காதல் தீண்டவே-16b

நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது.

கட்டிலில் இருந்து எழுந்து சோம்பல் முறித்தவளின் வயிற்றில் மிருதங்க தாளங்கள்.

பசி போடும் ராகம் போல!

கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.  அங்கே ராஜ் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு காகிதத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

மிதுரா வந்ததும் அந்த காகிதத்தை தள்ளி வைத்துவிட்டு தட்டையும் உணவையும் எடுத்து வைத்தபடி “இப்போ ஓகே வா?” என கேட்டான்.

“யெஸ். மச் பெட்டர்…”என்றவள் ராஜ் வைத்துக் கொடுத்த உணவை வேக வேகமாக விழுங்கத் துவங்கினாள்.

“நீங்க சாப்பிட்டிங்களா ராஜ்?” என்றவள் கேட்க அவன் தலை ஆமென அசைந்தது.

“ஆமாம் என்ன பேப்பர்ல?” என்றாள் சப்பாத்தியை வாயில் பிய்த்து போட்டபடி.

“இந்த ஓவியத்துக்கு கவிதை எழுதிட்டு இருந்தேன்.” சொல்லியபடி அலைப்பேசியில் ஒரு ஓவியத்தைக் காண்பித்தான்.

மூன்று குழந்தைகளும் கையில் மூன்று  நிலாக்களைப் பிடித்தபடி ஓவியம் தத்ரூபமாகவும் அழகாகவும் வரையப்பட்டு இருந்தது. அடுத்து கவிதையை எடுத்து வாசித்தாள்.

யார் சொன்னது ஒரே

    ஒரு  நிலவு தான்

பூமியில் இருக்கிறது என்று….

     நள்ளிரவில் விளையாடிக்

கொண்டு இருக்கும்

    மூன்று சிறுவர்களும்

தன்னுடனே ஒவ்வொரு

    நிலவை வீட்டிற்கு

கூட்டி செல்கிறார்கள்….

படித்ததும் அவளது கண்களில் பாராட்டின் படரல்.

“வாவ் சூப்பர் ராஜ். நல்லா கவிதை எழுதுறீங்க.” என்று மனதார பாராட்டியவள் சாப்பிட்டு முடித்துவிட்டு அவனிடம் வந்து நின்றாள். அவன் கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.

“நல்லா தூங்கி எழுந்துட்டேன். இப்போ போர் அடிக்குதே.” என்றவள் சொல்ல ராஜ்ஜின் விரல்கள் ரிஸார்ட்டின் பின்னே குட்டி காடுப் போல காட்சியளித்த இடத்தை சுட்டிக் காட்டியது.

“குட்டியா ஒரு வாக் போகலாமா?” என்றுக் கேட்டான்.

“போகலாமே. எனக்கு இந்த மாதிரி காட்டுக்குள்ளே நடக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இருங்க மொபைலை எடுத்துட்டு வரேன்” சொல்லிவிட்டு தன்னறைக்கு வந்தவள் மொபைலையும் சால்வையும் எடுத்துக் கொண்டு அவளின் முன்பு வந்து நின்றான்.

மணி மாலை ஆறரையை நெருங்கியிருந்தது.

“மிது அரை மணி நேரம் மட்டும் தான் நமக்கு டைம். ஏழு மணிக்குள்ளே திரும்பி வந்துடணும்.” என ராஜ் சொல்ல சம்மதமாக தலையசைக்க அவர்களின் பயணம் தொடங்கியது.

அந்த இடமே அவ்வளவு ரம்மியமாக இருந்தது. தென்றல் காற்றின் இதமான வருடல். அந்த இதமான வருடலில் நாய்க்குட்டியைப் போல முடியை சிலிர்த்துக் கொண்ட நெடிந்துயர்ந்த மரங்கள். வித்தியாசமான பறவை ஒலிகள். வாயு மண்டலம் முழுக்க ஏலக்காய் வாசம்.மௌனத்தின் வீணை மீட்டல்.  பாதுகாப்பு அரணாய் ராஜ்ஜின் நட்பு. எந்த பரபரப்பும் இல்லாத ஒரு ஆசுவாச நடை.

