காதல் சதிராட்டம்

வானில் மிதந்து கொண்டு இருந்த மேகங்களுக்கு போட்டியாக விண்ணை முட்டி நின்றது அந்த வீட்டின் மேல்தளம். இல்லை இல்லை அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.அப்படி ஒரு பிரம்மாண்டம் வழிந்தோடி இருந்தது அந்த மாளிகையில். பழங்காலத்து அரண்மனையின் தோரணை அந்த வீட்டின் ஒவ்வொரு திசையிலும் சிதறிக் கிடந்தது…

நடந்து செல்வதெற்கென நடுவில் ஒரு பாதை போடப்பட்டு இருக்க அதன் இருபுறத்திலும் சலசலவென நீர் ஓடிக் கொண்டு இருந்தது…

தோட்டம் ஒரு மினி நந்தவனத்தைப் போல காட்சி அளித்தது.

அந்த இடத்தில் இருப்பது அல்ல அந்த இடத்தைப் பார்ப்பதே ஒரு சொர்க்க அனுபவம் என்பதைப் போல வடிவமைத்து இருந்தார்கள் அந்த மாளிகையை.

அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை கண்களால் அளந்தவள் நேராக வினய்யின் பக்கம் திரும்பினாள். அவள் கண்களிலோ அழுத்தமான ஒரு பார்வை. அவள் கேள்வியிலும் அதே அழுத்தம் இருந்தது.

” உன் காசையும் செல்வ செழிப்பையும் காட்டி என்னை உன் பக்கம் இழுத்துடலாம்னு நினைச்சா அது உன் கனவுல கூட நினைக்காது வினய். ” என்று சொன்னவளை நோக்கி சிறுபுன்னகை புரிந்தான்.

” ஆதிரா நீ இந்த பணத்துக்கு மயங்கி என்னைக் காதலிக்க மாட்டேனு எனக்கு  தெரியாதா என்ன?

எனக்கு என் ஆதிராவைப் பத்தி நல்லாவே தெரியும், அவளுக்கு தேவை பணம் இல்லை.. நல்ல குணம். அந்த குணம் என் கிட்டே நிறைய இருக்கு. ”

” அப்போ வைபவ்  கிட்டே அந்த குணம் இல்லைனு சொல்றீயா வினய்.” என்று அவனை நோக்கி சீற்றத்துடன்  கேட்டாள்

” ஐயோ நான் அப்படி எதுவும் சொல்லைல ஆதிரா. ஆனால் நீ தான் அப்படி நினைச்சுக்கிறே.

ப்ளீஸ் என்னை எப்பவும் தப்பான கண்ணோட்டத்தோடவே பார்க்காதே. ” என்றான் அவளை நோக்கிக் கெஞ்சும் குரலில்…

” இல்லை வினய்… நீ எப்போ காலேஜ்ல அப்படி நடந்துக்கிட்டியோ, அப்பவே எனக்கு உன் மேலே இருந்த நல்ல அபிப்பிராயம் போயிடுச்சு.

எப்போ இந்த முப்பது நாள் அக்ரிமென்ட் போட்டியோ,  அப்பவே நீ கெட்டவன்ற என் முடிவு உறுதி ஆகிடுச்சு. அந்த தப்பான கண்ணோட்டம் நீ பண்ணாலும் மாறவே மாறாது.” என்று உறுதியோடு அவனைப் பார்த்து சொன்னாள். அவனது முகத்திலோ லேசாக வருத்தத்தின் சாயல்.

” அந்த தப்பான கண்ணோட்டம் கண்டிப்பா மாறும் ஆதிரா. இந்த முப்பது நாட்களிலே என்னோட காதலையும் என்னையும் நல்லா புரிஞ்சுப்ப.”  என்ற அவனது வார்த்தைகள் அவளது காதுகளில் விழாததைப் போலவே முன்னோக்கி நடக்கத் தொடங்கினாள். அவனும் அவள் பின்னாலேயே மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

நதியோரம் செல்லும்

   இலைகளைப் போல

நீ செல்லும் வழியோரம்

   தொடர்கிறேன் நான்…

வேகமாக நடந்த கால்கள் அவளை அந்த வீட்டின் முகப்பில் சென்று நிறுத்தியது..

அந்த மாளிகையின் உள்ளே நுழைந்த போது அவளுக்கு மீண்டும் இன்னொரு ஆச்சர்யம் காத்து இருந்தது. அவள் எதிரே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வரவேற்கும் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தனர்.

அவள் விழிகள் விரித்துப் பார்க்க வினய்யோ அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

” ஆதிரா நம்ம கூட சேர்ந்து இவங்க ரெண்டு பேரும் இருக்கப் போறாங்க. இவள் பேர் உத்ரா.இவன் பேர் ப்ரணவ். இவங்க ரெண்டு பேரும் என்னோட தம்பி தங்கச்சிங்க. அதனாலே

நீ இங்கே தனியா என் கூட இருக்கிறதை நினைச்சுப் பயப்பட வேண்டாம் ஓகே வா? பட் ஒரு கண்டிஷன்.” என்று அவன் பேசுவதை நிறுத்தவிட்டு ஆதிராவைப் பார்த்தான்….

