காதல் சதிராட்டம் epi

காற்றில் கலந்து வந்துக் கொண்டு இருந்த அந்த தேன்குரலைக் கேட்க கேட்க  வினய்யின் இரத்த செல்களில் எல்லாம் புன்னகை மலர்கள்.

தென்றல் காற்றில்  பொன்துகள்கள் இழைந்தாற் போல மிதந்து வந்த அந்த எழில் குரலின் தெவிட்டாத அழகில் லயித்து இருந்தான் வினய்.

நிஜமே கலையாதே
   நினைவில் கலக்காதே
சிரிப்பில் உருக்காதே

சட்டென்று சிரிப்பேன்
   ஏன் என்காதே
 சட்டென்று அழுவேன்
  ஏன் என்காதே

மையிட்ட கண் கலைந்தால்
    ஏன் என்காதே
கையிட்ட வளை வீழ்ந்தால்
    ஏன் என்காதே…

பட்டென்று கன்னம்
  மருதாணி  வரைந்தால்
ஏன் என்காதே
  பட்டென்று கால்
கோடு வரைந்தால்
   ஏன் என்காதே

கண்ணோடு கண் பார்த்தால்
   ஏன் என்காதே
காதோடு காதல் சொன்னால்
    ஏன் என்காதே

என்று பாடி முடித்தபடி வினய்யைக் காதலோடு பார்க்க அவன் கண்களிலோ காதல் கரைபுரண்டு கொண்டு இருந்தது.

இருவரும் காதல் லோகத்தில் லயித்துக் கிடந்த நேரம் அங்கே கூடியிருந்தவர்களின் கைத்தட்டல் ஒலி அவர்களை பூலோகத்திற்கு கொண்டு வந்தது.

அவள் வினய்யைப் பார்த்து கண்களால் எப்படி பாடி இருக்கிறேன் எனக் கேட்க அவன் உதடு குவித்து சூப்பர் என்றான் சைகையிலேயே.

அவனது பதிலைக் கேட்டு குளிர்ந்துப் போன மனதை மேலும் குளிர்வித்தனர்,
அந்த போட்டியின் நடுவர்கள் அவள் தான் அந்த போட்டியின் வெற்றியாளார் என்று அறிவித்து.

இதற்கு முன்பு நடந்த போட்டியில் அவள் கோப்பையை ஜெயித்து இருந்தால் அவளுக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு இசையமைப்பாளர் கையில் இருந்து மட்டும் தான் கோப்பையை வாங்கி இருந்து இருப்பாள்.

ஆனால் இன்றோ தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத பெரும் இசையமைப்பாளர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரு சேர முடிவெடுத்து தன்னை சிறந்த பாடகியாக அறிவித்தது அவளைப் பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருந்தது.

அவள் முகத்தினில் இருந்த சந்தோஷத்தை விட வினய்யின் முகத்தில் தான் பெரும் சந்தோஷம் கூடியிருந்தது.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தவனின் முகத்தையே மனதினுள் நிறைத்தபடி ஒரு கையில் வெற்றிக் கோப்பையும் மறு கையினில் மைக்கை வாங்கினாள்.

“நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை சிறந்த பாடகியா அறிவிச்சது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த கோப்பை எனக்கு கிடைச்சதுக்கு முக்கியமான காரணம் வினய் தான். அவன் தான் என்னோட குரு. என்னோட காதல். என்னோட வாழ்க்கை. என்னோட எல்லாமே… இந்த கோப்பையை நான் அவன் கையிலே இருந்து வாங்கிக்க ஆசைப்படுறேன். ” என்று சொல்ல அந்த போட்டியின் தொகுப்பாளர்கள் வினய்யை மேடைக்கு அழைத்தனர்.

அவன் புன்னகையுடன் மேடையில் ஏறினான்.  அவளைக் காதலோடு பார்த்தவன் அந்த வெற்றிக் கோப்பையை அவளது கைகளில் கொடுத்தான்.

