வேதாவோ ராவணின் முன் அத்தனை கோபத்தோடு நிற்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவனின் விழிகள், அவள் அறைந்ததில் உண்டான கோபத்தால் சிவந்து போயிருந்தன.
ஒருமணி நேரத்திற்கு முன்பு,
“வேதாம்மா, மோகன் அண்ணாவ ஹோஸ்பிடல்ல சேர்த்திருக்கோம். ஐயா ஊருலேயும் இல்லை. நீங்க கொஞ்சம் வர முடியுமா?” என்று அழைப்பில் சொன்ன செய்தியில் அதிர்ந்த வேதா, அவசரஅவசரமாக மோகனை அனுமதித்திருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தாள்.
மருத்துவமனைக்கு வேதா வந்து சேர, அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த வேதாவுக்கு செய்தியை சொன்ன வேலையாள், வேகமாக வந்து “வேதாம்மா, டாக்டர் பார்த்துட்டாங்க. அந்த மனுஷனுக்கு அவர் மகன் நினைப்பு போல. ப்ரஷர் கூடிப் போச்சு. நீங்க போய் பாருங்க” என்று சொல்ல, அவளும் ஒருவித பதட்டத்துடனே சிகிச்சை அறைக்குள் நுழைந்தாள்.
அவளுக்கோ அவர் மகனின் நிலையை எப்படிச் சோல்வது என்ற வேதனை!
மனதை திடப்படுத்திக்கொண்டு அவரருகில் சென்றவள் முயன்று முகபாவனையை மாற்றி, “இதுதான் நீங்க உடம்ப பார்த்துக்குற இலட்சணமா அங்கிள்?” என்று சற்று காட்டமாகவே கேட்க, “இல்லைம்மா, எனக்கு வேற எந்த கவலை இருக்க போகுது? எல்லாம் அந்த ராஸ்கல பத்திதான்” மோகன் சொல்லவும், வேதாவுக்கோ ஒருவித குற்றவுணர்ச்சி!
அவளோ பார்வையை வேறு புறம் திருப்பி அமைதியாக இருக்க, “அவன் எப்போம்மா வருவான்? இரண்டு வாரத்துக்கு முன்னாடியே அந்த ஊர்லயிருந்து வந்துட்டான்னு நீங்க சொன்னீங்க. இப்போ ஏதோ வேலை விஷயமா அவன அனுப்பியிருக்கேன்னு ஐயா சொல்றாரு. இதுவரைக்கும் அவன பிரிஞ்சி நான் இருந்ததே இல்லை. ரொம்பவே பயந்த சுபாவம் அவனுக்கு. நேர்ல கூட வர தேவையில்லைம்மா. கோல் பண்ணி ஒரு இரண்டு வார்த்தை அவன்கூட பேசினாலே போதும்” பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகளில் தன் மகனை நினைத்து அத்தனை ஏக்கம்.
வேதாவுக்கோ தன்னை மீறும் வெளியேற துடிக்கும் விழிநீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ‘இவர்கிட்ட விஷயத்தை சொல்லிரு வேதா, இதுக்கு மேல அவர் மகனுக்கு நடந்த கொடுமைய மறைக்காதடி’ மானசீகமாக உள்ளுக்குள் நினைத்தவள், முயன்று தைரியத்தை வரவழைத்து, “அங்கிள், அது… அது வந்து, விக்கி… விக்ரம்” என்று திக்கித்திணறியவளுக்கு உண்மையை சொல்ல வார்த்தை வந்தால் தானே!
அவரும் வேதாவை கேள்வியாக நோக்க, ஒரு பெருமூச்சுவிட்டு “அங்கிள், இப்போ அவன் இருக்குற இடத்துல நெட்வர்க் இல்லை போல, அதான் அவன கான்டேக்ட் பண்ண முடியல. சீக்கிரம் வந்துருவான். நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க!” என்றுவிட்டு அறையிலிருந்து விறுவிறுவென வெளியேறியவள், கழிவறைக்குச் சென்று ஒரு மூச்சு அழுதேவிட்டாள்.
‘ஐ அம் சோரி.. சோரி… எல்லாம் என்னாலதான். நான் அவன அப்படி விட்டிருக்க கூடாது. நான்தான் அவன சரியா கவனிக்காம விட்டுட்டேன். ஐ அம் சோரிடா விக்கி’ விம்மலுடன் அழுது தீர்த்தவளின் அத்தனை கண்ணீரும் ராவணின் மேல்தான் கோபமாக திரும்பின. அவளால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அங்கிருந்து வெளியேறி வேகமாக வீட்டிற்கு வந்தவள், இருந்த மனநிலையில் ஒன்றை மட்டும் கவனிக்காமல் விட்டு விட்டாள். அவள் சென்று வந்ததிலிருந்து அவளை பின்தொடர்ந்த அந்த கருப்புநிற காரை.
