காதல் சதிராட்டம்-20

நறுமலரின் வாசத்தை உண்ட தென்றல் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக மலை தேவியின் மடியை தேடி சுழன்று சுழன்று வந்துக் கொண்டு இருந்தது.

ஆனால் அந்த குளிர்த் தென்றலை தங்கள் உடலில் தழுவிக் கொள்ள விரும்பாத அந்த வீட்டின் கதவுகளோ பாராமுகத்தை அதற்கு பரிசாக தந்து அந்த காற்றை வழியனுப்பி கொண்டு இருந்தது.

என் சுகந்தமான வருடலை உள்ளே அனுமதிக்க முடியாதபடி அந்த கதவு ஏன் தன்னை மூடிக் கொண்டு இருக்கிறது என்று புரியாமலேயே அந்த காற்றும் அந்த வீட்டைக் கடந்து போனது.

அந்த கதவிற்கு பின்னால் நின்றுக் கொண்டு இருந்த அந்த இருவர் முகத்திலும் பதற்றம் ஏகத்திற்கு வழிந்தோடிக் கிடந்தது.

அவர்களின் முகத்தினில் தன்னை தாக்க வருபவற்றைக் கொன்றுவிடும் தீவிரம் தெரிந்தது.

“உத்ரா உன் கையிலே ஆயுதம் ரெடியா இருக்கு இல்லை… நம்மளை அட்டாக் பண்ணும் போது ஒரே போடா போட்டு கொன்னு புதைச்சுடணும்… ”

“கண்டிப்பா ப்ரணவ். உன்னைத் தாக்குன அந்த கும்பலுக்கு சாவு என் கையிலே தான்…. ”

“வெரி குட் உத்ரா…  காதை நல்லா ஷார்ப் பண்ணி வெச்சுக்கோ… எனக்கு யாரோ நம்மளை அட்டாக் பண்ண நம்மளை நோக்கி வரா மாதிரி சவுண்ட் கேட்குது…. ”

“எனக்கும் அப்படி தான் கேட்குது ப்ரணவ்….” என்று உத்ரா சொல்லி முடித்த அந்த நொடி அவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருந்த அந்த எதிரியைப் பார்த்ததும் இருவரின் கண்களும் கூராகியது. அழுத்தமான குரலுடன் ப்ரணவ் சொன்னான்.

“உத்ரா என்ன ஆனாலும் நம்ம உடம்புல இருந்து ஒரு துளி இரத்தம் கூட இழந்துடக்கூடாது. உடம்பை இரும்பா வெச்சுக்கோ.நம்மளை தாக்க வரது கொஞ்சம் பயங்கரமான எதிரி… ” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்த எதிரி இவர்களை நெருங்கிவிட்டது.

இரண்டு இறக்கைகளை தன் உடம்பினில் ஒட்டிக் கொண்டு நான்கு கால்களை தரையினில் பிடிமானத்திற்காக வைத்துக் கொண்டு ஒரு கொடுக்கை தன் ஆயுதமாக வைத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருந்தது அந்த கொசு.

“உத்ரா உத்ரா… கொசு  பேட்டை ஆன் பண்ணு டி.. இன்னைக்கு காலையிலே நான் அயர்ன் பாக்ஸ்ல வாங்குன அந்த சூட்டை அந்த கொசுவும் வாங்கனும். கமான் அட்டாக்… ” என்று ப்ரணவ் பேசிக் கொண்டு இருக்க உத்ராவிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை.

எதுவும் பேசாமல் இப்படி அமைதியாய் இருப்பது உத்ராவின் குணம் அல்லவே. என்ன ஆயிற்று இவளுக்கு என்ற கேள்வியுடன் ப்ரணவ் திரும்ப அவளோ பரிதாபமான முகத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவளது முகத்தையும் கொசு பேட்டினையும் மாற்றி மாற்றிப் பார்த்தவனுக்கு அவள் சொல்லாமலேயே புரிந்துப் போனது.

” போச்சா… ” என்றான் இவனும் பரிதாபமாக.

