காதல் யுத்தம்

காதல் யுத்தம்

பகுதி 12

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறுது வான் நிலை

பெண்ணே உன் மேல் பிழை

 

ஆகாஷ் சஜ்னாவிடம், நாளை நடக்க இருக்கும் ஏற்பாட்டைப் பற்றியும், தங்களுக்குள் இருக்கும் பிணக்கு பற்றியும் பேசி தெளிவாகி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில், தாத்தா கிருஷ்ணனின் குரல் கேட்டது.

வெளியே வந்தவன், தாத்தா சஜுவிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்க, அவள் ஆமாம் எனத் தலையசைக்க, குட்டீஸ் இரண்டும் “ஹய்யாஆஆஅ பெரி… தாத்தா” என்று சத்தமிட்டுக் கொண்டே அவரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவனும் சென்று “வாங்க தாத்தா, நல்லா இருக்கீங்களா? இவ தான் என் வைஃப் சஜ்னா. தாத்தா… என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்…”

சஜ்னாவிடம் “எங்க தாத்தா கிருஷ்ணன், ஜெய்ப்பூர்ல இருந்து வருகிறார், இப்ப எப்படி தாத்தா இருக்கீங்க? உடம்புக்கு பராவாயில்லையா? வாங்க தாத்தா உள்ளே போகலாம்” என்றான்.

குட்டீஸ் ரெண்டும் அவர் கைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து கொண்டனர், குட்டீஸுகளுக்கு பெரிய தாத்தா என்றால் உயிர் புது புது விளையாட்டு கற்று தந்து அதனுடன் குட்டி குட்டி கதையும் சொல்வதால், குட்டீஸுகளுக்கு பெரிய தத்தா என்றால் நிரம்பவும் விருப்பம்.

உள்ளே நுழைந்த அவரோ “உனக்குப் பிடிச்சவளா கல்யாணம் பண்ணிக்கிட்ட, நாங்க மறுத்தா இல்லன்னு ஆகிடுமா? ஆனா என்ன எங்கக்கிட்ட சொல்லாம பண்ணது தான் வருத்தமா இருக்கு, அதுக்கு தான் இப்போ என் பொண்டாட்டி திரும்ப தன் பேரனுக்கு கல்யாணம் செஞ்சு பார்க்கப் போறாளே” என்று பெருமையாய் கூறினார்.

சிறு வயதிலேயே, கிருஷ்ணனுக்கு வேலை வங்கி தருவதாக சொல்லி ஒருவன், அவர்கள் பெற்றோரிடம் பணம் வாங்கிக் கொண்டு கிருஷ்ணனை ஏமாற்றி ட்ரைன் ஏற்றி அனுப்பி விட்டான். அது ஜெய்ப்பூரில் நிற்கவும், திரும்பவும் வழி தெரியாது, மொழி புரியாத அந்த ஊரிலேயே ஒரு ஹோட்டலில் பணி செய்து பிழைத்து, பின் சொந்தமாக ஒரு ஹோட்டல் வைத்து பிழைத்துக் கொண்டார். அந்த ஊரிலேயே தமிழ் குடும்பத்து பெண்ணான அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். அவரும் கணவனுக்கு உதவியாக சேலை வியாபாரம் செய்தார். பின் அவர்களுக்கு ரங்கா பிறக்க, அவரை படிக்க வைத்து ஆளாக்கினார்கள்.

ரங்காவும், அப்பாவிற்கு தப்பாமல் சேலை வியாபாரத்தை கடையில் வைத்து செய்ய, ஆண்டவன் புண்ணியத்தில் நன்றாக ஓடவும் மேலும் பல கிளைகளைத் தொடங்கினார், அப்பாவும் தன் பங்கிற்கு பல கிளை ஹோட்டலை நிறுவினார், பின் ரங்கா சென்னையில் சரசுவை மணமுடித்து சென்னையில் ஒரு கிளை தொடங்கி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கிளை தவிர மற்ற கிளைகளை மூடி, சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். பின் பேரன்கள் அவினாஷும், ஆகாஷும் அதை மேலும் விரிவாக்கி நவீனப்படுத்தினர். பின் புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

உள்ளே சென்றதும் அவருக்கு குடிக்க டீ கொண்டு வருமாறு பயந்துக் கொண்டே சஜ்னாவிடம் கூறி விட்டு, தாத்தாவிடம் அவர் உடல் நலத்தைப் பற்றி துருவி துருவி விசாரித்து கொண்டிருந்தான்.

