காம்யவனம்-7

                                                                                     காம்யவனம் 7

 

       ரதியின் இழப்பை மன்மதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அவன் பார்க்கும் போதே அவள் தீக்கு தன்னை இறையாக்கிக் கொண்டது அவனை பல நாள் வாட்டியது.

அதிலிருந்து அவன் மீண்டு வர முடியாமல் தவித்த போது , சிவபெருமான் கூறியது போல விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரம் எப்போது எனக் கேட்டுத் தெரிந்து கொள்ள வைகுண்டத்திற்கு விரைந்தான்.

அங்கே விஷ்ணு தன் ஆதிசேஷ படுக்கையில் கண்மூடி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். மன்மதன் வருவது தெரிந்ததும் மெல்ல கண்விழுத்து அவனைக் கண்டார்.

அவனின் கலக்கம் அவர் அறிந்தே இருந்தார்.

“வணங்குகிறேன் பெருமானே!”.  உருவமற்றவனின் வணக்கத்தை அவர் ஏற்றார்.

“நீ எதற்காக வந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன் மன்மதா. அது கூடிய விரைவில் நடக்கும். என்னுடைய அண்ணனாக இந்த ஆதிசேஷன் இப்போது பூமியில் தோன்ற உள்ளார். அதன் பிறகு அவருக்குத் தம்பியாக நான் அவதரிப்பேன். இன்னும் சொற்ப காலங்கள் பொறுத்திரு. உனக்கு அதன் பிறகு உருவமும் கிடைக்கும் உன் ரதியும் கிடைப்பாள். உன் கவலைகள் நீங்கி இனி இன்பபமாக இருப்பாய்.” என தன் வாயால் கூறினார்.

கடவுளே அப்படிச் சொன்ன பிறகு அவனால் மீண்டும் கவலையில் மூழ்க இயலவில்லை.

உடனே அவன் மகிழ்ச்சியில் விஷ்ணுவிடம் , “இறைவா! நான் இனி ஒரு போதும் சோகத்தில் இருக்கப் போவதில்லை. உங்கள் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருப்பேன். அப்படி காத்திருக்கும் நேரத்தை என்னுடைய ரதியை நினைத்து இன்பம் கொள்வேன். அவளை மீண்டும் சந்திக்கும் போது அந்த இடம் முழுவதும் என்னுடைய காதலை அவளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆகையால் என்னுடைய விருப்பத்திற்கு தங்கள் சம்மதம் வேண்டும்.” என அவரின் பாதம் பணிந்து வேண்டினான்.

“என்ன வேண்டும்?” அவர் புன்னகையுடன் அவனிடம் வினவ,

“தாங்கள் அவதரிக்கப் போகும் இடமே , தங்கள் மகனாக பிறக்கப்போகும் எனக்கும் வீடாகும். ஆகையால் அந்த இடம் முழுவதும் நான் காதலால் நிறப்பப் போகிறேன். பார்க்கும் செடி கொடி மரம் அனைத்தும், பூக்கும் பூக்கள் காய்க்கும் காய்கள், மலை முகடு என அனைத்திலும் , ஏன் காற்றில் கூட காதலைக் கலந்துவிட போகிறேன். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்.” என மன்மதன் கூறினான்.

“நீ செய்யும் இந்தச் செயல் எனக்கும் சம்மதமே! அந்த இடத்தில் நானும் இருக்கப் போவதால் என்னையும் அனைவரும் காதல் மன்னன் என அழைக்கப் போகின்றனர். இந்த கிருஷ்ணாவதாரம் எனக்கு எத்தனை மனைவிகளை உண்டாக்கப் போகிறதோ?! உன் விருப்படி செய்!” என அவனுக்கு ஆசி வழங்கினார்.

அங்கிருந்து மகிழ்ச்சியாக வெளியேறினான் மன்மதன்.

கிருஷ்ணர் வளரப் போகும் மதுராவிற்கு அருகில் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியை தேர்ந்தெடுத்தான். அங்கே சென்று அவனது வேலையை துவக்க ஆரம்பித்தான்.

அந்தக் காட்டை ஒரு அழகிய காடாக மாற்றினான். பச்சையும் மஞ்சளும் பழுப்புமாக மரங்களும், புற்களும் வண்ண வண்ணப் பூக்களும் நிறப்பினான். அதுமட்டுமில்லாமல் ஏலக்காய் ஒரு புறமும் மஞ்சள் , மிளகாய் , சோம்பு , சீரகம், பட்டை முதலிய பொருட்களையும் தனித்தனியே இடம் பார்த்து விதைத்தான்.

