காதல் சதிராட்டம் – 8

பாம்பு போல வளைந்து கிடந்த அந்த மலைப்பாதையில் வழுக்கி சென்று கொண்டு இருந்தது அந்த கார்.

இதுவரை நகரப் போக்குவரத்துக்கே பழக்கப்பட்டு இருந்த ஆதிராவுக்கு இந்த பயணம் புதிதாக இருந்தது.

ஜன்னலின் அருகில் ஒட்டி உட்கார்ந்துக் கொண்டு சுற்றுப்புறத்தைப் பார்த்தாள். மலைகளின் அரசி அங்கே தன் அழகை ஏகத்துக்கும் இறைத்து வைத்து இருந்தாள். சுற்றி எங்கும் பச்சைப் பசேலாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.  காற்றில் கலந்து இருந்த அந்த குளுமை அவளுடைய உடலை துளைத்துக் கொண்டு சென்றது.

அந்த குளிரில் இருந்து தன்னை காத்துக் கொள்ள துப்பட்டாவால் தன் உடலை மூடிய நேரம் அவள் எதிரே வினய் ஸ்வெட்டரை நீட்டினான்.

அவன் கொடுத்து அதை வாங்க வேண்டுமா என்ற எண்ணம் தோன்ற அதை வாங்காமல் அவள் வெடுக்கென்று மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அந்த ஸ்வெட்டரை அவளது சீட்டுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு மீண்டும் காரை செலுத்துவதில் கவனமானான் அவன்.

நேரம் செல்ல செல்ல உடலைத் துளைத்துக் கொண்டு இருந்த அந்த பனிக்காற்று உயிரையே  உறைய வைக்கும் அளவிற்கு உருமாறிக் கொண்டு இருந்தது. இதுவரை நகரத்தின் சீதோஷன நிலைக்கு பழக்கப்பட்டு இருந்த ஆதிராவால் அந்த குளிரை தாங்க முடியவில்லை.

அவள் அணிந்து இருந்த அந்த மெல்லிய காட்டன் துணியால் அந்த குளிர்க்காற்றை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்தவள் மெதுவாக திரும்பி அந்த ஸ்வெட்டரை ஒரு முறைப் பார்த்தாள் வினய்யை ஒரு முறைப் பார்த்தாள்.

அந்த ஸ்வெட்டரை அவன் கொடுத்தபோது வீராப்பாக மறுத்துவிட்டு இப்போது அதை எடுத்தால் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பான் என்ற எண்ணம் தோன்ற ஸ்வெட்டரை நோக்கி நீண்ட தன் கைகளை வேகமாக திரும்ப இழுத்துக் கொண்டு மீண்டும் ஜன்னலோரம்  திரும்பிக் கொண்டாள்…

சிறிது நேரத்திலேயே குளிரை தாங்க முடியாமல் அவளது உடல் மெதுவாக நடுங்கத் தொடங்க அதை ஓரக் கண்ணால் கவனித்துவிட்டான் வினய்.

ஆதிராவை ஒரு முறைப் பார்த்தான். அவளது விரல் நுனி தீண்டப்படாத அந்த ஸ்வெட்டரை மறுமுறைப் பார்த்தான்.

இந்த ஸ்வெட்டரை அணிய கண்டிப்பாக அவளது தன்மானம் இடம் தராது என்பதை உணர்ந்தவன் எப்படி அவளை அணிய வைப்பது என்று எண்ணிக் கொண்டே வந்த நேரம் சாலையோரம் இருந்த டீக்கடை கண்ணில் அகப்பட்டது.

உடனே காரை நிறுத்தியவன் திரும்பி ப்ரணவ்வைப் பார்த்தான்.

” ஒரு டீ குடிச்சுட்டு போலாமா ப்ரணவ்??.. உனக்கு ஓகே வா??” என்னு வினய் கேட்க பலமாக முடியாது என்று தலையசைத்தான் ப்ரணவ்.

” நான் எக்காரணத்துக் கொண்டும் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன் அண்ணா… “

“ஏன்” என்ற கேள்வியோடு அவனையே குழப்பமாக பார்த்தான் வினய்.