சஜுவும் டீ கொண்டு வந்து கொடுக்க, தாத்தாவோ பேரன், பேரனின் மனைவி, இரண்டு வாலுகளுடன் பேசிக் கொண்டிருக்க, ஆகாஷ் தனிமை கிடைக்காமல் தவிக்க… சஜ்னாவோ இப்பொழுதும் தனக்கு தெரியப்படுத்தாமலே திருமண ஏற்பாடுகள் செய்கிறானே என்று பொருமிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு தெரியவில்லை இதை ஏற்பாடு செய்தது பெரியவர்கள் என்று, அப்படியே தெரிந்தாலும் எப்படியும் அவனிடம் சண்டைப் போட தான் செய்வாள், அப்படி ஒரு காதல் சஜுவுக்கு ஆகாஷ் மேல்.

ஜவுளி எடுக்கச் சென்றவர்கள், திரும்பி வந்தனர். அதன் பின் ஒவ்வொரு சொந்தங்களாக வர, வீடே நிரம்பியது. பாவம் ஆகாஷ் அந்த நாளின் கடைசி வரை சஜுவுடனான தனிமை அவனுக்கு கிட்டவில்லை.

சரசு ஆனந்தியை அழைத்து “ஆனந்தி, இன்னிக்கு ஒரு நாளைக்கு சஜுவ உன்னோட ரூம்லேயே தங்க வச்சுக்கமா, அவிய ஆகாஷ் ரூம்ல போய் படுக்கச் சொல்லிட்டேன்”, அனி “சரி அத்தை”

சஜ்னா அவர்கள் வீட்டிற்கு உறவினர்கள் வர, தன் அறைக்கு செல்ல, ஆனந்தி அவளை அழைத்து, “இன்னிக்கு ஒரு நாள் என் கூட தான் இருக்கணும், ஸ்ட்ரிக்ட் ஆர்டர் ப்ரம் அவர் மாமியார்” என்று சிரித்தவள் “இன்னிக்கு ஒரு நாள் என் தொல்லையையும், என் செல்லங்களோட தொல்லையையும் தாங்கிக்கோ, நாளை உன் மணாளனோடு இருக்கலாம் சஜு”

வீட்டை அலங்கரிக்கவும் பணியாட்கள் வந்து விட, சுத்தமாக சஜுவை ஆகாஷால் பார்க்கக் கூட முடியவில்லை. பெரிய வீடு என்றாலே இது தான் பிரச்சனை.

வீடே கலைக் கட்ட தொடங்கியது, குட்டீஸ்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். சஜ்னாவைத் தன் அறைக்கு அழைத்து சென்ற ஆனந்தி, அவளுக்கு வாங்கிய புடவைகளையும், நகைகளையும் காண்பிக்க, சஜ்னா “இவ்ளோ காஸ்ட்லியா ஏன்கா வாங்குனீங்க, நகைகளா! எதுக்கு கா?”

ஆனந்தி அதற்கு மர்மமாக புன்னகைத்து “நான் என்னபா செய்ய இந்த இரண்டு புடவையும் ஏற்கனவே, யாரோ ஒருவர் நம்ம ஷோரூம்ல செலக்ட் பண்ணி, உனக்குன்னு எடுத்து வைக்க சொன்னாங்களாம், நகைகள் எல்லாம் மேலிடத்து பணி, என் வேலை தேர்வு செய்வது மட்டும் தான் பா “

எல்லாம் ஆகாஷின் செயல் எனச் சஜ்னாவுக்கு புரிந்தது. ஆனந்தி சஜு யோசிப்பதைப் பார்த்து “சரி சஜு, இன்று சீக்கிரம் படு, நாளைக்கு பிரம்ம முகர்த்தத்தில் மாங்கல்ய தாரணம் செய்ய வேண்டும் என்றார்கள், குறைந்தது மூன்றரை மணிக்காவது எழ வேண்டும். இந்தா மா, இந்த சேலைக்குரிய சட்டையை போட்டு பார்த்து விட்டு சொல்லுமா” என்று சென்று விட்டாள்.

