காதல்போர் 22

ei5FULY94102-1c749bec

 

அன்று பேன்ட், ஷர்ட்டில் டிப்டாப்பாக தயாராகி வாசலையும் சுவற்றிலிருந்த பெரிய மணிக்கூட்டையும் மாறி மாறி பார்த்தவாறு ஹோல் சோஃபாவில் ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருந்தான் விக்ரம்.

அவனுக்கோ வழக்கத்துக்கு மாறாக நேரம் மெதுவாக நகர்வது போன்ற பிரம்மை!

‘கடவுளே! ஏன் இப்படி இருக்கு? இது ஒன்னும் நமக்கு புதுசில்லையே, ஆனாலும் ஒருமாதிரி படபடப்பா இருக்கே!’ மனதில் புலம்பியவாறு அவன் அமர்ந்திருக்க, தன் தோழனின் முகபாவனையையே குறுகுறுவென பார்த்தவாறு வேதா நின்றிருந்தாள் என்றால், அதே பாவனையில்தான் நரேந்திரனும் நின்றிருந்தார்.

“என்ன, என்னக்கும் இல்லாம ஆமை இன்னைக்கு அம்மிக்கல்லு ஆட்டுது?” கேலியாக கேட்டவாறு நரேந்திரன் அமர, அவரை முறைத்துப் பார்த்தவன், உதட்டைச் சுழித்தவாறு வேதாவிடம் “ராவண் பையா சொன்ன மாதிரி நிஜமாவே இன்னைக்கு வருவாதானே?” என்று ஒருவித ஏக்கத்தோடு கேட்டான்.

“ஆயிரத்து ஒன்பதாவது தடவை” காலையிலிருந்து இதே கேள்வியை அவன் கேட்ட தடவைகளை நக்கலாக வேதா சொல்லிக்காட்ட, சரியாக போர்டிகாவில் ஒரு கார் வந்து நின்றது. விக்ரமுக்கோ கார்கதவு திறக்கப்படும் போதே இதயம் படபடவென அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. மூச்சு விடுவதற்கே சிரமப்படுவது போல உணர்வு அவனுக்கு!

காரிலிருந்து தன் கைப்பையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தவாறு சுற்றும் முற்றும் மிரட்சியாக பார்த்துக்கொண்டு அவள் இறங்க, “அப்பா, அதுதான் மாஹி” என்று சொல்லி நரேந்திரனுக்கு கண்களால் விக்ரமை சுட்டிக்காட்டிச் சிரித்தாள் வேதா.

விக்ரமோ அவளைப் பார்க்காது திரும்பி, “ஆல் இஸ் வெல்” என்று நெஞ்சை நீவி விட்டவாறு மூச்சு வாங்க நின்றிருக்க, மாஹிக்கு ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வு! சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு எதிரிலிருந்தவர்களை பார்த்ததுமே கண்கள் மின்ன ஆரம்பித்தது.

“டேய் மடையா, பின்னாடி திரும்பி நின்னு என்னடா உளறிக்கிட்டு இருக்க. அவள பாரு!” வேதா கடிந்துக்கொள்ளவுமே, பட்டென்று திரும்பிய விக்ரம் ஒரு அடி முன்னே வைக்க போக, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் அப்படியே நின்றான். எச்சிலை விழுங்கியவாறு அவன் திரும்பிப் பார்க்க, அவனை ஓரக்கண்ணால் முறைத்தவாறே தன் தங்கையை நோக்கிச் சென்றான் ராவண்.

தன் அண்ணனைப் பார்த்ததுமே கையிலிருந்த பையை அப்படியே கீழே போட்டு ஓடி வந்து ராவணை அவள் அணைத்துக்கொள்ள, சிறுகுழந்தை போல் விம்மி விம்மி அழுபவளை நிஜமாகவே ராவணுக்கு சமாதானப்படுத்தத் தெரியவில்லை. அவள் தலையை வாஞ்சையுடன் அவன் வருட, வேதாவுக்கோ ராவணின் நிலை புரிந்தது போலும்!

