காதல் சதிராட்டம் 29a

மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்துக் கொண்டு இருந்த ஆதிராவையே ப்ரணவ்வும் உத்ராவும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அவளுடைய கைகளில் பேக் இல்லை.

ஆக ஆதிரா இங்கிருந்து செல்லும் முடிவெடுக்கவில்லை என யூகித்த இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகை முறுவல் பூத்தனர்.

ஆனால் அந்த முறுவலை சிதைக்கும்படி ஆதிராவின் குரல் இடைப்பட்டு ஒலித்தது.

“ப்ரணவ் இன்னையோட முப்பது நாள் முடியப் போகுது. நான் இங்கே இருந்து கிளம்பலாம்னு முடிவு எடுத்து இருக்கேன் ” என்று ஆதிரா சொல்ல ப்ரணவ்வின் முகம் திகைத்துப் போனது.  உத்ராவின் கண்களில் நீர்கோர்த்துக் கொண்டது.

தடுத்து பேச வழியில்லாமல் செயலற்றுப் போய் அவளைப் பார்த்தனர்.

அவளுக்கு அவர்களது பார்வை வலியைக் கொடுத்தாலும் ஆறுதல் படுத்த வழியற்று நின்றாள்.

அவர்களது முகம் பார்க்காமலே எங்கே வினய் என்றுக் கேட்க இருவரது கைகளும் வினய்யின் அறையை சுட்டிக் காட்டியது.

ஆதிரா தயங்கியபடி அந்த அறையை நோக்கி நடந்து செல்ல இங்கோ உத்ராவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்க் கொட்டியது.

“ப்ரணவ் எல்லாம் முடிஞ்சு போச்சா! அவ்வளவு தானா? அண்ணா முகத்திலே பல நாள் கழிச்சு வந்த சந்தோஷம் இனி மேல் இருக்காதா?” என்றுக் கண்ணீர் குரலோடு கேட்டவளுக்கு அங்கிருப்பதே மூச்சு முட்டுவதுப் போல தோன்ற வெளியே ஓடினாள்.

அவள் பின்னாலேயே ப்ரணவ்வும் ஓடினான், வீட்டிற்கு பின்னால் இருக்கும் நதிக்கு.

“ஹே உத்ரா அழாதேடி. எனக்கு நெஞ்சை பிசையுறா மாதிரி இருக்கு.” என்று ப்ரணவ் சொல்லியபடி அவளை அணைக்க அவனை மேலும் இறுக்கிக் கொண்டவள் ” ப்ரணவ் நாம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்.” என்று குண்டைத் தூக்கிப் போட்டாள்.

ப்ரணவ் குழம்பிப் போய் அவளைப் பார்க்க “அண்ணா மட்டும் வருத்தத்திலே இருக்கும் போது நம்ம மட்டும் சந்தோஷமா இருக்கிறது எனக்கு சரினு படல. அதனாலே நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம். கா விட்டுக்கலாம்.” என்று உத்ரா சொல்ல ப்ரணவ்வின் முகத்திலோ லேசாக புன்னகை படர்ந்தது.

அவளை மேலும் இறுக்கிக் கொண்டவன்  “சரி சரி நாம ரெண்டு பேரும் பிரிஞ்சுப் போயிடலாம். “என்றான் சொல் வேறு செயல் வேறாக.

“அண்ணா, சந்தோஷமா இருக்கிற வரை நாமளும் சந்தோஷமா இருக்கக்கூடாது ஓகே வா?” என அவள் மேலும் அவனை இறுக்கி அணைத்த படி சொல்ல ” ஓகே ஓகே” என்று அவன் உதட்டில் புத்த புன்முறுவலை மறைத்தபடி சொன்னான்.

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு ப்ரணவ்.. என்னை எங்கேயாவது கூட்டிட்டு போறீயா?” என அவள் கேட்க ப்ரணவ்வும் அவள் மனதை மாற்ற வெளியே அழைத்துச் சென்றான்.

இங்கே ஆதிராவோ வினய்யின் அறையின் முன்பு தயங்கி நின்றுக் கொண்டு இருந்தாள்.

கதவு தட்டும் அளவிற்கு கூட அவளிடம் பலமில்லை.

ஆனால் உள்ளிருக்கும் வினய்யிற்கு வெளியில் இருந்த ஆதிராவின் இதயத்துடிப்பு கேட்டு இருக்கும் போல பட்டென்று கதவைத் திறந்தான்.

