காதல்போர் 19

eiETQJ184648-1e68b302

அடுத்தநாள்,

“அவன் வந்ததுக்கு அப்றம் நம்மள கண்டுக்குறாளான்னு பாரு! மேடமுக்கு இப்போ எங்க நியாபகம் எல்லாம் இருக்காது. இரண்டு விருந்தாளிங்க வீட்டுல இருக்காங்களே, அவங்கள கவனிக்கணும். அதெல்லாம் இல்லை. அவன அழைச்சிட்டு வந்ததே நாமதான். அந்த நன்றி கொஞ்சமாச்சும் இருக்கா?” கோபமாக சிகரெட்டை ஊதித்தள்ளியவாறு வேதாவை நினைத்து மாடியில் ராவண் புலம்பிக்கொண்டிருக்க,

“க்கும்! அவர் வயித்துல கத்திய சொருகியதே நீங்கதானே!” பக்கத்திலிருந்து வம்சி மெதுவாக முணுமுணுக்க, அது அவனுடைய காதில் விழுந்துவிட்டது போலும்!

“திருப்பிச் சொல்லு!” காட்டமாக கேட்டவாறு வம்சியை ராவண் முறைக்க, “அது… பையா…” என்று அவன் திணற ஆரம்பிக்க, சரியாக, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…”  என்றொரு செறுமல்!

இருவரும் சட்டென திரும்பிப் பார்க்க,   பின்னால் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி தன்னவனையே குறும்புச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த வேதாவை பார்த்ததும் வம்சி ‘அப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டான் என்றால், ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை முறைத்துப் பார்த்தான் ராவண்.

அவளுக்கோ அவளை நினைத்தே சிரிப்புதான். முதல்தடவை தன்னை முறைப்பவனை ரசிக்கும் தன் மனதை என்ன சொல்வது என்று அவளுக்கே தெரியவில்லை. அவனுடைய பூனை விழிகள், இறுகிய அழுத்தமான உதடுகள், அங்குமிங்கும் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்த அடர்ந்த அவனது கேசம், நெற்றியில் அவன் எப்போதும் வைத்துக்கொள்ளும் திலகம் என ஒவ்வொன்றும் மேலும் மேலும் ரசிக்கத் தூண்டின.

ராவணுக்கோ தன்னை நோக்கிய அவளின் ரசனைப் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. இமை மூடாத அவளின் பார்வையில் கடுப்பாகி இடுப்பில் கைக்குற்றி அவளை அவன் பார்க்க, அவளுடைய பார்வையின் அர்த்தத்தை கண்டுக்கொண்டு “இது நல்லதுக்கில்லை” என்ற வம்சியை சடாரென திரும்பி முறைத்துப் பார்த்தாள் வேதா.

“வெளியில போடா!” கடுப்பாக சொன்னவள், முகத்தை திருப்பிக்கொண்டு சென்றவனை மீண்டும் அழைத்து நிறுத்தி, “ரொம்பநாளா இந்த டவுட் இருக்கு. ஏதாச்சும் போதி மரத்துக்கு அடியில போய் நின்னுட்டு வந்தியா என்ன? இல்லை, சன் ஆஃப் சுஜீப்பா இருந்துட்டு எனக்கு உதவி பண்ணியே! அதான்” சற்று கேலித்தொனியில் கேட்க, அவளை முறைக்க முயன்று பின் அவள் கேட்ட விதத்தில் சிரித்துவிட்டான் வம்சி.

“ஒரு அண்ணனா அம்ரிய பத்தி நான் யோசிச்சதே கிடையாது. அன்னைக்கு ஹோலிப் பண்டிகையில அத்தனை பேருக்கு மத்தியில அம்ரிகாக நீ பேசினதும்தான் அவளோட வாழ்க்கைய பத்தி ஒரு அண்ணனா யோசிக்கவே ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்தே உன் மேல…” என்று வெட்கப்பட்டவாறு அவன் ஏதோ சொல்ல வர, “தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க!” பொங்கிவிட்டாள் வேதா.