“மாஹி…” என்றழைத்தவாறு அவள் தோளில் ஆறுதலாக கை வைக்க, அப்போதுதான் வேதாவை கவனித்தவளுக்கு சந்தோஷம் தாளவில்லை. “தீ…” என்றழைத்தவாறு அவளை தாவி அணைத்துக்கொண்ட மாஹி, “என்னை மன்னிச்சிருங்க, என்னாலதானே…” என்று விசும்பியவாறு ஏதோ சொல்ல வர, “ஷ்…” என்றவளின் குரலில் புரிந்துப் போனது அவளின் கண்டிப்பு.

“பையா, அப்பா இறந்துட்டாருன்னு சொன்னாங்க. நான் அவரோட முகத்தை கூட…” என்னதான் இருந்தாலும் தந்தையாயிற்றே! அந்த பாசம் அவளுக்கு இல்லாமல் போகுமா என்ன? அழுதவாறே மாஹி சொல்ல, அவள் கன்னத்தை தாங்கியவன், “உன் கண்ணீருக்கு தகுதியில்லாதவரு மாஹி. எல்லாத்தையும் மறந்துடு. நீ நீயா இரு! உனக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழு” ராவண் பேச பேச அவளுடைய விழிகளோ ‘தன் அண்ணனா பேசுவது?’ என்ற ஆச்சரியத்தில் விரிந்தன.

அவளின் விரிந்த விழிகளை சிரிப்புடன் பார்த்தவன், அவள் கன்னத்தை திருப்பி அவளவனை பார்க்கச் செய்ய, விக்ரமை பார்த்தவளுக்கோ தாரை தாரையாக விழிகளிலிருந்து விழிநீர் கொட்டியது. இத்தனைநேரம் அவளின் விழியோரப்பார்வை தன் மீது படியாதா என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கும் அதே நிலைதான்.

தான் கட்டுப்படுத்தியதையும் மீறி வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்தவன், தன்னவளைப் பார்த்து புன்னகைக்க, “விக்ரம்…” என்ற கத்தலோடு ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள் மாஹி.

அவனும் அவள் தன்னை அடைந்த அடுத்தநொடி காற்று கூட புக முடியாத அளவிற்கு அணைத்து, இடம் பொருள் எதையும் கண்டுக்காது அவள் நெற்றி, கன்னங்களில் முத்தத்தை பதிக்க, அவனும் அவளுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் அவனுக்கே வலிக்குமளவிற்கு உடும்பு பிடியாய் பிடித்துக்கொண்டாள். பிரிவு இருவருக்குமிடையிலான காதலை அதிகப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

சுற்றியிருந்த அனைவரும் புன்னகையோடு அவர்களை பார்த்திருக்க, அந்த காதல் புறாக்களுக்கோ நிகழ்காலத்திற்கு வரும் நினைப்பே இல்லை.

பொறுமையிழந்து நரேந்திரனே, “நோர்த் இந்தியன் பொண்ணை கரெக்ட் பண்ணி தமிழ்நாட்டுக்கு இழுத்துட்டு வருவேன்னு சும்மா பேச்சுக்குதான் போகும் போது சொல்றேன்னு நினைச்சேன். ஆனா…” என்று சொல்லி வாயைப்பொத்திச் சிரிக்க, “ஹிஹிஹி… ஐயாவோட ராசி அப்படி!” என்று தலையை பின்னால் சொரிந்தவாறு அப்பட்டமாக அசடுவழிந்தான் அவன்.

