காதல் தீண்டவே-27

காதல் தீண்டவே-27

சில நேரங்களில் அப்படி தான்…

உடைந்த பொம்மையை கண்டு திகைத்து நிற்கும் குழந்தை, தாயைக் கண்டதும் ஓடிப் போய் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதபடி புகார் சொல்லும்.

அப்படி தான் மிதுராவும் ராஜ்ஜைக் கண்டதும் ஓடிப் போய் அணைத்துக் கொண்டு “தீரன் என்னை ரொம்ப அழவைக்கிறான்… ” என்றாள் கதறலுடன்.

விசும்பலோடு நடுங்கியவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டவன் “ஒன்னுமில்லை மிது மா…”  என்று ஆற்றுப்படுத்தியபடியே  தீரனை கோபமாய் முறைத்தான்.

“தீரா இட்ஸ் நாட் ஃபேர்… எதுக்காக மிதுராவை இப்படி காயப்படுத்துற?” என ராஜ் கேட்க தீரனிடம் பதில்மொழி இல்லை.

மௌனமான வெறிப்பு!

“பதில் பேசாம அப்படி பார்த்தா என்ன அர்த்தம். ஏன்டா இப்படி நீ காதலிக்கிற பொண்ணை நீயே காயப்படுத்துற?” என்ற ராஜ்ஜின் வாயசைவைப் படித்த தீரன் உள்ளத்தில் அதிர்ச்சி ஊற்று.

எப்படி தெரியும் இவனுக்கு?

“ராஜ்… ” என்றவனது வார்த்தைகளோ தயங்கியபடி தந்தியடித்தது.

“நீ சொல்லலைனா எனக்கு தெரியாதா தீரா… உனக்கு பிடிச்ச சட்டை, வாட்ச், படிப்பு   எதுனு தெரிஞ்ச எனக்கு, உனக்கு பிடிச்ச பொண்ணு யாருனு தெரியாதாடா?” என்று ராஜ் கேட்க தீரனின் முகமெங்கும் அதிர்வு.

உள்ளமெங்கும் சலனம்!

‘ஐயோ’ என்று கத்தி கதற வேண்டும் போல இருந்தது தீரனுக்கு.

ஆனால் இது உணர்ச்சிவசப்பட வேண்டிய தருணமல்லவே!

தன்னை நிதானப்படுத்தி கொண்டவன் “நோ ராஜ்… நான் மிதுராவை காதலிக்கலை” என்றான் முயன்று வரவழைத்த குரலில்.

அந்த வார்த்தைகளை கேட்டு மிதுரா கதறியபடி செவிகளை மூடிக் கொள்ள ராஜ்ஜோ அவளது முடியை வாஞ்சையாய் கோதியபடி, 

“அவன் பொய் சொல்றான் மிது…  இந்த வார்த்தைகளை நம்பாதே… அவன் கண்ணுலே பொய் தெரியுது.” என நம்பிக்கையாக சொன்னவன் தீரனை ஒரு முடிவோடு பார்த்தான்.

“ஏன்டா இப்படி கண்ணாமூச்சு ஆட்டம் ஆடி உன்னையும் காயப்படுத்தி அவளையும் காயப்படுத்துற? எனக்கு கடுப்பா வருதுடா…” என்று கோபத்தில் கத்தியவன் பின்பு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு

“தீரா முதல் காதல் மாதிரி இந்த காதலும் வருத்தத்தை கொடுத்துடும்னு பயப்படாதே… என் மிதுவை இப்படி அழ வைக்காதேடா… மிதுவை கஷ்டப்படுத்தி பார்க்கணும்னோ இல்லை அவளை விட்டு விலகிப் போகணும்னு நினைச்சாலோ உன்னை கொன்னுடுவேன். இரண்டு பேரும் ஒழுங்கா சமாதானம் ஆகிட்டு தான் மேலே வர்ரீங்க… “என தீரனிடம் முடிவாக சொன்னவன் மிதுராவிடம் திரும்பினான்.

“மிது அவன் உன்னை ரொம்ப அழ வைச்சானா எனக்கு கால் பண்ணு. நான் வந்து அவனை ஒரு கை பார்த்துக்கிறேன். மனசு விட்டு பேசிட்டு ஒரு முடிவோட மேலே வாங்க… இனி எல்லாம் சரியாகிடும்… அழக்கூடாது சரியா” என்று சொல்லியபடி அவள் கண்களை துடைத்த ராஜ் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

இப்போது எதிரும் புதிருமாய் தீரனும் மிதுராவும்!