“ஆமாம் ப்ரணவ்… நேரம் பார்த்து இந்த கொசு பேட் பழி வாங்கிடுச்சு…  சார்ஜ் இல்லை டா… ”

“சரி கொசு பேட் இல்லைனா என்ன தன் கையே தனக்குதவி. இந்த கொசுவை எப்படி என் கையாலே நசுக்கி சாகடிக்கிறேனு மட்டும் பாரு… ” என்றவன் சூப்பர் ஹீரோவைப் போல துள்ளிக் குதித்துக் கொண்டு அந்த கொசுவின் பின்னால் ஓடினான்.

இரண்டே எட்டில் அந்த கொசுவை தன் கையில் பிடித்துக் கொண்டவனது முகம் வில்ல பாவனையை பொருத்திக் கொண்டது.

அந்த கொசுவையே வில்லச் சிரிப்போடு பார்த்தவன் உத்ராவை நோக்கி வெற்றி பாவனையை காட்டினான்.

“உத்ரா உத்ரா சக்சஸ் சக்சஸ். பிடிச்சுட்டேன் பிடிச்சுட்டேன்.  எவ்வளவு திமிர் இருந்தா என் முன்னாடியே கெத்தா பறந்து வந்து இருக்கும். என்னைப் பத்தி தெரியாம அட்டாக் பண்ண வந்துடுச்சு ப்ளடி கொசு, என் ப்ளட்டை குடிக்க… அதுவும் இந்த க்ரேட் ப்ரணவ்வோட ரத்தத்தை… இன்னைக்கு அதோட ப்ளட்டை நான் குடிக்க போறேன்… ரத்தத்துக்கு ரத்தம்… பழிக்குப் பழி… ”

“அடச்சை இந்த கொசு பேட் சரியான டைம்ல வேலை செய்யாம போயிடுச்சு… இல்லாட்டி நானே ஒரு போடு போட்டு இருப்பேன்… உன் கேவலமான பஞ்ச் எல்லாம் கேட்டு இருக்க வேண்டிய நிலைமை வந்து இருக்காது… ஒழுங்கா பஞ்ச் டயலாக் பேசாம அந்த கொசுவைப் போட்டு தள்ளு… ”

“உத்தரவு ராஜமாதா… இந்நேரத்துக்கு என் உள்ளங்கை பிசைந்த பிசையிலேயே அந்த கொசு செத்துப் போய் இருக்கும். பாருங்கள் தாயே இந்த உயிரற்ற கொசுவை.. ” என்று உள்ளங்கையை விரிக்க அந்த கொசுவோ குளுக்கோஸ் உண்ட நோயாளிப்  பட்டென்று புத்துணர்ச்சி பெற்றதுப் போல வேகமாக பறந்துப் போனது.

பறந்துப் போன அந்த கொசுவையே அவன் பரிதாபமான முகத்தோடு பார்த்துவிட்டு உத்ராவைப் பார்க்க கொலைவெறியோடு துடைப்பத்தை வைத்து  முறைத்துக் கொண்டு இருந்தாள்.

“உத்ரா வேண்டாம் டி.. வலிக்கும் டி… நான் பாவம் இல்லையா? ”

“இல்லை.. ” என்று சொல்லிவிட்டு அவள் அடிக்கத் துரத்த இவனோ ஓடிக் கொண்டு இருந்தான்.

அந்த நேரம் பார்த்து ஆதிரா தன் அறையில் இருந்து இறங்கி கீழே வந்துக் கொண்டு இருக்க தற்காப்புக்காக அவளின் பின்னே ஒளிந்துக் கொண்டான் ப்ரணவ்.

“அண்ணி நல்ல நேரத்திலே வந்தீங்க… ப்ளீஸ் அண்ணி இந்த கொடிய மிருகத்துக்கிட்டே இருந்து என்னைக் காப்பாத்துங்க.” என்று அவன் கேட்க ஆதிராவோ ” எப்போ பார்த்தாலும் இந்த கொடிய மிருகத்துக்கிட்டே இருந்து உன்னைக் காப்பாத்துறதே எனக்கு வேலையா போச்சு. ஆமாம் இந்த வாட்டி என்ன கோளாறு பண்ண?”

