காதல் தீண்டவே(Epilogue)

காதல் தீண்டவே(Epilogue)

சில நேரங்களில் அப்படி தான் பெரிய வலிகளுக்கு பின் பெரிய மீட்பினை அடைவோம்.

அப்படி மீண்ட தீரனின் உள்ளத்தில் இப்போது ஒரே ஒரு வருத்தம் மட்டுமே.

இன்னும் ராஜ்ஜின் வாழ்க்கை மீளவில்லையே!

கவலையுடன் ராஜ்ஜைப் பார்த்தான்.

“மச்சான் இன்னும் உதிரத்துடிக்கும் பூ மெயில் ஐடி யாருனு கண்டுபிடிக்கலையே… உன் வாழ்க்கையிலே எந்த பிரச்சனையும் தீராம இருக்கும் போது என்னாலே மட்டும் எப்படிடா சந்தோஷமா இருக்க முடியும்” என்று தீரன் கேட்க முறைப்பாய் பார்த்தது ராஜ்ஜின் விழிகள்.

“நீ சந்தோஷமா இருந்தா போதும்டா  நல்லவனே… நானும் சந்தோஷமா இருப்பேன். ஒழுங்கா மிதுவை பார்த்துக்கோ. அவளை மறுபடியும் அழ வைச்சேனு தெரிஞ்சுது உன்னை தூக்கிப் போட்டு மிதிப்பேன். ” ராஜ்ஜின் வாயசைவைப் படித்ததும் தீரனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“மச்சான் இந்த டயலாக்கை, நியாயமா நீ சொல்ல வேண்டியது மிதுரா கிட்டே… என்னா அடி அடிக்கிறா தெரியுமா? முடியலைடா…” தீரனின் சந்தோஷ முகத்தைப் பார்த்து ராஜ்ஜின் முகத்திலும் புன்னகை வழிந்தோடியது.

“அதெல்லாம் என் மிது உன்னை கண்கலங்காம பார்த்துப்பா… நீ தான் அவளை அழ வெச்சுட்டே இருக்கே. நான் பெங்களூர் ஆஃபிஸ்க்கு போன அப்புறம் தட்டி கேட்க ஆளில்லைனு மிதுவை அழ வைச்ச அவ்வளவு தான். ட்ரைன் ஏறி வந்து உன்னை மிதிப்பேன்”

சட்டென ராஜ் பெரிய குண்டை தூக்கிப் போட தீரனின் முகத்திலிருந்த சந்தோஷம் சுவடின்றி மறைந்திருந்தது.

“வாட் பெங்களூர் ஆஃபிஸ்கு போறியா. எதனாலே? எதுக்காக? நீ பெங்களூர்லாம் போகக்கூடாது என் கூட தான் இருக்கணும்.” என்றான் தீரன் முடிவாக.

“நோ தீரா, நான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன். ப்ளீஸ் என்னை தடுக்காதே.” என்ற ராஜ்ஜின் வார்த்தைகளிலும் தீர்க்கம்.

“டேய் உன்னை விட்டுட்டு நான் எப்படிடா இருப்பேன்.” கலக்கமாக கேட்டவனை கண்டு நட்பாய் மலர்ந்தது ராஜ்ஜின் முகம்.

“மச்சான் அந்த முருகப்பா இன்சூரன்ஸ் கம்பெனியை நம்ப முடியாது. நாம சென்னையிலே இருக்கும்போது அவங்க அங்கே பெங்களூர்லே இருக்கிற கம்பெனிலே காய் நகர்த்த ப்ளான் பண்ணலாம். சோ நீ சென்னை ஆஃபிஸ் பார்த்துக்கோ. நான் பெங்களூர் ஆஃபிஸ் பார்த்துக்கிறேன்”

“இல்லை ராஜ் உன்னை தனியாவிட எனக்கு மனசில்லை. அந்த உதிரத்துடிக்கும் பூ மெயில் ஐடியை கண்டுபிடிக்கிற வரை நான் உன் கூட அங்கே பெங்களூர்ல இருக்கிறேனே.” என்ற தீரனின் வார்த்தைகளைக் கேட்டதும் ராஜ்ஜின் முகத்தில் அசாத்திய மாற்றம்.