💐💐💐💐💐💐💐💐💐💐

அங்கே கேண்டீனில்…

“சிற்பிமா, என் மேலே இருக்கிற கோபம் போயிடுச்சா?” என்று அபி கேட்க அவளிடத்தில் உறுதியான மறுப்பு.

“நீ என் கிட்டே முன்னாடியே சொல்லியிருந்தா நான் இந்தளவுக்கு காயப்பட்டு இருந்திருக்கமாட்டேன்ல அபி. நீயும் என்னை அழ வைச்சுட்டே இல்லை… ” என அவள் உடைந்துப் போய் கேட்க அதிதி ஆதரவாய் அவள் தோளை தொட்டாள்.

“அபி நீ பண்ணது கொஞ்சம் கூட சரியில்லை. எங்க கிட்டே சொல்லிட்டு இப்படி பண்ணியிருந்தா நாங்க இந்தளவுக்கு பதறி இருக்கமாட்டோம்…  ” கண்டிப்போடு வந்தது அதிதியின் குரல்.

அதிதி பேசியதைக் கேட்டதும் அபியின் முகத்தில் அப்படியொரு வெளிச்சம்.

“அப்பாடி என் அக்கா என் கிட்டே பேசிட்டா… நல்ல வேளை மௌன விரதம் முடிச்சுட்டியா அதி அக்கா…” வருத்தம் தீர்ந்த குரலில் அபி கேட்க சிற்பிகாவின் பார்வை குழப்பமாய் அவனை ஏறிட்டது.

“உன்னை திட்டுனதாலே அக்கா என் கிட்டே ரெண்டு நாளா பேசல சிற்பி… இப்போ தான் பேசுறாங்க. ” என்றான் விளக்கும் விதமாய்.

அதைக் கேட்டதும் அதிதியின் மீது அன்பாய் விழுந்தது சிற்பியின் பார்வை.

தன் தோளில் இருந்த அதிதியின் கையை புன்னகையுடன் இறுகப் பற்றிக் கொண்டாள்.

“தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட்” சிற்பிகா முறுவலித்தபடி சொல்ல,

“மை சப்போர்ட் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ… ” என்றாள் அதிதி, அபியை பார்த்து கண்ணடித்தபடி.

அவன் முகத்திலோ வெட்கப் படரல்.

“சரி சரி வெட்கப்படாதே… பார்க்க கன்ராவியா இருக்கு. ஏன் எங்க கிட்டே முன்னாடியே சொல்லாம இப்படி தவிக்க வைச்ச… எல்லாம் அந்த உர்ராங் உடான் ராஜ் சொல்லி தானே?” அதிதியின் கேள்விக்கு பாவமாக அபி தலையசைத்த நேரம், பின்னால் ஆளரவம் கேட்டது.

மூவரும் திரும்பினர்.

அங்கே கைகட்டியபடி அதிதியை முறைத்துக் கொண்டு நின்றான் ராஜ்.

‘என்னையா உர்ராங் உடான் என்றாய்’  என்ற கேள்வி அவன் விழிகளில் விரவி கிடக்க,

‘உன்னையே தான் சொன்னேன்…’ என  தோளை குலுக்கிய அதிதியின் உடல்மொழியே பதில்மொழி சொன்னது.

முறைப்புடன் சேரை இழுத்துப் போட்டவன் சிற்பிக்கு ஒரு குறுஞ்செய்தி தட்டிவிட்டான்.

“அந்த அபி எருமை இப்பவாவது ஏன் நீ ஞாயிற்றுக்கிழமை ஆஃபிஸ்க்கு வந்தேனு கேட்டானா சிற்பி? அவனுக்காக நீ பண்ண பி.பி.டி ஐ பார்த்தானா?” என்ற கேள்வியைப் படித்ததும் சிற்பி ராஜ்ஜை நோக்கி சோகமாக இல்லையென்று  தலையாட்டினாள்.

“இன்னும் கேட்டகலயா அவன்… நல்லா கவனி சிற்பி அவனை…” என்ற ராஜ்ஜின் குறுஞ்செய்தியைப் படித்தவள் சிரித்தபடி

“சிறப்பா செஞ்சுடலாம்.” என பதிலளித்துவிட்டு அபியை பார்த்தாள்.

“மிஸ்டர் அபி, ஒரு இம்பார்டென்ட் மெயில் சென்ட் பண்ணனும் இப்பவே என் கூட வாங்க… ராஜ், அதிதி நீங்க லன்ச் கன்டினியூ பண்ணுங்க… ” என்றுவிட்டு அவசரமாக அவனை அழைத்துக் கொண்டு செல்ல அதிதியும் வேகமாக எழுந்தாள்.

அவளை எழவிடாமல் கைநீட்டி தடுத்தவன் உட்காரும் படி சமிக்ஞை செய்தான்.

