அதிலும் முந்தைய தினம் கிருஷ்ணன் நாயரிடம் அவள் பிடிவாதமாக இருந்த முறையை வீடியோ காலில் பார்த்தபோது அவரது எண்ணவோட்டத்தை அவராலேயே கணிக்க முடியவில்லை.
ஸ்ரீமதியும் அப்படியே!
பிடிவாதம் பிடித்தால் அது பிடிவாதம் தான். அவரைப் போல அமைதியாக இருக்கவும் முடியாது, அதே போலப் பிடிவாதம் பிடிக்கவும் யாராலும் முடியாது. கோபப்படுபவர்களின் உணர்வுகள் அவ்வளவு வீரியமில்லாதது.
ஆனால் அமைதியாக வெளிப்படும் பிடிவாதம் நிறைந்த கோபம் அத்தனை வீரியமானது!
அதைத் தான் முந்தைய தினம் பிரீத்தியிடம் உணர்ந்தார் மாதேஸ்வரன்.
“நீ தான் ஜெம்ன்னு சொல்லணும்…” குறையாகக் கூறிய வைஷ்ணவியை ஆழமாகப் பார்த்தாள் ப்ரீத்தா.
“பாஸ் எப்பவுமே ஜெம் தான் மே… க்கா. நான் சொல்லலைன்னாலும் அவர் அப்படித்தான்…” அழுத்தமான அந்த வார்த்தைகள், என் முன்னே சஷாங்கனை தவறாகப் பேசாதே என்று உறுதியாகக் கூறியது. ஆனால் அந்த உடல்மொழி வைஷ்ணவிக்கு புரியவில்லை. மாதேஸ்வரனுக்கு புரிந்தது.
ஸ்ரீமதிடமும் இதே கண்டிப்பு இருக்கும். அவரது உடல்மொழியும் இதுவாகத்தான் இருந்திருக்கிறது. மகனைப் பற்றியோ மகளைப் பற்றியோ யாரும் அவரிடம் தவறாகப் பேசிவிட முடியாது.
விளையாடிக் கொண்டே வைஷ்ணவியின் சுடிதார் டாப்ஸை பிடித்து இழுத்த வைபவ்வை, “அந்தப் பக்கம் போய் விளையாடு வைபவ்…” என்று கண்டித்த வைஷ்ணவி, ப்ரீத்தாவை பார்த்து,
“ஜெம் தான் வீட்ல பெரியவங்க சொல்றதை கேக்காம, யாரோடவோ லிவிங் டுகெதர்ல இருப்பானா?” என்று கேட்க,
“வைஷு…” கோபமாக அவளைத் தடுக்கப் பார்த்தார் மாதேஸ்வரன்.
என்ன இருந்தாலும் குடும்ப விஷயங்களை யாரோ மூன்றாம் நபரிடம் கடை பரப்ப வேண்டுமா?
“இருங்கப்பா. ப்ரீத்தி சொன்னா அவன் கண்டிப்பா கேப்பான்…” என்று வைஷ்ணவி அவரைச் சமாளித்தது உண்மைதான். ப்ரீத்தி சொன்னால் கண்டிப்பாகக் கேட்பான் தான்.
ஆனால் சட்டென உரிமை எடுத்து அதுபோலக் கூறிவிட மாட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியும். மாதேஸ்வரனுக்கும் தெரியும்.
“அது அவரோட பெர்சனல் மேம். ஆனா எம்டி தப்பு பண்ண மாட்டார்…”
ப்ரீத்தாவை பொறுத்தவரை, இந்த ஒரு புள்ளியை மட்டும் வைத்து அவனது ஒழுக்கத்தைப் பறைசாற்றுவது சரியென்று படவில்லை. இவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தால் கண்டிப்பாகத் திருமணம் செய்திருப்பான். காதலிக்கும் பெண்ணிடமிருக்கும் அத்தனை குறைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிட எத்தனை பேரால் முடியும்? இவனால் முடியும்.
இதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் கூட அவனிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவனிடம் நல்ல விஷயங்கள் இல்லையென்றால் கூட அவளால் அவனை விட்டுக் கொடுத்துவிட முடியாது.
ஏனென்றால் அனைத்தையும் தாண்டி அவன் அவளது நண்பன்! அவளிடம் மட்டுமே அத்தனை காயங்களையும் பகிரும் நண்பன். அவனை எப்படி விட்டுக் கொடுத்துவிட முடியும்?
