காதல் யுத்தம் – 13

 

பகுதி 13

நெஞ்சே நெஞ்சே நெருங்கி விடு

நிகழ்ந்ததை மறந்து விடு

நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்து விடு

நிஜங்களில் கலந்து விடு

 

“இப்படி குனிந்து கொண்டே இருந்தால், ஆகாஷ் பாவம் கஷ்டப்பட்டு அவனும் குனிந்து தான் ஊட்ட வேண்டும் சஜுமா” குனிந்திருந்த சஜுவிடம் அவி சொன்னான்.

“அப்புறம் சஜு, நாளைக்கு உன் பசங்க பார்த்தா… அம்மா, அப்பா யாரோ ஒரு பொண்ணுக்கு ஊட்டிவிடுறாங்கன்னு, எங்க ஆகாஷப் பற்றி உன்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணும்” ஆனந்தி சொல்லவும் எல்லோரும் சிரித்தனர்.

நிமிர்ந்து இருந்தால், ஆகாஷைப் பார்த்து, முறைத்து மாட்டிக் கொள்வோமோ என்று எண்ணி, நாணம் என்ற பெயரில் தலையைக் குனிந்து தப்பிக்கலாம் என்று நினைத்தால், இவர்கள் விடமாட்டார்கள் போலவே, என்று நினைத்து, ஒரு வழியாக நிமிர்ந்தாள்.

ஆகாஷ் “ஓகே, ஆனா நா ஸ்வீட் மட்டும் ஊட்டி விடுறேன்” என்று டீலிங் பேசி, சஜுவிடம் ஒரு நொடியில் கண்களால் கெஞ்சி, அவர்களைப் பார்த்தான்.

சஜு ‘அந்த ரமாவா, இருந்தா இந்நேரம் சாப்பாடே ஊட்டுவான் கொழுப்பெடுத்தவன்’ என்று மனதில் அவனைத் திட்ட, ஆகாஷோ சஜு மீண்டும் குனிவதற்குள், அவன் இலையில் இருந்த தூத்பேடாவை கையில் எடுத்து, சஜுக்கு ஊட்ட, அவள் தூத்பேடாக்கு வலிக்குமோ என்று கடித்தும், கடிக்காமல் சாப்பிட, “கொஞ்சம், இங்க பாருங்க, ஸ்மைல் ப்ளீஸ்” என்று போட்டோகிராபர் சொல்ல, ஆகாஷ் ‘உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? சாப்பிடறப்ப எப்படி டா ஸ்மைலிங்க் போஸ் தர்றது?’ என்று போட்டோகிராப்பரை மனதில் திட்டினான்.

பின் சஜ்னாவை ஆகாஷுக்கு, ஊட்டச் சொல்ல, அவளும் அதே ஸ்வீட்டை எடுத்து, திறந்திருந்த அவன் வாயில் (ஆகாஷ் நீ இப்படி முந்திரிக்கொட்டையா இருக்கக் கூடாது) இடித்து கொண்டு வைத்து முழுவதையும், அவன் வாயில் திணித்தாள்.

‘அப்புறம் மிச்சம் வச்சா யார் சாப்பிடறது, கர்மம்’ என்றது சஜு மைன்ட் வாய்ஸ்.

எல்லோரும் இதைப் பார்த்து கைத் தட்டினார்கள். ஆனந்தி “பார்த்தியா ஆகாஷ் என் தங்கச்சிய ஒரு முழு ஸ்வீட்டையே உனக்கு கொடுத்துட்டா, நீ தான் கஞ்சூஸ்”

ஆகாஷ் “இப்ப என்ன ஸ்வீட் தான வேணும் உங்க தங்கச்சிக்கு, தந்துட்டா போச்சு” என்று அவளுக்கு ஊட்டி விட்ட ஸ்வீட்டை எடுத்து, அவள் இலையிலேயே வைத்து விட்டான். ஆகாஷும், தான் ரொம்ப ரோஷக்காரன் என்பதை நிரூபித்தான்.

ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அதன் பின்னும் உறவினர் கூட்டம் அவர்களை விடவில்லை. சஜுவின் உறவினர்களை ஆகாஷுக்கும், ஆகாஷ் உறவினர்களை சஜுவுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தனர். சரசு தான் வந்து இருவரையும் காப்பாற்றினார்.

சரஸ் “ஆனந்தி, சஜுவைக் கூப்பிட்டு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லுமா, அப்போ தான் சாயுங்காலம் ரிசப்ஷனுக்கு ப்ரஷ்ஷா நிக்க முடியும்” கீதாவைப் பார்த்து “கீதா, நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க போங்க”

கீதா “இல்ல இருக்கட்டும், சம்மந்தியம்மா”

சரஸ் “ஆனந்தி, இவங்களுக்கும், மேல இருக்க நம்ம கெஸ்ட் ரூம காட்டுமா, கீதா அண்ணனையும் கூப்பிட்டு போங்க, அவரும் ரெஸ்ட் எடுக்கட்டும், ஆகாஷ் நீயும் போ பா”

கீதாவும், இதற்கு மேலும் வேண்டாம் என்று சொல்லக் கூடாது என ஆனந்தியுடன் சென்றார். சஜுவுடன் அவள் அத்தை பெண் மஞ்சரியும் சென்றாள்.

