காதல் தீண்டவே -21

சில நேரங்களில் அப்படி தான்…

புயலையும் நாமே உருவாக்கிவிட்டு மழைபெய்துவிடுமோ என பயந்து கொண்டிருப்போம்.

அப்படி தான் தீரனும் இல்லாதவொன்றை கற்பனை செய்துகொண்டு நடவாத ஒன்றிற்காக பயந்து கொண்டிருந்தான்.

“உதிரத்துடிக்கும்பூ” என்ற ராஜ்ஜின் உதட்டசைவைப் படித்த தீரனுக்குள் கணக்கிடவியலா திகைப்பு.

ஆக, ராஜ் காதலிப்பது மிதுராவையல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு சில்லுனுஒருகாதல் நிகழ்ச்சிக்கு மெயில் அனுப்பிய பெண்ணை!

உதிரத்துடிக்கும்பூ@gmail.com  மெயில் ஐடியிலிருந்து, பெயர் குறிப்பிட விரும்பாத பெண் சொல்லிய வாழ்க்கைப்பதிவு, இன்னுமே தீரனுக்கு நினைவிருந்தது.

மறக்ககூடிய பதிவா அது!

அப்படி மறக்கமுடியாமல்தான்,  ராஜ்ஜ்ம் முகமறியா அந்த பெண்ணை காதலிக்கத் துவங்கிவிட்டானோ?

யோசனையுடன் நிமிர்ந்து “எதனால அந்த பெண்ணை பிடிச்சது?” என வினவ, தீரனின் அலைப்பேசி அலறியது.

பெங்களூர் கிளையிலிருந்து அழைப்பு!

எடுத்துப் பேசியவன் சிந்தனைமுடிச்சோடு லவுட்ஸ்பீக்கரில் போட்டான்.

அவர்கள் சொன்ன செய்தியில் ராஜ்ஜின் முகமும் மாறியது.

“சார், நமக்கு ப்ராஜெக்ட் கொடுக்கிறதாயிருந்த நிவின் மோட்டார்ஸ், திடீர்னு முருகப்பா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கொடுக்கப் போறதா சொல்றாங்க. என்னாலே அவங்களை கன்வின்ஸ் பண்ண முடியல… நீங்க இங்கே வரமுடியுமா?” என்ற வார்த்தைகளைக் கேட்டு இரண்டு கார்த்திக் முகத்திலும் குழப்பமுடிச்சு.

சென்றவாரம் வரை தங்களுடைய கம்பெனிக்கு கொடுப்பதாயிருந்தவர்கள் இந்த வாரம் புதியகம்பெனிக்கு தர முடிவெடுத்துவிட்டார்களே!

எதனால்? ஏன்?

தொழில்துறையில் இதுவரை இந்த முருகப்பா இன்சூரன்ஸ் பெயரை கடந்து வந்ததேயில்லை இவர்கள்.

திடீரென எங்கிருந்து  முளைத்தது இந்த புதிய கம்பெனி?

யோசனையுடன் அந்த கம்பெனி விவரங்களை சமூகவளைத்தளங்களில் தேட அங்கிருந்த புகைப்படம் கண்டு இரண்டு கார்த்திக்கின் முகத்திலும்அதிர்வு.

முருகப்பாஇன்சூரன்ஸ் நிறுவனரருகே உரிமையாய் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள் கயல் என்கிற சிவானி.

அந்த புகைப்படத்தைப் பார்த்த இருவரின் மனதினில் இப்போது ஒரே எண்ணம் மட்டும் தான்…

எப்பாடுபட்டாவது அந்த ப்ராஜெக்ட்டை முருகப்பா இன்சூரன்ஸ் கைகளில் கிடைக்காமல் தடுத்துவிட வேண்டுமென்பதே.

முடிவுடன் நிமிர்ந்து ராஜ் பார்த்தான்.

“தீரா, நான் போறேன்… நீ இங்கே பார்த்துக்கோ.  இந்த தடவை அந்த கயலை நான் ஜெயிக்கவிடமாட்டேன்டா… அவளுக்கு கொடுக்க வேண்டியது கொடுத்துட்டுவரேன்.” ராஜ் உறுதியுடன் சொல்ல தீரனின் முகத்தில் நம்பிக்கைபடரல்.

