்க?” மாஹி பயந்த குரலில் கேட்க, “எனக்கு உன்கிட்டயிருந்து சில விஷயங்கள் தெரிஞ்சாகணும் மாஹி” என்று வேதா சொன்னதும், அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

“என்ன…என்ன தெரியணும்?” அவள் புரியாது கேட்க, “இந்த ஊர்ல பொண்ணுங்களுக்கு சில சடங்கு பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன். அன்னைக்கு ஜூஹிக்கு கூட…”  தயக்கமாக இழுத்த வேதா, “அந்த சடங்கை பத்தி எனக்கு தெரியணும்” என்று சொல்ல, “உங்களுக்கு எப்படி தெரியும்?” அதிர்த்துப்போய் கேட்டாள் மாஹி.

“அது… அது வந்து” பதில் சொல்லத் தெரியாது திணறியவள், “இப்போ உன்னால சொல்ல முடியுமா, முடியாதா?” என்று சற்று மிரட்டலாகவே கேட்க, “தீ, தயவுசெஞ்சி இதை இதோட விட்டுருங்க. நானும் இதை வெளில சொல்ல மாட்டேன். என்கிட்ட கேட்ட மாதிரி வெளியாளுங்ககிட்ட கேட்டுறாதீங்க. இதை பத்தி உங்களுக்கு தெரியும்னு யாருக்காச்சும் தெரிஞ்சா, உங்களை கொல்லக் கூட தயங்க மாட்டாங்க” என்று மாஹி சற்று பதட்டமாகவே சொன்னாள்.

“என்ன பேசுற நீ, என்கிட்ட சொல்றதுல என்ன இருக்கு? இது சரின்னு உனக்கு தோனுதா மாஹி? இதை நாம மாத்தியே…” வேதா பேசி முடிக்கவில்லை, அவளை இடைவெட்டி “எதுவும் வேணாம் தீ, நான் வாழணும்னு ஆசைப்படுறேன். நீங்க இப்படி என்கிட்ட கேக்குறதை யாராச்சும் கேட்டா உங்க கூட சேர்த்து என்னையும் கொன்னுடுவாங்க. கையெடுத்து கும்பிட்டு கேக்குறேன். என்கிட்ட எதுவும் கேக்காதீங்க. எனக்கு பயமா இருக்கு” என்று பேசிக்கொண்டே சென்றவள் கிட்டதட்ட அழும் நிலைக்கே சென்றுவிட்டாள்.

வேதாவோ அவளை பாவமாக பார்க்க, “மாஹி…” என்ற குரலில் சட்டென திரும்பியவள், அங்கு நின்றிருந்த ராதாவை பார்த்ததுமே வேதாவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவரிடம் ஓடிச்சென்றிருக்க, நெற்றியை நீவி விட்டுக்கொண்டவளுக்கு இந்த ஊர் செய்யும் தவறுகளுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற எரிச்சல் பெருகிக் கிடந்தது.

கோவிலிலிருந்து யோசனையோடு வேதா வெளியேறி காரை நோக்கிச் செல்ல, சரியாக அவளை நோக்கி வேகமாக ஓடி வந்த இளைஞனை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. ‘மோதி விடுவானோ?’ என்ற பயத்தில் அவள் கண்களை இறுக மூடிக்கொள்ள,

அடுத்தநொடி ஒருவனுக்குக் கீழ் விழுந்து கிடந்தாள் அவள். கூடவே, அவனுடனான முத்தத்துடன்.

ஆனால், அவள் எதிர்ப்பார்த்தது போல் அவள் மேல் மோதியது அந்த இளைஞன் அல்ல, வேதாவின் ராவணே. அவளைத் தாண்டி அந்த இளைஞன் ஓடியிருக்கவும்,  அவனை துரத்திக்கொண்டு வந்த ராவண்தான் அவள் மேல் மோதியிருந்தான். விழுந்த வேகத்தில் அவனிதழ் அவளிதழில் அழுந்த பதிய, மூடியிருந்த விழிகளை பட்டென்று திறந்தாள் வேதா.

ராவணோ இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ‘ஷீட்!’ என்று எரிச்சலாக கத்தியவாறு அவள் மேலிருந்து எழுந்து நின்றவன், “ஏய், இப்படிதான் முன்னால வந்து நிப்பியா? ச்சே! உன்னைப்போய்…” என்று இதழை அழுந்தத் துடைத்து பற்களை நரநரவென கடித்த வண்ணம் வேதாவை நோக்க, ‘இதெல்லாம் நான் பேச வேண்டியது?’ என்ற ரீதியில் இதழை புறங்கையால் துடைத்தவாறு அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.

