காதல் சதிராட்டம்fin

கடுங்கதிர்களை வீசிக் கொண்டு இருந்த கதிரவன் மெதுமெதுவாக தன் வன்கதிர்களை சுருட்டிக் கொண்டான்.
காற்றில் மெதுமெதுவாக குளுமை பரவியது. ஆனால் அது வைபவ் நெஞ்சத்தை குளிர்விக்கவில்லை.

புனல் சூழ்ந்து வடிந்துப் போன நிலம் போல அவனது முகம் வற்றிப் போய் இருந்தது.

ஆதிராவை பேசிவிட்டு வந்ந வார்த்தைகள் எல்லாம் இப்போது ஒன்றாய் சேர்ந்து அவன் நெஞ்சைக்  குறிப் பார்த்து தாக்கியது.

அவளைப் பார்த்து மன்னிப்புக் கேட்டு அவள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டால் தான் தன் தவிக்கும் மனம் சமாதானமடையும்.

அவளைப் பார்த்து எப்படி மன்னிப்புக் கேட்கலாம் என சிந்தித்துக் கொண்டு வந்தவனையே ஓரக் கண்ணால் ஐஸ்வர்யா பார்த்தாள்.

அவசரப்பட்டு தவறு செய்துவிட்டு அதற்கான தண்டனையை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் அவனது முகம் கல்லூரியில் இருந்த தன்னையே பிரதிபலித்தது.

தான் கல்லூரியில் ஆதிராவுக்கு துரோகம் இழைத்துவிட்டு பின்னர் அந்த குற்றவுணர்வில் இருந்து வெளியே வராமல் தவித்ததைப் போல தான் அவனும் தவித்துக் கொண்டு இருந்தான்.

இதுவரை அவளுக்கு அந்த குற்றவுணர்வில் இருந்து விடுதலைக் கிடைக்கவில்லை.

மன்னிப்பு கிடைக்காத குற்றவுணர்வு மனதில் மரண வலியைக் கொடுக்கும்.

அதே உணர்வைத் தான் வைபவ்வும் அனுபவித்து கொண்டு இருந்தான்.

ஏனோ தெரியவில்லை அவனுடைய குற்றவுணர்வை அழிக்க வேண்டும் என்று அவள் மனம் உந்தித் தள்ள காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

திடீரென நிறுத்தப்பட்ட காரால் நிகழ்வுக்கு வந்த வைபவ் குழப்பமாக திரும்பி ஐஸ்வர்யாவைப் பார்த்தான்.

” நீ இப்படி சோகமா முகத்தை வெச்சுக்கிட்டா நடந்த எல்லாமே மாறிடுமா வைபவ்? இப்போ நீ எதுக்காக வருத்தப்படுற? உன்னை ஆதிரா மன்னிச்சு உன் காதலை ஏத்துக்காம போயிடுவாளோனு பயப்படுறீயா?”

“இல்லை ஐஸ்வர்யா அவள் என்னோட காதலை ஏத்துக்க வேண்டாம்.  இதுக்கு மேலேயும் அந்த பொய்யாலே கட்டுன அந்த காதல் மாளிகையிலே  அவளை வாழச் சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன். என் கவலை எல்லாம் அவள் என்னை மன்னிக்கனும். நான் சொன்ன கேடு கெட்ட வார்த்தைகளுக்காக என்னை ஒரு அரை விடணும். ” என்று சொல்லியவனைக் கண்டு அவள் மனது நெகிழ்ந்தாலும் உதட்டில் துளிர்த்த கேலி சிரிப்பை அவளால் தடுக்க முடியவில்லை.

“இந்த அறிவு ஏன் ஆதிரா கிட்டே பேசும் போது இல்லாம போச்சு வைபவ்? ” என்றாள் நக்கலாக.

“என் காதல் மேலே இல்லாத நம்பிக்கையின்மை அவள் மேலே கோபமா வெறுப்பா அமிலமா மாறிடுச்சு ஐஸ்வர்யா. அப்படி பேசுனதுக்காக என்னை நானே வெறுக்கிறேன். பேசுன அந்த வார்த்தையை  திரும்ப எடுக்க முடியாததாலே என் வாழ்க்கையையே பறிச்சுக்கலாம்னு கூட தோணுச்சு. கையிலே ப்ளேட் வைச்சுட்டேன். ஆனால் ரத்தம் வர வர உயிர் மேலே பயம் வந்துடுச்சு ஐஸ்வர்யா. நிம்மதியா வாழவும் முடியல. சாகவும் முடியல. ” என்ற வைபவ்வின் வருத்தம் தோய்ந்தக் குரலும் அவன் கைகளில் இருந்த காயத்தையும் கண்ட  ஐஸ்வர்யா திகைத்து நிமிர்ந்தாள்.