இவள் ராவணைத் தேடி வர, அதேநேரம் அவனோ, “வம்சி, எல்லாம் ஓகேதானே, எந்த பிரச்சினையும் இல்லையே?” என்று வம்சியிடம் ஒரு விடயத்தைக் குறித்து தீவிர முகபாவனையில் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை பையா, எல்லாம் நம்ம கன்ட்ரோல்தான். அன்னைக்கே நீங்க சொன்ன மாதிரி டவுன்ல இருக்குற ஆஸ்பத்திரியில சேர்த்துட்டேன். நம்ம ஊரைச் சேர்ந்தவங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை. சோ, தெரியவும் வாய்ப்பில்லை. நமக்கு விசுவாசமான ஆளுங்களும் அங்க இருக்கத்தான் செய்றாங்க” என்றான் வம்சி உற்சாகமாக.
“ம்ம்… எதுவும் சொதப்ப கூடாது. முக்கியமா இங்க வர்ற வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரிஞ்சிற கூடாது. ரொம்ப பாதுகாப்பா கூட்டிட்டு வரணும். நான் சொன்ன இடத்துக்கு கொண்டு வந்து வண்டிய நிறுத்த சொல்லுங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன். கண்டிப்பா இதை மிர்ச்சி எதிர்ப்பார்த்திருக்க மாட்டா” சிறு புன்னகையுடன் சொன்னவனை ஆச்சரியமாகத்தான் பார்த்தான் வம்சி.
“பையா, நிஜமாவே இது நீங்கதானா?” வம்சி சற்று அதிர்ந்த குரலிலே கேட்க, ராவணோ விழிகளை உயர்த்தி அவனை முறைத்துப் பார்க்க, சரியாக அறைக்கதவை ‘படார்’ என திறந்துக்கொண்டு வந்த வேதா, அவனே சற்றும் எதிர்ப்பார்க்காது மொத்த கோபத்தையும் சேர்த்து வைத்து அவனை அறைந்திருக்க,
“வேதா…” என்று வம்சி அதிர்ந்து கத்தினான் என்றால், கண்களை அழுந்த மூடி திறந்தவனின் விழிகள் கோபத்தில் சிவந்து போயிருக்க, பற்களை கடித்தவண்ணம் வேதாவை நோக்கினான் ராவண்.
ஒரு அடி முன்னோக்கி அவளை அடிப்பது போல் வந்தவனுடைய கால்கள், அழுது வீங்கியிருந்த அவளுடைய முகத்தையும் சிவந்த வீங்கியிருந்த விழிகளை பார்த்ததுமே தானாக நின்றன.
“எப்படிடா உன்னால ஒரு அப்பாவிய கொன்னுட்டு இப்படி நிம்மதியா இருக்க முடியுது? என் விக்கி ரொம்ப பாவம், அவன போய் எப்படிடா உங்களால கொல்ல முடிஞ்சது? நீ என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டா, நீதான் என் விக்கி சாவுக்கு காரணம்னு சொல்லாம விட்டுடுவேன்னு நினைச்சியா?” வேதா ஆவேசமாக பேசிக்கொண்டு போக, “ஏய், வாய் இருந்தா என்ன வேணா பேசுவியா? நான் சொல்றதை…” ஏதோ சொல்ல வந்த வம்சி, அடுத்து ராவண் பார்த்த பார்வையில் அப்படியே அமைதியானான்.
“ஓஹோ! போயும் போயும் உன் ஊர்காரனுங்கிற ஒரே காரணத்துக்காக இவன் பண்ண கொலைக்கு நீயும் சபோர்ட் பண்றல்ல, ச்சீ… ஆனா, நான் இதை விட மாட்டேன். முதல்ல அந்த சடங்கை தடை பண்றேன். அப்றம் நீ பண்ண பாவத்துக்கு தண்டனை வாங்கி தருவேன். நீ எனக்கு உதவி பண்ணி என்ன பரிகாரம் பண்ணாலும் என் விக்கிய கொன்ன பாவம் உன்னை சும்மா விடாது” என்று அழுகையை கட்டுப்படுத்தி பேசி முடித்தவளுக்கு, ஏனோ நிதர்சனம் புரிந்தது போலும்!
