காதல் தீண்டவே -22

வாழ்க்கையென்னும் சதுரங்கம் மிதுராவின் வாழ்க்கையில் எதிர்பாராத பல நகர்வுகளை நிகழ்த்தி கொண்டிருந்தது.

அதன் ஆட்டத்தை சமாளிக்கமுடியாமல் மிதுரா தடுமாறிக் கொண்டிருக்க விஸ்வத்தின் கதறல் ஒலி அவள் காதுகளை எட்டியது.

“ஐயோ கடைசிவரை என் சந்தியாவுக்கு நிம்மதியே தராம அனுப்பிவைச்சுட்டேனே” தலையிலடித்து அழுது கொண்டிருந்த விஸ்வத்தின் தோளைத் தொட்டார் அபியின் அப்பா, சங்கர்.

அவருக்கு விஸ்வத்தின் வேதனை புரிந்தது.

இரண்டுவயது கைக்குழந்தையோடு சந்தியாவை கைப்பிடித்த சங்கரிடம்,

தன் கசப்பான கடந்தகால வாழ்க்கையை சந்தியா பகிர்ந்திருந்தார்.

அதைக் கேட்டு விஸ்வத்தின் மேல் அளவுகடந்த ஆத்திரத்தைக் கொண்டிருந்தவர், கோபத்துடன் விஸ்வம்முன் வந்து நின்றார்.

ஆனால் விஸ்வம் சொன்ன காரணங்களை கேட்டபின் அவரின் மேல் நன்மதிப்புகூடியது.

விஸ்வத்திடம் கொடுத்த வாக்குறுதிபடி

தன் மனைவியை நன்றாக பார்த்துக் கொண்டவரால் ஏனோ மகள் மீது முழுமையான அன்பை செலுத்த முடியவில்லை.

அபி பிறந்த பின்பு அவரின் கவனம் முழுக்க தன்னுடைய உதிரத்தில் உதித்தவன் மீது சென்றுவிட்டது.

மகளை கொடுமையும் செய்யவில்லை. அருகில் வைத்து பாசமும் காட்டவில்லை. ஒரு ஒதுக்கத்துடனேயே இருந்தார் சங்கர்.

வேலை விஷயமாக அதிகமாக வெளியூருக்கு சென்றுவிடும் சங்கருக்கு இந்தமுறை மகன் சென்ன செய்தி மிகஅதிர்ச்சி அளிப்பதாய்.

நாளுக்குநாள் சந்தியாவின் உடல்நிலை மோசமடைவதாகவும் இப்போது தீவிர பிரிவு சிகிச்சையில் சேர்த்துவிட்டதாக அவன் சொல்ல அடித்துப் பிடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்திருந்தார்.

பக்கத்துவீட்டில் வசிக்கும் கணேஷ் குடும்பகட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்திருக்க அவரைப் பார்த்துவிட்டு செல்ல சீமாவும் விஸ்வமும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

அங்கே தான் சந்தியாவும் அனுமதிக்கப்பட்டிருக்க காரிடரில் நின்று கொண்டிருந்த சங்கர், விஸ்வத்தை உற்றுப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டுவிட்டார்.

வேகமாக வந்து சந்தியாவின் உடல்நிலையை சொல்ல விஸ்வத்தின் மனம் உடைந்துப்போனது.

‘மறைஞ்சுருந்து பார்த்தேனு தெரிஞ்சா என்னை பிணமா தான் பார்ப்பே…’ சந்தியா சொன்ன அந்த வார்த்தைகள் திரும்பதிரும்ப விஸ்வத்தின் காதுகளில் ஒலித்தது.

சந்தியா சொன்ன வார்த்தை ஒருவேளை  பலித்துவிட்டால்!

மனதைக் கல்லாக்கிக் கொண்டு  சந்தியாவைப் பார்க்காதிருந்த விஸ்வம், இப்போது தான் பலகாலம் கழித்து பார்க்கின்றார்,

அதுவும் உயிரில்லாத அவளை!

வருத்தத்தில் கதறி கொண்டிருந்தவரின் தோளை ஆதரவாக பற்றினார் சங்கர்.

தன் மனைவிக்குதான் செய்ய வேண்டிய இறுதி சடங்குகளையெல்லாம் விஸ்வத்திற்கு விட்டுகொடுத்தார்.

அவரது தியாகத்துக்கும் காதலுக்கும் மரியாதை செலுத்தும்விதமாக!

சந்தியாவின் பூவுடலை தன் கையாலேயே தீயிட்டுவிட்டு திரும்பி வர கொஞ்சம்கொஞ்சமாய் கூட்டம் கலைந்தது. 

இப்போது அந்த அறையில் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே.