“வைபவ் அடுத்த தடவை இந்த மாதிரி பேசுன. நானே உன்னைக் கொலை பண்ணிடுவேன். உனக்காக இத்தனை வருஷம் காத்து இருந்து தேடிக் கண்டுபிடிச்சு நான் வருவேனாம் இவர் நோகாம சாகலாம்னு முடிவெடுக்க நினைப்பாராம்.  ஏன்டா எருமை மாடு எதுக்கு சாகறதுக்கு காரணத்தைத் தேடுற? நீ வாழ்றதுக்கு காரணமா நான் இருக்கும் போது அடுத்த வாட்டி சாகறேன்னு சொன்ன நானே சாகடிச்சுடுவேன். எப்போ பார்த்தாலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டியது. ” என்று சொல்லியபடி அவனது காயம்பட்ட கையை எடுத்து தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டவள் மெதுவாக வருடிவிட்டாள்.

அவள் பேசிய கடைசி வார்த்தைகள் வைபவ்வை திகைத்து நிமிர வைத்தது.

“நீ வாழுறதுக்கு காரணமா நான் இருக்கும் போது ஏன் சாகணும்.. ” என்ற அவளது வார்த்தைகள் அவனுக்குள் பெரும் கேள்வியை எழுப்பிவிட்டு இருந்தது.

“உண்மையில் நான் வாழ்வதற்கான காரணமாய் இவள் தான் இருக்கப் போகிறாளா?” என்று எண்ணியபடி அவளைப் பார்த்தாள்.

அவளோ அவன் காயங்கள் எல்லாம் மறையும் படி ஒரு புன்னகைப் பூத்தாள்.

அவள் கண்களில் காதல் ரேகை அவளையுமறியாமல் படர்ந்தது.

அதைக் கண்டு கொண்டவன்
“ஐஸ்வர்யா do you still love me?? ” என்று ஆச்சர்யமாகக் கேட்டான்.

அவள் அதற்கு ஆமாம் இல்லை என்று எந்த பதிலும் வாய்மொழியால் சொல்லவில்லை. ஆனால் கண்ணத்தில் பூத்த வெட்கச் சிவப்பு ஆமாம் என்ற செய்தியைச் சொன்னது.

“நீ என்னை விரும்புறேனு சொல்லும் போது நீ  சின்ன பொண்ணு… அதனாலே படிச்சு முடிச்ச அப்புறம் இதே காதல் என் மேலே இருந்தா என் கிட்டே மறுபடியும் வா னு  சொன்னேன்.. நீ காலசுழற்சியிலே என்னை மறந்துடுவேன்னு நினைச்சு தான் சொன்னேன். என்னை தேடி வர மாட்டேனு நினைச்சேன் ஐஸ்வர்யா. ஆனால் நீ வந்துட்டே. உன் காதலுக்கு உண்மையா இருக்க. ஆனால் நான்? நான் பாவம் பண்ணவன் ஐஸ்வர்யா.. நான் உனக்கு வேண்டாம்.” என்று கண்ணோரம் துளிர்த்த கண்ணீரை மறைத்துக் கொண்டு சொன்னவனை விழியகலாமல் பார்த்ததாள். அவளுக்கு இப்போதும் அவன் மீது காதல் தான் சுரந்தது.

மெல்லிய புன்முறுவலுடன் “வைபவ் இதைப் பத்தி இப்போ யோசிக்க வேண்டாமே. காலத்தோட கையிலே விட்டுடலாமே. சீனியர் நீ  உன் குற்றவுணர்வை சரி பண்ணிட்டு வா. உன் மனசு சரியாகுற வரை நான் காத்து இருக்கத் தயார்.” என்றவளை வியப்பாகப் பார்த்தான்.

அவள் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு ” மறுபடியும் முகத்தை அப்படி கர்ண கொடூரமா வெச்சுக்கிட்டு வந்தா எனக்கு கெட்ட கோவம் வரும். சிரிச்சா மாதிரி முகத்தை வைச்சா நான் காரை எடுப்பேன்.” என்று அவள் சொல்ல  வைபவ் இதழ்களில் லேசான புன்னகை.

