காதல்போர் 13

eiFT8LE62712-bffd4382

“பேட்டா, மாஹிக்கிட்ட அவள பேச விட்டது எனக்கு சரியா தோனல” என்ற சுனில், “கண்டிப்பா நடந்ததை அவ அந்த பொண்ணுக்கிட்ட சொல்ல வாய்ப்பிருக்கு” என்று உறுதியான குரலில் முடிக்க,

“அப்படியே அவளுக்கு தெரிஞ்சாலும் அவளால அப்படி என்ன பண்ணிர முடியும்? மாஹிய தவிர அவக்கிட்ட வேற எந்த ஆதாரமும் இல்லை”  ராவண் ஏளனமாக சொல்லவும், ‘இல்லை’ என்று அழுத்தமாக தலையாட்டினார் அவர்.

“அவ்வளவு அசால்ட்டா இவள விட்டுர முடியாது. ரொம்பவும் ஆபத்தானவ. இவ உயிரோட இருக்குறது நமக்கோ, இல்லை நம்ம ஊருக்கோ ஆபத்துன்னு தோனிச்சின்னா, அடுத்தநிமிஷம் இவ இந்த ஊரை உயிரோட தாண்ட கூடாது” என்று சுனில் சொல்லிக்கொண்டிருக்கும்  போதே அங்கு அறையில் வேதவோ, “விக்ரம் எங்க மாஹி?” என்று காட்டமாக கேட்டாள்.

ஆனால், மாஹியிடமோ பதிலேயில்லை. அவளிடம் வெறும் அழுகை மட்டுமே.

அவளை முறைத்தவள், “இப்போ நீ பதில் சொல்ல போறியா, இல்லையா?” என்று கத்த, “என்னை மன்னிச்சிருங்க. என்னை மன்னிச்சிருங்க” என்ற வார்த்தைகள் மாத்திரமே மாஹியிடம் வந்துக்கொண்டிருந்தன. ஆனால், வேதாவுக்குதான் கோபம் எகிறிக்கொண்டிருந்தது.

‘இவளை சந்திக்க வந்த தன் நண்பனுக்கு என்ன நடந்தது’ என்ற பதட்டம் அவளுக்கு இருக்க, இவளோ பதில் சொல்லாது தொடர்ந்து அழவும் வேதாவின் பொறுமைதான் காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.

பொறுமையை இழுத்துப்பிடித்து, “லுக் மாஹி, விக்கி வீட்டுக்கு போகல. கடைசியா உன்னை பார்க்கதான் வந்தான். அவனுக்கு என்னாச்சுன்னு உனக்குதான் தெரியும். தயவு செஞ்சி சொல்லு” வேதா கேட்க, அவளுடலிலோ ஒரு அதிர்வு!

மீண்டும் நடந்த சம்பவத்தை நினைத்து, “தீ, என்னை மன்னிச்சிருங்க” என்று அவள் கதறியழ, ‘ஷீட்!’ என்று கத்தியவாறு எழப்போனவளின் கையைப் பிடித்த மாஹி, “அவரை கொன்னுட்டாங்க தீ. என்னோட தப்புதான். நான்தான் அவர் சாக காரணமாகிட்டேன்” என்று சொன்னதும்தான் தாமதம், அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

ஒருநிமிடம் அவள் சொன்ன செய்தியில் மூளை செயலிழந்துவிட்ட உணர்வு வேதாவுக்கு!

“என்ன…என்ன சொல்ற மாஹி? விளையாடாத! விக்கிக்கு எதுவும் ஆகியிருக்காது. மரியாதையா விக்கி எங்க இருக்கான்னு சொல்லு, இல்லைன்னா நானே உன்னை…” திக்கித்திணறி வேதாவின் வார்த்தைகள் வெளிவர, சுவற்றில் தலையை சாய்த்து, “சாகுறதுக்கு கூட என்கிட்ட தைரியமில்லை. நீங்களே என்னை கொன்னுடுங்க” விரக்தியாக வந்தன மாஹியின் வார்த்தைகள்.

வேதாவுக்கு எதுவுமே புரியவில்லை. “அன்னைக்கு என்னாச்சு? என் விக்கி எங்க?” தைரியத்தை வரவழைத்து அவள் கேட்க, அன்று நடந்த சம்பவத்தில் உண்டான தாக்கம் இன்றும் மாஹியின் உடலில் தெரிய, திக்கித்திணறி நடந்ததை சொல்லத் தொடங்கினாள் அவள்.

