காதல் தீண்டவே -28அ

காதல் தீண்டவே -28அ

சில நேரங்களில் அப்படி தான்…

ஒரு சொல், சிறிய செயல் நம்மை அப்படியே ஸ்தம்பிப்பில் ஆழ்த்திவிடும்.

அப்படி தான் ராஜ் செய்த அந்த சைகையில் அதிதி செயலிழந்து நின்றாள்.

அவனால் பேச முடியாது என்பதை அறிந்து  முதலில் திடுக்கிட்டவளின் மனதில் வந்துப் போனது கடந்த காலத்தின் நினைவு.

அதை நினைத்ததும் கண்களில் ஒரு கசப்பு!

சட்டென்று தன் முகபாவத்தை மாற்றி கொண்டவள் இப்போது கோபமாக அவனைப் பார்த்தாள்.

“நீங்க சொன்ன விஷயத்தைக் கேட்டு நான் பரிதாபப்படமாட்டேன் ராஜ். நீங்க எனக்கு எப்பவும் எதிரி. அது மாறாது…” கழுத்தை வெட்டிக் கொண்டு சொன்னாள்.

“எனக்கு உங்களோட இரக்கமும் வேண்டாம் நட்பும் வேண்டாம்… சிற்பிக்கும் அபிக்கும் இடையிலே நந்தி மாதிரி இருக்க வேண்டாம்னு தான் உங்களை தடுத்தேன். மத்தபடி எனக்கு வேற எந்த இன்டென்ஷனும் இல்லை. உங்களுக்கு பிடிக்கலைனாலும் பதினைந்து நிமிஷத்துக்கு என் கூட  இருந்து தான் ஆகணும்…” என்று டைப் செய்துவிட்டு  இவனும் அவளைப் போலவே தலையை சிலுப்பிக் கொண்டான் .

இருவரிடையே நடக்கும் பனிப்போர் எப்போது முடிவடையுமோ?

காலத்தின் கைகளில் தான் பதில்.

💐💐💐💐💐💐💐💐💐💐

அலுவலக அறையில்…

குழப்பமாய் சிற்பியை ஏறிட்டது அபியின் கண்கள்.

“சிற்பி, நீ மெயில் அனுப்பனும்னு தானே என்னைக் கூட்டிட்டு வந்தே… இப்போ என் சிஸ்டத்திலே என்ன பண்ற?” எனக் கேட்க சிற்பி அவனைத் திரும்பி முறைத்துவிட்டு மீண்டும் கணினியில் கவனமானாள்.

அதற்கு மேல் அபி எதுவும் பேசவில்லை.

மௌனமாய் அமர்ந்து அவளை பார்வையால் அளந்து கொண்டிருந்தான்.

தன் வேலையை முடித்து நிமிர்ந்தவளோ
அபியின் பார்வையைக் கண்டு முகத்தை நொடித்துக் கொண்டாள்.

“இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சலில்லை… என்னை அழ வைச்சுட்டே இல்லை…” அவள் மெல்லிய குரலில் புலம்ப அபியின் செவிகளில் துல்லியமாக அது விழுந்தது.

சுற்றி முற்றும் பார்த்தான்.

அந்த அறையே காலியாக இருந்தது.

ட்ரைனிங் க்ளாஸிற்காக எல்லாரும் பக்கத்து அறையில் குழுமியிருந்தனர்.

முப்பது நிமிடத்திற்கு பிறகு தான் எல்லாரும் திரும்பி அறைக்குள் வருவார்கள் என உணர்ந்தவன்
சிற்பியின் கையை எடுத்து  மெதுவாக தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

“சிற்பிமா நீ எவ்வளவு காயப்பட்டு இருக்கேனு எனக்கு புரியுது… ஆனால் அந்த ஐஸ்வர்யா வசமா உன்னை சிக்க வைச்சுட்டா… எங்களுக்கு தெரியும், நீ எந்த தப்பும் பண்ணலைனு… ஆனால் அதை ஆதராமில்லாம சொன்னா, உங்களுக்கு பிடிச்சவங்களுக்காக பார்ஷியாலிட்டி பார்க்கிறீங்கனு எல்லாரும் தப்பா பேசுவாங்கடா… யாரும் உன்னை அப்படி பேசுறதுக்கு முன்னாடி குற்றவாளியை கண்டுபிடிக்கிறதுக்காக தான் உன் மேலே பழியைப் போட்டோம். உன்னை காயப்படுத்துறதுக்காக இல்லை… ” என்ற அபியின் விளக்கங்கள் அவளுக்கும் நியாயமாகவே பட்டது.

