காதல் தீண்டவே -28ஆ

காதல் தீண்டவே -28ஆ

சில நேரங்களில் அப்படி தான்…

நம் உயிருக்கு உயிரானவரின் கண்ணீரைக் கண்டு அடக்கி வைத்த கண்ணீர் உடைந்துவிடும்.

அப்படி தான் மிதுராவின் விழியிலிருந்த வலி, தீரனின் விழிநீரை உடைத்தது.

கலங்கிய கண்களுடன் “மிது” என்றவன் வேகவேகமாக தன் மனதுக்குள் நிகழ்ந்த காதலையும் பின்பு சந்தித்த மனப்போராட்டங்களையும் அதன் பிறகு ராஜ்ஜிற்காக எடுத்த முடிவையும் சொல்லிவிட்டு நிமிர, மிதுரா சுள்ளென்று அவன் கன்னத்திலேயே ஒரு அறை வைத்தாள்.

அது வரை கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தவனின் இதழ்களில் இப்போது புன்னகை மொட்டு.

தனக்கு சொந்தமானவர்களின் மீது மட்டும் தான் மனம் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும்.

ஆக மிதுரா என்னை வெறுக்கவில்லை கோபம் மட்டுமே கொண்டிருக்கிறாள்!

அடிவாங்கிய கன்னத்தை மிருதுவாக வருடி ரசித்தவன் இன்னொரு கன்னத்தையும் காட்ட அதிலும் மிதுரா ஒன்று வைத்தாள்.

சுகமாக அதை வாங்கி கொண்டவன் தலையை குனிந்து நிற்க அதைப் புரிந்தாற் போல அவளும் நங்கென்று கொட்டினாள்.

வேகமாக திரும்பி தன் முதுகை காண்பிக்க, அதிலும் பளாரென்று ஒன்று வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

“ஏன்டா லூசுப்பையலே நீயா ஏதாவது நினைச்சுக்கிட்டு நீயா ஏதாவது முடிவு பண்ணுவியா? நீ என்ன ப்ரேக்-அப் சொல்றது? நான் இப்போ ப்ரேக்-அப் சொல்றேன்.
லெட்ஸ் ப்ரேக்-அப். லெட் எண்ட் திஸ். நான் உனக்கு வேண்டாம்.. நாம பிரிஞ்சுடலாம்” அவன் சொன்ன வார்த்தைகளையே திரும்பி அவனுக்குப் படித்து காண்பித்தாள்.

ஆனால் அவனோ சிறிதும் அசராமல்
“ஓகே மிதுமா. நாம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்.” என சொல்ல ரௌத்திரமான முறைப்பு அவளிடம்.

“ப்ரேக்-அப் பண்ணிட்டு மறுபடியும் முதலிலே இருந்து காதலிக்கலாம்னு சொல்ல வந்தேன் மிதுமா.”

“அடேய் தீரா ஒரு தடவை உன்னை காதலிச்சு நான் பட்டது போதாதா? இன்னொரு தடவை அதே தப்பை நான் பண்ணமாட்டேன்… ” முடிவாக சொன்னவளை வருத்தத்தோடு பார்த்தான்.

“சாரி மிது… ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங் பெரிய சம்பவம் பண்ணிடுச்சு. உன்னை விட்டு விலகி ஓடும் போது, உன்னை வேண்டாம்னு சொல்லும் போதெல்லாம் எவ்வளவு காயப்பட்டேன் தெரியுமா? ராஜ் மறுபடியும் காயப்படக்கூடாதுன்றது மட்டும் தான் என் மனசுலே இருந்ததுடா. “

“நான் காதல் முக்கியமா இல்லை நட்பு முக்கியமான்னு கேட்க மாட்டேன் தீரா.
நீ ராஜ்ஜோட நட்புக்கு மதிப்பு கொடுத்தது எனக்கு வருத்தமே இல்லை. ஆனால் ஏன் என் காதலுக்கு மதிப்பு கொடுக்காம போன?” என்றுக் கேட்க அவனிடம் பெரும் மௌனம்.

“நீ என்னையும் என் காதலையும் எவ்வளவு காயப்படுத்தியிருக்க தெரியுமா? எப்படிடா அது ஆறும். அப்படி ஆறுனாலும் அந்த தழும்பு இருந்து மனசை உறுத்திக்கிட்டே இருக்குமே” என்றவள் கேட்க  சமாதானம் செய்யும் வழியறியாது நின்றான் அவன்.

