காதல் சுகமானது

images (1)-fb280ab3

காதல் சுகமானது 

 

முதலிலேயே அதிக மக்களை தன்னுள் அடைத்திருந்த அந்த நகர பேருந்தில் மேலும் பலர் முண்டியடித்து கொண்டு உள்ளே ஏறினர். அதில் அவளும் ஒருத்தி. 

 

முட்டிமோதி உள்ளே நுழைந்து கிடைத்த சிறு இடத்தில் தன்னை பொருத்தி கொண்டு கம்பியை பிடித்து நின்றவளுக்கு நிம்மதி பெருமூச்சு.

 

‘அப்பாடி, பஸ் கிடைச்சிடுச்சு, டைமுக்கு இன்டர்வியூக்கு போயிடலாம், கண்டிப்பா இந்த வேலை கிடைச்சிடும். கிடைக்கணும்’ அவளுக்குள் நம்பிக்கை வேண்டுதல்.

 

பாதி வழியில் பெரிய குலுக்கலுடன் பேருந்து‌ நின்று விட்டது. என்னவென்று பார்க்க, பேருந்து பிரேக் டவுன்! 

 

அவளுக்கு ‘அய்யோ’ என்றானது.

 

பயணிகள் அனைவரும் கீழே இறங்கி அடுத்து அடுத்து வந்த பேருந்துகளில் ஏறிக் கொண்டிந்தனர்.

 

இவள் மட்டும் கலங்கத்  துடித்த கண்களைக் கட்டுப்படுத்தி நின்றிருந்தாள்.

 

அப்பொழுது அவளை கடந்து சென்றது ஒரு இருசக்கர வாகனம் பின்னாள் ஒரு பள்ளி மாணவியுடன்.

 

இவள் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது சென்று வந்த அதே வழி தடத்தில் தான் அந்த மாணவியும் பயணிப்பாள்.

 

பேருந்து நிறுத்தம் வரை அவளுடன் வந்து பேருந்தில் பத்திரமாக ஏற்றி விட்ட நம்பிக்கையில் அவள் அன்னை வீடு நோக்கி நடக்க, இந்த மாணவியோ எந்த  குற்ற உணர்வும் இன்றி அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இதோ இப்போது சென்றாளே அதே போல் ஒரு வாலிபனுடன் பைக்கில் ஏறி செல்வாள்.

 

என்ன ஒரே ஒரு மாற்றம் ‌இவள் கல்லூரி பயிலும் பொழுது பார்த்த வாலிபன் இவன் இல்லை. அவளின்‌ அவசர சூழ்நிலையையும் மீறி அத்தனை வெறுப்பு மனதிற்குள்.

 

இத்தகைய நம்பிக்கையைத் தானே அவள் பெற்றோர்கள் அவள் மீது வைக்க தவறினார்கள். ஒவ்வோரு நாளும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள்.

 

அதற்கு அஞ்சி அவள் வாழ்க்கையில் இழந்தவற்றை நினைக்கையில் அவள் உதட்டில் ஒரு கசந்த முறுவல்.

 

கடந்த கால நினைவுகளோடு மிச்சமாய் அவன் நினைவும்.

 

மூன்று வருடம் அவள் செல்லும் பேருந்தில் அவளுக்கு ஒரு பத்து அடி தொலைவில் பின் தொடரும் அவனின் பார்வை.

 

முதலில் பெரிதாக தெரியாத இது நாட்கள் செல்ல செல்ல மெல்லமாய், செல்லமாய் ஒரு குறுகுறுப்பு இவள் மனதில், அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க துவங்கியிருந்தாள். பிறகு அவன் பார்வையால் பாவைக்கு வெட்க சிவப்பு கூட பரீட்சயமாகி இருந்தது.

 

இவள் பார்க்க துவங்கியதில் இருந்து, இவளின் கல்லூரி நிறுத்தம் வரை உடன் வருபவன், அதன் பிறகு பாதியிலேயே ஒரு சங்கடமான தலைக் கோதலுடன் இறங்கிவிடுவான்.