ஆனால் அங்கே மிதுராவும் நின்று கொண்டிருந்தது அபிக்கு தர்மசங்கடமாய்…

குடும்ப விஷயங்கள் அலுவலக நண்பர்களுக்கு தெரிய வருவதில் விருப்பமில்லாமல் அவளை கூப்பிட முனைந்தநேரம் விஸ்வத்தின் குரல் ஒலித்தது.

அதிதி! என்றார் உயிரை கடைந்தெடுத்து.

திரும்பிப் பார்த்தவளின் முகம்முழுக்க வெறுமை.

“அதிதிமா அப்பா கூட வந்துடுடா…” விஸ்வம் ஏக்கத்துடன் கேட்க, கோபமாய் திரும்பினாள் அதிதி.

“மிஸ்டர் யார் நீங்க? செத்துப்போன என் அம்மா நீங்க  என்னோட அப்பானு சொல்லலையே… எங்களை விட்டுட்டு போன துரோகினுதானே சொன்னாங்க.”

ஈட்டி போல் அதிதியின் வார்த்தைகள் பாய விஸ்வத்தின் இதயம் முழுக்க உதிரத்திட்டுகள்.

“ஐயோ நீ தானேமா நான் பெத்த ஒரேபொண்ணு. இந்த அப்பாவை வேண்டாம்னு சொல்லாதேடா” விஸ்வம் அவசரத்தில் சொன்ன அந்த வார்த்தை மிதுராவின் இதயத்தை நொறுக்கிப்போட்டது.

உண்மை தானே!

அதிதி தானே அவர் பெற்றமகள்…

நான் யாரோ ஒருவர் பெற்றமகள் தானே! என்ற உண்மை அவள் இதயத்தை சுட,

யாருடைய கவனத்தையும் கலைக்காமல் அங்கிருந்து சட்டென்று அகன்றுவிட்டாள்.

இங்கோ சங்கர் கோபமாக அதிதியை முறைத்தார்.

“நான் சொல்றேன், அவர்தான் உன் அப்பா. ஒழுங்கா அவர் வீட்டுலே போயிரு. இன்னும் கொஞ்ச நாளிலே நான் இங்கேயிருந்து கிளம்பிடுவேன். உன்னையும் அபியையும் தனியா விட்டுபோக எனக்கு சம்மதமில்லை.”

“நானும் அபியும் இந்த வீட்டுலேயே தங்கிக்குறோம்… நான் இவங்க வீட்டுக்கு போகமாட்டேன்” வீம்பு பிடித்த அதிதியை நோக்கி,

“நீ இவ்வளவு கோவப்படுறது சரியில்லை அதிதி, விஸ்வம் நல்லவங்க… அவங்க விட்டுட்டு போனதுக்கு காரணமிருக்கு” சங்கர் உண்மையை உடைக்க முனைந்தநேரம் விஸ்வமோ வேகமாக “வேண்டாம்” என்று தடுத்துவிட்டார்.

“அதிதி முதல்முறையா அன்பா உன்கிட்டே ஒரேயொரு விஷயம் கேட்கிறேன். விஸ்வத்தோட வீட்டுல போய் இரேன். என்னோட கடமையிலேயிருந்து எனக்கு விடுதலை கொடேன்” சங்கர் கேட்ககேட்க அதிதியின் முகம் கசங்கியது.

உண்மை தானே!

இவர் இத்தனைகாலம் என்னைப் பார்த்துகொண்டது வெறும்  கடமையால்தானே. அன்பால் இல்லையே!

இதற்கு மேலும் பாரமாயிருக்க விரும்பாதவள் அபியை திரும்பிப் பார்த்தாள்.

அவள் கண்களில் நீயாவது எனக்கு துணையாக என்னுடன் வந்துவிடேன் என்ற ஏக்கம் விரவிகிடந்தது.

எப்படி வேறொருவர் வீட்டில் சென்று தங்குவதென சங்கடப்பட்ட அபியோ,

“அக்கா நானும் அம்பத்தூர்க்கு வந்துடுறேன். அங்கே என் ப்ரெண்ட்ஸ் தீரனும் ராஜ்ஜும் இருக்காங்க, அவங்ககூட தங்கிக்குறேன். அடிக்கடி உன்னை வந்து பார்க்கிறேன்கா. நீ கவலைப்படாம போயிட்டுவா” என நம்பிக்கையளிக்க அதிதி ஒரு முடிவோடு விஸ்வத்திடம் திரும்பினாள்.

“ஓகே நான் அங்கே வரேன்… ஆனால் உங்க மகளாயில்லை, பேயிங்-கெஸ்ட்டா… இதுக்க சம்மதம்னா போகலாம்” 

விஸ்வத்தின் மனம் வலித்தாலும் மறுபேச்சில்லாமல் சம்மதம் சொல்ல அதிதி தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பி நின்றாள்.