“அண்ணி அதை நான் சொல்றேன்… இந்த எருமை மாடு ஒரு கொசுவைக் கூட கொல்ல துப்பு இல்லாம பறக்க விட்டுட்டேன். அந்த எருமையை நாலு சாத்து சாத்துனா எனக்கு திருப்தியாகும். கொஞ்சம் தள்ளுங்க அண்ணி… ” என்று உத்ரா சொல்ல ஆதிராவின் முகத்தினில் பூத்த முறுவல் இப்போது புன்னகையாக வெடித்தது.

“ஒரு கொசுவுக்கா இவ்வளவு அப்பறை.. காலையிலே கொசுவாலே அயர்ன்பாக்ஸ்ல சூடு வாங்கிட்டான். இப்போ சயாந்திரத்திலே அதே கொசுவாலே இப்போ உன் கிட்டே நாவாலே சூடு வாங்கிக்கிட்டான். போதும் உத்ரா குழந்தையை மன்னிச்சு விட்டுடலாம்… ” என ஆதிரா சமாதானம் பேச உத்ராவும் சமாதானமானாள்.

இந்த சமாதனப் பேச்சு அதுவரை  முதுகுக்குப் பின்னால் பதுங்கி இருந்த ப்ரணவ்வை இப்போது தைரியமாக வெளிக் கொணர செய்தது.

“ஹே உத்ரா போய் கொசு பேட்டை சார்ஜ் போட்டு வை… இன்னைக்கு நைட்டு மறுபடியும் கொசு வேட்டைக்கு போகலாம். போ போ டைம் வேஸ்ட் பண்ணாம சார்ஜ் போடு… ” என்று அவன் பேச ஆதிரா இருப்பதனால் எதுவும் பேசாமல் அவனை முறைத்தபடி சார்ஜ் போட சென்றவள் அப்படியே வெளியே கடைக்கு ப்ரணவ் அறியாமல் கிளம்பிவிட்டாள்.

அவளை அங்கே இருந்து  துரத்திவிட்டு   ஆதிராவின் பக்கம் திரும்பினான். அவள் கைகளில் அப்போது தான் மீன்தொட்டி இருப்பதையே கவனித்தான்.

“அண்ணி உங்க ஏஞ்சல் ரொம்ப க்யூட்டா இருக்கா…. எப்போல இருந்து  ஏஞ்சல் மேடம் உங்க கூட இருக்காங்க?”

“நான் வேலைக்கு சேர்ந்ததுல இருந்து ஏஞ்சல் என் கூட  தான் இருக்கா… இவள் கூட தான் என் சந்தோஷத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்துப்பேன்…. என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் இவள்…  ”

“சூப்பர் சூப்பர் அண்ணி… ஆமாம் ஏஞ்சல் உங்க கிட்டே வந்த நாளை சொல்ல முடியுமா… ”

“என் கிட்டே அக்டோபர் 1 2016 ல வந்தா ப்ரணவ்… “

“ஆக இப்போ ஏஞ்சல்க்கு இன்னும் ஒரு வாரத்துல அஞ்சு வயசு ஆகப் போகுதா அண்ணி… ” என்று அவன் கேட்க அவளோ ஆமாம் என்று தலையாட்டினாள்.

“செம செம அண்ணி… ” என்று சொல்லிவிட்டு ப்ரணவ் ஏஞ்சலைக் கொஞ்சி கொண்டு இருக்க ஆதிராவின் குரல் தயங்கி தயங்கி வெளியே வந்தது.

“ப்ரணவ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?  ஏஞ்சல்க்கு ஃபுட் இல்லை. கடைக்குப் போகும் போது வாங்கிட்டு வர முடியுமா?” என்று தயக்கமாக கேட்டவளைப் பார்த்ததும் ப்ரணவ் லேசாக கோபமானான்.

“அண்ணி என்ன அண்ணி நீங்க… போய் வாங்கிட்டு வா டா னு உரிமையா சொல்லாம இப்படி தயங்கி தயங்கி கேட்டுக்கிட்டு இருக்கீங்க… ” என்று சொல்ல ஆதிரா புன்சிரிப்போடு அவனைப் பார்த்தாள்.

