கார்கால வானவில் 3

அத்தியாயம் – 3

மகிழ்வதனி கல்லூரியில் சேர்ந்தபிறகு ஆளே மாறிபோனாள். படிப்பு, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் முதல் பெண்ணாக வருபவளுக்கு கல்லூரியில் நட்பு பட்டாளம் அமையவில்லை. இன்றுவரை அவளுக்கு தோழி என்றாலே அது கார்குழலி மட்டும் தான்.

அவள் சுற்றி உள்ளவர்களால் தனிமைபடுத்தபட்டாள். ஆனால் அதை உணராமல் அவள் எப்போதும் புன்னகையுடன் வலம் வருவது எல்லோரின் மனதிலும் கேள்வியை எழுப்பியது.

மதியம் பங்குனி மாத வெளியில் கொளுத்தி கொண்டிருக்க மரத்தின் நிழலில் தஞ்சமடைந்த மகிழ்வதனி அசைன்மென்ட் எழுதும் ஈடுப்பட்டிருந்தாள். இதமான காற்று அவளை தழுவிச்செல்ல சுருள் முடி அவளின் முகத்தை மறைக்க அதை காதோரம் ஒதுக்கிவிட்டு தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

அப்போது அவளின் அருகே யாரு அமரும் ஆராவாரம் கேட்டு பட்டென்று நிமிர்ந்து பார்க்க அவன் தான்  அவளின் அருகே அமர்ந்திருந்தான். அலையலையாக கேசமும், அதற்கேற்ற திரண்ட தோள்களும், அகன்ற மார்பு என்று ரோமானிய சிலைபோல இருந்தவனின் மீதிருந்து அவளால் பார்வையை திருப்ப முடியவில்லை.

மெரூன் கலர் ஷர்ட், சாண்டில் நிற பெண்டில் ஆளை வீழ்த்தும் பார்வையுடன் அமர்ந்திருந்தவனின் முகம் பளிச்சென்று இருக்க அவனின் விழிகளோ அவளின் மீதே நிலைத்தது.

அவள் அவனைக் கண்டதும் உதட்டை சுளித்துகொண்டு மீண்டும் தன் வேலையில் பார்வையை திருப்பிவிட அவனின் முகம் வாடிப்போனது. எப்போதும் தன்னைக் கண்டவுடன் மலரும் அவளின் முகம்  இன்று என்னோ கோபத்தை பிரதிபலிக்கிறதே என்ன காரணமாக இருக்கும் என்ற சிந்தனையுடன் அமைதியாக இருந்தான்.

“ஏன் வதனி என்னோட பேசாமல் என்ன பண்ணிட்டு இருக்கிற” என்று அவன் கேட்க அவள் சட்டென்று நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

அவளின் கோபத்திற்கு காரணம் புரியாமல், “ஏண்டி என்னை முறைக்கிற” என்று அவளிடம் கேட்க, “நான் முறைப்பது மட்டும் உனக்கு நல்ல தெரியுமே. யாரு எப்படி போன எனக்கு என்னன்னு நீ வந்து உட்கார்ந்துக்கோ, உங்கூட பேசாம எனக்கு பொழுது போகாதுன்னு நானும் பேசுவேன், அதை பார்க்கிற எல்லோரும் என்னை பைத்தியம் என்று சொல்லட்டும்” என்றவள் வெறுப்புடன் முகம் திருப்பினாள்.

அவளின் பேச்சில் அவன் முற்றிலும் குழம்பிப் போனான். தன்னால் அவளுக்கொரு அவப்பெயர் வருமா என்ற சிந்தனையுடன் அவன் அவளைக் கேள்வியாக நோக்கினான்.

“உன்னோட பேசலன்னா எனக்கு மனசு கேட்க மாட்டேங்குது, ஆன நான் உங்கூட பேசுவதைப் பார்த்த சிலர் என்னை பற்றி தப்பு தப்பா ஊருக்குள் புரளியை கிளப்பி விடுறாங்க” என்றாள் வருத்தத்தில் முகம் வாட.

