காதல்போர் 17

eiOOLW357649-6ed77a2a

மொட்டைமாடியில் வானத்தை வெறித்தவாறு நின்றிருந்த வேதாவின் மனமோ பல யோசனைகளில் உழன்றுக்கொண்டிருந்தது. அவளே எதிர்ப்பார்க்காத சம்பவங்கள்!

அந்த கிராமத்திற்கு சென்றதிலிருந்து நேற்று அவள் வேலைப் பார்த்த நிறுவனத்திற்கு சென்று வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்தவாறு இருந்தவள், “லக்கி…” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

“அப்பா…” வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் எதிரிலிருந்த தன் தந்தையை வேதா நோக்க, “என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கம்மா?” என்று கேட்டவாறு அவள் பக்கத்தில் வந்து நின்றார் நரேந்திரன்.

“ஒன்னுஇல்லைப்பா” ஸ்ருதியே இல்லாமல் அவள் குரல் வெளிவர, அவருக்கா தெரியாது தன் மகளைப்பற்றி!

“லக்கி, நம்ம இரண்டு பேரோட தொழிலும் இரண்டு பாதை. என்னோட தொழில பத்தி நீ விமர்சிச்சப்போ, ஒரு அரசியல்வாதியா எனக்குள்ள கோபம் இருக்கத்தான் செய்தது. ஆனா, ஒரு அப்பாவா… என் பொண்ண நினைச்சி வியப்பா இருந்திச்சு” அவர் சொல்லவும், “சோரிப்பா” என்று ஏதோ ஒரு குற்றவுணர்ச்சியில் வேதா சொல்ல, “ச்சே ச்சே! நீ பண்ணது தப்பே இல்லைடா. இப்போ கூட ஏதோ ஒரு பிரச்சினை உன்னை சுத்தி இருக்கு. அது என்னன்னு தெரியல. ஆனா, கண்டிப்பா நீ தப்பு பண்ணியிருக்க மாட்ட. உன்னை அந்த ஊருக்கு அனுப்பி தப்பு பண்ணிட்டேனா லக்கி?” இறுதியில் ஒருமாதிரிக் குரலில் வெளிவந்தன அவருடைய வார்த்தைகள்.

“இல்லைப்பா, என்னை அங்க அனுப்பி வச்சி நல்லதுதான் பண்ணியிருக்கீங்க” என்று அழுத்தமாக சொன்னவள், விக்ரமின் இறப்புச்செய்தியை தவிர மற்ற அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்திருக்க, “இன்னுமா அந்த ஊருல அதை பண்ணிக்கிட்டு இருக்காங்க?” அதிர்ந்துக்கேட்டார் நரேந்திரன்.

“உங்களுக்கு முன்னமே தெரியுமா?” வேதா சற்று ஆச்சரியமாகக் கேட்க, “வைஷாலி” என்று நரேந்திரன் சொன்னதும்தான் ‘தன் அம்மா அந்த ஊரைச் சேர்ந்தவள்தானே!’ என்ற விடயமே வேதாவிற்கு உரைத்தது.

“இதைப்பத்தி நான் தெரிஞ்சிக்கும் போது என்னால ஜீரணிக்கவே முடியல. இப்போ அதெல்லாம் இருக்காது, காலம் மாறிடிச்சு அப்படின்னு நினைச்சிக்கிட்டுதான் உன்னை உன் மாமா வீட்டுக்கு அனுப்பி வைச்சேன். ஆனா… ச்சே!” அத்தனை ஆற்றாமையுடன் அவர் பேச, “இதை தடை பண்ணியே தீரணும்ப்பா” என்ற வேதாவின் வார்த்தைகளில் அத்தனை உறுதி!

“லக்கி, உன்னோட புக்ஸ்ஸ இங்க பல பேர் வாங்கி படிக்கிறாங்க. இதை பத்தி நீ ஒரு புத்தகமா வெளியிட்டா என்ன?” நரேந்திரன் தன் யோசனையை சொல்ல, அதில் விரக்தியாக சிரித்தவள், “சமுகக்கருத்தை இப்போ யாரும் விரும்புறது இல்லைப்பா” என்று சொன்னாள்.