மாஹியோ அவர்களின் சம்பாஷனைகள் புரியாது திருதிருவென விழிக்க, “சீக்கிரம் கல்யாணத்தை வச்சிரலாம். மோகன்கிட்ட நான் பேசிக்கிறேன். அவன் வேற ஏதோ அருக்காணியவோ, பத்மினியவோ உனக்கு பார்த்து வைச்சிருக்கான். என்ட், இந்த பொண்ணு இங்கேயே இருக்கட்டும். இனி இவ நம்ம வீட்டு பொண்ணு” நரேந்திரன் கடைசி வசனத்தை மாஹிக்கு புரியும்படியே சொல்ல, விழிகள் கலங்க கையெடுத்து கும்பிட்டாள் அவள்.

“ஆனா ஒன்னு, கல்யாணம் வரைக்கும் நீ இந்த வீட்டு பக்கமே வரக் கூடாது. பொண்ணும் மாப்பிளையும் பார்த்துக்கவே கூடாது” அவர் சொல்ல, “வாட்? அங்கிள், இதுதான் என் வீடு” அதிர்ச்சியாக வந்த அவனின் வார்த்தைகளை அவர் சற்றும் கண்டுக்கொள்ளவேயில்லை.

“வெளியில போய் படுத்துக்க! நாளையிலிருந்து வீட்டுப் பக்கம் உன்னை நான் பார்க்கக் கூடாது” அவர்  கண்டிப்பாக சொல்ல, மாஹியோ விக்ரமின் சோக முகபாவனையின் காரணம் புரியாது கேள்வியாக நோக்க, “இது போங்கு…” என்று உதட்டை பிதுக்கிக்கொண்டான் அவன்.

சுற்றியிருந்தவர்களோ சிரிக்க, “நான் இன்னைக்கு ராத்திரி கிளம்புறேன்” என்று ராவண் சொன்னதில் மொத்தப்பேரின் கவனமும் அவன்புறம் திரும்பியது.

“ஏன்ப்பா? கொஞ்சநாள் இருந்துட்டு போகலாமே… உன் தங்கச்சி கல்யாணத்தை நீதானே முன்னாடியிருந்து நடத்தணும்” அவர் சொல்ல, வேதாவோ தன்னவனையேதான் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“மாஹி கல்யாணத்துல நான் இல்லாம எப்படி? கண்டிப்பா அப்போ வந்துருவேன். என்ட், நாளைக்கு பெங்ளூர்ல நான் வர்க்ல ஜாயின் பண்ணியாகணும். என் தங்கச்சிய நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றவன், விக்ரமை நோக்கி ஒற்றை விரலை நீட்டி மிரட்ட, அதில் திடுக்கிட்டவன், நரேந்திரனை பதட்டமாக நோக்க, அவருக்கும் ராவணின் அமைதியான மிரட்டலில் சற்று தூக்கிவாரித்தான் போட்டது.

மாஹியோ, “பையா, நீங்க போயே ஆகணுமா?” என்று உதட்டை பிதுக்க, தயக்கமாக தலையசைத்தவன், வேதாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

“என் லக்கி அவ நினைச்சதை அடைய உதவியா இருந்திருக்க. அவ உயிரோட இருக்க காரணமே நீதான்னு சொன்னா. உனக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன் ராவண். எப்போ என்ன உதவி வேணாலும் தாராளமா கேளு!” நரேந்திரன் சொல்ல, கண்ணுக்கு எட்டாத புன்னகை சிந்தியவன், அங்கு நின்றிருந்த வம்சியிடம் “நீயும் வர்றீயா என்ன?” பதில் தெரிந்தும் கேட்க, அவன் எதிர்ப்பார்த்தது போல் அதிர்ந்துவிட்டான் வம்சி.

“அது… அது வந்து… பையா, இது என் அத்தை வீடு. அத்தைய விட்டுட்டு வர மனசில்ல. நான் வேணா கொஞ்சநாள் இங்கேயே இருந்துட்டு…” அவன் இழுக்க, அடுத்து அவன் பேசுவதை கேட்க ராவண் அங்கு நின்றால் தானே!