“அவரை பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சது தீ. பொறந்ததுலயிருந்து அதிகாரம் பண்ற ஆம்பிளைங்கள பார்த்து வளர்ந்தவ நான். ஆனா, அவர் ரொம்ப நல்லவரு. சிலநேரம் உங்க கூட பழகுறதை பார்த்து எனக்கே பொறாமை வந்திருக்கு. அவருக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருந்தது. தினமும் கோவிலுக்கு பின்னாடி இருக்குற காட்டுலதான் என்னை சந்திக்க வருவாரு. ஆனா, அந்த சந்தோஷம் கூட ரொம்பநாள் நீடிக்கல. பாப்பாவுக்கு அவர் என்னை சந்திக்குறது தெரிஞ்சி போச்சு. அவர கொல்ல…” என்று அதற்குமேல் பேச முடியாது அவள் நிறுத்த, அதிர்ந்து அவளைப் பார்த்தாள் வேதா.

“என்னை வெளியில விடாம ரூம்ல பூட்டி வச்சாங்க. ஆனா, அவர்கிட்ட நடந்ததை சொல்லணும்னு யாருக்கும் தெரியாம இங்கயிருந்து தப்பிச்சி நாங்க வழக்கமா சந்திக்குற இடத்துக்கு போனேன். ஆனா, அப்போவே யோசிச்சிருக்கணும், அது கூட என் பாப்பா, பையாவோட திட்டம்னு. என்னை வச்சி அவர கொல்ல திட்டம் போட்டிருக்காங்கன்னு எனக்கு சத்தியமா தெரியல. நானும் முட்டாள்தனமா அவர தேடிப்போய் அவர் சாக காரணமாகிட்டேன். அன்னைக்கு என்னாச்சுன்னா…” என்றவளின் நினைவுகள் கடைசியாக இருவரும் சந்தித்த தருணத்தைதான் நினைத்துப் பார்த்தது.

அந்த கோவிலுக்கு பின்னுள்ள காட்டுப்பகுதியில் தனது இடது கைக்கடிகாரத்தையும் மாஹி வழக்கமாக வரும் வழியையும் மாறி மாறிப் பார்த்தவாறு தன்னவளுக்காக காத்துக்கொண்டிருந்தான் விக்ரம்.

அவனை சிலநிமிடங்கள் காக்க வைத்து, முகமெல்லாம் வியர்த்துப்போய் பதட்டமாக மாஹி அந்த வழியால் ஓடி வர, முதலில் அவளைப் பார்த்ததும் புன்னகைத்தவன், அவளின் பதட்டத்தை கவனித்ததும் புரியாது பார்த்திருந்தான்.

“மாஹி…” என்றழைத்தவாறு அவளருகே வேகமாக அவன் செல்ல, அவனை விட வேகமாக அவனருகில் நெருங்கியவள், “மொதல்ல இங்கயிருந்து சீக்கிரம் போயிருங்க. தயவு செஞ்சி போயிருங்க” என்று கெஞ்ச ஆரம்பிக்க, அவனுக்கோ எதுவுமே புரியவில்லை.

அதுவும், கொஞ்சநாட்களாக கற்றுக்கொள்ளும் அரைகுறை ஹிந்தியை வைத்தே அவளுடன் திக்கித்திணறி பேசுபவன், அவளை நிதானமாக பேசச் சொல்லியே அவள் பேசுவதை புரிந்து பதிலளிப்பான். ஆனால், இப்போது பதட்டத்தில் அவள் வார்த்தைகள் தந்தியடிக்க, அவனால் புரிந்துக்கொள்ள முடியுமா என்ன?

“ரிலாக்ஸ் மாஹி! நிதானமா சொல்லு, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? நேத்து ஏன் என்னை பார்க்க வரல. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” விக்ரம் அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக, சரியாக சிகரெட்டை வாயில் பற்ற வைத்தவாறு, “தெய்வீகக்காதலோ? காதலனை காப்பாத்த ஓடி வந்துட்ட” என்று கேட்டவாறு வந்தான் ராவண்.

அவன் பின்னாலே அவனுடைய அடியாற்களும் வர, இதைப் பார்த்த இருவருக்கும் சப்த நாடியும் அடங்கிவிட்டது.

விக்ரமுக்கு உடல் நடுங்க, மாஹியின் கையை இறுகப்பற்றிக்கொண்டான். ஆனாலும், முயன்று தைரியத்தை வரவழைத்து பேசச் சென்றவனுக்கு உண்டான பயத்தில் கற்றுக்கொண்ட ஹிந்தி கூட வரவில்லை.