“தீரா எனக்கு அந்த உதிரத்துடிக்கும் பூ ன்ற மெயில் ஐடி சொன்ன வாழ்க்கைப் பதிவை பிடிக்கும். அந்த பொண்ணு மேலே ஃபீலிங்க்ஸ் இருக்கு. ஆனால் காதல் இருக்கானு கேட்டா இல்லைனு தான் சொல்லுவேன்.”

ராஜ்ஜின் மனவோட்டத்தை  அவன் வார்த்தைகளில் அறிந்ததும் தீரனின் முகத்தில் அப்பட்டமான சோர்வு.

எப்படியாவது அந்த மெயில் அனுப்பிய பெண்ணை கண்டுபிடித்து ராஜ்ஜுடன் ஜோடி சேர்த்துவிட வேண்டும் என்ற தீரனின் எண்ணத்தில் இப்போது பெரும் அடி.

ஆக இவன் அந்த பெண்ணையும் காதலிக்கவில்லை…

ராஜ்ஜுக்கு பொருத்தமாக யார் இருப்பார்கள் என்று யோசித்தபோது
அவன் மனதில் விழுந்தது அதிதியின் முகம்.

ராஜ்ஜின் வறண்ட நிலத்தில், தென்றலாய் அதிதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று இங்கே இவன் யோசித்தநேரம்  அங்கே பெங்களூர் அலுவகத்தில் புயலாய் நுழைந்து கொண்டிருந்தாள் ஒருத்தி.

பார்க்கலாம் இதில் எந்த காற்று  ராஜ்ஜின் இதயத்தை காதலால் தீண்ட போகிறதென்று.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

காலத்துக்கு காயத்தை ஆற்றும் வலிமை இருப்பது உண்மையே. ஆனால் அதற்கு காயத்தை போக்கும் வலிமையில்லையே!

அதிதிக்கு விஸ்வத்தின் மேல் முன்பிருந்த கோபம் இல்லை. ஆனால் அவரிடம் இயல்பாய் பேசவிடாமல் எதுவோ தடுத்தது.

அதைப் புரிந்து கொண்டு விஸ்வமும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அவளை சங்கடப்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்திடுவார்.

அந்த வீட்டில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த அதிதியை மிதுரா தான் இழுத்து பிடித்து உட்கார வைத்து பேச்சு கொடுப்பாள்.

அதிகாலையிலேயே அவளை எழுப்பி மொட்டைமாடிக்கு தள்ளிக் கொண்டு வருகிறவள் தினமும் ‘தாய்-சி’ என்னும் யோககலையை மனநிம்மதிக்காக செய்ய வைப்பாள்.

வீட்டிலும் அலுவலகத்திலும் தன்னை அன்பாய் பார்த்துக் கொண்ட மிதுராவோடு இப்போது எல்லாம் நட்பாக பழக ஆரம்பித்திருந்தாள் அதிதி.

சீமாவின் மேல் அவளுக்கு முன்பிருந்தே அன்பு உண்டு. ஆனால் இப்போதோ அது பேரன்பாக உருவெடுத்து இருந்தது.

அதுவும் உடம்பு சரியில்லாமல் அறைக்குள் படுத்து இருக்கும் தன்னை நொடிக்கு ஒரு முறை பரிதவிப்போடு பார்த்துவிட்டு செல்பவரின் மீது நேசம் வழிந்தோடியது.

குட்டிப் போட்ட பூனை போல் தவித்துக் கொண்டிருந்த சீமாவை நோக்கி “எனக்கு ஒன்னுமில்லை… லைட்டா தலைவலி… அதனாலே தான் ஆஃபிஸ்க்கு போகலே. கவலைப்படும்படி வேற எதுவும் இல்லை” என்று சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனாலும் சீமாவின் மனது சமாதனம் ஆகவில்லை.