” ஒரு டீ மட்டும் எனக்கு ஓகே இல்லைனா.. கூடவே பிஸ்கெட் அப்புறம் பப்ஸ் அப்புறம் பஜ்ஜி… அப்புறம் மசால் வடை அப்புறம்… ” என்று ப்ரணவ்வின் லிஸ்ட் நீண்டுக் கொண்டே போக இடையில் புகுந்தாள் உத்ரா.

” அப்புறம் அடுப்பு..  அப்புறம் செருப்பு… இன்னும் வேற என்னலாம் வேணும் உனக்கு… ” என்று உத்ரா கேட்க வினய்யும் ஆதிராவும் சத்தமாகவே சிரித்துவிட்டனர்.

ஆனால் ப்ரணவ் மட்டும் முகத்தை கோபமாக வைத்து இருந்தான்.

” உத்ரா இந்த நாளை உன் இத்துப் போன டைரியிலே குறிச்சு வைச்சுக்கோ… இதை விட ஒரு நல்ல மொக்கையா போட்டு நான் உன்னை பழி வாங்கல.. என் பேரு ப்ரணவ் இல்லைடி… ” என்று உணர்ச்சிகரமாக ப்ரணவ் பேசிக் கொண்டு இருக்க திடீரென உச்சு உச்சு என்று சப்தம் காதை துளைத்தது.

” அண்ணா நீங்க தான் டெய்லி காரை க்ளீன் பண்ணுவீங்களே. அப்புறம் எப்படி காருக்குள்ளே பல்லி வந்துச்சு.. ” என்று ப்ரணவ் குனிந்து காருக்குள் தேட உத்ரா அவன் தலையின் மீது தட்டினாள்…

” உச்சு கொட்டுனது பல்லி இல்லைடா… நான் தான் டா எருமை… “

” ஏ பெரிய சைஸ் பல்லி நீ தான்  உச்சு கொட்டுனீயா??.. நான் கூட நிஜ பல்லி தான் உச்சுக் கொட்டுச்சோனு நினைச்சேன். சரி சொல்லு எதுக்காக திடீர்னு உச்சுக் கொட்டூனீங்க மேடம்… “

” அது வந்து ப்ரணவ். இன்னைக்குனு பார்த்து என் டைரியை கொண்டு வர மறந்துட்டேனே.. அப்புறம் எதுல உன் சபதத்தை நோட் பண்றது?’

” இத்துப் போன அந்த டயரிக்குப் பதிலா செத்துப் போன பேன் இருக்கிற இந்த  மண்டையிலே குறிச்சு வைச்சுக்கோ.. ” என்று ப்ரணவ் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல உத்ரா டபுள் ஓகே என்று கையை உயர்த்திக் காண்பித்தாள்.

புன்னகையுடன் அவர்களது உரையாடலை ரசித்தவன் ” நீங்க இரண்டு பேரும் உங்க சொற்பொழிவை முடிச்சுட்டீங்களா இல்லை இன்னும் வேற ஏதாவது இருக்கா??. எப்போ டீ குடிக்கலாம்??” என்று வினய் கேட்க “இப்போவே” என்று கோரசாக கத்திய ப்ரணவ்வும் உத்ராவும் வேக வேகமாக காரில் இருந்து இறங்கி டீக்கடையை நோக்கி ஓடினர்.

அவர்கள் செல்வதையே முறுவலுடன் பார்த்தவன் ஆதிராவிடம் இறங்கும் படி கண் ஜாடை காட்ட வேகமாக காரில் இருந்து இறங்கியவள் அடித்து கதவை சாத்தினாள்.

அவளது செய்கையையே உதட்டில் வழிந்த குறுஞ்சிரிப்புடன் ரசித்தவன் தன்னுடைய அலைபேசியில் உத்ராவுக்கு வேகமாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவனும் அந்த டீக்கடையை நோக்கி சென்றான்.