அதில் முகத்தை சுழித்தவன், “அய்ய! நினைப்புதான். அதெல்லாம் இல்லை. உன்மேல நல்ல அபிப்பிராயம் வந்திச்சுன்னு சொல்ல வந்தேன்” என்றுவிட்டுச் செல்ல, “இதே கேள்விக்கான பதில உன்கிட்டயும் நான் எதிர்ப்பார்க்கலாமா? என்ட், விக்கிய பத்தின உண்மைய முன்னாடியே சொல்லியிருக்கலாமே! ” உள்ளுக்குள் தோன்றிய ஆர்வத்துடன் ராவணிடம் கேட்டாள் அவள்.

அதில் அவளை முறைத்தவன், “உண்மைய சொல்ல மேடம் விட்டா தானே!” என்றுகேட்டு உதட்டை சுழிக்க, வேதாவோ, “ஹிஹிஹி… ஆமால்ல சோரி” என்று அசடுவழிய சிரித்துவைத்தாள் .

அந்தப் பாவனையை ரசிக்கத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை தள்ளிவிட்டு சிகரெட்டை ஊதியவாறு, “ஊரைப்பத்தி நான் உனக்கு விளக்கத் தேவையில்லை. அப்பாவ பார்த்தே வளர்ந்தவன் நான். ஆரம்பத்துல என்னை எதிர்த்து நின்ன அந்த சின்னபொண்ணு மயூரிய பார்க்கும் போதும் சரி, இதோ இந்த வேதாவை பார்க்கும் போதும் சரி கோபம்தான் வந்திச்சு, ஒரு ஆம்பிளைய எதிர்த்து பேசுறான்னு. ஆனா, அதெல்லாம் அந்த குழந்தையோட அழுகைய பார்க்குற வரைக்கும்” ராவண் சொல்ல, “எந்த குழந்தை?” புரியாமல் வந்தன வேதாவின் வார்த்தைகள்.

“ஜூஹி” அவன் சொன்னதும், அவளுக்கு மேலும் குழப்பம்தான்.

“அன்னைக்கு ராத்திரி அவங்கள பின்தொடர்ந்துகிட்டு மைதானத்தை தாண்டி  நீ போகும் போது, அதே இடத்துல அப்போ நானும் இருந்தேன். இது அடிக்கடி ஊருல நடக்கும். ஆனா, அது என்ன மாதிரியான சடங்குன்னு அன்னைக்கு  நான் அதை என் கண்ணால பார்க்குற வரைக்கும் எனக்கு தெரியாது. ஆரம்பத்துல உன்னால ஏதாச்சும் பிரச்சினை வரும்னுதான் உன் பின்னாலேயே வந்தேன். நீ பார்த்ததை நானும் பார்த்தேன் வேதஷ்வினி” இதை சொல்லும் போது ஆண்மகனான  அவனுடைய உடலிலே ஒரு அதிர்வு!

வேதாவோ விழி விரித்து அவனையே பார்த்துக்கொண்டிருக்க, “அதை பார்த்துக்கிட்டு இருக்கும் போதுதான் திடீர்னு நீ கத்த ஆரம்பிச்ச, எனக்கு எதுவுமே புரியல. சரியா உள்ள இருக்குறவங்களும் சத்தம் கேட்டு வெளியில வர்றதை கவனிச்சிட்டுதான் உன்னை பிடிச்சி இழுத்து அவங்க யாரும் பார்த்துறாம மறைச்சேன்” என்றான் ராவண்.

“ஆனா, அன்னைக்கு என்னை கொல்லுவேன்னு மிரட்டினவன்தானேடா நீனு?” வேதா முறுக்கிக்கொள்ள, “அப்போ தப்புன்னு புரிஞ்சது. ஆனா, ஊரை விட்டுக்கொடுக்க முடியல. என்ட், நீ பேசின பேச்சுக்கு உன்னை கொல்லாம விட்டேன்னு சந்தோஷப்படு!” ராவண் அலட்சியமாக சொல்ல, உதட்டை சுழித்துக்கொண்டாள் அவள்.

மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“உன் ஃப்ரென்ட் விக்ரம், அவனுக்கு வேற வேலையே இல்லையா? ஏன் உங்க ஊருல எல்லாம் பொண்ணே இல்லையா? எங்க ஊரு பொண்ணேதான் வேணுமா அவனுக்கு? அதுவும் என் தங்கச்சிய…” ராவண் சற்று கடுப்பாக கேட்க, “காதலுக்கு இந்த ஜாதி, மதம் எல்லாம் புரியாது” சிறுசிரிப்புடன் சொன்னவளின் விழிகளில் தெரிந்த காதலை அவன் உணரவேயில்லை.

“கருமம்!” வாய்விட்டே முணங்கியவாறு நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்ட ராவண், “அவனாலதான் மாஹி ரொம்ப கஷ்டப்பட்டா. எங்களுக்குள்ள அண்ணண் தங்கச்சின்னு எல்லாம் கொஞ்சிக்க மாட்டோம். அவ வெளிப்படையா அவ பாசத்தை காமிச்சிக்கிட்டாலும் நான் காட்டிக்க மாட்டேன். அவ அப்படியே என் அம்மா மாதிரி. அன்னைக்கு விஷயம் தெரிஞ்சதும் எனக்கே அவன கொல்லுற ஆத்திரம் வந்திச்சு. அம்மாவ இழந்த மாதிரி அவளையும் இழந்துருவேனோன்னு நான் பயந்த பயம் அப்படி!” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபமாகச் சொல்ல, ‘இவனுக்கு தங்கை மீது இத்தனை பாசமா?’ என்ற ஆச்சரியம் வேதாவிற்கு!

ஆனாலும் ஏதோ தோன்ற, “ஆனா, நீதானே என் விக்கிய கத்தியால குத்தியிருக்க! நீ நினைச்சிருந்தா ஏதாச்சும் பண்ணியிருக்கலாம்” வேதா சிலுப்பிக்கொள்ள, அவளை முறைத்தவன், “எங்க குத்தினா பொழைக்க வாய்ப்பிருக்கு, எங்க குத்தினா ஒரேயடியா போய் சேருவாங்கன்னு எனக்கு தெரியும். நான் குத்தியிருக்கலன்னா வேற எவனாச்சும் அவன கொன்னிருப்பான். என்ட், இது ஒன்னும் சினிமா கிடையாது, நூறு பேரை பந்தாடுறதுக்கு. நான் பாப்பாவுக்கு எதிரா இருக்கேன்னு தெரிஞ்சாலே மொத்த ஊரையும் எனக்கெதிரா திருப்பியிருப்பாரு. அவருக்கு அவரோட கௌரவம்தான் முக்கியம்” என்று சொல்லும்போதே, அவனுடைய வார்த்தைகளில் அத்தனை வலி!

அதை வேதாவும் உணரத்தான் செய்தாள்.

“நீ படிக்கலன்னாலும் உனக்குள்ள நிதானமும் சாமர்த்தியமும் அதிகமாவே இருக்கு” வேதா சொல்ல, “வாட்?” என்ற கத்தலோடு அவளை நோக்கியவன், “ஐ அம் அன் ஆர்க்கிடெக்ச்சர் க்ராடூவேட், யூ க்னோ?” என்றானே பார்க்கலாம். அதிர்ந்துப்போய் விட்டாள் அவள்.

“நீயா?” அவனை மேலிருந்து கீழ் பார்த்தவாறு நம்பாத குரலில் அவளுடைய வார்த்தைகள் வர, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி அவளை முறைத்தவன், “என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா?” என்று கேட்க, ‘அதுதானே கோபால் உண்மை’ என்ற மனசாட்சியின் பதிலை வெளியில் சொல்ல முடியவில்லை அவளால்.

“அது… அது நிஜமாவா?” அவள் திணற, அவனோ சலிப்பாக தலையாட்டி முகத்தை திருப்பிக்கொண்டான்.

“என்னால நம்பவே முடியவில்லை. இருந்தாலும் கேக்குறேன், அதை படிச்சிட்டு ஏன் இப்படி…” கேள்வியை முழுதாக அவள் கேட்டு முடிக்கவில்லை, “பிடிக்கல” பட்டென்று சொன்னவன், “முன்னாடியே சொன்னமாதிரி மாஹிய பார்க்கும் போது அம்மா நியாபகம்தான் வரும். ஊருலயிருக்கும் போது  விலகியிருந்தாலும் அம்மா பக்கத்துல இருக்குற நிம்மதியில இருந்தேன். ஊரை விட்டு போனதிலிருந்து முடியல. அதான் ஊருக்கே வந்துட்டேன்” என்று சொல்ல, தலையில் அடித்துக்கொள்வது வேதாவின் முறையாயிற்று.