காரை எடுத்தவள் வழி நெடுக ஆதிரா வினய்யின் கதையும் தன் முன் கோபத்தால் நடந்த கூத்துகளையும் அதன் பின் தான் மாறியதைப் பற்றி எல்லாம் சொல்ல சொல்ல வைபவ்விற்கு வினய்யின் மேல் மதிப்பு கூடிப் போயிற்று.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

“டேய் ப்ரணவ். என்ன டா அண்ணா இன்னும்  அண்ணி ரூம்ல இருந்து வெளியே வரவே இல்லை. அவங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆனாங்களா இல்லையானு தெரியலையே. நான் வேணா பேசாம ரூமுக்கு தண்ணி குடிக்கிறா சாக்குல போறா மாதிரி போய் என்ன நடக்குதுனு பார்த்துட்டு வந்துடட்டுமா.” என்றுக் கேட்டபடி முன்னே நடந்தவளை சட்டென கைப்பற்றி நிறுத்தினான் ப்ரணவ்.

“உத்ரா உன் அறிவை தீப்பந்தத்தை வெச்சு கொளுத்த. சமையல் கட்டுல இல்லாத தண்ணியையா போய் நீ ஆதிரா அண்ணி ரூம்ல எடுக்கப் போற? அப்படி போன உன்னை எவ்வளவு கேவலமா லூசு மாதிரி  பார்ப்பாங்க தெரியுமா?” என்று சொல்ல உத்ராவின் தலை வேகமாக ஆமோதித்தது.

“அட ஆமாம்ல ப்ரணவ்… அப்போ என்ன பண்றது? எப்படி ஆதிரா அண்ணி ரூம்க்கு போய் அவங்க சேர்ந்துட்டாங்களானு பார்க்கிறது. ” என்றாள் தாடையை சொறிந்தபடி.

“என் கிட்டே ஒரு ஐடியா இருக்கு உத்ரா.. ” என்றவனது முகத்தை உத்ரா ஆர்வமாகப் பார்த்தாள்.

“நான் நேரா போய் அண்ணி கிட்டே என் ரூம்ல காலண்டர் இல்லை. அதனாலே  இன்னைக்கு என்ன நாள்னு பார்க்க உங்க ரூம்க்கு வந்தேனு சொல்லி உள்ளேப் போய் சமாதானம் ஆகிட்டாங்களாங்களானு பார்த்துட்டு வந்துடட்டுமா?” என்றவனைக் காரித் துப்பினாள். அவன் துடைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான் பரிதாபமாக.

“ஏன்டா லூசு பயலே. போன் தான் இருக்கே அதுல date ஐ பார்க்க வேண்டியது தானேனு கேட்க மாட்டாங்க. ” என்றபடி அவனை முறைத்தாள்.

“ஆமாம்ல இது யோசிக்க வேண்டிய கோணம் தான். “என்று தாடையை சொறிந்தபடி சொன்னவனை மீண்டும் காறித் துப்பியவள் ” நானே எவ்வளவு பதட்டமா இருக்கேன்… இதுல நீ வேற வெறுப்பேத்திக்கிட்டு இருக்கே.” என்றாள்  பாவமாக முகத்தை வைத்தபடி.

“என் செல்லம் எதுக்கு பதட்டமா இருக்கா? ” என்றான் அவளை கொடி போல் சுற்றிவளைத்தபடி.

“அண்ணாவும் அண்ணியும் சேர்ந்தா தானே நாம சேர முடியும். இல்லைனா இப்படி பிரிஞ்சே இருக்கணும்ல அதான்.” என்றவளை நோக்கி  குறு புன்னகை பூத்தான்.

“ஆமாம் நாம ரொம்ப தான் பிரிஞ்சு இருக்கோம். ஆனால் இப்படி பிரிஞ்சே இருக்கிறதுக் கூட நல்லா தான் இருக்கு உத்ரா.” என்றான் அவளது கழுத்துவளைவில் தன் முகத்தை புதைத்தபடி.

“ஆமாம் நாம இப்படி பிரிஞ்சே இருக்கலாம் ப்ரணவ் ” என்று அவளும் தன்னை அவனோடு இறுக்கிக் கொண்டு ரசனையாக சொன்னாள்.

அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி காதல் மொழி பேசிக் கொண்டு இருக்க விமலும் கனியும் உள்ளே வந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து ” என்னடா நடக்குது இங்கே?” என்றான் விமல் வடிவேலு பாவணையில்.

உத்ராவும் ப்ரணவ்வும் சட்டென விலகி முகத்தில் வெட்கத்தையும் தயக்கத்தையும் ஒரு சேர பூசியபடி நின்றுக் கொண்டனர்.