மலைப்பாதையின் ஓரத்தில் அமைந்து இருந்தது அந்த டீக்கடை. அதன் ஓரத்தில் நின்றுக் கொண்டு  கீழே பார்த்த ஆதிராவுக்கு பிரம்மிப்பாக இருந்தது. சின்னஞ்சிறு குழந்தை வரைந்த சிறு சிறு புள்ளிகளாக சுருங்கி காட்சி அளித்தன பிரம்மாண்ட கட்டிடங்கள் எல்லாம்.

அருகில் இருந்து பார்க்கும் போது பெரியாதாக தெரியும் விஷயங்கள் எல்லாம் தொலைவில் இருந்துப் பார்க்கும் போது எவ்வளவு சிறியதாக மாறிவிடுகின்றது என்று எண்ணி பெருமூச்சுவிட்டவள் மனதுக்குள் திடீரென வைபவ்வின் உருவம் தோன்றி மறைந்தது.

வைபவ்வை விட்டு தொலைவில் வந்து இருக்கும்  நானும் இப்போது  வைபவ்வின் கண்களுக்கு சிறிய புள்ளியாக சுருங்கிவிடுவேனோ??… என்னை அவன் மறந்துவிடுவானோ??… என்ற குழப்ப பின்னல்கள் அவளை பாம்பு போல சுற்றிக் கொள்ளத் துவங்கியது.

இல்லை இல்லை அவன் அப்படி எல்லாம் என்னை மறந்துவிடுபவன் அல்ல. என்று அந்த பின்னல்களில் இருந்து வெளியே வர மனம் தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டது.  தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள மேலும் காரணங்களையும் தேடியது.

என்னை மறப்பவன் என்றால் காலையிலேயே எனக்கு தொலைபேசியில் பேச வேண்டும் என நினைப்பானா?? இல்லை நான் எடுக்க தாமதானதும் அந்த பிரிவு வேதனை உந்த என் மீது கோபப்பட கூட செய்வானா???

அந்த கோபத்தில் கூட எங்கேயோ காதலும் ஒளிந்துக் கொண்டு தானே இருந்தது..

என்னுடைய சிறு புறக்கணிப்பை கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபத்தில் ரீசிவரை கூட வைத்து விட்டானே… இந்த செயல்கள் எல்லாவற்றிலும் காதல் ஒளிந்துக் கொண்டு தானே இருந்தது..

ஆனால் நான் ஒரு முட்டாள்… அவன் அழைப்பை துண்டித்த பிறகு திரும்ப அவனுக்கு அழைக்கவே இல்லை. பாவம் அவன் வருத்தப்பட்டு இருப்பான் இல்லையா?? வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக அவனுக்கு அழைத்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரம் அவள் தோளை சுற்றி கனமான சால்வை துணிப் போற்றப்பட்டது.

“வேண்டாம் என்று மறுத்த பிறகும் எப்படி வலுக்கட்டாயமாக என் மீது திணிக்கின்றான் இவன்”  என்ற கோபத்துடன் வினய்யை திட்டுவதற்காக சட்டென திரும்பினாள்.

ஆனால் அங்கே எதிரே உத்ரா நின்றுக் கொண்டு இருந்தாள் சிறுப் புன்னகையுடன்.

” அண்ணி இந்த குளிரிலே எதுவும் ஸ்வெட்டர் போடாம இப்படியா நிப்பீங்க.. உடம்பு சரி இல்லாம போயிடும்… ஒழுங்கா இதைப் போத்திக்கோங்க… ” என்று உத்ரா கட்டளையிட்டபடி அவள் கைகளில் டீ கொடுக்க அதை மறுக்காமல் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

குளிரில் நடுங்கிய கைகளுக்கு அந்த தேநீரின் சூடு இதமாக இருந்தது. மிடறு மிடறாக விழுங்கியபடி அந்த இயற்கையின் எழிலை கண் குளிர ரசிக்கத் துவங்கி இருந்தாள்…

தூரத்தில் நின்று கொண்டு இருந்த வினய்யோ ஆதிராவையே கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டு இருந்தான்.

ஆதிராவின் அருகில் நின்றுக் கொண்டு இருந்த உத்ரா அவளுக்கு தெரியாமல் மெதுவாக தன் கட்டை விரலை உயர்த்தி வெற்றி என்று வினய்யை நோக்கி என்று காண்பிக்க வினய் பதிலுக்கு உத்ராவுக்கு ” தேங்க்ஸ் ” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் ஆதிராவைப் பார்க்க தொடங்கினான்.