ஆனந்தி ஒரு மூத்த மருமகளுக்கு உரிய கடமையையும், சரசுக்கு மகள் இல்லாத குறையையும் போக்கினாள், அதனாலேயே அவளே எல்லா வேலையும் செய்ய வேண்டியதாயிற்று.

ஆகாஷ் “சரிமா” என்று சொல்லிவிட்டு, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே அவன் நண்பர்கள் பட்டாளம் வர, அவனின் ஓய்வைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவனிடம் இருந்து அது ஓய்வு பெற்றது.

மதியம் ஒரு மூன்றரை மணியளவில் அழுகு நிலையத்தில் இருந்து வந்த பெண்கள் சஜுவை அலங்கரிக்க, ஆகாஷும் தயாராகிக்கொண்டிருந்தான், மற்ற உறவினர்களும் தயாராகி ரிசப்ஷன் நடக்கும் ஹோட்டலுக்கு செல்ல, வீட்டில் ஆகாஷ், சுகந்தன், அவி, அனி, சஜு, மஞ்சரி, அனியின் தங்கை கவிதா தவிர அனைவரும் ஹோட்டலுக்கு சென்று விட்டனர்.

ஆகாஷ் லைட் ப்ளு கலரில் ஷெர்வானியில் தயாராகி, வீட்டு ஹாலில் சஜுக்காக வெயிட் செய்து கொண்டிருந்தான் சஜு அலங்காரம் முடிந்து மஞ்சுவுடனும் அனியுடனும் வந்தாள், கவிதா இவர்களுக்கு முன்பே வந்து ஹாலில் அமர்ந்திருந்தாள்.

வெளியே வந்த சஜுவைப் பார்த்த ஆகாஷ் தடுமாறி தான் போனான். ஏற்கனவே அழகு சஜு, இதில் பிங்க் கலரில் கல் மற்றும் குந்தன் வேலைப்பாட்டுடன் இருந்த சேலையில், வான லோகத்து தாரகை தான் பூமிக்கு வந்துவிட்டாளோ என்பது போல் இருந்தாள் சஜு.

அவி அனியை சைட் அடிக்க, சுகன் தான் கவனித்தான் இருவரையும்.

சுகன் “மிஸ்டர் அவினாஷ் அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் “

அவி “என்னடா? பெரிய பில்ட் அப்ல போட்டு கேக்குற, என்ன?”

சுகன் “இன்னிக்கு ரிசப்ஷன் ஆகாஷுக்கும் சஜு சிஸ்டருக்கும் தான?”

அவி “ஆமாம் டா, இதுல என்ன சந்தேகம் உனக்கு?”

சுகன் “இல்ல, நான் கூட மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் அவினாஷுக்கோன்னு நினைச்சிட்டேன்” இதைக் கேட்ட அனைவரும் சிரிக்க.

அவி “வொய் நாட்? ஏன்டா ஆகாஷ், உன் ஸ்டேஜ்லேயே எனக்கும் கொஞ்சம் இடம் ஒதுக்கி தர மாட்டியா?” எனச் சொல்ல, ஆகாஷ் “எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்ல பா, சஜுகிட்ட கேட்டுக்கோ “

சஜுவும் சரி எனத் தலையாட்ட, அனி ஆகாஷிடம் “போதுமே சிந்துவும், நந்துவும், இல்லாட்டி, உங்க அண்ணனுக்கு புது மாப்பிள்ளைன்னு நினைப்பு, வாங்க, அங்க எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்கப் போறாங்க, கிளம்பலாம்” என்று பொறுப்பாய் பதில் சொன்னாள்.

ஆகாஷின் இன்னோவாவில் சுகன் ஓட்ட, பின் சீட்டில் ஆகாஷ், சஜு, மஞ்சு அமர, அதற்கு பின் சீட்டில் அவி, அனி, கவி அமர்ந்து வந்தனர். கவியின் கண்களில் ஏமாற்றமா அல்லது பொறாமையா எனப் பிரித்தறிய தெரியவில்லை. இதை யாரும் கவனிக்கும் நிலையில் இல்லை என்றாலும் மஞ்சு இதை கவனித்தாள். அதனால் சஜுவுடனே இருந்தாள்.

ரிசப்ஷன் லைட் மியூசிக்குடன், நிரம்ப ஆடம்பரம் இல்லாமல், அதற்காக எளிமையாகவும் இல்லாமல், மிகவும் அழகாக நடந்தது.