திரும்பி தன் குழந்தைகளுடன் வந்தவளிடம், “அளவு சரியாக இருக்கிறது அக்கா” என்று கொடுத்தாள்.

ஆனந்தி “சரி சஜு, ஏய் சுட்டீஸ்களா! சித்தி இன்னிக்கு உங்க கூட தான் தூங்கப் போறாங்களாம், அவங்க உங்களுக்கு ஸ்டோரி சொல்வாங்களாம், நீங்களும் சித்திய தொந்தரவு பண்ணாமக் கேட்டுட்டே சமத்தா படுக்கணும்”

“அப்போ, நீ எங்க போத?” என விவரமாய் சிந்து கேட்க…

“அம்மாக்கு வேலை இருக்குடா செல்லம், நாளைக்கு நம்ம வீட்ல பங்க்ஷன் நடக்குதுல, அதான்” ஆனந்தி

நந்து “இம் அதான் பூ லா தொங்கறங்களா” வீட்டில் நடக்கும் பூ அலங்காரத்தை தான் அவன் குறிப்பிடுகிறான் என்பதை புரிந்து, ஆனந்தி “ஆமாம் கண்ணா, சரி சித்தி கூட போய் தூங்குங்க, சரி சஜு நீயும் தூங்கு, எனக்கு வேலை இருக்கு வந்து விடுகிறேன்” என்று சென்று விட்டாள்.

பாவம் சஜ்னா நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல், மற்றவர்கள் பேசியதை வைத்து, தனக்கு திரும்பவும் முறைப்படி திருமணம் நடத்துகிறார்கள், பானு சொன்ன தகவலின் படி நாளை மாலை ரிசப்ஷன் என்ற அளவில் தான் தெரியும், தன் பெற்றோர்கள் வருவார்களா? என்று கூட தெரியாமல் அவதிப்பட்டாள்.

தன்னிடம் விவரம் சொல்ல வேண்டியவனும் சொல்லவில்லை, தற்சமயம் அவனைப் பார்க்க கூட முடியவில்லை, உறவினர்கள் கூட்டம் வேறு, ஆனந்தியிடம் விவரம் கேட்கலாம் என்றால் அவளும் சிக்கவில்லை.

“சித்தி உப்பேர் இன்ன சொன்ன” என்று நந்து கேட்கவும் சிந்தனைக் கலைந்தவள் “இம்ம், என் பேர் சஜ்னா”

“சரி எங்கக்கு கட சொல்றியா, நா டுங்க்வோம், சித்தி உனக்கு ஸ்லிப்பிங் பிட்டி மாதிரி கட தெரீமா”

“போடி எப்போவும் இடே கட தான் கேக்ற நாளைக்கு தான கேட்டோம், வெனாம் சித்தி நீ மண்டிராவதி கட சொல்லு அப்பா சொல்லுவாரு நல்லா இருக்கம்”

“போடா வேணம் எனக்கு பயமா இருக்கும்”

இப்படியே அவர்கள் சண்டையிட, யாரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டே, தன் எண்ணங்களின் போக்கில் சோர்ந்து உறங்கி விட்டாள்.

நல்ல வேளை இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்து கொள்ளும் முன், ஆனந்தி வந்து விட்டாள். சஜு உறங்கி விட்டதைப் பார்த்து தனக்குள் சிரித்து கொண்டாள்.

“ஏய் என்ன சத்தம்? படுங்க, இல்லாட்டி அம்மா நாளைக்கு புது டிரஸ் போட்டு விட மாட்டேன், பார் சித்தியே தூங்கிட்டாங்க, தூங்கறவங்களுக்கு தான் புது டிரஸ், அதான் சித்தி தூங்கிட்டாங்க, சரி இப்போ யார் ஃபர்ஸ்ட் தூங்கறாங்கன்னு பார்ப்போம்” என்று அவளும் அவர்களுடன் தூங்கி விட்டாள்.

அங்கே ஆகாஷின் அறையில் அவி “ஏன்டா உன் கல்யாணத்துக்கு கல்யாணமான எங்கள ஏன்டா பிரிச்சு வைக்குறீங்க “

ஆகாஷ் “ஆமாம், நேற்று தான் உனக்கு கல்யாணம் பண்ணாங்க பாரு, டேய் அண்ணா உனக்கே நியாயமா? உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷமாகப் போகுது, எனக்கு தான் நேற்று கல்யாணம் ஆச்சு டா “

அவி “அப்போ என்னடா சொல்ல வர, நான் உன்ன பிரிச்சுட்டேனு சொல்றியா?”

