காதல் யுத்தம் – 15

பகுதி 15

எத்தனை தான் நான்

உன்னை வெறுத்தாலும்

உன் மீது கோபப்பட்டாலும்

உன்னுடன் சண்டையிட்டாலும்

உன் நெஞ்சத்தின் மீது

நான் உறங்கும் உறங்கமே

என்றும் சுகமானது……….

 

சஜு “என்னது இது” என்று, மதிய உணவை உண்டு விட்டு, அவள் அறையில் உள்ள கட்டிலில் படுத்திருந்த ஆகாஷிடம் கேட்டாள்.

சஜுவைப் பார்த்த ஆகாஷ் எதுவும் கீழே விழுந்து விட்டதா, என சுற்றும் முற்றும் கீழே பார்வையை ஓட்டி விட்டு, நெற்றியை சுருக்கி திரும்பவும் அவளிடமே தன் பார்வையை நிறுத்தினான். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்றே ஆகாஷிற்கு தெரியவில்லை.

அவள் முறைக்கவும், ஆகாஷ் “என்னது, என்னது இது? “

சஜு “ஏன் கட்டில் மேல் படுத்திருக்க?”

ஆகாஷ் ‘என்னடா இது வம்பா போச்சு, எல்லோரும் கட்டிலில் தான படுப்பாங்க, அதுக்கு அடிலயா படுப்பாங்க?’ என்று மனதில் நினைத்து, அவளையே பார்த்தான். இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று பார்த்தான்.

சஜு “இது என் ரூம், என் கட்டில் “

ஆகாஷ் “ஆமாம், நான் இல்லன்னு சொல்லலியே “

சஜு “நீ இல்லைன்னு வேற சொல்வியா? சொல்லி பாரு தெரியும் இந்த சஜு யாருன்னு? சரி, விஷயத்துக்கு வரேன், இது என் ரூம், என் கட்டில், நான் எப்போவும், என் கட்டிலில் தான் படுப்பேன், நீ கீழ படு, உங்க வீட்டுல உன் கட்டில்ல, நீ படுத்த, நா கீழ தான படுத்தேன். அதே மாதிரி, இங்க நீ கீழே படு”

ஆகாஷ் “சரி, அவ்ளோ தான” என்று எழுந்து கொண்டு, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அவள் முழித்து கொண்டு, கட்டிலில் படுத்திருந்தாள்.

ஆகாஷ் தனது இன்னோவாவை ஓட்ட, அதனால் சஜு அவனருகே முன் புறம், ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்து வந்தாள். மஞ்சு சும்மா இல்லாமல், பாட்டு போட சொல்ல, ஆகாஷ் வேண்டுமென்றே இவர்கள் காதலித்த போது, இருவரும் கேட்டு, ரசித்த பாடலைப் போட்டு கொண்டே வந்தான்.

என்னை கொஞ்சம் மாற்றி

என் நெஞ்சில் உன்னை ஊற்றி

நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே

என்ற பாடல் அவன் நிலையை உணர்த்துவது போல் ஒலிக்கவும், அவளையே பார்த்து கொண்டே கொஞ்சம் சாலையையும் கவனித்த கொண்டே ஓட்ட, இதை மஞ்சு பார்த்து விட்டு, “ஆகாஷ் அண்ணா, கொஞ்சம் ரோட பார்த்து ஓட்டுங்க, இல்லாட்டி மறு வீடு போற நாம, மறு ஜென்மம் எடுக்க வேண்டியது தான்” என்று சொல்ல, அனைவரும் நகைத்தனர்.

ஆகாஷும் புன்னகைப் புரிந்தான், சஜு அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

வீடு வந்ததும் அவர்களுக்கு ஆலம் சுற்றப்பட்டு, உள்ளே நுழைந்தார்கள். கீதாவும் மஞ்சுவும் மதிய விருந்து சமைக்க ஆயத்தமானார்கள். சஜுவும் அவர்களுடன் சென்றாள், ஆகாஷ், தன் மாமனாருடன் முன்னறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தான்.

சஜு “அம்மா, நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா?”