ஆனாலும் காயங்கள் இன்னும் வலிக்கிறதே!

“நீ என் கிட்டே சொல்லிட்டு நடிச்சிருந்தா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டேனே” என்றவளின் குரலிலிருந்த வருத்தம் அவனுக்கும் புரிய தான் செய்தது.

மெல்லிய குரலுடன் மீண்டும் தொடர்ந்தான்.

“சிற்பி, நான் உண்மையை சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனால் நீ அதுக்கு அப்புறம் என்னலாம் அராத்து பண்ணுவேனு நினைச்ச அடுத்த செகண்ட்டே அந்த முடிவை கைக்கழுவிட்டேன். ” என்றவனது வார்த்தையைக் கேட்டதும் இவள் படபடத்தாள்.

“ஏன் அப்படி நான் என்ன பெரிய அராத்து பண்ண போறேன்…  எதுக்காக சொல்லைல?”

“நான் சொல்லியிருந்தா நீ விளையாட்டுத்தனமா இருந்து இருப்ப… முட்டை பஃப்ஸ் வாங்கி கொடுத்தா தான் நடிப்பேன்… கேக் வாங்கி கொடுத்தா தான் ஃபீல் பண்ணுவேனு நீ  அடம்பிடிச்சுக்கிட்டே நடிக்கிறதுலே கோட்டைவிட்டிருப்பே…”

‘வாஸ்தவம் தானே… நாம அப்படிப்பட்ட ஆளு தானே.’ என்ற உண்மை சிற்பியின் மனதுக்கு புரிந்தாலும் அபியை இன்னும் சில நிமிடங்களுக்கு சுத்தலில் விடவேண்டும் என்று தோன்றியது.

“நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்கமாட்டேன். போ போ நான் சமாதானமாக மாட்டேன்.” என்று கோபமாக திரும்பிக் கொண்டவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் அவள் கண்களை காதலாய் ஊடுருவிப் பார்த்தான்.

“என்ன பண்ணா, என் சிற்பிக்கு கோபம் போகும்… ” என்றவனது கேள்விக்கு சட்டென்று பதில்மொழி வந்தது, “நூறு புஷ்-அப்ஸ் எடுக்கணும்” என்று

“பண்ணிட்டா போச்சு…” என்ற அபி சிறிதும்  தயங்காமல் சட்டென்று குனிந்து புஷ்-அப்ஸ் எடுக்க சிற்பியோ வேகமாக தடுத்தாள்.

“நோ நோ அபி… நான் சும்மா சொன்னேன். இங்கே வேண்டாம். யாராவது பார்த்தா சங்கடம்” என்ற சிற்பியின் வார்த்தைகள் அபியின் செவிக்குள் நுழையவே இல்லை.

அபி கவனம் முழுக்க புஷ்-அப்ஸிலேயே இருந்தது.

“அடேய் அபி… போதும் போதும்… புஷ்-அப்ஸ் எடுக்கிறதை நிறுத்திட்டு இங்கே வா” என சொல்ல அபி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

“டேய் லூசுப்பையா… உன் கிட்டே நான் முக்கியமான விஷயத்தைக் காட்ட தான் உன்னை மேலே கூட்டிட்டு வந்தேன். நீ புஷ்-அப்ஸ் எடுத்தே டைம் வேஸ்ட் ஆக்கிடுவ போல… ” என்று சொல்லிவாறே அவனை அருகே வரும்படி சமிக்ஜை செய்தாள்.

அவனும் அவளருகில் வந்தான்.