அதில் சிரித்தவன், “படிச்ச படிப்பை வீணாக்க கூடாது, அதானே! பெங்ளூர்ல ஒரு கம்பனியில வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கேன். கண்டிப்பா கிடைச்சிடும். அதனான என்னால இங்க ரொம்பநாள் இருக்க முடியாது. சீக்கிரம் போகணும்” என்றுவிட்டு நகர போக, வேதாவின் முகமே சுருங்கிவிட்டது.

‘அய்யோ! என்ன இவன் போறேன்னு சொல்றான். ஏன் தமிழ்நாட்டுல வேலை இல்லையா என்ன? ச்சே!  இந்த பாழாப்போன காதலை சொல்லவும் முடியல. இதுவரைக்கும் வராத வெட்கம் எல்லாம் இப்போ வந்து படுத்துது’ வேதா புலம்பிக்கொண்டிருக்க, “நெக்ஸ்ட் என்ன ப்ளான் பண்ணியிருக்க?” என்ற ராவணின் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

அவனோ அவளையே கேள்வியாக நோக்க, அவளிடம்தான் பதிலே இல்லை. “அது…” வேதா திணற, “வாட் அபௌட் சோஷியல் மீடியா?” நரேந்திரன் கேட்ட அதே கேள்வியை கேட்டு வைத்தான் ராவண்.

அதில் பெருமூச்சுவிட்டவள், “நல்ல யோசனைதான். ஆனா, அதை பண்ண முடியாத மாதிரி ஒரு தடை இருக்கு” என்று சொல்ல, புருவத்தை நெறித்து புரியாமல் நோக்கிய ராவண், “மாஹி” என்ற வேதாவின் பதிலில் அதிர்ந்து விழித்தான்.

“புரியல” அவன் அவளை கூர்ந்து நோக்க, “இந்த சடங்கை பத்தி மாஹி பேசினதை நான் வீடியோவா வச்சிருக்கேன். நான் இதை பத்தி பேசி வெளியிடுறதை விட, மாஹி பேசினதை சோஷியல் மீடியாவுல போடலாம். ஆனா, நான் எடுக்கற ஒரு தப்பான முடிவு மாஹியோட உயிருக்கே ஆபத்தாகலாம்” வேதா சொல்ல, ராவணுக்கோ ஏதோ புரிவது போல் இருந்தது.

“மாஹி அங்க இருக்குறது ஆபத்து ராவண். மாஹி என்கிட்ட ஊர் சடங்கை பத்தி சொன்னது மிஸ்டர்.சுனிலுக்கு தெரியும். ஆனா, அது ஆதாரமா என்கிட்ட இருக்குன்னு அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாரு” வேதா சொல்ல, ‘ச்சே!’ என்று எரிச்சலாக நெற்றியை நீவி விட்டுக்கொண்டான் அவன்.

சட்டென்று, “இன்னைக்கு ஈவினிங் என் ஃப்ரென்டுக்கு ரிசெப்ஷன். போறதுக்கான ஐடியா இருக்கல. பட், இப்போ உன்கூட போகலாம்னு தோனுது. வர்றியா?” வேதா கேட்க, ஒருநிமிடம் அதிர்ந்து பின் அவளை கூர்ந்து நோக்கியவன், “உனக்கு உடம்புக்கு ஏதும் முடியல்லையா என்ன?” என்று தீவிர முகபாவனையுடன் கேட்டான்.

“இல்லையே!” குறும்புச் சிரிப்புடன் சொல்லி அவள் சிரிக்க, ஏனோ வந்ததிலிருந்து வீட்டிலேயே அடைந்துக் கிடந்தது அவனுக்கும் எரிச்சலை உண்டாக்கியதோ, என்னவோ? ‘வருகிறேன்’ எனும் விதமாக ராவண் தலையசைக்க, முப்பத்திரரெண்டு பற்களையும் காட்டி இழித்து வைத்தவளைப் பார்த்தவனுக்கு ஏனோ வினோதமாகத்தான் இருந்தது.

