காதல் தீண்டவே -fin

சில நேரங்களில் அப்படி தான்.

நம் உயிருக்கு உயிரானவரின் கண்ணீரைக் கண்டு அடக்கி வைத்த கண்ணீர் உடைப்பெடுத்துவிடும்.

அப்படி தான் மிதுராவின் விழியில் இருந்த வலி, தீரனின் விழிநீரை உடைத்தது.

கலங்கிய கண்களுடன் “மிது” என்றவனை அந்நிய பார்வைப் பார்த்தாள்.

அதைக் கண்டு நொறுங்கியவன், “ப்ளீஸ் மிது, அப்படி யாரோ மாதிரி பார்க்காதே. என்னாலே தாங்க முடியல” என்றான் வேதனை குரலில்.

“நீ தானே தீரன், என்னை இப்படி பார்க்க வைச்ச.என்னை விட்டுப் போகனும்ன்றதுக்காக நீ இதுக்கு முன்னாடி சொன்ன காரணத்தை எல்லாம் என்னாலே பொறுத்துக்க முடிஞ்சது. ஆனால் நீ கடைசியா சொன்ன காரணம் என்னை உடைச்சு போட்டுடுச்சு தீரா. எப்படி என்னையும் ராஜ்ஜையும் அப்படி நினைக்கலாம்? அப்போ நீ என்னை  சந்தேகப்பட்டு இருக்க ரைட்” என்றவளுடைய வார்த்தைகள் சாட்டையாய் சுழல இவன் இதயத்தில் பல சவுக்கடிகள்.

“மிது, நான் உன்னை சந்தேகப்படலடா. ராஜ்க்கு உன்னை ரொம்ப  பிடிக்கும் ஒரு வேளை அது காதலா மாறுனா இடையிலே நான் நந்தியா நிற்கக்கூடாதுனு தான் விலகி விலகி ஓடுனேன். பட் ராஜ் வேற ஒரு பொண்ணை காதலிக்கிறானு தெரிஞ்சதும் நான் போட்டிருந்தா போலி முகமூடியைக் கழட்டி எறிஞ்சுட்டு உன் கிட்டே ஓடி வந்துட்டேன் மிது. உன்னைக் காதலிக்கிறதை ஒத்துக்கிட்டேன். ஆனால் மறுபடியும் அந்த மெயில் ஐடி விஷயத்தாலே குழம்பி தப்புப் பண்ணிட்டேன்டா.” என்றவனை அவள் கோபத்தோடு முறைத்தாள்.

“தீரா நான் பண்ண பெரிய தப்பு, இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஹேப்பி நியூ இயர்னு விஷ் பண்ணி மெயில் பண்ணது தான். அந்த ஒரு மெயிலாலே எவ்வளவு கஷ்டப்படனுமோ அவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன்” என்றாள் வருத்தமாக.

“மிது,என் மனசுலே ஆழமா பதிஞ்சுப் போனது உதிரத்துடிக்கும்பூன்ற வார்த்தை தான். அவங்க பகிர்ந்த பதிவு என் மனசையும் ராஜ் மனசையும் ரொம்ப பாதிச்சுடுச்சு. பட் நீ அனுப்பின மெயில் ஐடியோட நேம் கூட நான் பார்க்கல மிது. பத்தோட பதினொன்னா வாசிச்சுட்டு போயிட்டேன்” என்றவனை கண்களில் கனலைப் பொருத்திப் பார்த்தாள்.

“சூப்பர் தீரா. அப்போ நான் உனக்கு பத்தோட பதினொன்னாவது ஆளு ரைட்.” என்றவளை சட்டென்று அணைத்தவன்

“நோ நோ மிதுமா. நீ பத்தோட பதினொன்னு இல்லை. எனக்கே எனக்காக படைக்கப்பட்ட ஒரே ஒருத்தி” என்று சொல்லி மேலும் இறுக்கி அணைத்தவனை வேகமாக  தள்ளிவிட்டாள்.

“ஏன்டா அப்படி உனக்கே உனக்காக படைக்கப்பட்ட ஒருத்தியை தான் இவ்வளவு அசால்டா விட்டுக் கொடுப்பியா?” என்றுக் கேட்டவள் சுள்ளென்று அவன் கன்னத்தில் ஒரு அறைவிட அது வரை கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தவனின் இதழ்களில் இப்போது புன்னகை மொட்டு.