“ஏதோ இதுக்காகவே நான் உன் முன்னால வந்து நின்ன மாதிரி நீ பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை சேவேஜ்” வேதா பேசிக்கொண்டேச் செல்ல, அவனோ அங்கிருந்த ஒருவனின் கையிலிருந்த தண்ணீர்போத்தலை எடுத்து வாயைக் கொப்பளித்துக்கொண்டிருந்தான்.

அதைப் பார்க்க வேதாவுக்குதான் பிபி எகிறிக்கொண்டேச் சென்றது.

‘இவன் ரொம்பதான் பண்றான்’ வாய்விட்டே முணங்கியவாறு அவள் அவனை நோக்க, “உன்னாலதான் அவன் ஓடிட்டான். இன்னைக்கு என் கையால சாவ வேண்டியவன் நீ வந்து குறுக்க நின்னதால எனக்கே விளையாட்டு காமிச்சிட்டான். அவன…” ராவண் பற்களை கோபத்தில் கடிக்க, சரியாக அங்கு வந்து சேர்ந்தனர் அவனின் அடியாட்கள்.

அவர்களைப் பார்த்ததும், “எங்கடா போய் தொலைஞ்சீங்க? இன்னும் பத்து நிமிஷத்துல அவன் என் முன்னால இருக்கணும். புரியுதா?” என்று ராவண் மிரட்ட, அதில் மிரண்டவர்கள் தங்களுக்கான வேலையை செய்ய பறந்திருக்க, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு நின்றிருந்த வேதாவின் இதழ்களோ ஏளனமாக வளைந்தன.

ராவணோ இடுப்பில் கைக்குற்றி ஒற்றைப்புருவத்தை ‘என்ன?’ என்ற ரீதியில் ஏற்றி இறக்கி முறைக்க, “இல்லை… உன்னைப் பார்த்தா எனக்கு சிரிப்பா இருக்கு. லைக் ஜோக்கர் மாதிரி” வேதாவின் வார்த்தைகள் ஏளனமாக வர, ‘ஜோக்கர்’ என்ற வார்த்தையைக் கேட்டதுமே அவனுக்கு அந்த குழந்தை முகம்தான் நியாபகத்திற்கு வந்தது.

‘அரே ஜோக்கர்’ என்ற அந்த சிறுமியின் குரல் கேலியாக திரும்பத் திரும்ப அவன் காதில் ஒலிக்க, அடுத்தகணம் வேதாவின் குரல்வளையை ஒருகையால் பிடித்திருந்தான் ராவண். சுற்றியிருந்தவர்களோ ‘அய்யோ! ஏன் இந்த பெண்ணிற்கு வேண்டாத வேலை’ என்ற ரீதியில் பார்க்க, வேதாவோ சற்றும் அதிரவில்லை.

அப்போதும் அவன் விழிகளையே கேலிச்சிரிப்புடன் அவள் பார்த்திருக்க, “என்னை ஜோக்கர் சொல்லாத! எனக்கு பிடிக்காது” என்று ராவண் வார்த்தைகளை கடித்துத்துப்ப, ‘ஆஹான்!’ என்ற வேதாவின் குரலிலிருந்த நக்கல்தொனியில் அவனுக்கு அதற்குமேல் அவள்முன் நிற்க தோன்றவில்லை.

அவளை உதறித்தள்ளிவிட்டு அவன் விறுவிறுவென முன்னே நடக்க, போகும் அவனை பார்த்திருந்தவளின் இதழ்களோ விஷமமாக வளைந்தன.

 

அடுத்தநாள் காலை,

வேதாவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வர, திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவளுக்கு அத்தனை உற்சாகம்!

“எப்படி இருக்க மை டோலி?” மனம் உற்சாகத்தில் திளைத்தாலும் வெளியில் வேதாவின் குரல் சாதாரணமாகவே வர, “வேத், நீ இல்லாம நான் சூப்பரா இருக்கேன். தப்பித்தவறி சென்னை பக்கம் வந்துராத” என்று அவளை வெறுப்பேற்றவென கேலியாக சொன்னாள் வேதாவின் தங்கை தீப்தி.