அவற்றின் வாசனை அந்த இடமெங்கும் பரவியது.

ரோஜா , அல்லி, முல்லை ஜாதி, தாமரை, நீலோத்பலம், சாமந்தி போன்ற மலர்களும் குவிந்தன.

அழகிய பூஞ்சோலை ஆனது அந்த அடர்ந்த காடு.

நாளடைவில் அந்த இடம் காம்யவனம் எனப் பெயர் பெற்றது. ‘காம்ய’ என்பது  ‘அழகிய’ , ‘வசியப்படுத்தக் கூடிய ‘ , ‘ஈர்க்கக் கூடிய’ என பொருள் படும்.

காண்பவர் மட்டும் அல்ல, அந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கும் அத்தனை பெரும் அதன் அழகில் மயங்கி , தங்களின் மனதில் காமத்திற்கும் ஆசைக்கும் இடம் கொடுப்பார்.

மனதின் ஆசையை வெகு சுலபமாக அந்தக் காடு தட்டி எழுப்பிவிடும். அப்படிப் பட்ட இடத்தை உருவாக்கி வைத்து கமதேவனும் அங்கேயே சுற்றித் திரிந்தான்.

கிருஷ்ணர் பிறக்கும் காலமும் வந்தது. மன்மதன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவரின் வரவை எண்ணி, தான் ரதியைச் சந்திக்கும் நேரம் நெருங்கியதை நினைத்து ஆனந்தக் கூத்தாடினான்.

அப்படியே நிகழ்ந்தது. ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்தார். அவரின் பால்யப் பருவம் முழுவதும் அந்தக் காம்யவனம் தான் வியாபித்திருந்தது.

அந்தக் காற்றில் கலந்து இருந்த மாயை அனைவரையும் கிருஷ்ணன் மீது காதல் கொள்ள வைத்தது. அங்கிருந்த சிறுவர் முதல் மூத்த கோபிகாஸ்த்ரிகள் வரை அனைவரையும் கிருஷ்ணனைச் சுற்ற வைத்தது.

தன் புல்லாங்குழலால் அங்கிருந்த காற்றை மீட்ட அந்த காதல் கலந்த காற்றின் ஒலி அனைவரையும் ஈர்த்தது. ஆடு மாடு முதல் , மரம் செடிகளும் மயங்கின.

கிருஷ்ணரின் லீலா வினோதங்கள் அனைத்தும் அங்கே தான் அரங்கேறியது. அவரது மாய வித்தைகள் அனைத்தும் அந்தக் காம்யவனத்தின் சக்தியால் சிறப்பாக அரங்கேறியது.

இப்படி உருவமில்லாத காமதேவன் இங்கே சிறு வயது கிருஷ்ணனை ரசித்துக் கொண்டிருக்க, மறுபுறம் ரதி , மாயாவதி என்ற பெயரில் பிறப்பு எடுத்திருந்தாள்.

மன்மதனுக்கு முன்பே பிறந்த அவள், கொள்ளை அழகோடு உருப்பெற்றிருந்தாள். அவளது பருவ வயது வந்தவுடன் , அனைத்து ஆண்களின் பார்வையும் அவள் மீது தான் இருந்தது. அவளுக்கு தான் ரதி என்பது தெரியாது.

இந்நிலையில் , ஒரு நாள் அவள் அழகில் மயங்கிய சம்பரன் என்ற அசுரன் அவளைச் சிறையெடுத்துச் சென்றான். ஆனாலும் அவள் கற்ப்பை அவனிடமிருந்து காத்து வந்தாள்.

சம்பரனுக்கு அவளது விருப்பம் இல்லாமல் அவளை தொடும் எண்ணம் இல்லாததால் , அவளைத் தன் அரண்மனையின் சமயல்காரியாக பணிபுரிய வைத்தான்.

அவளும் அங்கிருந்து தப்ப முடியாமல் அந்த வேலையைச் செய்து வந்தாள்.

இந்தச் சமயத்தில் தான் கிருஷ்ணர் ருக்மிணியை மணந்தார். அவர்களுக்கு மன்மதனே மகனாக வந்து பிறந்தான்.

அவனுக்கு ‘பிரத்யும்னன்’ என பெயர் சூட்டினர்.