தனக்கு சொந்தமானவர்களின் மீது மட்டும் தான் மனம் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும்.

ஆக மிதுரா என்னை வெறுக்கவில்லை கோபம் மட்டுமே கொண்டிருக்கிறாள்!

அடி வாங்கிய கன்னத்தை மிருதுவாக வருடி ரசித்தவன் இன்னொரு கன்னத்தையும் காட்ட அதிலும் மிதுரா ஒன்று வைத்தாள்.

சுகமாக அதை வாங்கிக் கொண்டவன் தலையை குனிந்து நிற்க அவளும் புரிந்துக் கொண்டு நங்கென்று கொட்டினாள்.

வேகமாக திரும்பி தன் முதுகை காண்பிக்க, அதிலும் பளாரென்று ஒன்று வைத்துவிட்டு நிமிர்ந்தவளோ கோபத்தில் படபடக்க துவங்கினாள்.

“ஏன்டா லூசுப்பையலே நீயா ஏதாவது நினைச்சுக்கிட்டு நீயா ஏதாவது முடிவு பண்ணுவியா? நீ என்ன ப்ரேக்-அப் சொல்றது? நான் இப்போ ப்ரேக்-அப் சொல்றேன். லெட்ஸ் ப்ரேக்-அப். லெட் எண்ட் திஸ். நான் உனக்கு வேண்டாம்.. நாம பிரிஞ்சுடலாம்” என்று அவன் சொன்ன வார்த்தைகளையே திரும்பி அவனுக்குப் படித்து காண்பித்தாள்.

ஆனால் அவனோ சிறிதும் அசராமல்
“ஓகே மிதுமா. நாம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்.” என சொல்ல ரௌத்திரமான முறைப்பு அவளிடம்.

“ப்ரேக்-அப் பண்ணிட்டு மறுபடியும் முதலிலே இருந்து காதலிக்கலாம்னு சொல்ல வந்தேன் மிதுமா.”

“அடேய் தீரா ஒரு தடவை உன்னை காதலிச்சு நான் பட்டது போதாதா? இன்னொரு தடவை அதே தப்பை நான் பண்ணமாட்டேன்” முடிவாக சொன்னவளை வருத்தத்தோடு பார்த்தான்.

“சாரி மிது. ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங் பெரிய சம்பவம் பண்ணிடுச்சு.ராஜ் மறுபடியும் காயப்படக்கூடாதுன்றது மட்டும் தான் என் மனசுலே இருந்ததுடா. உன்னை விட்டு விலகி ஓடும் போதும் உன்னை வேண்டாம்னு சொல்லும் போதும் எவ்வளவு காயப்பட்டேன் தெரியுமா?”

“நான் காதல் முக்கியமா இல்லை நட்பு முக்கியமான்னு சில்லியான கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன் தீரா. நீ ராஜ்ஜோட நட்புக்கு மதிப்பு கொடுத்தது எனக்கு வருத்தமே இல்லை. ஆனால் ஏன் என் காதலுக்கு மதிப்பு கொடுக்காம போன?” என்றவளது கேள்வி கூர்மையாய் விழ அவனிடம் பெரும் மௌனம்.

“நீ என்னையும் என் காதலையும் எவ்வளவு காயப்படுத்தி இருக்க தெரியுமா? எப்படிடா அது ஆறும். அப்படி ஆறுனாலும் அந்த தழும்பு இருந்து மனசை உறுத்திக்கிட்டே இருக்குமே” என்று கேட்டவளை  ஆற்றுப்படுத்தும் வழி அறியாது நின்றான்.

ஒரு சமாதானத்தில் அடங்கிவிடக்கூடியது அல்ல மிதுராவின் ஆதங்கமும் வருத்தமும் என்று உணர்ந்தவனுக்குள் நிர்கதியாய் நிற்கும் நிலை.

அவனை திரும்பியும் பாராமல் வெளியே சென்றவள் வேகமாய் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

மிதுரா மட்டும் தனியாக வந்ததைக் கண்ட ராஜ், வேகமாக மீட்டிங் ஹாலிற்குள் சென்றான். அங்கே தீரன் ஒளியிழந்த கண்களோடு மௌனமாய் நின்றிருந்தான்.

வேகமாக அவன் அருகில் சென்றவன் “மிதுரா இன்னும் சமாதானம் ஆகலையா?” என்றுக் கேட்க உதட்டைப் பிதுக்கினான் தீரன்.