விறுவிறுவென தனதறையை நோக்கி அவன் செல்ல, வேதாவுக்கோ விழிகள் கலங்கி கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. “மெய்யாலுமா? உன்னைப் பார்த்தா அவ்வளவு நல்லவனா தெரியல்லையே…” வம்சி ராவணிடம் சொன்ன பதிலில் கேலியாக பதில் கேள்வி கேட்டவாறு எதேர்ச்சையாக திரும்பிய நரேந்திரனின் விழிகளுக்கு சரியாக சிக்கியது வேதாவின் கலங்கிய விழிகள்.

கேள்வியாக அவளை நோக்கியவருக்கு, ராவணை நோக்கிய வேதாவின் ஏக்கப் பார்வையை பார்த்ததும்தான் எல்லாம் புரிந்துப் போனது. அவருடைய இதழ்கள் புன்னகையில் விரிய, எதேர்ச்சையாக திரும்பிய வேதா தன் தந்தையின் அர்த்தம் பொதிந்த பார்வையில் தயக்கமாக திரும்பி ராவணின் அறைக்குதான் சென்றாள்.

அவனோ அறை ஜன்னல் வழியே வெளியே வெறித்தவாறு நிற்க, “நீ இங்கேயே இருக்கலாம்ல?” என்ற வேதாவின் குரலில் நிதானமாக அவளை திரும்பிப் பார்த்து, “இது என்ன என் மாமியார் வீடா?” என்று ராவண் கேலியாக கேட்க, “சம்மதிச்சா மாமியார் வீடாகலாம்” பதிலடி கொடுத்தாள் வேதா அதே கேலியுடன்.

அவனுக்கோ அவள் பேசும் விதத்தில் கோபம்தான் வந்தது. கடுப்பாக “பாகல்(பைத்தியம்)” என்றுவிட்டு அவளை கண்டுக்கொள்ளாது அவன் தேவையான பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பிக்க, அவன் முன் வந்து நெருங்கி நின்றவள், “ஜோக்ஸ் அபார்ட், ஐ லவ் யூ” என்று கண்களில் காதல் மிதக்க சொல்ல, சட்டென அவளை நோக்கியவனுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை.

கண்களை அழுந்த மூடித் திறந்து, “லுக், எனக்கு இதுலயெல்லாம் நம்பிக்கை கிடையாது. என்ட், இதெல்லாம் வெளிப்படுத்த கூட எனக்கு தெரியாது. தேவையில்லாத ஆசைய வளர்க்காம உன் வேலைய பாரு!” பற்களை கடித்துக்கொண்டு ராவண் சொல்ல, அவள் என்ன சொன்னவுடன் கேட்பவளா?

அவன் சட்டைக்கோலரைப் பற்றிக்கொண்டவள், மூச்சு காற்று ஒன்றுடனொன்று கலக்கும் தூரத்திற்கு நெருங்கி மூக்கோடு மூக்கு உரச நின்றுக்கொள்ள, இதை முதலில் எதிர்ப்பார்க்காதவன் முகத்தை திருப்பி அவளை உதறித் தள்ளதான் முயற்சித்தான். ஆனால், அடுத்து அவள் செய்த காரியத்தில் அவனாலேயே அவளை விலக்க முடியவில்லை.

அவன் திமிற ஆரபித்ததுமே அவன் கன்னத்தை பிடித்து தன் முகத்திற்கு நேராக அவன் முகத்தை திருப்பியவள், அவனிதழில் தன்னிதழை ஆழ பதித்திருக்க, அதிர்ந்து விரிந்த ராவணின் இதழ்கள் முதலில் விலக மனமே இல்லாது விலக முயன்று பின் அவளிதழுடன் கலந்துவிட்டன. உணர்ச்சிகள் அவனுக்கு மேலெழ, விழிகளை மூடி அவளிதழுக்குள் மூழ்கியவனுக்கு மேலும் மேலும் அவள் இதழ்சுவை தேவைப்பட்டது போலும்!