“நான் ஏன் ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு ஆஃபிஸ்க்கு வந்தேனு உன் மரமண்டைக்கு கேட்கணும்னு தோணுச்சா?” அவள் கேட்டதும், “ஏன் சிற்பி வந்தே?” என்றான் அசட்டு சிரிப்புடன்.

“எல்லாத்தையும் நான் சொல்லிக் கொடுக்கணும்” என தலையில் அடித்துக் கொண்டவள்

“ஏன் உன் சிஸ்டம்மை ஞாயிற்றுக்கிழமை லாகின் பண்ணேனு என்னை கேட்கமாட்டியா? இதையும் நானே தான் சொல்லித் தரணுமா?” எனக் கேட்க அவன் முகத்தில் அசடு கிலோக்கணக்கில் வழிந்தது.

“ஏன் சிற்பி என் சிஸ்டத்தை லாகின் பண்ணே?”

“நீயே உன் நொள்ளைக்கண்ணை திறந்து பாரு… ” என்றவளின் குரலில் ஏகத்துக்கும் சலிப்பு.

அபி வேகமாக தன் கண்களை சிஸ்டத்தின் மேல் படரவிட்டான்.

டெஸ்க்டாப்பில் ‘டூ மை அபி’ என்ற பெயரில் ஒரு பி.பி.டி இருந்தது.

குழப்பத்துடன் அதை திறந்து பார்க்க அவனது முகத்தில் மாறுதல்.

அந்த பி.பி.டியின் முதல் ஸ்லைடில்(பக்கத்தில்) அபியின் படம் போடப்பட்டு அதற்கு கீழே “புஷ்-அப்ஸ் கண்ணா” என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப் பார்த்தவன் அவளை செல்லமாக முறைத்துவிட்டு அடுத்த ஸ்லேடை திருப்பினான்.

“காலம் முழுக்க எனக்கு முட்டை பஃப்ஸ் வாங்கி தருவியா… நம்ம புள்ளைங்க, பேரன் பேத்தியோட சேர்ந்து  இனி வரப் போற எல்லா எனிமி டேஸ்ஸையும் ஹேப்பியா கொண்டாடலாமா… உனக்கு சம்மதமா?” என்ற கேள்வியைப் படித்ததும் அபியின் கண்களில் அப்படியொரு காதல்.

இதழ்களிலோ பெரும் புன்னகை

‘சிற்பி இந்த உலகத்துலே யாரும் இப்படி ஃப்ரொபோஸ் பண்ணி இருக்க மாட்டாங்க…  என் செல்லமே, இனி காலம் முழுக்க முட்டைபஃப்ஸ் வாங்கிக் கொடுத்து எனிமி டேஸ்ஸை ஹேப்பியா கொண்டாடுவோம்… ” சொல்லியபடி அவன் அணைக்க இவளும் பதிலுக்கு அணைத்தாள்.

காலத்துக்குமான அணைப்பு அது!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

ராஜ் தன் கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தான்.

சரியாக நேரம், பதினைந்து நிமிடங்களை கடந்திருந்தது.

வேகமாக எழுந்து கொண்டவன் அதிதியைப் பார்த்து வருமாறு சமிக்ஜை செய்ய அவளோ சிறிதும் அசைந்தாளில்லை.

நீ சொல்லி நான் எழ வேண்டுமா என்ற கேள்வி அவள் கண்களில் ஓரத்தில்.

அதை உணர்ந்தவன் அவளை கண்டுகொள்ளாது அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

“சரியான திமிருப்பிடிச்சவன்” என்ற முணுமுணுப்போடு அவன் சென்ற திசையை வெறித்தவள் சரியாக ஐந்து நிமிடத்திற்கு பிறகு அறைக்குள் நுழைந்தாள்.

அவள் கேபினின் அருகே மிதுரா.

அவள் கைகளில் ஒரு கடிதம்.

கேள்வியாய் பார்த்தபடி தன் இருக்கையில் அதிதி அமர்ந்த நேரம்

“ஐ நீட் ட்ரான்ஸ்பர்” கோரிக்கையோடு ஒலித்தது மிதுராவின் குரல்.

