காதல்போர் 23

ei5FULY94102-4a89dc03

ஜன்னல் வழியே வீசும் தென்றல் அவள் நெற்றியில் விழுந்திருந்த கூந்தலை அங்குமிங்கும் அசைத்து அவள் முகத்தில் விழச்செய்து கூசச் செய்ய, தன் தோளில் தூங்கிக்கொண்டிருந்தவளின் சிணுங்கலில் அந்த முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட்டு, அவள் வதனத்தையே இமை மூடாது பார்த்திருந்தான் ராவண்.

அவளை நெருங்குவதில் அவனுக்குள் ஏதோ ஒரு தடை!

மனம் அவளை நெருங்கச் சொல்லுகின்ற அதேவேளை, விலகவும் சொல்லி இரு மதில் பூனைப் போல் தத்தளிப்பதில் அவனும் என்னதான் செய்வான்?

முகத்தை வேறுபுறம் திருப்பி அவன் விழிகளை மூட, அடுத்த சில மணித்தியாலங்களில் நடுநிசியில் பெங்ளூர் வந்து சேர்ந்தனர் இருவரும்.

அவனோ அவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாது தன் உடைப்பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென முன்னேச் செல்ல, “டேய் நில்லுடா! சேவேஜ்…” என்று கத்தியவாறு அவன் பின்னாலே ஓடி வந்தாள் வேதா. ஆனால், அவள் கத்தல்களை அவன் மதித்தால்தானே!

அவன் பாட்டிற்கு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து, வெளியில் மக்களுக்காக காத்திருந்த ஒரு கேப் ஓட்டுனரிடம் இடத்தைச் சொல்லி, விலைப்பேசி காரில் ஏறி கதவை சாத்தப்போக, “போகாதீங்க…” என்று கத்திக்கொண்டே ஓடி வந்த வேதா, அவன் கதவை சாத்துவதற்குள் வேகமாக வந்து கதவை திறந்து பின்சீட்டில் ஏறப்போனாள்.

அதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்ற ராவண், இடம் பொருள் பார்க்காது அவளைப் பிடித்து வெளியில் தள்ளியிருக்க, “ஆஆ…” என்ற கத்தலோடு தரையில் உடைப்பெட்டியுடன் விழுந்தவளுக்கு அவமானத்தில் முகமே கறுத்துவிட்டது. காரணம், அவள் விழுந்ததில் சுற்றியிருந்தவர்கள் சிரித்த கேலிச்சிரிப்பு அப்படி!

அவனோ இதழை வளைத்து ஏளனமாகச் சிரித்தவன், கதவை அறைந்து சாத்தி தன்னையும் வேதாவையும் மாறி மாறி மிரட்சியாக பார்த்தவாறு அமர்ந்திருந்த ஓட்னருக்கு போகுமாறு கண்ணைக் காட்ட, அவரும் உடனே வண்டியை அவன் சொன்ன இடத்திற்குச் செலுத்தினார்.

சிறிதுநாட்கள் தங்குவதற்காக வெளிநாட்டுக்கு செல்லவிருந்த தன் நண்பனொருவனின் ஒரு வீட்டையே ராவண் அங்கு வாடகைக்கு எடுத்திருக்க, வீட்டின் முன் கேப் நின்றதுமே பயணத்திற்கான பணத்தைச் செலுத்திவிட்டு தாங்கள் வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பாதையோ அந்த இரவுநேரத்தில் வெறுச்சோடி போயிருக்க, ‘ஒருவேள, அவமானத்துல வந்த ட்ரெயின்லயே கிளம்பி ஊருக்கு போயிட்டாளோ?’ என்ற கேள்வி வேறு அவன் மனதில்.

வீட்டிற்குள் நுழைந்து விளக்கை ஒளிரவிட்டவன், முதல்வேலையாக தன்னைச் சுத்தப்படுத்திவிட்டு சோஃபாவில் அமர போக, சரியாக அவன் வீட்டின் அழைப்பு மணி சத்தம் ஒலித்தது.

யோசித்தவாறு வேகமாகச் சென்று கதவை திறந்தவனின் முன்னால் அவனவள். “என்னை ஏன்டா விட்டுட்டு வந்த?” கோபமாக கேட்டவாறு அவள் வீட்டுக்குள் நுழையப் போக, அவனுக்கு வந்ததே ஒரு கோபம்!