“இல்லை ப்ரணவ்.. எனக்குனு உரிமை எடுத்துக்க யாரும் என் வாழ்க்கையிலே இல்லை… எனக்கு ஹெல்ப் கேட்கவும் பிடிக்காது… இரக்கம் காட்டுனாலும் பிடிக்காது… இப்படியே வளர்ந்துட்டேன். என்னை மீறி தயக்கம் வெளிப்பட்டுடுது. இனி கண்டிப்பா உன் கிட்டே தயங்க மாட்டேன் ப்ரணவ். ” என்று சமாதானம் சொன்னாள்.

“வெரி குட் அண்ணி… கண்டிப்பா வாங்கிட்டு வந்து தரேன்.  அப்புறம் அண்ணி உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்… வெளியிலே தோட்டத்துலே போய் பேசலாமா? உள்ளே லைட்டா புழுக்கமா இருக்க மாதிரி இருக்கு… ”

“கண்டிப்பா பேசலாம் ப்ரணவ்… ” என்று சொல்லிவிட்டு அந்த மீன் தொட்டியை டேபிளின் மேல் வைத்துவிட்டு ப்ரணவ்வுடன் நடந்தவள் ப்ரணவ் சொல்லியதை ஆமோதித்தாள்.

“ஆமாம் ப்ரணவ்.. இந்த கொடைக்கானல் குளிர் காத்துல கூட நம்ம வீடு கொஞ்சம் அனலா தான் இருக்கு.. எனக்கு என்னவோ ரொம்ப பழைய வீடா கொஞ்சம் மரவேலைப்பாடு அதிகமா இருக்கிறதாலே தான் இப்படி வெக்கையா இருக்கேனு தோணுது.. ஆனால் நீங்க ஏன் வீட்டை ரினெவேட் பண்ணாமயே வெச்சு இருக்கீங்க… ” என்று கேள்வியாக ப்ரணவ்வைப் பார்த்தாள்.

தன் நடையை நிறுத்திவிட்டு ஆதிராவைப் பார்த்தவன்

” இந்த வீட்டில நிறைய நினைவுகள் இருக்கு அண்ணி… தாத்தா பாட்டியோட நினைவுகள். நாங்க குடும்பமா ஒன்னா இருந்த நினைவுகள் எல்லாமே இருக்குனு அண்ணா சொல்லுவாங்க. பட் அந்த டைம்ல நான் ரொம்ப சின்ன பையன். எனக்கு பாட்டி தாத்தா முகம் கூட நியாபகத்துல இல்லை. பட் அண்ணாவுக்கு எல்லாம் அச்சுல பதிச்சு வெச்சா மாதிரி நியாபகம் இருக்கு… இந்த வீட்டில ஒரு பொருளை அசைக்கக்கூடாதுனு சொல்லிட்டே இருப்பாங்க.  ஆனால் நானும் உத்ராவும் சேர்ந்து ஒரு வாட்டி தெரியாம  வீட்டோட கதவை உடைச்சுட்டோம். அன்னைக்கு அண்ணா ஆடின தாண்டவத்தை நினைச்சா நான் இன்னைக்கு கூட உச்சா போயிடுவேன். என்னையும் உத்ராவையும் வெளுத்து வாங்கிட்டாங்க.. அந்த கதவு மாதிரி எங்கேயும் கிடைக்கலனு அதுக்கு பதிலா கண்ணாடிக் கதவை வெச்சுட்டு எங்களைப் பார்த்து முறைச்ச அப்போ என் குலையே நடுங்கிடுச்சு.  இந்த வீட்டில ஒரு பொருளை உடைச்சாளோ இல்லை நொறுக்கினாளோ எங்களை அருவாள்மனையிலே வெச்சு சீவிடுவேனு மிரட்டுன அண்ணா எங்களுக்கு ரொம்ப புதுசு அண்ணி… அப்போ தான் புரிஞ்சுக்கிட்டோம் அண்ணாவுக்கு இந்த வீடும் அந்த பொருட்களும் எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுது… ” என்று பேசி முடித்தவன் மீண்டும் நடக்க ஆரம்பிக்க அவன் சொன்ன கண்ணாடி கதவை வந்து அடைந்தனர்.