அவளோ நின்றபடியே அவனை முறைத்துவிட்டு நடக்க எத்தனித்தாள்.

பொறுத்துப் பார்த்த ராஜ், சட்டென அவளது கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தான்.

“யூ இடியட்… ஒரு பொண்ணோட கையை பிடிச்சு இப்படி தான் இழுப்பியா”  காரம் குறையாமல் கேட்க அலைப்பேசியில் டைப் செய்து பதிலளித்த ராஜ்ஜிடமும் அதே காரம்.

“சொல்லும் போதே கேட்டு இருந்தா நான் ஏன் இப்படி பண்ண போறேன்… அடம்பிடிச்சு நிற்கிறவங்களை இழுத்து தான் உட்கார வைக்கணும்…” என்ற வார்த்தைகளை படித்தவளின் முகத்தில் கோபத்தின் ஆக்கிரமிப்பு.

“ஹலோ மிஸ்டர். நீங்க இழுக்கிற இழுப்புக்கெல்லாம் என்னாலே வளைஞ்சு கொடுக்கமுடியாது. ஏன் இதை வாயாலே சொன்னா என்ன? என் கிட்டே நேரா பேசக்கூட பிடிக்கலையா… இல்லை நீங்க என்ன ஊமையா?” என அவள் கேட்ட அடுத்த நொடி ராஜ் வேகமாக திரும்பி அந்த இடத்தையே அலசி ஆராய்ந்தான்.

நல்லவேளை தீரன் அங்கில்லை!

இல்லையென்றால் மீண்டும் இங்கொரு சம்பவம் நடந்திருக்கும் என நினைத்தபடி நிம்மதி பெருமூச்சுவிட்டவனின் முன்பு சொடக்கிட்டு அழைத்தாள் அதிதி.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம எதுக்கு இப்படி சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்கீங்க… இன்னைக்கு மௌன விரதமா.. இல்லை உங்களுக்கு வாய் பேச வராதா?” என அவள் கோபத்துடன் கேட்க ஆமாம் என்ற உறுதியான தலையசைப்புடன் பேசவராது என்றான் ராஜ் சைகையில்.

அதைக் கண்டு

திகைப்பில் தெறித்தது அதிதியின் விழிகள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

லிப்ஃட்டை விட்டு வெளியே வந்த தீரனும் மிதுராவும் அலுவலகத்திற்கு எதிரில் இருக்கும் அந்த பூங்காவிற்கு வந்தடைந்தனர்.

கனமான மௌன திரை விழுந்திருந்தது இருவரிடையே.

அதை கலைக்கும் விதமாய் தீரனின் குரல் ஒலித்தது.

“மிது” என்றழைத்தவனது குரல், பெருமழையில் சிதைந்த அணைக்கட்டாய் உடைந்திருந்தது.

திரும்பியவளின் விழிகளிலோ ஆறா துயரம்!

“ஏன் தீரா, இப்படி பண்ண? எதுக்காக இப்படி சொன்ன?” அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கேட்க தீரனின் முகத்தில் வருத்தத்தின் நிழல்.

இலை உதிர்ந்த பின்பு காற்றில் நடுங்கும் மரக்கிளை போல் நடுங்கின, அவன் உதடுகள்.

“மிது, சாரிடா… எனக்கு வேற வழி தெரியலை. ராஜ்ஜை என்னாலே மறுபடியும் உடைக்க முடியாது. அவன் உடையாம இருக்கிறதுக்காக, நான் எத்தனை தடவை வேணும்னாலும் உடைவேன். ” என தீரன் சொல்ல மிதுராவின் விழிகளில் வெறிப்பு.

“நீ உடைஞ்சுக்கோ தீரா… ஆனால் நீ ஏன் என்னையும் சேர்த்து உடைக்கிறே? நான் என்ன பாவம் பண்ணேன். ” என்றவளது குரலில் இருந்த கோபமும்  வருத்தமும் அவன் இதயத்தை நொறுக்கியது.

“மிது, ரெண்டு பேரும் கடந்தகாலத்திலே ஒரே பொண்ணை காதலிச்சு  காயப்பட்டதாலே தான் முன்னாடி உன்னை விட்டு விலகினேன். ஆனால் அவன் காதலிக்கிறது உதிரத்துடிக்கும் பூ ன்ற மெயில் ஐடி பொண்ணை  தெரிஞ்ச போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த சந்தோஷத்தை  காலம் வேகமா சிதைச்சுடுச்சு. நாங்க ஏன் மிது எப்போவும் ஒரே பொண்ணை காதலிச்சு தொலையுறோம்… ” என பேசிக் கொண்டிருக்கும் போதே மிதுரா இடைமறித்தாள்.