அவள் ழுழங்கையைப் பிடித்திழுத்து வெளியில் உதறிவிட்டு, “ஒழுங்கு மரியாதையா ஊருக்கு போய் சேரு! என்னை கொலைக்காரன் ஆக்காத!” அத்தனை கோபத்தோடு அவன் சொல்ல, திருதிருவென விழித்தவள், “என்னால உன்னை விட்டு போக முடியாது” என்றாள் எங்கோ வெறித்தபடி. நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொண்டவனுக்கு நிஜமாகவே இவளின் பிடிவாதத்தில் கோபம் புசுபுசுவென எகிறத்தான் செய்தது.

ஒரு விரலால் அவளை மேலிருந்து கீழ் சுட்டிக்காட்டியவன், “இது வேதஷ்வினி கிடையாது. இவ்வளவு பேசுறேன், என் பின்னாடி வந்துக்கிட்டு இருக்க” என்று அவளின் இயல்பைத் தூண்டிவிட பேச, “ஆமா, இதுவே வேற யாராவது இருந்திருந்தா என்னை விட்டு அவங்க  விலகின அடுத்த நிமிஷம் அவங்க முகத்தை ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டேன். ஆனா, என்னோட காதலுக்காக, அதுவும், காதலிச்சிக்கிட்டே காதலிக்காத மாதிரி நடிக்கிற  உன்கிட்ட வர்றது எனக்கு அவமானமா தெரியல. லுக், ஒரு பொண்ணால ஒருத்தனை அளவுக்கு மீறி காதலிக்கவும் முடியும். அதை விட அதிகமா வெறுக்கவும் முடியும்” வேதாவின் வார்த்தைகள் அத்தனை காதலோடு வந்தன.

சிறிதுநேரம் அவளையே இறுகிய முகமாக பார்த்திருந்த ராவண், “அப்போ, இங்கேயே கிட!” என்றுவிட்டு கதவை அறைந்து சாத்தியிருக்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தாள் அவள். உள்ளே சோஃபாவில் அமர்ந்திருந்தவனுக்கோ நிலைக்கொள்ளவே முடியவில்லை. “பாகல்… பாகல்…” என அவனுடைய இதழ்கள் அவளை திட்டி முணுமுணுத்துக்கொண்டே இருந்தன.

அவளும் விடாது, “நீ துரத்தி விட்டாலும், நான்  உன்னை விட்டு போக மாட்டேன். இங்கேயேதான் இருப்பேன்” என்று வாசலிலிருந்து கத்திக்கொண்டு பிடிவாதமாக அங்கேயே நின்றிருக்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு முயன்று சிந்தனையை மாற்றி தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் அவன்.

வேலைகளை முடித்துவிட்டு கட்டிலில் வந்தமர்ந்து அலைப்பேசியை நோண்ட ஆரம்பித்தவனின் மனம் ஏனோ வெளியில் நின்றிருப்பவளின் பக்கமே சென்றது. நேரத்தைப் பார்க்க அதுவோ பதினொரு மணி. கிட்டதட்ட ஒருமணி நேரமாக அந்த பிடிவாதக்காரி வாசலில் நிற்கிறாள்.

‘ச்சே! என்னை ஏன் இப்படி டோர்ச்சர் பண்றா. அவளாதானே வந்தா, அவளே அனுபவிக்கட்டும். ஆனா,  இந்த நேரத்துல…’ என்று யோசித்து, ‘நோ நோ… இவ எல்லாம் ரொம்ப டேன்ஜரஸ் க்ரியேச்சர். இவக்கிட்ட வம்பு பண்ணணும்னு நினைக்கிறவன்தான் நிஜமாவே பாவப்பட்ட ஜீவன். சோ, அங்கேயே இருக்கட்டும். எவ்வளவுநேரம்தான் அப்படியே இருக்க முடியும்? விடியுறதுக்குள்ள மூட்ட முடிச்ச கட்டிட்டு போயிருவா’ தனக்குத்தானே பேசி தன் மனதை சமாதானப்படுத்திக்கொண்டான் ராவண்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில், ‘என்ன இவள இங்க காணோம், எங்க போயிட்டா? ச்சே!’ சலித்தவாறு வாசலில் நின்று கோபமாக புலம்பிக்கொண்டிருந்தான் அவன்.