அவர்களைக் கேலிப் பார்வையோடும் சந்தோஷத்தோடும் விமல் பார்க்க ப்ரணவ்வோ விமல் பக்கத்தில் இருந்த கனியையே ஆச்சர்யமாகப் பார்த்தான்.

பிறகு வேகமாக வந்து விமலின் காதுகளில் ” அண்ணா இவங்க தான் அவங்களா?” என்றான் சந்தேகமாக.

விமல் வெட்கப்பட்டுக் கொண்டே ஆமாம் என்று தலையசைக்க அவனை சட்டென்று இறுகக் கட்டிக் கொண்டான் ப்ரணவ்.

“அண்ணா சூப்பர் சூப்பர் congrats… ” என்று மகிழ்ச்சியாக சொன்னவன் கனியிடம் திரும்பி “ஹாய் இன்னொரு அண்ணி. உங்களைப் பத்தி தான் விமல் அண்ணா டெய்லி என் கிட்டே புலம்பிட்டு இருப்பாரு. கொடைக்கானல் வந்துட்டு ஒவ்வொரு தடவை அங்கே வரும் போதும் கனி என்னைப் பார்க்கவே இல்லை கண்டுக்கவே இல்லை. அவளுக்கு ஆம்பளைங்க மேலேயே வெறுப்பு. எப்படி மாத்த போறேன்னு தெரியலணு சின்னப் பிள்ளை மாதிரி என் கிட்டே அழுதுட்டு இருப்பாரு.  அதுவும் மிரண்டா பாட்டிலை மோந்து பாத்துட்டு தண்ணி அடிச்சா மாதிரி புலம்புவாரு” என ப்ரணவ் சொல்ல சொல்ல கனி விமலைப் பார்த்து முறைத்தாள். விமல் ஓடி வந்து அவனது வாயை மூடினான்.

“டேய் டேய் மானத்தை வாங்காதே… இப்போ தான் கையிலே காலிலே விழுந்து அவளை ஒத்துக்க வைச்சு இருக்கேன். மறுபடியும் கெடுத்து விட்டுடாதே டா எஞ்சாமி” என்று விமல் கெஞ்ச ப்ரணவ்வோ அந்த கைகளை எடுத்துவிட்டு மீண்டும் வேகமாகப் பேசத் தொடங்கினான்.

கனியோ உதடுகளில் துளிர்த்த சிரிப்பை மறைத்துக் கொண்டு விமலை போலியாக முறைத்துக் கொண்டு இருந்தாள்.

“அண்ணா நான் உங்களோட எல்லா அருமை பெருமையையும் சொல்லி உங்க லவ்வை டபுள் ஸ்ட்ராங் ஆக்குறேன் அண்ணா. எனக்கு சான்ஸ் கொடுங்க. ” என்று ப்ரணவ் மேலும் பேசத் துவங்க

“ப்ளீஸ் போதும்.. I’m your best friend ” என்றான் விமல், வடிவேலு பாணியில்…

“அண்ணா அவங்க பேரை சொல்லிக்கிட்டே தூக்கத்திலே இருந்து எழுந்து உங்க அம்மா கிட்டே அடி வாங்குனீங்களே அது மட்டும் சொல்லிக்கவா?” என்று ப்ரணவ் கேட்க  “டேய் போதும் டா. இதோட நிறுத்திக்கோ. ஐ யம் பாவம்.” என்று விமல் சொல்ல மூவரும் சிரித்துவிட்டனர்.

“என்னது ப்ரணவ் ஜோக் சொல்லியா எல்லாரும் இப்படி சிரிக்கிறீங்க. it is impossible. அவனாவது சிரிப்பு வரா மாதிரி ஜோக் சொல்றதாவது. ” என்றபடி மாடிப்படியினில் இருந்து இறங்கி வந்தான் வினய்.

அவனோடு இணையாய் ஆதிரா நடந்து வந்தாள்.

இருவரது கைகளும் ஒன்றோடு ஓன்றாக பின்ன இருக்க அதைப் பார்த்த நால்வரது முகத்திலும் ஆசுவாசம்.

எத்தனை தடைகள் சதிகள் வஞ்சங்களைத் தாண்டி இணைந்த காதல் இது.

அவர்களையே மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் வாசல் புறம் காலடி சப்தம் கேட்டது.

திரும்பி பார்த்தவர்களது முகத்தில் இருந்த புன்னகை மறைந்துப் போய் இருந்தது.

வேகமாக சென்று ப்ரணவ் வைபவ்வின் சட்டையைப் பிடித்தான்.