ராவணோ சிகரெட் புகையை ஊதியவாறு இருவரையும் சிவந்த விழிகளுடன் நோக்க, மாஹியை தன் பின்னால் இழுத்து நிறுத்திய விக்ரம், “அண்ணா, நானும் மாஹியும் காதலிக்கிறோம். நா…நான் நல்லா பார்த்துப்பேன். என்னை நீங்க நம்பலாம்” என்று தமிழிலே பேச, சுற்றியிருந்தவர்களோ சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

“பையா, இவரை எதுவும் பண்ணிடாதீங்க. எங்களை இப்படியே விட்டுருங்க. நாங்க இப்படியே எங்கேயாச்சும் போயிடுறோம். தயவு செஞ்சி எங்களை விட்டுருங்க” மாஹி, ராவணின் முன்னால் வந்து கதற, அடுத்து ராவண் அறைந்த அறையில் தரையில் விழுந்து கிடந்தாள் அவள்.

“அய்யோ! மாஹி…” என்று பதறியபடி விக்ரம் தன்னவளை நோக்கிச் செல்லப் போக, விக்ரமின் பின்னாலிருந்த அடியாள் ஒருவனோ தன் கையிலிருந்த இரும்பு ராடால் அவன் முதுகிலே ஓங்கி அடித்திருந்தான். அந்த வலி தாங்காது “ஆஆ…” என்று கத்தியவாறு விக்ரம் சுருண்டு கீழே விழுந்திருக்க, “விக்ரம்…” என்று அலறிவிட்டாள் அவள்.

ராவணுடைய முகமோ பாறை போல் இறுகிப்போயிருந்தது. அவனுடைய அடியாற்களோ விக்ரமை மாறி மாறி அடிக்க ஆரம்பிக்க, ராவணின் காலை பிடித்துக்கொண்ட மாஹி, “பையா, கெஞ்சி கேக்குறேன், அவரை விட்டுருங்க. அவர் ரொம்ப பாவம். எல்லாமே என் தப்புதான். தண்டிக்கிறதுன்னா என்னை தண்டிங்க. அவரை விட்டுருங்க. நீங்க சொல்ற மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்றேன். ஆனா, அவர உயிரோட விட்டுருங்க” என்று அழுதுக் கெஞ்ச, கொஞ்சமும் இளகவில்லை ராவணுடைய மனம்.

“அவன் பிழைக்கணும்னு உன் துர்காதேவிய வேண்டிக்க!” என்ற ராவண், தன் கத்தியை சுழற்றியவாறு விக்ரமை நெருங்க, அவனுடைய அடியாற்களோ அடியை நிறுத்தி விக்ரமை ராவணுக்கு எதிரே தூக்கி நிறுத்தினர்.

விக்ரமுடைய முகம் வீங்கி, நெற்றி, இதழோரத்தில் குருதி வழிந்துக்கொண்டிருந்தது. வாங்கிய அடியில் உண்டான வலியால் மயக்க நிலைக்கு சென்றுக்கொண்டிருந்தவனுக்கு அப்போதும் மனதில் தன்னவள்தான்.

“மாஹி..மாஹிய எதுவும் பண்ணாதீங்க. மா…ஹி” தன்னவளுடைய பெயரையே அவன் திரும்பத் திரும்ப உச்சரிக்க, “பார்ராஹ்!” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி இதழை வளைத்து ஏளனமாக சிரித்த ராவண், அடுத்தகணம் விக்ரமின் வயிற்றில் கத்தியை குத்தியிருந்தான்.

அதைப் பார்த்ததுமே “விக்ரம்…” என்ற அலறலுடன் தரையில் மயங்கி சரிந்திருந்தாள் அவள்.

நடந்ததை சொல்லி முடித்து மாஹி தலையில் அடித்துக் கதற, கண்ணீர் வழிய உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள் வேதா. அவளுடைய மனமோ ‘தான் கேட்டது அத்தனையும் கனவாக இருந்துவிடக் கூடாதா?’ என்று ஏங்கியது.

‘அப்போ இனி என் விக்கி என்கிட்ட வரமாட்டானா? எல்லாம் அவ்வளவுதானா? அவன்… அவன்…’ மனம் துடிக்க, அவளுடைய சிந்தனை முழுவதையும் ஆட்டிப்படைத்திருந்தன விக்ரமின் நினைவுகள்.