குழந்தை அத்தனை அழகுடன் பிறந்திருந்தது. அவனுக்கும் அவன் தான் மன்மதன் என்று தெரியாமல் இருந்தது.

இவனது பிறப்பின் நோக்கம் , ரதியுடன் இணைவது தான் என்று அறிந்த கிருஷ்ணர், அவனை மாயாவதி என்ற பெயரில் இருக்கும் ரதியிடம் சேர்க்க திட்டம் தீட்டினார்.

சம்பரனிடம் , “உன்னைக் கொல்பவன் கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன்” என்று அசரீரி மூலம் சொல்ல வைத்தார்.

இதை அறிந்து கோபம் கொண்ட அந்த அரக்கன், பிரத்யும்னனை யாரும் அறியாமல் கடத்திக் கொண்டு வந்து கடலில் வீசி எறிந்தான்.

அந்த நேரம் அங்கு வந்த ஒரு  மீன் , குழந்தையை விழுங்கி விட்டது. அந்தக் கடலில் மீன் பிடிப்பவர்கள் அந்த மீனைப் பிடித்து சம்பராசுரனின் மாளிகைக்கு அவனது உணவிற்காக அனுப்பி வைத்தனர்.

மாயாவதி அந்த மீனை சமைக்க எடுக்க , அதில் குழந்தை இருப்பதைக் கண்டு வியந்தாள்.

செய்வதறியாது அவள் தவித்த சமயம் , நாரதர் அவள் முன் தோன்றினார்.

“மாயாவதி, இவன் ஸ்ரீகிருஷ்ணரின் புதல்வன் பிரத்யும்னன். இவன் தான் சம்பராசுரனின் யமன். இவனை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வா. அவன் வளர்ந்த பிறகு சம்பராசுறனைக் கொன்று உனக்கும் விடுதலை அளிப்பான்.” என்று கூறி மறைந்தார்.

 

மாயாவதியும் நாரதர் கூறியதைக் கேட்ட திலிருந்து பிரத்யும்னனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் .

மாயவதிக்கு வயது அதிகம் என்றாலும் பிரத்யும்னனை ஒரு நாளும் அவள், ‘தாய்’ என்று அழைக்க விட்டதில்லை.

“தங்களை நான் எவ்வாறு அழைப்பது?” என அவன் மழலை மொழியில் கேட்டபோது ,

“என்னை நீ மாயா என்றே அழைக்கலாம். அது தான் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று உடனே பதில் தந்தாள்.

அவளும் பல முறை தான் ஏன் அப்படிக் கூறினோம் என்று யோசித்துப் பார்த்தாலும் அவளுக்கு ஒன்றும் விளக்கவில்லை. ஆனால் அவன் தன்னை அம்மா என்ற உறவு முறையில் பார்க்க அவள் விடவில்லை.

“நீங்கள் தான் என்னை பாசமாக பார்த்துக் கொள்கிறீர்கள், என்னைப் பராமரிக்கிறீர்கள் . பிறகு ஏன் உங்களை நான் அப்படி அழைக்கக் கூடாது?” என பிரத்யும்னன் பல முறை கேட்க,

“உன்னை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது , உன் தாய் தந்தை பற்றி நேரம் வரும் போது கூறுகிறேன்.” என அடக்கிவிடுவாள்.

ஒரு நாள்  பிரத்யும்னன் பருவ வயதை அடைந்தவுடன் அவனிடம் பிரத்யும்னா நீ கிருஷ்ணரின் பிள்ளை. உன் தாயார் ருக்மணி. இருவரும் துவாரகையில் இருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொன்னாள்.உடனே தன்னை பெற்றோரிடமிருந்து பிரித்த சம்பாசுரன் மேல் ஆத்திரம் கொண்டு அவனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

வெற்றியுடன் திரும்பிய பிரதயும்னன் தன்னை வளர்த்த மாயாவதியை அழைத்துக் கொண்டு ஆகாயமார்க்கமாக துவாரகையை அடைந்தார்.துவாரகையில் கிருஷ்ணரின் சாயலில் இருந்த பிரத்யும்னனைக் கண்டதும் யாதவர்கள் கிருஷ்ணர் என்றே எண்ணி மகிழ்ந்தனர்.

ருக்மணிக்கு அவனைக் கண்டதும் தாய்மை உணர்வு பொங்கியது .நாரதரும் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார் .நீண்ட நாட்களாக காணாமல் போன தன் பிள்ளை திரும்ப கிடைத்ததை எண்ணி ருக்மணி எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டாள்.