“நான் மெடிக்கல் ஷாப் போயிட்டு மாத்திரை வாங்கிட்டு வரேன்டா… ஈவினிங் தலைவலி குறையலேனா டாக்டர் கிட்டே போகலாம்.”

அவள் மறுப்பதையும் பொருட்படுத்தாது கிளம்பியவர் கையில் மாத்திரையோடு திரும்ப வந்தார்.

ஆனால் சீமாவின் முகத்தில் செல்லும் போது இருந்த தெளிவு திரும்பி வரும்போது இல்லை. அப்படமான சோர்வு!

அவரது முகத்தை யோசனையுடன் பார்த்தவளின் முன்பு சீமா தண்ணீரையும் மாத்திரையும் நீட்டினார்.

“இதைப் போட்டுட்டு தண்ணீர் குடிடா…  சரியாகி…” என்று முழுவதாய் சொல்லி முடிப்பதற்கு முன்பே சீமாவின் குரல் கடலலை போல உள்ளிழுத்துக் கொண்டது.

வலிகளின் ரேகை படர்ந்து நொடிப் பொழுதில் முகபாவனைகளில் அசாத்திய மாற்றம்.

கைகளில் இருந்த தம்ளர் பிடிமானமில்லாமல் நழுவி விழுந்ததைப் போல சீமாவும் சுயநினைவற்று கீழே விழுந்தார்.

தன் முன்னே மயங்கிவரைக் கண்டு அதிதியிடம் அதிர்வு.

“அம்மா அம்மா… என்னை பாருங்கமா… என்ன ஆச்சுமா?” என்று சீமாவின் கன்னங்களை தட்டியபடி அதிதி கதற அவரிடம் அசைவே இல்லை.

மிதுராவிற்கும் விஸ்வத்திற்கும் அலைப்பேசியில் தகவல் சொன்னவள் துரிதமாக செயல்பட்டு சீமாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவளின் மனதிலோ அத்தனை வலி!

ஏற்கெனவே தாயை இழந்து பரிதவித்தவளின் உள்ளம் மீண்டும் கிடைத்த தாய்ப்பாசத்தை இழக்க பயப்பட்டது.

‘கடவுளே என் அம்மாவை எப்படியாவது காப்பாத்தி கொடு’ என வேண்டிக் கொண்டிருந்தவளின் முன்பு பதற்றம் ஊறிய முகத்துடன் வந்து நின்றார் விஸ்வம்.

“என்னாச்சுடா சீமாவுக்கு?” தவிப்பாக கேட்டவரின் கைகளை அதுவரை நடுங்கிக் கொண்டிருந்த அதிதியின் கைகள் தன்னிச்சையாக பற்றிக் கொண்டது.

“அப்பா பயமா இருக்குபா… அம்மாவுக்கு ஒன்னும் ஆகாதில்லை தானே… சந்தியா அம்மா மாதிரி சீமா அம்மாவையும் நான் இழந்திட மாட்டேன்ல” அழுகுரலோடு தன் தோளில் சாய்ந்தவளை தாங்கிய விஸ்வத்தின் கண்ணிலும் கண்ணீர்.

“எதுவும் ஆகாதுடா. நம்ம சீமா நம்மளை விட்டு போகமாட்டாடா… ” மகளுக்கு சமாதானம் சொல்வதைப் போல தனக்கு தானே சொல்லிக் கொண்டவரின் முன்பு மிதுரா வந்து நின்றாள், கூடவே இரண்டு கார்த்திக்கும் அபியும் சிற்பியும்.

ஒரு கை அதிதியை அணைத்திருக்க மறுகை மிதுராவை நோக்கி நீண்டது.

அதில் சரண் புகுந்தவள் “அம்மாவுக்கு என்னாச்சுபா…” என்றாள் கதறியபடி.