என்னதான் மனதை சமாதானப்படுத்தினாலும், ஒரு கட்டத்திற்குமேல் முடியாது போக, தன்னை நினைத்தே எரிச்சலடைந்தவாறு கிட்டதட்ட அவளை அறையும் நோக்கிலே கோபமாக கதவை திறந்தவனுக்கு ஏமாற்றம்தான். காரணம் அவள் அங்கு இருந்தால்தானே!

புலம்பியவாறு விழிகளை சுழலவிட்டு அங்குமிங்கும் அவளை தேடிய ராவணுக்கு, ‘இந்தநேரத்தில் எங்கு சென்றாள்?’ என்றொரு பதட்டமும் சேர்ந்து தொற்றிக்கொண்டது என்னவோ உண்மைதான்.

வீட்டு வாசற்கதவை திறந்து பாதைக்கு வந்து தலைமுடியை அழுந்தக் கோதி ஒருவித பதட்டத்துடன் வேதாவை தேடியவனின் கண்களில் சரியாக சிக்கினாள் அவனின் தேடல். இவன் வீட்டுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்காவில் அலைப்பேசியை நோண்டியவாறு வேதா அமர்ந்திருக்க, இவனுக்குதான் பிபி எகிறியது.

மின்னல் வேகத்தில் ராவண் அவளை நெருங்க, அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தவள், தன்னவன் வருவதைப் பார்த்ததுமே, “என்ன அதுக்குள்ள என்மேல இருக்குற லவ்வ புரிஞ்சிக்கிட்டீங்களா மிஸ்டர்.ராவண்?” கேலிச்சிரிப்புடன் கேட்டவாறு எழுந்து நிற்க, அடுத்த அவன் அறைந்த அறையில் அதிர்ந்தேவிட்டாள்.

ஆனால், அந்த அதிர்ச்சியும் கணநேரம்தான். கன்னத்தை தடவி விட்டவாறு அவனை முறைத்துப் பார்த்தவள், “இதையெல்லாம் கணக்குல வச்சிக்கிறேன்” சற்று மிரட்டலாகவே சொல்ல, இடுப்பில் கைக்குற்றி சலிப்பாக அவளைப் பார்த்து, “எப்படிடா ஒரு பொண்ணால இப்படி இருக்க முடியுதுன்னு உன்னைப் பார்த்து நிறைய தடவை வியந்திருக்கேன். ஆனா, இப்போ புரியுது, மொத்தத்துக்கும் உன் பிடிவாதக்குணம்தான் காரணம்னு. இம்சை டி நீ” எரிச்சலாக சொன்னான் ராவண்.

“இதுவரைக்கும் நான் எனக்காக எதுவும் ஆசைப்பட்டது கிடையாது. முதல்தடவை நான் எனக்காக ஒன்னு ஆசைப்பட்டிருக்கேன். அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க முடியாது. தோல்வியையும் ஒத்துக்க முடியாது” வேதாவின் வார்த்தைகள் அத்தனை அழுத்தத்தோடு வர, விழிகள் சிவந்து உக்கிரமாக அவளை நோக்கிய ராவணுக்கு அவள் பேசும் பேச்சுக்கு இன்னொரு அறை விட்டால் என்ன? என்றுதான் இருந்தது.

கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்பத்தி, அவள் முழங்கையை பிடித்து தரதரவென வீட்டிற்குள் இழுத்துச் சென்றவன், அவளை உதறித்தள்ளிவிட்டு ஒரு அறையில் புகுந்து கதவடைத்துக்கொள்ள, ‘அப்பாடா! வீட்டுக்குள்ள வந்தாச்சு’ நிம்மதி பெருமூச்சுவிட்டு, வெற்றிப்புன்னகையோடு மூடிய அவன் அறைக்கதவையே பார்த்திருந்தாள் வேதா.

அடுத்தநாள்,

இன்று பணிக்கு செல்வதற்காக பேன்ட், ஷர்ட்டில் தயாராகி வந்தவனுக்கு, சோஃபாவில் கால்களை சுருக்கி உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்ததுமே நேற்றிரவு நடந்த அனைத்துமே நியாபகத்திற்கு வந்தது.