வேதாவோ இருபக்கமும் சலிப்பாக தலையாட்ட, “என்ன வேத், அங்க போயும் உன் புரட்சிய ஆரம்பிச்சிட்ட போல. நீதான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணோ?” தீப்தி நக்கல்தொனியில் கேட்க, “இனாஃப் தீப்” சலிப்பாக வந்தன அவளின் வார்த்தைகள்.

“ஆமா… இப்போ எதுக்கு கோல் பண்ணியிருக்க? இப்போதான் உன் அக்கா நியாபகம் உனக்கு வந்திச்சா என்ன? அம்மா எப்படி இருக்காங்க?” வேதா அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே போக, “மிஸஸ்.நரேனுக்கு என்ன? நீ இல்லல்ல, சந்தோஷமா இருக்காங்க. நம்ம விக்கி என்ன பண்றான்? ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றதுக்காக அவனுக்கு ட்ரை பண்றேன். ஆன்சர் பண்றான் இல்லை” என்று தீப்தி சொல்ல, அவளோ கேள்வியாக புருவத்தை நெறித்தாள்.

“என்ன மேட்டர்?” வேதா கேட்க, “அது வேத், மோகன் அங்கிள்க்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சி. சீரியஸ் எல்லாம் இல்லை. பட், விக்கிய பார்க்கணும்னு சொல்றாரு” என்று தீப்தி சொல்ல, “இப்போ எப்படி இருக்காரு?” சற்று பதட்டத்துடனே கேட்டாள் அவள்.

“நவ் ஹீ இஸ் பெட்டர்” என்று தீப்தி சொன்னதும்தான் தாமதம், “உடனே நானும் விக்கியும் கிளம்பி வர்றோம்” என்ற வேதாவின் வார்த்தைகளில் அதிர்ந்துவிட்டாள் அவளின் தங்கை.

“அய்யோ வேத்! விக்கிய மட்டும் அனுப்பு. நீ…” என்று தயக்கமாக அவள் இழுக்க, “என்ன, என்னை வர வேணாம், இங்கேயே இருன்னு சொல்றியா?” கோபமாக கேட்டாள் வேதா.

தீப்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன் அக்காவின் கோபத்தை பற்றி அவளும் அறிவாள் அல்லவா!

“அது அப்பாதான் இன்னும் நிலைமை சரியாகலன்னு…” அவள் திணற, பற்களை கோபமாக கடித்தவள், “உங்களையெல்லாம் வந்து வச்சிக்கிறேன்” என்றுவிட்டு அழைப்பை பட்டென்று துண்டித்தாள்.

அவள் வைத்ததும்,

எதிரிலிருந்த தீப்திக்குதான் ‘ஹப்பாடா!’ என்றிருந்தது.

தீப்தி சொன்ன செய்தியை சொல்வதற்காக விக்ரமின் அறைக்கு வந்தவளின் கண்களில் பட்டது என்னவோ ஜன்னல் வழியே வெளியே வெறித்தவாறு எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டு நின்றிருந்த விக்ரமின் தோற்றம்தான்.

அவனைப் புரியாது பார்த்தவள் அவனை நெருங்கி, “விக்கி…” என்றழைத்தவாறு அவன் தோளைத் தொட, திடுக்கிட்டு திரும்பியவனின் இதழில் வரவழைக்கப்பட்ட புன்னகை.

“சொல்லு வேதா…” என்று விக்ரம் கேள்வியாக நோக்க, அவன் குரலின் மாற்றம் அவளுக்கு தெரியாதா என்ன? ஆனாலும் அதை விடுத்து, “உன் அப்பாவுக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சாம். சீரியஸா எதுவும் இல்லை. இப்போ பெட்டர்னு சொல்றாங்க. உன்னை பார்க்கணும்னு ரொம்ப அடம்பிடிக்குறாராம்” என்று வேதா சொன்னதும், அதிர்ந்துவிட்டான் அவன்.

“அப்பாவுக்கு ஒன்னும் இல்லல்ல வேதா?” அவன் பதறியபடி கேட்க, “அதெல்லாம் ஒன்னுஇல்லைடா, நீ நாளைக்கே கிளம்பு. நிலைமை சரியானதும் நான் சீக்கிரம் ஊருக்கு வந்துடுறேன்” என்று வேதா சொன்னதை கேட்டதும் அவனுக்கோ அடுத்த அதிர்ச்சி!