மெல்ல அவளை அருகே இழுத்து மார்புடன் சேர்த்து அணைத்துகொண்டவன்  அவளின் கூந்தலை மென்மையாக வருடிவிட்டான்.

“டேய் என்னை ஊருக்குள் பைத்தியம் என்று சொல்றாங்க. நான் மென்டல் என்னோட யாரையும் பேசவிடாமல் பண்றாங்க தெரியுமா” அவனின் நெஞ்சில் முகம் புதைத்தபடி.

அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் சிலநொடி திகைத்தவன் பிறகு, “வதனி..” அவனின் அதட்டல் கேட்டு அவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.

“உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கலடி” என்றான் கோபத்தில் முகம் சிவக்க.

“உனக்கும் என்னை பிடிக்கலயா?” அவள் சிணுங்கலோடு கேட்க,

“ஆமாண்டி உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றான் வெறுப்பாக.

“ஏன்டா இப்படி சொல்ற” அவளின் வருத்தம் அவனின் மனதை என்னவோ செய்தபோதும் அவளை முறைத்தபடியே தன் பேச்சை தொடர்ந்தவன்,

“உன்னோடு நான் வந்து பேசுவது என்னோட விருப்பம். அது உனக்கும் எனக்குமான நேரம். அதை யாராவது தவறா சொன்னா நீ அப்படித்தான் கண்ணை கசக்குவியாடி” என்றான் அதட்டலோடு.

அவனின் கேள்வியில் அவளுக்கு வாயடைத்து போய்விட, “ஊருக்குள் அவனவன் பொழப்பை பார்க்கவே நேரம் இல்லாமல் கிடக்குறாங்க. உன்னை சொல்ல அவங்களுக்கு எந்த தகுதியும் இல்ல மகிழ். ஒன்னு மட்டும் மனசில் ஆழமாக பதிய வெச்சுக்கோ. நீயே என்னை போ என்று சொன்னாலும் நான் உனக்கு பாதுக்காப்பாக உன்னோடுதான் இருப்பேன்..” என்றதும் அவள் தன்னை மீறி கதறி அழுதாள்.

அவள் அழுவது புரிந்தபோதும் அவன் சமாதானம் சொல்லாமல், “நீ உன் விருப்பபடி  இரு. மற்றபடி யாரோ சொல்றாங்க என்று என்னை வராதேன்னு சொல்லாதே. நான் அப்படித்தான் வருவேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான்.

அவர்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் யாருமே இல்லை. அவள் அங்கே அமர்ந்திருப்பது யாரின் கண்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் தெரியாது. செங்கொன்றை மரத்தின் நிழலில் அவள் அமர்ந்திருக்க அவளின் பின்னோடு பசுமையாக வளர்ந்திருந்த மரங்கள் அவளுக்கு அரணாக அமைந்தது.

அவளின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த மித்ரா, “ஏய் மகிழ் என்னடி தனியாக உட்கார்ந்து அழுதுட்டு இருக்கிற” என்று கேட்கும்போது தூரத்தில் அவனின் உருவம் மறைவது அவளின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது.

அவள் எதுவும் புரியாமல் அவளின் கண்களை துடைத்துவிட்டு, “நீ வா வதனி தனியாக உட்காராதே” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றாள்.

மறுநாள் காலை வழக்கம்போல தன் ஸ்கூட்டியில் கல்லூரிக்கு கிளம்பிய வதனியை கிளம்ப விடாமல் வழியை மறித்து நின்றார் பரிமளா. அவள் தாயை கேள்வியாக நோக்கிட, “மகிழ் உனக்கு என்னடா பிரச்சனை? எதுக்கு நேற்று தனியாக உட்கார்ந்து அழுத”என்று கேட்கும் போதே அவளின் புருவங்கள் முடிச்சிட்டது.