“வாங்குனது பத்தலையா? ஒழுங்கா இங்கே இருந்து கிளம்பிடு. ” என்றான் கோபமான குரலில். இடையில் புகுந்து ஐஸ்வர்யா தடுத்தாள்.

அவளை நோக்கி “ஐஸ் அக்கா உங்களுக்கு இவன் யாரு என்ன பண்ணானு தெரியாது அக்கா. அதனாலே அவனைக் காப்பாத்த நினைக்காதீங்க.  ” என்றான் கோபம் அடங்கிய குரலில்.

“எனக்கு இவனை நல்லா தெரியும் ப்ரணவ். இவன் என்னோட சீனியர். இப்போ அதுக்கும் மேலே. செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க தான் வைபவ் வந்து இருக்காங்க, ரகளை பண்ண இல்லை. ” என்றாள் சமாதானம் செய்யும் குரலில்.

விமலும் வினய்யும் ஒரு சேர ஆச்சர்யப்பட்டு ஐஸ்வர்யாவைப் பார்த்தனர்.

“நாங்க  PG படிக்கும் போது வைபவ்வை காலேஜ்ல பார்த்ததே இல்லையே.” என்றான் விமல் கேள்வியாக.

“அவன் நான் UG படிக்கும் போது. PG பண்ணிட்டு இருந்தாங்க. நீங்க சேர்ந்த அப்போ அவங்க காலேஜ் முடிச்சுட்டாங்க. ” என்று ஐஸ்வர்யா சொல்ல ஓ என்று உதட்டைக் குவித்தான் விமல்.

இவர்களது சம்பாஷனைகள் வைபவ்வின் மூளையில் சென்று பதியவில்லை.

அவனது கவனம் எல்லாம் எதிரில் இருந்த ஆதிராவின் மீது தான் இருந்தது.

தன்னை மன்னிப்பாளா என்ற ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

அவளோ வினய்யின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவனை வெறுமையான பார்வையில் பார்த்தாள்.

வினய் அவளது கைகளை தன் கைகளுக்குள் அழுந்தப் பிடித்துக் கொண்டு தன் உள்ளங்கை வெட்பத்திலேயே அவளுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

அந்த பொருத்தம் இல்லாத சூழ்நிலையே ஒரு மாதிரி அறை முழுக்க உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டது போல இருந்தது.

பலத்த மௌனம் அங்கே எல்லாருடைய மனதிலும் பெரும் இரைச்சலை ஏற்படுத்தி இருந்தது.

அந்த மௌனத்தைக் கலைக்கும் படி வைபவ்வின் வார்த்தைகள் காற்றில் கரைந்து வந்தது.

“நான் உன் கிட்டே மன்னிப்பு கேட்கக்கூட தகுதி கூட இல்லாதவனா உன்  முன்னாடி நிற்கிறேன் ஆதிரா. தொடக்கத்திலே இருந்து இறுதி வரை பொய்யாலேயே உன் அன்பை அடைய முயற்சி பண்ணதும் மட்டும் இல்லாம உன் மேலேயே எல்லா பழியையும் போட்டுட்டு வார்த்தையாலே குத்திட்டேன். ப்ளீஸ் என்னை பளார்னு ஓங்கி ஒரு அறைவிடு ஆதிரா. வேண்டாம் வேண்டாம் உன் புனிதமான கை என் மேலே பட வேண்டாம். காலிலே போட்டு இருக்கிற செருப்பை கழட்டி என்னை அடி. சந்தோஷமா வாங்கிட்டு போயிடுறேன். எனக்கு உன்னோட திட்டும் அறையும் தான் வேணும் ஆதிரா அதைத் தவிர்த்து வேற எதையும் நான் எதிர்பார்த்து வரல.”என்று வைபவ் எல்லாவற்றையும் கொட்டிவிட்டு அவளைப் பார்க்க ஆதிராவின் கண்களில் இருந்த சினம் கொஞ்சமும் குறையவில்லை.

“நீ பேசிட்டு போன வார்த்தையோட வீரியமும் அர்த்தமும் கொஞ்சமும் குறையாது. என்னாலே மன்னிக்க முடியாது வைபவ். ஆனால் உன் மேலே இருக்கிற இந்த வெறுப்பை என்னாலே மனசுல சுமக்க முடியாது. உன்னை வெறுக்கிறதுக்காக கூட நினைக்கிறது எனக்கு பிடிக்கல. நீ என்னோட வெறுப்புக்கு கூட தகுதியானவன் இல்லை. ” என்று சொன்னவள் வேக வேகமாக தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள்.  தன்னைத் தொடர்ந்து வந்த  வினய்யையே கலக்கத்துடன் பார்த்தாள்.