அவளின் தலைமுடியை கோதியபடியே “கார்டியாக் அரெஸ்ட்னு நர்ஸ் சொன்னாங்கடா… டாக்டர் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க… கண்டிப்பா அம்மாவுக்கு ஒன்னும் இருக்காது” என்றார் அவளை ஆற்றுப்படுத்தும்விதமாக.

இரண்டு மகள்களையும் தன் தோளில் தாங்கிக் கொண்டு தன் மனைவிக்காக தவிப்புடன் காத்து கொண்டிருந்தவரை நோக்கி மருத்துவர் வந்தார்.

விஸ்வம் மருத்துவரின் அறைக்கு சென்றுவிட அங்கே கதறிக் கொண்டிருந்த அதிதியையும் மிதுராவையும் பார்த்து மற்றவர்கள் தேற்ற முயன்றனர்.

அழுது அழுது சிவந்து போன மிதுராவின் முகத்தை துடைத்தபடி தீரன் சமாதானம் செய்து கொண்டிருக்க ராஜ்ஜோ தன் கைக்குட்டையை எடுத்து அதிதியை நோக்கி நீட்டினான்.

அந்த நிலையிலும் அதை வாங்க மறுத்து அபியை நோக்கி “கர்சீஃப் கொடுடா…” என்றவளை பார்த்து கோபத்தை சிந்தியது ராஜ்ஜின் விழிகள்.

மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்த விஸ்வத்தின் முகத்தில் முன்பிருந்த கலக்கம் சென்று ஒரு தெளிவு வந்திருந்தது.

தன்னையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த மகள்களின் முன்பு வந்தவர் , “சீமா ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாடா… அவளுக்கு இது ஃபர்ஸ்ட் அட்டாக்ன்றதாலே காப்பாத்திட முடிஞ்சுது. இனி அவங்களை பத்திரமா பார்த்துக்கோங்க.  டேக் குட் கேர் அட் ஹெர்” என்றதும் தான் சென்ற மூச்சு திரும்பி வந்தது அவர்களுக்கு.

அவசரபிரிவில் ஒருவர் மட்டுமே இப்போது சென்று பார்க்க அனுமதி தர விஸ்வம் உள்ளே சென்றார்.

அங்கே வாடிய மலராக சீமா!

முணுக்கென்று அவர் கண்களில் நீர் துளிர்க்க, சீமா கண்விழிப்பதை பார்ப்பதற்காக அங்கிருந்து நகராமல் மாலை வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தது விஸ்வத்தின் விழிகள்.

மெல்லிய அசைவு தெரிந்தது சீமாவிடம்.

கண்விழித்தவரின் விழிகள் விஸ்வத்தின் கண்ணீரை கண்டு தவித்தது.

அவரின் விழிநீரை துடைக்க  ஐவி போடப்பட்ட சீமாவின் கைகள் தன்னிச்சையாக மேலெழ அதை ஆதூரமாக பிடித்து கொண்டார் விஸ்வம்.

“சீமா ஒரு நிமிஷம் செத்துட்டேன்டா… நீ இல்லைனா நான் என்னாவேன்.” கதறியபடி  உடைந்து அழுதவரை சீமாவின் கண்கள் அன்போடு பார்த்தது.

அங்கே அவர்களுக்குள் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கிற அந்த உணர்வை காதல் என்னும் ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடமுடியாது.

இது காதலுக்கும் அப்பாற்பட்ட புரிதல், அரவணைப்பு.

அறைக்குள்ளே அடுத்து நுழைந்த அதிதியும் மிதுராவும் “அம்மா” என்ற குரலோடு சீமாவை நோக்கி வந்தனர்.

தன் மகள்களின் முகத்தில் கண்ட பரிதவிப்பைப் பார்த்த சீமா மறுகையை அவர்களை நோக்கி ஆதரவாக நீட்ட
விஸ்வமோ அதிதியை பார்த்தவுடன் சங்கடமாக தன் கையை எடுக்க முயன்றார்.