ஆஹா அத்தனை அழகாக இருந்தது அந்த நடைப் பயணம். ரசித்து நடந்துக் கொண்டு இருந்தவளின் முன்பே கைக்கடிகாரத்தை நீட்டினான் ராஜ். 

அதில் மணி ஏழு.

ராஜ் சொன்ன கால அவகாசம் முடிந்திருந்தது.

“ப்ளீஸ் இன்னும் ஒரு பத்து நிமிஷம்” என மிதுரா கேட்க அவனோ மறுத்து தலையசைத்தான்.

“நைட்டுக்கு மேலே சேஃப் இல்லை மிதுரா. நாளைக்கு காலையிலே வேணா வரலாம்.” என அவன் சொல்ல அப்போதும் சமாதானம் இல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தவளை விதிர்க்க செய்தது, தூரத்தில் எங்கேயோ கேட்ட விலங்கின் குரல்.

வந்த

பயத்தினில் கையிலிருந்த அலைப்பேசி விழுந்ததையெல்லாம் கவனிக்கும் நிலையினில் அவள் இல்லை.

சட்டென்று தாவி ராஜ்ஜின் கையை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டவள் போகலாம் என்றாள் வேகமாக.

அவளது பயத்தைப் போக்கும் விதமாய் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவனோ ரிஸார்ட் இருக்கும் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பதினைந்து நிமிடத்தில் இருவரும் ரிஸார்ட்டை நெருங்கியிருந்தனர்.

சரியாக அதே நேரம் அவர்களுடைய சுற்றுலா பேருந்து வந்து நிற்க அதில் இருந்து எல்லாரும் வரிசையாக இறங்கினர்.

இறங்கியவர்கள் அத்தனை பேரின் கண்களும் வித்தியாசமாய் ராஜ்ஜையும் மிதுராவையும் பார்த்தது.

ஏன், தீரன் சிற்பி அபி கூட அப்படி தான் பார்த்தனர்…

குழப்பமாக விழுந்த பார்வைகளை புரிந்து கொள்ள முடியாமல் ராஜ் நிற்க, அப்போது தான் நினைவு வந்தவளாக மிதுரா ராஜ்ஜின் கரத்தில் இருந்து வேக வேகமாக தன் கரத்தை விலக்கிவிட்டு தீரனைப் பார்த்தாள்.

அவன் முகத்தில் மொழிப் பெயர்க்க முடியாத பாவனைகள்.

எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஏனோ தீரன் அப்படி எதுவும் பேசாமல்  சென்றது அவள் மனதினில் சோகத்தைக் கிளப்பிவிட்டு இருந்தது.

செல்லும் தீரனையே வருத்தமாக தொடர்ந்தது மிதுராவின் விழிகள்.

“ஹே மிது, இப்போ எப்படி இருக்கு? தலைவலி போயிடுச்சா? ” என்று சிற்பிகா அக்கறையாய்க் கேட்க தன் பார்வையை மீட்டுக் கொண்டவள் சிற்பியை நோக்கினாள்.

“அதெல்லாம் தூங்கி எழுந்த அப்பவே போயாச்சு சிற்பி, சின்னதா ஒரு வாக் போயிட்டு வந்த அப்புறம் ஐ யம் மச் பெட்டர்” என்று சொல்லியவளை புன்முறுவலுடன் பார்த்த சிற்பிகா அவளிடம் அன்றைய நாளில் நடந்த கதையை எல்லாம் அளந்துக் கொண்டும் அபியை வம்பிழுத்துக் கொண்டும் இருக்க  அதைக் கேட்டு சிரித்து சிரித்து சோர்ந்துப் போனர் மிதுவும் ராஜ்ஜும்.

பத்தரை மணி வரை அவர்களது அரட்டைத் தொடர அபி பசிக்கிறது என என்ட் கார்ட் போட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டான்.

சிற்பியும் ராஜ்ஜூம் கூட சாப்பிட சென்றுவிட மிதுரா மாலையே  உண்டுவிட்டதால் அவர்களுடன் செல்லாமல் அந்த தோட்டத்தில் தனித்து அமர்ந்தவளுக்கு வெகுநேரம் கழித்து அலைப்பேசியின் நினைவே வந்தது.