விழிகளிலிருந்து விடாது விழிநீர் வழிய, கை முஷ்டியை இறுக்கி தன் உணர்வுகளை கட்டுப்படுத்த படாத பாடுபட்டுத்தான் போனாள் வேதா.

“உன்னை காதலிச்சதை தவிர விக்கி எந்த தப்பும் பண்ணல்ல” வேதாவின் வார்த்தைகள் தழுதழுத்த அதேசமயம் கோபமாக வர, கண்ணீரை அழுந்தத் துடைத்தவள், “பொறந்ததுலயிருந்து இப்படியே வாழ்ந்துட்டேன். அவங்க முன்னாடி பேசுற தைரியம் எனக்கில்லை. ஆனாலும், உங்களுக்கு தேவையான தகவலை என்னால கொடுக்க முடியும். நீங்க என்ன கேட்டாலும் நான் சொல்றேன் தீ” என்றாள் தீர்க்கமாக.

அடுத்தகணம் தன் பாக்கெட்டிலிருந்த அலைப்பேசியை வெளியிலெடுத்து அவளெதிரே நீட்டினாள் வேதா. பத்திரிகை நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது அவள் அடிக்கடி செய்யும் அதே வேலைதான். காணொளி மூலமான வாக்குமூலம்.

மாஹியோ புரியாது நோக்க, “இப்போ சொல்லு!” என்று வேதா அழுத்தமாக சொன்னதும், அன்று வேதா கேட்ட சடங்கைப் பற்றி இன்று சொல்லத் தொடங்கினாள் அவள்.

“தீ, இந்த சடங்கு இன்னைக்கோ, நேத்தோ இல்லை. பல வருஷங்களா பண்றாங்க. அதுவும் இந்த கிராமத்துல மட்டும் கிடையாது. பல கிராமங்கள்ல இந்த சடங்கை பண்றாங்க. ஏன், சில நாடுகள்ல கூட இதை இன்னும் பண்றதா நான் கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு பத்து வயசா இருக்கும் போது இந்த சடங்கை பண்ணாங்க” மாஹி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “அது எந்த மாதிரியான சடங்கு?” இடையிட்டு கேட்டாள் வேதா.

“அது நம்மளோட… நம்ம…” மாஹி எப்படி சொல்வது, எப்படி விளக்குவது? எனத் தெரியாது தடுமாற, அவள் கையை அழுத்திப்பிடித்தவள், “நடக்காத ஒன்ன நீ சொல்லப் போறதில்லை. நடந்த உண்மைக்குதான் சாட்சியா இருக்க போற. மறைக்காம எல்லாத்தையும் சொல்லு” அழுத்தமாக சொல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு மீண்டும் தொடங்கினாள் அவள்.

“அது தீ… நம்ம பெண்ணுறுப்பு யோனி வாயில ஒரு சின்ன துளைய மட்டும் விட்டுட்டு மீதி பகுதிய தைச்சி விட்டுருவாங்க. ஒரு பொண்ணுக்கு எட்டுலயிருந்து பத்து வயசாகும் போது இதை பண்ணுவாங்க. அந்த காயம் ஆறவே ஒரு மாசத்துக்கு மேல ஆகும். அவ்வளவு வலிக்கும்” மாஹி தயக்கத்தை விடுத்து சொல்லி முடிக்க, “இத்தனை கொடுமையான ஒரு சடங்கை எதுக்காக பண்றாங்க? அதுவும் குழந்தைகளுக்கு” என்று பற்களை கடித்துக்கொண்டு தன் கேள்வியை கேட்டாள் அவள்.

“அது கல்யாணமாகுற வரைக்கும் பொண்ணுங்களை கன்னித்தன்மையோட வளர்க்கணும் அப்படிங்குறதுக்காகன்னு…” அவள் சங்கடமாக இழுக்க, “வாட் ரப்பிஷ்!” என்று கிட்டதட்ட வேதா கோபத்தில் வெடித்துவிட்டாள்.

“உங்களுக்கொன்னு தெரியுமா தீ, இந்த சடங்கை எல்லா பொண்ணுங்களுக்கும் பண்ணியிருக்காங்க. ஆனா, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரே ஒரு சின்னப்பொண்ணு மட்டும் இந்த சடங்கை பண்றதுக்கான ஏற்பாடு பண்ணப்போ ஊரை விட்டே ஓடிப்போயிருச்சு” என்று மாஹி பேசிக்கொண்டே போக, அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கவனமாகவே பதிவு செய்துக்கொண்டு வந்தாள் அவள்.