நெற்றியை நீவி விட்டவாறு யோசித்தவர், ஏதோ யோசனைக்கு வந்தவராய் “லக்கி, உன்கிட்டதான் அந்த பொண்ணு பேசின வீடியோ இருக்குல்ல, சோஷியல் மீடியாவுல அதை போடு! மக்களுக்கு அதை தெரியப்படுத்து! அப்றம் களவரம் தானா வெடிக்கும்” என்று சொல்லிக்கொண்டே போக, அவரை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு அது சரியான யோசனையாகத்தான் தோன்றியது.

ஆனால், ஒரு தடை!

அதை நினைத்தவள் ‘ச்சே!’ என்று சலிப்பாக உள்ளுக்குள் பொறுமியவாறு, “நல்ல யோசனைதான், சீக்கிரம் பண்றேன்” என்று மனமே இல்லாமல் சொல்லி, ஆறுதலுக்காக தன் தந்தையை அணைக்க, அவள் தலையை வாஞ்சையுடன் தடவிவிட்டார் நரேந்திரன்.

அடுத்தநாள் காலை,

நரேந்திரனைத் தவிர மற்ற அனைவரும் உணவு மேசையில் இருக்க, தன்னெதிரே அமர்ந்து உணவை அளந்துக் கொண்டிருந்த வேதாவையேதான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராவண். அவளோ அவனின் பார்வையை உணர்ந்து நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ‘அவனாக பேசட்டும்’ என்று நினைத்தாளோ, என்னவோ?

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அவளாக எதுவும் சொல்லாததில் கடுப்பாகி, “அதான் இல்லைன்னு ஆகிருச்சே! அப்றம் என்னதான் யோசிச்சி வச்சிருக்கன்னு சொன்னா குறைஞ்சி போயிடுவியா என்ன? என்னால இங்க ரொம்பநாள் இருக்க முடியாதுன்னோ சொன்னேன்னா, இல்லையா? இதை விட முக்கியமான வேலையெல்லாம் எனக்கு இருக்கு” ராவண் கடுகடுவென பொறிய, நிதானமாகவே அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.

மேலிருந்து கீழ் அலட்சியமாக அவனை ஒரு பார்வை பார்த்தவள், “அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும். நான் ஒன்னும் உன்னை இருக்க சொல்லல்ல. நீதான் என்கூட ஒட்டிக்கிட்டு இருக்க. என்ட், அவங்க முடியாதுன்னா எனக்கு வேற வழி தெரியாதா என்ன? சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன். உனக்கும் சேர்த்துதான்” என்று சொல்லி முடிக்க, எதுவும் பேசவில்லை ராவண்.

அவளிடமிருந்து பார்வையை திருப்பி தட்டில் முகத்தை புதைத்தவன்தான், அதன்பிறகு நிமிர்ந்தும் பார்க்காமல் உணவிலேயே கவனமாக இருக்க, அவனையே இவர்கள் வந்த நாளிலிருந்து அளவிட்டுக் கொண்டிருந்த வைஷாலி, “தம்பி, நீங்களும் அதே ஊருதான்னு வம்சி சொன்னான். உங்க பெயரென்ன? கூடவே, உங்க அப்பா பெயரையும் தெரிஞ்சிக்கலாமா? ஒருவேள, எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஆளா கூட இருக்கலாம். அதான்…” என்று கேட்க, வேதாவோ சட்டென நிமிர்ந்து, ‘சொல்ல வேண்டாம்’ என கண்களை உருட்டி எச்சரிக்கை செய்தாள்.

ஆனால், ராவண்தான் அதை கவனிக்கவே இல்லையே…

“ராவண் மெஹ்ரா. சன் ஆஃப் சுனில் மெஹ்ரா” ஒவ்வொரு வார்த்தைகளாக அவன் அழுத்திச்சொல்ல, அதைக் கேட்ட வைஷாலிக்கோ தூக்கிவாரிப்போட்டது. இதே ‘மெஹ்ரா’ என்ற பெயரை சுஜீப்பின் மூலமாக அவர் பல தடவைகள் கேட்டுள்ளார். அதுவும், தன் இளம்வயதில் குடும்பத்துடன் இருக்கும் போது குடும்பப் பெயரை பயன்படுத்தி தவறுகள் செய்யும் சுனிலை அவரால் மறக்க முடியுமா என்ன?