ஆகாஷ் “அப்பா, சாமி, நீ எதுவும் சொல்ல வேணாம், என்ன தூங்க விடு” என்று உறங்கி விட்டான், அவியும் சிரித்து கொண்டே உறங்கி விட்டான்.

காலை அழகாக விடிந்தது, நேரம் நான்கு மணி, இன்னும் இருட்டாக தான் இருந்தது வானம், ஆனால் ஆகாஷின் வீட்டில் சொர்க்கலோகம் போல் இருந்தது. ஆனந்தியின் அறையில் தலைக்கு குளித்து முகூர்த்த பட்டு உடுத்தி இருந்தாள் சஜு. ஆனந்தி “இப்போ நான் மேக் அப் போட்டு விடுறேன், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, சாயந்திரம் ரிசப்ஷனுக்கு அழகு நிலையத்திலிருந்து வருவாங்க” என்று சொல்லி விட்டு அவளை அலங்கரித்தாள்.

அலங்காரம் முடியவும், சஜு அம்மா கீதா வரவும் சரியாக இருந்தது. சஜு “அம்மா” என்றாள் எதிர்ப்பார்க்காத சந்தோசத்துடன், இருவருக்கும் தனிமைக் கொடுத்து விட்டு, ஆனந்தி “வாங்க அம்மா” என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

கீதா “ரொம்ப சந்தோசப்படாத, உனக்கு கல்யாணம் செய்து வைக்கறது எங்க கடமை. கல்யாணம் தான் நீயே பண்ணிக்கிட்ட, அப்போ இப்ப ஏன் வந்தேன்னு பார்க்கிறியா? சம்மந்தியம்மா தான், நம்ம கௌரவம் இதுல இருக்குன்னு சொன்னாங்க, அதான் எங்க கௌரவத்தக் காப்பாத்திக்க வந்தோம்”

கீதா, சஜுவை மன்னித்து ஏற்று கொண்டாலும், அவள் செய்த காரியத்தால் விளைந்த வருத்தம் இன்னும் இருக்க தான் செய்தது.

சஜு “அம்மா என்ன மன்னிச்சிடு, நீ என்ன திட்டுனாலும் பரவாயில்லை மா, ஆனா என் கூட பேசாம மட்டும் இருக்காத, அப்பா வந்திருக்காரா மா”

கீதா “ஆமாம்” என்று இறுக்கமாக, பதில் அளித்தார். சஜு அம்மா பேச்சின் மூலம் ஆகாஷ் வீட்டினர் அவள் வீட்டிற்க்கு சென்றிருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டாள்.

ஆனந்தி வந்து சஜுவை அழைத்து சென்றாள், அங்கு வீட்டின் கீழ் தளமே மண்டபம் போல செட் செய்து இருந்தார்கள். அங்கு, ஐயர் மந்திரம் ஓதி கொண்டிருக்க, ஆகாஷ் மணமேடையில் அமர்ந்து இருந்தான்.

சிவப்பு பட்டு உடுத்தி, முடியை தளர பின்னி, பூச்சூடி, அரக்கு பொட்டிட்டு, காதில் கல் ஜிமிக்கி அசைந்தாட நடந்து வந்தாள் சஜு. இப்படி வருபவளை, அவள் அவன் அருகே அமரும் வரை, தன் கண்களால் சிறைபடுத்திக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

சஜு அமர்ந்ததும், அவளுக்கு மாலையைப் போட்டு விட, குனிந்த ஆனந்தி “போதும் பா, உன் பொண்டாட்டியைப் பார்த்தது, நேற்று ஒரு நாள் பிரிச்சதுக்கே இப்படியா?” எனக் கேலி பேசினாள்.

ஆகாஷ் சிரித்தான்.

ஐயர் தாலி எடுத்து கொடுக்க, ஆகாஷ் அவள் கழுத்தில் போட்டு விட்டான். நேற்று மதியம் சரஸ், சஜுவிடம் புதிய தாலி கட்டும் போது, அவள் ஏற்கனவே அணிந்த தாலியை கழட்டி விடுமாறு சொன்னார், ஆனால் அவள் அது முதன் முதலாக ஆகாஷ் தன் கணவன் என்பதின் அடையாளம் என்று நினைத்து அதை மறுக்கவும், அவளின் செண்டிமெண்டல் டச்  புரிந்து, புதிய தாலியை, தாலி செயினாக மாற்றிவிட்டார்.