மெல்ல மெல்ல அவனுடைய மனக்கண்களில்  முதன் முதலாக ஆதிராவைப் பார்த்த நாள் பெரியதாக  விரியத் தொடங்கியது.

ஏ பெண்ணே

   நீ குளிர் காய

என் காதலெனும்

   காடா கிடைத்தது??..

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நகர்ப்புறத்தின் மையத்தில் அமைந்து இருந்தது அந்த ஹாட் சிப்ஸ் கடை.

அந்த கடையின் உள்ளே இருந்து ” ஹாப்பி பேர்த்டே வினய்… வினய்… ” என்ற இரைச்சல் குரல்கள் தெருமுனை வரை கேட்டு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த பிறந்தநாளுக்கு சொந்தக்காரனோ தன்னை சுற்றி இருந்தவர்களை ஒரு திகிலோடுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆனால் அவனை சுற்றி இருந்தவர்களோ அவனது முகப்பாவனைகளை சிறிதும் லட்சியம் செய்யாமல் ” வினய் நீ பிறந்துட்ட… மச்சான் வினய் நீ பிறந்துட்ட… வினய் உனக்கு பிறந்தநாள்… மச்சான் வினய் உனக்கு பிறந்தநாள்… ஏன் மச்சான் நீ பிறந்த… எங்க உசுரை வாங்கவா நீ பிறந்த… அடி  வாங்க ரெடியா மச்சான்… என் ஆசை மச்சான் அடி வாங்க ரெடியா…வினய் உனக்கு பிறந்தநாள்…” என்று அவர்கள் பாடிய பிறந்த நாள் பாடலை புன்னகையுடனும் அடுத்து நடக்கப் போகும் சம்பவத்தை நினைத்து பீதியுடனும் கேட்டுக் கொண்டு இருந்தான் வினய்.

அவனுடைய கவலையை இன்னும் அதிகரிக்கும் வண்ணமாய் அந்த நேரம்  அவன் முன்னே கொண்டு வந்து வைக்கப்பட்டது ப்ளாக் கரண்ட் ஃப்ளேவர் கேக்.

வட்ட வடிவ கேக்கின் சுற்றுப்புறம் முழுக்க சிறிய சிறிய பூக்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நடுப்புறத்தில் இரண்டு குட்டி ஹார்ட்டின் போடப்பட்டு பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.

அதன் அழகை ரசித்துக் கொண்டே நின்று இருந்த வினய்யின் மீது சட்டென அந்த அழகிய கேக்கை கூழாக்கி முகம் முழுக்க வண்ணம் அடித்து வைத்து இருந்தனர் வினய்யின் நண்பர்கள். நொடிப் பொழுதில் அந்த கேக் கூழாக மாறி இருந்தது.

  ” ஏன்டா இப்படி வேஸ்ட் பண்ணீங்க??” என்று அவன் கோபமாய் திட்ட திரும்பிய நேரம் அந்த கடையில் பில்லிங் செலுத்தப்படுத்தப்படும் இடத்தில் நின்று இருந்த பெண் அவன் முகத்தையே ஒரு வித சோகத்துடன் பார்த்தாள்.

கண்களின் இடையில் விழுந்து மறைத்துக் கொண்டு இருந்த க்ரீமை விலக்கிவிட்டு அந்த பெண்ணை மீண்டும் பார்த்தான் ஆனால் அவளோ  அழுது கொண்டே ரெஸ்ட் ரூமிற்கு ஓடினாள்.

சற்று முன்பு அந்த கேக்கை புன்னகையுடன் கொண்டு வந்தது வைத்ததும் அதேப் பெண் தான்.

ஏன் அழுகிறாள் என்று புரியாமல் திகைத்தவனுக்கு நொடிப் பொழுதினுள்  அவளுடைய வருத்தம் கொஞ்சம் புரிந்தாற் போல இருந்தது.