“உன்னை மாதிரி ரெண்டு பேர் அவன் பண்றதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டா, எங்கிருந்து திருந்துவான் ப்ரீத்தி? அவன் பண்றது தப்புன்னு எடுத்துச் சொல்ல வேண்டாமா?” உண்மையிலேயே கவலையாகக் கேட்ட வைஷ்ணவியை அழுத்தமாகப் பார்த்தாள் ப்ரீத்தா. ஆனால் பதில் சொல்லவில்லை. “அவனை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு எங்களுக்குப் புரியவே இல்ல…” அவளது மனக் குமுறலை வெளிப்படுத்த, பிரீத்திக்கு வைஷ்ணவியின் அந்தச் சோகம் மனதை அழுத்தியது. முன்னவளுக்குத் தெரியும், பிரீத்தியிடம் கூறினால், அது கண்டிப்பாகச் சஷாங்கனை அடைந்து விடுமென!
இருவரின் நட்பைப் பற்றித் தெளிவாகப் புரியும் அவர்கள் இருவருக்கும்!
மாதேஸ்வரனுக்கு என்ன ஆதங்கம் என்றால், இந்தப் பையன் இந்த மாதிரி நல்ல பெண்களை விடுத்து, போயும் போயும் குப்பைத் தொட்டியில் விழுந்து கிடக்கிறானே என்பதுதான்!
ஒருவேளை ப்ரீத்தாவை திருமணம் செய்து வையுங்கள் என்று அழைத்து வந்தால் கூடச் சந்தோஷமாகத் தலையாட்டி இருக்கலாம் என்று கூடத் தோன்றியது அவருக்கு.
ஆனால் ஸ்வேதாவை போல ஒரு தரமே இல்லாத பெண்ணை எப்படி இந்தப் பையனுக்குப் பிடித்தது என்று அவருக்கு விளங்கவே இல்லை.
அவள் அவரிடமே வேலையைக் காட்ட முயன்றவள் என்பதை யாரிடம் கூற முடியும்? அவளை நினைக்கும் போதே வெறுப்பாக இருந்தது.
அவரைப் பொறுத்தவரை நடிகை என்பதெல்லாம் கண்டிப்பாகத் தடையில்லை. அவர் அதற்காகப் பார்க்கவுமில்லை. நடிகையாக இருந்தால் குணமும் கெட்டு விடுமா என்ன? எத்தனையோ நல்ல பெண்களை அங்கும் பார்த்திருக்கிறாரே! ஸ்வேதாவின் குணம் கொஞ்சமும் சரியில்லாதது. பணம் ஒன்று மட்டுமே அவளது குறி! சுயஒழுக்கம் சிறிதும் இல்லாத, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அந்தக் குணம் கொண்டவளை மட்டும் தான் அவர் எதிர்த்தார். அந்த மாதிரியான குணம் கொண்டவளை எப்படி மகனது மனையாளாக அனுமதிக்க முடியும்? அவனது வாரிசுகள் அவள் மூலமாகவா? அவைகள் எப்படி நல்ல வித்துக்களாக இருக்க முடியும்?
“யாரும் வந்து சொல்லித் திருத்தற அளவுக்கு எம்டி கெட்டவர் கிடையாது. அவருக்குத் தெரியும், தான் செய்றது தப்பா சரியான்னு! அவரோட மனசாட்சியை மீறி அவரால தப்புப் பண்ணவே முடியாது. இதையெல்லாம் மீறி ஒரு விஷயம் நடந்தா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கணும். கண்டிப்பா இருக்கும்…”
அழுத்தமான, தெளிவான, உறுதியான வார்த்தைகள்!
ப்ரீத்தா வைஷ்ணவியிடம் பேசுவதைக் கேட்டபோது மாதேஸ்வரனுக்கு பளாரென்று யாரோ தன் கன்னத்தில் அறைந்தார் போல இருந்தது! அத்தனையும் மகனுக்காக ஸ்ரீமதி பேசும் வார்த்தைகள்!
வார்த்தை மாறாமல்!
என்னதான் நம்பிக்கை என்றாலும் இவ்வளவு உறுதியாகவா?
ஆச்சரியமாக இருந்தது மாதேஸ்வரனுக்கு. அதைக் காட்டிலும் வைஷ்ணவிக்கு இன்னுமே ஆச்சரியம்.