கீதா “மஞ்சு இருக்கா, நீ போய் ரெஸ்ட் எடு சஜு, நாம சாப்பிட்டு, நம்ம  குலசாமி கோவிலுக்கு போகணும் “

மஞ்சு “அத்தை, என்ன வேண்டுதலா? இந்த சஜு தொல்ல விட்டா, உன்ன வந்து பார்க்கிறேன்னு வேண்டிக்கிட்டீங்களா?”

கீதா “ஆமாம் மஞ்சு, அதோட பொங்கல் வைக்கிறேன் வேண்டுதல் “

சஜு “சரிமா, அதுக்கு ஏன் மதியம் போகணும், நாளைக்கு காலையில் போகலாமே, இப்ப போய் பொங்கல் வைக்கவே நைட் ஆகிடுமே மா “

அவர்கள் குலதெய்வம் சென்னையை தாண்டி, திண்டிவனத்திலிருந்து மூன்று மணிநேரத்துக்கு மேலே தாண்டி சென்றால், ஒரு கிராமத்தில் இருந்தது.

கீதா “ஆமாம்மா, இன்னிக்கு கிளம்பி போயிட்டு நாளைக்கு காலைல நேரமா பொங்கல் வைக்கணும், அப்பா தான் சொன்னார், இப்பனா எப்படியும் மாப்பிள லீவ் போட்டு இருப்பார், அப்புறம்னா சொல்ல முடியாது, அப்படியே தட்டி போய்டும், உனக்கு குழந்த பிறக்கிறதுக்குள்ள போயிட்டு வந்தா நல்லது” என்று விளக்கவும், அதன் பின் சஜு வாயைத் திறக்கவில்லை.

மஞ்சு “அத்தை திரும்பவும் பாக்கிங்கா? அடக் கடவுளே”

கீதா “அதலாம் சாப்பிட்டு பண்ணிக்கலாம் ஒரு செட் டிரஸ் தான, நாளைக்கு திரும்பிடுவோம்” என்று பேசிக் கொண்டே வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

வெற்றிவேலும், தன் மாப்பிளையான ஆகாஷிடம், குலதெய்வம் கோவில் செல்வதைப் பற்றி குறிப்பிட்டு விவரம் சொல்ல, அவனும் அவர்கள் எடுத்த முடிவு சரி தான், இடையில் செல்ல நேரம் அமைகிறதோ என்னவோ என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

அனைவரும் சாப்பிட்டு ஓய்வெடுத்தனர். கீதா கிளம்பி சஜுக்கு குரல் கொடுக்க, அவளும் சிறிய பாகில் தங்களுக்கு தேவையானதை எடுத்து கிளம்பினாள்.

வெற்றிவேல், “ஏன் மாபிள்ள, காலைல தான் கார் ஓட்டிட்டு வந்தீங்க, இப்போ கால் டாக்ஸில போலாம்னா, வேணாம்னு சொல்றிங்க “

ஆகாஷ் “இருக்கட்டும் மாமா, கார் இருக்கும் போது எதற்கு கால் டாக்ஸி, அப்போ கிளம்புவோமா சஜு” என்று அவளிடம் கேட்டு, அந்தப் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.

சஜு “போலாம்” எனச் சொல்ல, காலை எப்படி பயணித்தனரோ அவ்வாறே இப்பொழுதும் பயணித்தனர். இப்பொழுதும் ஆகாஷ் அதே மாதிரி பாடல்களை பாட விட்டு, கோவிலை அடைந்தனர்.

அவர்களின்  குலதெய்வ கோவில், நல்ல கிரமமாக இருந்தது, வயல் வெளியுடன், தென்னை, பனை என்று பச்சையாக நிலவு ஒளியிலேயே ஜொலித்தது. இவர்கள் சென்ற போது இரவு ஏழு மணி ஆயிற்று.

கோவிலில் எப்பொழுதும் ஒரு பூசாரி இருந்து தினம் பூஜைகளை செய்வது வழக்கம், இவர்கள் வந்த விவரத்தை சொல்ல, அவரும் சந்தோசமாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

பொங்கல் வைக்க கற்கள் எடுப்பதில் இருந்து, சுள்ளிகள் பொறுக்கும் வரை ஆகாஷ் தன் மாமனார்க்கு உதவ, சஜுவின் பெற்றோர் மனம் குளிர்ந்து விட்டது. பணக்காரன் என்ற பந்தா இல்லாமல், மாப்பிளை என்ற மிடுக்கு இல்லாமல் அவனின்  எளிமையான குணம் அவர்களை கவர்ந்தது.அது கிராமம் என்பதால் ஹோட்டல் இருப்பது அரிது என்று இரவு சாப்பாட்டிற்கு இட்லி அவித்து, அதற்கு தக்காளி சட்னி செய்து கீதா கொண்டு வந்திருந்தார்.