“மிதுரா இன்னும் சமாதானம் ஆகாததைப் பார்த்தா உங்களுக்குள்ளே பெரிய பிரச்சனை நடந்திருக்குனு புரியுதுடா.  நீ எந்த ரீசனாலே ப்ராப்ளம் வந்ததுனு சொல்லு. நான் மிதுராவை சமாதானப்படுத்த ட்ரை பண்றேன்” என ராஜ் கேட்க தீரனிடம் திணறல்.

எப்படி சொல்வான் அந்த ப்ரச்சனையை தன் நண்பனிடம்?

தலையாட்டி மறுத்த தீரன் “இல்லைடா, அது பெரிய பிரச்சனை தான். ஆனால் சரி பண்ண முடியாத பிரச்சனையில்லை. மிது என்னை வெறுக்கல, அவளுக்கு என் மேலே கோபம் மட்டும் தான். சீக்கிரமா அவளை சரி பண்ணிடுவேன்” என தீரன் நம்பிக்கையாக சொல்ல ராஜ்ஜும் சரி என்று தலையாட்டினான்.

“எல்லாம் சீக்கிரமா சரியாகிடும். பெரிய ப்ரச்சனைக்கு பின்னாடி தான் பெரிய சந்தோஷம் காத்துக்கிட்டு இருக்கும். சோ இதுக்கு மேலே உன் லைஃப்லே ஹேப்பி மட்டும் தான் தீரா” என்றான் ராஜ் அவனது தோளை ஆறுதலாக அணைத்து.

ஆம் உண்மை தானே!

சில நேரங்களில் பெரிய வலிகளுக்கு பின்பு தான் பெரிய மீட்பினை அடைவோம்.

அப்படி மீண்ட தீரனின் உள்ளத்தில் இப்போது ஒரே ஒரு வருத்தம் மட்டுமே.

இன்னும் ராஜ்ஜின் வாழ்க்கை மீளவில்லையே!

கவலையுடன் ராஜ்ஜைப் பார்த்தான்.

“மச்சான் இன்னும் உதிரத்துடிக்கும் பூ மெயில் ஐடி யாருனு கண்டுபிடிக்கலையே. உன் வாழ்க்கையிலே எந்த பிரச்சனையும் தீராம இருக்கும் போது என்னாலே எப்படிடா என் வாழ்க்கையை மட்டும் பார்க்க முடியும்.” என்று தீரன் கேட்க முறைப்பாய் பார்த்தது ராஜ்ஜின் விழிகள்.

“நீ சந்தோஷமா இருந்தா போதும்டா  நல்லவனே. நானும் சந்தோஷமா இருப்பேன். ஒழுங்கா மிதுவை சமாதானப்படுத்தி ஹேப்பியா லைஃப் ஸ்டார்ட் பண்ணுடா. அவளை மறுபடியும் அழ வைச்சேனு தெரிஞ்சுது உன்னை தூக்கிப் போட்டு மிதிப்பேன். ” என்ற ராஜ்ஜின் வாயசைவைப் படித்ததும் தீரனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“மச்சான் இந்த டயலாக்கை, நியாயமா நீ சொல்ல வேண்டியது மிதுரா கிட்டே. என்னா அடி அடிக்கிறா தெரியுமா? முடியலைடா. எப்படி தான் சமாளிக்கப் போறேனோ” என்று  தீரன் சொல்ல ராஜ்ஜின் முகத்தில் புன்னகை.

“அதெல்லாம் என் மிது உன்னை கண்கலங்காம பார்த்துப்பா. நீ தான் அவளை அழ வெச்சுட்டே இருக்கே. அதான் இப்போ உன்னை சுத்தலிலே விட்டிருக்கா. நான் பெங்களூர் ஆஃபிஸ்க்கு போனா அப்புறம் மிதுவை அழ வைச்ச அவ்வளவு தான். ட்ரைன் ஏறி வந்து உன்னை மிதிப்பேன்” என்ற வார்த்தைகளைக் கேட்டு தீரன் அதிர்ந்தான்.

சட்டென ராஜ் பெங்களூர் போகப் போவதாய் பெரிய குண்டை அமைதியாக தூக்கிப் போட தீரனின் முகத்திலிருந்த சந்தோஷம் சுவடின்றி மறைந்திருந்தது.

“வாட்! பெங்களூர் ஆஃபிஸ்கு போறியா, எதனாலே, எதுக்காக? நீ பெங்களூர்லாம் போகக்கூடாது என் கூட தான் இருக்கணும்.” என்றான் தீரன் முடிவாக.