ஒவ்வொரு தடவையும் இதே வார்த்தைகளைக் கூறி, அவரிடம் போராடிய ஸ்ரீமதியை நினைக்கும்போது இப்போது அவரது கண்களில் கண்ணீரின் பளபளப்பு!
அப்போதெல்லாம் மனையாளின் வார்த்தைகளைப் பெரியதாக நினைத்ததில்லை. அவளையே ஒரு பொருட்டாக மதித்தில்லை. மனைவியின் மதிப்பை அவள் இருக்கும்போது யாரும் அறிவதில்லை. ஊன்றுகோல்களின் தேவை வயதாகும்போது தான். அந்த நேரத்தில் பற்று கோலாக அவளும் இல்லாமல், தோள் சாய்க்க மகனும் இல்லாமலிருக்கும் போதுதான் இழந்து விட்டதன் அருமை தெரிகிறது.
“அவனுக்குத் தெரியும் மதுப்பா. தான் செய்றது தப்பா சரியான்னு! மனசாட்சியை மீறி அவனால எதுவும் பண்ணவே முடியாது…”
பள்ளியில் மகன் நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கிறான் என்று தெரிந்தவர் சொல்ல, மாதேஸ்வரனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. மற்ற பணக்கார குடும்பங்கள் போல இங்குக் கிடையாது. அவரது தந்தை இதிலெல்லாம் வெகுகண்டிப்பு. அதைப் போலவே அவரும் சிகரெட்டோ, மதுவோ தொட்டும் பார்த்தது கிடையாது. மகனையும் அதுபோலவே தான் வளர்க்க வேண்டும் என்பதில் வெகுபிடிவாதம் அவருக்கு!
மாதேஸ்வரன் கத்தித் தீர்க்க, ஸ்ரீமதி, மகனை அணைத்தபடி அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூறினார்.
அதன் பிறகு சஷாங்கனால் சிகரெட்டை தொட்டும் கூடப் பார்க்க முடியவில்லை. தாயின் நம்பிக்கையை மீறி அவனால் எதையும் செய்துவிட முடியாது. அவனது மனசாட்சி ஸ்ரீமதி தான்!
இப்போது?
அவனது மனசாட்சி ப்ரீத்தாவாக இருக்கக் கூடுமோ?
சற்றுத் தள்ளி நின்றிருந்தபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவர், ப்ரீத்தாவை நெருங்கி, அவளது தலையை ஆதூரமாகத் தடவிக் கொடுத்து,
“எப்பவும் இதே மாதிரி இரும்மா…” என்றபடி புன்னகைத்தார்.
அந்தப் புன்னகை அவளை ஏதோ சொல்லி வாழ்த்தியது போலிருந்தது! அவரிடம் அவ்வளவாகப் பேசியதில்லை. அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலை மட்டும் தான் சொல்லிப் பழக்கம். அதைத் தாண்டி ஒரு வார்த்தையும் கிடையாது. ஆனால் இன்று அவராகத் தலையைத் தடவிக் கொடுத்துப் பேசியதை எல்லாம் அவளால் நம்ப முடியவில்லை.
அவரது கண்களில் சற்றும் பொய்மையோ, கள்ளமோ இல்லை. அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதுக்குள்ளிருந்து வருபவை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.
பதிலுக்குப் புன்னகைத்து, “தேங்க்ஸ் சர்…” என்று கூற,
“அப்பா சொல்லும்மா…” என்ற மாதேஸ்வரனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வைஷ்ணவி.
அவ்வளவு இயல்பாக அவரது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து விடுபவர் அல்ல, அவளது தந்தை என்பதை முற்றும் முழுவதுமாக அறிவாள். அவரே சொல்கிறார் என்றால்!
வைஷ்ணவியை காட்டிலும் ஆச்சரியமாக உணர்ந்தாள் ப்ரீத்தா!
பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தாள்!
இவள் வைஷ்ணவியிடம் பேசுவது, வைபவ்வை அணைத்து முத்தமிடுவது, கடைசியாக மாதேஸ்வரன் அவளது தலையைத் தடவி கொடுப்பது வரை புகைப்படங்களாகிக் கொண்டிருந்தன.
செல்பேசியில் வந்த புகைப்படங்களைக் கண்ணெடுக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சஷாங்கன்!