காதல் தீண்டவே-12

தீரனைப் பார்த்த மாத்திரத்தில் மிதுராவின் முகத்தினில் கோபம் அலையாய் அடிக்கத் துவங்கியது.

அவளது பார்வையிலேயே அதை உணர்ந்தவனுக்கோ இதயம் சுருக்கென தைத்தது.

அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக  வேகமாக வந்து நின்றவனுக்கோ எப்படி மன்னிப்புக் கேட்பது என்ற சூட்சமம் பிடிப்படவில்லை.

‘மன்னிச்சுடுங்க’ என்ற ஒரே  வார்த்தை அவளுக்கு தான் இழைத்த  எல்லா அவமானங்களையும் துடைத்துவிடாது என்று புரிந்தவனுக்கோ நிர்கதியாய் நிற்கும் நிலை.

கலங்கிய முகத்துடன் நின்றுக் கொண்டு இருந்த தீரனை சென்று இறுக அணைத்துக் கொண்டான் ராஜ்.

பதிலுக்கு இறுக அணைத்துக் கொண்டவனது பார்வையோ மிதுராவின் முகத்தின் மீதே நிலைத்து இருந்தது.

தயங்கியபடி தள்ளி நின்றுக் கொண்டு இருந்தவளைப் பார்த்து “எப்படி இருக்கீங்க மிதுரா?” என்றான் இவனும் தயங்கியபடி.

“நல்லா தான் இருந்தேன் , நீங்க வரதுக்கு முன்னாடி வரைக்கும். ” பட்டென பதில் வந்தது அவளிடம்.

சட்டென கலங்கிப் போனது இவனது முகம்.

“போயிட்டு வரேன் ராஜ்.” என்று திரும்பி ராஜ்ஜிடம் சொன்னவள் தீரனைத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

வாடிய முகத்துடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனைக் காண ராஜ்ஜிற்கு லேசாக வலித்தது.

என் மீது வைத்த பாசம் தானே இவனது இந்த வருத்தத்திற்கு காரணம்.

தீரனைத் தோள் தொட்டு திருப்பியவன் ” நீ கவலைப்படாதே தீரா. மிதுரா உன் கிட்டே பழைய படி பேசுவா. அதுக்கு நான் பொறுப்பு.” என வாயசைத்து அவனது துயர் துடைக்க முயன்றான்.

“இல்லை ராஜ். தப்பு பண்ணது நான் அது சரி பண்ண வேண்டிய பொறுப்பும் என்னோடது தான். சரி பண்ணிடலாம்.” என்று சொன்னவன் பின்பு தன் சோகமான முகத்தை மாற்றிக் கொண்டு “ஆபிஸ்லே நான் இல்லாம ஒரே ஜாலியா என்ஞாய் பண்ணீங்க  போல சார். எப்பவும் கடுகடுனு இருக்கிற மூஞ்சுல சிரிப்புலாம் எட்டி பார்க்குதே. என்ன ஆச்சு ராஜ் சார்க்கு” என்று பல நாள் கழித்து புன்னகை மலர்ந்து இருந்த ராஜ் முகத்தைப் பார்த்து ஆச்சரியமாகக் கேட்டான்.

“மிதுரா தான் காரணம்.” என்ற ராஜ்ஜின் உதடு அசைவை படித்த தீரனுக்கு வியப்பாக இருந்தது கூடவே சிரிப்பாகவும் இருந்தது.

“ஆஹா… கடுகடுனு இருக்கிற உன்னை புன்னகை மன்னன் ஆக்கிட்டா. புன்னகை மன்னனா இருக்கிற என்னை சோகப் பாட்டு வாசிக்க வெச்சுட்டா. மொத்தத்துல அவள் நம்ம ரெண்டு பேரையும் மாத்திட்டா டா.” என்ற தீரனுக்குத் தெரியவில்லை. இனி தான் மிதுரா அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட போகிறாள் என்று.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

இலக்கில்லாமல் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த சீமாவின் நிலையை விஸ்வத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

பல வருடக் காத்திருப்புக்கு சீமாவிற்கு புறக்கணிப்பே பதிலாகக் கிடைத்து இருந்தது. அதுவும் உயிரையே வேரோடு பிடிங்கிப் போடும் புறக்கணிப்பு.