‘அந்த சுனில் அப்போவே வெட்டு குத்துன்னு தான் இருப்பாரு. இப்போ பையா சொன்னதை வச்சி பார்த்தா, அவர்கிட்டதான் ஏதோ ஏழரைய இழுத்துட்டு வந்திருக்கா போலயே… இதுக்கெல்லாம் மேல அவரோட பையன் நம்ம வீட்டுல என்ன பண்றான்?’ அவர் திகைத்துப்போய் அவனையே பார்த்திருக்க, ‘என்ன நம்ம அத்தை மூஞ்சி பேயறைஞ்ச மாதிரி இருக்கு, ஒருவேள, பையாவ பத்தி தெரிஞ்சிருக்குமோ?’ என்று அவரையே உணவை விழுங்கியவாறு கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வம்சி.

சரியாக, “வேத்…” என்று அழைத்தவாறு தீப்தி வர, வம்சியின் பார்வை பட்டென்று அவள்புறம் திரும்பி ரசனையாக படிந்ததென்றால், தீப்தியின் பார்வையோ ராவண் மேல்தான் படிந்திருந்தது.

“உங்க ஊருலதான் சப்பாத்தின்னா, இங்கேயும் அதேதானா? மாதா ஜீ, இவங்களுக்கு நம்ம ஊர் சாப்பாடா சமைச்சி கொடுக்க வேண்டியதுதானே?” என்று முறுக்கிக்கொண்டவள், “டோன்ட் வோர்ரி ராவண் ஜீ, நானே உங்களுக்கு சமைச்சி தரேன். ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு சொல்ல, ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’ என்ற ரீதியில் உதட்டை சுழித்த வண்ணம் தன் அத்தைமகளை ஒரு பார்வைப் பார்த்தான் வம்சி.

“நீ நிஜமாவே இவளோட தங்கச்சி தானா? நம்பவே முடியல. யூ க்னோ வாட்? இவ சிரிச்சி நான் பார்த்ததே இல்லை. சரியான திமிர்பிடிச்சவ”  ராவண் வேண்டுமென்றே வேதாவின் காலை வார, “உன்கிட்ட நான் எதுக்குடா பல்லை காட்டி இழிச்சிட்டு இருக்கணும்? ஆசைய பாரு!” என்று கத்தி ஏகத்துக்கும் அவனை முறைத்துத் தள்ளினாள் வேதா.

இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய தீப்திக்கு, அப்போதுதான் ஏதோ நியாபகம் வர, “ஏய் வேத், கேக்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு! எனக்கு விக்கிய உடனே பார்த்தாகணும். அவனுக்கு ஆக்சிடன்ட் ஆச்சுன்னு வேற சொல்ற.  வீட்டுக்கே அழைச்சிட்டு வந்திருக்கலாம் தானே! நாங்க பார்த்துக்குற மாதிரி வருமா என்ன? என்ட், அவன கான்டேக்ட் பண்ணவும் முடியல. அவனுக்கு ஊர் முழுக்க ஃப்ரென்ட்ஸ் வேற. எந்த ஃப்ரென்ட் வீட்டுல துரை இப்போ இருக்காரு, உள்ளூர்லதானா? இல்லை, அவுட் ஆஃப் தமிழ்நாடா? என்ட், மோகன் அங்கிள்கிட்ட சொல்லாம இருக்குறது எனக்கு என்னவோ சரியா தோனல வேத்” என்று பேசிக்கொண்டே போக, அவள் ‘விக்கி’ என்ற பெயரை சொன்னதுமே வேதாவின் பார்வை அழுத்தமாக ராவணின் மேல்தான் படிந்தது.

ஆனால், எப்போதும்போல் அவன் முகத்தில் அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தண்ணீரை அருந்தியவாறு அவன் அவளையேதான் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருக்க, “ஒன்னும் தேவையில்லை தீப். யாரும் எதையும் அங்கிள்கிட்ட சொல்லக் கூடாது. இப்போ விக்கி இருக்குற இடத்துல அவ்வளவா கவரேஜ் இல்லையா இருக்கும். அவன் இங்க வந்ததுமே அவன் கூட பேசிக்கோ!” என்றுவிட்டு, ‘என்னை இவ்வாறு திணற வைத்துவிட்டாயே! இதற்கு நீ அனுபவித்தே தீருவாய்’ என்றொரு பார்வையை ராவணின் மீது அழுத்தமாக பதித்தாள்.

உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட அவனின் பார்வையில் அவளுக்கு கோபம்தான் பன்மடங்காக பெருகியது. இதில் விக்கியின் நினைவில் அதற்குமேல் உணவும் தொண்டையில் இறங்க மறுக்க, பாதி சாப்பாட்டிலேயே எழுந்து விறுவிறுவென்று சென்றுவிட்டாள் வேதா.

ராவணும் இதழுக்குள் அடக்கப்பட்ட விஷம புன்னகையுடன் செல்லும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர, போகும் ராவணையே ‘இவர் நம்மகிட்ட பேசினதை நம்பவே முடியல்லையே… அதுவும் நம்மள ஏதோ ஒரு வகையில பாராட்டின மாதிரில்ல இருக்கு. கலக்குற தீப்’ இல்லாத கோலரை தூக்கி விட்டவாறு தீப்தி ரசனையுடன் பார்த்துக்கொண்டிருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அவளெதிரே உதட்டை சுழித்து, அவளை முறைத்தவாறு நின்றிருந்த வம்சியோ, “என்ன?” என்ற தீப்தியின் சலிப்பான கேள்வியில், “ஒரு ஆம்பிளை பையன வச்ச கண்ணு வாங்காம பார்க்குற. வெட்கமாயில்லை?” என்று கடுப்பாக கேட்க, “இல்லை” பட்டென்று சொன்னவள், “உனக்கென்ன? அழகை ரசிக்கிறது ஒன்னும் தப்பில்லையே!” என்று சற்று கேலி கலந்த கேள்வியை வினவ, ஏனோ வம்சியால் பொறுக்கவே முடியவில்லை.

ஏதோ ஒரு உரிமை தலைத்தூக்க, “லுக், இனி உன் பார்வை பையாவோட பக்கம் போகவே கூடாது. அப்படி மட்டும் போச்சு… உன்னை எங்க ஊருக்கு கடத்திட்டு போயிருவேன் பாரு! ஜாக்கிரதை” என்று மிரட்டிவிட்டு கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டுச் செல்ல, முதலில் அதிர்ந்தவளின் இதழ்கள் பின் வெட்கச்சிரிப்பு சிரித்தது.

பின்னால் திரும்பித் திரும்பி தன்னை முறைத்துப் பார்த்தவாறு செல்லும் வம்சியையே கண் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறு மங்கையின் நினைவுகளோ நாணத்தோடு அவனை முதல்தடவை பார்த்த தருணங்களைதான் நினைத்துப் பார்த்தது.

ராவண் மீதான அவளின் பார்வையில் ரசனையைப் பார்த்து வெகுண்டவன், தன்னை நோக்கிய அவளுடைய பார்வையிலிருந்த காதலை ஏன்தான் உணராமல் விட்டானோ?

அவள்தான் அவனைப் பார்த்த கணத்திலே காதலிக்க ஆரம்பித்துவிட்டாளே!

அன்று வம்சிக்கு வேதாவை பெண்கேட்டு சுஜீப் வம்சியின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருக்க, வேதாவோ புகைப்படத்தை பார்க்காமலேயே மறுத்துவிட்டாள். வைஷாலியும் தன் அண்ணன் மகனை அவள் மறுத்த கோபத்தில் தொடர்ந்து சில அர்ச்சனைகளை வழங்கிவிட்டு மறந்து டீபாயிலேயே புகைப்படத்தை வைத்துவிட்டு சென்றிருந்தார்.

அன்றிரவு வெகுநேரம் கழித்தே தீப்தி வீட்டுக்கு வர, உண்டான களைப்பில் அறைக்கு கூட செல்லாது சோஃபாவில் அமர்ந்தவளின் விழிச்சிறையில் சரியாக சிக்கியது அந்த புகைப்படம்.

முதலில் அவ்வளவு பெரிதாக ஆர்வமின்றி அதையெடுத்துப் பார்த்தவளின் விழிகள், அதிலிருந்த வம்சியின் முகத்தைப் பார்த்ததுமே சற்று பெரிதாக விரிந்தன. பார்த்த மாத்திரத்திலேயே அவன்மேல் ஒரு இனம்புரியாத உணர்வு அவளுக்கு!

அதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரே கேள்விதான், ‘யார்ரா இவன்?’