அவளை சமாதானம் செய்து அவளுடைய பழையப் புன்னகையை இதழ்களில் கொண்டு வர வேண்டும் என உள்ளம் தவித்தது. ஆனால் சுற்றி இருந்த நண்பர்களோ இங்கு நடந்த எதையும் கவனிக்கவில்லை அந்த கேக்கையே படாதப்பாடு படுத்திக் கொண்டு இருந்தனர்.

” முகத்தை வாஷ் பண்ணிட்டு வந்து உங்களை வைச்சுக்கிறேன் டா… ” என்று சுற்றி இருந்த நண்பர்களை பார்த்து  திட்டியவன் வேகமாக  ரெஸ்ட் ரூம் பக்கம் ஓடினான்.

அந்த வாஷ் பேஷனின் அருகே கலங்கிய கண்களுடன் நின்று கொண்டு இருந்த அந்த பெண்ணைப்  பார்த்தபடி தன் முகத்தைக் கழுவியவன் டிஷ்யூ பேப்பரை எடுத்து மீதி க்ரீமை சுத்தப்படுத்தியபடி அவளை நோக்கித் திரும்பினான். கைகளைக் கட்டியபடி அவளது கண்களில் இருந்த கலக்கத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.

யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்தவள் சட்டென நிமிர்ந்துப் பார்த்தாள். எதிரே கைகளைக் கட்டியபடி தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்தவனை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அவனுடைய குரல் ஒலித்தது.

” சாரி… ” என்றவனது வார்த்தையில் அவனது மனதினில் இருந்த வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.

” அவள் எதற்கு??” என்றாள் குழப்பமாக.

“இல்லை நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்ச கேக்கை இப்படி ஒரு நொடியிலே வீணாக்கி உங்களை கஷ்டப்படுத்தியதுக்கு… உண்மையாவே சொல்றேன் கேக் நல்லா டேஸ்டா இருந்தது… ” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்

. அவனது வார்த்தைகளில் ஒரு இதம் இருந்தது… அதுவரை கண்களில் குவிந்து வெளிவாரமல் இமைகளுக்குள்ளேயே பொத்தி வைத்து இருந்த கண்ணீரை சட்டென கண்கள் உள்ளே இழுத்துக் கொண்டது.

உதட்டில் தோன்றிய குறுநகையுடன் “உண்மையாகவா??” என்றாள்.அவன் உண்மையாக தான் சொல்கிறானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக…

மெய்யாக தான் சொல்கிறேன் என்பதை
உணர்த்தும் படி உதட்டில் தோன்றிய புன்னகையுடன் தலையை மேலும் கீழுமாக அசைத்தான் அவன்.

அதைக் கண்டதும் அவள் முகத்தினில் இருந்த அந்த கடைசி சோகத்தையும் அவள் உதட்டினில் வழிந்த அந்த புன்னகை விழுங்கிவிட்டது. அவளது முகம் பிரகாசமானது.

” நான் பண்ண முதல் கேக் இதான்… அதான் ஒரு வித பதட்டத்தோடவும் ஆர்வத்தோடவும் செஞ்சேன்.. ஆனால் அந்த கேக் டேஸ்ட்டே பண்ணாம இப்படி வீணா போயிடுச்சேனு தான் கஷ்டம்  ஆகிடுச்சு… ஆனால் நீங்க சொன்ன அப்புறம் அந்த வருத்தமும் போயிடுச்சு… உண்மையாவே அந்த கேக் நல்லா தான் இருந்ததா???” என்று இந்த முறை அழுத்திக் கேட்டாள்.

தன்னைப் புன்னகைக்க வைப்பதற்காக ஒரு வேளை பொய் சொல்கின்றானா?? என்ற சந்தேகத்தில் தான் இத்தனை முறை அதேக் கேள்வியை கேட்கிறாள் என்று புரிந்தவன் இதழுக்குள் மெல்லியதாய் ஒரு புன்னகைக் கீற்று உருவாகியது.