காஃபியை அருந்தியவாறு தான் அறைந்த அறையில் கன்னம் சிவந்துப்போய், உறங்கிக்கொண்டிருந்தவளை இருக்கையில் அமர்ந்து சிறிதுநேரம் பார்த்திருந்தவன், பக்கத்திலிருந்த ஒரு பொருளை வேகமாக தட்டிவிட, அந்த சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள் வேதா.

சட்டென எழுந்ததில் தலைவலிக்க, ‘ச்சே!’ என்று நெற்றியை நீவி விட்டுக்கொண்டு, “உனக்கெல்லாம் அறிவே இல்லையா?” என்றவாறு திட்ட வந்தவளின் வார்த்தைகள், தன்னவனின் தோற்றத்தைப் பார்த்ததுமே வாயிற்குள் அடங்கித்தான் போனது. எப்போதும் அடர் மீசை, தாடி என குர்தாவிலேயே அவனைப் பார்த்தவளுக்கு, முதல்முறை தாடியை ட்ரிம் செய்து, டிப்டாப்பாக தயாராகி தன் முன் நின்றிருப்பவனிடமிருந்து விழிகளை விலக்கவே முடியவில்லை.

மலங்க மலங்க விழித்தவாறு அவனையே பார்த்துக்கொண்டு அசையாது அவள் அமர்ந்திருக்க, அந்தப் பார்வையில் எரிச்சலடைந்து அவள் முன் சொடக்கிட்டு அவளை நடப்புக்கு கொண்டு வந்த ராவண், “எழுந்துருடி! ட்ரெயின்ல போவியோ, நடந்து போவியோ? இப்போவே இங்கிருந்து கிளம்பு” படபடவென பொரிய, “முடியாது” அலட்சியமாக வந்தது வேதாவின் வார்த்தை.

“இவளை…” என்று பற்களை கடித்தவனுக்கு நன்றாகவே புரிந்துப் போனது, அவளாக போனால்தான் உண்டு என்று.

“லுக், நான் வேலை விட்டு வருவேன். வீடு வீடுமாதிரி இருக்கணும். இல்லை…” ஒற்றைவிரலை நீட்டி மிரட்டிவிட்டு விறுவிறுவென ராவண் வெளியேற, “அது ரொம்ப கஷ்டமாச்சே!” வாய்விட்டே அவள் சொல்லிக்கொண்ட வார்த்தைகள் அவன் செவிகளுக்கு விழாமல் போனது அவளின் நல்லநேரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்றே புது வேலையில் இணைந்தவனுக்கு, வேலையிலிருக்கும் போதும் அவனவளின் நினைவுதான். இதில் ‘அவள் சாப்பிட்டிருப்பாளா?’ என்ற அக்கறை கலந்த கேள்வி வேறு மனதில் எழ, அவனுக்கே தன்னை நினைத்து வெறுப்பு!

அன்று மாலை வீட்டுக்கு வந்த ராவண்,  புருவத்தை நெறித்தவாறு கதவில் கை வைக்க, அதுவோ தானாக திறந்துக்கொண்டது. ‘தனியா வீட்டுல இருக்கா, கதவை லாக் பண்ணி இருக்கணும்னு கூட தெரியல ச்சே!’ வந்தவுடனே வேதாவை அர்ச்சித்தவாறு, வேகமாக கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன், வாயடைத்துப் போய்விட்டான். காரணம், வீடு இருந்த கோலம் அப்படி!

காலையில் நன்றாக இருந்த வீடு, இப்போது அலங்கோலமாக காட்சியளித்தாள், அவனுக்கு கோபம் வராதா என்ன? அதுவும், சிறுவயதிலிருந்து தான் இருக்கும் இடத்தை நேர்த்தியாக வைத்து பழக்கப்பட்டவனுக்கு, இப்போது வீட்டைப் பார்த்ததும் ‘இது நிஜமாவே நேத்து நான் குடி வந்த வீடுதானா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது.