அறைக்கதவு பக்கம் திரும்பி ஒரு அடி செல்வதற்காக வைக்கப் போன வேதா, சட்டென நின்று, “உனக்கு தண்டனை வாங்கி தந்தா மட்டும் என் விக்கி வந்துருவானா என்ன?” என்று கேட்டு அப்படியே அந்த இடத்திலே நிற்க திராணியின்றி அமர்ந்துவிட்டாள். நெஞ்சை கசக்கி பிழியும் வலி!
அழுகையை அடக்க முடியாது அவள் வெடித்து அழ, அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ராவணுக்கு ஏனோ அவள் அழுகையை பார்க்கவே முடியவில்லை. மனதில் வெறுமை சூழ்ந்த உணர்வு!
சிறிதுநேரம் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தவன், பின் மெதுவாக நடந்து வந்து அவள் பின்னால் மண்டியிட்டு அமர்ந்து பின்னிலிருந்து அவளை அணைத்துக்கொள்ள, “என்னை விட்டுத்தள்ளிப் போ!” அவன் கைகளை உதறி திமிற ஆரம்பித்தாள் வேதா. ஆனால், அந்த விடாக் கண்டனோ அவளை விட்டபாடில்லை.
“ஷ்ஷ்…” என்று அவளை மேலும் தன் நெஞ்சோடு சாய்த்தவாறு இறுக்கிக்கொண்டவன், அவளின் திமிறலை அடக்கி அவள் காதுமடிலில் தன் மீசை முடி உரச, “அவன் சாகல” என்று அழுத்தமாக சொல்ல, அடுத்தகணம் அவள் அழுகை நிற்க, விம்மலுடன் நிமிர்ந்துப் பார்த்தாள்.
“அவனுக்கு எதுவும் ஆகல மிர்ச்சி, என்னை நம்பு” அவளை தன்னுடன் மேலும் நெருக்கியவாறு ராவண் சொல்ல, பக்கவாட்டாக அவனை திரும்பிப் பார்த்தவளுக்கு ஏனோ அவன் வார்த்தைகள் பொய்யாக தெரியவில்லை.
இழந்ததாக நினைத்த ஒன்று மீண்டும் கிடைக்கும் போது இருக்கும் மனநிலையை வார்த்தைகளால் விளக்க முடியுமா என்ன? அத்தகைய ஒரு உணர்வில் அல்லவா வேதா மிதந்துக்கொண்டிருந்தாள். விழிநீருடன் அவள் இதழ்கள் விரிய, மெல்ல ராவணின் அணைப்பிலிருந்தவாறே அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், அவன் விழிகளை ஆழ்ந்துப்பார்த்துவிட்டு, அவன் மார்பில் சாய்ந்துக்கொண்டாள்.
ஆனால், இப்போது விழி விரித்தது என்னவோ ராவண்தான். ஏற்கனவே ‘தன் நோக்கத்தை எப்படி நிறைவேற்ற போகிறோம்’ என்ற பயம், நீண்ட நேரமே அழுத அழுகையில் உண்டான களைப்பு, ராவண் உண்மையை சொன்னதும் அளவுக்கடந்த நிம்மதியுடனான ஆனந்தம் என தத்தளித்துக்கொண்டிருந்தவளுக்கு ராவணின் அணைப்பு அப்போது தேவைப்பட்டது போலும்!
ஏதோ ஒரு மனஉந்துதல்! விழிகளை மூடி ஆறுதல் தேடும் குழந்தையாய் அவள் அவன் மார்போடு ஒன்றி சாய்ந்துக்கொள்ள, ராவணுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதயத்துடிப்பு வேகமாக, தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் முகத்தையே அவன் பார்த்திருக்க, இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த வம்சிக்குதான் அதிச்சியின் உச்சகட்டம்!
‘இப்போ என்னாச்சு? அவ வந்தா… அடிச்சா… இவர் அணைச்சாரு… இப்போ இரண்டும் அணைச்சிட்டு உட்கார்ந்திருக்குதுங்க. என்னடா நடக்குது இங்க? நிஜமாவே இது வேதாவும் பையாவும் தானா?’ தனக்குள்ளேயே பேசியவாறு அதிர்ந்துப்போய் இருவரையும் பார்த்தவாறு வம்சி நின்றிருக்க, சில நிமிடங்களே கழிந்துவிட்டது.