அவளோ “மீண்டும் ஒரு கன்டிஷனா சரி சொல்லு..” என்று சலித்தபடியே சொன்னாள்.

அவளது சம்மதம் கிடைத்ததும் மீண்டும் பேசுவதைத் தொடர்ந்தான் அவன்.

“எக்காரணத்துக் கொண்டும் இவங்க ரெண்டு பேரும் நம்ம கூட தான் தங்கி இருக்காங்கனு வைபவ்க்கு தெரியக்கூடாது.வைபவ்வை பொறுத்த வரை நீயும் நானும் தனியா தான் இருக்கிறோம். கூட இரண்டு பேர் இருக்காங்கனு அவனும் தெரியக்கூடாது. ” என்று அவன் சொல்ல குழப்பத்துடன் சரி என்று சொல்லி தலையாட்டி வைத்தவள் எதிரில் நின்று கொண்டு இருந்த இருவரையும் பார்த்து நட்பாக புன்னகைத்தாள்.

உத்ரா நேராக ஆதிராவை நோக்கி வந்தாள். அவளை  ஏதோ சுற்றுலாத்தளம் போல  மேலும் கீழும் சுற்றிப் பார்த்தாள். பின்பு ஏதோ யோசித்தாள்.பின்னர் வேக வேகமாக வினய்யின் அருகே சென்று அவன் காதுகளில்  ஏதோ சொல்லி வைத்தாள்.என்ன சொன்னாளோ தெரியவில்லை. ஆனால் அதைக் கேட்ட வினய்யோ அவள் காதுகளைத் தேங்காயைப் போல துருவத் தொடங்கிவிட்டான்.

” அடியே உத்ரா அடங்க மாட்டியா. வாய் ரொம்ப நீளமா ஆகிடுச்சு.” என்றான் செல்லக் கோபத்துடன்.

” ஆமாம் வினய் அண்ணா வாய் நீலமாகிடுச்சு. வார்த்தை எல்லாம் பச்சை பச்சையா ஆகிடுச்சு. கெட்ட பொண்ணு அண்ணா இந்த உத்ரா ” என்று அவன் பக்கத்து குற்றப் பத்திரிக்கை வாசித்தான் ப்ரணவ்.

“அடேய் ப்ரணவ்… நானா கெட்டவ???. நீ தான் டா கேடு கெட்டவன்..” என்று அவனைத் திரும்பி திட்டியவள் மீண்டும் வினய்யை நோக்கினாள்…

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா வினய் அண்ணா? இப்போ நான் உங்க காதுல வந்து ஒரு கேள்வி கேட்டேன் இல்லை.அதைக் கேட்க சொல்லி என் கிட்டே சொன்னதே இந்த கேடு கெட்டவன் தான்.” என்று உத்ரா அவனை மாட்டிவிட வினய் அவனது காதுகளையும் பிடித்து துருவ ஆரம்பித்தான்.

” ஐயோ வினய் அண்ணா போதும் போதும் நாங்க என்ன தேங்காய் பெத்தையா??. இப்படி பிடிச்சு துருவுறீங்க. வரப் போற அண்ணி முன்னாடி எங்களை அவமானப்படுத்தாதீங்க அண்ணா” என்று ப்ரணவ் கெஞ்ச,  போனால் போகட்டும் என்று இருவரையும் விட்டான் வினய். இது தான் சாக்கு என்று இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

ஆதிரா மெதுவாக வினய்யின் அருகில் வந்தாள். தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

” என்ன ஆச்சு மேடம்க்கு ஏன் இப்படி தயங்குறீங்க??”

” இல்லை உத்ரா உங்க காதுல என்ன சொன்ன??”

” அது சிதம்பர ரகசியம் ஆதிரா.வெளியே சொல்லக்கூடாது. ” என்றவன் சொல்லியபடியே நேராக மாடியை நோக்கிக் கையை காண்பித்தான். அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

” அது தான் உன்னோட ரூம் ஆதிரா. பக்கத்துலயே உத்ரா ரூம் மும் இருக்கு. சோ உனக்கு ஏதாவது உதவி வேணும்னா அவளைக் கேட்டுக்கலாம் அப்புறம் ஒரு விஷயம், இந்த மாடிப்படியில  என் கால் கூடப்படாது அதனாலே  நீ தைரியமா இருக்கலாம்.” என்று சொல்லியவன் ப்ரண்வ்வை அழைத்து அவளது பெட்டிகளை மேலே வைக்க சொன்னான்.

அவன் எல்லா பெட்டியையும் எடுத்துக் கொண்டு முன்னே நகர அவன் பின்னே அந்த மாடிப்படிகளில் ஏறினாள் ஆதிரா.