“யாரென்றே தெரியாது?” என்று காதலனின் வாய் மொழியில் இருந்து வரும் சொற்களுக்கு விஷம் இல்லாமல் கொல்லும் வலிமை இருக்கிறது.

அந்த விஷம் தான் இப்போது சீமாவின் நெஞ்சுக்குழியில் இறங்கி இருந்தது.

அந்த விஷத்திற்கு மாற்று மருந்துக் கொடுக்கும் பொருட்டு விஸ்வம் அருகில் வந்து நின்றார்.

“சீமா” என்றழைத்த குரலிலோ அன்பின் இழையோடி இருந்தது.

திரும்பிப் பார்த்தவளின் கண்களில் நீர்முத்துக்கள் வழியாத ஒரு வெற்றுப் பாலை.

எல்லாவற்றையும் இழந்தப் பிறகு கண்ணீர் கூட விட முடியாத இதயத்தின் சோர்வு அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

“அந்த அஷோக்குக்காக  வருத்தப்பாடதேனு சொல்லி உனக்கு அட்வைஸ் பண்ண மாட்டேன். எனக்கு உன் உணர்வுகள் புரியும். இப்படி எல்லா உணர்வையும் அடக்கி கல் மாதிரி இருக்காதே. அழு அழுது முடிச்சுடு சீமா. ” என்றவரின் கைகள் சீமாவின் தோளைத் தொட அதுவரை இறுகிப் போய் இருந்த சீமா பெருங்குரலெடுத்து அவர் தோளில் சாய்ந்தார்.

சீமாவின் கண்ணீர் துளிகள் விஸ்வத்தின் மார்பில் முத்தானது.

மொத்தமாய் அழுது முடித்து ஓய்ந்த சீமா, ஒரு பெரிய மூச்சோடு தன் கண்ணீரை அழுந்த துடைத்தார்.

அந்த விரல்களில் இருந்த அந்த  அழுத்தம் இனிமேல் தான் இந்த காரணத்திற்காக அழ மாட்டேன் என்று சொல்லாமல் சொல்வதுப் போல் இருந்தது.

அதை உணர்ந்த விஸ்வத்தின் இதழ்களில் இளநகை.

“சீமா இன்னைக்கு நீ மட்டும் வாடல… பூ கூட வாடிடுச்சு தெரியுமா. நீ உன்னையும் கவனிக்கல, பூவையும் கவனிக்கல. ” என்று விஸ்வம் சொல்ல அப்போது தான் நியாபகம் வந்தவராய் பூக்களை கவனிக்க ஓடினார், கூடவே தன்னையும்.

💐💐💐💐💐💐💐💐💐

தன் இருக்கைக்கு அருகில் அமர்ந்து இருந்த அபியையே பார்வையால் அளவெடுத்துக் கொண்டு இருந்தாள், சிற்பிகா.

அந்த பார்வையின் தாக்கம் தாளாமல் திரும்பி அவளைப் பார்த்தான்..

” எதுக்கு சிற்பி இப்படி என்னையே குறுகுறுனு பார்க்கிறிங்க?”

“இல்லை புல் தரையிலே புஷ்-அப்ஸ் எடுத்து சமாளிக்கலாம்ன்ற ஞானதோயம் எப்படி உங்க மூளைக்குள்ளே தோணுச்சுனு யோசிச்சு பார்த்துட்டு இருக்கேன். “

“ப்ளீஸ் சிற்பி தயவு செய்து அந்த புஷ்-அப்ஸ் மேட்டரை விட்டுடேன்.”