“நோ தீரா, நான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன். ப்ளீஸ் என்னை தடுக்காதே” என்ற ராஜ்ஜின் வார்த்தைகளிலும் தீர்க்கம்.

“டேய் உன்னை விட்டுட்டு நான் எப்படிடா இருப்பேன்.” என்று கலக்கமாக கேட்டவனை கண்டு நட்பாய் மலர்ந்தது ராஜ்ஜின் முகம்.

“மச்சான் அந்த முருகய்யா இன்சூரன்ஸ் கம்பெனியை நம்ப முடியாது. நாம சென்னையிலே இருக்கும் போது அவங்க அங்கே பெங்களூர்லே இருக்கிற கம்பெனியிலே காய் நகர்த்த ப்ளான் பண்ணலாம். சோ நீ சென்னை ஆஃபிஸ் பார்த்துக்கோ. நான் பெங்களூர் ஆஃபிஸ் பார்த்துக்கிறேன்”

“இல்லை ராஜ், உன்னை தனியாவிட எனக்கு மனசில்லை. அந்த உதிரத்துடிக்கும் பூ மெயில் ஐடியை கண்டுபிடிக்கிற வரை நான் உன் கூட அங்கே பெங்களூர்ல இருக்கிறேனே.” என்ற தீரனின் வார்த்தைகளைக் கேட்டதும் ராஜ்ஜின் முகத்தில் அசாத்திய மாற்றம்.

“தீரா எனக்கு அந்த உதிரத்துடிக்கும் பூ ன்ற மெயில் ஐடி சொன்ன வாழ்க்கைப் பதிவை பிடிக்கும். அந்த பொண்ணு மேலே ஃபீலிங்க்ஸ் இருக்கு. ஆனால் காதல் இருக்கானு கேட்டா இல்லைனு தான் சொல்லுவேன்.” என்றான் அழுத்தமாக.

ராஜ்ஜின் மனவோட்டத்தை  அவன் வார்த்தைகளில் அறிந்ததும் தீரனின் முகத்தில் அப்பட்டமான சோர்வு.

எப்படியாவது அந்த மெயில் அனுப்பிய பெண்ணை கண்டுபிடித்து ராஜ்ஜுடன் ஜோடி சேர்த்துவிட வேண்டும் என்ற தீரனின் எண்ணத்தில் இப்போது பெரும் அடி.

“மச்சான் ஆனாலும் நீ தனியா இருக்கும் போது எப்படிடா என்னாலே மிதுராவை சமாதானப்படுத்தி டூயட் பாட முடியும்” என தீரன் அப்போதும் சமாதானம் ஆகாமல் கேட்க அவனது தோளைத் தட்டிய ராஜ்

“டேய் என்னைப் பத்தின கவலையை விடு. முதலிலே இது உன்னோட கதை. இதுலே நீ ஹேப்பியா இருக்கனும் அதான் எனக்கு முக்கியம். எனக்கான கதை கண்டிப்பா இருக்கும். அந்த செகண்ட் பார்ட்ல எனக்கு துணையா யார்  வராங்கன்றதை  பின்னாடி பார்த்துக்கலாம். பட் இது இப்போ உன்னோட கதை. சோ ஃபோகஸ் முழுக்க இனி உன் பக்கம் தான் இருக்கனும்” என்ற ராஜ்ஜின் வார்த்தைகளைக் கேட்டு அவன் மனது அப்போதும் முழுமையாக சமாளிக்கவில்லை.

“மச்சான் அந்த உதிரத்துடிக்கும்பூவை கண்டுபிடிக்கிற வரைக்குமாவது உன் கூட இருக்கேன்” என தீரன் மீண்டும்  அதே கேள்வியில் வந்து நிற்க ராஜ்ஜோ சலிப்பானான்.

“தீரா ஐ யம் டெல்லிங் அகெய்ன். நான் அந்த உதிரத்துடிக்கும் பூ வை காதலிக்கல. பட் அந்த பொண்ணு மேலே எனக்கு ஃபீலிங்க்ஸ் இருக்கு. பிகாஸ் என்  வாழ்க்கையிலே பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துனது அந்த பொண்ணு தான். அது என்னன்றதுலாம் அப்புறமா சொல்றேன். இப்போ நீ உன் கதையை மட்டும் பாரு” என்று சொல்லிவிட்டு சொல்ல தீரனின் மனம் துவண்டுப் போனது.