“யூ ஆர் அகெய்ன் லையிங் தீரா… என்னை கழட்டிவிட நீ காரணம் தேடுற. எப்போ நீ என்னையும் ராஜ்ஜையும் இணைச்சு பேசுற அளவுக்கு காரணம் சொல்லிட்டியோ அப்பவே உன் கிட்டே காரணம் கேட்கக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். ஐ ஹேட் யூ தீரன்… ” என்று கத்தியவளின் குரலோ பனிப்பாறை போல இறுகி இருந்தது.

“இல்லை மிதுரா… நான் பொய் சொல்லைல. நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்ட மெயில் அவனை பாதிச்சு இருக்கு. ராஜ்ஜே என் கிட்டே சொன்னான். நான் பொய் சொல்லைல.” என்று தீரன் சொல்ல சொல்ல மிதுராவின் கண்களிலே பெரிய மாற்றம்.

வேமாக கைப்பேசியை எடுத்தவள் எதையோ தேடி, எதிரில் நின்றவனின் முன்பு நீட்டினாள்.

“தீரா இது தான் நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அனுப்புன மெயில். இந்த ஹேப்பி நியூ இயர் மெயில் படிச்சு ராஜ் என்னை காதலிச்சு இருப்பாங்கன்றதை என்னாலே ஏத்துக்க முடியாது… நம்பவும் முடியாது.” என்ற மிதுராவின் சொற்கள் அவன் இதயத்தை ஊடுருவிப் பார்த்து அவனை செயலற்றவனாக்கியது.

சிலையாய் நின்றவனையே அசையாத கண்களால் பார்த்தாள்.

“என்னை விட்டு நீ விலகி போகனும் அவ்வளவு தானே… போ எங்க வேணாலும் போ. நான் இனி காரணம் கேட்கமாட்டேன். உன்னை தொல்லை பண்ண மாட்டேன்.  நிம்மதியா வாழு.” அவள் கோபத்தில் கத்திவிட்டு சென்றுவிட தீரனிடம் அசைவே இல்லை.

அவன் காலம்,

அவள் காட்டிய மெயிலிலேயே உறைந்துப் போய் இருந்தது.

அதைப் படித்தவனுக்கோ ஸ்தம்பிப்பிலிருந்து வெளியே வர வெகு நேரம் எடுத்தது.

ஆனால் பிரக்ஞை கலைந்த நேரம்

அங்கே மிதுராவை காணவில்லை.

அவன் இதயம் சுக்கல்சுக்கலாய் உடைந்துப் போயிருந்தது.

நிற்க முடியாமல் கால்கள் தடுமாற பொத்தென்று அந்த பென்ச்சில் அமர்ந்தவனின் கைகளோ வேகமாக அலைப்பேசியை தேடியது. 

ராஜ் குறிப்பிட்டு சொன்ன அந்த மெயிலை எடுத்துப் பார்த்தவனின் கண்கள் திகைப்பில் தெறித்தது!

அந்த மெயில் ஐடி “உதிரத்துடிக்கும்பூ@gmail.com” என்றிருக்க மிதுராவின் மெயில் ஐடியோ “உதிரத்துடிக்கும்பூ@yahoo.com” என்றிருந்தது.

ஆக ராஜ் காதலிக்கும் பெண் மிதுரா இல்லை.

அவள் வேறொருவள்!

நினைத்த மாத்திரத்தில் சந்தோஷமும்  சோகமும் அவனை ஒரு சேர தாக்கியது.

மெயிலின் முன்பாதியை மட்டுமே நினைவில் வைத்திருந்தவன் பின்பாதியை கவனிக்காமல் விட்டிருக்க அந்த கவனக்குறைவு இவ்வளவு பெரிய குழப்பத்திற்கு வித்தாகிவிட்டது இப்போது.

 

மெலிந்து சக்தி இழந்து போய் கடைசியாய் ஒலித்த மிதுராவின் வேதனைக் குரல் மீண்டும் மீண்டும் அவன் இதயத்தை அதிர வைக்க செவிகளை அழுந்த மூடிக் கொண்டான்.

“ஐயோ நான் தப்பு பண்ணிட்டேனே… என் மிதுவை நானே உடைச்சுட்டேனே… என்னை மன்னிப்பியா மிதுரா?” வேதனைக்குரலில் மனதுக்குள் இங்கே  புலம்பிக் கொண்டிருக்க அவளோ அங்கே இடமாற்றல்(ட்ரான்ஸ்பர்) கடிதத்தை எழுதிக் கொண்டு இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!