ஒரு சமாதானத்தில் அடங்கிவிடக்கூடியதல்ல மிதுராவின் ஆதங்கமும் வருத்தமும் என்று உணர்ந்தவனுக்குள் நிர்கதியாய் நிற்கும் நிலை.

அவனை திரும்பியும் பாராமல் வெளியே சென்றவள் வேகமாய் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

அதன் பிறகு தீரனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தீரன் வருத்தத்துடன் கணினி திரையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்  ராஜ் வேகமாக வந்து கட்டி அணைத்தான்.

குழம்பியபடி தீரன் பார்க்க ராஜ்ஜோ தன் கையிலிருந்த அலைப்பேசியை தீரனை நோக்கி காட்டினான்.

அதில் முருகப்பா இன்சூரன்ஸ் என்ற கம்பெனி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அந்த கம்பெனியின் லைசென்ஸ் முறியடிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி படர்ந்து கிடந்தது.

இவர்கள் சாமர்த்தியமாக காய் நகர்த்தியதால் முருகப்பா இன்சூரன்ஸ், இதோ இப்போது அதளபாதளத்தில்!

துரோகத்தின்வாளை வைத்து தன்னை நெஞ்சுக்கு நேராக குத்தியவளை பழிவாங்கிவிட்ட சந்தோஷம் ராஜ்ஜின் முகத்தில் அலையாடியது.

“மச்சான் இந்த சந்தோஷத்தை இப்பவே கொண்டாடுவோம் வா… கொஞ்சம் சிரிச்சபடி போஸ் கொடு” என ராஜ் தன் ஃப்ரென்ட் கேமராவை ஆன் செய்தபடி வாயசைக்க தீரனின் இதழ்களில் புன்னகை.

இருவருடைய வெற்றிச் சிரிப்பையும் புகைப்படத்தில் சேமித்த ராஜ் வேகமாக கயலின் நம்பருக்கு அதை அனுப்பி வைத்து “இந்த தடவை நாங்க ஜெயிச்சுட்டோம், கயல் என்கிற சிவானி” என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அதைப் படித்த கயலின் கண்களில் இயலாமையும் குரோதமும் ஒரு சேரப் போட்டி போட்டது.

ஆனால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் காலம் நிறுத்தி அவளைப் பார்த்து சிரித்தது!

தீரனும் மிதுராவும் அதற்கடுத்து வந்த நாட்களில் அதிகமாக பேசிக் கொள்ளவே இல்லை.

தீரனுக்கு தெரியும் அவளது காயம் அத்தனை சீக்கிரத்தில் ஆறாது என்று…

அவளை சமாதானப்படுத்துகிறேன் என்ற பெயரில் பல குட்டி கரணங்களை நிகழ்த்தி அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை அவன்.

நீ பேசாததால் நான் சோகமாக இருக்கிறேன் பார், என்னை குடிக்க வைத்துவிட்டாய் பார், நான் நானாக இல்லை பார், என்னை அழித்துக் கொண்டேன் பார் என்று அவன் எதுவும் செய்து அவளை குற்றவுணர்வுக்கு ஆளாக்கவில்லை.

அவன் அவளுக்கான நேரத்தைக் கொடுத்தான்.

அவளை அதிகமாக தொந்தரவு செய்யாமல் அதே சமயம் தனியாகவும்விடாமல் அவள் அருகில் ஆறுதலாக நிழல் போல தொடர்ந்து கொண்டிருந்தான்.

உடைந்து போன தன்னை ஒட்டி மீட்டி எடுத்து கொண்டிருந்தவளை சில்லுகள் குத்திவிடாமல் கவனத்துடன் அருகிலிருந்து பார்த்துக் கொண்டான்.

தீரனின் செயலில் தெரிந்த அன்பும் பாசமும் மிதுராவிற்கு புரியாமலில்லை.

ஒருநாள் லிஃப்ட்டில் இருவரும் தனியாக வரும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அப்போது பார்த்து மின்சாரமும் சென்றுவிட லிஃப்ட் பாதியிலேயே நின்றது.

மிதுரா ஏளனத்துடன் இதழ்களை வளைத்தாள்.