ஆகாஷ் “சஜு, ப்ளீஸ் கொஞ்சம் சிரி, எல்லோரும் உன்னையே விதியாசமா பார்க்கிறாங்க” என்று புன்னகைத்து கொண்டே குனிந்து சஜுவின் காதில் சொன்னான்.

சஜு ‘நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்பது போல’ முகத்தில் எவ்வித பிரதிப்பலிப்பும் இல்லாமல் வெறுமையாய் பார்த்து கொண்டிருந்தாள்.

அனி இதைக் கவனித்து அவள் அருகில் வந்து “என்னமா, உடம்பு எதுவும் முடியவில்லையா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறாயா?” என வினவவும், அவள் வேண்டாம் என்பது போல் தலையாட்ட “கொஞ்சம் சிரி சஜு, இன்னிக்கு எல்லோர் கண்ணும் உன் மேல தான் இருக்கும்”.

சஜு “இல்ல கா, லைட்டா தல வலிக்குது அதான்” என்று சொல்லிவிட்டு மெலிதாக புன்னகைத்தாள்.

அதன் பின் பானு வர சஜுவின் புன்னகை விரிந்தது “வா பானு” என்று கூற, அவள் “ஹாப்பி மேரிட் லைப் சஜு அண்ட் ஆகாஷ் அண்ணா” எனக் கூறி பரிசளித்தாள்.

பானு “என்ன சஜு, அண்ணாட்ட, என்ன அறிமுகப் படுத்த மாட்டீயா?” எனவும் சஜு அவஸ்தையாய் சிரித்து, அவனிடம் திரும்பி “ஆகாஷ் இவ என் பிரன்ட் பானு”

ஆகாஷ் “வாங்க பானு, கொஞ்ச நேரம் சஜுக்கு துணையா இருங்களேன்” அப்பொழுதாவது, அவள் தோழியுடன் பேசி கொண்டு இருந்தாலாவது, அவள் சிந்தனை கலைந்து இயல்பாகி இருப்பாள் என்று நினைத்து சொன்னான். ஆனால் நடந்ததா ?

பானு ஆகாஷைப் பார்த்து சஜிடம் “ஏய் சஜு, ஆகாஷ் அண்ணா சூப்பரா இருக்கார் டீ” என்று அடிக்கடி அவள் காதைக் கடித்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர் மாதிரி நல்ல ஜோடி பொருத்தம் பா “

“பரவாயில்ல டீ, பணக்காரங்ளா இருந்தாலும் பந்தா இல்லாம நல்லா பழகுறாங்க டீ”

“உன் பாவேரேட் ஹீரோ விட ஹன்ட்சம் டீ” இவ்வாறு பானு கூறிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் கடுப்படைந்த சஜு “பானு நீ போய் சாப்பிட்டு வா” என்று கூறி அத்தோடு நில்லாமல் அங்கு இருந்த ஆனந்தியை அழைத்து, அவளுக்கு அறிமுகப்படுத்தி, சாப்பிட அழைத்து செல்லுமாறு கூறினாள். பாவம் பானுவுக்கு தெரியவில்லை, ஏற்கனவே இப்படி பேசி தான் ஒருத்தியைப் பத்தி விட்டாள், அவள் தான் மஞ்சு.

ஆகாஷ் அவளிடம் “என்ன சஜு பொறாமையா” என்று வாய்க்குள்ளேயே சிரித்தான்.

சஜு “என்ன நக்கலா? எனக்கு எரிச்சலா இருக்கு”

ஆகாஷ் “ஏன் சஜு? ஏ சி ஹால்ல தானே இருக்க, பிறகேன் எரியுது உனக்கு?”

சஜு “இப்ப பேச்ச நிறுத்துறியா, இல்ல நான் கீழ இறங்கி போகவா?”

அவள் செய்தாலும் செய்வாள் என்று ஆகாஷ் மௌனமானான். மஞ்சு அவளை விட்டு சென்றாலும், கவிதாவை நோட்டமிட தவறவில்லை, கவிதா அவள் அப்பாவுடனும், அக்கா அனியுடன் இருந்தாலும் அவள் பார்வை ஆகாஷை விட்டு நொடியும் விலகவில்லை. அதே போல் சுகந்தனின் கண்களும் இருவரை நோட்டமிட்டது, ஒருவரை தன் நண்பனுக்காக நோட்டமிட்டான், மற்றவரை அவன் மூளையின் உத்தரவின்றியே கண்கள் நோட்டமிட்டது.

ஒரு வழியாக ரிசப்ஷன் முடிந்து, ஆகாஷும் சஜுவும், ஆகாஷ் வீட்டிற்கு சென்றனர். சஜு அலங்கரிக்கப்பட்ட ஆகாஷின் அறையில் அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.