நேற்று கல்லூரியில் நடந்த விஷயத்தை மித்ரா வீட்டில் சொல்லிவிட்டதை உணர்ந்தவள், “அம்மா பெற்ற பொண்ணு என்னை நம்பாமல் யார் யாரோ சொல்லும் விஷயத்தை நம்பற..” என்றவள் கேலியுடன் கூற தாயின் மனம் நிம்மதியடைந்தது.

“சரிம்மா இன்னைக்கு நம்ம கார்குழலிக்கு பிறந்தநாள். இந்தா இந்த கேசரியை அவளுக்கு கொடுத்துட்டு நீ காலேஜ் போ” என்று சொல்ல சரியென்று தலையசைத்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்தாள் சிறியவள்.

சிறிதுநேரத்தில் அவள் கார்குழலியின் வீட்டை சென்றடைய, “ஏலே சரவணா வாழ தாரு பத்திரம். நீயும் சூதமான வேலய பாருவே” என்றவளின் குரல் கேட்டு திரும்பிப் பார்க்க வாழை தோப்பின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்தாள்.

“அடியே என்னடி காலங்காத்தால அவனை இந்த விரட்டு விரட்டிட்டு இருக்கிறவ” என்ற மகிழ் வேண்டுமென்றே அவளை வம்பிற்கு இழுக்க அவளின் முகம் மலர்ந்தது.

“ஏண்டி காலேஜிக்கு போகாம இந்தபக்கம் உனக்கு என்னடி வேலை”  தோழியை அதட்டியபடியே வந்த கார்குழலியின் கைபிடித்து நிறுத்திய மகிழ் அவளின் கையில் ஒரு துணிப்பையை திணித்து,“இந்த இந்த கவரில் இருக்கிற துணியை மாத்திட்டு சீக்கிரம் வருகின்ற வழியை பாருடி” என்றாள்.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல” என்ற கார்குழலி அவளை முறைக்க அவளும் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு சளைக்காமல் அவளின் பார்வையை எதிர்கொண்டாள்.

“இனி உன்னிடம் பேசி பயனில்லை” என்றவள் “இந்த சரவணா என்ன பண்றான்னு கொஞ்சம் கவனிடி நான் இதோ வரேன்” கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று மறைய மகிழ் இறங்கி தோப்புக்குள் சென்றாள்.

“என்னலே சரவணா இன்னைக்கு எதுக்கு உங்க அக்கா வாழை மரத்தை தாரோட போராடிட்டு இருக்கிறா” என்று கேட்க, “வாங்க மகிழ் அக்கா” என்றான் சரவணன் மலர்ந்த முகமாகவே.

“காலேஜிற்கு ஃபீஸ் கட்ட பணம் வேணும்னு கேட்டேன். அப்போ நம்ம வெள்ளத்துரை அண்ணா பேத்தி சடங்குக்கு கட்ட இரண்டு வாழைத்தார் கேட்டாங்க. அதன் இதை வெட்டிட்டு இருக்கோம்” அவன் நிலவரத்தை விளக்கினான்.

ஒரு ஏக்கர் நிலமும், வீடும் தான் என்பதை நன்கு அறிந்த கார்குழலி விவசாயத்தில் அறிவாளியாக இருந்தாள். ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்று மாதத்தில் அறுவடை செய்ய கூடிய சம்பா, வாழை மரம் அவளின் வயலுக்கு பாதுகாப்பாக இருக்க தென்னையும் நட்டு இந்த நான்கு ஆண்டில் நன்றாக வளர்த்தி இருந்தாள்.

பின்னாடி கிடக்கும் இடம் சும்மா இருக்குமே என்று சிந்தித்து அங்கே பூச்செடிகளும், கத்திரிக்காய், தக்காளி தோட்டத்தையும் போட்டுவிட்டாள்.

“உங்க அக்காளுக்கு அறிவு ஜாஸ்திடா” என்ற மகிழ் சரவணாவிடம், “நல்ல படிச்சு வேலைக்கு போகின்ற வழியை பாருடா..” என்று சொல்ல அவனும் சரியென்று தலையசைக்க அனிதா கையில் மோருடன் மகிழிடம் வந்தாள்.