💐💐💐💐💐💐💐💐💐💐

எப்போதும் இரண்டு கார்த்திக்கிற்கிடையே அமர்ந்து பழக்கப்பட்டவளுக்கு இந்த பயணம் புது அனுபவமாயிருந்தது.

யோசனைகோடுகளுடன் அமர்ந்திருந்த தீரனின் முன்பு ஹெட்செட்டை நீட்ட, கவனம் கலைந்து வாங்கியவனின் மனமோ அந்த குரலில் லயிக்காமல் தவித்துக் கொண்டிருத்தது.

“தீரன், என்னாச்சு ஏன் முகத்திலே இவ்வளவு கலக்கம்?” அவனை உற்றுப்பார்த்தபடி கேட்டாள்.

“நம்ம கம்பெனிக்கு பெரிய ஆபத்துவரப் போறதா மனசு சொல்லுது… ஆனால் எந்த ரூபத்திலேனு தெரியல மிது”  கவலையுடன் இருக்கையில் சாய்ந்தான்.

“தீரன் நீங்க நிகழ்காலத்துல இருந்தாலும் உங்களோட எண்ணங்கள் எதிர்காலத்துல இருக்கு. அதனாலே தான் பயப்படுறீங்க… இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க. எதிர்காலம் வரும்போது அதுகூடவே அந்த ஆபத்து வரட்டும். நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணலாம் ஓகேவா?” மிதுரா கேட்க தீரனின் இதழ்களில் புன்னகைமொட்டு.

அதுவரை கவலையில் உழன்ற மனம் அவளது வார்த்தைகளில் இலகுவானது.

“யெஸ் மிது!, இனி லைஃப்ல எல்லாத்தையும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணலாம்” கண்ணடித்தபடி சொன்ன தீரனை இமைகொட்டாமல் பார்த்தாள்.

‘மூன்றுவாரங்களாக கைக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டிருந்த தீரனா இவன்’ என்ற கேள்வியை கண்களில் படரவிட அவனோ மௌனமாக சிரித்துக் கொண்டான்.

அலுவலகத்திற்குள் நுழையும்போது அபியிடமிருந்து அழைப்பு வந்தது.

அவன் குரலில் கடலளவு வருத்தம்.

“தீரா, அம்மாவுக்கு ரொம்ப சீரியஸ்ஸாகிடுச்சு. இப்போ ஹாஸ்பிட்டலிலே இருக்கேன்.

என் அக்காவும் வேலையைவிட்டுட்டா சென்னைக்கு வந்துட்டிருக்கா.  அவளுக்கு நீ நம்ம கம்பெனியிலே ரெஃபர் பண்ண முடியுமா? ரெஸ்யூம் அனுப்பிவிடறேன்” அபி கேட்க,

“கண்டிப்பா பண்றேன்டா. நம்ம ஹெச்.ஆர் காவ்யாகூட இன்னும் டூடேஸ்ல ரீலிவ்வாகுறாங்க. அந்த பொசிஷன்க்கே நான் ரெஃபர் பண்றேன்” என்ற தீரன் கவலைக் குரலில்,

“அபி, தனியாயிருந்து எப்படி சமாளிப்பே நான் ஹாஸ்பிட்டலுக்கு வரேன் சரியா?’ கேட்க அபி மறுத்தான்.

“சிற்பிகா இப்போ துணைக்கு வந்திருக்கா தீரா, அக்காவும் இன்னும் கொஞ்ச நேரத்திலே சென்னை வந்துடுவா. நான் உதவி தேவைப்படும்போது கூப்பிடுறேன்டா” என்றுவிட்டு அலைப்பேசியை வைத்துவிட்டான்.

அபி சொன்ன செய்திகேட்டு கவலையிலிருந்தவனுக்கு அடுத்த இரண்டு மணிநேரத்தில் ராஜ் சொன்ன விஷயம் ஆறுதலாக மாறியது.

“மச்சான், நமக்கு நிவின் மோட்டார்ஸ் ப்ராஜெக்ட் தர சம்மதிச்சுட்டாங்க. ஆனால் இடையிலே புகுந்து அந்த முருகப்பாஇன்சூரன்ஸ் ஏதாவது பண்ண வாய்ப்பிருக்கு. நான் மொத்தமா டாக்குமெண்ட் பண்ணிட்டு அங்கே வரேன்”  ராஜ் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியில் இதயத்தில் பரவிய மெல்லிய நிம்மதியோடு பக்கத்திலிருந்த மிதுராவைப் பார்த்தான்.