“தீரா ஏன் இப்படி சினிமாத்தனமா பண்ற. லிஃப்ட்டை பாதியிலேயே நிறுத்தி வைச்சு இப்போ எனக்கு முத்தம் கொடுத்து கட்டிப்பிடிச்சு ரொமான்ஸ் பண்ண பார்க்கிறியா. நான் அதுக்குலாம் சமாதானம் ஆகமாட்டேன்.” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தீரன் இடைமறித்தான்.

“மிது நிறைய படம் பார்த்து கெட்டு போய் இருக்க. காதலியோட அனுமதியில்லாம அவளை அப்படி கட்டிப்பிடிச்சு சமாதானம் பண்றது ரொமான்ஸ் இல்லை ஹராஸ்மென்ட்… அதை நான் கண்டிப்பா பண்ணமாட்டேன்.” என்றான் தீர்க்கமாக.

“ம்ம்ம் இதெல்லாம் நல்லா வக்கணையா பேசு. ஆனால் லவ் பண்றதுல மட்டும் கோட்டையை விட்டுடு. உண்மையா நீ தான் ஆதனா? ஊருக்கே லவ்க்கு அட்வைஸ் கொடுக்கிற… ஆனால் உன் காதலிலே மட்டும் இப்படி சொதப்புறே…” என அவள் கேட்ட நேரம் போன மின்சாரம் திரும்ப வந்திருக்க அவசரமாய் லிஃப்ட்டை விட்டு வெளியேறினாள்.

தீரனின் வார்த்தைகள் அவள் இதயத்தை அசைத்துப் பார்த்தது தான். அவன் மீது  காதல் கணக்கில்லாமல் வழிந்து கொண்டிருந்தது தான்.

ஆனால் உள்ளுக்குள் இருக்கும் காயத்தின் வடுக்கள் இன்னும் அழியவில்லையே!

கனத்த மௌனத்துடனும் வருத்தம் பூசிய முகத்துடனும் வலம் வந்து கொண்டு இருந்த மிதுராவையே கவலையாகப் பார்த்தது விஸ்வத்தின் விழிகள்.

“என்னடா ஆச்சு ரொம்ப வேலையா?” என்று தலைமுடியை வாஞ்சையாய் கோதியபடி கேட்க மௌனத்தை பிடித்துக் கொண்டு நின்றாள் அவள்.

அவர்களிருவரையும் மாறிமாறி பார்த்த அதிதி எதுவும் பேசாமல் தன்னறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

உள்ளே நுழைந்த இரண்டு நிமிடத்திலேயே சீமா காப்பி கப்போடு வந்தார்.

“காப்பி குடிச்சுட்டு ஃப்ரெஷ் ஆகுமா” என்று சொல்ல மௌனமாய் தலையாட்டினாள் அதிதி.

உணவுக்கு முன்பு அவள் எப்போதும் காப்பி குடிப்பது வழக்கம். இங்கே வந்த புதிதில் அதை கவனித்த சீமா, அதற்கு பின்பு வந்த நாட்களில் அவளுக்கு தானே காப்பியை போட்டு கொடுக்க அதிதியின் கடினமான வேர்கள் மெல்ல அசைந்தது.

மாற்றாந்தாய்க்கு பிறந்த என்னை  எப்படி எந்த கசடும் கபடும் இல்லாமல் பார்க்கிறார்கள் என பல முறை வியந்ததுண்டு.

இப்போதும் அதே போல ஒரு முறை வியந்துவிட்டு அந்த காப்பியை உதடுகளுக்குள் உள்ளிழுத்தாள்.

ஆஹா தேவாமிர்தம்!

மௌனமாய் நின்று கொண்டிருந்த மகளை நீர் திரையிட பார்த்தார் விஸ்வம்.

“மிதுமா எந்த கவலையும் தீண்டாம உன்னை பத்திரமா பார்த்துக்கணும்னு நினைச்சேன்டா. ஆனால் நான் தவறுதலா விட்ட ஒரு வார்த்தை உன் சந்தோஷத்தை இப்படி வேரோட பறிச்சு போட்டுடுச்சே… இவ்வளவு காலமா நான் காட்டுன பாசத்தை எல்லாம், அந்த வார்த்தை ஒன்னுமில்லாம ஆக்கிடுச்சே…என்று கதறியவர் பின் நிதானித்து

“அப்பா உன் மேலே வெச்ச பாசம் பொய்யில்லைடா. நம்புமா…” என்று கைகளைப் பிடித்து கெஞ்சினார்.