 

மாயாவதி பிரத்யும்னனை விட மூத்தவள் என்றாலும்  , அன்று முதல் இன்று வரை இளமை குறையாமல் இருந்தாள். பிரத்யும்னன் தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவர சென்றான்.

அப்போது மதுராவிற்கு ஒரு முறை செல்ல முடிவெடுத்தான். மாயாவதிக்கு அங்கே செல்ல வேண்டும் என வெகு நாளாக ஆசை இருந்தது.

அப்போது பிரத்யுமனனிடம் சென்று , “நானும் உன்னுடன் வரலாமா?” என்றாள்.

“தாராளமாக..” என ஒற்றை வார்த்தையில் பதில் கூறி அவளையும் உடன் அழைத்துச் சென்றான்.

மதுராவிற்கு செல்லும் வழியில் தான் காம்யவனம் இருக்கிறது. அதைக் கடந்து தான் மதுராவிற்குள் நுழைய முடியும்.

தேரை பிரத்யும்னன் ஓட்ட , பின்னால் அமர்ந்திருந்தாள் மாயாவதி. காமய்வனத்தின் எல்லை ஆரம்பமானது. தேரின் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து ஓரிடத்தில் நிறுத்தினான்.

மாயாவதியும் தேர் நின்றவுடன் , கீழே இறங்கினாள்.பிரத்யும்னன் அவளுடன் இறங்கி அந்தக் காட்டிற்குள் நடக்கலானான்.

இருவரும் அந்த மண்ணை மிதித்தவுடன், இருவரின் நினைவும் தாங்கள் யார் என்பதை அறிந்துகொண்டது.

அத்தனைக் காலம் தான் யாருக்காக காத்திருதோம் என்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர். பிரத்யும்னன் தான் அவளுக்காக இந்தக் காட்டில் அவனுடைய காதல் அனைத்தையும் நிரப்பியது இன்று பலன் அளித்தது.

அங்கிருந்த மரங்கள் அவனுடைய காதலை ரதியாகிய மாயாவதிக்கு உணர்த்தியது. அவள் நடந்து சென்ற மண் அவனின் பூர்வ ஜென்ம வாசனையை அவளுக்கு நினைவுபடுத்தியது.

அவள் இல்லாமல் அவன் எத்தனை வேதனைக்கு உள்ளானான் என உணர்ந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் பார்த்து நிற்க, ‘உனக்காகவே நான் ‘ என இருவரின் எண்ணங்களும் சொல்லியது.

அவனுடைய பழைய உருவத்தில் அவனை மீண்டும் புதிதாகக் கண்டாள் மாயாவதி. சிறிதும் தாமதிக்காமல் அவனைக் கட்டி அணைத்தாள்.

“காமா..நீ தானா! நீயே தானா? இத்தனை நாள் உன்னையா தெரிந்து கொள்ளாமல் இருந்தேன்!” கண்ணீர் சிந்தினாள்.

“எனக்கும் இப்போது தான் புரிந்தது. இது தான் நம் நிலை அறிந்துகொள்ளும் காலமாக இறைவன் விதித்திருக்கிறார் போலும்.இனியும் உன்னை நான் பிரிய மாட்டேன்.” உணர்ச்சியின் வசம் தத்தளித்தான்.

வெகு காலத்திற்குப் பிறகு அவர்களது துணையைக் கண்ட சந்தோஷத்தில் இருவரும் அந்தக் காட்டில் இன்பமாக உலவித் திரிந்தனர்.

பிரத்யும்னன் அவளுக்கு இந்தக் காட்டில் அவர்களின் காதல் காற்றைக் கலந்துவிட்டதைப் பற்றி விளக்கினான்.

“அந்த சக்தி தான் உன்னையும் என்னையும் இந்த இடத்தில் நம்மைப் பற்றி உணர வைத்தது.” அவளைத் தோளோடு அணைத்துக் கூறினான்.

“இனி எந்த ஜென்மத்திலும் நான் உங்களைப் பிரியக் கூடாது. மறக்கவும் கூடாது. நீங்கள் இப்போது இந்த இடத்தில் நம் காதலை விதைத்தது, இனி எந்த ஜென்மத்தில் நான் பிறப்பெடுத்தாலும் அதை நான் நினைவு கூர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு அதற்கான வழியைச் சொல்லுங்கள்.” அவன் தோளில் சாய்ந்தாள்.

அவளின் கை பிடித்து அந்தக் காட்டின் ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.