ஆக இவன் அந்த உதிரத்துடிக்கும்பூ பெண்ணையும் காதலிக்கவில்லை. அப்படியென்றால் இனி தான் வேறொரு பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.

இவனுக்குப் பொருத்தமாக யார்  இருப்பார்கள் என்று யோசித்தபோது
அவன் மனதில் சட்டென வந்து விழுந்தது அதிதியின் முகம்.

ராஜ்ஜின் வறண்ட நிலத்தில், தென்றலாய் அதிதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று இங்கே இவன் யோசித்த நேரம்  அங்கே பெங்களூர் அலுவகத்தில் புயலாய் நுழைந்து கொண்டிருந்தாள் ஒருத்தி.

பார்க்கலாம் இதில் எந்த காற்று ராஜ்ஜின் இதயத்தை நோக்கி காதலாய் தீண்டப் போகிறதென்று.

கால காற்றின் திசையை  அறிந்தவர் எவரோ?

மீட்டிங் ஹாலிலிருந்து வெளியே வந்த தீரன் மிதுராவைப் பார்த்தான். ஆனால் தீரனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தீரன் வருத்தத்துடன் கணினித்திரையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்  ராஜ் வேகமாக வந்து கட்டி அணைத்தான்.

குழம்பியபடி தீரன் பார்க்க ராஜ்ஜோ தன் கையிலிருந்த அலைப்பேசியை தீரனை நோக்கி நீட்டினான்.

அதில் முருகய்யா இன்சூரன்ஸ் என்ற கம்பென சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதால் அந்த கம்பெனியின் லைசென்ஸ் முறியறிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி படர்ந்து கிடந்தது.

இவர்கள் சமார்த்தியமாக காய் நகர்த்தியதால் முருகய்யா இன்சூரன்ஸ், இதோ இப்போது அதளபாதளத்தில்!

துரோகத்தின் வாளை வைத்து தன்னை நெஞ்சுக்கு நேராக குத்தியவளை பழிவாங்கிவிட்ட சந்தோஷம் ராஜ்ஜின் முகத்தில் அலையாடியது.

“மச்சான் இந்த சந்தோஷத்தை இப்பவே கொண்டாடுவோம் வா. கொஞ்சம் சிரிச்சபடி போஸ் கொடு” என ராஜ் தன் ஃப்ரென்ட் கேமராவை ஆன் செய்தபடி வாயசைக்க தீரனின் இதழ்களில் புன்னகை.

இருவருடைய வெற்றிச் சிரிப்பையும் புகைப்படத்தில் சேமித்த ராஜ் வேகமாக கயலின் நம்பருக்கு அதை அனுப்பி வைத்து, “இந்த தடவை நாங்க ஜெயிச்சுட்டோம், கயல் என்கிற சிவானி” என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அதைப் படித்த கயலின் கண்களில் இயலாமையும் குரோதமும் ஒரு சேரப் போட்டி போட அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற கோபம் பெருகியது.

ஆனால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் காலம் நிறுத்தி அவளைப் பார்த்து சிரிக்கின்றதே.

💐💐💐💐💐💐💐💐💐

சில நாட்களாக மிதுராவின் முகத்தினில் புன்னகையே எட்டிப் பார்ப்பது இல்லை.

கனத்த மௌனத்துடனும் வருத்தம் பூசிய முகத்துடனும் வேலையை முடித்து வீட்டிற்குள் நுழைந்த மிதுராவையே கவலையாகப் பார்த்தது விஸ்வத்தின் விழிகள்.

“என்னடா ஆச்சு ரொம்ப வேலையா?” என்று தலைமுடியை வாஞ்சையாய் கோதியபடி கேட்க மௌனத்தைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அவள்.

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த அதிதி எதுவும் பேசாமல் தன்னறைக்குள் நுழைந்துக் கொள்ள, இரண்டு நிமிடத்திலேயே சீமா காஃபி கப்போடு வந்து நின்றார்.

“காஃபி குடிச்சுட்டு ரிஃப்ரெஷ் ஆகுமா” என்று சீமா சொல்ல மௌனமாய் தலையாட்டினாள் அதிதி.

உணவுக்கு முன்பு அவள் எப்போதும் காஃபி குடிப்பது வழக்கம். இங்கே வந்த புதிதில் அதை கவனித்துவிட்ட சீமா, அதற்கு பின்பு வந்த நாட்களில் அவளுக்கு தானே காஃபி போட்டு கொடுக்க அதிதியின் கடினமான வேர்கள் மெல்ல அசைந்தது.