இதற்கு முன்பு கிடைக்காத பெரும் நிறைவு வினய்யின் கைகளில் இருந்து கிடைத்த விருதில் அவளுக்குக் கிடைத்தது.

அந்த நிறைவோடு கீழே இறங்கியவளை ஐஸ்வர்யா இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“அன்னைக்கு நான் அந்த கோப்பையை கையிலே வாங்குன அப்போ  வராத சந்தோஷம் இப்போ உன் கையிலே இருக்கிற கோப்பையைப் பார்த்ததும் வருது. இப்போ தான் ஐ யம் ரியலி ஹேப்பி.. ” என்ற ஐஸ்வர்யாவை பதிலுக்கு அணைத்துக் கொண்டாள் ஆதிரா.

வைபவ் தயக்கமாக அவளுக்கு வாழ்த்து சொல்ல கையை நீட்டினான்.

ஓரிரு நொடிகள் தயங்கிய ஆதிரா பின்பு ஒரு சிறு முறுவலுடன் அவன் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டாள்.

இதைக் கண்ட ஐஸ்வர்யாவின் முகத்திலும் வினய்யின் முகத்திலும் புன்னகை விரிந்தோடியது.

“அண்ணி மாஸ் பண்ணிட்டிங்க போங்க. கங்கிராட்ஸ் கங்கிராட்ஸ் அண்ணி. ” என்றபடி உத்ராவும் ப்ரணவ்வும் ஒரு சேர அவளை அணைத்துக் கொண்டனர்.

எல்லாருடைய வாழ்த்திலும் ஆதிரா திக்குமுக்காடிக் கொண்டு இருந்த நேரம் வைபவ் மெதுவாக வினய்யின் அருகில் வந்தான்.

அவன் தேகம் தயக்கத்தைத் தத்தெடுத்து இருந்தது.

மிக மெல்லிய குரலில் “என்னாலே இத்தனை நாள் உங்களை ஏறெடுத்துக் கூட பார்க்க முடியல வினய். உங்களுக்கும் உங்க காதலுக்கும்  பெரிய துரோகம் பண்ணிட்டேன். ஐ யம் சாரி. ” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.

“எனக்கு உங்க மேலே பெருசா வருத்தம் இவ்லை வைபவ். I can understand you. தனக்கு பிடிச்ச ஒருத்திக்கு தன்னைப்  பிடிக்க வைக்கிறதுக்காக நீங்க பொய் சொல்லிட்டீங்க. ஆனால் நீங்க எவ்வளவு நாள் அந்த பொய்யைக் காப்பாத்த முடியும்? எவ்வளவு நாள் நடிக்க முடியும்? உங்க காதலுக்காக நீங்க அவங்களுக்கு பிடிச்சா மாதிரி மாறணும்னு அவசியம் இல்லை. உங்களை உங்க இயல்போட அவங்களுக்கு பிடிக்க வைக்கணும். அப்படி இல்லாம நம்ம காதலை அடைய பல பொய் சொன்னா அந்த பொய்யே நம்மளை அழிச்சுடும்” என்ற வினய்யின் வார்த்தையில் இழைந்து இருந்த உண்மை வைபவ்வை பதில் பேச முடியாதபடி தலை குனிய வைத்தது.

“உங்க மேலே எனக்கு கோபம் மட்டும் தான் வைபவ். ஆதிராவை வருத்தப்பட வைக்கக்கூடாதுன்றதுக்காக தான் எந்த உண்மையும் சொல்லாம இருந்தேன். ஆனால் நீ என் ஆதிராவை வார்த்தையாலே குத்தி கிழிச்சுட்ட” என்று குற்றம் சாட்டினான் வினய். இப்போதும் வைபவ்வால் எதுவும் பேச முடியவில்லை. அவனுடைய குனிந்த தலை நிமிரவே இல்லை.

