காதல் சதிராட்டம்

eiTIWSF26979-27561cde

இரு பக்கம் மண்மேடிட்டும் கோவில் சிலை கன்னிகைப் போல் இடை ஆழ்ந்தும் கிடந்த அந்த  நீளமான  பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தது அந்த மாநகர பேருந்து.

அதன் ஜன்னலோரத்தில் அமர்ந்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா. தன் கழுத்தைக் கொக்கைப் போல நீட்டி ஜன்னலுக்கு வெளியேப் பார்த்தாள். அவன் பார்வை வட்டத்துக்குள் அவன் அகப்படவே இல்லை, உடனே முகம் அனிச்ச மலராய் வாடியது

அவள் சோகமாய் திரும்பிய நேரம் அங்கே புன்னகையுடன் வைபவ் நின்று கொண்டு இருந்தான்.சூரியனைக் கண்ட தாமரையைப் போல உடனே முகம் மலர்ந்த அவள் சட்டென முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.அவனோ பதிலுக்கு அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

அதற்கு மேலும் அந்த போலி கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்க முடியாமல் அவள் இதழோரத்தில் புன்னகை கசிந்தோடியது.அதைப் பார்த்து அவன் மூர்ச்சையாகிவிடுவதைப் போல பாவ்லா செய்து காண்பித்தான்.

பக்கத்தில் இருந்த பெரியவரோ அவன் உண்மையாகவே மயங்கி விழப் போகிறான் என நினைத்து தாங்கிப் பிடித்தார்.

” தம்பி தம்பி என்னாச்சு.யார் கிட்டேயாவது தண்ணீர் இருந்தா கொடுங்களேன். ” என்று அவர் உண்மையாகவே பதற ஆதிராவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.வெடித்து சிரித்துவிட்டாள்.

அவனோ அசடு வழிந்த முகத்துடன் ” ஐயோ பெரியவரே.எனக்கு ஒன்னும் இல்லை. பயப்படாதீங்க.” என்று அவரை சமாளித்து ஒருவாறு அவரிடம் இருந்து தப்பித்துவிட்டு ஆதிராவைப் பார்த்தான்.

அவளோ எதுக்கு என்று வடிவேலு போல் பாவனை செய்து காண்பிக்க அவளைப் பார்த்து அசடு வழிந்த படி தலையைக் கோதினான். அந்த நேரம் பார்த்து கன்டக்டெர் விசில் அடிக்க சாலையை எட்டிப் பார்த்தாள்.

அவள் இறங்க வேண்டிய இடம் வந்து இருந்தது. வேகமாக கைப்பையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக படிகளின் அருகே வந்து நின்று வைபவ்வைப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்ததைப் போல அவன் படிகளின் பக்கம் வரவே இல்லை. முன்பு எங்கே நின்று இருந்தானோ அதே இடத்தில் நின்று கொண்டு போனைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

என்னைப் பாரு வைபவ்.பாரு வைபவ்.. என்று மனதுக்குள் அவனிடம் பல முறை பேசியும் அவனது காதுகளை அவள் வார்த்தைகள் சென்றடையவே இல்லை.அவள் பேருந்தை விட்டு இறங்கும் வரை அவன் அவளைத் திரும்பி கூட பார்க்கவே இல்லை.

என்னை அவன் ஏன் பார்க்கவே இல்லை என்ற கேள்வி அவள் மனதினில் விஸ்வரூபமாக விஸ்தாரம் எடுத்து அவள் இதயத்தை சரியாக துடிக்க விடாமல் சதி செய்து கொண்டு இருந்தது…

சுற்றி இருக்கும் எதுவும் மனதினில் பதியாமல் குழப்பத்துடன் நடந்துக் கொண்டு இருந்தாள் அவள்.

அவள் நிழலோ தரைக்கும் நோகாமல் கீழே ஊர்ந்தபடி அவளைத் தொடர்ந்துக் கொண்டு இருந்தது.

திடீரென அந்த நிழலுக்கு பக்கவாட்டில் இன்னொரு நிழலின் பிம்பம் அந்த நிழலைத் தொடர ஆரம்பித்தது.

சட்டென்று ஆதிரா திரும்பி பார்த்தாள்.அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கமல் வைபவ் தான் பின் தொடர்ந்து வந்துக் கொண்டு இருந்தான். அவள் உள்ளத்தில் எந்த அளவுக்கு சந்தோஷம் பீய்ச்சியடித்ததோ அதே அளவுக்கு கோபமும் பாய்ந்து வந்தது.

” யூ ராஸ்கல்.”  என்ற கோபத்துடன் அவள் தோளில் மாட்டி இருந்த கைப்பையை உருவி அவன் நெஞ்சினில் அடிக்க ஆரம்பித்தாள்.