அவன் கண்களில் கவிதையை ரசிக்கும் வாசகனின் பாவம்.

அவன் பார்வையை பார்த்தவள்  ‘என்னாச்சு என் ஆதனுக்கு? நேத்து முறைச்சான். இன்னைக்கு ரசிக்கிறான். ஒருவேளை மல்டிப்பிள் பர்செனாலிட்டி டிஸார்டரா இருக்குமோ?’ யோசித்துக்கொண்டிருந்தவளை கலைத்துப் போட்டது அந்த ஒலி.

அந்த கட்டிடம் முழுக்க ஃபையர் அலாரத்தின் ரிங்காரங்கள்.

எல்லாரும் பரபரப்பாக எழுந்தோட மிதுராவும் செல்ல முயன்றாள். ஆனால் தீரனோ அவளது கைகளை யாருமறியாமல் இறுகப்பற்றியிருந்தான்.

“தீரன் பில்டிங் ஃபயர் ஆகியிருக்கு. விளையாடாம, சீக்கிரமா போகலாம் வாங்க” அவள் பதற்றப்பட தண்ணீரை அவளருகில் நகர்த்தியவன்

“இது வருஷாவருஷம் நடக்கிற ஃபயர்-ட்ரில் மிது. ஆஃபிஸ்ல தீப்பிடிச்சா எப்படி தப்பிக்கிறதுனு சொல்லி தருவாங்க… இவங்களும் ஏதோ புதுசா நடக்கிற மாதிரி  பதறியடிச்சுட்டு கீழே போய் ப்ரேக் எடுத்துப்பாங்க. ட்ரில் முடியறவரை யாரையும் மேலேவிடமாட்டாங்க…” என்றான் விளங்கும்விதமாய்.

“அப்போ என் ப்ரேக் போச்சா! வேலை வாங்க தான் என்னை பிடிச்சு வைச்சுங்களா தீரன்?” உதட்டை சுழித்துக் கேட்டவளை ரசித்தான்.

“உன் கூட பேசணும் மிது. அதான் உன்னைவிடல” என்றபடி கைப்பையிலிருந்த பரிசுப்பொருளை எடுத்து அவள்முன் வைத்தான்.

“எனக்கா?” என்றாள் விழிவிரித்து…

ஆமென தலையசைத்தவன் அவளிடம் கொடுத்து பிரிக்க சொன்னான்.

திறந்தப் பார்த்ததும் மீண்டும் கண்களில் ஆனந்த அதிர்வு.

பாக்கெட் சைஸ் ரேடியோ!

“ஸ்மால் கிஃப்ட்  ஃபார் யுவர் கைன்ட்நெஸ்” மெல்லியதாக புன்னகைத்தபடி அவளது கன்னங்களை தட்ட  இவளோ கோழிகுண்டாய் கண்களை உருட்டினாள்.

‘தீரா உன் சிஸ்டத்திலேயிருந்த காதல் ஆன்ட்டிவைரஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டு ரொமான்ஸ்  சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ணிட்டியாடா. ‘ காதல் கற்கண்டை மனநீரில் கரைத்துப் பார்த்தாள்.

“மிதுமா ஃபயர்-ட்ரில் முடியப்போகுது. இதுக்கு மேலே நோ ரொமாண்டிக் லுக்ஸ். ரோபாட் மோட்க்கு போங்க. ” தீரன் சிரித்தபடி குறுஞ்செய்தி அனுப்ப அதைக் கண்ட மிதுரா நாணத்தின் நாணலில் அகப்பட்டாள்.

அன்று முழுக்க தீரனின் பார்வையால் முகத்தில் கொட்டிய குங்குமசிவப்பை யாருக்கும் தெரியாமல் துடைப்பதே அவளுக்கு வேலையாயிருந்தது.

மணி ஏழை நெருங்க தீரனும் மிதுவும் ஒட்டியும் உரசாமலும் நடந்தபடி அலுவலக முகப்பிற்கு வந்தனர்.

“மிதுமா, உன்கிட்டே கொஞ்சம் மனசுவிட்டு  பேசணும். ரெஸ்டாரெண்ட்க்கு போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாமா?” தீரன் கேட்கவும் அவள் அலைப்பேசி ஒலிக்கவும் சரியாகயிருந்தது.