வைபவ் தான் பேசிய சொற்களுக்காக உண்மையாகவே  வருந்துவது வினய்யிற்கு புரிந்தது.

இதற்கு மேலும் வைபவ்வை காயப்படுத்த அவனுக்கு விருப்பமில்லை.

மெதுவாக வைபவ்வின் தோளின் மீது கையைப் போட்டான். அந்த செய்கையில் வைபவ் நிமிர்ந்துப் பார்த்தான்.

“இதுக்கு மேலே நம்ம பழைய விஷயத்தை எதுவும் கிளற வேண்டாம் வைபவ். Let us start new beginning. ப்ரெண்ட்ஸ். ” என்று சொல்ல “மாப்ளே ” என்று சந்தோஷமாக சொல்லியபடி வைபவ் அவன் தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டான்.

இருவருக்குமான நட்பின் அத்தியாயம் அந்த நொடியில் இருந்து அழகாய் ஆரம்பித்தது.

சுற்றி இருந்த கூட்டத்தையும் அவர்கள் ஆதிராவுக்கு சொன்ன வாழ்த்துக்களையும் கவனித்துக் கொண்டு இருந்த ப்ரணவ்வின் கைகளை சீண்டினாள் உத்ரா.

“டேய் ப்ரண்வ்வு”

“சாரி நான் டேய் ப்ரணவ் இல்லை. நைட் ப்ரணவ்.”என்றவனது மொக்கை புரிய உத்ராவிற்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. புரிந்ததும் அவன் தலையில் பலமாக தட்டினாள்.

“Day ப்ரணவ்னு கூப்பிட்டா night ப்ரணவ்னா சொல்ற?  அடக் கருமம் பிடிச்சவனே… எங்க டா இப்படி மொக்கையா காமெடி பண்ண கத்துக்கிட்டே. “

“உன் கிட்டே இருந்து தான் கத்துக்கிட்டேன். சரி சரி முறைக்காதே. ஆமாம்  எதுக்கு கூப்பிட்ட உத்ரா?”

“அந்த வைஷாலியை திட்டி அவளோட புது காதலை எல்லாம் ஒரு லெட்டரா எழுதி அவள் தங்கி இருக்கிற வீட்டுக்கு போஸ்ட் பண்ணிட்டு வந்துட்டேன் ப்ரணவ்.” என்றவளை திகைத்துப் போய் பார்த்தான்.

“அடியே ஏன் டி அப்படி பண்ண??”

“அவள் எப்படி டா உன்னை அவ்வளவு ஈஸியா ஏமாத்திட்டு எந்த தண்டனையும் இல்லாம இருக்கலாம். அதான் வீட்டுக்கு அந்த லெட்டரை போஸ்ட் பண்ணிட்டேன். அதைப் பார்த்து அவங்க அம்மா அப்பா கிட்டே திட்டு வாங்கட்டும்.  அவளோட இந்த காதலை அவங்க parents எதிர்த்தா  அவள் தன் காதலுக்காகவும் காதலனுக்காகவும் போராடி ஜெயிக்கட்டும். இல்லைனா அவங்க அம்மா அப்பா சொல்ற பையனையாவது கல்யாணம் பண்ணிக்கட்டும்.இந்த முறையும் ஒரு அப்பாவி பையனை காதல்ன்ற பேரை சொல்லி ஏமாத்த முடியாது. அவன்  வாழ்க்கையாவது சேவ் ஆகட்டும்.” என்றவளையே பெருமைப் பொங்க பார்த்தான்.

என்னைக் காயப்படுத்தியவர்களைப் பற்றி நானே கவலைப்படாத போது அவள் கவலைப்படுகிறாள்.

அவன் இரத்தநாளங்களில் எல்லாம் உத்ராவின் மீதான காதல் பொங்கி பிரவாகித்தது.

அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.

அந்த ஒற்றை ஸ்பரிசமே அவன் உயிர்க்காதலை மொத்தமாக பிரதிபலிக்கும் கண்ணடியாய்.