” சத்தியமா நல்லா இருந்தது… நான் பொய் சொல்லல..அதுவும் அந்த சுத்தி இருந்த பூ பார்க்கிறதுக்கும் சாப்பிடுறதுக்கும் அருமையா இருந்தது… அப்படியே வெண்ணெய் மாதிரி சருக்கிக்கிட்டு உள்ளே போச்சு… எனக்கு கேக்கை முகத்துல பூசினாலே சட்டுனு கோபம் வரும்… ஆனால் இந்த முறை சட்டுனு கோபம் வரல… ” என்று சொல்லிக் கொண்டே சென்றவன் மேலும் முடிக்காமல்  அவளைப் பார்த்து நிறுத்தினான்.

” அப்போ என் கேக் நல்லா இல்லைன்றதாலே தான் உங்களுக்கு சட்டுனு கோவம் வரலையா… ” என்று வருத்தத்தை தேக்கி வைத்த குரலில் கேட்டாள்.

அவளைப் பார்த்து புன்னகையுடன் மறுத்தவன் ” நல்லா இருந்ததாலே தான் சட்டுனு கோபம் வரல. அந்த கேக்கோட டேஸ்ட்ல ஒரு நிமிஷம் மெய் மறந்து நின்னேன்றது தான் உண்மை. உண்மையா நீங்க நல்லா கேக் பண்றீங்க… ஆல் தி வெரி பெஸ்ட் டூ யுவர் அப்கம்மிங் கேக்ஸ்… ” என்று அவளை வாழ்த்தியவன் தன் நண்பர்களை நோக்கி வந்தான்.

அவன் அங்கு வந்தது தான் தாமதம்…அவனது நண்பர்கள் அவனுக்கு கொடுப்பதற்காக தயாராக வைத்து இருந்த birthday bumps என்னும் அடியை கொடுக்கத் துவங்கிவிட்டனர்.

எல்லோருடைய அடியையும் தாங்குமரம் போல தாங்கிக் கொண்டு இருந்தவனை ஒரு ஐந்து நிமிடம் போட்டு பாடாய் படுத்தி எடுத்துவிட்டு அவனது நண்பர்கள் போய் தொலைடா என்பதைப் போல பாவம் பார்த்து விட்டுவிட்டவர்கள் சோர்ந்து போய் தொப்பென வரிசையாக சேரில் அமர்ந்தனர்.

“மச்சான் டேய் உன்னை அடிச்சு அடிச்சு எங்களுக்கு டயர்ட் ஆகிடுச்சுடுடா.. ஒரு கோக் சொல்லுடா… “

” ஏன்டா என் மூக்கை உடைச்சிட்டு உனக்கு இப்போ கோக் கேட்குதா… “

” ஹே வினய் பையா… எப்போ டி.ஆர் கிட்டே அசிஸ்டென்ட்டா சேர்ந்த??….ரைமிங்கலாம் டைம்மிங்ல பக்காவா வருதே மேன் உனக்கு… “

” எல்லாம் கடவுளோட ஆசிர்வாதம் மச்சான்… ” என்று பேசிக் கொண்டு இருந்தவர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.

அவர்களது செயலில் குறும்பு இருந்தாலும் அதன் பின்னால் இழையோடிருந்த அந்த பாசமும் அவளது விழிகளுக்கு தென்பட்டது… அவர்களையே  இமைக்க மறந்துப் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அவளை நோக்கி வினய் நோக்கி வந்து கொண்டு இருந்தான்.

அவன் கையில் சிறியதாக ஒரு ஸ்டிக்கி நோட்ஸ் இருந்தது… (அதாவது துண்டு சீட்டு… ) அந்த துண்டு சீட்டை பில்லிங் இடத்தில் நின்று கொண்டு இருந்த அவளை நோக்கி நீட்டினான்… அதை பெற்றுக் கொண்டவள் வாசித்துப் பார்க்க ” தேங்க்ஸ் ஃபார் யுவர் கேக்” என்று எழுதி இருந்தது.

அதைப் பார்த்து புன்னகைத்த  அவள் ஏற்கனவே அவனுக்காக எழுதி வைத்து இருந்த இன்னொரு ஸ்டிக்கி நோட்ஸை எடுத்து நீட்டினாள்.