சங்கர் எதுவும் பேசாமல் அதிதியின் தலையை வாஞ்சையாய் ஒருமுறை தொட்டுப்பார்த்துவிட்டு நகர்ந்து கொண்டார். அபியோ கவலைப்படாதே நான் உன் அருகிலேயே இருப்பேன் என்ற நம்பிக்கையை கண்களால் அளித்தான்.

அவர்கள் மூவரும் கிளம்ப எத்தனிக்க அப்போதுதான் விஸ்வமும் சீமாவும் நினைவு வந்தவர்களாக மிதுராவைத் தேடினர்.

ஆனால் அங்கே அவள் இல்லை!

“மிதுரா எங்கே போனா சீமா?” விஸ்வம் பதற்றப்பட்டு கேட்க “தெரியலையேங்க” என்ற சீமாவின் குரலிலும் பதற்றம்.

“நீங்க ஏன் ஆபிஸ்மேட் மிதுராவை தேடுறீங்க?” குழப்பம் படிந்த முகத்துடன் வினவினான் அபி.

“அவள் எங்க பொண்ணு” சீமாவும் விஸ்வமும் ஒருசேர சொன்ன பதிலில்  அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் அபி.

💐💐💐💐💐💐💐💐💐💐

பூங்காவில்…

விஸ்வம் சொன்ன அந்த வார்த்தையை திரும்பதிரும்ப யோசித்தபடி வெறுமையாய் அமர்ந்திருந்தாள் மிதுரா.

இதுவரை தான் சாய்ந்திருந்த தந்தையின் தோள் வேறு ஒருவருடைதென அறிந்த நொடி, நரகத்தை கண்டநொடி.

இனி ஆதூரமாக சாய்ந்துகொள்ள தனக்கு உரிமையில்லை, அதன் உரிமையாளர் வந்துவிட்டாயிற்று.

விரக்தியில் உதடுகள் சுழிந்தது.

அவளுக்கு அந்த அதிதியின் மீது  பரிதாபமும் வருத்தமும் கோபமும் ஒருசேர எழுந்தது.

ஆனால் இப்போது பரிதாபத்திற்குரிய நிலையில் நிற்பதுதான் தானென்ற உண்மையும் புரிய சோர்வாக கண்களை மூடிய பொழுது அலைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்த்தாள்…

தீரன்!

மனம் சோர்வில் இருக்கும்போதெல்லாம் தீரன் என்னும் ஆதனின் நிழலில் தான் சுருண்டு படுத்துக்கொள்வாள்.

இன்றும் அவனது நிழலுக்காக ஏங்கியது மனம்.

வேகமாக அட்டென்ட் செய்து காதில் வைக்க, “மிது, நான் மார்னிங் இரண்டு மணியிலே இருந்து அமெரிக்கா ப்ரான்ச்சோட மீட்டிங்ல இருந்தேன். நம்மளோட ப்ராஜெக்ட் பத்தின விவரம் எல்லாத்தையும் யாரோ வெளியே கசியவிடுறதா இன்ஃபர்மேஷன் கிடைச்சிருந்தது. அதுவிஷயமா பேசி முடிச்சுட்டு இப்போ தான் ஃபோனை ஆன் பண்ணேன். அபி அம்மா இறந்த விஷயம் இப்போ தான் தெரிஞ்சது. நான் அங்கேதான் வந்துட்டிருக்கான். உடலை எடுத்துட்டாங்களா?” வேகமாக பேசிக் கொண்டேயிருந்தவனை “கார்த்திக்” என கண்ணீர்குரலில் அழைத்தாள் மிதுரா.

அந்த குரலிலிருந்த வருத்தம் அவனது இதயத்தை அசைத்துப் பார்த்தது.

“மிதுமா என்னாச்சு?” பதற்றமாய் வெளிப்பட்டது வார்த்தைகள்.

“எனக்கு நீ வேணும் தீரா. உன் தோளிலே சாஞ்சிக்கணும்… ப்ளீஸ் ” அவள் அலைபேசியில் தேம்ப அடுத்த கால் மணிநேரத்தில் அவள் சொன்ன பூங்காவின் முன்பு வந்து நின்றான்.

புயலில் வீழ்ந்த மலராக வானை வெறித்துக் கொண்டிருந்த மிதுராவின்நிலை அவன் இதயத்தை உலுக்குவதாய்.

வேகமாய் அவளருகில் சென்றவன் “என்னாச்சு மிது?” என்று கேட்க அவள் கண்களிலிருந்து தாரைதாரையாய் நீர் வழிந்தது.

காருக்கு கூட்டி வந்து அமர வைத்தவன் “என்னாச்சுடா?” மீண்டும் கேட்க,

“எனக்கு யாருமேயில்லாத மாதிரியிருக்கு தீரா… ஏதோ அனாதை மாதிரி ஃபீல் பண்றேன்” மிதுராவிடம் தேம்பல்.