அந்த ஒரு நாள்… அந்த ஒரு சொல்…  அந்த ஒரு கணம்…

அதை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் விஸ்வம் மிதுராவின் மீது வைத்த அன்பிலும் பாசத்திலும் எந்த கலங்கமில்லையே!

“அப்பா நீங்க என் மேலே வெச்ச பாசம் பொய்யில்லைனு எனக்கு தெரியும். ஆனாலும் அந்த வார்த்தையோட வீரியம் தாங்க முடியாம தான் இத்தனை நாளா ஒதுங்கி போனேன்… உங்க அன்பை சத்தியமா சந்தேகப்படலை. என்னை நீங்க பெத்தெடுக்கலைனாலும் நீங்க தான் என்னோட அப்பா” நெகிழ்வோடு சொன்ன மிதுரா அவரை அணைத்துக் கொண்டாள்.

தந்தையின் தோள் ஆதரவாய் கிடைத்ததும், அதுவரை உடைந்து கிடந்த மிதுராவிற்குள் புதியதாய் ஒரு தெம்பு.

தந்தையின் தோள்களிற்கு ப்ரத்யேக சக்தி இருப்பது உண்மே தானே…

கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டவள் பல நாட்கள் கழித்து அவரைப் பார்த்து அன்பாய் புன்னகைத்தாள்.

அவளையே வாஞ்சையாய் பார்த்தார் விஸ்வம்…

“அப்பா, இப்படியே என்னை பார்த்துட்டு இருந்தா அடுத்து அதிதி அக்கா வந்து முறைப்பாங்க… நீங்க அப்புறம் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகனும். அலார்ட் அலார்ட்” என்றவள் சொல்வதற்கும் அதிதி காப்பி கப்போடு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

முறைப்பாக மிதுராவையும் விஸ்வத்தையும்  பார்த்தவள் சீமாவிடம் திரும்பி “காப்பி ரொம்ப நல்லா இருந்ததுமா…” என்றாள் புன்னகையுடன்.

அவர்களிருவரும் பேசுவதை ஏக்கமாய் பார்த்தார் விஸ்வம்.

“அப்பா யூ டோன்ட் வொர்ரி… சீக்கிரமா அதிதி அக்கா உங்க கூட பேசுவாங்க… ” அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன்னறைக்குள் புகுந்தாள்.

உள்ளே நுழைந்ததும் மனம் முழுக்க புழுக்கம்.

ஜன்னலின் அருகே சென்றவள் மௌனமாய் வெளியே வெறித்தாள்.

இதுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் அவள் மனதினில் ஓடியது.

இறுதியாக கண்களில் நீர்க்கோடு.

அவள் மனம் முழுக்க வலி.

எப்போதும் சோகமாய் இருக்கும் போது ஆதனின் தோளில் சாய்பவள் இன்றும் சாய விரும்பினாள்.

ஆனால் ஒலியாக அல்ல… ஒளியாக!

தீரனுக்கு வேகமாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“ஐ வான்ட் டூ மீட் யூ” என்று அனுப்பிய அடுத்த நொடியே, “பீச் ஓகே வா ” என்ற கேள்வி உட்பெட்டியில் விழுந்தது.

ஓகே என்று பதில் அனுப்பியவள் விஸ்வத்திடம் சொல்லிவிட்டு கடற்கரைக்கு வந்தாள்.

எதிரே தீரன்…

மௌனமாய் கடற்கரையை வெறித்து கொண்டிருந்தவனின் எதிரே வந்து நின்றாள்.

இருவருக்கிடையே புகுந்து ஒளிர்ந்தது சந்திரனின் கிரணத்தூறல்கள்.

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நான் இப்போ என் ஆதன் கூட பேசணும். அவனோட தோளிலே சாஞ்சுக்கணும்… சாஞ்சுக்கவா?” என்றுக் கேட்ட அடுத்த நொடி சட்டென்று அவளை தோள்களில் தாங்கிக் கொண்டான் ஆதன்.

இருவரது கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அதை துடைத்தபடியே எதிரே இருந்த கடற்கரையை வெறித்தனர்.