ஆனால், ராவண், வேதாவிடம்தான் எந்த அசைவும் இல்லை. அவள் அவன் மார்பில் சாய்ந்திருக்க, அவனோ அவள் முகத்தையே இமைக்காது பார்த்திருந்தான். ஆனால், ஒருகட்டத்திற்குமேல் முடியாமல் “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று வம்சி தொண்டையை செறும, அங்கோ வெறும் அமைதிதான்.
‘என்னடா சவுன்ட் கொடுத்தும் அசைஞ்சபாடில்லை’ என்ற ரீதியில் வம்சி இருவரையும் கூர்ந்து கவனிக்க, அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, சட்டென வேதாவை தன் கைகளில் ஏந்திக்கொண்ட ராவண், “நல்லா தூங்கிட்டா” என்றவாறு அவளை கட்டிலில் படுக்க வைத்து, “வெளியில போ!” என்று அழுத்தமாக சொல்லவும், “ஏதோ ஒன்னு இருக்கு” என்று வாய்விட்டே முணங்கியவாறு அறையிலிருந்து வெளியேறினான் வம்சி.
இங்கு ராவணோ கிட்டதட்ட அவள் உடலுடன் தன்னுடலை உரசும் அளவிற்கு நெருங்கி நின்றவாறு வேதாவின் முகத்தையேதான் ஆழ்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அடுத்தநாள்,
“லுக், நீ என்கிட்ட விளையாடலல்ல? நிஜமாவே உன்னை நம்பலாம்ல? என் விக்கி நல்லாதானே இருக்கான்?” அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டவாறு வேதா வண்டியை செலுத்திக்கொண்டுச் செல்ல, நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொண்ட ராவணுக்கோ, காலையிலிருந்து இவள் படுத்திய பாட்டில் தலைவலியே வந்துவிட்டது.
அவனும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்? காலையிலிருந்து இதே கேள்விகளை அல்லவா திரும்பத் திரும்ப ஒவ்வொரு விதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறாள்!
“டேய் இப்போ பதில் சொல்ல போறியா, இல்லையா?” அவள் கத்த, அவளை அடிப்பது போல் வந்தவன், “ஒழுங்கு மரியாதையா ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டு! இப்படியே கேட்டுட்டு இருந்த, நானே அவன் கழுத்தை நெறிச்சி கொன்னுடுவேன்” கடுகடுவென சொல்ல, ‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்டவாறு உதட்டை சுழித்தவள், “இப்போ எதுக்கு அங்க போறோம்?” என்று ராவண் செல்ல சொன்ன இடத்தை நினைத்து புரியாதுக் கேட்டாள்.
“சொன்னதை மட்டும் செய்!” அவனுடைய வார்த்தைகள் அதிகாரமாக வர, “ரொம்பதான் இவன்! என்னையே அதிகாரம் பண்றான். சரியான திமிர்பிடிச்சவன்! மண்டை கோளாறு உள்ள லூசுப்பயல்!” என்று அவன் காது பட தமிழிலே திட்டியவாறு வண்டியை செலுத்திக்கொண்டு வந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் ராவண் சொன்ன கடற்கரைக்கு வந்து வண்டியை நிறுத்தி, “வந்தாச்சு. இப்போவாச்சும் சொல்லு! ஏன் இங்க வர சொன்ன? உனக்கு இந்த ஊர்ல என்னை தவிர வேற யாரைடா தெரியும்?” சலிப்பாக கண்களை உருட்டி கேட்டவாறு வேதா எதிரே பார்க்க, அங்கு வேன் கதவுக்கு பக்கத்தில் நின்றிருந்தான் வம்சி.
அவனைப் பார்த்ததும் புருவத்தை நெறித்தவள், “இவன் எப்போ வந்தான்? என்ட்… அந்த வண்டிக்கு பக்கத்துல நின்னுக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?” நடப்பது புரியாது அடுக்கடுக்காக கேள்விக்கனைகளை விட, ராவணிடம்தான் பதிலில்லை. கதவில் சாய்ந்தமர்ந்தவாறு வேதாவின் முகத்தையேதான் அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்திருந்தான் அவன்.
வேதாவோ அவள் பாட்டிற்கு வண்டியிலிருந்து இறங்கி, “அரே வம்சி, ஊருக்கு புதுசுன்னு உன்னை போய் தப்பா நினைச்சிட்டேன் பாரு! தமிழ்பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுக்காக தனியா பீச்சுக்கு வந்து என்ன வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க கேடிப்பயல்” என்று கத்தியவாறு வம்சியை நோக்கிச் செல்ல, அவனோ வண்டியிலிருந்து ஒரு உருவத்தை கைத்தாங்கலாக இறக்கி நிற்க வைத்து, வேதாவை பார்த்து புன்னகைத்தான்.