அன்று மாலை மங்கும் வேளையில்,

“எனக்கென்னவோ உன்னைப் பார்த்தா ஆக்சிடென்ட் ஆன மாதிரி தெரியல. யாருக்கிட்டயோ செமத்தையா வாங்கி கட்டின மாதிரி இருக்கு” தீப்தி சோஃபாவில் அமர்ந்திருந்த விக்ரமை மேலிருந்து கீழ் பார்த்தவாறுச் சொல்ல,

ஓரக்கண்ணால் வேதாவுடன் செல்வதற்காக தயாராகி நின்றிருந்த ராவணை ஒரு பார்வைப் பார்த்த விக்ரம், “எனக்கு கூடதான் உன்னெல்லாம் பார்த்தா பொண்ணா தெரியல. நான் என்ன வெளியில சொல்லிக்கிட்டா திரியுறேன்” என்று அவள் காலை வாரினான். அதில் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை முறைத்தவாறு எதேர்ச்சையாக மாடியை பார்த்தவளின் விழிகள் அங்கு நின்றிருந்தவளை பார்த்ததும் சாரசர் போல் விரிந்தன.

“வாவ்!” என்ற தீப்தியின் குரலில் அங்கிருந்த விக்ரம், ராவணின் பார்வைகளும் அவள் பார்வை சென்ற திசையைதான் நோக்கின. அங்கு இளமஞ்சள் நிற சேலையில் கூந்தலை ஒருபக்கம் விட்டு தேவதை போல் நின்றிருந்தவளை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது. ஆனால், ஒருத்தனை தவிர. 

‘இந்த அம்மணி நெசமாவே நம்ம வேதாதானா?’ என்ற ரீதியில் விக்ரம் விழி விரித்து பார்த்தான் என்றால், அவளை சாதாரணமாகப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான் ராவண்.

அவனுடைய முகபாவனையை அவதானித்துக்கொண்டிருந்த வேதாவிற்கு, அவனது அலட்சியப்பாவனையில் சப்பென்றானது. 

உதட்டை பிதுக்கியவாறு அவனருகில் வந்து நின்றவள், “போகலாமா?” என்று கேட்க, ராவணோ பதிலேதும் பேசாது முன்னே நடக்க ஆரம்பித்தான். ஆனால், வேதாவையே பார்த்துக்கொண்டிருந்த விக்ரம்தான், “என்னடா நடக்குது இங்க?” என்று நடப்பது புரியாது வாய்விட்டே கேட்க, வேதாவின் முகபானையில் புரிந்தும் புரியாததுமான அர்த்தத்தை நினைத்து தலையை சொரிந்துக்கொண்டாள் தீப்தி.

அடுத்த சிலநிமிடங்களில் இருவரும் மண்டபத்திற்கு வந்து சேர, தன் பக்கத்தில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக வீற்றிருந்தவனையே ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்து வைத்தாள் வேதா. இதை அவன் உணர்ந்தானா, இல்லையா? என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.

சரியாக, மேடையிலிருந்த மணப்பெண்ணின் தாயார், “வேதஷ்வினி, எப்படிம்மா இருக்க?” என்று கேட்டவாறு அவளருகில் வர, “ஆன்ட்டி, நான் நல்லா இருக்கேன். எப்படியோ அவ காதலுக்கு சம்மதிச்சி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தாச்சு” என்று சிரிப்புடன் பேச்சை வளர்த்தாள் வேதா.

அவரும் வீட்டில் நடந்த சோகக்கதைகளை புலம்பித் தள்ளி அப்போதுதான் பக்கத்திலிருந்த ராவணை கவனித்து, “இந்த பையன் யாரு? மாப்பிள்ளை வீட்டு சொந்தமா என்ன? உனக்கு தெரிஞ்ச பையனா வேதா, இல்லை வரும் போது இந்த பையனையே பார்த்துக்கிட்டு இருந்தியே அதான்” என்று கேட்க, முதலில் ‘அய்யய்யோ! நான் அவனை சைட் அடிச்சதை அவன் முன்னாடி உளறிட்டாங்களே!’ என்று பதறியளுக்கு பின்னரே அவனுக்கு மொழி தெரியாது என்பதே நியாபகத்திற்கு வந்தது.