அதிதி, விஸ்வத்தின் கையை நகர்த்தும் முன்பே தன் கையை சீமாவின் கரத்தின் மேல் வைத்து தடுத்துவிட்டு அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள்.

“சந்தியா அம்மாவை இழந்தா மாதிரி உங்க ரெண்டு பேரையும் இழக்கமாட்டேன்.   எவ்வளவு தான் வருத்தம் இருந்தாலும், நீங்க எனக்கு அப்பா. உங்க கிட்டே என் இப்படி பண்ணீங்க ஏன் விட்டுட்டு போனீங்கனு கேட்க மாட்டேன்.  கடந்தகால வருத்தங்களாலே நிகழ்கால அன்பை இனி நிராகரிக்கமாட்டேன்… எனக்கு என் அப்பாவோட அரவணைப்பு வேணும்” என்றாள் அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி.

விஸ்வத்தின் கண்களில் கண்ணீரும் புன்னகையும் ஒரு சேர போட்டியிட்டது.

தன் இரு தோள்களில் இரு மகள்கள் கைவளைவில் தன் மனைவி தாங்கிய விஸ்வத்தின் இதயத்தில் இதுவரை இருந்த துயரங்கள் எல்லாம் துகளாய் மாறி உடைய தெளிந்த வானமாய் அவர்.

வெவ்வேறு கிளை பறவைகள் அன்பென்னும் கூட்டில் அடைந்த அற்புத தருணம் இது!

💐💐💐💐💐💐💐💐💐

விஸ்வத்தின் வீடே அன்று களை கட்டியிருந்தது.

மிதுராவின் பிறந்தநாள் விழா  கொண்டாட்டத்திற்காக சீமாவும் விஸ்வமும் பரபரப்பாக எல்லா ஏற்பாடுகளையும் ஒருபக்கம் கவனித்துக் கொண்டிருக்க அதிதியோ மிதுராவிடம் மல்லு கட்டிக் கொண்டிருந்தாள்.

“ஹே மிது, கொஞ்சம் ஒழுங்கா நில்லேன்… ஏன்டி இப்படி அசைஞ்சிட்டே இருக்கே. பின்னல் கோணலா பாகுது பார்” அதிதி மிதுராவோடு போராடி கொண்டிருந்தாள்.

“நாத்தனாரே, அந்த பக்கம் மறுபடியும் முடி சிலும்பிடுச்சு பாருங்க… அடியே மிது ஒழுங்கா உட்காருடி” என்று இந்த பக்கம் சிற்பிகா கத்தி கொண்டிருந்தாள்.

“ஒரு பர்த்டே பாப்பாவை இப்படி திட்டுறீங்களே… இருங்க கார்த்திக்ஸ் வரட்டும் உங்க ரெண்டு பேரையும் மாட்டிவிடறேன்” என்று மிதுரா மிரட்டும் போதே உள்ளே இரண்டு கார்த்திக்கும் நுழைந்து கொண்டிருந்தனர்.

அங்கே பலூனை ஊதிக் கொண்டிருந்த அபி “வாங்கடா வந்து நீங்களும் ஊதித் தள்ளுங்க” என்று அழைக்க இவர்களும் பலூனை எடுத்து உதட்டில் வைத்தனர்.

தீரன் தன் மூச்சுக்காற்றை அதற்கு கொடுத்து முட்டை வடிவத்திற்கு மாற்றிய நேரம் அருகே கேட்ட காலடி சப்தத்தில் நிமிர்ந்தான்.

அழகின் சிலை வடிவமாய் எதிரே மிதுரா!

தேவதையே கண்ட ஸ்தம்பிப்பு அவனிடம்.

அவன் உதட்டில் இருந்த பலூன் காற்றிழந்து பறந்தது போல அவனும் காற்றிழந்து வானவெளியில் பறந்தான்.

“டேய் தீரா, வாயை மூடுறா… கொசு உள்ளே போயிடப் போகுது” என்று அபி வாரிய பிறகே அவன் இயல்புநிலைக்கு திரும்பினான்.