அனைவரும் சாப்பிட்டு உறங்க ஆயத்தமானார்கள். கோவிலில் விஷேச நாட்களில் சமைப்பதற்கு ஒரு அறை தான் இருந்தது. வரும் போதே வெற்றிவேல், தன் மருமகனுக்காக ஒரு டேபிள் பேன், மெத்தையை எடுத்து கட்டிக் கொண்டிருந்தார். ஆனால் ஆகாஷ், “வேண்டாம் மாமா, நான் அட்ஜஸ்ட் செய்து கொள்வேன் ” எனத் தடுத்து விட்டான்.

ஆகாஷ் மஞ்சுவிடம் “மஞ்சு நீ, அத்தை, சஜு உள்ள படுத்துகோங்க, நாங்க வேணா வெளில படுத்துக்கிறோம்”

வேல் “இல்ல மாப்பிள, உள்ள தாராளமா இடம் இருக்கு, எல்லோரும் படுத்துக்கலாம், பேன் இருக்கு, இங்கனா மரம் இருக்கிறதால பூச்சி தொல்ல இருக்கும்.”

உள்ளே ஒரு தட்டியால் தடுப்பு வைத்திருந்தனர், எதற்கு என்று தெரியவில்லை ஆகாஷுக்கு, தட்டி இந்தப் பக்கம் இந்தப்புறம் சிறிதும் அந்தப் பக்கம் பெரிதுமாக இடம் இருக்க, ஆகாஷ் “மஞ்சு” என்றழைத்து, அந்த சிறிய இடத்தில் சஜுவையும் மஞ்சுவையும் படுக்கச் சொல்ல.

மஞ்சு “அண்ணா, நீங்க என்னை வெளில கூட படுக்க சொல்லுங்க படுக்கிறேன், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் அண்ணா” என்று சொல்ல, சஜு அவளை முறைக்க, மஞ்சு “நான் வேணா அத்தைக் கிட்ட கேட்கிறேன்” என்று கீதாவிடம் கேட்க, அவரும் மர்மமாக சிரித்து கொண்டு “நீங்க இரண்டு பேரும் அங்க படுங்க மாப்பிள, நாங்க இங்க படுக்கிறோம் ” என்று சொல்ல

சஜு “அம்மா” என்று பல்லைக் கடித்து, “மா இந்த பக்கமே நம்ம மூன்று பேரும் படுக்கலாமே”.

கீதா “இல்லமா, நான் ஏன் சொல்றேனா, அந்தப் பக்கம் தான் பேன் இருக்கு காற்று நல்லா வரும், அதுனால தான் நீயும் மாப்பிளையும் படுங்கன்னு சொல்றேன் ” என்று சொன்னார்.

உள்ளே வெற்றிவேல் வரவும், சஜு எதுவும் மேற்கொண்டு பேசாமல் படுத்தாள். அவர்கள் இருவருக்கும் படுக்க ஒரு போர்வையும், இரு காற்று தலையணையும் கொடுக்கப் பட்டது.

ஆகாஷ் ஒன்றும் புரியாமல், ஆனால் இருவரும் ஒரு போர்வையில் அருகருகே படுக்கப் போகும் சந்தோசத்தில் இருந்தான். ஒரு தலையணையை எடுத்து ஊதி விட்டு, சஜு யோசனையுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்து, ‘பார்த்தியா சஜு, நீயே விலகினாலும், கடவுள் நம்மை சேர்த்து வைக்கிறார்’ என்று மனதில் நினைத்துக் கொண்டே, அடுத்த தலையணையை ஊதத் தொடங்கினான்.

சஜு சுய நினைவிற்கு வந்து, அவன் தனக்கும் சேர்த்து ஊதுவதைப் பார்த்து, அவன் கையில் இருந்து பிடுங்கி, அவள் ஊதப் போக, அப்பொழுது தான் இதற்கு முன் அவன் வாய் வைத்து ஊதினான் என்பது நினைவு வர, சட்டென்று தன் வாயருகே கொண்டு சென்றவள், தன் வாய்க்கும் தலையணைக்கும் இருந்த நூலளவு இடைவெளியில் நிறுத்தி விட்டாள்.