“அக்கா மோர் குடிங்க” என்றதும், “உங்க அக்கா சொன்னதை செய்யாமல் இதை செய்துட்டு இருக்காளா” என்று கேட்டுகொண்டே அதை வாங்கி குடித்துவிட்டு,

“இந்த அக்கா பிறந்தநாளுக்கு அம்மா கேசரி கிளறிக் கொடுத்தாங்க.. நீயும், காயூவும் நல்ல சாப்பிடுங்க” என்றவளிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கிருந்து சரவணாவிடம் பக்கம் திரும்பி அவனின் படிப்பை பற்றி விசாரித்து அடுத்து அதற்கு தேவையான மேல்படிப்பு என்னவென்று எல்லாம் கூறினாள்.

“என்னைக்கும் அவளே உங்களோட இருப்பான்னு யோசிக்காம சீக்கிரம் தலையெடுக்க பாரு சரவணா. நீதான் அவளை ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி தரனும்” அவள் மனதிலிருந்த விஷயத்தை நாசுக்காக கூறினாள்.

அவன் சிறியவன் என்றபோதும் அவனின் மனதில் பொறுப்பு என்ற பயிரை நேரம் பார்த்து விதைத்த மகிழை புன்னகையுடன் பார்த்தான் சரவணன்.

அவனின் மனமோ, ‘உங்க வார்த்தைக்காகவே நான் சீக்கிரம் நல்ல படிச்சு எங்க அக்காவை நல்ல இடத்தில் கட்டிகொடுப்பேன்’ என்று உறுதி எடுத்தான்.

அதே நேரத்தில் மகிழ் கையில் கொடுத்த கவரைப் பிரித்து பார்க்க அடர் பச்சை நிறத்தில் சேலை அருமையாக இருந்தது. அவள் அந்த சேலையை உடுத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தாள்.

“சரிடா சரவணா. நானும் உங்க அக்காவும் இன்னைக்கு குற்றால கைலாச நாதர் கோவிலுக்கு போயிட்டு சாயந்திரம் போலத்தான் வீடு வருவோம். அதுவரை அனிதா, காயத்ரியை பத்திரமா பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு அவள் வந்து ஸ்கூட்டியை எடுத்தாள்.

அன்று கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு அங்கிருந்த தூணின் அருகே அமர்ந்த மகிழ், “இந்த இது உன்னோட கடைசி செமஸ்டர் ஹால் டிக்கெட். டேட் நல்ல பார்த்துக்கோ. டைம்க்கு வந்து எக்ஸாம் எழுது” என்று தோழியிடம் ஹால் டிக்கெட்டை கொடுத்தாள்.

அவள் அதை சிந்தனையுடன் பார்க்க, “இந்த வாரம் மதுரை போகணும். விவசாய பயிர் கண்காட்சி அங்கே நடக்கிறது. புதுசாக அறிமுகப்படுத்தபட்ட விதைகள், உரங்கள் பற்றிய விவரம் எல்லாம் தெரியும்டி” என்று கூறினாள்.

தனக்காக யோசிக்கும் தன் தோழியை இமைக்க மறந்து பார்த்த கார்குழலி, “உனக்கு நான் இன்றுவரை எதுவுமே செய்யல. அப்புறம் எதுக்குடி எனக்கு நீ இவ்வளவு உதவி பண்ற” என்று கேட்க மகிழ் பார்த்த பார்வையில் பாசம் வெளிப்படையாக தெரிந்தது.

“இங்கே பாரு குழலி. உன் தம்பி தங்கையை யோசிக்க நீ இருக்கிற. உன்னைப் பற்றி யோசிக்க நான் இருக்கேன்..” என்ற தோழியின் வார்த்தையில் அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது.