எதிரில் தவித்த முகத்துடன் ஆதிரா.

முன்பு இருந்த உறுதி அவளிடம் இல்லை. ஒரு தயக்கம் சூழ்ந்தபடி இருந்தவளை கதவில் சாய்ந்துக் கொண்டு அவனும் பார்த்தான்.  பின்பு தீர்க்கமான குரலில் சொன்னான்.

“எனக்கு தெரியும் ஆதிரா உன் முடிவு என்னனு, என்னை விட்டுப் போக போறேனு நீ சொல்லித் தான் எனக்கு புரிய வைக்கணும்னு அவசியம் இல்லை.” என்று அவன் சொல்ல ஆதிரா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.

“எனக்கு சொல்லாமலேயே உன்னைப் புரியும் ஆதிரா. ” என்றான் பதிலாக.

“இந்த முப்பது நாள் ஒப்பந்தம் போடும் போதே எனக்கு உன் முடிவு என்னனு தெரியும் ஆதிரா. உண்மையா நான் எந்த எதிர்பார்ப்பும் வைக்கல. அதனாலே அதிகமா நான் உடைஞ்சும் போகல” என்று வினய் சொல்ல ஆதிரா உடைந்துப் போய் அவனைப் பார்த்தாள்.

என்ன தான் அவன் உடையவில்லை என்று அவளுக்காக சொன்னாலும் அந்த கண்கள் வலியைக் காட்டிக் கொடுத்தது.

அதைப் பார்த்தவள் கண்ணீர் கலந்த குரலோடு சொன்னாள்.

“வினய் நீ எவ்வளவு நல்லவன் தெரியுமா? கண்டிப்பா உன் நல்ல மனசுக்கு  நல்ல பொண்ணு கிடைப்பா, ஆனால் அது  நான் இல்லை. நான் உன்னைக் காயம் மட்டும் தான் படுத்தி இருக்கேன். நான் வேண்டாம் வினய் உனக்கு. உனக்கான தேவதை கண்டிப்பா உன்னைத் தேடி வந்துட்டு இருக்கா. ” என ஆதிரா சொல்லும் போது குரல் உடைந்தது.

அவன் வேறொரு பெண்ணுடன் நின்றால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று பதறிய மனதைக் கண்டு அவள் பதறினாள்.

அவன் வேறு ஒரு பெண்ணுடன் நிற்க நேர்ந்தால்  எனக்கு ஏன் வலிக்க வேண்டும் என்று குழம்பியவளின் முகத்தை வினய் ஆழமாகப் பார்த்தான்.

பின்பு மெதுவான குரலில் ” ஆதிரா,நம்ம அக்ரீமென்ட் இன்னைக்கு சயாந்திரம் ஆறு மணிக்கு தான் நம்ம ஒப்பந்தம் முடியுது. அதனாலே இப்பவே இப்படி அழுகாச்சியா இருக்க வேண்டாம். போறதுக்கு முன்னாடி காலத்துக்கும் நினைச்சுப் பார்க்கிற மாதிரி நல்ல நினைவுகளை உருவாக்கலாமே. ” என வினய் சொல்ல ஆதிராவின் முகத்தில் சிரிப்பு சாயல்.

கண்களில் வழியத் தயாராக இருந்த கண்ணீரை அவள் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.

எனக்கு தெரியும்
   என்  காதல்
தோற்றுப் போகும் என்று
   ஆனாலும் காதல் செய்தேன்
நினைவோடு வாழ்வதற்காக…

“ஓகே வினய் ” என்றாள் மெதுவாக.

“சரி வா. ஏதவாது ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிட்டு ஏதாவது டீவி பார்க்கலாம் ” என்று சொல்லி அவன் சமையல் அறைக்குள் நுழைய அவனும் அவள் பின்னாலேயே சென்றாள்.

கிச்சனுக்குள் நுழைந்தவன் பாப்கார்ன் செய்ய போக அவளும் உதவிக்கு வந்தாள்.

ஆனால் அவளது கைக்காயத்தை காட்டி வேண்டாம் என்று தடுத்தவன் எல்லா வேலையையும் முடித்துவிட்டு கையில் பாப்கார்னோடு வெளியே வந்து டிவியை ஆன் செய்தான்.

பக்கத்தில் ஆதிரா அமர்ந்தாள்.

அவன் வரிசையாக ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டு வர ஒரு சேனலில் தெரிந்த திரை மட்டும் அவனை அடுத்து மாற்ற முடியாதபடி தடை செய்தது.