மாற்றாந்தாய்க்கு பிறந்த தன்னை எப்படி எந்த கசடும் கபடும் இல்லாமல் பார்க்கிறார்கள் என பல முறை வியந்ததுண்டு.

இப்போதும் அதே போல ஒரு முறை வியந்துவிட்டு அந்த காப்பியை உதடுகளுக்குள் உள்ளிழுத்தாள்.

ஆஹா தேவாமிர்தம்!

💐💐💐💐💐💐💐💐💐💐

மௌனமாய் நின்று கொண்டிருந்த மிதுராவையே கண்ணீர் திரையிட பார்த்தார் விஸ்வம்.

“மிதுமா எந்த கவலையும் தீண்டாம உன்னை பத்திரமா பார்த்துக்கனும்னு நினைச்சேன்டா. ஆனால் நான் தவறுதலாவிட்ட ஒரு வார்த்தை உன் சந்தோஷத்தை இப்படி வேரோட பறிச்சு போட்டுடும்னு எதிர்பார்க்கலை.  இவ்வளவு காலமா நான் காட்டுன பாசத்தை எல்லாம், அந்த வார்த்தை ஒன்னுமில்லாம ஆக்கிடுச்சே” என்று உடைந்துப் போய் அழுதவர் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு

“அப்பா உன் மேலே வெச்ச பாசம் பொய்யில்லைடா. நம்புமா”  என்று கெஞ்சினார்.

தன் முன்பே கலங்கி நின்ற தன் தந்தையை காண சகியவில்லை அவளுக்கு.

அந்த ஒரு நாள்… அந்த ஒரு சொல்! அந்த ஒரு கணம்.

அந்த மூன்றை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் விஸ்வம் மிதுராவின் மீது வைத்த அன்பிலும் பாசத்திலும் எந்த கலங்கமும் இல்லையே!

உடைந்து நின்ற தன் தந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள்,

“அப்பா நீங்க என் மேலே வெச்ச பாசம் பொய்யில்லைனு எனக்கு தெரியும். ஆனாலும் அந்த வார்த்தையோட வீரியத்தைத் தாங்க முடியாம தான் இத்தனை நாளா ஒதுங்கிப் போனேன். உங்க அன்பை சத்தியமா சந்தேகப்படலை. என்னை நீங்க பெத்து எடுக்கலைனாலும் நீங்க தான் என்னோட அப்பா” கண்களில் வடிந்த நீரோடு சொன்னவளை நெகிழ்வோடு அணைத்துக் கொண்டார் விஸ்வம்.

தந்தையின் தோள் ஆதரவாய் கிடைத்ததும், அதுவரை உடைந்து கிடந்த மிதுராவிற்குள் புதியதாய் ஒரு தெம்பு.

தந்தையின் தோள்களிற்கு ப்ரத்யேக சக்தி இருப்பது உண்மே தானே.

கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டவள் பல நாட்கள் கழித்து அவரைப் பார்த்து அன்பாய் புன்னகைத்தாள்.

அவளையே கண்களில் வழிந்த அன்போடு வாஞ்சையாய் பார்த்தார் விஸ்வம்.

“அப்பா, இப்படியே என்னை பார்த்துட்டு இருந்தா அடுத்து அதிதி அக்கா வந்து முறைப்பாங்க, அப்புறம் நீங்க அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகனும். அலார்ட் அலார்ட்” என்று இவள் சிரித்தபடி சொல்வதற்கும் அதிதி காப்பி கப்போடு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

முறைப்பாக மிதுராவையும் விஸ்வத்தையும்  பார்த்தவள் சீமாவிடம் திரும்பி, “காப்பி ரொம்ப நல்லா இருந்ததுமா.” என்றாள் புன்னகையுடன்.

அவர்கள் இருவரும் பேசுவதை ஏக்கமாய் பார்த்தார் விஸ்வத்தை தோள் தட்டி திருப்பினாள் மிதுரா.

“அப்பா யூ டோன்ட் வொர்ரி. சீக்கிரமா அதிதி அக்கா உங்க கூட பேசுவாங்க. ” என்று அவருக்கு ஆறுதல் சொல்ல அவரிடமும் நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது.

பார்க்கலாம் அதிதி விஸ்வத்திடம் பேசுகிறாளா என்று.