உணர்ந்தவுடன், ‘அப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவள், ராவணை குறும்பாகப் பார்த்தவாறு “இதுவா… நான் கல்யாணம் பண்ண போற பையன்” என்று சொல்லி வெட்கப்பட்டுக்கொள்ள, அவரும் முகம் முழுக்க புன்னகையுடன், “அப்படியா வேதா? ரொம்ப அழகா இருக்கான்” என்றுவிட்டு ராவணுக்கு நெட்டி முறைக்க, எதுவும் புரியாது அதிர்ந்து சற்று பின்னோக்கி நகர்ந்தான் அவன்.

ஒன்றும் புரியாது இருவரையும் பெக்கபெக்கவென விழித்தவாறு அவன் மாறி மாறிப் பார்க்க, அதில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவாறு வேதா அமைதியாக அவன் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தாள்.

“அவங்க என்ன கேட்டு , நீ என்ன சொன்னேன்னு என் முகத்துக்கு நேரா விரலை மடிச்சி ஏதோ பண்ணாங்க?” ராவண் கடுப்பாக கேட்க, “சும்மாதான். நீ யாருன்னு கேட்டாங்க. ஃப்ரென்டுன்னு சொன்னேன்” என்றாள் வேதா கேலியாக.

“ஆஹான்!” என்றுவிட்டு ராவண் திரும்பிக்கொள்ள, அவனையே ரசனையாக பார்த்திருந்தவளுக்கு ஒரு ஆர்வம் தோன்றியது.

“காதல், கல்யாணம்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா சேவேஜ்? என்ட், வாட் அபௌட் தமிழ் கேர்ள்ஸ்?” தன்னை பற்றிய அவன் அபிப்பிராயத்தை தெரிந்துக்கொள்ளவென அவள் கேட்க, பக்கவாட்டாக திரும்பி, “அது…” என்றவாறு அவள் மூக்கோடு மூக்கை உரசும் தூரத்தில் நெருங்கி அமர்ந்தவன், “உன்னை மாதிரி இல்லாம பொண்ணுங்க பொண்ணுங்கமாதிரி இருப்பாங்க” கேலித்தொனியில் சொல்லிச் சிரிக்க, உதட்டை சுழித்து திரும்பிக்கொண்டாள் வேதா.

சிறிதுநேரம் அங்கிருந்து மணமக்களுடன் பேசிவிட்டு இருவரும் வெளியேற, இடம் பழக்கப்பட்டதாலோ, என்னவோ? ராவண் வீட்டை நோக்கி காரைச் செலுத்த, அவளோ கன்னத்தில் கைவைத்து அவனையே பார்த்தவாறு வந்தாள்.

“நாளைக்கு காலையிலயா கல்யாணம்?” ராவண் கேட்க, “ம்ம்… மாங்கல்யம் கோர்த்த மஞ்சள்கயிற மாப்பிள்ளை பொண்ணு கழுத்துல கட்டுவாங்க. ஆனா, என் கழுத்துல ஏறப்போறது மஞ்சள்கயிறா, இல்லை… கருப்பு மணி கோர்க்கப்பட்ட கயிறான்னுதான் தெரியல” ஒருவித வெட்கத்துடனே சொன்னாள் வேதா.

அவளுடைய குரல் மாற்றத்தில் அவளை ஒரு மார்கமாக பார்த்தவன், அந்த ஆள் அரவமற்ற சாலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளை ஆழ்ந்து நோக்க, அவளும் இமை மூடாது அவனையேதான் பார்த்திருந்தாள். சரியாக, இருவரின் உணர்வுகளையும் தூண்டும் விதமாக மேகங்கள் கரைந்து நீராக தரையில் சொட்ட, உணர்ச்சிகளின் பிடியில் வேதாவை நெருங்கினான் ராவண்.