அதைக் கேட்டு பட்டென்று நிமிர்ந்த அதிதி, “சரியான காரணமிருந்தா தான் என்னாலே ட்ரான்ஸ்பர் தர முடியும்” என்றாள் தீர்க்கமாக.

“நான் போயிட்டா நீங்க உங்க அப்பா கூட ஹேப்பியா இருக்கலாம் இதுவே தகுந்த காரணம்தானே அதிதி.” என்ற மிதுராவின் குரலில் கண்ணீர்தடம்.

அது அதிதியை என்னவோ செய்த கணத்தில், அங்கே தீரன் மிது என்ற அழைப்போடு வந்தான்.

அவள் திரும்பாமலே அதிதியை பார்த்து “ஐ நீட் ட்ரான்ஸ்பர்” என்றாள் மீண்டும் அழுத்தமாக.

தீரனிடம் அதிர்வு!

“மிது ப்ளீஸ் இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்காதே… ப்ளீஸ்டா எனக்கு ஒரே ஒரு வாய்ப்பை கொடு. நான் மறுபடியும் தப்பு பண்ண மாட்டேன்டா… உன்னை காயப்படுத்தமாட்டேன்.” என்ற தீரனின் வார்த்தைகள் அவள் மனதினுள் ஏறவே இல்லை.

“மிஸ். அதிதி ப்ளீஸ் என்னோட ட்ரான்ஸ்பர் ப்ராசெஸ்சை ஆரம்பிங்க. என்னாலே இங்கே வேலைப் பார்க்க முடியாது. பாண்ட் இருக்கிற ஒரே காரணத்தாலே தான் ட்ரான்ஸ்பர் கேட்கிறேன், இல்லைனா ரிசைன் லெட்டர் கொடுத்திருப்பேன்” என்று மிதுரா பேசிக் கொண்டிருக்கும் போதே அதிதி அந்த கடிதத்தை வாங்கி சுக்குநூறாக கிழித்துப் போட்டாள்.

ராஜ்ஜிற்கு அங்கே ஏதோ வாக்குவாதம் நடந்துக் கொண்டிருப்பதை போல தோன்ற வேகமாக இருக்கையை விட்டு எழுந்து வந்தான்.

“மிஸ் மிதுரா நீங்க சொன்ன கடிதத்துலே சொன்ன ரீசன்ஸ் ஏத்துக்கிறபடியா இல்லை… உங்களோட ட்ரான்ஸ்ஃபரை என்னாலே அப்ரூவ் பண்ண முடியாது” உறுதியான மறுப்பு அதிதியிடம்.

“அதிதி சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்குறே இல்லை…” மிதுரா கோபமாய் கேட்க அதிதியோ தோளைக் குலுக்கிக் கொண்டு ஆமாம் என்பதைப் போல தலையசைத்தாள்.

மௌனமான வெறிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் மிதுரா.

தீரன் அதிதியைப் பார்த்து கண்களால் நன்றி சொல்ல அவளிடமும் பதிலுக்கு புன்முறுவல்.

“அவளைப் போகவிடாம தடுத்துட்டேன். இதுக்கு மேலே அவளை சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு. ” என்று அதிதி சொல்ல சம்மதமாக தலையசைத்துவிட்டு தீரன் அங்கிருந்து அகன்றான்.

ராஜ்ஜோ அதிதியின் முன்பு வேகமாக டைப் செய்துவிட்டு அலைப்பேசியை எடுத்து பார்க்கும்படி கண்களால் கட்டளையிட்டான்.

“நீங்களே விருப்பப்பட்டாலும் மிதுராவுக்கு ட்ரான்ஸ்பர் கொடுக்கமுடியாது. ஏன்னா ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் நீங்க எச்.ஆர், இப்போ ட்ரைனி” என்று எழுதியிருந்ததைப் படித்ததும் அதிதியின் முகத்தில் காரம் கூடிப் போனது.