“என்ன மிது! உன் மேலே பாசம் வைக்க சீமாமா இருக்காங்க, விஸ்வம்பா இருக்காங்க, நாங்க எல்லாரும் இருக்கும்போது அழலாமா?” தீரன் அதட்டியபடியே கண்ணீரை துடைத்தான்.

“இல்லை தீரா, நான் அவர் பெத்த பொண்ணில்லை… அவரும் என்னை வேற ஆளா தான் நினைக்கிறார்.” தேம்பியவளின் வார்த்தையில் அவன்  மனம் அதிர்ந்தது

“என் மேலே யாரும் உண்மையான பாசம் காட்டலை… நான் தான் ஏமாந்துட்டேன்” மேலும் கதறியவளை பார்க்க முடியாமல் காதல் கொண்ட நெஞ்சம் சட்டென இழுத்து அணைத்துகொண்டது.

“உண்மையான பாசம் காட்ட, நான் இல்லையாடி உனக்கு… அடுத்த தடவை இப்படி ஒரு வார்த்தையை சொல்லாதே மிது” என்றவனின் வார்த்தைகளில் கண்கள் பட்டென அழுகையை நிறுத்தி அதிர்வாய் அவனைப் பார்த்தது.

“தீரா… யூ மீன்…” அவள் தயங்கியபடி இழுக்க…

“யெஸ் ஐ மீன் இட்… ஐ லவ் யூ மிது. நான் உன்னை காதலிக்கிறேன். உனக்காக நான் இருக்கேன். ப்ளீஸ்…பாசம் காட்ட யாருமில்லை, நான் அனாதைனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதே” என்றவனின் வார்த்தையில், அதுவரை சோகப்புயலை வீசிக் கொண்டிருந்த கண்கள் காதல்புயலை வீசியது.

அவள் நினைத்தபடி ஒரே மாதத்திற்குள் காதலை சொல்ல வைத்ததன் விளைவாய் கண்களில் சந்தோஷசுடர் படர்ந்தது.

“கார்த்திக்…” காதலை கரைத்து அழைத்தவளை குறும்போடு பார்த்தான்.

“ஆமாம் எப்போயிருந்து இந்த தீரன் கார்த்திக்கா மாறுனேன்?”

“அது… நீ எல்லாருக்கும் தீரன். எனக்கு மட்டும் கார்த்திக்” என்றவள்,

“கார்த்திக், ஐ நீட் ஒன் ப்ராமிஸ்.” வேகமாய் கை  நீட்டயவளை கேள்வியாய் நோக்கினான்.

“என்னனு சொன்னா தான் ப்ராமிஸ் பண்ணுவிங்களோ?” கண்களை சுருக்கிக் கேட்டவளை கண்டு சிரித்தபடி, “ஓகே… ஓகே…  ப்ராமிஸ்” என்றான்.

“நாளைக்கு ஆதன் ஷோவை நீ எனக்காக கேட்கணும்… என்னோட ஒரு வருஷ காதலோட பரிசா நாளைக்கு சீக்கிரமா தூங்காம இருக்கமுடியுமா?” கள்ளசிரிப்பை உள்ளுக்குள் பதுக்கி கேட்டவளின் கோரிக்கையில் தீரனிடம் வியப்பின்விரிவு.

“ஏதே… ஒரு வருஷகாதலா?” அதிர்ந்துப்போய் கேட்டவனின் அலைபேசியும் அதிர, எடுத்துப் பேசியவனின் வசந்த முகம் பாலையாய் மாறியது.

உணர்ச்சி துடைத்த முகத்துடன் திரும்பியவன் “அவசரமா போகணும் மிது.” என்றவன் எதுவும் பேசாமல் சட்டென்று கிளம்பிவிட்டான்.

சென்ற அவனையே காதலுடன் பார்த்தவள், தன்னுடைய காதல் முழுக்க மின்னஞ்சலில் கொட்டிவிட்டு அடுத்த நாள் இரவு கடற்கரையில் காத்து கொண்டிருந்தாள்.

அவள் எதிர்பார்த்தபடி ஆதன் அவளுடைய இமெயிலை வாசிக்க துவங்கிய நேரம்

அவள் எதிர்பாராதபடி கார்த்திக்தீரனிடமிருந்து குறுஞ்செய்தி வந்து விழுந்திருந்தது.

“மிதுரா let’s breakup. Let end this. நான் உனக்கு வேண்டாம்.. நாம பிரிஞ்சுடலாம்.”

பிரிவின் வரிகளை சுமந்திருந்த அந்த குறுஞ்செய்தியை திரும்பதிரும்ப வாசித்தவளின் மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது அந்த கேள்வி,

“எதனால் என்னை ப்ரேக்-அப் செய்தான்?”