அதுவும் பிடிமானம் இல்லாது நிற்பது வேறு அவனுக்கு எரிச்சலை கொடுக்க, தன் வலிய கரங்களால் அவளிடையை பற்ற அவன் வர, சரியாக கஷ்டப்பட்டு அவனிதழிலிருந்து தன்னிதழை பிரித்து அவனைவிட்டு விலகி நின்றாள் வேதா. ‘ச்சே!’ என்று சலித்தவாறு அவன் அவளை எரிச்சலாக நோக்க, “நீயும் என்னை காதலிக்குற ரைட்?” என்று கேட்டாள் அவள்.

“வாய்ப்பேயில்லை. பட், என்னை ரொம்ப ட்ரிக்கர் பண்ணிட்ட மிர்ச்சி. இதுக்காகவே உன்னை சும்மா விடமாட்டேன்” விஷம சிரிப்புடன் சொன்னவன், அவள் முழங்கையை பிடித்து இழுத்து கட்டிலில் அவளோடு சேர்ந்து விழுந்திருக்க, அதிர்ந்துவிட்டாள் அவள். “சேவேஜ், என்ன பண்ற…” அவள் பேசி முடிக்க கூட அவகாசம் கொடுக்கவில்லை அவனிதழ்கள். அவளிதழை வன்மையாக சிறைப்பிடித்திருந்தன.

முதலில் ஒரு வேகத்தோடு அவன் ஆரம்பித்தாலும் ஏனோ, ஒருகட்டத்திற்கு மேல் அவள் மேலுள்ள அந்த பெயர் தெரியாத உணர்வு அவனை மென்மையாக கையாள சொல்ல, முதலில் அவன் வேகத்தில் திணறியவள், அவனின் மென்மையில் சற்று வியந்துதான் போனாள். அவன் மேலுள்ள அவள் கொண்ட காதல், இவள் மேலுள்ள அவனுக்குள்ளிருக்கும் அந்த இனம்புரியா உணர்வு இரண்டும் கலக்க, நிமிடங்கள் கடந்தும் இதழ்கள் தம் செயலை விட்டபாடில்லை.

தாறுமாறாக அவன் ஹார்மோன்கள் சுரக்க, அவளிடையை அழுந்த பற்றியவன், மெதுவாக இதழை பிரிக்காமலேயே அவள் கழுத்துவளைவுக்கு வந்து தன் முகத்தை புதைத்துக்கொள்ள, அவன் தாடி மீசையின் குறும்பில் வெட்கிப் போனாள் வேதா. கழுத்தில் ஆழ்ந்த முத்தமொன்றை பதித்தவன், மெதுவாக நிமிர்ந்து அவள் விழிகளை நோக்க, அவன் கண்களில் காமத்தை தாண்டி தனக்கான ஏதோ ஒரு உணர்வை இனங்கண்டுக்கொள்ளதான் செய்தாள் அவனவள்.

தலையை உயர்த்தி அவன் நெற்றியில் முத்தத்தை பதித்தவள், “லவ் யூ… என்ட், ஐ க்னோ யூ லவ் மீ” என்று காதலோடு சொல்லிச் சிரிக்க, அடுத்தகணம் விருட்டென அவளை விட்டு விலகி அமர்ந்தவன், “ஒரு மண்ணும் கிடையாது” என்றுவிட்டு அவளை தரதரவென இழுத்துச்சென்று அறைக்கு வெளியே தள்ளி கதவை அறைந்து சாத்தியிருக்க, அவளோ மூடிய கதவையே முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

அன்று மதியமே பெங்ளூர் செல்வதற்கான ரயிலில் தனக்கான இருக்கையில் ராவண் அமர்ந்திருக்க, அவனுக்குள் ஏதோ ஒரு ஏக்கம். வீட்டிலிருந்து வெளியேறும் போது வேதாதான் அவனெதிரே வரவேயில்லையே! அவளைப் பார்க்காது செல்வதை மனம் தடுக்க, மூடிய அவளின் அறைக்கதவை பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், அதற்குமேல் முடியாது அங்கிருந்து வந்திருந்தான். மற்றவர்கள் முன் மனதை வெளிக்காட்டவும் அவன் இயல்பு விடவில்லை.