“அது… உன்னை எப்படி இங்க தனியா விட்டுட்டு…” விக்ரம் மனதில் ஒன்றை நினைத்து தடுமாற, “நான் என்ன குழந்தையா? ரொம்ப பண்ணாம நாளைக்கே கிளம்புற வழிய பாரு! என்ட், சந்தீப்பே உன்னை ஸ்டேஷன்க்கு கொண்டுபோய் விட்டுருவான். இல்லைன்னா, என் மேல இருக்குற கோபத்துல அந்த சேவேஜோட ஆளுங்க உன்னை ஏதாவது பண்ணிடுவாங்க” என்று அவள் பேசிக்கொண்டே போக, இவனிடமோ பதிலேயில்லை.

அதை உணர்ந்தவள், “என்ன?” என்று கேட்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்த, “இல்லை… போற வழியில ஒரு வேலை இருக்கு. சந்தீப் எல்லாம் வேணாம். நானே போயிடுவேன்” ஓரக்கண்ணால் தன் தோழியைப் பார்த்தவாறு தயக்கமாக சொன்னான் விக்ரம்.

அவனுடைய பாவனையில் வேதாவுக்கோ சிரிப்புதான் வந்தது.

“ஆஹான்! சரிதான். அப்போ கண்டிப்பா ஒரு சம்பவம் இருக்கு” வேதா அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, அதில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டவன், “என்ன வேதா நீ, முறைப்படி போய் பொண்ணு கேப்போம். எனக்காக நீ பொண்ணு கேக்க மாட்டியா என்ன?” என்று சிரிப்புடன் முடிக்க, “உன் லவ்வால அந்த சேவேஜுக்கும் எனக்கும் பெரிய போரே நடக்க போகுது. இப்போவே போருக்கான அறிவிப்பை போட வேண்டியதுதான்” என்றுவிட்டு இருபக்கமும் தலையாட்டி சிரித்துக்கொண்டாள் வேதா.

அவள் சொன்னது போல் போருக்கான  ஆரம்பப்புள்ளியாக,

ராவணின் வீட்டில் அதேநேரம்,

“பையா…” என்றொரு அலறல். சுனில் அறைந்த அறையில் தரையில் விழுந்துவிட்டார் ராதா.

மாஹியோ வாங்கிய அடிகளில் பயந்து சுவற்றோடு ஒட்டி நின்றிருக்க, பயத்தில் அவளுடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“பையா, ரொம்ப நாளா இது நடக்குதுன்னு நினைக்கிறேன். அந்த பையன் கூட நம்ம மாஹி அம்மாவ நம்ம ஆளுங்க சிலபேர் பார்த்திருக்காங்க” ராவணின் அடியாள் ஒருவன் சொல்ல,  கை முஷ்டியை இறுக்கி நெற்றி நரம்புகள் புடைத்து கோபத்தை கட்டுப்படுத்திய நிலையில் அமர்ந்திருந்தான் ராவண்.

கன்னத்தில் கைவவைத்து அழுதுக்கொண்டிருந்த ராதாவை உக்கிரமாகப் பார்த்தவர், “இதுதான் நீ பொண்ண பார்த்துக்குற இலட்சணமா? அவ என்ன பண்றா, எவன் கூட பழகுறான்னு கூட தெரியாம என்ன வேலை பார்க்குற நீ? இதுக்கப்றம் இங்க உனக்கு வேலையில்லை” என்று சொல்லி தன் ஆட்களிடம் அவர் கண்ணை காட்ட, பெறாத மகளான மாஹியை பிரியும் வேதனையில் கதறியபடி வெளியேறினார் ராதா.

“ஐயா, இதுக்குமேல அந்த பையன உயிரோட விடுறது எனக்கு சரியா தோனல. நம்ம வீட்டு பொண்ணு மேலேயே…” அடியாள் ஒருவன் இழுக்க, இதைக் கேட்ட மாஹிக்கோ அதிர்ச்சி!

“அய்யோ பாப்பா! அவர எதுவும் பண்ணிடாதீங்க” என்று அவள் கதற, “பெத்த பொண்ணா போயிட்ட. அதனால உயிரோட விடுறேன்னு சந்தோஷப்படு!” என்ற சுனில், “அந்த பையன் இனிமே உயிரோட இருக்க கூடாது பேட்டா” என்று தன் மகனை அழுத்தமாக பார்த்தவாறுச் சொல்ல,

“நாளைக்கே அவனுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்று ராவணுடைய வார்த்தைகள் அழுத்தமாக வர, தன் கூரிய கத்தியின் முனையை தடவி விட்டுக்கொண்டன அவனுடைய விரல்கள்.