ஆகாஷ் தன் நண்பன் சுகந்தனுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்து விட்டு, தன்னறைக்கு திரும்பினான். உள்ளே நுழைந்து கதவைச் சாற்றி விட்டு அங்கேயே நின்று யோசித்தான், “இவளை எப்படி சமாதானம் செய்வது? ரமாவை பற்றி சொன்னால், புரிந்துக் கொள்வாளா? சந்தேகம் தான், வேண்டாம் இப்பொழுது ரமாவை பற்றி சொல்ல வேண்டாம்” என்று தீர்மானித்தவனை கலைத்தது சஜுவின் குரல்.

சஜு “என்ன அப்படியே கதவை திறந்து, திரும்பி ஓடி போய்விடலாம் என்ற எண்ணமா?”

அதன் பின் தான் கைகளை, அவன் கதவின் தாழ்ப்பாளில் இருந்து எடுத்தான். கையை லாக்கில் வைத்து அங்கேயே நின்று யோசித்தது, அப்போது தான் உறைத்தது ஆகாஷிற்கு.

அவளிடம் திரும்பி, பக்கத்தில் சென்று “அப்படி எல்லாம் இல்லை சஜு” என்றான்.

சஜு “பின் எப்படி எல்லாம் நினைத்தாய்? சொல்லு”

ஆகாஷ் “நான் சொல்லிவிடுவேன், ஆனால் நீ அதை அமைதியாக கேட்பாயா?”

சஜு “நீ சொல்லும் பொய்யை, என்னை அமைதியாக கேட்கச் சொல்கிறாயா? இந்த இரண்டு நாட்களிலேயே தெரிகிறதே உன் லட்சணம், கல்யாணம், ரிசப்ஷன் என எதைப் பற்றியும் சொல்லவில்லை. ஏன் என் அம்மா வீட்டிற்கு சென்றதைக் கூட உன்னால் சொல்ல முடியவில்லை, கேட்டால், உன்னை பார்க்கவில்லை, நீ தூங்கிவிட்டாய் என பொய் மேல் பொய்யாக அடுக்குகிறாய்” என்று கத்தினாள்.

ஆகாஷ் காலையில் மூன்று மணிக்கு எழுந்தவன், இடையில் சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க முடியவில்லை, அதனால் சோர்வடைந்தவன், அவளை நோக்கி கை எடுத்து கும்பிட்டு “அம்மா தாயே! எனக்கு தூக்கம் கண்ணைக் கட்டுகிறது, ப்ளீஸ் எதா இருந்தாலும், நாளைக்கு பேசலாம்” என்று கட்டிலுக்கு சென்று படுத்து, உறங்கியும் விட்டான்.

சஜு அவனிடம் அட்லீஸ்ட், அவன் சட்டையைப் பிடித்தாவது, அவனுடன் சண்டையிட வேண்டும் என்று நினைத்து இருந்தாள், அவன் தூங்கவும் சிறிது ஏமாற்றம் அடைந்தாள். ‘சரி விடு சஜு, கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போகப் போகிறது, இன்னும் வாழ்நாள் முழுவதும் எத்தனை நாட்கள் இருக்கிறது, அப்போது பார்த்து கொள்வோம்’ என்று நினைத்து, கட்டிலில் இருந்து ஒரு போர்வையும், ஒரு தலையணையும் எடுத்து கீழே விரித்து படுத்தாள்.

காலை விடிந்தது, சஜு எழுந்து குளித்து விட்டு வந்தாள், அப்பொழுதும் ஆகாஷ் எழாமல் நேற்றைய சோர்வால் உறங்கி கொண்டு இருந்தான். இதை பார்த்த சஜு “எப்படி சொகுசா தூங்கறான் பார்” என்று மனதில் திட்டி விட்டு கீழே சென்றாள். சரசுவும் கீதாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

சஜுவை பார்க்கவும், சரஸ் சிரித்து விட்டு “வா மா, போய் டீ குடிச்சிட்டு ஆகாஷுக்கு டீ கொண்டுட்டு போ மா” என்றார்.

சஜு “சரி அத்தை” என்று சமையலறை நோக்கி சென்றாள், அவளுக்குள் இருந்த இன்னொரு சஜு ‘டீயில் ஏதாவது கலக்கி கொண்டு போய் கொடுப்போமா?’ என்று ஆலோசனை வழங்கியது.

‘இம்ஹும், அதுலாம் பழைய ஸ்டைல், புதுசா ஏதாவது? மாத்தி யோசி’ என்று உள்ளுக்குள் இருந்த சஜுக்கு ஆணையிட்டாள்.

உணவறையில் இருந்த இருக்கையில் அமர்ந்து, டீ குடித்துக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சஜுவின் யுத்தம் ஆரம்பமாயிற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!