“வினய் அவனை மன்னிக்கிற அளவுக்கு என் மனசு அவ்வளவு விசாலமானது இல்லை. ப்ளீஸ் அவனை இங்கே இருந்து போக சொல்லுங்களேன். அவனைப் பார்க்க பார்க்க உனக்கு சொந்தமான காதலைத் தட்டி பறிச்சு தவிக்கவிட்டவன்னு தோணுது. அவன் சொன்ன வார்த்தை எல்லாம் ஆசிட் பட்டா மாதிரி எரியுது. ” என்றவளை சென்று இறுக அணைத்துக் கொண்டான்.

“அவனை உனக்கு எப்போ மன்னிக்கனும்னு தோணுதோ அப்போ மன்னி டா.. நீ அவனை இப்பவே மன்னிக்கணும்னு அவசியம் இல்லை. காலப்போக்குல எல்லாமே மாறும். ப்ளீஸ் இப்படி கஷ்டப்படாதே எனக்கு வருத்தமாக இருக்கு. ” என்று சொன்னவனது குரலிலும் வருத்தம் தோய்ந்து இருந்தது.

“நீ என் பக்கத்திலே இருக்கும் போது நான் எப்பவும் சந்தோஷமா தான் இருப்பேன் வினய்…” என்று சொன்னவள் அவனது நெற்றியை  செல்லமாக முட்டினாள்.

பதிலுக்கு வினய்யும் அவளது நெற்றியை முட்டியபடி ” கீழே வைபவ் இருந்தாலும் நான் உன் பக்கத்திலே தான் இருக்கேன் ஆதிரா. நீ எந்த தயக்கமும் இல்லாம சந்தோஷமா எல்லாரையும் எதிர்கொள்ளணும். ஓகே வா?” என்று வினய் கேட்க அவள் சரியென்று தலையாட்டினாள்.

அவளது கேசத்தை வருடிவிட்டவன்
ஐ லவ் யூ ஆதிரா.. ” என்றான் காதலாக.

” லவ் யூ டு வினய்.. ” என்று சொன்னவளது  உதடுகளை சட்டென தன் வசப்படுத்திக் கொண்டான்.

எல்லா காதலையும் அந்த ஒற்றை முத்தத்தில் காட்ட மூச்சு முட்டியது அவளுக்கு.

தடுமாறி நின்றவளை மேலும் தடுமாறச் செய்தது அவனது வார்த்தைகள்.

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் அவன் காதல் மின்னிய குரலில் கூடவே அவளை ஆழமும் பார்க்கும் ஒரு பார்வை இருந்தது.

“ஹ்ஹ்ம் இப்பவே பண்ணிக்கலாம்…” என்று சட்டென யோசியாமல் மறுமொழி சொன்னவளது முகம் பின்பு எதையோ சிந்தித்து  முகம் மாறியது

அந்த முக மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டுக் கொண்டான் அவன்.

அவன் கேள்விக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அவள் முகத்தில் தயக்கம் சூழ்ந்து இருந்தைக் கண்டு கொண்டவன் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தபடி அவள் நாசியை தன் நாசியால் செல்லமாக உரசினான்.

“அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு கிடைச்ச நியூ ஸ்பான்சர்ஷிப்ல எப்படி படிக்க முடியும்? முதலிலே படிப்பு அப்புறம் தான் மேரேஜ்.” என்றான் தீர்க்கமாக.

அவளை எப்போதும் போல மீண்டும் ஆச்சர்யப்படுத்தி இருந்தான் வினய்.

“நீ தான் எனக்கு மறுபடியும் படிப்பை தொடரதுக்கு ஸ்பான்சர்ஷிப் பண்ணி இருந்தீயா?” என்று ஆதிரா கேட்க அவன் ஆம் என்று தலையசைத்தான்.

சட்டென்று அவனை அணைத்துக் கொண்டு ” லவ் யூ வினய்.லவ் யூ வினய்.. ” என்று முகம் முழுக்க ஆசை ஆசையாக முத்தமிட்டாள்.

எல்லா முத்தங்களையும் தன் கன்னங்களில் வாங்கிக் கொண்டவன் பதில் முத்தங்களைக் கொடுத்துவிட்டு அவளை கீழே அழைத்துச் சென்றான்.

அங்கே எல்லோரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தனர்.

தயக்கத்தோடு அங்கே நின்றுக் கொண்டு இருந்த வைபவ்வை ஐஸ்வர்யா இயல்பாக்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

ப்ரணவ்விற்கும் வைபவ்வின் தவிப்பு புரிந்தது.