“உன்னை அந்த தீரன் ரொம்ப கஷ்டப்படுத்துறான்ல மிது… ” என ஆதன் கேட்க மிதுராவின் இதழ்களில் கசந்த புன்னகை.

“ஒரு சின்ன மெயில் எங்க வாழ்க்கையை புரட்டி போட்டுடுச்சு. தீரன் மேலே இருந்த கோவம் கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. ஆனால் என்னை ஈஸியா வேண்டாம்னு சொல்லிட்டானேன்ற வருத்தம் மட்டும் என் மனசை குத்திக்கிட்டே இருக்கு . நான் அவனுக்கு முக்கியமில்லாதவளா போயிட்டேன்னு நினைக்கும் போதுலாம் கஷ்டமா இருக்கு. என்னாலே அவனை மன்னிக்க முடியல. ” என மிதுரா சொல்ல ஆதன் அவளது கைகளை தன் கைகளுக்குள் பொத்தி கொண்டான்.

“மிது இந்த தீரன் பையன் இருக்கான்ல அவன் நட்புக்காக உயிரையும் கொடுக்கிறவன். அவனுக்கு காதல்  முக்கியமா தெரியாது. அதோட அருமை புரியாது. அதனாலே அவனை நீ மன்னிக்காதே… காதலிக்காதே” என்றவனின் வார்த்தைகள் மிதுராவுக்குள் திகைப்பை ஏற்படுத்தியது.

“அப்போ நான் தீரனை காதலிக்க வேண்டாம்னு சொல்றியா ஆதா?” அதிர்வுடன் கேட்டவளின் நெற்றியில் இதமாக முத்தமிட்டவாறே ஆமாம் என்று தலையசைத்தான்.

“உன்னை அளவுக்கு அதிகமா காதலிச்சது தீரன் இல்லை, கார்த்திக் தான். உன்னையும் உன் கவிதையையும் அதிகமா ரசிச்சவன் கார்த்திக்.  எங்கே காதலிச்சுடுவோமோனு பயந்து பயந்தே காதலிலே விழுந்தவன் அவன். உனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு யோசிச்சு மனசுக்குள்ளே மருகுனவன் அவன் தான். அதனாலே அந்த தீரனை ப்ரேக்- அப் பண்ணிட்டு கார்த்திக்கை லவ் பண்ணு” என்ற ஆதனின் வார்த்தைகள் மிதுராவின் மனதினில் அதுவரை வீசிக் கொண்டிருந்த புயலை வலுவிழக்க செய்தது.

எதுவும் பேசாமல் அவனை இறுக அணைத்து கொண்டாள்.

“ஆமாம் இப்போ நீ கட்டிப்பிடிக்கிறது ஆதனையா,தீரனையா இல்லை கார்த்திக்கையா?” என்றுக் கேட்டான் குறும்பாக.

“சந்தோஷத்திலேயும் வருத்ததிலேயும் என் ஆதனோட தோளிலே தான் சாய்வேன்… ” என்றவளின் பதிலுக்கு “ஓ” என்றான் உதடு குவித்து.

“மிஸ்டர். ஆதன் இப்போ நீங்க போயிட்டு தீரனை வர சொல்லுங்க… ” என அவள் கேட்க ஆதனோ நீர்ப்பட்ட கோழியாய் உடம்பை சிலுப்பி நிமர்ந்தான்.

இப்போதோ எதிரில் தீரன்.

மிதுரா தீரனைப் பார்த்ததும் கோபமாய் முறைத்தாள்.

“டேய் தீரா…இனி உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லை… ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்” என மிதுரா சொல்ல இதய நோயாளியைப் போல நெஞ்சைப் பிடித்துக் கொண்டான் தீரன்.

“போதும் போதும் ஆக்டிங் கொடுத்தது… நீ போயிட்டு என் கார்த்திக்கை அனுப்பு” என அவள் சொல்ல தீரன் மீண்டும் உடம்பை சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்தான்.

இப்போது எதிரே கார்த்திக்.

மிதுராவை காதலாகப் பார்த்தவன்  “மிதுமா… நாம மறுபடியும் முதலிலே இருந்து காதலிக்கலாமா?” கண்களில் காதலைத் தேக்கியபடி கேட்க காதல் மழைச்சாரல் அவர்களின் மீது மெல்ல வீச துவங்கியது.

காதல் தீண்டியதோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!