“கனி மா.. “

“ஹ்ஹ்ஹ்ம்ம்ம்”

“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. “

“சரி.. “

“நீ என்னை லவ் பண்ற.. “

“ஆமாம் பண்றேன்.. “

“அதனாலே…”

“அதனாலே???”

“நான் உன் கையைப் பிடிச்சுக்கவா?” என்றான் தயங்கியபடி.

அவனைத் திரும்பி கோபமாக முறைத்தாள் கனி.

அந்த கோபத்தில் பதறியவன்
” சாரி சாரி. இனி இப்படி கேட்க மாட்டேன்.” என்று ஓரடி நகர்ந்து நின்றுக் கொண்டான்.

அவனது அந்த செயலில் அவள் இதழ்களில் புன்னகை கசிந்தது.

மெல்ல அவனருகில் வந்தவள் ” டேய் மாங்கா. நான் உன் லவ்வர்டா. இப்படி கையைப் பிடிக்க பெர்மிஷன் கேட்டா கோபம் வரத் தானே செய்யும். ” என்றாள் அவனை ஆற்றுப்படுத்தும் விதமாக.

“இல்லை உனக்கு தான் பசங்கனாலே வெறுப்பாச்சே. நான் டக்குனு கையைப் பிடிச்சா எங்கே தப்பா எடுத்துக்கப் போறீயோனு பயந்து தான் கேட்டேன்.” என்றவனை நோக்கி அவளது புன்முறுவல் விரிந்தது.

“எனக்கு பசங்க மேலே தான் வெறுப்பு.. என் விமல் மேலே இல்லை. ” என்றவள் அவனது கையை எடுத்துத் தன் உள்ளங்கையில் பொத்தி வைத்துக் கொண்டாள், தேக செல்கள் எல்லாம் காதல் நிறைய.

எல்லாருடைய வாழ்த்துக்களையும் பெற்று முடித்த  ஆதிரா, வினய்யின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

உத்ராவும் ப்ரணவ்வும் பைக்கில் வருவதாக சொல்லி விடை பெற்றுக் கொண்டனர்.

விமலும் கனியும் வைபவ்வும் ஐஸ்வர்யாவும் ஜோடி ஜோடியாக கிளம்பிவிட இப்போது இருவரும் தனித்து விடப்பட்டனர்.

வினய் காரைக் கொண்டு வந்து நிறுத்த ஆதிரா உள்ளே ஏறிக் கொண்டாள்.

அவள் கைகளில் வைத்து இருந்த வெற்றிக் கோப்பையை வருடியவன் மீண்டும் பார்வையால் அவளை வருடினான்.

“வினய் நான் ஜெயிச்சது எவ்வளவு சந்தோஷமா இருந்தது?” என்று ஆதிரா கேட்க அவனோ அவளது இதழை சிறை செய்து தான் அடைந்த சந்தோஷத்தை முத்தத்தால் வெளிப்படுத்தினான்.

இருவரும் முத்த சிறையில் மூழ்கி முத்தெடுத்த பின்பு வினய் அவளது கையை பிடித்து மென்மையாக வருடியபடி “அடுத்த வாரத்திலே இருந்து உனக்கு காலேஜ் ஆரம்பிக்குது. ” என்றான் மிருதுவாக

“ஹ்ம்ம் ஆமாம். ” என்று சொன்னவளுக்கோ லேசாக வருத்தம் இருந்தது.

“ஆனால் உன்னை விட்டுட்டு நான் மட்டும் தனியா காலேஜ் போக ஒரு மாதிரி இருக்கு.” என்று தன் மன வருத்தத்தைச் சொன்னாள்.

அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவன் ” நீ மட்டும் படிக்க போகல. நானும் தான் படிக்க போறேன்.” என்று சொல்லி அவளை ஆச்சர்யப்படுத்தினான்.

“என்ன படிக்க போற?” என்றாள் அவள் வியப்பாக.