” ஏன்டா அப்படி பண்ணே. நீ என்னைப் பார்ப்பேனு எவ்வளவு நம்பிக்கையோட உன்னை பார்த்தேன் தெரியுமா? ஆனால் நீ ஏன் டா போனையே பார்த்துக்கிட்டே இருந்தே.என்னை விட அப்போ உனக்கு போன் தான் முக்கியமா?” என்று சொன்னவள் அவனின் நெஞ்சில் மீண்டும் அவளது கைப்பையை வைத்து மொத்து மொத்து என்று மொத்தி எடுத்தாள்.

” ஹே ஹே ஆதிரா. என் நெஞ்சுல அடிக்காதே.. அங்கே நீ தான் டி இருக்கே.உனக்கு தான் வலிக்கும்.வேணும்னா என் கையிலே அடிச்சுக்கோ… “

” ப்ராட் ப்ராட் … இப்படி இப்படி பேசி பேசியே தான் என்னைக் கவுக்கப் பார்க்கிறே.”

” அப்போ நீ இன்னும் என் கிட்டே கவுரலயா ஆதிரா?”

” இல்லை நான் ஒன்னும் கவுரல. உன் கிட்டே கவுரவும் மாட்டேன்.”

” அப்போ ஏன் கோபப்பட்டு ஹேன்ட்பேக் வெச்சு மேடம் அடிச்சீங்களாம்??”

” அது கோபம் வந்தது அதனாலே அடிச்சேன். “

” ஓ அப்போ கோபம் மட்டும் தான் வந்ததா. காதல் லாம் எதுவும் வரலயா??”

” அதெல்லாம் ஒன்னும் வரலே.. வரவும் வராது… “

” சரிங்க மேடம் நம்பிட்டேன்… “

” ஹ்ஹ்ஹ்ம் நம்பணும்… ” என்று சொல்லி இதழ்களில் துளிர்த்த புன்னகையுடன் முன்னே நடந்துப் போனாள் ஆதிரா.. அவள் புன்னகையை ஓரக் கண்ணால் பார்த்தபடி மௌன முறுவலுடன் அவளின் பின்னே நடந்து வந்துக் கொண்டு இருந்தான் வைபவ்….

திடீரென ஆவென்று ஒரு அலறல். அந்த அலறல் அவளது இதயத்தை ஒரு நிமிடம் உலுக்கிப் பார்த்தது..

இல்லை இல்லை அப்படி நடந்து இருக்கக்கூடாது என்ற வேண்டுதலோடு பயந்தபடி பின்னே திரும்பிப் பார்த்தாள்.ஆனால் அவளது வேண்டுதலை பொய்யாக்கி இருந்தார் கடவுள்.

அவனின் பின்னே வந்து இருந்த அந்த கார் மோதி இரண்டடி தள்ளி விழுந்த வைபவ்  இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தான். அவனை அந்த கோலத்தில் பார்த்ததும் நின்ற இடத்தில் இருந்து பூமி நழுவியது. வைபவ்வை நோக்கி அவள் ஓடிய வேகத்தில் அவள் அணிந்திருந்த துப்பட்டா தோளில் மாட்டி இருந்த கைப்பை எல்லாம் பக்கத்திற்கு ஒன்றாக சிதறியது.. அவளுக்கோ அதில் எல்லாம் சுத்தமாக கவனம் இல்லை.. அவள் கவனம் முழுக்க முழுக்க வைபவ்வின் மீது தான் நிலைத்து இருந்தது…
ஒடிச் சென்று அவனை தனது மடியில் கிடத்தியவள் அவனது முகத்தைப் பார்த்தாள்.அவன் அந்த வலியிலும் ” do you love me ஆதிரா… ” என்று தான் கேட்டான்.

ஆதிராவால் அதற்கு மேலும் இல்லை என்று பொய் சொல்லி நடிக்க முடியவில்லை.

” யெஸ் வைபவ்.. யெஸ்… ஐ யம் இன் லவ் வித் யூ.. எழுந்துடு வைபவ்.. எனக்கு உன் கூட வாழணும். ப்ளீஸ் ப்ளீஸ்… ” என்று கதறியவளின் குரல்  கேட்காமல் மயங்கி கண்களை மூடினான்.

அதற்குள் அவர்களை சுற்றி கூட்டம் கூடிவிட வேகமாக ஆம்புலன்சிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது அந்த ஆம்புலன்ஸ்.அதில் வைபவ் ஏற்றப்பட அவன் அருகில் அமர்ந்து அவனுடைய முகத்தையே பார்த்தபடி வந்து கொண்டு இருந்தாள் ஆதிரா.
தன்னால் தான் அவனுக்கு அந்த விபத்து ஏற்பட்டுவிட்டது என்ற குற்றவுணர்வு அவளுடைய இதயத்தை இரு மடங்காக அடைத்து இருந்தது.