எல்லோரும், மலர்கள் மஞ்சள் அரிசி தூவி வாழ்த்த, மீண்டும் ஆகாஷ் சஜு திருமணம் நடக்க (ஆகாஷ் சஜுவுக்கு தெரிந்து, சுயநினைவோடு நடைப்பெற), கீதா மகளின் மீது கோபம் கொண்டிருந்தாலும், அவள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டார் அந்த நிமிடம்.

பின் உறவினர்கள் வந்து வாழ்த்தி, பரிசு கொடுக்க, அவர்களுடன் போட்டோ எடுக்க, இப்படியே பொழுது நகர்ந்தது. அனைவருக்கும் பந்தி போஜனம் நடைபெற்றது. ஆனந்தி இருவரையும் அழைத்து, தன் அறையில் ஓய்வு எடுக்கச் சொன்னாள்.

இருவரும் அனியின் அறைக்கு செல்ல, அங்கு குழந்தைகள் இருவரும் காலை வெகு சீக்கிரம் எழுந்ததால், படுக்கையில் உறங்கி கொண்டிருந்தனர். சஜு அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தாள், ஆகாஷ் இப்பொழுதாவது பேசி விட வேண்டும் என்று பேச்சை ஆரம்பித்தான்.

ஆகாஷ் “சஜு… நேற்று, முதல் நாள் இரவே உன்னிடம், இந்த ஏற்பாடுகளைப் பற்றி சொல்ல வந்தேன், நீ தூங்கி விட்டாய், நேற்று… நேற்று தான் உனக்கே தெரியுமே, என்னால் உன்னைப் பார்க்க கூட முடியவில்லை, உறவினர்கள் வருகையால்”

சஜு “இல்லாவிட்டாலும் நீ என்னிடம் சொல்லி இருப்பாயா? எல்லாம் திமிர், எல்லாவற்றையும் நடத்த பணம் இருக்கிறது, பின் நீ ஏன் என்னிடம் கேட்கப் போகிறாய் அல்லது சொல்லப் போகிறாய்” தன் அம்மா வீட்டிற்கு சென்று வந்ததை கூட, இவன் சொல்லவில்லை ஏன் அதை விட இன்று நடக்க போகும் நிகழ்ச்சிகளைப் பற்றி கூட தன்னிடம் சொல்லவில்லை என்ற கோபம் அவளுக்கு.

ஆகாஷ் “சஜு, எங்கள் வீட்டினர் ஒன்றும் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. ஏன் இந்த இரண்டு நாட்களில் நீயே தெரிந்து கொண்டிருப்பாயே”

சஜு “நான் அவர்களைச் சொல்லவில்லை, உன்னை தான் கூறினேன், அதான்… ஏற்கனவே, உன் பணக்கார புத்தியை காட்டியிருக்கிறாயே என்னிடம், அது போதாது ?”

ஆகாஷ் “சஜு, ப்ளீஸ்…” அவன் என்னச் சொல்லி இருப்பானோ? அதற்குள் அறைக் கதவு தட்டப்படவும், ஆகாஷ் பேச்சை நிறுத்தினான். ஆனந்தி கதவைத் திறந்து, இருவரையும் சாப்பிடுவதற்கு அழைத்து சென்றாள்.

அங்கு பந்தியில் ஆகாஷ், சஜ்னாவை அருகருகே அமர வைத்து, சுற்றி உறவு பெண்களும், அந்த உறவு பெண்களில் அனியின் தங்கை கவிதாவும் , சஜுவின் அத்தை பெண் மஞ்சரியும் இருக்க, ஆனந்தியும், அவியும் அவர்கள் இருவரையும் ஒருவர் மற்றவருக்கு ஊட்டி விட வேண்டும் என்று சொல்ல, ஆகாஷ் வேண்டாம் என மறுக்க, மற்றவர்கள் வற்புறுத்த, சஜுவின் கண்கள் அவனைப் பார்த்து கடுகடுக்க, அடுத்து என்ன செய்தார்கள்?

 

யுத்தம் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!