“Phd பண்ண போறேன். ” என்றவனைப் பார்த்து ” லவ் ல Phd பண்ண போறீயா?” என்றாள் குறும்பாக.

“ஏற்கெனவே லவ்ல Phd பண்ணி உன் இதயத்தைக் கைப்பற்றியாச்சு மேடம்.. ” என்று சொல்லியபடி மீண்டும் அவள் இதழை உண்டு முடித்தவன் பிறகு காரை செலுத்தினான்.

ஆதிராவை உத்ராவின் வீட்டிற்குள் விட்டுவிட்டு கண்களில் பிரியாவிடை பெற்றுக் கொண்டு மீண்டும் தன் வீட்டிற்கு கிளம்பினான்.

ஆதிரா படித்து முடிக்கும் வரை தன் மகளாக தன் வீட்டிலேயே இருக்கட்டும் என வினய்யின் சித்தப்பா சொல்ல அதற்கு அவனின் தாயும் சம்மதம் சொல்லிவிட்டார்.

அதனால் தான் வினய் அவளை அங்கே விட்டு விட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.

சென்ற அவனையே காதல் விழியோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் , கயல்விழி அவள்…

💐💐💐💐💐💐💐💐💐💐

ஆறு வருடம் கழித்து,

எந்த விதமான அரிதாரமும் பூசாமல் அசாதாரண அழகில் மிளிர்ந்துக் கொண்டு இருந்தது கொடைக்கானல்.

அந்த அழகை லயித்தவாறே எழுந்த வினய்யை ஏற்கெனவே விழித்து இருந்த அவர்களது ஒரு வயது மகன் கை நீட்டி தூக்கும் படி சமிக்ஞை செய்தான்.

இதழ்களில் ஒரு குறுநகை ஒட்டியவாறே குழந்தையை கைகளில் தூக்கினான்.

“என் பாப்பூக்குட்டி சமத்தா இருக்கீங்களே. எழுந்தும் கூட சப்தம் போட்டு அழாம இவ்வளவு அமைதியா இருக்கீங்களே என் ஆதிக் குட்டி. ” என்று செல்லம் கொஞ்சியவாறே ஏஞ்சலுக்கு மீன் உணவைத் தொட்டியினில் இட்டான்.

பிறகு திரும்பி ஆழந்த உறக்கத்தில் இருந்த தன் மனையாளைப் பார்த்தான்.

அவன் கண்களில் பூத்த காதலோடு ” தீரா மா ” என்றான் கட்டிலில் அமர்ந்தபடி.

அவன் குரலில் உதட்டில் மலர்ந்த மலர்வோடு கண் திறந்த ஆதிரா உருண்டு வந்து அவன் மடியினில் படுத்துக் கொண்டாள்.

“எழுந்துடு தீரா மா. ஏற்கெனவே காய்ச்சல் அடிக்குது. சாப்பிட்டு நான் தர மாத்திரையை போட்டுட்டு படு. ” என்றவனை கெஞ்சலோடு பார்த்தாள்.

“டூ மினிட்ஸ் வினய்.. ” என்று இன்னும் அவன் மடியில் படுத்துக் கொண்டவளை ” நீ இப்படிலாம் சொன்னா எழுந்துக்க மாட்டே. இரு ” என்றபடி அவன் கிச்சு கிச்சு மூட்ட  கூச்சம் தாளாமல் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“ஒழுங்கா ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிட்டு டேப்ளேட் போட்டுட்டு இன்னைக்கு முழுக்கக்கூட தூங்கு. நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன்.  ” என்று சொல்ல புன்னகையோடு தலையாட்டிவிட்டு புத்துணர்வாகி வந்தாள்.

அவளை அழைத்துக் கொண்டு வினய் டைனிங் டேபிளுக்கு வந்தான்.

அங்கே பெரிய களேபரமே நடந்துக் கொண்டு இருந்தது.