அவன் விழித்துவிடமாட்டானா என்ற ஏக்கத்துடன் அவனைப் பார்த்தபடியே வழி நெடுகிலும் கடவுளை வேண்டிக் கொண்டு வந்தாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்ததும் அவசர அவசரமாக வைபவ் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டான். வெளியே அவன் பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு ஜன்னல் வழியே அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா. அவள் வேண்டுதலை இம்முறை பொய்யாக்காமல் நிறைவேற்றிவிட்டார் கடவுள்.

வைபவ் கண்விழித்துவிட்டான். அவனுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் அவனது கால்களில் பலமான காயம் ஏற்பட்டு இருந்தது.அதனால் அவன் ஒரு மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டு அவளை உள்ளே சென்று பார்க்க அனுமதித்தார்.

அவள் தயக்கத்துடன் அவன் படுத்து இருந்த கட்டிலின் அருகே சென்றாள். அங்கே வைபவ் ஆயாசமாக கிடந்தான்.அவனைப் பார்த்த மாத்திரத்தில் மீண்டும் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.. அந்த கண்ணீர் அவனது கைகளில் சிதறி விழ சட்டென்று கண்ணை திறந்துப் பார்த்தான்.ஆதிராவை எதிரில் கண்டதும் புன்னகைக்க முயன்றான்.ஆனால் ஆதிராவோ சிரிப்பதற்கு பதிலாக பன்மடங்காக கண்ணீரை சிதறவிட்டாள்…

” சாரி வைபவ். என்னாலே தான் உனக்கு இப்படி ஆகிடுச்சு. நீ ஏன் என் பின்னாடி வந்தே.வராம இருந்து இருந்தா உனக்கு இப்படி ஆகி இருக்காது இல்லை… “

” நான் உன்னை காதலிக்கிறேன் ஆதிரா.அதனாலே தான் உன் பின்னாடி வந்தேன்.. இந்த காயம் கூட எனக்கு பெருசா தெரியல தெரியுமா??ஏன்னா நான் காயப்பட்டு கீழே கிடந்ததாலே தானே நீ உன் மனசைத் திறந்து காதலை சொன்னே… இல்லைனா என்னை எத்தனை வருஷத்துக்கு பதிலா சொல்லாம பின்னாடி அலைய வைச்சு இருப்பேன்றது கடவுளுக்கு தான் வெளிச்சம்.” என்று அவன் சொல்ல கலங்கிய கண்களோடு புன்னகைத்தாள் ஆதிரா.

வைபவ் அவளை நோக்கி கையை நீட்ட அதில் தன் கைகளை சேர்த்தாள்.அவன் பல நாள் கண்ட கனவு கையில் கிடைத்த மகிழ்ச்சியோடு அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கண்களை மூடினான்.அவள் அவனை மகிழ்ச்சியோடு பார்த்து புன்னகைத்தாள்.

இவர்களது கதையை கேட்டுக் கொண்டு வந்த வினய்யோ சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான். திரும்பி அவனைப் பார்த்தாள் ஆதிரா.

” இப்போவாது புரியுதா வினய். எங்களோட காதலைப் பத்தி… வைபவ் உயிர் போற நிலைமையிலே கூட என் கிட்டே காதலை தான் சொன்னான். என் உயிர் வைபவ்.. அவன் உயிர் நான். எங்களோட காதல் உனக்கு இப்போ புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். அப்படியும் புரியலைனா, சீக்கிரமா எங்களோட காதலோட ஆழத்தை உனக்கு புரிய வைக்கிறேன்… “

“அதே தான் ஆதிரா. நானும் உங்களோட காதலோட ஆழம் எந்த அளவு  இருக்குனு உனக்கு புரிய தான் வைக்க தான் போறேன்.எது உண்மையான காதல்னு நீ உணர தான் போறே. “

” நீ போகாத ஊருக்கு வழி தேடுற வினய். “

” சின்னத் திருத்தம். நான் வழி தேடல,  வழியை உருவாக்கிறேன். “

” பெஸ்ட் ஆப் லக். ” என்று அவள் இதழை சுழித்துக் காண்பிக்க புன்னகையோடு காரை விட்டு இறங்கினான். அவளும் மறுமுனை வழியாக  இறங்கி நிமிர்ந்துப் பார்க்க பிரம்மிப்பில் அவள் விழிகள் விரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!