அந்த கண்ணாடி கதவைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் ஆதிரா கவனமாக அந்த கதவை மென்மையாக வருடியபடி கடந்து சென்றாள்.

அவனுக்கு பிடித்த ஒன்றை தான்  எக்காரணம் கொண்டும் உடைத்துவிடக்கூடாது என்ற எண்ணம் அவளையும் மீறி அவளுள் எழுந்தது.

அந்த கதவைத் திரும்பிப் பார்த்தவள் அதன் ஊடாக மேஜையினில் மீது வைத்த தன் ஏஞ்சலை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பிய நேரம் ப்ரணவ்வின் கேள்வி அவள் முன் விழுந்தது.

“அண்ணி நான் ஒன்னு கேட்பேன் என்னை தப்பா எடுத்துக்காதீங்க. எதுக்காக அண்ணி வினய் அண்ணா கூட இருக்க உங்களுக்கு விருப்பமே இல்லைனாலும் ஒத்துக்கிட்டீங்க. ” என்று கேட்க ஆதிராவின் இதழ்களோ சோகத்தில் வளைந்தது.

அதுவரை பற்றி இருந்த அந்த கண்ணாடி கதவை பிடிமானமின்றி விட அது சாத்தி கொண்டது. அதற்கு முன் கிடைத்த இடைவெளியில் பூனை வீட்டிற்குள் நுழைந்ததை இருவருமே கவனிக்கவில்லை.

ஆதிராவின் முகம் சோகத்தை தாங்கி இருக்க ப்ரணவ்விற்கோ ஏன் இந்த கேள்வியை கேட்டோம் என்றானது.

“அண்ணி விடுங்க.. உங்களுக்கு சொல்ல பிடிக்கலைனா வேண்டாம்… எனக்குள்ளே சில கேள்விகள் முரண்பாடா மனசை குடைஞ்சுட்டு இருந்தது.. அதுக்கு பதில் தெரியுறதுக்காக தான் கேட்டேன்… ” என்று கேட்க ஆதிராவின் இதழ்களிலோ இன்னும் விரக்தி புன்னகை கூடியது.

“எனக்கும் நிறைய முரண்பாடுகள் மனசை குடைஞ்சுக்கிட்டு தான் இருக்கு ப்ரணவ். எப்படி தான் காதலித்த பொண்ணை நல்லவானா இல்லை கெட்டவனானு கூட தெரியாத ஒருத்தன் கிட்டே யோசிக்காம அனுப்புவான்னு நிறைய வாட்டி யோசிச்சு இருக்கேன் ப்ரணவ். ஆனால் அவன்  “நான் உன்னை நம்புறேன்னு ” போன்ல சொன்ன ஒரே வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி என்னை சமாதானம் பண்ணிப்பேன். ஆனால் இப்போ அப்படியும் சமாதனப்படுத்த முடியாத படி வைபவ் என்னை இக்கட்டுல நிறுத்திட்டான். அவன் என்னை சந்தேகப்படுறானு எனக்கு தோணுது ப்ரணவ்… ” என்றவளின் கண்களில் கண்ணீர்த் தடம்.

“ஐயோ அண்ணி… அழாதீங்க ப்ளீஸ்…  அது வைபவ் உங்க மேலே வெச்ச  காதலோட  பொசஸ்சிவ்நெசா கூட இருக்கலாம். உங்களை சந்தேகப்படுறாங்கனு நீங்களே நினைச்சுக்காதீங்க ப்ளீஸ் அண்ணி அழாதீங்க. ” என்ற ப்ரணவ்வை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“இது தான் சாக்கு என்று எண்ணி வைபவ்வைப் பற்றி குறை சொல்லி வினய்யைப் பற்றி பெருமையாக சொல்லி அவள் மனதை மாற்ற முயற்சிப்பான் ” என்று அவள் எண்ணி இருக்க ப்ரணவ்வோ அதற்கு பதிலாய் வைபவ்விற்கு வக்காலத்து வாங்கி தன் கண்ணீரை குறைக்க முயற்சிப்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டு பார்த்தாள்.

ஆதிராவின் முகமே அவள் எண்ணத்தை வெளிப்படையாக காட்டிவிட அதைக் கண்டு கொண்ட ப்ரணவ் மெதுவாக சிரித்தான்.