அதைப் பார்த்து “ஊது சஜு, ஊது… ஏன் நிறுத்தி விட்டாய், நீ ஊதுவதைப் பார்க்க ஆசையுடன் இருக்கிறேன்” என்று மென்குரலில் அவள் காது அருகில் வந்து கேலி பேசவும், அவள் அதை அவன் மடியிலேயே வைத்து விட்டு, அவன் ஏற்கனவே ஊதி வைத்து இருந்ததை எடுக்க, அவனும் அதை கையில் பிடித்து கொண்டே “பார்த்தியா சஜு, மத்தியானம் உன் கட்டிலிலேயே படுக்கக் கூடாது என்று சொன்ன, இப்போ உன் பக்கத்திலேயே படுக்கப் போறேன்” என்று கண்ணடித்து சிரித்தான், அவள் கொதித்துக் கொண்டே ஒன்றும் செய்ய முடியாமல் முறைக்க, அவன் தலையணையில் வைத்திருந்த கையை விட, அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்.

அப்பொழுது “மாப்பிளை லைட் ஆப் பண்ணவா?” என்று வெற்றிவேல் வினவ

“சரி மாமா ” என்றான் ஆகாஷ்.

லைட் வெளிச்சம் அமரவும், நிலவொளியினால் சிறிதே சிறிது வெளிச்சம் இருந்தது. சஜு அவன் தலையனை வைத்து அருகில் படுக்கவும், என்ன தான் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தாலும், மனதுள் திக் திக் என அடித்தது. அவள் பயந்தது போலவே “சஜு” என்று மிக மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு அழைத்தான்.

அவள் அசையாமல் இருந்தாள். ஆகாஷ் “சஜு, இப்போ நீ இந்தப் பக்கம் திரும்பலேனா, நா இன்னும் பக்கத்துல நெருங்கி படுப்பேன்” என்று சொல்லவும், அவள் அவன் செய்தாலும் செய்வான் என்று திரும்பினாள்.

ஆகாஷுக்கு தன் தேவதையை அந்த மெல்லிய நிலவொளியில் பார்க்க ஆசை, அவளையே பார்த்து கொண்டிருந்தான். சஜு கடுப்புடன் “என்ன” என்று வினவ

ஆகாஷ் “பார்த்தியா சஜு, நீயே வேண்டாம் என்று விலகினாலும், கடவுள் நம்மை சேர்த்து வைக்கிறார், நம் காதல் சக்தி வாய்ந்தது சஜு” எனக் கூறவும், சஜு கண்ணில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

‘நம் காதலாம் நம் காதல், இது என் காதலின் சக்தியால் நிகழ்கிறது. என்னைப் பார்த்தவுடன் என்னுடனான காதலைத் தூசு தட்டுகிறாய், இப்பொழுது ரமாவைப் பார்த்தால், அவளுடனான காதலைத் தூசு தட்டுவாயோ?” என்று எண்ணி கண்ணீர் உகந்தாள். இதுவரை  தலையணை மட்டுமே துணையாக அதனுடன் சேர்ந்து கண்ணீர் உகந்தவள், இன்று அந்த கண்ணீருக்கே சொந்தக்காரனை அருகே பார்க்கவும், மேலும் அதிகமாயிற்று.

சஜு கண்ணீரைக் கண்டவன், சட்டென்று அவளை இழுத்து அணைத்தவன், “சஜு ப்ளீஸ் அழாத, எல்லோரும் சத்தம் கேட்டு எழுந்துக்கப் போறாங்க” என்று சொல்லி அவள் முதுகை தட்டிக் கொடுத்தான்.

அவளும் நிலைமை உணர்ந்து அழுகையை நிறுத்தினாள். ஆனால் அவனிடம் இருந்து விலகாமல், அவன் நெஞ்சிலேயே புதைந்து, அவன் தட்டிக் கொடுக்கவும், அப்படியே உறங்கி விட்டாள்.

ஆனால் ஆகாஷிற்கு தான் உறக்கமும் வரவில்லை, உறங்கவும் முடியவில்லை.

 

யுத்தம் தொடரும்….