மெதுவாக அவனிடம் சென்று ” இனி மறுபடியும் இப்படி லூசு மாதிரி  பண்ணாதீங்க.” என்று சொல்லிவிட்டு அவனும் தன் பங்கிற்கு வைபவ்விடம் பேசி அவனை இயல்பாக்கி இருந்தான்.

விமல் கனி உத்ரா கிச்சனில் குட்டி களேபரம் நடத்திவிட்டு சாப்பிடுவதற்கு உணவை எடுத்து வந்து அமர்ந்தனர்.

ஐஸ்வர்யா வைபவ் ப்ரணவ் இயல்பாக பேசத் தொடங்கிய நேரம் வினய்யும் ஆதிராவும் கீழே இறங்கி வந்தனர்.

அவர்களும் எல்லாரோடும் சேர்ந்து உணவருந்த அமர்ந்தனர்.

ஆதிராவின் முகத்தினுள் சோகமோ வருத்தமோ தென்படவில்லை.
கன்னத்தில் ஏறிய வெட்கச் சிவப்புடன் எல்லாரையும் எதிர் கொண்டாள்.

வைப்வ்வின் இருப்பு கூட அவளைப் பெரியதாய் பாதிக்கவில்லை. அவளது கண்கள் முழுக்க முழுக்க வினய்யை தான் சுற்றிக் கொண்டு இருந்தது. வினய்யும் அவளைப் பார்வையால் தீண்டி அவளை சிலிர்க்க வைத்துக் கொண்டு இருந்தான்.

இருவரையும் பார்த்து அங்கே கூடி இருந்த ஆறு பேரின் உள்ளத்திலும் அளப்பறிய மகிழ்ச்சி.

மனது முழுக்க குற்றவுணர்வோடு வந்த வைபவ்விற்கு இப்போது கொஞ்சம் இதமாக இருந்தது.

மனதினுள் எந்த நெருடலும் இல்லாமல் இருவரது காதலையும் அவனால் ரசிக்க முடிந்தது.

அவர்களையே மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்த வைபவ்வின் கைகளை ஐஸ்வர்யா கிள்ளினாள் அவன் கைகளைத் தேய்த்தபடி அவளைப் பார்த்தான்

“என்ன சார் “எங்கிருந்தாலும் வாழ்க பாட்டை” ஆதிராவை பார்த்து மனசுல பாடிட்டு இருக்கீங்களா?” என்றுக் கேட்க வைபவ்வின் இதழ்களில் புன்னகை.

“இல்லை ஐஸ்வர்யா.  இனி தான் வாழ ஆரம்பிக்கணும். அதுவும் உன்னோட… வாழ்நாள் முழுக்க. ” என்று வைபவ் சொல்ல ஐஸ்வர்யாவின் கன்னக்கதுப்பில் வெட்கக் கவிதை.

விமல் ப்ரணவ்வை பழி வாங்கும் எண்ணத்துடன் ” டேய் மச்சான் வினய். உங்க வீட்டுல ஒரு புது லவ் பேர்ட்ஸ் ஒன்னு இருக்காமே உனக்கு தெரியுமா” என்றான் பூடகமாக.

உத்ராவும் ப்ரணவ்வும் ஒரு சேர வினய்யைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்தனர்.

ஆதிராவின் மீது இருந்து கண்களை எடுத்தவன் தலை குனிந்த இருவரையும் பார்த்து கொஞ்சம் சப்தமாகவே  “தெரியுமே மச்சான். அதுவும் அந்த இரண்டு லவ் பேர்ட்ஸ் கூட பிரிஞ்சுடலாம் பிரிஞ்சுடலாம்னு சொல்லி அக்கப்போர் பண்ணிட்டு இருக்குதே , அந்த லவ் பேர்ட்சை தானே கேட்கிற?” என்றான் சிரிப்புடன்.

“மச்சான் மச்சான் அதே லவ் பேர்ட்ஸை தான்டா சொல்றேன். நீ அப்போ முன்னாடியே கவனிச்சுட்டியா டா? ” என்றான் விமல் சிரித்துக் கொண்டே.

“அதை எல்லாம் எப்பவோ கவனிச்சாச்சு மச்சான். எப்போ அந்த லவ் பேர்ட்ஸ் வந்து என் கிட்டே சொல்றாங்கனு பார்ப்போம். ” என்று வினய் சொல்ல உத்ராவும் ப்ரணவ்வும் வேகமாக நிமிர்ந்தனர்.