“அண்ணி எனக்கும் சரி.  இல்லை வினய் அண்ணாவுக்கும் சரி. உங்களோட கண்ணீர் தான் முக்கியம் அதை தவிர்த்து எதுவும் இல்லை. நீங்க நல்லா இருக்கணும் அண்ணி. ஆனால் நீங்க யார் கூட இருந்தா நல்லா இருப்பீங்கன்ற முடிவை நீங்க தான் எடுக்கணும். அதுல தலையிட அண்ணாவுக்கும் சரி இல்லை எனக்கும் சரி எந்த உரிமையும் இல்லை… ” என்று சொன்னவன் ஆதிராவைப் பார்த்து மீண்டும் அதேக் கேள்வியைக் கேட்டான்.

“சரி சொல்லுங்க அண்ணி… நீங்க இந்த அக்ரீமெண்ட்க்கு ஒத்துக்க என்ன காரணம்?”

“வைபவ்வோட அம்மா ஒரு முக்கியமான தேவை இருந்ததாலே நாலு மாசத்துலே திரும்ப தராத சொல்லி ஐந்து லட்ச ரூபாய் கட்டப்பஞ்சாயத்துக்காரங்க கிட்டே வாங்கி இருந்தாங்க. ஆனால் நாலு மாசத்துலே பணத்தை வைபவ்வாலே திருப்ப முடியல. அந்த கட்டப்பஞ்சாயத்துக்காரன் வீட்டுக்கு வந்து வைபவ்வோட தங்கச்சிப் பத்தி அவன் குடும்பத்தைப் பத்தி எல்லாம் தப்பா பேச ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அந்த கட்டப்பஞ்சாயத்துக்காரன் கிட்டே இருந்து தப்பிக்க வைபவ் இங்கே அவசரமா பணத்தை ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.  அவங்க ரூம்மேட்ஸை நம்பி பணத்தை வைக்கப் பயந்து அவர் ரெடி பண்ண பணத்தை எல்லாம் என் கிட்டே கொடுத்து வெச்சு இருந்தாங்க. கடைசியா மிச்சம் இருந்த ஐம்பதாயிரத்தையும் ரெடி பண்ண வைபவ், என்னை மீதி நாற்பத்தைந்தாயிரம் ரூபாயும் எடுத்து வர சொன்னாரு. நானும் போனேன். ஆனால் வழியிலே பணம் திருடுப் போயிடுச்சு. ” என்று சொன்னவளது கண்களில் அந்த நாளைய துயரத்தின் கண்ணீர் பெருகியது.

“மறுபடியும் சொன்ன தேதியிலே பணத்தைக் கொடுக்க முடியாததாலே கட்டப்பஞ்சாயத்துக் காரங்க வீட்டுலே புகுந்து எல்லா பொருளையும் எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சுட்டாங்க. வைபவ் மறுபடியும் பணத்தை எப்படி ரெடி பண்றதுனு தவிச்சுட்டு இருந்த நேரம் தான்  வினய் என் கிட்டே அந்த அஞ்சு லட்சத்தை நான் செட்டில் பண்ணிடுறேன் பட் அவன் கூட இருக்கணும்னு அக்ரீமென்ட் போட்டான்.
நான் வைபவ் கிட்டே வினய் இப்படி பண்ணிட்டான் அவன் முன்னாடி அந்த அக்ரீமென்ட்டை தூக்கி எறிஞ்சுட்டு வரப் போறேனு மெசேஞ் பண்ணிட்டு வினய் வீட்டிற்கு வந்தேன். பட் வைபவ் போன் பண்ணி என்னை ஒத்துக்க சொல்லி கட்டாயப்படுத்துனான்.  இப்படி எல்லாம் நடந்ததுக்கு நான் தான் காரணம்னு சொல்லி என்னை குறை சொன்னான். கடைசியா என்னை நம்புறேன்னு ஒரு வார்த்தை சொன்னான்… அந்த ஒரே வார்த்தைக்காக தான் எனக்கு பிடிக்காத ஒருத்தன் கூட இங்கே தங்கியிருக்க ஒத்துக்கிட்டேன்… ” என்று ஆதிரா சொல்லி முடிக்க ப்ரணவ் ஆதிராவையே பார்த்துக் கொண்டு இருந்தான்…