அதில் அவனும் ஆதிராவும் அன்று கொடுத்த நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.

அதை ஆதிரா ஆனந்த அதிர்ச்சியாக பார்க்க வினய்யும் அதே மனநிலையுடன் தான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

இருவரும் பாப்கார்ன் சாப்பிட்டபடி அந்தத் திரையைப் பார்த்துக் கொண்டு இருக்க இங்கே வைபவ்வோ அந்த நிகழச்சியைப் பார்த்து பாப்கார்ன் போல் வெடித்துக் கொண்டு இருந்தான்.

அவர்கள் இருவரும் சந்தோஷமாக பாடுவதைப் பார்த்து உள்ளம் கொதித்தது.

அவனது இதயத்தில் ஏற்பட்ட கோபம் அவனை தடம் மாற வைத்தது.

இப்போதே அவர்கள் இருவரையும் நேராக சென்று அவர்களை சொற்களால் காயப்படுத்த வேண்டும் முடிவெடுத்தவன் ஆதிரா அவனுக்கு எழுதிக் கொடுத்த விலாசத்தைத் தேடி எடுத்துக் கொண்டு அங்கே புறப்பட்டுவிட்டான்.

இது அறியாமல் இருவரும் அந்த பேட்டியை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அடுத்து அவள் கைகளால் அந்த செடிக்கு தண்ணீரை ஊற்றி ஆதுரமாக வருடிவிட்டாள்.

பின்பு வினய்யிற்கு இறுதி பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவனை வெளியே அழைத்துச் சென்றாள்.

அவனுக்காக ஒரு அழகிய வாட்சை வாங்கி அவன் கைகளில் கட்டிவிட்டாள்.

பின்பு இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

அந்த வீட்டை தன் கண்களால் ஆழ படமெடுத்துக் கொண்டாள்.

தான் இருந்த, சிரித்த, கோபப்பட்ட இடங்களை எல்லாம் புன்னகையுடன் மனதினுள் சேமித்துக் கொண்டவள் கைக்கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள்.

மணி ஆறை நெருங்கி இருந்தது.

தயக்கமாகவும் சோகமாகவும் திரும்பி வினய்யைப் பார்த்தாள்.

“நீ எல்லாத்தையும் எடுத்து வைச்சு ரெடியா இரு ஆதிரா. நான் உன்னைக் கொண்டு போய் விடுறேன். ” என வினய் சொல்ல ஆதிராவின் கண்கள் அந்த அறையை அலசியது.

“ப்ரணவ்வும் உத்ராவும் எங்கே? நான் கிளம்பும் போது அவங்க இல்லாம இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கும்”  என்றாள் ஆதிரா அவனைப் பார்த்து சோகமாக.

“நான் போன் பண்ணி ரெண்டு பேரையும் எங்கே இருந்தாலும் கிளம்பி வர சொல்றேன். நீ கவலைப்படாம எல்லாத்தையும் எடுத்து வை.” என்றவன் அவர்களுக்கு அழைக்க முயற்சித்தான்.

இருவருது மொபைலும் நாட் ரீச்சபிலில் இருந்தது.

அறைக்குள் சென்ற ஆதிரா எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு கடைசியிலும் கடைசியாக அந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தாள்.

அந்த காகிதத்தை கைகளால் தடவிப் பார்த்தாள்.

வினய்யின் நேசத்தை செயலால் பார்த்தவளுக்கு எழுத்தாகவும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளூற எழும்பியது.

மொத்தத்  திராணியையும் ஒன்று திரட்டி அந்த கடிதத்தைப் படிக்க முனைந்த நொடி அப்போது தான் அவளது கண்களில் ஏஞ்சலின் அசைவற்ற நிலை தென்பட்டது.

ஓடிச் சென்று அந்த கண்ணாடியைத் தட்டினாள் ஆனால் ஒரு அசைவும் இல்லை.

பதறிப் போனவள் ஏஞ்சல் ஏஞ்சல் என்று கத்தி வேகமாகத் தட்டத் துவங்க
அவளது  கைகளில் இருந்த கடிதம்  அவளை விட்டுப் பறந்து மாடிப்படியின் வளைவுக்கு அருகே சென்றுவிட்டது.

அதை அவள் கவனிக்கவில்லை.