“சரி நீங்க வேற ஏதாவது இதே மாதிரி கிறுக்குத்தனம் பண்ணுங்க. அப்போ இந்த மேட்டரை விட்டுட்டு அந்த மேட்டருக்கு தாவிடுறேன்”

“நான் கிறுக்குனே முடிவு பண்ணிட்டியா சிற்பி? படு சூப்பர் போ ! “

“எஸ் எஸ்.. இன்னைக்கு மார்னிங்கே கன்ஃபார்ம் ஆகிடுச்சு. ” என்று அவள் சொல்ல அபி கடுப்பாகி திரும்பிக் கொண்டான்.

“அபி சார் எனக்கு ஒரு டவுட். “

“ம்ம்…” என்று திரும்பாமலே பதில் வந்தது.

“இல்லை நான் இங்கே கலாய்க்கிறதுக்கு எல்லாம் சேர்த்து அங்கே ஆபிஸ்ல வெச்சு செய்ய மாட்டிங்களே. “

“ஹா ஹா அதெல்லாம் பண்ண மாட்டேன். ஆபிஸ்ஸை விட்டு வெளியே வந்த அப்புறம் எல்லாரும் ஒன்னு தான். தீரன் ராஜ் கூட ஆபிஸ்ல இருக்கிற வரை தான் சார்னு கூப்பிடுவேன். வெளியே வந்த அப்புறம் அவங்க எனக்கு ப்ரெண்ட்ஸ்”

“அப்போ நானும் வெளியே வந்த அப்புறம் உங்களுக்கு ப்ரெண்ட்டா?” என்று ஆர்வம் மின்னக் கேட்க அபி முகத்தில் லேசாக ஒரு தயக்கம்.

பின்பு ஒட்டு மொத்த குரலையும் ஒன்று திரட்டி “நோ நீ எனக்கு enemy ” என்று கேலியாக சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டான்.

“என்னது நான் எனிமியா? எதனாலே? எதுக்காக?”

“புஷ்-அப்ஸ் காக…” என்று அவனிடம் இருந்து ஒற்றை வரியில் பதில்.

“ஓ அப்படிங்களா… ஓகே அபி. இனி எனிமியாவே இருந்துக்கலாம். ” என்று சொல்லிவிட்டு தன் இருக்கையின் ஆசுவாசமாக சாய்ந்தவள் மீண்டும் நிமிர்ந்து கேள்வியாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

சலிப்புற்றவனாக ” இப்போ என்ன டவுட்?” என்றான் அவளைத் திரும்பி பாராமலேயே.

“இல்லை அபி.. ப்ரெண்ட்ஸ் டே மாதிரி enemy’s day என்னைக்கு வரும்னு தெரியுமா? ஏன்னா அன்னைக்கு உங்களுக்கு விஷ் பண்ணனும்ல. ” என்று சிற்பி கேட்க அபி எந்த பதிலும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ஆனால் அவனையும் அறியாமல் ஒரு மெல்லியதான புன்னகை கொடி முகத்தில் படர ஆரம்பித்து இருந்தது.

அதே கொடி தான் சிற்பியின் முகத்திலும் படர்ந்திருந்தது.

ஆனால் வாசத்தை மறைக்க இரு உள்ளங்களும் மெனக்கெட்டு கொண்டு இருந்தன.

💐💐💐💐💐💐💐

வீட்டிற்குள் நுழைந்த மிதுராவுக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது.

அழுது அழுது வீங்கிப் போய் இருந்த தாயின் முகம் அவளை என்னவோ செய்தது.

திரும்பி தன் தகப்பனைப் பார்த்தாள்.

இயல்பாக இருக்க முயற்சித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் மீறி ஒரு வருத்தம் அவரது முகத்தில் அலையாடி கொண்டிருந்தது.

என்ன தான் நடக்கிறது இங்கே? என்ற கேள்வி அவள் மூளையில் பல மின்னல்வெட்டுக்களை உருவாக்கியிருந்தது.