“உன் தம்பி இன்னைக்கு நீ சொல்வதை கேட்கலாம். நாளைக்கு அவனுக்கு வேலை கிடைத்துவிட்டால் அவன் வைப்பது தான் சட்டம்னு சொல்வான். இன்னைக்கு உன் பேச்சைக் கேட்டு நடக்கும் தங்கைகளுக்கு நாளைக்கு ஒரு திருமணம் நடந்தா அவங்களும் உன்னை தூக்கி எரிஞ்சிதான் பேசுவாங்க.” என்றவள் தொடர்ந்து

“அது மட்டும் இல்லாமல் உன்னை கல்யாணம் பண்ணிக்க வருபவன் கூட உன் கையில் இருக்கும் சொத்தை கணக்கிட்டு வருவானே தவிர உன் மனசை யாரும் பார்க்க மாட்டாங்க குழலி. உன் கையில் படிப்பு இருந்தா அவங்களை ஒதுக்கிட்டு நீ உன் வழியைப் பார்த்து தைரியமாக போலாம்” என்றாள் நிதர்சனம் புரிந்தவளாக.

தனக்காக இவ்வளவு யோசிக்கும் மகிழ் முகத்தில் மறைந்த தன் தாய் முகம் கண்ட கார்குழலி, “உன்னோட பேச்சை கேட்கும் போது மனசுக்கு நிறைவாக இருக்குடி. கடலில் விழுந்தவன் உயிர் தப்பிக்க மரக்கட்டையை பிடிச்சுட்டு நீந்தி வர மாதிரி உன் நட்பு கூட என்னை கரைசேர்க்க நினைக்குது” என்றாள் அவளின் கைகளைப் பிடித்தபடி.

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக, “நான் எம்.பி.ஏ படிக்க போறேன்” என்றதும் கார்குழலி முகம்  மலர, “வாழ்த்துகள்” என்றாள்.

“சரி இந்த அப்ளிகேசன்ல சைன் பண்ணு” என்றவளை அவள் கேள்வியாக நோக்கிட, “உனக்கும் சேர்த்துதான் அப்ளிகேசன் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றவளை முறைத்தாள் கார்குழலி.

“சும்மா முறைக்காதே. இந்த படிக்கிற வழியை மட்டும் பாரு” என்று மிரட்டி அவளிடம் கையெழுத்து வாங்கினாள் மகிழ்.

“ஏண்டி பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி இருந்தா போதாதா? நாளைக்கு தம்பியை படிக்க வைக்கணும். அவனுக்கு அடுத்து இரண்டு தங்கைங்க இருக்காங்க” என்றவள் புலம்ப,

“இந்த புலம்பல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. நீ எம்.பி.ஏ. படிக்கிற.. விவசாயம் பண்றவளுக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்னு என்னோட தோழியைப் பார்த்து யாரும் கேட்க கூடாது” என்ற மகிழ் அங்கிருந்து எழுந்தாள்.

இருவரும் வீட்டை நோக்கி பயணித்தனர். மகிழ்வதனி தான் படிக்கும்போது அஞ்சல் மூலமாக கார்குழலி படிக்க ஏற்பாடு செய்தாள். அது மட்டும் இல்லாமல் தன் கல்லூரி லைப்ரரி புத்தங்களை கொண்டுவந்து கொடுத்து அவளை படிக்க சொன்னாள்.

அதே மாதிரி சுற்று வட்டாரத்தில் எங்கே விவசாய துறைக்கு கண்காட்சி நடந்தால் அங்கே அழைத்து செல்வாள். எந்த விதை போட்டால் எப்படி மகசூல் வருமென்று கணக்கிட்டு அதில் வரும் பணத்தை எந்த தொழிலில் போட்டால் நல்ல வருமானம் வருமென்று அதில் இன்வெஸ்ட்மென்ட் போட்டு கார்குழலி வளர்ச்சிக்கு பக்கபலமாக நின்றாள்.. நிற்கிறாள்..

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க மகிழ்வதனி படிப்பை முடிக்க குற்றாலத்தில் ஒரு பிரபல நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது.. அதே நேரத்தில் தன் படிப்பை முடித்த கார்குழலி விவசாயத்தில் முழு மூச்சாக இறங்கினாள்.