 

கல்லூரியின் இறுதி நாள். அவன் எண் அடங்கிய ஒரு காகிதத்தை அவசரகதியில் அவள் கையில் சொருகி விட்டு இறங்கி சென்றிருந்தான். அதையும்‌ அவள் அந்த பேருந்திலே வேண்டும் என்றே விட்டு சென்றிருந்தாள்.

 

ஆறு மாதம் கடந்து விட்டது அவன் சுவாசத்தின் வாசத்தைக் கூட காற்றிலும் காணவில்லை.

 

ஒரு பெரும் விரக்தி மூச்சுடன் அடுத்த பேருந்திற்காக தலையைத் திருப்ப அதே சங்கடமான தலைக் கோதலுடன் அவன்.

 

இவளுக்கு சிரிப்பதா? அழுவதா? என்றுக் கூட‌‌த் தெரியவில்லை. காரணம், மாலை இவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். அந்த மாப்பிள்ளையிடம் பேசி எப்படியாவது திருமணத்தை நிறுத்தி‌விடலாம் என்ற‌‌ நம்பிக்கையில் தான் இவள் இன்டர்வியூக்கு கிளம்பியதே‌, விதி அங்கும் பல்லிளித்து காட்டியது.

 

அவன் மெதுவாக அந்த கருத்த இரும்பு குதிரையை அவள் அருகில் நிறுத்த, பெண் எதுவும் பேசாது ஏறிக் கொண்டது.

 

அந்த ராயல் என்ஃபீல்டு நேராக சென்று நின்ற இடம் நேர்முகத்தேர்வு நடக்கும் அலுவலகம்.

 

அவள் இறங்கியதும் அவளின் வலது கையைப் பற்றி அதில் அழுத்தம் கொடுத்து விட்டு சென்று விட்டான் அவன். அதே சங்கடமான தலைக் கோதலுடன்‌.

 

நேர்முகத்தேர்வும் நல்ல படியாகவே முடிந்திருந்தது.‌ முடிவும் இவளுக்கு சாதகமாக. ஆனால் இவளின் வாழ்க்கை?

 

ஒரு நொடி மரணத்திற்கும் நொடிக்கு நொடி மரணிப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் சொல்லப்படாத காதலின் வலியோ?

 

ஒருவித வலியுடன் வீடு செல்ல பெண் பார்க்கும் படலத்திற்காக வீடே தயாராக இருந்தது. இவளையும் அதே வேகத்தில் தயார்படுத்தி கையில் தேனீருடன் தள்ளி விட்டார்கள்.

 

பெண் யாரையும் பார்க்க விருப்பமற்று கடமையென அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தது. பிறகு மாப்பிள்ளை அவளுடன் பேச விரும்புவதாக சொல்ல அவளின் வேலைப் பற்றி பேச வேண்டும் ‌என்ற எண்ணம் கூட‌ இல்லாமல் அவளின் அறைக்கு சென்றாள்‌.

 

அவளைத் தொடர்ந்து வந்த அந்த உருவம் அவள் கையில் எதையோ திணித்து விட்டு கேட்டது, “இப்போ ஆச்சும் என் நம்பரை சேவ் பண்ணி வெச்சுக்குவியா இல்ல கசக்கி போட்ருவியா?‍”

 

கண்களில் ததும்பிய கண்ணீருடன் அவள் கையில் இருந்த காகிதத்தை பார்க்க அவள்‌ கசக்கி எறிந்த தழும்புகளுடன் கூட அது அவளைப் பார்த்து சிரித்தது‌.

 

அவள் பின்னிருந்து இறுக்கமாக அணைத்தவன் அவளின் உச்சந்தலையில் ஈர முத்தமிட்டான். இனி சங்கடமான தலைக் கோதல் அவனுக்கு தேவையில்லை போலும்.‌..

 

***

(ரம்யா பூபாலன்)