ஒரு முடிவுடன் அவர்கள் இருவரின் முன்பும் வந்து நின்றாள்.

குரலிலும் ஒரு அழுத்தம் கூடி இருந்தது.

“உங்களுக்கு இடையிலே என்ன ப்ரச்சனை இருக்குனு நான் தெரிஞ்சுக்கலாமா? நீங்களா சரி பண்ணிடுவிங்கனு தான் நான் இவ்வளவு நாளா கேட்கல. ஆனால் இனியும் கேட்காம இருக்கிறது எனக்கு சரினு படல அதான் கேட்கிறேன். ” என்றுக் கேட்க இருவரிடமும் பெரும் மௌனம்.

அந்த மௌனத்தின் சப்தத்தைக் கேட்க முடியாமல்  சீமாவே கலைத்தார்.

“உண்மை தான் மிது. எங்க இரண்டு பேருக்கு இடையிலே ஒரு பிரச்சனை இருந்ததுதான். ஆனால் இப்போ என் மனசுல இருந்த வேண்டாத களையை நான் எடுத்துப் போட்டுட்டேன். இனி எந்த ப்ரச்சனையும் இல்லைடா. எல்லாம் சரியாகிடுச்சு.”

“உன் மனசுக்குள்ளே இருக்கிற களையை எடுத்திட்ட அது சரி. ஆனால் அப்பா மனசுலே இருக்கிற களையையும் எடுத்தாச்சா?” என்றுக் கேட்க மீண்டும் கணவன் மனைவியிடத்தில் பெரும் மௌனம்.

விஸ்வத்தின் மனதினில் இருக்கும் களையை காலத்தால் கூட எடுக்க முடியாதே.

அது வேரறுக்க முடியாத களை என்று மகளுக்கு எப்படி புரிய வைப்பது என சீமா ஆலோசிக்க விஸ்வமோ தலைக்குனிந்தபடி தன்னறைக்குள் புகுந்துக் கொண்டார். செல்லும் தன் தந்தையே கவலையாகப் பார்த்த மிதுரா தன் தாயிடம் திரும்பினாள்.

“அம்மா  நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழறா மாதிரி நடிச்சுத் தான் பார்த்து இருக்கேன். இனியாவது உண்மையா  சந்தோஷமா வாழுங்களேன்” என்று அழுகுரலில் கேட்ட தன் மகளின் தலைமுடியை வாஞ்சையாக கோதியவர் ஒரு முடிவுடன் நிமிர்ந்தார்.

“உண்மையா தான் டா சொல்றேன்.  என் மனசுல இவ்வளவு நாளா இருந்த நெருடல் இன்னைக்கு சயாந்திரமே விலகிப் போயிடுச்சு. இனி நானும் அவரும் சந்தோஷமா இருப்போம். சத்தியம் மிது.  ” என்று சொன்ன தாயின் உறுதியில் மிதுராவின் மனதினில் புதியதாய் ஒரு வெளிச்ச மின்னல்.

புதுத்தெம்புடன் வந்து கட்டிலின் மீது விழுந்த நேரம் அலைப்பேசி சிணுங்கி அவளை அழைத்தது.

எடுத்துப் பார்த்தாள்.

அவளுடைய பால்யக் காலத்து நண்பன் விமல் அழைத்து இருந்தான்.

முகத்தில் ஒளிர்ந்த சந்தோஷத்தோடு எடுத்துக் காதில் வைத்தாள்.

வைத்ததும் அவள் கேட்ட முதல் கேள்வி இது தான்.

“டேய் விமல் நீ இன்னும் சாகலையாடா?”

“நீயே உயிரோட இருக்கும் போது நான் ஏன்டி சாகணும்.”

“சரி சரி சொல்லு… சார் காரணம் இல்லாம கால் பண்ண மாட்டிங்களே. என்ன அமெரிக்கா எல்லாம் நல்லா இருக்கா? இல்லை ஏதாவது ப்ரச்சனையா? என்னோட உதவி ஏதாவது தேவைப்படுதா.”