ஆதன் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு தந்தை தாயிடம் அலைப்பேசியில் பேசிவிடுவாள்.

இப்போது பேசுவதற்காக அலைப்பேசியை தேடினால், அதைக் காணவில்லை.

அப்போது தான் விலங்கின் சப்தம் கேட்டு தவறவிட்ட அந்த அலைப்பேசியின் நினைவு வந்தது.

அவசர அவசரமாக எழுந்தவள் அந்த குட்டிக் காட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். ஆனால் அதற்குள் அடி எடுத்து வைக்கும் முன்பு அந்த விலங்கின் ஒலி நினைவிற்கு வந்து அவளை பயமுறுத்தியது. தனியாக சென்று அலைப்பேசியை மீட்டுவிட முடியுமா என்று யோசனையுடன் அங்கேயே நின்றவளை “மிதுரா” என்ற தீரனின் குரல் கலைத்தது.

தனித்து அமர்ந்துக் கொண்டிருந்த மிதுராவைப் பார்த்து வெளியே வந்த தீரனோ அவள் தனியாக காட்டை நோக்கி செல்வதைப் பார்த்ததும் வேகமாக அவளருகில் இப்போது வந்து நின்று இருந்தான். கலக்கத்துடன் இருந்த முகத்தைப் பார்த்து “என்னாச்சு?” என்றுக் கேட்க அலைப்பேசி தவறவிட்ட விஷயத்தை சொன்னாள்.

தன் கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தான்.

மணி 10.40

யோசனையுடன் அவளைப் பார்த்தவனோ “இந்த நேரத்திலே காட்டுக்குள்ளே போறது சேஃப் இல்லை மிதுரா. நாளைக்கு எடுத்துக்கலாம்”என்றான்.

“இல்லை தீரன். இருட்டிட்டு இருக்கு. மழை வந்தா போன் போயிடும். நாங்க காட்டுக்குள்ளே ரொம்ப தூரம் எல்லாம் போகல. ஒரு பதினைந்து நிமிஷ நடை தான். சீக்கிரமா எடுத்துட்டு வந்துடலாம் தீரன். ப்ளீஸ்”என்றவளது கெஞ்சலையும் அவளது  வார்த்தைகளையும் கணக்கிட்டுப் பார்த்தவன் சரியென்ற தலையசைப்புடன் அவளுடன் நடந்தான்.

மாலை நேர வனத்திற்கும் இரவு நேர வனத்திற்கும் ஏகப்பட்ட மாற்றங்கள், வித்தியாசங்கள்.

அப்போது ரம்மியமாக காட்சியளித்த காடு இப்போது பயத்தின் உறைவிடமாய் தெரிந்தது.

அப்போது இன்னிசையாய்க் கேட்ட பறவைகளின் ஒலி இப்போது திடுக்கிடும் ஓசையாய்.

பயத்தில் அன்னிச்சையாய் அவளது கரங்கள் அவனை இறுகப் பற்றிக் கொண்டது.

அவள் ஸ்பரிசத்தில் பட்டென்று திரும்பிப் பார்த்தான் அவன்.

அவள் முகத்தினில் படிந்திருந்த பயரேகைகளை படித்தவன் எதுவும் சொல்லாமல் திரும்பிக் கொண்டு அலைப்பேசியைத் தேட ஆரம்பித்தான்.

வந்து இருபத்தைந்து நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் அலைப்பேசி கிடைத்தபாடில்லை.

இன்னும் எவ்வளவு நேரத்தில் கிடைக்கும் என்றும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

“மிதுரா இந்த இடத்திலே தான் விழுந்ததா? கன்ஃபார்மா தெரியுமா?” என்று தீரன் கேட்க அவள் வேகமாக தலையசைத்தாள்.