அடுத்தநாள் விடிந்ததுமே தன் அம்மாவின் முன்னால் சென்று நின்றவள், “ஆமா… யார் இது? டீபாயில இருந்திச்சு” என்று புகைப்படத்தைக் காட்டிக் கேட்க, இல்லாத அழுகையை வரவழைத்து மூக்கை உறுஞ்சிய வைஷாலி, “இந்த பையனுக்கு அப்படி என்ன குறைச்சல் தீப்திம்மா? பெயர் வம்சி. என் அண்ணனுக்கு ஒரு பையன் இருக்கான்னு சொன்னேனே, அது இவன்தான். வேதாவை இவனுக்கு கேக்குறாங்க” என்று சொல்ல, அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

ஆனால், முகத்தில் எதையும் காட்டாது, “ஓ… சரி சொல்லிட்டீங்களா?” என்று ஒரு மாதிரிக்குரலில் அவள் கேட்க, “இவன அந்த அம்மணிக்கு பிடிக்கல்லையாம். உன் அப்பாவுக்கும்தான். என் கல்யாணத்தால உண்டான பகை இவனோட கல்யாணத்தால இல்லாம போயிரும், குடும்பம் சேர்ந்துரும்னு அத்தனை சந்தோஷப்பட்டேன். அந்த எண்ணத்துல ஒரு மூட்டை மண்ணை வாரி போட்டுட்டாரு அந்த மனுஷன்” பொறுமிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

தீப்தியின் உணர்வை வார்த்தைகளால் வடிக்க முடியுமா என்ன? அத்தனை சந்தோஷம்! அன்றிலிருந்து இவனுடைய முகத்தை பார்க்காது அவள் தூங்காத நாளில்லை. அதுவும், ஊரில் நடந்த ஏதோ ஒரு பிரச்சினையில் வேதாவுடன் சேர்ந்து வம்சியும் வருவதாக அவள் கேள்விப்பட்டதிலிருந்து வானில் சிறகில்லாமல் பறக்கும் உணர்வு!

ஆனால், அவனை அப்படி ஒரு கோலத்தில் நேரில் பார்ப்பாள் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

அத்தனையும் நினைத்துப் பார்த்து சிரித்தவளுக்கு, ஏனோ புதிதாக காட்டும் அவனின் உரிமை உணர்வில் உள்ளுக்குள் அத்தனை குஷியாக இருந்தது.

அடுத்த ஒருவாரம் சாப்பிட மட்டுமே வெளியில் வரும் வேதா, மற்ற நேரங்களில் அறையிலேயேதான் முடங்கிக் கிடந்தாள். ராவணோ அறையிலேயே அடைந்துக்கிடந்தாலும், தன் விசுவாசமான நண்பன் ஒருவன் மூலமாக ஊரில் நடப்பதை அறிந்துதான் வைத்திருந்தான்.

தன்னுடைய தந்தை ஆட்கள் அனுப்பியுள்ள செய்தியை தன் நண்பனின் மூலம் அறிந்துக்கொண்டவன், என்னதான் அமைச்சர் வீடென்ற முறையில் பாதுகாப்பாக இருந்தாலும், சுற்றி நடப்பவை தொடர்பில் ஒரு எச்சரிக்கையுடனேதான் இருந்தான்.

இங்கு வம்சிக்கோ ஏனோ தீப்தியின் மேல் உரிமை கலந்த உணர்வு! அவள் பார்க்காத போது வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக்கொண்டிருப்பவன், அவளுடைய பார்வை ராவணின் பக்கம் திரும்பினால் போதும். பொறாமையில் கொதித்துவிடுவான்.

இவ்வாறு மூன்று நாட்கள் கழிந்திருக்க, அன்று இரவை நெருங்கிக்கொண்டிருக்கும் மாலை நேரத்தில் ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியோடு வேதா விட்டத்தை வெறித்தவாறு படுத்திருக்க, திடீரென ஒரு அழைப்பு!

திரையில் தெரிந்த எண்ணை புருவத்தை சுருக்கிப் பார்த்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், எதிர்முனையில் சொன்ன செய்தியில் அரக்க பறக்க தயாராகி வீட்டிலிருந்து வெளியேறினாள்.

அடுத்த ஒருமணி நேரத்தில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ? ராவணின் அறைக்குள் ஆவேசமாக உள்ளே நுழைந்த வேதா, அவன் சற்றும் எதிர்ப்பார்க்காது அவன் கன்னத்திலே ஓங்கி அறைந்திருக்க, கண்களை அழுந்த மூடி திறந்தவனின் விழிகள் கோபத்தில் தீப்பிளம்பாய் காட்சியளித்தன.