அவளது கோபத்தை பார்த்து திருப்தியாக சிரித்தவன் மெல்லிய சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான்.

தன்னிருக்கையில் வந்து அமர்ந்த மிதுராவையே கேள்விகளால் உலுக்கிக் கொண்டிருந்தாள் சிற்பிகா.

“எதுக்குடி இப்போ ட்ரான்ஸ்பர் கேட்டே. தீரனுக்கும் உனக்கும் இடையிலே ஏதும் ப்ராப்ளமா… அப்படி இருந்தாலும் கூட இருந்து சண்டை போட்டு டார்ச்சர் பண்ணாம இப்படி அமைதியா எங்கேயாவது ஓடிப் போயிடுவியா? ஏன் ப்ரெண்ட்டா இருந்து இப்படி எல்லாம் பண்ணலாமா?”
சிற்பியின் வரிசையான கேள்விகளில் மிதுரா உடைந்துப் போய் அழுதாள்.

ஒளிழந்த அவள் கண்கள் அபியை என்னவோ செய்தது.

சில நாட்களாக அவளிடம் இயல்பாக பேச முடியாமல் தள்ளி நின்று கொண்டிருந்தவனால் இப்போதும் தள்ளியிருக்க முடியவில்லை.

துயரத்தின் ரேகை படிந்த முகத்தை அபியால் காண சகியாமல் அதைத் துடைத்தெறியும் நோக்கோடு சட்டென்று எழுந்து கொண்டான்.

டிஸ்யூ பேப்பரை நீட்டிய அபியை மௌனமாய் மிதுரா ஒரு பார்வைப் பார்த்தாள். 

அதில் இப்போதாவது உன் தயக்கம் குறைந்ததா என்ற கேள்வி.

அதை உணர்ந்தவன் “மிது நான் முன்னாடி சொன்னா மாதிரி நீ என் தங்கச்சி தான்… அது மாறாது. கூட பிறந்தாலும் சரி இல்லைனாலும் சரி, ஐ யம் ஆல்வேஸ்  யுவர் பிக் ப்ராதர். நடுவுல சில நெருடல்களாலே விலகியிருந்தேன். ஆனால் அந்த டைம் பார்த்து என் குட்டி தங்கச்சியை யாரோ அழ வைச்சுட்டாங்க. யாருனு சொல்லு நான் ஒரு கை பார்த்துடுறேன்.” சமாதானம் செய்த அபியை நோக்கி மென்மையாக சிரித்தாள். அதில் சந்தோஷமும் விரக்தியும் போட்டி போட்டது.

“எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை அண்ணா…  நான் போகணும். ப்ளீஸ் நான் போயிடுறேனே…” கண்களில் நீர்த்திரையோடு அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே ராஜ் அங்கு வந்தான்.

அவளது கண்ணீரை கண்டவன் சட்டென்று தீரனை திரும்பி கோபமாக பார்த்தான்.

தீரனின் விழிகளில் ஏற்கெனவே கண்ணீர் அணை கட்டியிருந்தது. ஆனால்  அதைக் கட்டுப்படுத்தியபடி தூரத்தில் தயங்கி நின்று கொண்டிருந்தவனை ராஜ் அருகில் வரும்படி சமிக்ஜை செய்தான்.

மிதுராவின் கண்ணீரை துடைத்த ராஜ், “இதோ இவன் தானே உன்னை அழவைச்சான். அந்த மீட்டிங் ஹாலுக்குள்ளே கூட்டிட்டு போய் இவனை குமுறி எடு மிது. இவன் எவ்வளவு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாலும் நாங்க காப்பாத்த வர மாட்டோம். ” அவர்கள் மறுத்து பேசுவதற்கு இடம் தராமல்  மீட்டிங் ஹாலிற்குள் தள்ளிவிட்டான்.

எதிரும் புதிருமாய் இப்போது தீரனும் மிதுராவும்.

இருவரின் விழிகளிலும் கண்ணீர் திரை.

இந்த கண்ணீர் விரைவில் சந்தோஷமாக மாறுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!