 

செய்யாத தப்பிற்கு அண்ணியை குற்றம் சாட்டி இருக்கின்றான் என்று வைபவ்வின் மீது ஏகத்துக்கு கோபம் வந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் ஆதிராவைப் பார்த்தவன்

” அண்ணி வெளியே குளிர ஆரம்பிச்சுடுச்சு… வாங்க வீட்டுக்குள்ளே போய் ஏஞ்சல் கூட விளையாடலாம்..”என்று அவள் கவனத்தை கலைத்து வீட்டிற்குள் செல்ல திரும்பிய நேரம் வினய்  வீட்டிற்குள் நுழைந்து கொண்டு இருந்தான். அவன் கையினில் பாலீத்தின் கவர்கள் வீற்று இருந்தது.

என்ன அண்ணா கவர்ல ” என்று ப்ரணவ் கேட்க  அவனின் முன்பு அந்த கவரை நீட்டி ” இதுல ஏஞ்சல்க்கு ஃபுட் இருக்கு ஆதிரா கிட்டே கொடு” என்று நீட்ட ப்ரணவ் அதை வாங்கி ஆதிராவின் கைகளில் கொடுத்துவிட்டு வீட்டிற்குள்ளே செல்ல நடந்தான்.

அவனோடு ஆதிராவும் வினய்யும் இணைந்துக் கொண்டு கண்ணாடி கதவின் அருகே செல்ல அங்கே கண்ட காட்சி அவர்களை திடுக்கிட வைத்தது.

மேஜையினில் வைக்கப்பட்டு இருந்த மீன்தொட்டிற்குள் பூனை ஒன்று தன் தலையை நுழைத்துக் கொண்டு இருந்தது.

அதைக் கண்டவுடன் ஆதிரா கதற ஆரம்பித்துவிட்டாள்.

“ஐயோ ஐயோ என் ஏஞ்சலை ஒன்னும் பண்ணிடாதே. வெளியே வந்துடு ப்ளீஸ். எனக்கு பிடிச்ச எல்லாரையும் இழந்துட்டேன்.ப்ளீஸ் என் ஏஞ்சலையும் என் கிட்டே இருந்து பறிச்சிடாதே..” என்று கண்ணை மூடிக் கொண்டு கதறியவள் டமார் என்ற சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

வினய் கொஞ்சம் கூட யோசிக்காமல் அருகில் போடப்பட்டு இருந்த நாற்காலியை எடுத்து அவன் ஆசை ஆசையாக பராமரித்த அந்த வீட்டின் கண்ணாடி கதவை உடைத்து எறிந்தான். அந்த கண்ணாடி பட்டு பல பொருட்கள் சில்லு சில்லாக தரையின் மீது விழுந்து சிதறியது.

அவன் செயல் அதுவரை அவள்  சிந்திக் கொண்டு இருந்த கண்ணீரை சட்டென்று நிறுத்தியது.

தன் கண்ணீரை தாங்க முடியாமாலா இப்படி செய்தான் என்று அவனையே விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டு இருந்தவள் மனதினில் ஏஞ்சலைப் பற்றிய நினைப்பு கூட சற்று நேரம் எழவில்லை.

அவனையே அவள் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அந்த பூனையை மேஜையில் இருந்து கீழே வைத்துவிட்டு ஏஞ்சலை தூக்கிக் கொண்டு வந்து ஆதிராவின் கைகளில் திணித்தான்.

தனக்கு பிடித்த யாரையும் இழந்துவிடக்கூடாது என்று நான் சொல்லிய ஒரு சொல்லுக்காக அவனுக்குப் பிடித்த அந்த வீட்டின் பொருட்களை அவனே உடைத்து நொறுக்கி இருக்கின்றானா? என்று அவனையே செயலற்றுப் போய் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.

கல்லாக தான்

    வைத்து  இருக்கின்றேன்

என் இதயத்தை

   அதில் உன் முகத்தை

சிற்பமாக செதுக்குவதற்காக…