மாஹி சொன்ன அத்தனை தகவல்களையும் பதிவு செய்தவளுக்கு உள்ளுக்குள் தன்னுடைய இழப்பை நினைத்து தீ கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது. விட்டால் அத்தனை பேரையும் வெட்டியே கொல்லும் ஆத்திரம் அவளுக்கு!

ஆனால், வேகத்தை விட விவேகம் முக்கியமென அப்போது வேதா உணர்ந்துக்கொண்டாளோ, என்னவோ? தேவையானது கிடைத்த அடுத்தநிமிடமே அங்கிருந்து யாரையும் கண்டுக்கொள்ளாது வெளியேறியிருந்தாள்.

அவள் வெளியேறிய அடுத்த பத்து நிமிடத்தில், “மரியாதையா உண்மைய சொல்லு, ஊரைப் பத்தி அவக்கிட்ட என்ன சொன்ன? சொல்ல போறியா, இல்லையா?” மாஹியின் தலைமுடியை இறுகப்பற்றி சுனில் கடுங்கோபத்தோடு கேட்க, “வலிக்குது பாப்பா, என்னை விட்டுருங்க” என்று தன் தந்தையின் பிடியில் கெஞ்சிக்கொண்டிருந்தாள் மாஹி.

அவரோ கைகளை பிசைந்தவாறு நின்றிருந்த வீட்டில் வேலைப் பார்க்கும் பெண்மணியை பார்க்க, அவர் பார்வையில் பதறியவர், “ஐயா, நான் என் இரண்டு காதால கேட்டேன். மாஹிம்மா அந்த பொண்ணுக்கிட்ட நம்ம ஊருல பண்ற சடங்கை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க” என்று  பயத்துடன் சொன்னார்.

அதைக் கேட்ட சுனிலுக்கோ அத்தனை கோபம்!

மாஹியை ஓங்கியறைந்தவர், “நம்ம ஊர் ரகசியத்தை கண்டிப்பா அவ வெளிச்சம் போட்டு காட்டத்தான் முயற்சிப்பா. ரிபோர்ட்டர் வேற! கண்டிப்பா சும்மா இருக்க மாட்டா. அவ இந்த ஊரை உயிரோட தாண்டக் கூடாது” என்று அழுத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே “சரியா சொன்னீங்க பையா, அவ சாகணும்” என்ற ஒரு குரல்.

சுனிலோ பேசிய நபரைப் பார்த்து முதலில் அதிர்ந்தாலும் பின் விழிகளை கூர்மையாக்கி, “உங்க வீட்டுப்பொண்ணு சாகுறதுல உனக்கு இத்தனை ஆர்வமா? காரணத்தை தெரிஞ்சிக்கலாமா?” என்று சந்தேகமாகவே கேட்க, அவருக்கெதிரே நின்றிருந்த சுஜீப்பின் இதழ்களோ ஏளனமாக வளைந்தன.

“யாரு எங்க வீட்டுப்பொண்ணு? அவளா! என் மச்சானுக்கு ஒரே பொண்ணுதான், தீப்தி. அந்த வேதஷ்வினி நாதியில்லாத அனாதை. சொத்துக்காகதான் வம்சிக்கு அவள பொண்ணு கேட்டேன். இப்போ அதுவே இல்லைன்னு ஆயிருச்சு. என் தங்கச்சி குடும்பத்தை நான் சமாளிச்சிக்கிறேன். அவ சாகணும்” சுஜீப்பின் வார்த்தைகள் அழுத்தமாக வர, வெற்றிப்புன்னகை சிந்தினார் அவர்.

“நாளைக்கு ராத்திரிக்குள்ள அவ இந்த மண்ணுல புதைஞ்சாகணும்” சுனில் தன் அடியாற்களுக்கு கட்டளையிட, “அவ என் கையாலதான் பாப்பா சாகணும். எனக்கும் அவளுக்கும் முடிக்க வேண்டிய கணக்கு பாக்கியிருக்கு” என்ற கணீர் குரலில் எல்லோருடைய பார்வையும் குரல் வந்த திசைக்குத் திரும்பியது.

அங்கு கதவுநிலையில் சாய்ந்தவாறு கத்தி முனையை தடவி விட்டுக்கொண்டிருந்த ராவணின் இதழில் ஏளனப்புன்னகை தாண்டவமாட, விழிகளோ இரையை வேட்டையாட காத்திருக்கும் புலியின் விழிகள் போல் சிவந்து ஒரு தீர்க்கத்ததை கொண்டிருந்தன.