அதில் ” happy birthday to a great soul… ” என்று எழுதி இருந்தது. அதைப் பார்த்ததும் இதழ்களில் குறுஞ்சிரிப்பு வழிந்தோடியது..

” தேங்க்ஸ்… ” என்றான் மனதாராக.

“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்… ” என்றாள் இவள் இனிதாக.

அதற்குள் அவனது நண்பர்கள் பட்டாளம் அவனை சுற்றி வளைத்துவிட சிறு தலையசைப்புடன் அவளிடம் இருந்து விடைப் பெற்றுக் கொண்டான். அவளும் சிறு தலையசைப்போடு அவனை வழியனுப்பி வைத்தாள்.

இன்னும் இரண்டே வாரத்தில் அவளை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே அவளை கடைசி முறையாக திரும்பிப் பார்த்தவன் விழிகளில் அவள் உருவத்தையும் புன்னகையையும் சேமித்தபடி அந்த கடையினில் இருந்து வெளியேறினான்.

💐💐💐💐💐💐💐

அன்று கல்லூரியே ஜெகஜோதியாக இருந்தது. முதலாமாண்டு மாணவர்களை வரவேற்பதற்கான ஃப்ரெஷர்ஸ் டே படு உற்சாகமாக நடந்துக் கொண்டு இருந்தது. அவர்களை குஷிப்படுத்துவதற்தாக தன் கிட்டாரோடு அரங்கத்திற்குள் வினய் நுழைந்துக் கொண்டு இருந்த நேரம் அவனது காதுகளை வந்து நிறைத்தது ஒரு இனிமையான குரல்.

அன்பென்ற மழையிலே 
    அகிலங்கள் நனையவே என்ற பாடல்வரியைப் பாடிக் கொண்டு இருந்த குரல்  யாழிசையும் குயிலிசையும் தோற்கடித்துக் கொண்டு இருந்தது.

இந்த பாடலை தன் குரலால் பாடி ஆசிர்வதித்தப் பெண் யார் என்ற ஆவலோடு  வினய் நிமிர்ந்துப் பார்த்த நேரம் அங்கே அந்த ஹாட் சிப்ஸ் கடையில் பார்த்த பெண் நின்று கொண்டு இருந்தாள்.

அவளையும் அவளது குரலையும் இமைக்க மறந்துப் பார்த்து நின்று கொண்டு இருந்தவனை சுற்றி இருந்த நண்பர்கள் ” மச்சான் டேய் மச்சான் டேய்… என்ன ஆச்சுடா.. ஏன் அப்படியே நின்னுட்டே… ” என்று தட்டி உலகுக்கு கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டு இருந்ததைப் போல ப்ரணவ்வும் முயற்சி செய்துக் கொண்டு இருந்தான்…  அவன் மாய உலகில் சிக்கித் தவிக்கின்றான் என்பது புரியாமல்…

” அண்ணா என்ன அண்ணா ஆச்சு??.. ஏன் இப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்கீங்க… சீக்கிரமா தலையாறு ஃபால்ஸ் போயிடலாம் அண்ணா… இல்லைணா இருட்டிடும்… “என்ற ப்ரணவ்வின் குரல் அவனை நடப்புக்கு இழுத்துக் கொண்டு வந்து இருந்தது… யோசனைக் கலைந்தவன் எதிரில் பார்த்தான்…

எதிரே ஆதிரா உத்ராவுடன் பேசிக் கொண்டு இருந்தாள்… அவளையே சில விநாடிகள் பார்த்தவன் பின் ஒரு பெருமூச்சுடன் ப்ரணவ்வின் பக்கம் திரும்பி ” இருட்டுறதுக்குள்ளே தலையாறு ஃபால்ஸ் போயிடலாம் டா.. எல்லோரும் வண்டியிலே ஏறுங்க ” என்று சொல்லி முடித்த நேரம் எல்லோரும் காரினில் ஏறி அமர கார் தலையாறு அருவி நோக்கி விரைந்துக் கொண்டு இருந்தது.

   வெண்ணிலவே நீ
   யார் வானை
அலங்கரிக்க பிறந்து  இருக்கிறாய்…