அவளின் கவனம் எல்லாம் ஏஞ்சலின் அசைவற்ற நிலையைப் பார்த்து தான்.

“ஏஞ்சல் ப்ளீஸ் என்னை விட்டு நீயும் போயிடாதே.  போயிடாதே. ” என்று புலம்பியபடியே தட்ட ஏஞ்சல் கண் திறந்து அவளைப் பார்க்கவில்லை.

ஆதிராவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

மடிந்துப் போய் அமர்ந்தவள் ” ஏஞ்சல் ” என்று சத்தமாக அலறினாள்.

அவளது அலறல் சப்தம் வினய்யின் காதுகளை அலற வைத்தது.

“ஆதிரா ஆதிரா. என்ன ஆச்சு?” என்று பதறினான் அவன்.

ஆனால் ஆதிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

பதட்டம் அவன் நெஞ்சத்தை அடைக்க அந்த படியில் கால் வைக்கப் போன நேரம் “எக்காரணம் கொண்டும் இந்த படியை நான் தாண்ட மாட்டேன். ” என்று ஆதிராவிற்கு கொடுத்த வாக்கு நியாபகம் வந்தது.

கடைசியிலும் கடைசியாக ஆதிரா என்று சப்தமாக அழைத்தாகப் பார்த்தான்.

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போகவே, கொண்ட தயக்கத்தை எல்லாம் உதறிவிட்டு வேக வேகமாக  படிகளில் தாவி ஏறினான்.

அங்கே ஆதிரா அந்த அறையின் ஒரு மூலையில் கால்களை மடித்துக் கொண்டு உணர்வற்று அமர்ந்து இருந்தாள்.

அவளை அப்படிக் கண்டதும் வினய்யிற்கு உள்ளம் வலித்தது.

அருகே சென்று ஆதிரா என்று அழைத்தான்.  அவளிடம் பதில் இல்லை.

மெதுவாக தோள் தொட்டான். அசைவு இல்லை.

கொஞ்சம் பலமாக உலுக்கினான். நிமிர்ந்துப் பார்த்தாள், கண்களில் வெறுமையுடன்..

அவளது நிலை ஏனோ அவனைப் பிசைந்தது ” என்ன ஆச்சு டா?” என்றான் பரிவாக.

“ஏஞ்சல்… ஏஞ்சல்,, ” என்று மேலும் சொல்ல முடியாமல் திணறினாள் அவள்.

திரும்பிப் பார்த்தான் வினய்.

பார்த்ததும் உணர முடிந்தது அவள் அழுகைக்கான காரணத்தை.

“ஆதிரா அதெல்லாம் ஒன்னும் இருக்காது டா.  வா நம்ம ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் காட்டலாம். ” என சொல்ல ஆதிரா கண்ணீரோடு மறுத்தாள்.

“ஏஞ்சல் கிட்டே துடிப்பே இல்லை. அவள் என்னை விட்டுட்டு போயிட்டா, என்னாலே உணர முடியுது வினய். ” என்று சொல்லி ஆதிரா கதறி அழ வினய் சட்டென்று அவளை அணைத்துக் கொண்டான்.

ஆதுரமாய் முதுகை வருடினான்.

ஆதிராவிற்கும் சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் தேவைப்பட அவளும்  சாய்ந்துக் கொண்டாள்.

“ஏஞ்சல் ஏன் என்ன விட்டுப் போனா வினய்? நான் நேசிக்கிற எல்லாரும் ஏன் என்னை விட்டுப் போயிடுறாங்கா?  இப்போ ஏஞ்சல் போனா… அடுத்து நீ போயிடுவே. ” என்று சொல்லியபடியே வினய்யை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.

வினய் அவள் கதறவலுக்கு பதில் பேசவில்லை.

அவள் வருத்தப்பட்டு அவனிடம் கொட்டும் எல்லா ஆற்றாமைகளையும்  அவளது கைவிரல்களை அழுந்தப் பற்றிக் கேட்டுக் கொண்டான்.

அது  அவளுக்கு அந்நேரத்திற்கு பெறும் ஆறுதலாய் ஆசுவசமாய் இருந்தது.

ஆனால் அந்த ஆசுவாசத்தை கலைக்கும் படி இடையில் ஒரு குரல் இடறி விழுந்தது.

“இங்கே என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கலாமா?” என முகத்தில் கொடுங் கோபத்தைப் பூசிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான் வைபவ்.

அவன் கைகளில் வினய் எழுதிய காதல் கடிதம்.