“மிதுமா… எல்லாரும் வந்தாச்சுடா… கேக் வெட்டலாம் வாமா” என்றழைத்த நேரம் “நான் வராம எப்படி கேக் வெட்டலாம்?” என்று வாசற்பக்கம் ஒரு குரல் வந்து விழுந்தது.

‘யாருடா அது?’ என்ற கேள்வியுடன் மிதுரா திரும்ப,  பதிலாக எதிரில் விமல்…

“என்னா நட்பே? என்னை மட்டும் கழட்டிவிட்டிட்டியே” என விமல் கேட்க மிதுராவிடம் சந்தோஷ துள்ளல்.

“டேய் விமலு நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?” என கேட்டபடி ஓடி வந்து அணைத்து கொண்டாள் மிதுரா.

“உன் பர்த்டேகாக ஃப்ளைட் பிடிச்சு வந்தேன் பார்த்தியா… என்னை சொல்லணும். உனக்கு கிஃப்டே கிடையாது போ” என்று சிணுங்கியவனை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தபடி கேக்கை வெட்டினாள்.

முதலில் விஸ்வத்திற்கும் சீமாவிற்கும் ஊட்டிவிட்டு அடுத்து அதிதியின் முகத்தில் பூசியவள், இரண்டு கார்த்திக்கை நோக்கி நகர எத்தனித்த போது கீழே இருந்த பலூன் அவளது காலை இடறிவிட்டது.

அடுத்த நொடியே இரண்டு கார்த்திக்கின் கரங்களுக்குள் பத்திரமாய் அடங்கினாள் மிதுரா.

அவர்கள் கரங்களுக்குள் வாகாய் பொருந்தியவளின் இதழ்களிலோ சிரிப்பு.

அவர்கள் கேள்வியாய் நோக்க,
“நான் விழுந்தா என்னை தாங்க ரெண்டு கார்த்திக் இருக்கீங்க… ஒருத்தன் காதலனா… இன்னொருத்தன் நண்பனா”  சொல்லியபடியே இருவருக்கும் கேக்கை ஊட்ட  அவர்களின் இதழ்களில் புன்னகை கீற்று.

எல்லாருடைய பரிசுமழையிலும் அன்று மிதுரா நனைந்து கொண்டிருக்க அவள் மனம் மட்டுமே இன்னும் நிரம்பாத குளமாய்.

தன் காதலனிடமிருந்து இன்னும் பரிசு வரவில்லையே!

வரிசையாக எல்லாரும் கிளம்பி கொண்டிருக்க மிதுராவோ ஏக்கமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதை கண்டு கொள்ளாது தீரன் சென்றுவிட இவள் முகத்தில் எரிமலையின் சிவப்பு.

‘கேக் தின்னுட்டு வயிறு முழுக்க பிரியாணி சாப்பிட்டுட்டு கிஃப்டே கொடுக்காம போறியேடா பாவிப்பையலே… இருக்குடா உனக்கு ‘ என மிதுரா மனதில் கருவிக் கொண்டு இருந்தாள்.

சரியாக இரவு பத்தரைக்கு “நான் கொடுத்த பாக்கெட் சைஸ் ரேடியோவோட பீச்சுக்கு வா…” என்று தீரனிடம் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து அவள் விழிகளில் வியப்பின் விரிவு.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நீண்ட கடற்கரை…

எதிரே பொன் வண்ண மணல் பரப்பு…

கவி பாடும் பேரலைகள்…

அந்த அலையின் கவிதையை ரசித்தபடி மணலை அளந்துக் கொண்டிருந்தாள் மிதுரா.

முகத்தில் சிந்திய சந்திரனின் ஒளிக்கற்றைகள் வெள்ளித்தட்டாய் அவளை மின்னச் செய்தது.

கண்களில் மகிழ்ச்சி பிராவகமாய் ஊற்றெடுத்திருந்தது.