“மிர்ச்சி…” என்று அவனின் கத்தலில் அறையிலிருந்து தலையை வெளியே போட்டு எட்டிப் பார்த்தவள், உற்சாகமாக “ராவண் மெஹ்ரா, புது வேலை எப்படி?” என்று கேட்டவாறு அவனெதிரே வந்து நிற்க, அவள் முழங்கையை பிடித்து இழுத்துச் சென்றவன், வீட்டிலிருந்து வெளியே அவளை தள்ளி விட்டு கதவை அறைந்து சாத்தியிருந்தான்.

அவளுக்குதான் ஒன்றும் புரியவில்லை. அவன் வெளியே துரத்திவிட்டதில் முதலில் விழித்தவள், பின் “டேய் சேவேஜ், கதவை திறடா! பைத்தியம்” என்று கத்த ஆரம்பிக்க, பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு ஹோல் நடுவில் நின்றிருந்தவனுக்கோ கோபம்தான் அடங்கியபாடில்லை.

அவளும் தொடர்ந்து விடாது அவன் பெயரை வாசலில் ஏலம் போட்டு கத்த, அவள் கத்தல்கள் எல்லாம் அவனிடம் காற்றில் கரைந்த கற்பூரம்தான். கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் காலையிலிருந்து வீட்டில் அவள் சேர்த்து வைத்த குப்பைகளை ஆடையை கூட மாற்றாது சுத்தம் செய்ய ஆரம்பித்தான் ராவண்.

அவளும் போவோர், வருவோர் தன்னை பார்ப்பதையெல்லாம் கண்டுக்கொள்ளாது கதவை தட்டிக்கொண்டே இருக்க, அவனும் சுத்தம் செய்துவிட்டு குளித்து உடை மாற்றியே வந்திருந்தான். ஆனால், கதவைதான் திறக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அவள் கத்தல் நின்றிருக்க, தாடையை நீவி விட்டவாறு, ‘என்ன சத்தத்தையே காணோம்?’ என்று யோசித்த ராவணுக்கு ‘அய்யோ!’ என்றுதான் இருந்தது.

எரிச்சலாக சென்று கதவை திறந்தவன், மீண்டும் அவளை வாசலில் காணாது “மிர்ச்சி…” என்று கடுப்பாக கத்தியவாறு வாசற்கதவை தாண்டி வெளியில் சென்று பார்க்க, அங்கு கண்ட காட்சியில் அவனுக்கு காதில் புகை வராத குறை.

அங்கு வேதாவோ ஒரு இளைஞனிடம், “வாவ்! நீங்க தமிழா? நானும் தமிழ்தான்” என்று உற்சாகமாக பேசிக்கொண்டிருக்க, “சூப்பர்ங்க, புதுசாவா குடி வந்திருக்கீங்க? உங்களை இங்க நான் பார்த்ததே இல்லையே!” நாடியை நீவி விட்டு யோசித்தவாறு சொன்னான் அந்த இளைஞன்.

“நேத்துதான் வந்தோம் ப்ரோ. உங்க வீடு பக்கத்துலயா இருக்கு?” இவ்வாறு இவள் பேசிக்கொண்டிருக்கும் போதே விறுவிறுவென அந்த இடத்திற்கு வந்த ராவணுக்கோ ஏதோ ஒரு உரிமை உணர்வு தலைத் தூக்க, “யார் நீ? என்ன பேசிக்கிட்டு இருக்க?” சற்று மிரட்டும் தோரணையில் அந்த இளைஞனிடம் கத்தத் தொடங்கினான் அவன்.

அந்த ஆடவனோ அவனின் கர்ஜனையில் சற்று மிரண்டுவிட, ராவணின் முகபாவனையை புரியாதுப் பார்த்தவள், “தப்பா எடுத்துக்காதீங்க, அவர் சரியான முரட்டு குழந்தை. என் புருஷன்தான்” என்று சொல்ல, ராவணோ கண்களை சுருக்கி அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தான்.

“ஓஹோ! அப்போ நான் வர்றேன்” ராவணின் கடுகடு முகத்தை பார்த்தவனுக்கு ஏனோ அதற்குமேல் நிற்கவே பயமாகத்தான் இருந்தது. ஆனால், அங்கிருந்து அந்த ஆடவன் நகர்வதற்குள் வேதாவை வீட்டுக்குள் இழுத்துக்கொண்டே வந்திருந்தான் ராவண். அவனின் பிடியில் அவளுக்கு வலியே எடுத்துவிட்டது எனலாம்.