“ஆமாம் இங்கே என் வீட்டுக்கு குழாயிலே தண்ணீர் வரல வந்து சரி பண்றியா? நீ வேற ஏன்டி. நான் கால் பண்ணது ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக… அதுவும் ஆதன் சம்பந்தப்பட்ட விஷயம்.”

“ஆதனைப் பத்தியா? என்ன விஷயம் டா? சீக்கரமா சொல்லு விமல்.”

“சரி நீ ஃபர்ஸ்ட் சொல்லு. truth or dare. “

இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் ஏகத்துக்கும் பெருமூச்சுவிட்டாள்.

சிறுவயதினில் இருந்தே இவர்களுக்குள் இருக்கும் பழக்கம் இது.

ட்ரூத் அண்ட் டேர் கேம் விளையாடிய பின்பு தான் தாங்கள் சொல்ல வந்த விஷயங்களையே சொல்வர்.

இப்போதும் அதேப் போல தான் அந்த விளையாட்டிற்குள் இறங்கி இருந்தான் விமல்.

“டேய் விமல். நீ முதலிலே விஷயத்தை சொல்லு. நான் அப்புறம் டேர் பண்றேன். “

” நோ வே… ஃபர்ஸ்ட் நான் கொடுக்கிற  டேர் பண்ணிட்டு வா. அப்புறம் தான் விஷயத்தை சொல்லுறேன்.”

“சரி சொல்லித் தொலை. என்ன பண்ணனும்?”

“நாளைக்கு high heels போடணும். அது மட்டும் இல்லாமல் நாளைக்கு நீ பார்க்கிற எல்லார் கிட்டேயும் சிரிச்சுக்கிட்டே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு சொல்லணும்”

“டேய் என்ன டா கன்றாவித்தனமான டேரா இருக்கு. நான் பண்ண மாட்டேன் போ”

“சரிங்க மேடம் பண்ணாதீங்க. நானும் ஆதனைப் பத்தி சொல்லல. “

“சரி சரி மிராட்டாதே. செஞ்சு தொலையுறேன் “

“ஹா ஹா அப்படி வா வழிக்கு. அப்புறம் மிது மேடம் என்னை ஏமாத்தனும்னு மட்டும்  நினைக்காதே. உனக்கே தெரியும் நீ ஏமாத்தின அடுத்த நாளே உனக்கு உடம்பு முடியாம போயிடும்னு. சோ ஏமாத்தாம நாளைக்கு நீ பார்க்கிற எல்லார் கிட்டேயும் சிரிக்கணும் சரியா. ஓகே டேர் முடிச்சுட்டு நாளைக்கு நைட்டு கால் பண்ணு. நான் உனக்கு ஆதனைப் பத்தின தகவலை சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு அவன் வைக்க இவளுக்கு பெருமூச்சு வந்தது.

‘பாவிப் பயலே. இன்னைக்கே சொல்லித் தொலைஞ்சு இருந்தா நான் நாளைக்கு வரைக்கும் என்னவா இருக்கும்னு மண்டையைப் பிச்சுக்க மாட்டேன்ல’

சரி ஆதனைப் பத்தி என்ன கண்டுபிடிச்சு இருப்பான்? ஒரு வேளை ஆதன் யாரா இருக்கும்னு கண்டுபிடிச்சு இருப்பானா?

இல்லை அவருக்கு கல்யாணம் ஆகி இருக்கும்னு கண்டுபிடிச்சு இருப்பானா?

இல்லை மனுஷன் இன்னும் சிங்கிள்னு கண்டுபிடிச்சு இருப்பானா? என்னத்தை கண்டுபிடிச்சு இருப்பான்.. என்று யோசித்தபடி படுக்கையில் விழுந்தாள் அவள்.

என்னத் தான் கண்டுப்பிடித்து இருப்பான் அவன்?