இரு இதழிடையிலே சதா ஒட்டியிருக்கும் புன்னகை அன்று மட்டும் ஏனோ  பெரியதாக விரிந்திருந்தது.

எதிர்வந்து மோதும் இளந்தென்றலைப் போல அவளது மனதும் மிகவும் இலேசாகயிருந்தது.

இருக்காதா பின்னே?

அவள் மனதை கவர்ந்தவன் பிறந்தநாள் பரிசோடு வரப் போகிறானே!

மிருதுவாக அந்த ரேடியோபெட்டியை வருடியபடி என்ன பரிசாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் அலைப்பேசியில் “ரேடியோவை ஆன் பண்ணு மிது” என்று குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

ரேடியோவை உயிர்ப்பித்த அடுத்த நொடியில் சுகமாய் வந்து தழுவியது ஆதனின் குரல்.

“ஹாய் மக்களே… இன்னைக்கு நான் பகிரப் போற வாழ்க்கைப் பதிவு யாரோடதுனா… என்னுடையது தான்.

ஏற்கெனவே நான் ஒரு தடவை என்
வாழ்க்கைப்பதிவை உங்க கிட்டே பெயர் மாற்றி பகிர்ந்து இருக்கிறேன். பட் இந்த முறை என் நிஜப்பெயரோட உங்க கிட்டே பகிர்ந்துக்க விரும்புறேன்.

என் பேர் தீரன். நான் சென்னையிலே பிரபலமான ஐடி கம்பெனியிலே வொர்க் பண்ணிட்டு இருக்கேன். அங்கே ஜாயின் பண்ணவங்க தான் மிதுரா. அவங்களை சந்திச்ச அப்புறம் அமைதியா போயிட்டு இருந்தா என் வாழ்க்கையிலே ஏகப்பட்ட மாற்றங்கள். என்னை அடியோட சாய்ச்சு போட்ட புயல் அவள்.

அந்த புயலுக்கு இன்னைக்கு பிறந்தநாள். 
அவளுக்கு பிடிச்ச ஆதனோட வார்த்தைகளையே இன்னைக்கு பரிசா தரப் போறேன்.

“ஓய் மிது ஏன் அந்த வார்த்தையே சொல்ல மாட்டேங்கிறேனு என் கிட்டே சண்டை போட்டுட்டே இருப்ப இல்லை… இன்னைக்கு இப்போ சொல்றதுகாக தான்.

ஐ லவ் யூ மிதுமா… ஐ லவ் யூ  சோ மச்டா… உனக்காகவே வரப் போற இந்த பாட்டை டெடிகேட் பண்றேன்”

ஆதனின் குரல் முடிந்த நேரம் அவள் காதுகளை மோதியது அந்த பாடலின் வரிகள்.

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
உன்னை கண்ட பின்
இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ!

என்ற பாடல் வரிகள் முடிந்த நேரம் அவள் முன்பே மயக்கும் சிரிப்போடு வந்து நின்றான் கார்த்திக்தீரன்.

எந்த இடத்தில் காதல் இழந்த சோகத்தில் துடிக்கதுடிக்க வலியை அனுபவித்தாளோ அதே இடத்திலேயே அவளை முழுக்க காதலில் நனைத்துவிட்டிருந்தான் அந்த கள்வன்.

“கார்த்திக்” என்று கண்கலங்க ஓடி வந்தவளை தன் மார்பில் தாங்கிக் கொண்டவன்

“என் கிஃப்ட் பிடிச்சு இருந்துதா” என்று கேட்டான் உதட்டில் வழிந்த சிரிப்போடு.

அவன் கேள்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் அகப்படவில்லை அவளுக்கு.

சட்டென்று அவன் கன்னத்தில் இதழ் பதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முதலில் ஆனந்த அதிர்வுக்குள் சிக்கி கொண்டவன் அடுத்த நொடியே அவளது இதழை சிறைப்பிடித்திருந்தான்.

காலம் முழுக்க காதல் தீண்டட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!