” அண்ணி நான் கீழே அண்ணா ரூம்க்கு பக்கத்துல தான் இருப்பேன். நீங்க எந்த உதவினாலும் தயங்காம என்னைக் கூப்பிடலாம். ” என அவன் சொல்ல நட்பாக புன்னகைத்தாள்.

” ப்ரணவ் ஒரே ஒரு ஹெல்ப். அண்ணினு மட்டும் கூப்பிட வேண்டாமே எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு. ” என்றவளது குரலிலும் சங்கடம் இழைந்து இருந்தது…

” எனக்கு வினய் எப்படி அண்ணாவோ அதே மாதிரி நீங்க காதலிக்கிற வைபவ்வும் அண்ணா தான் அண்ணி. இப்போ உங்க சங்கடம் போயிடுச்சா? நான் அண்ணினு கூப்பிடுறதுல ஏதாவது அப்ஜெக்ஷன் இருக்கா??” என்று ப்ரணவ் கேட்க இல்லை என்று மறுத்தாள். அவன் எல்லா பெட்டியையும் அங்கே வைத்துவிட்டு சிறுபுன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

அந்த அறையை தன் கண்களால் அளந்தாள். அந்த அறையே மினி வீடு போல இருந்தது. அந்த தரையே முகம் பார்க்கும் கண்ணாடி அளவிற்கு சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தது.

எதிரே கபோர்ட் இருக்க அதை சென்று 

திறந்தாள். அங்கே அவளுக்கு தேவையான எல்லா உடைகளும் முன்னமே அடுக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஒவ்வொரு உடையும் சுமார் ஐயாயிரத்திற்கு மேலாகவே இருக்கும் என்று பார்க்கும் போதே தெரிந்தது.

அங்கே இருந்த உடைகளை எல்லாம் வேகமாக வெளியே எடுத்து அப்புறப்படுத்தியவள் தான் கொண்டு வந்து இருந்த சாதாரண உடைகளை அந்த கபோர்டில் அடுக்கினாள்.

அந்த ஆடம்பர உடைகள் அனைத்தையும் ஒரு கவரில் போட்டு தனியாக எடுத்து வைத்தவள் நேராக அந்த அறையின் பால்கனிக்கு சென்றாள்.

அங்கே வீசிய குளிர்காற்று அவளை வரவேற்றது.

அங்கிருந்து பார்க்கும் போது ஒட்டு மொத்த கொடைக்கானலே சிறிய புள்ளியாக தோன்றியது. தூரத்தில் ஒரு அருவி தென்பட்டது. வெள்ளியை உருக்கிவிட்டாற் போல வழிந்துக் கொண்டு இருந்தது, அதன் மேல் இருந்து விழும் நீர். சுற்றி இருந்த  பனிக்கூட்டங்கள் அவள் உடலை மெதுவாக துளைத்துக் கொண்டு இருந்தது.

அந்த இயற்கை அந்த அமைதியான சூழல், அவளை ஒரு மோன நிலைக்கு கொண்டு செல்ல அமைதியாக கண்ணை மூடி ரசித்துக் கொண்டு இருந்தாள்.

திடீரென ஆதிரா என்று யாரோ அழைக்க பட்டென்று கண்களைத் திறந்தாள்.

அவள் நின்று கொண்டு இருந்த பால்கனிக்கு நேர் கீழாக வினய் நின்று கொண்டு இருந்தான்.

” எப்படி இருக்கு இந்த இடம் பிடிச்சு இருக்கா??” என்று அவன் கேட்க அவனது கேள்வி தான் காதுகளிலேயே விழாததைப் போல வேகமாக அங்கிருந்து சென்றவள் அந்த துணிப்பை நிறைந்த பையோடு திரும்பி வந்து அதே இடத்தில் நின்றாள்.

வினய் அவளையும் அவள் கைகளில் இருந்து பாலித்தீன் கவரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருந்த நேரம் திடீரென அவள் மேலே இருந்து அந்த பையை அவன் முகத்துக்கு நேராக வீசி எறிந்தாள். அவன் முகத்தில் அவளுக்காக அவன் பார்த்து பார்த்து வாங்கிய ஆடைகள் விழுந்துக் கிடந்தது. எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவளைப் பார்த்தான். அவளோ  ரௌத்திர பார்வை அவன் மீது வீசினாள்..

“எனக்கு இந்த துணியும் வேண்டாம். நீயும் வேண்டாம்.” என்று கோபமாக சொல்லிவிட்டு பால்கனி கதவை பட்டென அடைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தவன் இதழ்களோ ” என் கோவக்காரி ” என்று செல்லமாக முணுமுணுத்தது…

வானும் பூமியும்

   அங்கே இங்கே …

இரண்டையும் சேர்க்கும்

   மழைத் துளி

எங்கே எங்கே…

   வேரோடு ஊடல்

கொள்ளாதே மலரே…

   உன்னை குளிர்விக்கும்

குளிர்காற்று இங்கே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!