“ஸ்ஸ்… விடு என்னை!” அவனின் கையை அவள் உதற, “ஏய்! யாருடி அவன்? தெரியாதவங்க கூட உனக்கென்ன பேச்சு?” கடுப்பாக ராவண் கேட்கவும், “அது என் ஃப்ரென்ட்” சிலுப்பிக்கொண்டு சொன்னாள் வேதா.

“வந்து ஒருநாள் முழுசா முடியல. அதுக்குள்ளயேவா? என்ட், யாரைக் கேட்டுடி ஆனா ஊன்னா என்னை உன் புருஷன்னு சொல்ற? அந்த மேரேஜ் ஃபங்ஷன்ல வச்சே உன்னை ஒருவழிப்பண்ணியிருப்பேன். அன்னைக்கே உன்னை சாவுன்னு விட்டிருக்கணும்டி. சரியான இம்சை” இடுப்பில் கைக்குற்றி அவன் முறைத்தவாறு கேட்க, “நீ ஏத்துக்கலன்னாலும் அதான்…” என்று ஏதோ பேச வந்தவளின் வார்த்தைகள் தடைபட, புருவத்தை நெறித்து அவனை கூர்ந்து ஒரு பார்வைப் பார்த்தாள்.

“நான் தமிழ்லதானே சொன்னேன். உனக்கெப்படி….” வேதா கேள்வியாக இழுக்க, “ச்சே! எனக்கு தமிழ் பேசதான் அவ்வளவா தெரியாது. மத்தபடி புரிஞ்சிக்க முடியும்” என்றவனின் பதிலில், “அடப்பாவி! தெரிஞ்சிக்கிட்டே எதுவும் புரியாத மாதிரி நடிச்சிருக்கியா?” அதிர்ச்சியில் வாயிலே கை வைத்துவிட்டாள் அவள்.

அவனோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை பற்ற வைத்தவாறு ஜன்னலருகே செல்ல, அதில் கடுப்பான வேதா வேகமாக வந்து அதை பிடுங்கி வெளியில் எறிய, இப்போது கடுப்பாவது ராவணின் முறையானது. அவளை முறைத்தவாறு இன்னொரு  சிகரெட்டை அவன் உதடுகளுக்கிடையில் வைக்க போக, அதையும் பிடுங்கி அவள் வெளியே வீசியதில், “ஏய்…” என்று அடிப்பது போல் ஒரு அடி முன்னே வைத்தான் அவன்.

ஆனால், அதற்கெல்லாம் அசந்தால் அது வேதா அல்லவா!

“எனக்கு ஸ்மோகிங் பிடிக்காது. எனக்கு பிடிச்சவங்க என் முன்னாடி எனக்கு பிடிக்காததை பண்ண நான் விட மாட்டேன்” வேதா சொல்ல, முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவாறு, “ஓஹோ! அப்போ மினிஸ்டர் சார் மிட்நைட்ல கூத்தடிக்க பிஹைன்ட் த ரீசன் இதுதானா?” கேலியாக கேட்டான் ராவண்.

அவள் கேள்வியாக நோக்க, தன் அலைப்பேசியிலிருந்த காணொளியை அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் காட்ட, அதைப் பார்த்தவளோ, “அப்பா…” என்று கோபத்தில் பற்களை கடித்தாள். நரேந்திரன் தன் கட்சியிலுள்ள நண்பர்களுடன் தோட்டத்தில் வைத்து மது அருந்தும் காணொளிதான் அது.

“மதுபோதையில் மினிஸ்டர். மகளுக்கு பயந்து இரவு நேரத்தில் கூத்து. எப்படி இருக்கு ஹெட்லைன்?” ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் ஏளனச் சிரிப்போடு கேட்டவாறு நகர போக, சற்றும் அவன் எதிர்ப்பார்க்காது அவன் சட்டைக்கோலரை பற்றி இழுத்த வேதா, அவனிதழில் அழுந்த முத்தமிட்டிருந்தாள்.

அதில் விழிகள் விரிய, உறைந்துப் போய்விட்டான் அந்த ஆண்மகன்.