கத்திக்கொண்டே வந்தவளின் வார்த்தைகள் சட்டென நின்று நடை தடைபட, “ஹேப்பி பர்த்டே தமிழ் மிர்ச்சி” என்று பின்னால் கேட்ட ராவணின் வார்த்தைகளில் சடாரென அவனைத் திரும்பிப் பார்த்தாள் வேதா. அவனோ பாய்ந்து கார் பொனெட் மீது அமர்ந்து அவளைப் பார்த்து புன்னகைக்க, அதன் அர்த்தம் புரிந்ததோ, என்னவோ? தன்னெதிரே நின்றிருந்த உருவத்தையே இமை மூடாது பார்த்திருந்தாள் அவள்.
அந்த உருவமோ கைகளை நீட்டி, “செல்லக்குட்டி…” என்றழைக்க, அந்த அழைப்பில் உயிர்த்தவளுக்கு கைவிட்டு போன ஒன்று கிடைத்த சந்தோஷம்!
“விக்கி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறு அவனை நோக்கி ஓடியவள், அவனை பிரிவின் வலியை உணர்த்தும் விதமாக அணைத்திருக்க, “ஸ்ஸ்… கொலைக்காரி என்னை விடுடி. வலிக்குது” என்று அலறிவிட்டான் விக்ரம்.
அப்போதுதான் சட்டென விலகி அவனை மேலிருந்து கீழ் பார்த்தவளுக்கு அவனுடைய நிலையே புரிந்தது. அன்று ஆட்கள் அடித்த நெற்றியில் உண்டான காயத்திற்கு தலையில் கட்டுப்போட்டு, வயிற்றில் ஒரு பெரிய கட்டுடன் விக்ரம் இருக்க, “ரொம்ப வலிக்குதாடா? என்னாலதான் எல்லாம். உன்னை நான்தான் கவனிச்சிருக்கணும்” என்ற வேதாவின் வார்த்தைகள் தழுதழுத்த குரலில் வெளிவந்தன.
அவளை விழி கலங்க, “வேத்…” என்று நோக்கியவன், சட்டென்று “அட ச்சீ… பே! இந்த காயத்தை விட நீ எமோர்ஷனலா பேசுறேன்னு பேருல எதையோ பண்ணுறதை பார்க்கும் போதுதான் மனசெல்லாம் வலிக்குது. அதான் வரல்லல்ல, விட்டுரு. எதுக்கு?” என்று அவள் காலை வார, சப்பென்றானது வேதாவிற்கு.
“போயும் போயும் உனக்காக கண்ணீரை வேஸ்ட் பண்ணி, எனர்ஜிய வேஸ்ட் பண்ணி, அவன அடிச்சி… ச்சே! போடா விவஸ்தைக்கெட்டவன்!” வேதாவும் பதிலுக்கு திட்ட, அவர்களின் தமிழ் சம்பாஷனை புரியாவிடினும் இருவரையும் ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தான் வம்சி.
தன் கேலியை விட்டு விக்ரமின் உடலை ஆராய்ந்த வேதா, “நீ உயிரோட வந்ததே போதும்னு தோனுது விக்கி. ரொம்ப தவிச்சி போயிட்டேன்டா” சற்று வேதனையுடனே சொல்ல, “நீ ராவண் அண்ணாவுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும் வேத். இங்க வில்லனும் அவர்தான், ஹீரோவும் அவரேதான்” என்று சொல்லிச் சிரிக்க, அடுத்தநொடி வேதாவின் விழிகள் ராவணைதான் தேடியது.
அவனோ கார் பொனட்டில் ஒய்யாரமாக அமர்ந்தவாறு முட்டியில் கைகளை ஊன்றி அவளையேதான் பார்த்துக்கொண்டிருக்க, ஏனோ முதல்தடவை தனக்குள் தோன்றும் இனம்புரியா உணர்விற்கான பெயரை இனங்கண்டுக்கொண்டாள் வேதா.
அவளது விழிகள் அவனையே நோக்க, ‘மை சேவேஜ்’ என்று வெட்கச்சிரிப்புடன் உரிமையுடன் சொல்லிக்கொண்டன அவளிதழ்கள்.
அவன் மேலிருந்த மொத்தக்கோபமும் அவளுக்கு காதலாக மாறியிருக்க, அவனோ அதையெல்லாம் உணரவேயில்லை. கூடவே, அவனை காதலிக்க வைக்க தான் படாத பாடுபட வேண்டியிருக்குமென அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.