“ஆமாம் தீரன். இங்கே இருக்கும் போது தான் பயங்கரமா ஒரு சப்தம் கேட்டுச்சு… நான் உடனே பதறிப் போய் போனைப் போட்டுட்டு ராஜ் கையைப் பிடிச்சேன்” என்றவள் சொல்ல ராஜ்ஜும் அவளும் ஏன் கைக்கோர்த்தபடி வந்து இருந்தார்கள் என்ற உண்மை இப்போது அவனுக்கு விளங்கியது.

அவன் முகத்தினில் அதுவரை இருந்த இறுக்கம் மறைந்துப் போய் முன்னேறிச் சென்று பார்த்த நேரம்,  மிதுராவின் அலைப்பேசி ஒலி காதை லேசாக தீண்டியது.

இருவரின் கண்களிலும் மின்னலடிக்க வேக வேகமாக அந்த இடத்தை விழிகளால் அலசினர்.

தொலைவில் இருந்த ஒரு குட்டி மேட்டில் மீண்டும் ஒளிர்ந்து அடங்கியது அலைப்பேசியின் தொடுதிரை. அதைக் கவனித்துவிட்ட  மிதுரா ஓடிப் போய் எடுத்தாள்.

அவள் நண்பன் விமலிடம் இருந்து தான் அழைப்பு வந்து இருந்தது.

இறுதியாய் ஒரு குறுஞ்செய்தியும்.

“மிது, நம்ம ப்ளான் சக்சஸ். இன்னைக்கு ஆதனோட ஷோ வரல. ஆதனை நம்ம கண்டுபிடிச்சுட்டோம். ராஜ் தான் ஆதன்” என சொல்ல மிதுரா திகைத்துப் போனாள்.

விமலும் மிதுராவும் நேற்றுப் போட்ட திட்டத்தின் படி இரவு பதினொரு மணிக்கு மேலே ராஜ்ஜைப் பிடித்து வைத்து இருந்தால் ஆதனால் நிகழ்ச்சியில் பேச முடியாது. அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம் என திட்டமிட்டு இருந்தனர்.  ஆனால் நேற்று ஆதனின் குரல் ஒலித்தது.

இன்றோ ஒலிக்கவில்லை.

திரும்பி தீரனைப் பார்த்தாள்.

இவன் தான் அவனோ!

குழப்பத்தின் பிடியில் இருந்தவள்

இதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் யோசித்துப் பார்த்தாள்.

முதல் காதலைப் பற்றி பேசும் போது ராஜ் மட்டும் இல்லையே தீரனும் தானே இருந்தான். அதேப் போல நேற்று அந்த அறையினில் ராஜ்ஜுடன் இவனும் தானே இருந்தான். இவனும் இரவு சீக்கிரமாக உறங்கும் பழக்கம் இருக்கிறது என்று சொல்லி அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் கையில் அகப்படாதவனாய் இருக்கின்றான்.

இன்னும் தீர்க்கப்படாதது அந்த க்ரீன் கார்ட் ஹோல்டர் என்ற சந்தேகம் மட்டும் தான்.

நிமிர்ந்து தீரனைப் பார்த்தாள்.

“தீரன், நீங்களும் க்ரீன் கார்ட் ஹோல்டர்னு ராஜ் சொன்னாங்க உண்மையா?” என்று போட்டு வாங்க முயன்றவளின் முயற்சி வீண் போகவில்லை.

“ஆமாம் மிதுரா. உண்மை தான்.” என்று சொல்லிவிட்டு கைக்கடிகாரத்தைத் திருப்பி திருப்பிப் பார்த்து பதற்றப்பட்டான்.

நேற்று அவள்  இணைத்துப் பார்த்த இரண்டு புள்ளியில் ராஜ் என்னும் ஒரே நேர்க்கோடு தான் இருந்தது.

ஆனால் இப்போதோ அந்த நேர்க்கோட்டில் இருந்து தீரன் என்ற கிளைக்கோடு!

ஒரு முடிவுடன் நிமிர்ந்தவள் தீர்க்கமாக “

ஆதன்” என்றழைக்க தன்னையறியாமல் திரும்பினான் தீரன்.

ஆக இந்த ஆதன் வேறு யாருமில்லை, இந்த தீரனே தான்!