எடுத்துப் பார்த்தாள்.

அவளது அன்னையிடமிருந்து அழைப்பு.

“மிது, உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும். கொஞ்சம் சிட்டி ஹாஸ்பிட்டல் வரை வர முடியுமா?” என சீமா கேட்க மிதுராவின் முகத்தில் பதற்றம்.

“அம்மா யாருக்கு என்னாச்சு? ஏன் திடீர்னு ஹாஸ்பிட்டல்க்கு வர சொல்றீங்க… “

“மிதுமா எதுவும் பயப்படாதே. எங்க ரெண்டு பேருக்கும் உடம்புக்கு எதுவுமில்லை. உன் கிட்டு பேசணும்டா இங்கே வா”  சொல்லிவிட்டு சீமா அலைப்பேசியை வைக்க மிதுவின் முகத்தினில் ஏகத்துக்கும் கவலை.

அதைப் படித்தவன் “மிது, நாம அப்புறமா பேசிக்கலாம். முதலிலே அம்மாவைப் பாருடா” என சொல்ல மிதுரா சிட்டி ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தாள்.

வாயிலின் முகப்பிலேயே சீமா நின்றுக் கொண்டிருக்க அவளது பார்வையோ அவசரமாக விஸ்வத்தை தேடியது.

“அப்பா எப்படி இருக்காங்க? அவருக்கு ஏதும் உடம்பு முடியலையா?” மிதுராவின் பார்வை பதற்றமாய் தந்தையை தேட கசங்கிப் போன முகத்தோடு  வந்து நின்றார் அவர்.

ஒரே நாளில் பல வருட வயது மூப்பு கூடியிருந்தது அவர் முகத்தில்.

“அப்பா என்னாச்சு?” மிதுரா வருத்தமாய்க் கேட்க விஸ்வமோ சட்டென உடைந்தார்.

கண்களில் நீர்த்திவலையுடன்,

“இத்தனை வருஷமா உன் கிட்டே சொல்லக்கூடாதுனு பொத்தி வைச்ச ரகசியத்தை இன்னைக்கு உன்கிட்டேயே சொல்லும்படி ஆகிடுச்சுமா. என்னை மன்னிச்சுடு” வாஞ்சையாய் அவள் தலைகோதியவர் பட்டென உடைத்தார் அந்த உண்மையை.

“நான் உன்னோட அப்பா இல்லைடா. நீ எனக்கும் சீமாவுக்கும் பிறந்த பொண்ணில்லை. “திகைத்துப்போய் மிதுரா பார்க்க விஸ்வம் தன் கடந்தகாலத்தை பகிர துவங்கினார்.

💐💐💐💐💐💐💐💐💐

விஸ்வம் உருகிஉருகி காதலித்த பெண் சந்தியா. இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

அவர்களது இல்வாழ்க்கைக்கு பரிசாய் ஒரே வருடத்தில் சந்தியாவின் வயிற்றில் உதித்த உயிர்முத்து அவர்களின் கைகளில் தவழ்ந்தது.

அதுவரை சந்தியா மட்டுமே  எடுத்து கொண்டிருந்த வாந்தியை இப்போது விஸ்வம் எடுக்க ஆரம்பித்திருந்தார், சிவப்பு நிறத்தில்.

மருத்துவமனைக்கு சென்று காட்ட அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

கணவனின் சிகிச்சைக்காக கைக்குழந்தையுடன் சந்தியா அல்லாடி கொண்டிருக்க விஸ்வத்திற்கோ குற்றவுணர்வு.

மைலார்ன் மற்றும் சைடோசன் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட விஸ்வம் அந்த நோயிலிருந்து மெல்ல மெல்ல குணமாகி வீட்டிற்கு வந்தார்.

மருந்தின் நெடியில் வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு குழந்தையின் பேபிபவுடர் வாசனையும் மனைவியின் மஞ்சள் வாசனையும் மனதை மயக்குவதாய்.

பலநாட்கள் கழித்து தன் கூட்டிற்கு வந்த ஆசுவாசாம்.

மயக்கமாய் கண்மூடியவரை கிறக்கமாய் அணைத்தார் சந்தியா.

அவளுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் தேவைப்பட்டது. அதைப் புரிந்து கொண்டு விஸ்வமும் அவளை நெருங்க அதன்பின் அவருக்குள் ஏதோ இனம்புரியாத பயஉணர்ச்சி சட்டென்று மனைவியை தள்ளிவிட்டார்.

அடிப்பட்ட பார்வையுடன் மனைவி பார்க்க விஸ்வத்தால் அந்த பார்வையை தாங்க முடியவில்லை. விஸ்வத்தால் மனைவியிடம் நேரிடையாக சொல்லமுடியவில்லை தன்னால் தாம்பயத்தில் ஈடுபட முடியவில்லையென்று.

ஆதலால் டாக்டரை அணுக அவரோ உங்களுக்கு கொடுக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மற்றும் மாத்திரைகளின் விளைவாய் ஆண்மை  பறிப்போய்விட்டது என்ற குண்டை தூக்கிப் போட்டார்.

விஸ்வத்தின் மனம் முழுக்க நடுக்கம். ஏற்கெனவே தன் மனைவியை இந்த சிறுவயதிலேயே கைக்குழந்தையோடு மருத்துவமனைக்கு அல்லாட வைத்தது ஒருபுறம் வருத்தமாயிருக்க தன்னால் அவளுக்கு நல்ல இல்லற வாழ்க்கையும் கொடுக்க முடியாதென்பது இன்னொருபுறம் கஷ்டமாயிருந்தது.

உண்மையை சொன்னால் மனைவி புரிந்து கொள்வாள் தான்,விஸ்வத்துக்காக தன் சந்தோஷங்களை தியாகம் செய்யுமளவிற்கு சந்தியாவிற்கு காதல் இருப்பதும் தெரியும்.

ஆனால் தன் சுயநலத்திற்காக மனைவியின் வாழ்க்கையை கெடுக்க விஸ்வம் விரும்பவில்லை.

இனி அவளை தன்னருகே வைத்து  கஷ்டப்படுத்தக்கூடாது என நினைத்தவர் ஒரு முடிவுடன் நிமிர்ந்தார்..

விஸ்வம் கொஞ்சம்கொஞ்சமாக வீட்டிற்கு வருவதை குறைத்துக்கொண்டார். அப்படி வந்தாலும் குடித்துவிட்டு வருவது. மனைவி அருகில் நெருங்கினால் கையை உதறிவிட்டு செல்வது. அலைப்பேசியில் புதிய பெண்ணுடன் உரையாடுவதென இருந்த தன் கணவனின் முன்பு கண்ணீருடன் வந்து நின்றாள் சந்தியா,

“ஏன் விஸ்வம் என்னைவிட்டு இப்போ எல்லாம் ஒதுங்கி போறீங்க” என்ற கேள்வியை தாங்கி.

“ஒரு குழந்தை பிறந்த பிறகு உன் மேலே இன்ட்ரெஸ்ட் போயிடுச்சு சந்தியா. ஐ நீட் ப்ரெஷ் ஃபிகர்” மனதை கல்லாக்கிக் கொண்டு விஸ்வம் அந்ந வார்த்தையை சொல்ல சந்தியாவின் கரங்கள் அவர் கன்னத்தில் இறங்கியது.

“இதுக்கு மேலே என்னையும் என் குழந்தையும் வந்து  பார்க்க முயற்சிபண்ணாலோ இல்லை மறைஞ்சு இருந்து பார்த்தேனு தெரிஞ்சாலோ, என்னை பிணமா தான் பார்ப்பே…” ஆத்திரத்தில் கத்திய சந்தியா விஸ்வத்தைவிட்டு ஒரேயடியாக பிரிந்து வந்துவிட்டார்.

தாய்வீட்டாரின் வற்புறுதலோடு இரண்டாவது திருமணம் சந்தியாவிற்கு நடைபெற அதைக் கேள்விப்பட்ட விஸ்வத்தின் முகத்தில் வருத்தமும் சந்தோஷமும் ஒரு சேர கிளர்ந்தெழுந்தது.

இனி சந்தியாவின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென நினைத்து பெருமூச்சுவிட்டவரை, இரண்டாவதுகல்யாணம் செய்துக்கொள்ள வேண்டுமென நிர்பந்தித்துவிட்டு கோபமாய் சென்ற தாயை  சமாதானப்படுத்த கிராமத்திற்கு வந்தார்.