“அண்ணா உங்க லவ் சேர்ந்த அப்புறம் தான் நாங்க உங்க கிட்டே சொல்லலாம்ணு நினைச்சோம் அண்ணா. ” என்றான் ப்ரணவ் லேசான வெட்கக் குரலில்.

“ஆமாம் அண்ணா… ” என்று உத்ராவும் சொல்லிவிட்டு ” உங்களுக்கு சம்மதம் தானே அண்ணா?” என்றாள் தயக்கமாக.

“எனக்கு எப்பவோ சம்மதம் உத்ரா.
ஆனால் நீங்க ரெண்டு பேரும் தான் கண்ணாமூச்சு விளையாடிட்டு இருந்தீங்க. இப்போவாது சேர்ந்தீங்களே. அது போதும்.” என்றான் ஆசுவாசமாக.

அவர்கள் இருவரும் காதலிக்கும் செய்திக் கேட்டு ஆதிராவிற்குள் பெரும் மகிழ்ச்சி.

ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் இருவரும் சேர வேண்டும் என ஆசைப்பட்டவளுக்கு அந்த செய்தி பெரும் உவகையாக இருந்தது.

மனதினுள் தோன்றிய உவகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் ஐஸ்வர்யா அவளின் முன்பு ஒரு காகிதத்தை வைத்தாள்.

ஆதிரா குழப்பமாக என்னவென்று எடுத்துப் பார்க்க பிரபல பாட்டு நிகழ்ச்சியில் அவள் பங்கேற்பதற்கான விண்ணப்பதை வைத்து இருந்தாள் ஐஸ்வர்யா.

ஆதிரா திரும்பி திகைப்புடன் பார்க்க  “நான் பண்ண தப்பை நான் சரி பண்ணனும்னு நினைக்கிறேன் ஆதிரா. நீ அந்த போட்டியோட ஃபைனல்ஸ்லே என்னாலே தான் கலந்துக்க முடியாம போயிடுச்சு. அதுக்கு ப்ரயாசித்தம்.” என்றவளை ஆதிரா புரியாமல் பார்த்தாள்.

“நான் தூங்கினதுக்கு நீ எப்படி காரணம் ஆக முடியும் ஐஸ்வர்யா? நீ எதுக்கு ப்ராயசித்தம் பண்ணனும்.” என்று குழப்பமாக கேட்டவளை கெஞ்சலாக பார்த்தாள் ஐஸ்வர்யா.

“ப்ளீஸ் ஆதிரா என்னை எந்த கேள்வியும் கேட்காதே. என் கிட்டே எந்த நியாயமான பதிலும் இல்லை. என்னை மன்னிச்சுடு.” என்று ஐஸ்வர்யா சொல்ல ஆதிராவிற்கு புரிவது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

ஆனாலும் இறந்த காலத்தில் நடந்த சம்பவங்களை கிளறி இப்போது தண்டனை கொடுப்பதிலேயோ கோபப்படுவதிலேயோ எந்த பலனும் இல்லை என்று புரிந்தவளுக்கு லேசாக  வருத்தப் புன்னகை.

ஐஸ்வர்யாவைப் பார்த்து மெல்லிய குரலில் “மன்னிச்சுட்டேன் ” என்றாள் மனதார.

அதைக் கேட்டதும் ஐஸ்வர்யாவின் உள்ளத்திலோ பெரு மகிழ்ச்சி.

ஆதிராவை அணைத்து கொண்டு  “தேங்க்ஸ் ஆதி மா” என்றாள்.

ஆதிராவும் பதிலுக்கு அணைத்துக் கொண்டாள்.

பின்பு அந்த டைனிங் டேபிளே அல்லோல் களப்பட்டது.

விமலும் ப்ரணவ்வும் மாறி மாறி பேசி எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டு இருந்தனர்.

வினய் ஆதிராவின் உள்ளங்கையை அழுந்தப் பற்றிக் கொண்டு எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டு இருந்தான்.

வைபவ்வும் ஐஸ்வர்யாவும் மீண்டும் மௌனத்தில் காதல் சம்பாஷனை நடத்திக் கொண்டு இருக்க அதைப் பார்த்த விமலும் ப்ரணவ்வும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி ” ஓஹோ அப்படியா செய்தி ” என்றனர்.

“அப்போ நாலு ஜோடிக்கும் சேர்த்து ஒரே மண்டபத்தை புக் பண்ணிடலாம்” என விமலும் ப்ரணவ்வும் ஒரு சேர சொல்ல எல்லோருடைய முகத்திலும் அழியாத சிரிப்பு  பரவியது.

——— சதிராட்டம் நிறைவுற்றது…