விமல் கனி ஈன்றெடுத்த இரண்டு வயது அதிதியும் வைபவ் ஐஸ்வர்யா பெற்றெடுத்த மூன்று வயது ஆரவ்வும் அங்கே அந்த அறையையே இரண்டாக்கிக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அந்த செல்வங்களைப் பெற்றெடுத்த இரண்டு ஜோடியும் தலையில் கைவைத்தபடி அமர்ந்து அவர்கள் செய்யும் அமர்க்களத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் நான்கு ஜோடிகளும் இங்கே கொடைக்கானலில் வந்து தங்கி தங்கள்  விடுமுறையை கொண்டாடுவார்கள்.

இப்போதும் அந்த விடுமுறைக் கொண்டாட்டத்தில் தான் இப்படி களேபரம் நடந்துக் கொண்டு இருந்தது.

அந்த இரு மழலைகள் செய்த குறும்பை சிரிப்புடன் ரசித்த வினய் தன் கையினில் இருந்த ஆதியையும் அவர்களுடன் விளையாடவிட்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்.

வழக்கத்துக்கு மாறாக ப்ரணவ்வும் உத்ராவும் அமைதியாக இருந்தனர்.

அவர்களது மௌனத்தை கவனித்த வினய் ” என்ன டா ரெண்டு பேரும் சைலண்டா இருக்கீங்க. என்ன ஆச்சு??” என்றான் கேள்வியாக.

“அண்ணா அது எப்படி சொல்றதுனு தெரியலை ணா.  ரெண்டு பேருக்கும் வெட்கமா இருக்கு.” என்றான் ப்ரணவ்.. உத்ராவின் முகத்திலும் அதே வெட்கம் தான்.

“அப்ப சொல்ல வேண்டாம் ப்ரணவ்.. போன்ல டைப் பண்ணிக் காட்டு.. ” என ஆதிரா சொல்ல ” என்ன ஒரு புத்திசாலித்தனம்” என்பதைப் போல ப்ரணவ் பார்த்தான்.

“அதை விட வேற ஒரு ஐடியா என் கிட்டே இருக்கு அண்ணி” என்று சொன்ன ப்ரணவ் மூடியிருந்த தன் தட்டை திறந்தான்.

அதில் இரண்டு பெரிய தோசைக்கு நடுவே ஒரு குட்டி தோசை இருந்தது.

அதைப் பார்த்ததும் அறுவரது கண்களும் வியப்பினில் விரிந்தது.

“டேய் ப்ரணவ்வு.” என வினய் கூப்பிட ” டேய் மச்சான் உண்மையாவா?” என விமல் கேட்டான்.

“ஆமாம் அண்ணா. நேத்து தான் கன்ஃபார்ம் பண்ணோம். ” என்றாள் உத்ரா வெட்கப்பட்டுக் கொண்டே.

“நீங்க பிரிஞ்சு இருந்ததைப் பார்க்கும் போது இரண்டு மாசத்துக்குள்ளேயே நல்ல செய்தி சொல்லிடுவீங்கனு எதிர்பார்த்தேன். ஆனால் ஒரே மாசத்துல எதிர்பார்க்கலடா.” என்றான் வினய் சந்தோஷமாகவும் குறும்பாகவும்.

“போங்க அண்ணா..” என்றனர் ப்ரணவ்வும் உத்ராவும் வெட்கப்பட்டுக் கொண்டே.

“நாங்க பிரிஞ்சு இருந்ததுக்கு கடவுள் தந்த பரிசு அண்ணா .. ” என்று ப்ரணவ் சொல்ல ” ஓஹோ ” என்று சொல்லி உதடு குவித்த அறுவரும் சட்டென்று சிரித்துவிட்டனர்.

அந்த அறை முழுக்க அன்பின் சிரிப்பொலி சிதறிக் கிடந்தது, காலம் முழுவதும் தொடரும் ஒலியாக.

….. முற்றும்……