அங்கே தான் சீமாவின் அறிமுகம். பிறகு மிதுராவின் வரவு. அதன் பின்பு தெளிவாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் மீண்டுமொரு திருப்பம்.

சந்தியாவின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இன்றோ நாளையோ உயிர் தவறிவிடலாமென கேள்விப்பட்ட விஸ்வம் கலங்கிப்போய் நின்றார்.

தன் மகளிடம் இன்றே உண்மையை சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர் சீமாவும் விஸ்வமும்.  நாளையோ இல்லை மறுநாளையோ யார் மூலமாகவோ உண்மை தெரியவருவதைவிட தானே உரைப்பது சரியென நினைத்து விஸ்வம் உரைத்து முடித்திருக்க மிதுரா சிலையென சமையந்தாள்.

அவள் இரத்த நாளங்களில் அதிர்ச்சியின் ஊற்று.

எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்தவள் தன்னறையில் அடைந்து கொண்டாள்.

இப்போது தான் பெற்றோரை பற்றிய குழப்பங்கள் விலகுவதைப் போலயிருந்தது அவளுக்கு. தன் தகப்பனும் தாயும் ஏன் தாமரை இலைநீராய் இருந்தார்கள் என புரிந்தது.

சீமா அம்மாவிற்கு அசோக்கின் மீது காதல். விஸ்வம் அப்பாவிற்கு சந்தியாவின் மீது காதல். ஆனால் இருவராலும் மனதிற்கு பிடித்தவர்களின் வாழ முடியாத நிலை. நிர்பந்தத்தால் இந்த உறவை ஏற்று கொண்டிருக்கின்றனர்.

ஆனால் விஸ்வம் அப்பா என்னை நிர்பந்தத்தால் ஏற்றுக் கொள்ளவில்லையே. எவ்வளவு பாசம் காட்டினார்? எவ்வளவு அன்பு செலுத்தினார்? எதுவும் பொய்யில்லையே!

உயிரணூக்களால் அவர் எனக்கு தந்தையாக இல்லாதிருந்தாலும் அன்பு அணுக்களால் அவர் எனக்கு தந்தையே!

‘அப்பா கவலைப்படாதீங்க… நான் எப்பவும் உங்களோட பொண்ணு தான்’ உறுதியுடன் நினைத்தவள் நிம்மதியுடன் கண்ணை மூட அதிகாலையிலேயே அலைப்பேசி அலறியது.

“மிது, அபியோட அம்மா இறந்துட்டாங்க” சிற்பியின் வார்த்தைக் கேட்டதும் மனம் கனமானது.

அவசரமாக கிளம்பி வெளியே வந்தவளை கண்களில் நீர்த்திரையிட சீமா எதிர்கொண்டார்.

“விஸ்வத்தோட மனைவி இறந்துட்டாங்கடா” என்ற செய்தி கேட்டு மிதுராவின் மனத்தில் இப்போது இமயமலையின் பாரம்.

முதலில் இங்கு சென்றுவிட்டு அடுத்து அபி வீட்டிற்கு செல்லலாமென முடித்தவள் தாயுடன் கிளம்பி சந்தியாவின் வீட்டிற்கு சென்றாள்.

உள்ளே நுழையும் போதே கண்ணீர்ஓலங்கள். உதிர்ந்த மலருக்கு அஞ்சலி செலுத்தவதற்காக பல உயிருள்ள பூக்களும் மாலைகளும் வரிசை கட்டி வந்து கொண்டிருந்தன.

மரணம் நிகழ்ந்த வீடு நம்மையறியாமல் நடுங்க செய்யும்!

உன் வாழ்விலும் இதே போல் ஒருநாள் வருமென மனதிற்கு நினைவூட்டும்.

அந்த அதிர்வோடு உள்ளே நுழைந்தவள் அங்கே கண்ட காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றாள்.

விஸ்வம் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தன் மனைவியை உயிர் உருக பார்த்துக் கொண்டிருக்க அவரருகில் நின்றிருந்த இருவரைக்கண்டு அதிர்ந்துப் போய் நின்றாள்.

விஸ்வத்தின் சாயலில் ஒருத்தி!

“அம்மா” என்று கதறி கொண்டிருக்க,

“அக்கா, எனக்கு அம்மா வேணும். எழுந்து வர சொல்லு” தேம்பி கொண்டிருந்தான்

அபி!