அவன் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்க, அவன் காதுக்கருகில் “மை சேவேஜ்” என்றொரு ஹஸ்கி குரல். சட்டென அவன் திரும்பிப் பார்க்க, அவனருகில் கன்னத்தில் கை வைத்தவாறு குறும்புச்சிரிப்போடு அமர்ந்திருந்தாள் வேதா. அவளைப் பார்த்ததுமே அவனுடைய விழிகள் முதலில் அதிர்ச்சியாக விரிந்து பின் தன்னவளை எரிக்கும் பார்வை பார்த்தன.

“இங்க என்ன பண்ற?” ராவண் காட்டமாக கேட்க, “என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் விலகி போக விட்டுருவேனா?” என்றவாறு பாக்கெட்டிலிருந்த பயணச்சீட்டை அவன் முன் ஆட்டி ஆட்டி காட்டியவள், “ட்ரிப் டூ பெங்ளூர்” என்று சொல்ல, அவள் கையிலிருந்த பயணச்சீட்டை பிடுங்க முயற்சித்தவனுக்கு, போக்கு காட்டி கையை பின்னால் இழுத்துக்கொண்டாள் அவள்.

“அறிவில்லையா உனக்கு? என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க. ச்சே!இட்ஸ் இர்ரிடேட்டிங். லுக், இப்படி பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்காம, போய் உன் வேலைய பாரு!  என்னை டோர்ச்சர் பண்ணாத! காதலாம் காதல்” பற்களைக் கடித்துக்கொண்டு அவன் கடுப்படிக்க, “அப்போ நமக்குள்ள எந்த உறவும் இல்லையா ராவண்?” அவளுடைய கேள்வி ஒருவித ஏக்கத்தோடு வெளிப்பட்டது.

ஏனோ அவனுக்கு அவள் விழிகளை பாக்கவே முடியவில்லை. கண்களை அழுந்த மூடித் திறந்து, “எனக்கு உன்மேல ஃபீலிங் இருக்கு. ஆனா, அந்த பெயர் தெரியாத உணர்வு கண்டிப்பா காதல் கிடையாது. காமம்னு வேணா சொல்லலாம்” ராவண் வேறு எங்கோ வெறித்தவாறு சொல்ல, வேதாவுக்கு அந்த வார்த்தைகள் இதயத்தை கசக்கி பிழியும் வலியைத்தான் கொடுத்தது.

‘காதல் இத்தகைய வலியை கொடுக்குமா?’ என்று முதன்முறை உணர்கிறாள் அவள். ஆனாலும், அவனை விட்டு விலக மனமில்லை அவளுக்கு. அவன் விழிகளில் தனக்கான காதலை உணர்ந்தவளால், அவனின் வாய் வார்த்தைகளை நம்பி விலக முடியவில்லை.

அவனை நூலிடைவெளியில் நெருங்கி அமர்ந்தவள், விலக முயற்சித்தவனின் கரத்தை பற்றி விலக விடாது “அந்த உணர்வு காமமா இருந்தா, இப்போ என்னை விட்டு நீ விலகி போக மாட்ட” என்றுவிட்டு கொடுப்புக்குள் சிரித்தவாறு அவனை காதலாக நோக்க, அவளின் ஊடுருவும் பார்வையில் மெய்மறந்த ராவண், அவளின் வார்த்தைகளில் அதிர்ந்து இமை மூடாது அவளையேப் பார்த்திருந்தான்.